Home Sandilyan Yavana Rani Part 1 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

118
0
Yavana Rani Part 1 Ch27 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch27 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 27 புத்தர் சிலை மர்மம்

Yavana Rani Part 1 Ch27 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

உள்ளம் காதலின் கள் வெறிகொண்டதால் உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆசை துடித்து நிற்க, இன்பத்தை அள்ளி வீசிய இரு கருவிழிகளால் தன்னை நோக்கிய பூவழகி சட்டென வாயிற் பக்கமும் கண்களை ஓட விட்டதையும் அப்படி ஓடவிட்டதும் அவள் செந்தாமரை முகத்தில் காதல் பொழிவு மறைந்து, கோபச் சாயையும் திகிலும் கலந்து படர்ந்து விட்டதையும் கவனித்த இளஞ்செழியன், அவள் உணர்ச்சி மாற்றத்துக்குக் காரணத்தை அறிய விரும்பி, தன் கண்களையும் வாயிற்படி பக்கம் திருப்பினான். தங்கள் இருவரையும் உற்று நோக்கிய வண்ணம் வஞ்சிமாநகரின் அந்தப் பெரு மாளிகை யின் உயர்ந்த வாயிற்படியின் உச்சியைத் தொடும் நல்ல உயரத்துடனும் வாயிற்படி அகலத்துக்குச் சற்று அதிகமாகவே உடல் அகலமிருந்ததால் உடலை ஒரு பக்கம் ஒருக்களித்தும் நின்றிருந்த ராக்ஷஸ சொரூபத்தைக் கண்டதும் இளஞ் செழியன் முகத்தில் கோபத்துக்குப் பதில் ஆச்சர்ய சாயை துளிர்விட்ட தன்றி, முதலில் கோபத்துடன் திரும்பிய கண் களிலும் எல்லையற்ற அடக்கமும் பணிவும் பரவலாயிற்று. எதிர் பாராத விதமாக அந்த மனிதனைத் திடீரென சந்தித்து விட்டதால் ஏதும் பேச வழியில்லாமல் நின்ற சோழர்படை உபதலைவனை நோக்கிப் புன்முறுவல் செய்த ராக்ஷ ஸ சொரூபம், வாயிற்படியைவிட்டு நீங்கி மிகுந்த சொந்தத்துடன் உள்ளேயும் காலடி எடுத்து வைத்தது.

முன்னறிவிப்புச் சிறிதுமில்லாமல் அத்தனை துணிவுடன் தன் பள்ளியறையில் நுழைந்த அந்த மனிதனைப் பார்த்ததால் கண்களில் கோபமும், தங்கள் ஏகாந்தத்தைக் கெடுத்த அந்த மனிதனைப் பார்த்ததும் படைத்தலைவன் ஏதும் பேசாமல் அடங்கி ஒடுங்கி நிற்கிறானே என்ற எண்ணத்தால் சிந்தையில் வெறுப்பும் ஒருங்கேயடைந்த பூவழகி, படைத் தலைவனைத் தன் கையால் ஒதுக்கிக் கொண்டு ஒரு அடி முன்னெடுத்து வைத்து, “யார் நீ? இங்கு வர உனக்கு யார் அனுமதியளித்தது?” என்று கனல் கக்கும் சொற்களைக் கொட்டினாள்.

பதிலுக்கு அந்த மனிதன் புன்முறுவலே செய்ததால் வியப்புடன் அவனை நோக்கினாள் பூவழகி. நல்ல பருத்த உடலானாலும் சதை நன்றாகக் கெட்டிப்பட்டு உயரமும் அதிகமாயிருந்ததால் அந்த மனிதனுடைய சரீரம் விகாரமாயில்லாமல் கம்பீரமாகவே இருந்தது. அவன் பெருத்த இடையைச் சுற்றிப் பட்டையாகச் சென்ற கச்சையிலிருந்து தொங்கிய வாளின் நீளமும் அகலமும் சாதாரணப் போர் வாள்களைவிட அதிகமாகவே யிருந்ததைக் கவனித்த பூவழகி, ‘இத்தனை பெரிய வாளைச் சுழற்றக்கூடியவன் உண்மையில் பெரிய வீரனாகத்தானிருக்க வேண்டும்’ என்ற தீர்மானத்துக்கு வந்தாள். வாள் பெரியதாயிருந்தாலும் அதில் வேலைப்பாடுகள் இல்லாதிருந்ததைக் கவனித்த வேளிர்குலப் பாவை அந்த மனிதன் யாராயிருந்தாலும் அவன் படாடோபத்தில் பிரியமில்லாதவன் என்பதைப் புரிந்து கொண்டாள். அந்த மனிதனின் எளிய வாழ்க்கைக்குச் சரிகையோ, பூ வேலைப்பாடோ சிறிதுமில்லாத அவன் மேலங்கியும், ஆபரணம் ஏதுமில்லாத கழுத்தும் சான்றாக நின்றன. இத்தனைக்கும் அவன் விசாலமான கண்களில் தெரிந்த கம்பீரமும் கருணையும் பெரிய உதடுகளில் விளையாடிய குறுநகையும், அதனால் சற்றே புடைத்து நின்ற கன்னக் கதுப்புகளும், அவன் பெருங்குடியில் பிறந்தவனென்பதைச் சந்தேகமற நிரூபித்தன. அவ்வளவு கம்பீரமான முகத்துக்கு அதிகக் கம்பீரத்தையும் ஓரளவு பயங்கரத்தையும்கூட அளித்தது அவன் பெருமீசை மட்டுமல்ல, சுருட்டை சுருட்டையாக இரும்புக் கம்பிகளைப் போல் வளைந்து வளைந்து தொங்கிய அவன் தலைமயிர்களும்தான். அந்தத் தலைமயிரின் விசித்திரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பூவழகி, இப்படியும் சிகையிருக்க முடியுமா?” என்று பிரமித்தாள். அவன் தலைக்கேசங்கள் முழுக் கறுப்பாயில்லாமல் ஓரளவு பழுப்பாகவே யிருந்தபடியால் பூமியிலிருந்து தோண்டி யெடுக்கப்பட்ட இரும்பின் மூலக்கனியைப் போலக் காட்சியளித்ததன்றி, அவை சுருண்டிருந்த முறை ஏதோ பல இரும்பு வளையங்களின் தொகுப்புப் போலத் தெரிந்ததல்லாமல், சில இடங்களில் மயிர், குச்சிகுச்சியாக ஆணிகளைப் போலவும் எழுந்து நின்றது.

விநோதமான அந்தத் தலைமுடியைக் கவனிக்கக் கவனிக்க பூவழகிக்கு வியப்பாயிருந்தாலும், படைத் தலைவன் உணர்ச்சிகள் மட்டும் வேறு மார்க்கத்தில் திரும்பி அவன் உள்ளத்தே ஏதேதோ எண்ணங்களைச் சுழலவிட்டன. வாயிற்படியில் நின்ற அந்த மனிதனை அந்த இடத்தில் சந்திக்கப் போவதாகக் கனவில் கூட நினைக்காததாலும் அப்படி அவனைச் சந்தித்துவிட்டதன் விளைவாக அவனுக்குத் தான் சொல்லக்கூடிய சமாதானங்கள் பல இருந்தாலும், பேச்சை எப்படித் துவங்குவதென்றே புரியாமல் திணறிய படைத்தலைவனைப் பூவழகியின் இரண்டாவது கேள்வி சுயநிலைக்குக் கொண்டு வந்தது. “நான் கேட்பது உன் காதில் விழவில்லையா? உனக்கு யார் அனுமதி கொடுத்தது இங்கு வர?” என்று கடும் கோபத்துடன் கேட்டாள் பூவழகி.

கேள்வி மிக உஷ்ணமாகவே கிளம்பினாலும் அந்த மனிதன் பதில் மட்டும் மிக சாந்தமாகவே வெளிவந்தது. “பெண்களின் அறையில் நுழைய சந்திர வெளிச்சம் அனுமதி கேட்பதில்லை. தென்றலோ சூறாவளியோ அனுமதி கேட்பதில்லை. சாளரம் திறந்திருந்தால், தானே உள்ளே நுழைகின்றன” என்றான் அந்த மனிதன்.

அந்த மனிதன் சொன்ன பதில் வேடிக்கையாயிருந்தது பூவழகிக்கு. இரும்புக் கம்பிகளைப் போன்ற பயங்கரமான அவன் தலைமயிரை நோக்கிய பூவழகி, “தென்றல் மிக நன்றாயிருக்கிறது” என்று இகழ்ச்சியுடன் கூறியதன்றி, “ஏன் உள்ளே நுழைந்தாய் என்று கேட்டால் கவிபாடுகிறாயே, உனக்கென்ன பைத்தியமா?” என்று கேள்வி யொன்றையும் வீசினாள்.

பதிலுக்கு அரக்கன் போன்ற அந்த மனிதன் லேசாக நகைத்துவிட்டுக் கூறினான்: “பெண்ணே! கவிக்கும் பைத்தியத்துக்கும் அதிக வேற்றுமை இல்லையென்பது உனக்குத் தெரியுமா?”

“தெரியும். ஆனால் கவிகள் கண்ட இடங்களில் நுழைவதில்லை.”

“கண்ட இடமென்று நினைத்திருந்தால் இங்கு நானும் நுழைந்திருக்க மாட்டேன்.”

“சொந்தமென்று நினைத்து நுழைந்தாயோ?” வெட்டும் கத்திபோல் எழுந்தது பூவழகியின் அடுத்த கேள்வி.

“ஆம்!”

“நீ பைத்தியமல்ல.”

“பின்?”

“திமிர் பிடித்தவன்”

“யார் சொன்னது?”

“உன் முகம் சொல்லுகிறது.”

“அப்படியா!”

“அது மட்டுமல்ல.”

“வேறு எது சொல்கிறது?”

“உன் இரும்புத் தலை.”

இதைக் கேட்டதும் பூவழகியை அடக்க முன் வந்த இளஞ்செழியனைத் தடுத்த அந்த மனிதன் சற்றுப் பெரிய தாகவே கலகலவென நகைத்துவிட்டான்.

தங்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டு திடீரென்று உள்ளே நுழைந்ததல்லாமல், இறுமாப்புடன் பேசிய அந்த இரும்புத் தலையனை அடக்க முன்வராமல் இடித்த புளிபோலிருந்ததல்லாமல் தன்னையே அடக்க முன்வந்த படைத்தலைவன்மீது சீற்றம் ததும்பிய விழிகளை நாட்டிய பூவழகி, “யார் இவன்? எதற்காக நகைக்கிறான்?” என்று வினவினாள்.

“பூவழகி! இவர்….’ என்று ஏதோ பதில் சொல்லத் துவங்கிய இளஞ்செழியன் வார்த்தைகளை இடையிலேயே வெட்டிய அந்த மனிதன், “படைத்தலைவரே! நீர் எதற்காகச் சிரமப்பட வேண்டும்? பூவழகியே நான் யாரென்று சொல்லி விட்டாளே” என்றான்.

“நான் எங்கு சொன்னேன்?” என்று சீறினாள் பூவழகி.

“இரும்புத் தலையன் என்று என்னை நீ அழைக்க வில்லையா?” என்று கேட்டான் அந்த மனிதன்.

“அழைத்தேன்.”

“அதுதான் என் பெயர்.”

“உண்மையாகவா?”

“ஆம். சிறிது மாற்றமுண்டு. இரும்பிடர்த்தலையன் என்றுதான் என்னை அழைக்கிறார்கள். தலைமயிரைப் பார்த்து வைத்த காரணப் பெயர்தான். இருந்தாலும் தாய் வைத்த பெயர். அதைத் துறக்க நான் இஷ்டப்படவில்லை.”

மெள்ள மெள்ள நிதானமாகவே ஏதோ ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்லுவதுபோல் அந்தச் சொல்லை அந்த மனிதன் சொன்னாலும், அதைக் கேட்டதும் பூவழகியின் கண்களிலிருந்த கோபம், வெறுப்பு, இகழ்ச்சி அத்தனையும் மறைந்தன. திடீரெனக் கீழே குனிந்து அவன் முன்பாக மண்டியிட்டு வணங்க முழங்காலைத் தாழ்த்தினாள்.

இரண்டு எட்டில் அவளுக்கும் தனக்கும் இடையி லிருந்த தூரத்தைக் கடந்த அந்த மனிதன் அவளுடைய இரு கைகளையும் பிடித்துக் குழந்தையைத் தூக்குவது போல் தூக்கி அவளை நிறுத்திவிட்டு, “வேண்டாம் பூவழகி! வேண்டாம். மாரப்பவேளின் மகள் ஒருவனுக்கு மண்டியிட்டாள் என்ற பெயர் வேண்டாம்” என்றார் இரும்பிடர்த்தலையார்.

அவர் கூறிய வார்த்தைகளால் மிதமிஞ்சிய பெருமையும் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கவிஞரும் ராஜதந்திரியுமான இரும்பிடர்த்தலையாரைச் சந்தித்து விட்டதல்லாமல் ஏதேதோ பேசிவிட்டோமே என்ற காரணத்தால் ஓரளவு அச்சமும் பூவழகியின் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டன. வஞ்சிமாநகருக்கு இரும்பிடர்த்தலையார் ஏன் வந்தார், எப்பொழுது வந்தார் என்பதை அறியாததால் திகைத்த பூவழகி, “தாங்கள் இன்னாரென்று அறியாமல் ஏதேதோ பேசிவிட்டேன்” என்று பணிவு நிரம்பிய குரலில் கூறினாள்.

“குழந்தைகள் பேசுவதில் தகப்பனுக்கு என்ன கோபமிருக்க முடியும் பூவழகி? மழலை இன்பத்தையே அளிக்கிறது. குழந்தைகள் காலால் உதைப்பதும் கையால் அடிப்பதும் இன்பம்” என்று சொன்ன இரும்பிடர்த் தலையாரை ஆச்சரியத்துடன் நோக்கிய பூவழகி, அவர் பிடியிலிருந்து மெள்ளத் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

அவருடைய அரக்கத் தோற்றத்தை அகற்றவே ஏற்பட்டதுபோல கடை இதழில் சதா தவழ்ந்த புன்சிரிப்பு நன்றாக மலர்ந்தது. இந்தச் சிரிப்பில் அவருடைய விசாலமான முகம் எத்தனை ராஜகளையைப் பெற்றது என்பதை அப்பொழுதுதான் கவனித்தாள் பூவழகி. அவருடைய கவிதைக் கண்கள் ஏதோ கனவைக் காண்பதுபோலத் தூரப் பார்வையைக் கொண்டிருந்தாலும் அவற்றில் வெகு ஜாக்கிரதையும் கலந்திருந்ததைப் பூவழகி கவனித்தாள்.

திருமாவளவன் மாமனும், கவியும் ராஜதந்திரியுமான இரும்பிடர்த்தலையார் உறையூரைவிட்டு, கருவூருக்கு ஏன் வந்தார், எப்பொழுது வந்தார் என்று பூவழகியின் இதயத்தில் ஓடிய கேள்விகளுக்கு அவரே பதில் சொன்னார்: “மகளே, சோழ நாட்டில் சதிமேகங்கள் கூடி வருகின்றன. அந்த மேகங்களை வீசி சோழ நாட்டின் தெளிவான அரசியல் வானத்தைக் கருப்பாக்க முயலும் சூறாவளிகள் சோழ மண்டலத்தின் தெற்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் புறப்பட்டிருக்கின்றன. உறையூர்விவகாரத்தைச் சமாளிக்கு முன்பாக இந்த இருபகுதிகளில் உள்ள நிலையைச் சமாளிக்க வேண்டி யிருந்தது. அதற்காகவே கருவூர் வந்தேன். வந்த வேலையில் பாதியை நீ முடித்துவிட்டாய்! பாதியைக் கரிகாலனே முடித்துவிட்டான். என் வேலை இனி சுலபமாகி விட்டது.”

“கரிகாலனர்! அந்தப் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் பூவழகி.

“நான்தான் சொன்னேன்” என்று கூறிக்கொண்டே வாயிற்படியைத் தாண்டி உள்ளே நுழைந்தார் சமண அடிகள்.

பூவழகியின் கண்கள் மட்டுமின்றி இளஞ்செழியன் விழிகளும் ஆச்சரியத்தால் மலர்ந்தன. அந்த வியப்புக்கு விடை காணப் படைத்தலைவன் கேட்டான், “எங்கே நீங்கள் இவரைச் சந்தித்தீர்கள்?” என்று.

“இளவரசர் வாயிலில் புரவி ஏறிச் சென்றாரல்லவா?” என்று கேட்டார் சமண அடிகள்.

“ஆம்.”

“அப்பொழுது நானும் வாயிலில்தானே இருந்தேன்.”

“இருந்தீர்கள்.”

“இளவரசர் சென்றதும் நீங்களெல்லாம் உள்ளே வந்து விட்டீர்கள்.”

“ஆமாம்.”

“நானும் வரத்தான் திரும்பினேன்.”

“உம்.”

“மரங்களின் இருளிலிருந்து யாரோ என்னைக் கூப்பிட் டார்கள். நான் போனேன். அங்கு பார்த்தால் இரும்பிடர்த் தலையார் இருந்தார்.”

மீதி விஷயங்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமில்லாததால் இளஞ்செழியன் இரும்பிடர்த்தலை யாரை நோக்கிக் கேட்டான்: “இளவரசர் இங்குதான் வந்திருப்பாரென்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“உட்காருங்கள் சொல்கிறேன். பூவழகி! நீயும் உட்கார்” என்று இருவரையும் பஞ்சணையில் உட்காரச் சொல்லிய இரும்பிடர்த்தலையார், தாம் மட்டும் உட்காராமல் அறையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டே கரிகாலன் வரலாற்றைக் கூறலானார்.

“கரிகாலன் இங்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்கள் படைத்தலைவரே. கரிகாலனைக் கண்ணிமை காப்பதுபோல் காக்க உறுதி கொண்டிருக்கும் என்னைத் தவிர வேறு யார் இவன் நடமாட்டங்களைக் கவனிக்க முடியும்! அப்படி இரவும் பகலும் அவனைப் பார்த்துக் கொண்டிருக்காவிட்டால் மன்னர் இளஞ்சேட்சென்னி சென்ற இடத்திற்கு இவனும் சென்றிருப்பான். சோழமண்டலத்தில் சூரிய வம்சமும் அடியோடு அற்றுப் போயிருக்கும். இளஞ்செட்சென்னியின் மாளிகை இன்னும் என் கண் முன்பாக நிற்கிறது! எத்தனை பெரிய மாளிகை திடீரெனத் தீபக்குன்றாகத் தெரிந்தது. எத்தனை மரங்கள் வெடித்தன! மரங்களா வெடித்தன? இல்லை இல்லை? உறையூர் மக்களின் மனங்கள் வெடித்தன. உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் அழகிய ரதங்கள் இனி உறையூர் சாலைகளில் உருண்டோடாவே என்று உறையூர் மக்களின் இதயங்கள் வெடித்தன. அன்று கொளுத்தியது உறையூர் பெருமாளிகையையல்ல; அரசன் மாண்டு அராஜகம் ஏற்பட்டால் மாற்றார் அரசை ஏற்றுவிடுவாரே என்று ஏங்கிய எண்ணற்ற மக்களின் உள்ளங்கள் கொளுத்தின. திடீரென்று நள்ளிரவில் ஏற்பட்ட அந்தச் சதியால் உறையூர் அன்னையின் முகமே சிவந்து விட்டதுபோல் தீ ஜ்வாலை வெகு தூரத்துக்குச் செக்கச்செவே லெனத் தெரிந்தது. நெருப்பை அணைத்தார்கள் மக்கள். சதியை அணைக்க முடியவில்லை. தீயில் தீய்ந்து கருகிவிட்ட பல சடலங்கள்தாம் மாளிகையில் கிடைத்தன. எது அரசர் சடலம், எது வேலையாள் சடலம் என்று நிர்ணயிக்க முடியாமல் ஆபரணங்களையும் கத்திகளையும் வேல்களையும் கூடக் கருக்கிவிட்டது அந்தப் பாழும் தீ. அந்த மாளிகைக்கு நானே சென்றேன். சடலங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். எது என் தங்கை, எது என் தங்கை புருஷன்? ஏதும் தெரியாமல் திணறினேன். பிணங்களைப் புரட்டிய கைகள் நடுங்கின. அரச மரியாதையுடன் புதைக்கக்கூடச் சடலங்கள் கிடைக்க வில்லை…” என்று சொல்லிய இரும்பிடர்த்தலையார் உணர்ச்சி மிகுதியால் பேச்சைச் சற்று நிறுத்தினார்.

பூவழகி துக்க வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தாள். “கோரம் கோரம்” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.

இரும்பிடர்த்தலையார் நீர் தளும்பிய கண்களுடன் அவளைப் பார்த்துவிட்டு மேலும் சொன்னார்: “கேட்பதற்கே கோரமாயிருக்கும் இந்தச் சதியின் விளைவை நேரில் பார்த்த எனக்கு எப்படியிருக்கும் பூவழகி? இளஞ்சேட்சென்னிக்கு என் தங்கையை மணமுடித்துக் கொடுத்த அதே கைகளால் அவர்கள் இருவர் பிணங்களையும் தேடியும் கிடைக்காத என் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? அந்த உள்ளக் கொதிப்பில் சதிகாரர்களைப் பழி வாங்க நெருப்பணைந்த அந்த மாளிகைச் சாம்பலையே கையில் எடுத்துச் சத்தியம் செய்தேன். உடனே படைகளைத் திரட்டிப் பாதகன் இருங்கோவேளைக் கொன்றும் இருப்பேன். கொல்லவும் முயன்றேன். ஆனால், இரு வல்லரசுகள் அவனுக்குத் துணை நின்றன. தீ வைத்துத் தாயாதி இளஞ்சேட்சென்னியைக் கொன்ற இருங்கோவேள் அதை விபத்து என்று பறை சாற்றினான். எந்தக் குற்றமும் புரியாத இரண்டு அப்பாவி களைத் தீ வைத்ததாக நீதி மன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கவும் செய்தான். சேரநாட்டு, பாண்டிய நாட்டுத் தூதர்கள் அதற்கு ஒத்துப் பாடினர். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நல்லவேளை! அரசர் மாளிகை எரிந்த இரவு கரிகாலன் என்

மாளிகையில் உறங்கினான். அவனைத் தப்புவிக்கும் எண்ணத்துடன் என் மாளிகைக்கு ஓடினேன். அங்கு என் மனைவி வெட்டப்பட்டுக் கிடந்தாள். கரிகாலன் மறைந்துவிட்டான். புலன் விசாரித்து சேரர் வஞ்சியில் கரிகாலன் சிறைப் பட்டிருப்பதை அறிந்து இங்கு வந்தேன். ஆன்பொருனை நதிக்கரை மாளிகையில் கரிகாலன் சிறையிருப்பதை அறிந்து சில காவலருக்குப் பணம் கொடுத்து என் பக்கத்தில் சேர்த் தேன். இரவு நேரங்களில் கரிகாலனும் நானும் விளக்குகளை ஆட்டி ஜாடை மூலம் கருத்துக்களை அறிவித்துக் கொண் டோம். அதற்குச் சமணத் துறவி பெரிதும் உதவியாயிருந்தார்…”

“சமண அடிகள் அதைத்தான் சாளரத்தின் மூலம் காட்டினாரோ?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“ஆமாம்” என்றார் அடிகள் மெதுவாக.

இளஞ்செழியனின் கேள்வியையோ அடிகளின் பதிலையோ கவனிக்காமல் இரும்பிடர்த்தலையார் மேலும் சொன்னார்: “இந்த ஒரு அவகாசம் கிடைத்திருந்தால் திருமாவளவன் கால் கருகியிருக்காது; அவன் பெயரும் மாறியிருக்காது. ஆனால், நான் கருவூருக்கு வந்திருப்பதை இருங்கோவேள் எப்படியோ தெரிந்து கொண்டான். என்னைப் பிடிக்க ஏதேதோ முயற்சிகள் செய்தான். பிரும்மானந்தர் முன்னெச்சரிக்கை செய்ததால் தப்பினேன். இல்லாவிடில் நீரும் நானும், இருவருமே அவனிடம் சிக்கியிருப்போம் படைத் தலைவரே!”

இரும்பிடர்த்தலையார் உருக்கமாக உரைத்த அந்த சோகக் கதையால் இதயம் நெகிழ்ந்துவிட்ட இளஞ்செழியன் அவர் முடிவாக உரைத்த வார்த்தைகளால் விழிப்படைந்து, “ஆம் ஆம், நான் தப்பியது தெய்வாதீனம்” என்றான்.

“நான் தப்பினதும் தெய்வாதீனந்தான். பிரும்மானந்தர் பூம்புகாரிலிருந்து அவ்வப்போது அளித்த தகவலால் தான் தப்பினேன் படைத்தலைவரே. இருங்கோவேளின் சதி நோக்கம் முன்பே பிரும்மானந்தருக்குத் தெரிந்திருக்கிறது. உறையூருக்கே செய்தியனுப்பினார்; உறையூரிலிருந்து நான் இங்கு வருவதை எப்படியோ அறிந்து இங்கும் சமண அடிகளை எச்சரித்திருக்கிறார். இத்தனையையும் சமாளித்து விவரம் அறிந்திருக்கிறான் இருங்கோவேள். மீண்டும் ஒரு தீ விபத்தைச் சிருஷ்டித்து இளவரசரையும் ஒழித்துவிட முயன்றான். அந்தக் கொலை முயற்சியிலிருந்து கரிகாலன் எப்படித் தப்பினான் என்பது எனக்கே புரியவில்லை” என்றார் இரும்பிடர்த்தலையார்.

“உள்ளேயிருந்த காவலரை வெட்டிப் போட்டு வெளி வந்தார் இளவரசர்” என்று விளக்கினான் இளஞ்செழியன்.

“வெளியே காவலர் இருந்திருப்பார்களே?”

“இருந்தார்கள். ஆனால், அவர்களை எதிர்த்து நின்றார் இளவரசர்.”

“தன்னந்தனியாகவா?”

“இல்லை” என்றார், படைத்தலைவனுக்கும் இரும் பிடர்த்தலையாருக்கும் இடையே புகுந்த சமணத்துறவி. “சமயத்தில் படைத்தலைவரும் சண்டையில் கலந்து கொண் டார். இரத்தப்பெருக்கால் மூர்ச்சையடைந்த இளவரசரை இங்கு தூக்கி வந்ததும் இவர்தான்!”

நன்றி ததும்பிய கண்களைப் படைத்தலைவன் மீதும் பூவழகியின் மீதும் நாட்டிய இரும்பிடர்த்தலையார், “நீங்கள் இன்று காப்பாற்றியது இளவரசரை மட்டுமல்ல, சோழ மண்டலத்தையே காப்பாற்றியிருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டு, “இந்தப் பஞ்சணையில்தானே படுத்திருந்தார் இளவரசர்?” என்று கேட்டார்.

அதுவரை மனம் நெகிழ்ந்து பரிதாபத்தாலும், உறையூரின் கோர சம்பவத்தின் விவரத்தைக் கேட்டதால் பயத்தாலும், மௌனமாக உட்கார்ந்திருந்த பூவழகி, “ஆம்” என்று மெள்ளப் பதில் சொன்னாள். “இந்த ஏழையின் பஞ்சணையில் தான் மன்னர் படுத்திருந்தார்” என்றும் கூறினாள்.

இரும்பிடர்த்தலையார் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தமது பெரும் தலையை அசைத்து, “ஆம், இனி மன்னர் என்று அழைப்பதே பொருந்தும்” என்று கூறிவிட்டு, “பூவழகி! இனிமேல் ஏழையின் பஞ்சணை என்று சொல்லாதே. சோழமண்டலாதிபதி படுத்த படுக்கை இது” என்று சொல்லி, திருமாவளவனையே தடவிக் கொடுப்பதுபோல் அந்தப் படுக்கையைத் தடவினார்.

அவர் ஆசையுடன் படுக்கையைத் தடவிப் பார்த்ததைக் கண்ட பூவழகியின் கண்களில் நீர் திரண்டது. ‘மேலுக்கு ராக்ஷ ஸன் போல் காட்சியளிக்கும் இந்த மனிதனிடம் எத்தனை அன்பு இருக்கிறது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

இளஞ்செழியனுக்கு மட்டும் திடீரெனச் சந்தேக முண்டாகவே கேட்டான், “பிடர்த்தலையாரே! மன்னர் சென்றதை எதற்காக மர நிழலில் இருந்து பார்த்தீர்? ஏன் அவரை அழைத்து நிறுத்தவில்லை” என்று.

“நிலவு மங்கியிருக்கிறது. அடையாளம் சரியாகப் புரியவில்லை. மன்னர் போக வேண்டிய இடம் இவருக்குத் தெரியும்” என்றார் இரும்பிடர்த்தலையார்.

“எந்த இடத்துக்குப் போவார்?” என்று வினவினான் இளஞ்செழியன்.

“சமண மடத்துக்குத்தான்” என்று பதில் சொன்னார் இரும்பிடர்த்தலையார்.

“ஐயோ, அங்கா!”

“ஏன்?”

“அங்கு இருங்கோவேளின் வீரர்கள் இருப்பார்களே!”

“இருந்தால் பாதகமில்லை.”

“பாதகமில்லையா?”

“ஆம்.”

“ஏன்?”

“புத்தர் சிலையும் இருக்கிறது.”

“புத்தர் சிலை என்ன செய்ய முடியும்?”

இதைக் கேட்ட இரும்பிடர்த்தலையார் மட்டுமின்றிச் சமண அடிகளும் உரக்க நகைக்கவே வெகுண்ட இளஞ்செழியன், “நீங்கள் சிரிக்கும் காரணம் எனக்குப் புரியவில்லை ” என்றான், குரலிலும் கோபம் தொனிக்க.

“இப்படி வாரும்” என்று அருகே இளஞ்செழியனை அழைத்த இரும்பிடர்த்தலையார், அவன் காதோடு காதாக ஏதோ சொன்னார். இரும்பிடர்த்தலையார் விவரித்த மர்மத்தைக் கேட்டு எல்லையில்லாத பிரமிப்பால் இளஞ் செழியன் கண்கள் அகன்றன. “இதென்ன புதுமையாய் இருக்கிறதே. தமிழர் பொறி இயல் நூலோ, சமய பாடங்களோ விளக்க முடியாத பெரும் புதிராகவல்லவா இருக்கிறது!” என்று குரலிலும் பிரமிப்பு தட்டக் கேட்டான்.

“நமது சமயத்துக்கும் பொறி இயலுக்கும் புறம்பானது தான் புத்தர் சிலை. ஆனால் யவனர் சூழ்ச்சிக்கும் திறனுக்கும் புறம்பானதல்ல” என்றார் இரும்பிடர்த்தலையார்.

இளஞ்செழியன் நனவுலகத்திலிருந்து கனவுலகத்துக்குச் சென்றான். புகாரையும் யவனரையும் நினைத்த அவன் சித்தத்திலே வஞ்சி மாநகர் சமண மடத்துப் புத்தர் சிலை மீண்டும் மீண்டும் வலம் வந்தது. போதிஸத்வரின் அருள் விழிகள் அவனை நோக்கி நகைப்பது போலும் தோன்றியது. “கூடாது! கூடாது! அருளே வடிவமான புத்தர்பிரான் சிலையில் இத்தனை பயங்கர மர்மத்தை இணைப்பது பொருந்தாது. அதர்மம், அக்கிரமம். இதற்கு நாம் இடமளிக்கக் கூடாது இரும்பிடர்த்தலையாரே!” என்று இரைந்து கூவினான் படைத்தலைவன்.

Previous articleYavana Rani Part 1 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here