Home Sandilyan Yavana Rani Part 1 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

78
0
Yavana Rani Part 1 Ch24 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch24 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 24 விழிநீர்! வேந்தன் ஆணை !

Yavana Rani Part 1 Ch24 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

பாழடைந்த மாளிகையின் உள்ளறையில் பஞ்சணையில் படுகாயத்துடன் படுத்துக் கிடந்த வாலிபனைப் பற்றிய அறிவு இளஞ்செழியன் கண்களில் இமைப் பொழுது தோன்றியதையும், அந்த அறிவை உதிர்க்க அவன் உதடுகள் மேற்கொண்டு அசையாவண்ணம் படுக்கையிலிருந்த வாலிபன் கை உயர்த்தி எச்சரிக்கை செய்து தடுத்து விட்டதையும், மற்ற யாரும் பார்க்காவிட்டாலும் இன்ப வல்லியின் கூர் விழிகள் மட்டும் கவனித்துவிட்டனவாகையால், சென்ற சில நாழிகைகளில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை அவள் சித்தம் அக்கக்காக அலச முற்பட்டது. சோழ மண்டலாதிபதிக்கே இந்த வாலிபனால் ஆபத்து என்று வாயிலில் காவலர் தலைவன் குறிப்பிட்டபோது, ‘அந்த வாலிபனும்…’ என்று அவன் ஏதோ சொல்ல முற்பட்டு வார்த்தைகளை விழுங்கிவிட்டதையும், எவருக்கும் தலை வணங்காதவனென்று பிரசித்தி பெற்றிருந்த சோழர் படை உபதலைவனான இளஞ்செழியன் கூட வாலிபன் எச்சரித்த மாத்திரத்தில் வாயைச் சட்டென்று மூடிக்கொண்டு விட்டதையும் உலகத்தையே வெறுத்து புத்த பகவானைத் தவிர, வேறெவருக்கும் அடிபணிய அவசியமில்லாத சமணத் துறவி, காயத்தில் பூவழகி அழுத்தச் சொன்ன துணிகளை நீக்கிய பிறகு மீண்டும் அந்த வாலிபன் காலடியில் கைகட்டிக் கவலையுடன் நின்றதையும் தொகுத்துப் பார்த்த இன்ப வல்லிக்குப் படுக்கையில் படுத்திருந்த வாலிபன் யாரென்பது தெள்ளென விளங்கிவிட்டதென்றாலும், அவள் தனக்கு ஏற்பட்ட அறிவை வெளிக்குக் காட்டவும் அஞ்சினாள். பஞ்சணைப் பக்கத்திலிருந்து எழுந்து இளஞ்செழியனை எச்சரிக்கை செய்த கையின் உட்புறமும் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்பவல்லிக்குத் தெளிவாகப் புலனாகவே அதுவரை அவளுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவையனைத்தும் விநாடி நேரத்தில் பஞ்சாகப் பறந்தன. அந்த இளவலின் உள்ளங்கையில் பச்சை குத்தப்பட்டிருந்த புலியின் உடற்பச்சைக் கோடுகளும் செஞ்சாந்துச் சாறால் தீட்டப் பட்டிருந்த சிவப்புக் கண்களும் படுத்திருந்தவன் யாரென் பதைச் சந்தேகமற விளக்கிவிட்டனவாகையால், இன்பவல்லி யின் இதயத்தில், விவரிக்க இயலாத வியப்புடன் அரச சன்னிதானத்தில் நிற்கிறோமே என்ற பயமும் சூழ்ந்து கொள்ளவே அவள் கண்களும் வாலிபனை நோக்கிக் கலவரத் துடன் சலித்தன. பக்கவாட்டிலிருந்து எழுந்து அவன் உள்ளங்கை மீண்டும் பஞ்சணையில் பதிந்ததும் இன்பவல்லி யின் கண்கள் வாலிபனின் முகத்தை நோக்கியதன்றி, ‘மங்கையர் கவரி வீச, குறுநில மன்னர் மண்டியிட்டுத் தலை குனிய, மக்களெல்லாம் ஜயகோஷம் செய்ய, சோழ மண்டலத்தின் அரச பீடத்தில் அமர வேண்டிய திருமாவளவன் இந்தப் பழைய பஞ்சணையில் ஏதோ பரதேசிபோல் படுத்துக் கிடக்கிறானே! என்ன அநியாயம்!’ என்று அவள் இதயமும் உள்ளூரவே பேசிக் கொண்டது.

இன்பவல்லியின் கண்களில் பளிச்சிட்ட உணர்வு, அவள் இதயத்தில் துளிர்விட்ட அனுதாபம், அந்த அனுதாபத்துடன் இழைந்து நின்ற பயம், அத்தனையும் சோழ மண்டலத்தின் உண்மை அதிபதியான திருமாவளவனின் விழிகள் இமைப் பொழுதில் புரிந்துகொண்டதால் அவன் இதழ்களில் லேசாகப் புன்னகையும் அரும்பியது. அந்தப் புன்னகையிலேயே, தெரிந்த ரகசியத்தை வெளியே விடாதே!’ என்ற ஆணையுங் கலந்து நின்றதால் இன்பவல்லி மௌனமாகவே நின்றாள். எல்லோருக்கும் முன்பே மாளிகையிலிருந்து தப்பிய வாலிபனை யாரென்று புரிந்து கொண்டு விட்ட சமணத் துறவியும் தமக்கு மாத்திரமே அந்த ரகசியம் தெரியுமென்று நினைத்து, வாயைத் திறந்தால் உண்மை வெளியாகிவிடப் போகிறதோ என்ற பயத்தால் அவரும் பேசாமலே நின்றார். திருமாவளவனை, சிறு பிள்ளையா யிருக்கும்போது ஓரிருமுறையே பார்க்கும் வாய்ப்புப் பெற்ற தால், ‘இவனை எங்கு பார்த்திருக்கிறோம்’ என்று வெகுநேரம் குழம்பி கடைசியில் உண்மையை உணர்ந்த சோழர் படை உபதலைவன் கூட திருமாவளவன் செய்த எச்சரிக்கை காரணமாக மௌனமே சாதித்தான்.

காயங்களைச் சோதித்துக் கழுவுவதிலும் பச்சிலையை வாட்டுவதிலும் முனைந்திருந்த பூவழகி மட்டும் தன் பணியிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாளாகையால் அறையிலிருந்து மற்றவர் மனோபாவத்தைக் கவனிக்கவோ, தன்னை விழுங்கிவிடுவது போல் திருமாவளவன் பார்த்துக் கொண்டிருந்ததை அறியவோ வாய்ப்பில்லாது போயிற்று அந்த வேளிர்குலப் பேரழகிக்கு.

சோழ நாட்டின் அந்தப் பழைய விளக்கில் பச்சிலையை மிக நிதானமாக வாட்டிய பூவழகி, பக்கத்தில் கிண்ணத்தி லிருந்த சிவப்புச் சாற்றையும் எடுத்து வாட்டப்பட்ட இலையின் உட்புறத்தில் லேசாகத் தடவினாள். அறையில் மௌனத்தை நீடிக்கவிட்டால் விஷயம் ஏதாவது வெளியாகிவிடலாம் என்ற யோசனையாலும் திருமாவளவன் மெள்ளப் பேசத் துவங்கி, “இத்தனை அழகிய கைகள் சிகிச்சை செய்யுமென்று அறிந்திருந்தால் இன்னும் இரண்டு காயங்களைப் பட்டுக்கொண்டிருப்பேன்” என்று சொல்லி மெள்ளச் சிரிக்கவும் சிரித்தான்.
கிண்ணத்திலிருந்த சிவப்புச் சாற்றை இலையில் தடவுவதைச் சற்றே நிறுத்திவிட்டு, சோழ நாட்டு இளவலைத் தன் அழகிய விழிகளால் ஒரு வினாடி நோக்கிய பூவழகியும், “அதற்கு வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கும். பயப்படாதீர்கள்” என்று சொல்லி நகைத்தாள்.

புலியின் கண்களைப் போலவே தீட்சண்யமான திருமாவளவன் கண்களில் ஒரு விநாடி தீட்சண்யம் மறைந்து சிரிப்பு துளிர்த்தது. “மீண்டும் காயமடைய வாய்ப்பா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் இளஞ்சேட் சென்னியின் திருமகன்.

“ஆம்” என்றாள் பூவழகி, பச்சிலை ஒன்றை நெற்றியில் அழுத்திவிட்டு மற்றொரு பச்சிலையைக் காய்ச்சத் துவங்கி.

“வாய்ப்பை நீங்களே அளிப்பீர்கள் போலிருக்கிறதே” என்று மறுபடியும் கேட்டான் சோழ மண்டலாதிபதி.

“அதற்குத் தேவையில்லை. உங்களைத் துரத்தி வந்திருப்பவர்கள் திரும்பவும் வருவார்கள்.”

“அதெப்படித் தெரியும் உங்களுக்கு?”

“குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ள வெள்ளெழுத்து எதற்கு? ஏதோ பொய் சொல்லி இன்பவல்லி அவர்களைத் திருப்பியிருக்கிறாள். பொய் எத்தனை நேரத்துக்கு நிலைக்கும்? அதுவும் தங்களைப் போன்ற ஒரு வீரரை வேட்டையாட எண்ணும் வீரர்கள் வேறெங்கும் நீங்கள் கிடைக்கா விட்டால் திரும்ப இந்த இடத்துக்குத்தானே வருவார்கள்?” என்று திருமாவளவனுக்குப் பதில் சொன்ன பூவழகி, தன் தோழியை நோக்கித் திரும்பி, “இன்பவல்லி! இவரைத் துரத்தி வந்தது யார்?” என்று வினவினாள்.

“சோழ நாட்டு வீரர்கள்” என்று பதில் சொன்னாள் இன்பவல்லி.

“யாரைத் தேடி வந்தார்கள்?” என்று பூவழகி மீண்டும் கேட்டாள்.

“இவரைத்தான்.”

“அது தெரியும். என்னவென்று சொன்னார்கள்?”

“காயமடைந்த ஒரு வாலிபனைத் தேடி வந்ததாகச் சொன்னார்கள்!”

“எப்படி அவர்களைத் திருப்பியனுப்பினாய்?”

“இங்கு அப்படி யாரும் வரவில்லையென்று சொன் னேன். அவர்கள் நம்பவில்லை. இவருடைய காயத்திலிருந்து சொட்டிய இரத்தத் துளிகளைத் தாழ்வாரத்தில் பார்த்து விட்டார்கள்.”

“அதைப் பார்த்துமா திரும்பிச் சென்றார்கள்?”

“ஆம். நம்முடனிருக்கும் ஒரு சமணத் துறவிக்குக் காயம் பட்டு விட்டதாகக் கூறினேன்.”

இதைக் கேட்ட சமணத் துறவி சங்கடப்பட்டுச் சிறிது அசைந்ததன்றி, ‘ஹூம்’ என்று முனகவும் செய்தார். இன்பவல்லியின் பதிலையும் அடிகளின் சங்கடத்தையும் கவனித்த திருமாவளவன் இதழ்கள் புன்சிரிப்பால் மலர்ந்தன. “அடிகள் வந்ததும் நன்மையாகத்தான் போய்விட்டது” என்று வேடிக்கையாகவும் பேசினான்.

“அடிகள் இங்கு வந்தது மட்டுமல்ல, அங்கு வந்ததும் நன்மைக்குத்தான்” என்று சமணத் துறவி கூறினார், தமக்கும் சிறிது நகைச்சுவை உண்டு என்பதை அறிவிக்க.

“எங்கு வந்ததைக் குறிப்பிடுகிறீர்கள்?”

“எரிந்த மாளிகைக்கு அருகில்?”

“ஓகோ!”

“சந்தேகமிருந்தால் அவரைக் கேட்டுப் பாருங்கள். என் உதவியில்லாதிருந்தால் அவர் அங்கு வந்திருக்க முடியாது. அவர் அங்கு வந்திருக்காவிட்டால் தாங்களும் இங்கு வந்திருக்க முடியாது” என்று அடிகள் விஷமமாகப் பேசி இளஞ்செழியனையும் சுட்டிக் காட்டினார்.

”அப்படியா!” என்று கேட்டான் திருமாவளவன் படைத்தலைவனை நோக்கித் திரும்பி.

“உண்மைதான், அடிகள் தான் என்னைத் தப்புவித்து அழைத்து வந்தார்.”
“தப்புவித்தா?”

“ஆம்.”

“எங்கிருந்து தப்புவித்தார்?”

“மடத்திலிருந்து.”

“மடத்திலிருந்தா? சிறையிலிருந்தா?”

“இரண்டுக்கும் இப்பொழுது வித்தயாசமில்லை. மடத்தைச் சுற்றிக் காவலிருக்கிறது” என்று இடையே சம்பாஷணையில் புகுந்தார் சமணத் துறவி.

“மடத்தைச் சுற்றிக் காவலா! தமிழகத்தில் வழக்கமே யில்லையே” என்றான் திருமாவளவன்.

“தமிழகத்தில் பல வழக்கங்கள் மாறி வருகின்றன. மாளிகை சிறையாகிறது. மடம் சிறையாகிறது. நாடே சிறைக்கூடமாகும் போது இந்த இடங்களைப்பற்றிக் கவலைப்படுவானேன்? மாளிகையும் மடமும் நாட்டுக்குள் அடக்கந்தானே” என்று விளக்கினார் துறவிகள்.

திருமாவளவன் துறவியின் சொற்களின் பொருளைப் புரிந்து கொண்டானாகையால் சற்று நேரம் ஏதும் பேசாமல் மௌனமாகவேயிருந்தான். மாளிகையைச் சுற்றிக் காவல் போட்ட இருங்கோவேளே சமண மடத்தைச் சுற்றியும் காவல் போட்டிருக்கிறானென்பதையும், என்ன காரணத்தினாலோ கருவூர் வந்த படைத்தலைவன் அந்தக் காவலில் சிக்கி விட்டானென்பதையும் புரிந்துகொண்ட திருமாவளவன் இளஞ்செழியனை நோக்கித் திரும்பி, “படைத்தலைவர் எதற்காகக் கருவூர் வந்தார்?” என்று வினவினான்.

படைத்தலைவனைத் திருமாவளவன் அறிந்துகொண்டு விட்டது படைத்தலைவனுக்கு மட்டுமின்றிச் சமணத் துறவிக்கும் வியப்பாயிருக்கவே, “என்ன! படைத்தலைவரைத் தங்களுக்கு முன்பே தெரியுமா?” என்று வினவினார் அடிகள், உள்ளத்தில் பூத்த வியப்பு முகத்திலும் விரிய.

“சோழ நாட்டின் சிறந்த உபதலைவர்களில் ஒருவரான இளஞ்செழியனை நான் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையென்றால் வேறு யார் அடையாளம் கண்டு கொள்ள முடியும்” என்று கேட்டான் திருமாவளவன்.

“நாம் அடிக்கடி சந்தித்ததில்லையே” என்றான் படைத் தலைவன்.

“நீங்கள் என்னைச் சந்தித்ததில்லை. நான் பல முறை உங்களைச் சந்தித்திருக்கிறேன்.”

“எங்கு?”

“யவனர் கேளிக்கைச் சாலைகளில்.”

“அங்கு எப்படி…?”

“ஊரைவிட்டு வீட்டைவிட்டு அடிக்கடி ஓடி வந்து விடுவது வழக்கம்” என்று இளஞ்செழியன் மட்டுமின்றி சோழ
நாடே அறிந்த உண்மையைச் சற்று அழுத்திச் சொன்ன திருமாவளவன் மெள்ளப் புன்முறுவல் காட்டிய தன்றி, மேற்கொண்டு அதைப்பற்றி விஸ்தரிக்க வேண்டாமென்று விழிகளாலும் எச்சரித்தான்.

பூவழகியின் மான் விழிகள் மட்டுமின்றிப் புலன்கள் எல்லாமே மருத்துவத்தில் லயித்திருந்தபடியால் திருமா வளவனும் மற்றவர்களும் பேசிக்கொண்டதை அவள் அதிகமாகக் காதில் வாங்கிக்கொள்ளாவிட்டாலும், யவனர் கேளிக்கைச் சாலைகளில் அந்த வாலிபன் இளஞ்செழியனைச் சந்தித்திருப்பதாகச் சொன்னதும் மருத்துவத்தை ஒரு விநாடி நிறுத்தி இளஞ்செழியனை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள். பச்சிலையொன்றைத் தோள்பட்டையில் அழுத்தப் போன பூவழகியின் கை சட்டென்று நின்றதையும், படைத்தலை வனை அவள் சுடச்சுடப் பார்த்ததையும் கண்ட திருமாவளவன் விஷயத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டதால், ‘படைத் தலைவன்மீது அத்தனை காதல் கொண்டுள்ள இவள் யார்?’ என்பதை அறிய ஆசைப்பட்டு, “தங்களுக்குப் படைத் தலைவரை முன்பே தெரியுமா?” என்று விசாரித்தான்.

“தெரியும் தெரியும்.” இருமுறை வந்தது ஒரே சொல் எரிச்சலுடன், பூவழகியின் பொறாமை பொங்கிய இதயத்தி லிருந்து.

திருமாவளவன் மட்டுமன்றி, சமணத் துறவிகூட இளஞ்செழியனை நோக்கிப் புன்சிரிப்புச் சிரித்தார். திருமாவளவன் திரும்பவும் கேட்டான் பூவழகியை நோக்கி, “அப்படியானால் தாங்களும் புகாரில் இருந்திருக்கிறீர்களா?” என்று .
“பல வருஷங்கள் இருந்திருக்கிறேன்.”

“தங்கள் பெயர்?”

இந்தச் சமயத்தில் இளஞ்செழியன் இடைமறித்து, “பூவழகி” என்று தெரியப்படுத்தினான்.

பூவழகியின் விழிகளில் நெருப்புப் பொறி பறந்த தல்லாமல் அவள் சொற்களிலும் சூடு நிரம்ப இருந்தது. “என் பெயரை எனக்கே சொல்லத் தெரியும்” என்றாள்.

சமய சந்தர்ப்பமறியாத சமணத் துறவி தமது சாமர்த்தியத்தைக் காட்டத் தொடங்கி, “இருப்பினும் அந்த அழகிய பெயரை உச்சரிப்பதில் படைத்தலைவருக்கு அதிக திருப்தி போலிருக்கிறது” என்று கூறி லேசாகச் சிரிக்கவும் சிரித்தார்.

அவர் சிரிப்பு நெருப்புத் துண்டங்களாக இதயத்தில் விழுந்ததால் அவள் உள்ளத்திலே கோபம் கொந்தளித்தெழவே அவள் குரூரம் நிரம்பிய சொற்களைக் கொட்டினாள்.

“அடிகளே, படைத்தலைவருக்குத் திருப்தியளிக்கக் கூடிய இன்னும் பல காரியங்களை என்னால் செய்ய முடியும்” என்றாள் பூவழகி.

“அதிலென்ன சந்தேகம்?” என்று மீண்டும் விஷமமாகப் பேசினார் அடிகள்.
“சந்தேகமில்லை அடிகளே! உமக்குத் திருப்தியளிக்கக் கூடிய காரியங்களையும் என்னால் செய்ய முடியும். நான் கையைத் தட்டினால் போதும்.”

“என்ன நடக்கும்?”

“இருங்கோவேளின் வீரர்கள் வருவார்கள்.”

“அட சங்கடமே. இங்கும் அவன் வீரர்களா இருக் கிறார்கள்?”

“ஆமாம், சுவாமி! எங்களைக் காவல் புரிவதும் அவன் வீரர்கள் தான். அவன் பெயரைச் சொல்லித்தான் இன்பவல்லி யும் அவர்களை அனுப்பியிருக்க வேண்டும்” என்று கூறிய பூவழகி, “என்ன இன்பவல்லி, அப்படித்தானே?” என்று தோழியைப் பார்த்துக் கேட்டாள்.

‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தோழி தலையை அசைத்தாள். பூவழகி மேற்கொண்டு துறவியை நோக்கிச் சொன்னாள்: “தெரிகிறதா சுவாமி? உங்களுக்குத் திருப்தி யானவை மட்டுமல்ல. அதிருப்தியான விஷயங்களும் இங்கு நடக்கக் கூடும். அதிகமாக நீங்களோ படைத்தலைவரோ உங்கள் திருப்தியைக் காட்டினால் நானும் என் சுபாவத்தைக் காட்டுவேன்” என்று எச்சரித்த பூவழகி, மீண்டும் காயங் களுக்குப் பச்சிலைகள் வைத்து அழுத்தினாள்.

அவள் பொறாமையால் ஏற்படக்கூடிய சங்கடங்களை அறிந்திருந்த இளஞ்செழியனும், அவள் மிரட்டியதால் கலவரப்பட்டுப் போன துறவியும் மேற்கொண்டு எதுவும் பேசாவிட்டாலும் திருமாவளவன் மட்டும் அவளை நோக்கிக் கேட்டான், “அம்மா, நீ பெருங்குடிப் பெண்ணாகத் தோன்றுகிறாய். அப்படி இருக்கக் காயமடைந்தவனைக் காட்டிக் கொடுக்க உன் இதயம் இடங்கொடுக்குமா?” என்று.

“இடங்கொடுக்காது வாலிபரே! இந்தப் படைத்தலை வரும் துறவியும் வாயை மூடிக்கொண்டிருந்தால் வேளிர் மகளும் வாயைத் திறக்கமாட்டாள்” என்றாள் பூவழகி.

“நீங்கள் வேளிர் குலமா?”

“ஆம்.”

“தந்தை பெயர்?”

“மாரப்பவேள். சந்தேகமிருந்தால் படைத்தலைவரைக் கேளுங்கள். யவனர் கேளிக்கைச் சாலைகளில் மட்டுமல்ல, வேளிர் இல்லங்களிலும் பழகியவர்” என்றாள் பூவழகி.

கருணை சொட்டும் அழகிய அவள் முகத்தைப் பார்த்த திருமாவளவன், ‘இவள் சொல்லாமலே இவள் பெருங்குடிமகள் என்பதைத் தெரிந்துகொண்டு விட்டேன். மாரப்பவேள் மகளா இவள்?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட தன்றி, “அம்மா! தங்களுக்குத் திருப்தியில்லாத எதையும் இவர்கள் இனிப் பேச மாட்டார்கள்” என்று துறவி மீதும் படைத்தலைவன்மீதும் கண்களை ஓட்டினான். பிறகு, “இந்தக் காலையும் கொஞ்சம் பாருங்கள்” என்று கெஞ்சும் குரலில் கேட்டு, தன் இடது காலை லேசாக நீட்ட முயன்று முடியாமல் சொல்லவொண்ணா வேதனையால் தத்தளித்தான்.
அவன் காலை நன்றாகக் கூர்ந்து நோக்கிய பூவழகியின் அழகிய விழிகளில் நீர் திரண்டது. முழங்காலிலிருந்து பாதம் வரை நன்றாகத் தீயில் வெந்து கருகிவிட்ட காலில் தீப்புண்கள் நன்றாகக் கொப்புளித்து நின்றன. ஒவ்வோரிடத்தில் சருமம் நீங்கிவிட்டதுடன் உட்சரும நீரும் ஊறி வழிந்து கொண் டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த அவள் கண்களில் திரண்ட நீர்த்துளிகளில் இரண்டு திருமாவளவன் கால்களிலும் சுடச்சுட விழுந்தன.

விழிநீர் விழுந்ததால் காலின் அந்தக் குறிப்பிட்ட பகுதி மட்டுமின்றி உடல், உள்ளம்-இரண்டுமே சாந்தி பெற்றதால், “அம்மா! இத்தனைக்கும் நான் தகுதியல்ல, இதை விடச் சிறந்த மருந்தும் தேவையல்ல” என்றான் திருமாவளவன்.

அர்த்தம் புரியாமல் அவனை நோக்கினாள் பூவழகி. “அர்த்தம் புரியவில்லையா உங்களுக்கு? நான் ஒரு மண்டலாதிபதியாயிருந்து என் கால்களில் குறுநில மன்ன ரெல்லாம் வாசனை நீர் தெளித்து மண்டியிட்டாலும் உங்கள் விழி நீர் அளித்த சாந்தியில் நூற்றிலொரு பங்கைக்கூட நான் பெறமாட்டேன். இந்தக் காயத்தைப் பார்த்து என் தாய் இருந்தால் இப்படிக் கண்ணீர் விட்டிருப்பாள். அவள் இல்லாத குறையை இன்று நீங்கள் பூர்த்தி செய்திருக்கிறீர்கள்” என்று திருமாவளவன் பூவழகியின் இதயமே கரையும் படியாகப் பேசினான்.

“எனக்கு அத்தனை வயதாகவில்லையே!” என்றாள் பூவழகி.

“கருணை வயதைப் பொறுத்ததல்ல, இதயத்தைப் பொறுத்தது.”

“நன்றாகத்தான் பேசுகிறீர்கள். நீங்கள் யார்? எந்த ஊர்? உங்கள் பெயரைக்கூடச் சொல்லவில்லையே!”

இந்தக் கேள்வி அறையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கிவாரிப் போட்டாலும் திருமாவளவன் முகத்தில் மட்டும் அதிகக் கிளர்ச்சி ஏற்படவில்லை . சிந்தனையே சிறிது ஓடியது. அவன் புலிக்கண்கள் ஒருமுறை தீயினால் கருகியிருந்த அவன் இடது காலை நோக்கின. பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் கேட்டான், “அம்மா! காயம் ஆறிய பிறகு இந்தக் கால் எப்படியிருக்கும்?” என்று.

“கருப்பாக இருக்கும்” என்றாள் பூவழகி.

“அப்படியானால் என்னைக் கரிகாலன் என்று அழையுங்கள்” என்றான் திருமாவளவன்.

பக்கத்திலிருந்த சித்திர வேலைப்பாடமைந்த கூடையி லிருந்த செம்பருத்திப் புஷ்பங்களை எடுத்துப் பிழிந்த சாற்றைத் துணியால் தோய்த்துத் தீப்புண்ணுண்ட காலில் சொட்ட விட்டுக் கொண்டிருந்த பூவழகி, “அப்படி ஒரு பெயர் இருக்க முடியுமா? உங்கள் பெயரைச் சொல்ல இஷ்டப்படவில்லை யென்று சொல்லுங்களேன்!” என்றாள் திருமாவளவனை நோக்கி.

“இல்லை பூவழகி!” என்று முதன் முறையாக அவள் பெயரை உச்சரித்த திருமாவளவன், “இனி இந்தப் பெயர் தான் எனக்குச் சாசுவதம். இதைச் சொல்லித்தான் இனி என்னை எல்லோரும் அழைக்க வேண்டும். உன் விழிகளிலிருந்து இன்று வழிந்த கருணை நீரின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், இந்தப் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்” என்று உணர்ச்சி வேகத்துடன் பேசினான்.

அவன் குரலில் தொனித்த ஆவேசம் அதிகாரம் இவற்றையும், அவன் சரித்திரத்தைப்பற்றிக் குறிப்பிட்டதையும் கேட்டு அதிர்ச்சியடைந்த பூவழகியின் கண்கள் சரேலென அவன் முகத்தை நோக்கிச் சந்தேகத்துடன் திரும்பின. செம்பருத்தியின் சாற்றைப் பிழிய உயர எழுந்த அவள் அழகிய கையும் அப்படியே நின்றுவிட்டது.

Previous articleYavana Rani Part 1 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here