Home Sandilyan Yavana Rani Part 1 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

111
0
Yavana Rani Part 1 Ch25 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch25 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 25 சகோதரி

Yavana Rani Part 1 Ch25 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

செம்பருத்தி மலரின் சாற்றைப் பிழிய எழுந்த பூவழகியின் செங்கமலக் கை சட்டென்று நின்றுவிட்டதையும், அவள் தாமரை விழிகள் வியப்பினாலும் சந்தேகத்தினாலும் பெரிதாக மலர்ந்து தன் முகத்தில் பதிந்ததையும் கண்ட திருமாவளவன் கரை கடந்த உணர்ச்சியாலும் உணர்ச்சி தூண்டிய ஆவேசத்தாலும் தான் எல்லை மீறிப் பேசிவிட்டதை உணர்ந்துகொண்டு, மருத்துவச் சாற்றையும் கருணை நீரையும் கலந்து தன் காலில் தெளித்த அந்த வேளிர்குல மாதரசியின் உள்ளத்தில் எழுந்த சந்தேகத்தைத் துடைக்கும் நோக்கத்துடன், “ஏன் அப்படி என்னைக் கூர்ந்து பார்க்கிறாய் பூவழகி? நான் பேசியதில் உன் மனத்தைப் புண்படுத்தும் சொற்கள் ஏதாவது இருந்தனவா?” என்று கல்லும் கரையும் குரலில் கேட்டான்.

பூவழகி அவன் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் அவன் முகத்தை நீண்ட நேரம் ஊன்றிக் கவனித்து, அந்த முகத்தில் இருந்த கம்பீரத்தையும் கண்களில் சதா ஒளிர்விட்ட அதிகாரத்தையும் கண்டு, ‘இந்த வாலிபன் சாதாரண மனிதனாயிருக்க முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அவள் தன்னை உற்றுக் கவனிப்பதையும், அவள் சித்தத்திலே ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அலைமோதுவதையும் முக பாவத்திலிருந்தே கண்டுகொண்ட திருமாவளவன், “பெண் களில் பேசாமடந்தை அபூர்வம். அந்த அபூர்வப் பிறவிகளில் நீயும் ஒருத்தியா பூவழகி?” என்று மறுபடியும் பேச்சுக் கொடுத்தான்.
இந்த இரண்டாவது கேள்வியைக் கேட்டதும் பூவழகி தன் அழகிய இதழ்களில் சற்றே புன்முறுவல் காட்டி, “ஏதோ பழைய கதை பேசுகிறீர்கள்!” என்று பதில் சொன்னாள்.

“எது பழைய கதை?” என்று திருமாவளவன் கேட்டான், குரலில் லேசாக ஆச்சரியத்தைக் காட்டி.

“பேசா மடந்தையின் கதை.”

“புதுக் கதை எது?”

“ஆண்களிலும் பேசா மடந்தை உண்டு என்பது” என்று சொல்லி, வாயைத் திறக்காமல் நின்ற இளஞ்செழியனையும் சமணத் துறவியையும் பார்த்தாள் பூவழகி.

பூவழகியின் சித்தத்தில் உலாவிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட திருமாவளவன், தன் எச்சரிக்கையினாலேயே படைத்தலைவனும் சமணத்துறவியும் மௌனமாகி விட்டார்களென்பதை அந்த வேளிர்குலப் பெண் அறிந்து கொண்டு விட்டாளென்பதையும், தன்னைப்பற்றி ஏதோ சந்தேகப் படுகிறாளென்பதையும் உணர்ந்து கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல் மெல்ல நகைத்தான்.

“ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டாள் பூவழகி.

“பெண்கள் கண்களிலிருந்து எதுவும் தப்பவில்லை என்பதைப் பார்த்தேன்.”

“எதைச் சொல்கிறீர்கள்?”
“படைத் தலைவரையும் துறவியாரையும் நீங்கள் பார்த்த பார்வையிலிருந்து…”

“அவர்கள் மௌனத்திற்கு நான் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.”

“இதற்குப் பிரமாத ஆராய்ச்சி தேவையில்லையே. இருங்கோவேளின் வீரர்களிடமிருந்து படுகாயத்துடன் தப்பி யிருக்கிறீர்கள். இங்கு உள்ளுக்கு வந்தது முதல் படைத்தலை வரும் துறவியாரும் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நிற்கிறார்கள். உங்கள் மூவர் முகத்தையும் பார்த்தாலே இங்கு நடக்கும் மௌன நாடகத்துக்குத் தலைபோகும் காரணம் இருக்கிறதென்று தெரிகிறது. தவிர, நீங்கள் பேசும் பேச்சு…”

“அதற்கென்ன!”

பூவழகி நிதானமான குரலில்தான் பதில் சொன்னாள். ஆனால் அவள் பதில், சோழ மண்டலாதிபதியான திருமாவளவன் நிதானத்தை மட்டுமல்லாமல் அறையிலிருந்த மற்றவர்கள் நிதானத்தையும் தூக்கி யெறிந்து விட்டது. திருமாவளவன்மீது தன் வேல் விழிகளை நாட்டிய அந்த வேளிர்குலப் பாவை சொன்னாள், “நீங்கள் பேசும் பேச்சு சாதாரண மனிதன் பேசும் பேச்சாயில்லை” என்று.

இந்தப் பதிலைக் கேட்டதும், பஞ்சணையில் சற்றே நெளிந்து திருமாவளவன், “என் பேச்சுக்கும் சாதாரண மனிதன் பேச்சுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?” என்று வினவினான்.
“என்னைப் பூவழகியென்று பெயர் சொல்லி அழைக் கிறீர்கள்.”

“உம்.”

“அப்படி என்னை என் தந்தையும் இன்னொருவரும் தவிர வேறு யாரும் அழைக்கத் துணிந்ததில்லை” என்று சொல்லிய பூவழகி, அந்த இன்னொருவரைப் பற்றிக் குறிப்பிட்டபோது இளஞ்செழியனை ஒரு பார்வை கோபத்துடன் பார்த்து விட்டு, மீண்டும் விழிகளைத் திருமாவளவனை நோக்கித் திருப்பினாள்.

அவள் விழிகள் சென்ற திசையையும் குரலில் துளிர்த்த உஷ்ணத்தையும் கவனித்த திருமாவளவன், ‘இங்கு ஏதோ காதற்போர் நடக்கிறது’ என்பதை ஊகித்துக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல், பேச்சை வேறு திசையில் திருப்ப எண்ணி, “அம்மா! உன்னைப் பெயர் சொல்லி அழைத்தது குற்றமா? அன்னையைப் போல் எனக்கு மருத்துவம் செய்யும் உன்னை என் சகோதரியாகப் பாவிப்பது தவறா?” என்று கேட்டான்.

“தவறல்ல வாலிபரே, தவறல்ல! தனக்குப் பரிச்சய மில்லாத பெண்களை வயதுக்கிரமத்தையொட்டித் தாயாகவும் சகோதரியாகவும் பாவிப்பதுதான் அறவழி. ஆனால் அந்த வழியையொட்டி எல்லா மங்கையையும் ஒரு வாலிபன் பெயர் சொல்லி அழைக்க முடியுமா? அப்படியே அழைத்தாலும் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா?” என்று பூவழகியும் கேள்வி கேட்டாள்.
“உண்மை” என்று திருமாவளவனும் ஒப்புக் கொண்டான்.

“அதுமட்டுமல்ல, துணிவுடன் என்னை நீங்கள் பெயர் சொல்லி அழைத்திருக்கிறீர்கள். அந்த அழைப்பில் நான் சகோதரி யென்ற சொந்தத்தை மட்டும் காணவில்லை, அதிகாரத்தையும் கண்டேன்.”

“அதிகாரமா?”

“ஆம். உங்கள் குரலில் அதிகார ஒலி இயற்கையாயிருக் கிறது. என் பெயரை யார் சொன்னாலும் வெகுண்டு எழக் கூடிய படைத்தலைவர்கூட, நீங்கள் கூப்பிடுவதை சகஜமாக எண்ணிக்கொண்டு நிற்கிறார்.”

“தவறாக நினைக்கவேண்டாம். இதில்…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார் துறவியார்.

“மர்மமிருக்கிறதென்பது எனக்குத் தெரியும் அடிகளே” என்று அவர் பேச்சை வெட்டிய பூவழகி, மேற்கொண்டும் அவரை நோக்கி, “மருத்துவத்தில் நான் முழுக் கவனம் செலுத்தியிருந்ததால் உங்கள் ஜாடைமாடைகளை என்னால் பூர்ணமாகக் கவனிக்க முடியாவிட்டாலும், இந்த அறையில் நிலவிய அனாவசிய மௌனத்திலிருந்தும், இவ்வாலிபர் முகத்தில் சுடர்விடும் பெருங்குடிப்பிறப்பின் களையிலிருந்தும் இவர் வார்த்தை உங்களுக்கு வேதவாக்கு என்பதை அறிந்து கொண்டேன். இருங்கோவேளின் வீரர்கள் இவரைத் துரத்தி வந்ததிலிருந்து இவர் இருங்கோவேளின் பரம வைரி என்பதையும் புரிந்துகொண்டேன். இருங்கோவேளுக்கு பரம வைரி சோழ மண்டலத்தில் ஒருவர் தானுண்டு. அவர் சரித்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்.”

“என்ன!” என்று அதிர்ச்சியடைந்து எழுந்திருக்க முயன்ற திருமாவளவனைப் படுக்கையில் தனது இடது கையால் அழுத்திப் படுக்கவைத்த பூவழகி, “அஞ்ச வேண்டாம். இங்கு எல்லோரும் இளஞ்சேட்சென்னியின் குலவிளக்கிடம் பக்தி கொண்டவர்கள் தான். உங்கள் முகத்திலுள்ள ராஜகளை உங்களை முதலில் காட்டிக் கொடுத்தது. அப்பொழுதும் முழு உண்மை எனக்குத் தெரியாது. இருங்கோவேளின் வீரர்கள் துரத்தி வந்தபோதுகூட அதிகமாக உண்மை துலங்கவில்லை எனக்கு. ஆனால் நீங்கள் பெயர் சொல்லி அழைத்தீர்களே, அப்பொழுது விழித்துக் கொண்டேன். அதை எதிர்க்காமலிருந்தாரே படைத்தலைவர், அப்பொழுது புரிந்து கொண்டேன். சரித்திரத்தைப் பற்றி பேசினீர்களே, அப்பொழுது கிடைத்து விட்டது விளக்கம் பூரணமாக” என்று, உணர்ச்சி மெள்ள மெள்ளப் பொங்கி உச்ச நிலை அடையப் பேசினாள் பூவழகி.

“ஏன், தனி மனிதன் தன் சுய சரித்திரத்தைப் பற்றிப் பேசக்கூடாதா பூவழகி?” என்று கேட்டான் கரிகாலன்.

“பேசலாம். ஆனால் தாங்கள் சரித்திரத்தைப்பற்றிப் பேசும்போது நாட்டின் சரித்திரத்தைப்பற்றி ஆவேசத்துடன் பேசுகிறீர்கள். இந்தப் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும் என்று எத்தனை திட்டமாகச் சொன்னீர்கள்! உங்கள் உணர்ச்சி, உங்கள் ஆவேசம் உங்களைக் காட்டிக் கொடுத்தது. வாலிப வயதின் தவறு அது. இருங்கோவேளைப் போன்ற ஒரு துன்மார்க்கனைச் சமாளிக்க வேண்டுமானால் இந்தத் தவற்றை இனிச் செய்யாதீர்கள். வேண்டுமானால் படைத் தலைவர் பாடம் சொல்லித் தருவார்” என்றாள்.

“படைத் தலைவரா!” என்று கேட்டான் திருமாவளவன்.

“ஆமாம், உள்ளத்தில் எத்தனை கெட்ட எண்ணங்கள் இருந்தாலும் பேச்சிலோ பார்வையிலோ காட்டமாட்டார்” என்று சொல்லி இகழ்ச்சிப் புன்முறுவல் கோட்டினாள் பூவழகி.

“படைத்தலைவர் அப்படிப்பட்டவரல்லவே?” என்று இடையே புகுந்தார் துறவியார்.

“படைத்தலைவரை உம்மைவிட எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்ன பூவழகி மேற்கொண்டு எதுவும் பேசாமல் மருத்துவத்தில் முனைந்தாள். செம்பருத்திச் சாற்றைக் கிண்ணத்திலிருந்து துணியில் நனைத்து, மெள்ள மெள்ளத் திருமாவளவனின் காலில் பிழிந்தாள். பின்பு காலில் பச்சிலைகளை வரிசையாக அணைத்து மெல்லிய துணியால் காலை லேசாகக் கட்டினாள். கடைசியாக அறையைவிட்டு வெளியே சென்று, சற்று நேரத்திற்கெல்லாம் நீளமான புலித் தோல் பட்டையுடன் திரும்பி வந்து, அந்தப் பட்டையைக் காலில் சுற்றி, மேலும் கீழும் பட்டுக் கயிறுகளால் பிணைத்து, பச்சிலைகளைக் கீழே விழாதபடிச் செய்து, கட்டை அசைத்துப் பார்த்து, “இனி இரண்டு நாள்களுக்குக் கட்டு அவிழாது. சில விநாடிகளில் சாறும் இறுகிவிடும். நீங்கள் எழுந்துகூட நடக்கலாம்” என்றாள்.

“என்னை விரட்டுகிறாயா பூவழகி?” என்று கேட்டு நகைத்தான் திருமாவளவன்.
“நான் பிடித்து வைத்தாலும் நீங்கள் இங்கு இருக்கப் போவதில்லை. இருக்கவும் கூடாது. எந்த வினாடியிலும் இருங்கோவேள் இங்கு வரலாம்.”

“இருங்கோவேள் இங்கு வருவானா?” என்று திகைத்துக் கேட்டார் துறவி.

“ஆம் துறவியாரே, அவன் தான் எங்களை இங்கு அழைத்து வந்தான்.”

வெகு நேரம் கழித்து முதன் முதலாகப் பேசினான் படைத்தலைவன்: “நீயும் இன்பவல்லியும் உறையூருக்குச் சென்றாதக் கேள்விப்பட்டேன்.”

“உறையூருக்குத் தந்தை அழைப்பதாகத்தான் ஓலை வந்தது புகாருக்கு. அந்த ஓலையைக் கண்டுதான் உறையூர் வீரர்களிடம் எங்களை ஒப்படைத்தான் புகார்க் கோட்டைத் தலைவனும். ஆனால், சிறிது தூரத்திற்குப் பின்னர் எங்கள் ரதம் சுவடு மாறியது. கருவூருக்குக் கடுங்காவலுடன் கொண்டு வரப்பட்டோம். அன்று முதல் இந்த மாளிகையில் சிறையிருக்கிறோம்” என்றாள் பூவழகி.

இருங்கோவேள் எதற்காகப் பூவழகியைப் புகாரிலிருந்து கிளப்பிக் கருவூருக்குக் கொண்டு வந்திருக்கிறான், எதற்காக உறையூரைவிட்டுக் கருவூரிலேயே நடமாடுகிறான் என்பதைப் பற்றி படைத்தலைவன் தீவிர யோசனையிலிறங்கினான். ஆனால் பூவழகி மட்டும் அந்த யோசனைகளுக்கு இடம் கொடுக்காமல், “மன்னர் இனி எழுந்திருக்கலாம். உதயம் நெருங்க இன்னும் மூன்று நான்கு நாழிகைகளே இருக்கும். எந்த விநாடியும் இங்கு வந்து போன வீரர்கள் திரும்பக்கூடும்” என்று எச்சரிக்கவே, திருமாவளவன் மெள்ளச் சிரமப்பட்டுப் பஞ்சணையிலிருந்து எழுந்து இடது காலைத் தரையில் ஊன்றினான். “கரிகாலரே! அந்தக் காலை இரண்டு நாள்களுக்கு மெள்ளவே ஊன்றுங்கள்” என்று எச்சரித்ததன்றி, சரித்திரத்தில் பிற்காலத்தில் பிரசித்தமான அந்தப் பெயரை, திருமாவளவனுக்கு அடுத்தபடியாக முதன் முதலில் உச்சரித்த பூவழகி, இன்பவல்லியை நோக்கி, “இன்பவல்லி! பின்கட்டு வழியாகக் கொட்டடிக்குச் சென்று, உன் புரவியை அவிழ்த்து, வாயிற்பக்கம் கொண்டு வா” என்று உத்தரவிட்டாள்.

பூவழகியின் கட்டளையை நிறைவேற்ற இன்பவல்லி சென்றதும், ஆடைகளைச் சரிப்படுத்தித் தன் வாளையும் இடையில் கட்டிக்கொண்டு புறப்படச் சித்தமான சோழ நாட்டு இளவலை அழைத்துக்கொண்டு பாழடைந்த மாளிகையின் வாயிலை அடைந்த படைத் தலைவனும் துறவியும் அங்கு புரவியொன்றைப் பிடித்துக்கொண்டு இன்பவல்லி தயாராக நிற்பதைக் கண்டனர்.

இன்பவல்லியின் கையிலிருந்து சேணத்தை வாங்கிக் கொள்ளு முன்பாக மாளிகைப் படிகளில் நின்ற பூவழகியின் கைகளைப் பிடித்துக்கொண்ட கரிகாலன், “சகோதரி! ஒருமுறை என்னைப் பெயர் சொல்லி அழை” என்று கெஞ்சினான்.

“கரிகாலரே!” என்றாள் மிருதுவாகக் குழைந்த குரலில் பூவழகி.

“இந்தப் பெயருடன் உன் தயவால் மீண்டும் உயிருடன் உலகத்தில் நுழைகிறேன் சகோதரி. என் தங்கையின் கனிவாயி லிருந்து புறப்பட்ட இந்தப் பெயருடன் தரணியையும் ஆள முயலுவேன் நான். மீண்டும் சந்திப்போம். அப்பொழுதும் நீ என் தங்கை ; நான் உன்…”

“அண்ணன்.”

“நினைப்பிருக்கட்டும்.”

“இருக்கும்.” தொண்டை அடைத்தது. கண்களில் நீர் சுரந்தது பூவழகிக்கு. காயமடைந்த கரிகாலன் தன்னந்தனியே செல்கிறானே என்ற சோகத்தால் பெருமூச்சு ஒன்றும் அவள் இதயத்திலிருந்து எழுந்தது.

அந்தத் தாபத்தின், கருணையின், உணர்ச்சி வெள்ளத்திலே மிகுந்து செல்லுபவன்போல் புரவிமீது ஏறி எதிரேயிருந்த காட்டுக்குள் மறைந்தான் கரிகாலன். மற்றவர் வீட்டுக்குள் நுழைந்தனர். கடைசியாக நுழையப்போன துறவி மட்டும் காட்டு முகப்பில் சருகுகளின் சலசலப்பைக் கேட்டுச் சற்று நின்று திரும்பிப் பார்த்தார். மரங்களின் நிழலில் நின்றிருந்த ஒரு கருப்பு உருவத்தின் தலைமட்டும் மரக் கூட்டத்தை அடுத்த வெளிச் சதுக்கத்தில் நிழலாக நீட்டிக் கிடந்தது. அந்தப் பகுதியை உற்றுக் கவனித்து விட்டு, மறைந்து நிற்பவன் யாராயிருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தும் விடை காணாத அடிகள் முன்னே சென்றவர்களைத் திரும்ப அழைக்க வாயைத் திறந்தார். அதை உணர்ந்து கொண்டது போல் இருளில் நின்றிருந்த உருவம், வாயில் ஒரு விரலைப் புதைத்து, ‘யாரையும் அழைக்காதே’ என்று எச்சரித்ததன்றிக் கையை நீட்டி அவரை, ‘வா’ என்று அழைத்தது.

Previous articleYavana Rani Part 1 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here