Home Sandilyan Yavana Rani Part 1 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

84
0
Yavana Rani Part 1 Ch26 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch26 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 26 ஆசை துடித்தது; நாணம் தடுத்தது!

Yavana Rani Part 1 Ch26 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

தாயாதிக் காய்ச்சலாலும் அரசுரிமைப் பேராசையாலும் இளஞ்சேட்சென்னியைத் தீர்த்துக் கட்டியதன்றிச் சோழ நாட்டு இளவலையும் ஒழித்துவிடச் சூழ்ச்சி செய்து, ஆன்பொருனை நதிக்கரை மாளிகைக்குத் தீ வைத்த இருங்கோவேளின் வஞ்சக வலையைத் தன் வாள் பலத்தால் அறுத்தெறிந்து வெளிவந்தபோது தன்னைச் சூழ்ந்துவிட்ட தீயால் இடதுகால் கருகிவிட்டதாலும், சொந்தப் பெயரைச் சில நாள்கள் மறைத்துவைப்பதே நலமெனக் கருதியதாலும் கரிகாலன் என்ற காரணப் பெயரைச் சூடி, புதுப்பெயருடன் புது மனிதனாக உலகில் புகுந்துவிட்ட திருமாவளவனைப் பற்றிய நினைப்பே உள்ளங்களில் சூழ்ந்து நின்றதால், பாழடைந்த மாளிகைக்குள் மீண்டும் நுழைந்த இளஞ்செழியனோ பூவழகியோ இன்பவல்லியோ பின்னால் தங்கிவிட்ட சமண அடிகளைச் சிறிதும் கவனிக்கவேயில்லை. மாளிகை உட் கூடத்தில் நுழைந்த பின்பே அவர் உள்ளே வராததைக் கவனித்த இன்பவல்லி, “அம்மா! அடிகளைக் காணோம்” என்று கேட்டபோதுகூட, “எல்லாம் வருவார், வா” என்று அசட்டையாகவே பூவழகி பதில் சொன்னாள். வாயிலில் ஏற்பட்ட குதிரைக் குளம்படிச் சத்தத்தைக் கேட்ட சோழ வீரர்கள் இருவர், பூவழகியை உட்கூடத்தில் சந்தித்து, “அம்மா! வாயிலில் யாரோ போகிறார்கள் போலிருக்கிறது” என்று பாதி கேள்வி போலும் பாதி விஷயத்தை விசாரிக்கும் தோரணையிலும் கேட்டபோது கூட, “யார் போனால் உங்களுக்கென்ன? போய் உறங்குங்கள். தேவையாயிருந்தால் நானே கூப்பிடுகிறேன்” என்று வேளிர்குலமங்கை உஷ்ணமாகப் பதில் கூறவே, வீரர்களும் பயந்து தங்கள் அறைகளை நோக்கிப் பின் வாங்கினர். இளஞ்செழியன் பின்தொடர மாளிகை உட் கூடத்தைக் கடந்து திருமாவளவன் படுத்திருந்த தன் சொந்த அறைக்குள் பூவழகி நுழைந்தபோது, அவர்கள் இருவருக்கும் நாலடி பின்னாலேயே சென்ற இன்பவல்லிக்கு, படைத்தலைவன் பூவழகி இருவருடைய உறவுமுறையும் காதல் விரோதங்களும் நன்றாகத் தெரிந்ததாகையால், அடுத்து நேரக் கூடிய சொல்லம்பு வீச்சுக்கும் உணர்ச்சிப் போராட்டத் துக்கும் இடையே தான் தலையிடுவது உசிதமல்லவென்று அந்த அறைக்குள் நுழையாமல் பின் தங்கி நின்று, சற்று யோசித்து விட்டு, மீண்டும் வாயிற் பக்கத்தை நோக்கி நடந்தாள்.

பூவழகியின் இதயம் பெரும் போர்க்களமாக இருந்ததால் அவள், இன்பவல்லி பின்தங்கிவிட்டதையோ வாயிலுக்குச் சென்றுவிட்டதையோ சிறிதும் கவனிக்காமலும், படைத்தலைவன் மட்டுமே தன்னைத் தொடர்ந்து வருகிறான் என்ற நினைப்பேயில்லாமலும் தன் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்ததும் எதிரேயிருந்த பஞ்சணையை நோக்கினாள். அந்தப் பஞ்சணையில் அப்பொழுதும் சோழ நாட்டு இளவல் படுத்திருப்பது போன்ற பிரமையே ஏற்பட்டதால் படுக்கையைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றாள், பூவழகி. உறையூர் மாளிகை உப்பரிகையில் பணிப்பெண்கள் கவரி வீச, சுற்றிலும் அகிற்புகை எழுந்து பரிமளிக்க மலரணையில் படுக்கவேண்டிய சோழ மண்டலாதிபதி, காயமடைந்து தன் படுக்கையில் அனாதை போல் படுத்துக் கிடந்த பரிதாபத்தை எண்ணியதும் அவள் கருணை இதயம் பாகாக உருகி அனுதாபத் துளிகளைக் கண்களிலும் திரட்டி நிறுத்தியது. அந்த நீர்த்துளிகள் இட்ட திரையிலும் எதிரே படுக்கையிலிருந்து திருமாவளவன் தன்னை நோக்கிப் புன்னகைபுரிவதுபோல் தோன்றியது பூவழகிக்கு. அவன் சகோதரியென்று அழைத்ததை எண்ணிய அவள் இதயத்தில் தாபத்துடன் பெருமையும் போட்டி போடவே, கண்களில் நீர்த்துளிகள் தேங்கி நின்ற அந்தச் சமயத்திலும் அவள் இதழ்களில் பெருமைப் புன்சிரிப்பு ஒன்றும் படர்ந்தது. ‘எத்தனை இளவயது! எப்படி அந்த மாளிகையிலிருந்து தப்பினார் இளவரசர்? காவலர் இருப்பார்களே, அத்தனை பேரையும் வெட்டிப்போட்டு வருவதானால் அந்த மெல்லிய கரங்களில் வலிமை எத்தனை இருக்க வேண்டும்!’ என்று நினைத்த பூவழகிக்கு, கரவலிமை பற்றிய நினைப்பு வந்தவுடன் படைத்தலைவனைப்பற்றிய நினைப்பும் வந்தது. படைத்தலைவன் கைகளும் மிக மெல்லியதென்பதையும், ஆனால் அவை தன் கைகளைச் சாதாரணமாகப் பிடித்த சமயங்களில்கூட, பிடி இரும்புப் பிடியாயிருந்ததையும் எண்ணி, பாதி கோபமும் பாதி ஆசையும் கலந்து உறவாட சங்கடப்பட்ட அந்த வேளிர்குலப் பாவை மேற்கொண்டு படைத்தலைவனைப்பற்றி நினைக்க இஷ்டப்படாமல் “இன்பவல்லி!” என்று அழைத்துக் கொண்டு சரேலெனத் திரும்பியவள் ஓசைப்படாமல் தன்னைப் பின்புற மாய் நெருங்கி நின்றுகொண்டிருந்த படைத்தலைவன்மீது மோதிக்கொண்டாள்.

எதிர்பாராது திரும்பித் தன்மேல் மோதிக்கொண்ட பூவழகியின் பூவுடலைக் கீழே விழாமல் பிடித்துக்கொண்ட இளஞ்செழியன், “இன்பவல்லி இங்கில்லையே” என்றான்.

பூவழகி படைத்தலைவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் ஒரு கணம் நின்றாள். தன்னைப் பிடித்து நின்ற கைகளின் வலிமையை அந்தச் சமயத்தில் அனுபவித்துக் கொண்டு சிறிது நேரம் பேசாமலே நின்றாலும், தான் சற்று முன்பு அந்தக் கரங்களைப்பற்றி நினைத்தது சரியாகவே இருக்கிறதென்ற முடிவுக்கும் வந்தாள். உடலை அவன் பற்றி நின்ற இடங்கள் கன்னிச் சிவந்திருக்கும்போல் தோன்றினாலும் பூவழகி அந்தப் பிடியிலிருந்து தளராமலும், கை பிடித்த வலியை அணைத்து ஓடிய இன்ப தாரையில் மூழ்கியும் தத்தளித்து நின்றாள். இருப்பினும் இரண்டு கணங்களில் சுயநிலைக்கு வந்துவிட்ட அந்த வேளிர்குலப் பாவை, தன் உடலை, அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு பஞ்சணைப்பக்கம் திரும்பி அதிலிருந்த பட்டு விரிப்புகளை நீக்கி உதற முற்பட்டாள்.

காரணமில்லாத கோபம் அவள் இதயத்தில் தேங்கி நின்றதால் அவள் பஞ்சணையைச் சீர்ப்படுத்துவதில் அவசியத்துக்கு அதிகமான வேகத்தைக் காட்டினாள். அந்த வேகத்தில் அவள் உடல் எத்தனை மோகனாகரமாக அப்படியும் இப்படியும் வளைந்தது! எத்தனை எத்தனை கவர்ச்சி ஜாலங்களைக் காட்டிக் காட்டி மறைத்தது! எத்தனை எத்தனை முறை அந்தக் கூர்விழிகள் அவன் மீது கோபக் கணைகளை வீசின! வேகத்தில் படுக்கையின் தலை மாட்டுக்கும் கால்மாட்டுக்கும் சென்றபோது அவள் உடல் எத்தனை முறை வேகத்துடன் அவன் மீது உராய்ந்தது! இவற்றையெல்லாம் கவனித்தும் அனுபவித்தும் உணர்ச்சிகள் பெரும் அலைகளாக உள்ளத்தில் எழுந்து மோதப் பேசாமல் நின்ற இளஞ்செழியன், ‘அப்பா! பெண்களின் கோபமே இத்தனை இன்பங்களை அள்ளி வீச முடியுமானால், அவர்கள் ஏன் கோபித்துக் கொண்டே இருக்கக்கூடாது?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். அவள் கோபத்துக்குக் காரணம், தான் அவளுடன் தனிமையில் இருப்பதுதான் என்பது நன்றாகத் தெரிந்தே இருந்தது படைத் தலைவனுக்கு.

ஆனால் அவள் ஏன் அவனுடன் தனிமையிலிருக்க வேண்டும்! இன்பவல்லியை இரு முறை குரல் கொடுத்து அழைப்பதைத் தடுத்தது யார்? அவசியமிருந்தால் உட் கூடத்தில் சந்தித்த வீரர்களைக் கூப்பிட்டால் துணைக்கு வந்து விடுகிறார்கள், ஏன் அவள் அவர்களை அழைக்கவில்லை? துணை தேவையில்லையா?

இளஞ்செழியன் இருக்கும்போது வேறு துணையை அவள் இதயம் விரும்பவில்லை யென்பது வேளிர்குலப் பேரழகிக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது. வாழ்க்கையில் பெண்களுக்காக ஏற்பட்ட துணைவர்கள் மூவர் தான் என்று வடமொழி வாக்கியம் கூறுகிறது. இளமையில் தந்தை, வாலைப் பருவத்தில் கணவன், வயோதிகத்தில் மைந்தன் என்று மூவர் துணையுடனும், அந்த மூவருக்கு அடங்கியும் பெண்கள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அறநூல் கூறுகின்றது. அந்த மூன்று துணைவர்களில் பெண்கள் இரண்டறக் கலப்பது வாலைப் பருவத்தில் கிடைக்கும் துணையுடன்தான். இனம் தெரியாத இளமைப் பருவமே வாலிபத் துணையின் அவசியத்துக்குக் கோடி காட்டுகிறது. வயோதிகம் வாலிபத் துணையின் நாள்களை நினைத்து சாந்தி பெறுகிறது. இப்படி ஒரு பருவத்தில் எதிர்பார்ப்பையும், இன்னொரு பருவத்தில் சாந்தியையும் அளிக்கும் அந்த வாலிபத் துணை அருகிலிருக்கும்போது, கோபத்திலும் தாபத்திலும், வெறுப்பிலும் விருப்பிலும் பெண்மை அந்தத் துணையின் இன்பத்தை அடைவதிலேயே நாட்டத்துடன் நிற்கிறது. அந்த நாட்டம் ஏற்படும்போது கோபம், குதர்க்கம், ஆர்ப்பாட்டம், பிகு முதலிய விகாரங்களும் ஏற்படுகின்றன. இன்பமென்னும் அழகுக்கு இந்த விகாரங்களும் தேவையாயிருக்கிறது. அழகிய வைரங்களைப் போல் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இருண்ட ஒரு ஆகாயம் தேவையாயிருக்கிறதல்லவா? இன்பமான நதிச்சுனை புறப்படக் கடினமான மாலைக் கருக்கல் தேவையாயிருக்கிறது அல்லவா?

இப்படிக் கடுமையிலிருந்து துளிர்க்கும் இன்ப வேதனையில் பூவழகி அந்தச் சமயத்திலும் மூழ்கியிருந்ததால் அவள் போக்கே விபரீதமாயிருந்தது. விடுவிடு என்று பஞ்சணை விரிப்புகளை எடுத்து உதறிப் பஞ்சணையைச் சீர்ப்படுத்திய பிறகு செம்பருத்திச்சாறு வைத்திருந்த கிண்ணத்தை எடுத்து அந்த அறையின் சாளரத்தருகில் கொண்டுபோய் வைத்த பூவழகி மீண்டும் பழையவிடத்துக்கு வராமல் சாளரத்துக்கு அருகிலேயே நின்றாள். சற்று நேரத்துக்கு முன்பு பச்சிலை வாட்ட உதவிய விளக்கின் தங்க ஒளி அவள் அழகிய உடலின்மீது லேசாகப் பட்டுக்கொண்டிருந்ததாலும், அவள் இளஞ்செழியனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்த தாலும் சாளரத்தை அடுத்த சுவர்களில் அவள் அழகிய உருவத்தின் பக்கப் பகுதிகள் மட்டும் நிழலாக விழுந்திருந்தன. விவரம் பூராவும் புலனாகாமல் நிழலாக விழுந்து கிடந்த சமயத்திலும் இணையற்ற அவள் எழில் ‘உடலின் கம்பீரம் படைத்தலைவன் மனத்தைப் பெரிதும் அலைக்கழித்தது. கருமையான பெரும் பாம்புபோல் அவள் முதுகில் புரண்டு இடைக்குச் சற்றுக் கீழே தடைப்பட்டு ஒரு பக்கமாக வளைந்து கிடந்த அவள் அழகிய பின்னலும் பின்னலுக்கு அகப்படாமல் கழுத்துப் பிரதேசத்தில் விலகி நின்று கழுத்தின் சிவப்பைச் சற்று அதிகமாக எடுத்துக்காட்டிய கேசப் பிரிவுகளும் பூவழகியின் பின்னழகு முன்னழகுக்குச் சிறிதும் குறைந்ததல்ல என்பதை நிரூபித்தது. பின்னால் ஒரு புருஷன் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதால் சங்கடப்பட்ட உள்ளத்தின் காரணமாக இரண்டு மூன்று முறை தத்தளித்து அசைந்த கால்கள் இதர லாவண்யங்களையும் லேசாக அசைத்துக் காட்டவே இளஞ்செழியன் முன்னால் செல்லவோ அறையிலிருந்து கிளம்பி வெளியே ஓடிவிடவோ திராணியில்லாமல் நின்றாள்.

பின்னால் சற்று தூரத்தில் நின்ற புருஷனும் புதியவனல்ல, அவன் முறைப் பிள்ளைதான்; தன்னைப் பார்க்காதவனும் அல்ல, வருஷக்கணக்கில் பழகியவன்தான். தொடாதவனும் அல்ல, தொட்டுப் பேசியவனுங்கூட. எதுவும் புதிதல்ல. இருப்பினும் அந்தச் சமயத்திலும் புது உணர்ச்சிகள் அந்தப் பேதையின் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தன. வாலிபத்தின் உணர்ச்சிகளின் தன்மையை நினைத்து அவள் பெரிதும் வியந்தாள். ‘எல்லாம் பகைமை தான். இருப்பினும் அவ்வப்பொழுது புதிதாகத் தோன்றும் இந்த உணர்வின் மர்மந்தான் என்ன! எத்தனையோ முறை இவருடன் பழகி யிருக்கிறேனே. ஏன் இவரைக் கண்டதும் உடல் கூசுகிறது? மனம் துடிக்கிறது? வெட்கம் தடுக்கிறது?’ என்று எண்ணிப் பார்த்துத் தடுமாறினாள் பூவழகி. வாலிபப் பருவத்தில் மட்டும் பழைமையெல்லாம் அந்தந்த நேரத்திற்குப் புத்தம் புதிதாகக் காட்டும் இயற்கையின் இந்திர ஜாலத்தை எண்ணிப் பெருமூச்சு விட்டாள் பூவழகி. இந்தப் பெருமூச்சில் அவள் உடல் ஒருமுறை எழுந்து தாழ்ந்தது.

அந்தப் பெருமூச்சையும் அதன் விளைவாக எழுந்து தாழ்ந்த பின் அழகையும் கவனித்த இளஞ்செழியன், மெள்ளத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கட்டிலைச் சுற்றிச் சென்று அவளை அணுகி மிகவும் நெருங்கி நின்றான்.

அவன் காலடிகள் கட்டிலைச் சுற்ற முற்பட்ட அந்தக் கணமே முறைப்பிள்ளை தன்னை நோக்கி வருகிறான் என்பதை உணர்ந்த பூவழகி, சாளரத்தின் கதவொன்றை ஒரு கையால் பற்றிக்கொண்டாள். அவன் தன்னை நெருங்கி விட்டதையும் பின்னால் வெகு அருகில் நிற்பதையும் அவள் கண்கள் காணாவிடினும் உணர்ச்சிகள் மூட்டிவிட்ட நெருப்பை விசிற அவன் மூச்சு அவள் கழுத்தைத் தடவியது. இரவில் திடீரென எழுந்ததால் தலையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஓரிரு தனிச் சரங்களின் மலர்களின் நறுமணத்தை முகர்ந்த படைத் தலைவன் உணர்ச்சிகள் பெரும் கொந்தளிப்பை அடைந்ததால் அவன் மூச்சும் வெகு உஷ்ணமாகவே இருந்தது.

உள்ளே உணர்ச்சிகள் மூட்டிவிட்ட நெருப்புடன் புறத்தே காதலன் வீசிய மூச்சுக் காற்றின் உஷ்ணமும் சேர்ந்து கொள்ளவே பூவழகியின் உடல் முழுவதும் இன்ப ஜ்வாலை பெரும் புயலாக வீசியது.

அந்த ஜ்வாலையில் வெந்து கருகிவிடும் நிலையிலிருந்த அந்த மலர் உடலுக்கு ஆறுதலளிக்க இஷ்டப்பட்டதுபோல் இளஞ்செழியன் இடது கரம் அவள் தோளை மெல்லப் பற்றியது. அந்த கரஸ்பரிசத்தின் இன்பப் பிரவாகம் உடலெங்கும் பாய்ந்தாலும் அந்தப் பழைய உணர்ச்சி ஜ்வாலையின் வேகம் மட்டும் அடங்காமலே இருந்தது பூவழகிக்கு. உணர்ச்சி வெள்ளத்தில் அவள் மிகுந்தாள். அந்த வெள்ளத்தில் உடன் வர, அடித்துச் செல்ல, அமிழ்ந்து இந்த உலகத்திலிருந்தே மறைந்துவிட, இளஞ்செழியனையும் அவள் உணர்ச்சிகள் இரைந்து அழைத்தன. அந்த அழைப்புக்கு அவன் இணங்கியது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அதிகமாக நெருங்காவிட்டாலும் சங்கடத்தில் அசைந்த அவன் உடல் தன்மீது இருமுறை லேசாக உராய்ந்ததை அவள் உணர்ந்ததால் அசைந்தாள். ஏதோ விவரிக்க இயலாத அச்சம் அவளைச் சூழ்ந்துகொண்டது. அச்சம் மடத்தைத் தேடினாலும் இடம் கிடைக்காததால் திணறினாள் அவள். ஆசை துடித்தது; ஆனால் நாணம் தடுத்தது. பெண்மை உயர் குணங்களெல்லாம் அவளிடம் அந்த நிலையில் எழுந்து நின்றதால் ஒரே புருஷனிடம் லயிக்கும் கற்புடைய தமிழ்ப் பெண்டிரின் பொலிவு அவள் உடலெங்கும் கண்டது. அது அவள் முகத்தில் நன்றாகப் பிரகாசித்தது. கண்கள் சுடர் விட்டாலும் நாணத்தால் இமை தாழ்த்தின. இவற்றையெல்லாம் பார்க்க முடியவில்லை இளஞ்செழியனுக்கு. அவள் முகந்தான் சாளரத்தை நோக்கியிருந்ததே. இருப்பினும், உணர்ச்சிகள் அபரிமித வேகத்துடன் உடலில் சுழன்றதால் சுய பலத்தை இழந்த படைத் தலைவன் ஓர் ஊன்றுகோலாக அவளுடைய இன்னொரு தோளையும் கையால் பற்றியதன்றி, “பூவழகி” என்று மெள்ள அழைக்கவும் செய்தான்.

இன்னிசை போன்ற பெண்குரலல்ல அது. கரகரப்பான ஆண்மகன் குரல். தோளில் பிடித்த கை, மலர்க் கையல்ல. வாளைப் பிடித்துப் பிடித்துக் கடுமையாகிவிட்ட இரும்புக்கை. ஆனால் அந்தக் கரகரப்புக் குரல் எத்தனை இன்பமாயிருந்தது பூவழகிக்கு? இரும்புக்கை பிடித்த இடத்தில் தோள் வலிக்கத்தான் செய்தது. ஆனால், அந்த வலி காட்டியது சொர்க்க மார்க்கம் போலிருந்தது அந்த வேளிர்குல மங்கைக்கு. அவள் இதயம் வெகுவேகமாக அடித்துக் கொண்டது. ஆசை துடித்தது. நாணம் தடுத்தது. அதை உதறித் திரும்பி அவனை நோக்கினாள் அவள். அவனை மட்டும் நோக்கியிருந்தால் முடிவு எப்படித் திரும்பியிருக்குமோ தெரியாது. ஆனால் வாயிற்படியில் யாராவது இருக்கப் போகிறார்கள் என்ற பயத்தால் அங்கும் நோக்கினாள்.

ஆசை பறந்தது. நாணம் வெற்றி கொண்டது. திகிலும் அவள் சித்தத்தில் சூழ்ந்தது. அப்படி அவளைத் திகிற்படுத்த வேளையில்லா வேளையில் திடும் பிரவேசமாக மாளிகையில் நுழைந்து வாயிற்படியில் பூதாகாரமாக நின்ற அந்த அரக்கன் யார்?

Previous articleYavana Rani Part 1 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here