Home Sandilyan Yavana Rani Part 1 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

84
0
Yavana Rani Part 1 Ch29 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch29 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 29 இவர் என் மணாளர்

Yavana Rani Part 1 Ch29 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

புத்தர் சிலையுள்ள அந்த விசித்திர சமண விஹாரத்தை இரும்பிடர்த்தலையாரும், இளஞ்செழியனும், சமணத் துறவியும் அடைந்த சில விநாடிகளில் எஞ்சிய இராப்பொழுதின் கடைசிக் கட்டம் முடிவடைந்து விட்டபடியால் வஞ்சிமா நகரில் பொழுது மெள்ள மெள்ளப் புலர்ந்து விட்டாலும், விஹாரத்தின் பெரும் சுவர்களின் காரணமாக உட்கூடத்திலும் அடர்ந்த மரங்களின் காரணமாக வெளித்தோப்பிலும் ஓரளவு இருட்டு இருந்துகொண்டே யிருந்ததன் விளைவாகத் தோப்பில் நின்றிருந்த மூவரும் மறைந்திருக்க முடிந்ததன்றி உட்கூடத்தில் புத்தர் சிலைக்கருகில் தொங்கிக் கொண்டிருந்த தூங்கா விளக்கின் வெளிச்சத்தில் ராணியின் நடவடிக்கைகளைக் கவனிக்கவும் முடிந்தது. இருங்கோவேள் சீறிய அந்த ஆபத்தான சமயத்திலும் ராணி அவனைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் நடந்து கொண்டதையும் அவனுக்கே நிபந்தனை சொல்லி மிரட்டியதையும் கண்ட இரும்பிடர்த் தலையாரும் சமணத் துறவியும் வியப்பின் எல்லையை அடைந்தார்களென்றாலும், இளஞ்செழியன் கருத்து மட்டும் அந்த விநாடியில் இணையற்ற அவள் லாவண்யத்தைப் பருகி வெளிச்சத்தில் நீலக் கற்களைப் போல மின்னிய அவள் அழகிய கண்கள் மீதும் கொண்டையிலிருந்து விலகித் தொங்கிய பொன்னிற மயிர்கள் மீதும், தந்தம் போன்ற மேனியின் மீதும் தாவித் தாவிச் சென்று கொண்டிருந்தது.

கோபக் கனல் வீசிய கண்களால் இருங்கோவேளை ஏறெடுத்து நோக்கிய யவன ரணி புத்தர் சிலைக்கருகில் உலகத்தையே ஆளவந்த பெரும்சக்கரவர்த்தினியைப் போல் நின்றிருந்தபோதும், அவள் கடுமையிலும் கன்னம் சிவப்பு தட்டி அவள் அழகைப் பன்மடங்காக்கி விட்டதைப் படைத்தலைவன் கண்டான். அவள் தன் இரு கரங்களையும் பின் புறமாகக் கொண்டுபோய்ப் புத்தர் சிலையின் மடியில் வைத்ததால், அவளுடைய உடற்கட்டின் அழகைக் கண்ட இளஞ்செழியன் மனம் ராணியின் அழகையும் பூவழகியின் அழகையும் இணைத்துப் பார்க்கத் தொடங்கி எது மேற்பட்ட அழகு என்பதை நிர்ணயிக்க முடியாததால், ‘அழகுப் புஷ்பம் முல்லையா, தாமரையா?’ என்ற கேள்வியில் லயித்தது. வெண்மையான முல்லையைப் போன்ற அந்த மேல்நாட்டு வெள்ளைப் பெண்ணின் நிறத்தில் ஒருவிதக் கவர்ச்சியையும், சூரிய ரச்மியில் விகசிக்கும் தாமரை இதழின் அடிப்புற நீலமும் மேற்புறம் செவ்வரியும் படர்ந்து ஓடும் தமிழ்ப் பெண்ணின் சிவந்த நிறத்தில் மற்றொரு விதக் கவர்ச்சியையும் கண்ட படைத்தலைவனின் இதயம் இரண்டு பக்கங்களிலும் சமவேகத்துடன் இழுபட்டதால் யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தது. காலம் அந்தத் திகைப்பைப் பயன்படுத்திக் கொண்டு எந்தப் பெண் இளஞ்செழியன் முன்பு நிற்கிறாளோ அந்தப் பெண் வசம் அவன் இதயத்தை இழுத்துச் சென்றது. இயற்கை தந்த செயற்கையின் ‘காரணமாகச் சில வினாடிகள் முன்பு பூவழகியிடம் லயித்து நின்ற படைத் தலைவன் மனம் ராணியை நோக்கிப் பாய்ந்தது.

தன் மன நிலையின் விசித்திரத்தைக் கண்ட இளஞ் செழியனே ஆச்சரியப்பட்டான். திடமான நெஞ்சுள்ளவன் என்று பிரசித்தி பெற்ற என் கதியே இப்படியிருந்தால் திடமற்றவர்கள் கதி என்ன என்று எண்ணிப் பார்த்தான். ‘நான் நெஞ்சின் திடத்தை எப்படி இழந்தேன்? இதற்குக் காரணம் என்ன? பூவழகியிடம் எனக்கு அன்பு குறைவா? இல்லை, இல்லை. அவள் என் உயிர். அவள் வெறுத்ததால் பித்தன் போல் அலைந்தேனே. அப்படி அலைந்த ஒரு நாளில்தானே அலைகள் இந்த அழகியை என் கால்களில் இடற விட்டன. இல்லை, இல்லை. பூவழகியை நான் மறக்க முடியாது. ஆனால் ராணியையும் மறக்க முடியாது போலிருக்கிறதே. இதற்குக் காரணம் முதல் நாள் இரவில் ராணி சொன்னாளே அந்த விதியாயிருக்க முடியுமா? விதியாவது! சே, சே! அதை நான் எப்படி நம்புவேன்? அப்படி விதி இருந்தாலும் மதியால் அதை உடைக்கலாமே’ என்று எண்ணிக் கொண்டே ராணியின் அழகைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருந்த படைத் தலைவனைக் கூட, கூடத்துள் நேர்ந்த நிகழ்ச்சிகள் கனவுலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு இழுத்து வந்தன.

சாளரத்திலிருந்து தோப்பு சற்றுத் தள்ளியே இருந்தாலும், இருங்கோவேளும், ராணியும் இரைந்தே பேசியதால் வெளியே இருந்தவர்களுக்கு அவர்கள் சம்பாஷணை தெளிவாகவே கேட்டதென்றாலும், ராணி தன் நிபந்தனையை மட்டும் மெள்ளச் சொன்னதால் அந்தப் பகுதி காதில் விழாததால் ‘ராணி இருங்கோவேளிடம் என்ன நிபந்தனையைக் கூறினாள்? அவன் ஏன் அவ்வளவு தூரம் வெகுண்டெழுந்தான்?’ என்று யோசித்த இரும்பிடர்த் தலையாருக்குக் காரணம் அறவே புரியாமற் போகவே அதைப் பற்றிச் சமணத் துறவியைக் கேட்க வேண்டுமென்று நினைத் தாலும், அடுத்த நிகழ்ச்சிகள் அதற்கு இடம் கொடாததால் அவர் எந்த யோசனையையும் செய்யச் சக்தியற்றவராய்ப் பிரமித்து நின்றிருந்தார். கூடத்தில் அடுத்து விளைந்த நிகழ்ச்சிகள் இரும்பிடர்த்தலையாரை மட்டுமல்ல, இளஞ் செழியனையும், சமணத் துறவியையும் கூட அசரவைத்து விட்டதால் அவர்கள் மூச்சுக்கூட விடாமல் கூடத்தில் கண்களை மட்டுமன்றித் தங்கள் கருத்துக்களையும் நாட்டி நின்றிருந்தனர்.
இருங்கோவேளை நோக்கிக் கோப நகை நகைத்து விட்டுப் புத்தர் சிலையை அணுகி, அதன் மடியில் ராணி கை வைத்ததுமே இருங்கோவேள் ஒழிந்தான் என்று நினைத்த இரும்பிடர்த்தலையார் அதனால் ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளை எண்ணிப் பெரிதும் மனம் கலங்கினார். ‘இருங்கோவேள் வஞ்சி மாநகரில் இருப்பது சேரர் பெருமானுக்குத் தெரிந்தே இருக்க வேண்டும். ஆகவே, இருங் கோவேள் ராணியால் கொல்லப்பட்டால், பெருஞ்சேரலாதன் அந்தக் கொலை செய்த ராணியை மட்டுமன்றிக் கொலையைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மையும் சும்மா விடமாட்டான். தவிர இருங்கோவேளின் கொலை தமிழர்களிடையே அவனைப் பற்றி அனுதாபத்தையே கிளப்பும். இந்த அனுதாபத்தை மற்ற வேளிர்களும், பெருஞ்சேரலாதனும், பாண்டியனும் உபயோகப்படுத்திக் கொள்ளாமல் விடமாட்டார்கள். தற்சமயம் இந்தச் சமண மடம் கரிகாலனுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோழ அரசை சேர நாட்டிலிருந்து கைப்பற்ற முடியாது. அதற்கான சண்டை சோழ நாட்டில் தான் நடைபெற வேண்டும். இருங்கோவேள் இறந்தால் எல்லாம் நாசமாகிவிடுமே’ என்று, சஞ்சலப்பட்ட இரும்பிடர்த் தலையாருக்கு ஒரு பக்கம் ஆறுதலையும், மற்றொரு பக்கம் கவலையும் அளிக்கவே முற்பட்டது போல், “வேண்டாம் ராணி! பொறு” என்று எழுந்த பலமான குரல் அவரைப் பெரிதும் திகைக்க வைத்ததால், தாம் கேட்ட குரல் அதுதானா என்று அறியக் காதை மட்டுமன்றிக் கண்களையும் தீட்டிக் கொண்டார் இரும்பிடர்த் தலையார்.

அந்தக் குரலைக் கேட்டதால் சற்றே தயங்கிய யவன ராணியின் கண்களில் கூட ஆச்சரிய ரேகை பலமாகப் படரவே, அவள் தன் விழிகளை ஒரு விநாடி இருங்கோவேளிடமிருந்து குரல் வந்த திசையில் திருப்பினாள். கழுத்தில் வழக்கமான மகரகண்டி ஆட அந்தப் பழைய விஷமப் புன்முறுவலுடனும் சதா எள்ளி நகையோடும் கண்களுடனும் பிரும்மானந்தர் புத்த பகவான் சிலையின் பின் புறத்திலிருந்து மெள்ள வெளிவந்தார்.

அவர் வருகை ராணிக்கு மட்டுமல்லாமல் இருங்கோ வேளுக்கும் இணையற்ற ஆச்சரியத்தை விளைவிக்கவே அவன் கண்களில் கோபச் சாயை மறைந்து, வியப்பின் வேகம் விளையாட ஆரம்பித்ததன்றி, வஞ்சகமும் மெள்ளத் மெள்ளத் துளிர்விட்டது. பூம்பூகாரில் இருப்பதாகத் தான் நினைத்துக் கொண்டிருந்த பிரும்மானந்தர் திடீரென அங்கு தோன்றியது தனக்கு நன்மையே பயக்குமென்றும் தன்னுடைய பரம விரோதிகளில் ஒருவரான பிரும்மானந்தர் சிங்கத்தின் வாயில் தலையை நுழைப்பதுபோல் தாமாகவே வந்து தன்னிடம் சிக்கிக்கொள்வது, தான் முன்பிறப்பில் செய்த புண்ணியத்தின் பயனென்றும் நினைத்த இருங்கோவேள், ‘எதிரிகள் அனைவரும் வஞ்சியிலேயே கூடிவிட்டார்கள். இவர்களைக் கூண்டுடன் கைலாசமனுப்பி விடுகிறேன்’ என்று உள்ளூர எண்ணமிட்டுத் ‘திருமாவளவனிலிருந்து பிரும்மானந்தர், இரும்பிடர்த்தலையார் முதலியோர்வரை சகலரும் தன்னிடம் அகப்படுக்கொண்டதை நினைத்து ஓரளவு உவகையும் அடைந்தான். இத்தனை நேரம் தன்னைக் கொல்வதாகச் சீறிய அந்த யவனப் பெண்ணின் கொட்டத்தை அடக்கி அவளைத் தான் பெண்டாளும் நாளும் அதிக தூரத்திலில்லை என்பதையும் நினைத்து, நன்மைகள் அனைத்தும் நம்மை வலுவில் வந்து அடைவது ஆண்டவன் அருள்தான்’ என்று தன் வஞ்சக மனதில் ஆண்டவனுக்கு ஒரு வினாடி இடம் கொடுத்தான் இருங்கோவேள்.

அவன் உள்ளத்தில் ஓடிய எண்ணத்தையும், ராணியின் பிரமிப்பையும் நொடிப்பொழுதில் ஊகித்துக் கொண்ட பிரும்மானந்தர், இருங்கோவேளை ராணி கொன்றுவிடப் போகிறாளே என்பதால் உணர்ச்சி வசப்பட்டு ஆரம்பத்தில் இட்ட கூச்சலை உதறிவிட்டு சர்வ சாதாரணமாக அவ்விருவரையும் அணுகி, “ராணி! இருங்கோவேள் சோழநாட்டு மன்னன். அவனுக்குத் தீங்கிழைக்க நீ முயலுவது நியாயமல்ல. தவிர நன்றி கெட்ட செய்கையும் ஆகும்” என்றார்.

ராணியின் இதழ்கள் வெறுப்புக் கலந்த புன்முறுவ லொன்றைக் காட்டியது. “நன்றி கெட்ட செய்கையா அடிகளே! என்னை மிரட்டும் துணிவுகொண்ட இந்த வஞ்சகனை அழிப்பது நன்றி கெட்ட செய்கையா?” என்று சீறவும் செய்தாள் ராணி.

“நன்றிகெட்ட செய்கைதான் ராணி. தமிழர்களின் தனிப்பெரும் துறைமுகமான பூம்புகாரையே உனக்குச் சாசனம் செய்து கொடுத்த சோழ மன்னனைக் கொல்ல முயன்றதை வேறு எப்படிக் கூறுவது ராணி?” என்று கேட்டார் பிரும்மானந்தர்.

பிரும்மானந்தர் வரவு மட்டுமன்றி, வந்தபின் அவர் பேசிய பேச்சும் நடந்துகொண்ட மாதிரியும் இருங்கோவேளுக்குப் பெரும் வியப்பை அளிக்கவே ஆச்சரியம் ததும்பும் கண்களை அவர்மீது நாட்டினான். அவன் பார்வையில் தொக்கி நின்ற வியப்பைக் கண்ட பிரும்மானந்தர், “மன்னவா! இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை . நீ எங்கள் நாட்டு மன்னன். உன்னைக் காப்பது எங்கள் கடமை” என்றார்.

“இத்தனை கருணை என்மீது எத்தனை நாளாக ஏற்பட்டது தங்களுக்கு?” என்று வினவினான், இருங்கோவேள் இகழ்ச்சி தொனித்த குரலில்.

“நீ அரச பீடத்தில் அமர்ந்த நாளாக….” சாவதான மாகவே பதில் சொன்னார் பிரும்மானந்தர்.

“அந்த அன்பின் விளைவாகத்தான் இரும்பிடர்த் தலை யாருக்கு ஓலையனுப்பினீர் போலிருக்கிறது?”

“இல்லை, அன்பினால் அனுப்பவில்லை. அவசியத்தை முன்னிட்டு அனுப்பினேன்.”

“என்ன அவசியம் அது?”

“இளஞ்சேட்சென்னியின் மகனை அரியணையில் அமர்த்தத் திட்டமிட்டேன்.”

“அந்தத் திட்டம்…”

“இந்த இரவில் குலைந்துவிட்டது. திருமாவளவன் தீக்கிரையாகிவிட்டதைச் சற்று முன்பே உணர்ந்தேன்.”

“அதற்குள் விஷயம் எட்டிவிட்டதா உமக்கு?”

“எட்டாவிட்டால் இப்பொழுது நீ உயிருடன் இருக்க மாட்டாய் இருங்கோவேள். ராணி உன்னைக் கொல்வதை நான் தடுத்திருக்க மாட்டேன். புத்தர் சிலையின் பின்புறத்தில் ஒளிந்திருந்த நான் உன் பிணத்தை அடக்கம் செய்யவே வெளியே வந்திருப்பேன்.”

பிரும்மானந்தர் கோபத்துடனும், வெறுப்புடனும் சொன்ன வார்த்தைகள் இருங்கோவேளின் வஞ்சக நெஞ்சத்தி லும் ஓரளவு நம்பிக்கையை ஊட்டவே, அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சற்று நேரம் அந்தக் கூடத்தில் உலாவினான். பிறகு சட்டென்று நின்று, “புத்தர் சிலையின் பின்புறத்திலிருந்த உமக்கு முன்புறத்தில் நின்றிருந்த எங்கள் செய்கைகள் எப்படிப் புலனாயின?” என்று வினவினான்.

பிரும்மானந்தர் வெறுப்புக் கலந்த சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, “இருங்கோவேள்! துராக்ருதத்தால் சோழ நாட்டுச் சிம்மாதனத்தை அடைந்திருக்கும் உனக்கு எதிலும் சந்தேகம் ஏற்படுவது சகஜம்தான். உன்மீது எனக்கு அன்பில்லை. ஆனால் உன்னை விட்டால் இப்பொழுது சோழ மண்டலத்தை அரசாள அரச வமிசத்து தாயாதிகள் யாருமில்லை. ஆகையால் உன்னைக் காப்பாற்றினேன். புத்தர் சிலையின் பின்புறமாக நான் ஒளிந்திருந்தபோது நீயும் ராணியும் முன்புறத்தில் என் கண்ணெதிரில்தான் ஆரம்பத்தில் இருந்தீர்கள். பிறகுதான் ராணி புத்தர் சிலையிடம் வந்தாள். அவள் முதுகைச் சிலையை நோக்கித் திருப்பிய பிறகு அவள் என் கண்களில் படவில்லையென்றாலும் அவள் செய்ய முயன்றது என்னவென்பதை ஊகித்துக் கொண்டேன்” என்று பிரும்மானந்தர் விளக்கினார்.
இருங்கோவேளின் கண்கள் வஞ்சகத்தால் புருவத்தை நோக்கி ஒருமுறை எழுந்தன. “அவள் என்ன செய்ய முயன்றாள்? என்ன ஊகித்தீர்?” என்று கேட்டான் இருங்கோவேள்.

“கொலை செய்ய முயன்றாள். அதைத்தான் ஊகித்தேன்” என்றார் பிரும்மானந்தர் திடமான குரலில்.

இந்தப் பதிலுக்குப்பின் இடியென எழுந்தது இருங்கோ வேளின் குரல். “அதைக் கேட்கவில்லை அடிகளே! இவள் எப்படி என்னைக் கொலை செய்ய முயன்றாள்? இந்தப் புத்தர் சிலையில் என்ன சூட்சுமமிருக்கிறது? எந்தச் சூட்சுமத்தை உடைத்துவிடப் போகிறாள் என்று கூவினீர்?” என்று இரைந்து கேட்ட இருங்கோவேள். “அடிகளே! அதைச் சொன்னா லொழிய, உமக்கும் இந்த ராணிக்கும் இங்கேயே சமாதி கட்டிவிடுவேன். இந்த மடம் பூராவும் என் வீரர்கள் நிரம்பியிருக்கிறார்கள். நீங்கள் என்னைக் கொலை செய்த மறுவிநாடி என் வீரர்களால் கண்டதுண்டமாக வெட்டப் படுவீர்கள்” என்று சொல்லிக்கொண்டே மெள்ள மெள்ள நகர்ந்து புத்தர் சிலையை விட்டுச் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டான். அந்த நிலையில் மீண்டும் சொன்னான்: “பிரும்மானந்தரே! இந்தச் சிலையின் மர்மத்தைச் சொல்ல ஒரு விநாடி அளிக்கிறேன் உமக்கு. பதில் உடனே வரவேண்டும். இல்லையேல் என் வீரர்கள் வருவார்கள்.”

இதைக் கேட்ட யவன ராணி சற்றுப் பெரிதாகவே நகைத்துவிட்டு, பிரும்மானந்தரை நோக்கிச் சொன்னாள்: “மன்னனைக் காக்க வந்த அடிகளே! கண்டீரா இவன் நன்றியை? கொலைகாரனை அரச பீடத்தில் இருத்த முயன்றதால் ஏற்படும் விளைவு இது. பாம்புக்குப் பால் ஊற்றினால் அது பதிலுக்குத் தரக்கூடியது விஷம்தான். இப்பொழுதும் சரியென்று சொல்லுங்கள். இவன் வரவழைக்கட்டும் வீரர்களை. எல்லோரையும் சேர்த்து ஒழித்து விடுவோம்” என்று.

பிரும்மானந்தர் கையமர்த்தி அவளை அடக்கிவிட்டு இருங்கோவேளை நன்றாக ஏறெடுத்துப் பார்த்தார். அவர் முகத்தில் வெறுப்பும் கோபமும் கலந்து தாண்டவமாடியது. அவர் குரலிலும் அந்தக் கோபமும் வெறுப்பும் கலந்து நிற்கக் கூறினார்: “இருங்கோவேள்! வேளிர்களில் நீ முதல்வன். பிடிவாதத்தால் உயிரை இழக்காதே. இப்பொழுது உன் உயிர் மட்டுமல்ல, என் உயிர், இந்தக் கூடத்தில் நுழையக்கூடியஅனைவருடைய உயிரும் இந்த யவன ராணியின் தளிர்க்கரங்களில் இருக்கின்றன. இந்தப் புத்தர் சிலையின் சூட்ச மத்தைச் சொல்ல எனக்கு உரிமையில்லை. சொன்னாலும் தற்சமயம் பயனுமில்லை. தவிர, முழு சூட்சமமும் எனக்குத் தெரியாது. இருநூறு வருஷங்களாகப் புதைந்து கிடக்கும் மர்மத்தை என் கைகள் தோண்டி எடுக்க முடியாது. சோழ மன்னனான உன்னைக் காப்பது சோழ நாட்டுக் குடிகளில் ஒருவனான என் கடமை. ஆகவே சொல்கிறேன். போய்விடு. இருங்கோவேள் போய்விடு” என்றார் பிரும்மானந்தர்.

இருங்கோவேள் சற்று நேரம் யோசித்துவிட்டுச் சொன்னான்: “போக இஷ்டமில்லை பிரும்மானந்தரே! இருப்பினும் போகிறேன். என் அரசுரிமைக்கு இடையூறு செய்யாமலிருப்பதாக நீர் சத்தியம் செய்தால் போகிறேன்” என்று.

“ஆணைக்கு அவசியமில்லை இருங்கோவேள். ஆணை எத்தனை அர்த்தமற்றது என்பது நீ அறியாததல்ல. உன் நலன் தான் இப்பொழுது சேர நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்பு. நெடுஞ்சேரலாதன் உன் பக்கலில் இருப்பது எனக்குத் தெரியும். பொழுது புலர்ந்துவிட்டது. ஆகவே போய்விடு. சமண மடம் அரசியல் சூதரங்கம் என்பது பிறருக்குத் தெரியவேண்டாம். ஆன்பொருனை நதிக்கரை விபத்துக்குப் பிறகு பெருஞ்சேரலாதனும் பட்டப்பகலில் உன்னுடன் ஒத்துழைக்க முடியாது. ஆகவே போய்விடு. வேண்டுமானால் இன்றிரவு இங்கு வா. சோழ மண்டலத்தின் கதியை நிர்ணயிப்போம்” என்றார்.

இருங்கோவேள், சிறிது நேரம் யோசனை செய்துவிட்டுக் கூறினான்: “போகிறேன் அடிகளே; போய் இரவில் திரும்புகிறேன். திரும்பியதும் உறையூர் பயணமாவேன். அப்பொழுது நீரும் ராணியும் படைத்தலைவனும் என்னுடன் வரச் சித்தமாக வேண்டும்” என்று.

“படைத் தலைவரா?” என்று ஆச்சரியப்படுபவர் போல் கேட்டார் பிரும்மானந்தர்.

“ஆம், சுவாமி! இளஞ்செழியன்! அவனும் இந்தச் சமண மடத் துறவியும் என் காவலனை அடித்துப் போட்டு ஓடி விட்டார்கள். ஓடிய காரணமும் இடமும்கூட எனக்குத் தெரியும். நான் போனதும் அவர்கள் இங்கு வருவார்கள்…”

“இங்கு வருவார்கள் என்பது எப்படித் தெரியும் உனக்கு?”

“படைத் தலைவனுடைய புத்தி கூர்மையானது; ஊசி போன்றது.”
“அதனாலென்ன?”

“அந்த ஊசியைக் கவரும் காந்தம் இதோ இருக்கிறது” என்று கூறி, ராணியைச் சுட்டிக்காட்டிச் சிரித்துவிட்டுக் கூடத்தைவிட்டு வெளியேறினான் இருங்கோவேள். கூடத்தி லிருந்து அவன் வெளியே சென்றதையும் சில விநாடிகளில் மடத்து வாயிலுக்கு வந்த வீரர்கள் பதின்மருடன் அவன் சென்றுவிட்டதையும் தோப்பிலிருந்து கவனித்த இரும்பிடர்த் தலையார், இளஞ்செழியன், சமண அடிகள் ஆகிய மூவரும் வெளியே வந்து மடத்துக்குள் நுழைந்தனர்.

அவர்கள் கூடத்தில் நுழைந்தபோது பிரும்மானந்தர் கவலை தோய்ந்த முகத்துடன் ராணியை உற்று நோக்கிக் கொண்டு நின்றார். அவர் கவலையை ராணி மட்டுமன்றி மற்றவர்களும் கவனித்தனர். கவலைக்குக் காரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இரும்பிடர்த்தலையார் கேட்டார்: “இருங்கோவேள் திரும்பி வருவதைப்பற்றிக் கவலையோ?” என்று.

“இல்லை இரும்பிடர்த்தலையாரே! அதைப்பற்றிக் கவலையில்லை” என்றார் பிரும்மானந்தர்.

“வேறு எதைப்பற்றிக் கவலை?” என்று கேட்டார் சமண அடிகள்.

இதற்கு ராணியே பதில் சொன்னாள்: “பிரும்மானந்தர் கவலைப்படுவது என்னைப்பற்றி, என் இனத்தாரைப்பற்றி.”

“யவனர்களைப் பற்றியா?” என்று வினவினான் இளஞ்செழியன்.

“ஆம்.”

“கவலைப்பட என்ன இருக்கிறது?”

பிரும்மானந்தர் இளஞ்செழியனை உற்று நோக்கினார். “படைத்தலைவரே! இதுவரை நான் புகார்தான் யவனர் கைகளுக்கு மாறும் என்று கவலை கொண்டிருந்தேன். இனித் தமிழ் நாட்டினர் கதியைப் பற்றியே கவலையாயிருக்கிறது. அந்தக் கவலையை நீக்கக் கூடியவள்…” என்று இழுத்த பிரும் மானந்தரை இடையில் வெட்டிய இரும்பிடர்த்தலையார், “ராணிதான் என்கிறீரா” என்று வினவினார்.

பிரும்மானந்தர் இரும்பிடர்த் தலையாரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கவலை தோய்ந்த கண்களை ராணிமீது நாட்டி, கரங்களைப் பிட்சை கேட்கும் முறையில் நீட்டிக் கேட்டார், “ராணி! இந்தச் சிலையைப்பற்றி ஓரளவு எனக்குத் தெரியும். முழு விவரமும் கொடுக்க உனக்குத்தான் தெரியும். அந்த ரகசியத்தைச் சொல்லுவாயா? இந்த ஒரு வரம் கொடுக்க உன்னால் முடியுமா?” என்று.

திடமான பிரும்மானந்தரின் குரல்கூட இந்த வரத்தை யாசிக்கையில் நெகிழ்ந்து கிடந்ததை இளஞ்செழியன் கவனித்தான். அப்படியென்ன பெரிய மர்மம் இந்தச் சிலையில் புதைந்து கிடக்க முடியும் என்று ஆச்சரியப்பட்ட அவனை, ராணி பிரும்மானந்தருக்குச் சொன்ன பதில் இன்னும் அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“ரகசியத்தைச் சொல்கிறேன். பிரும்மானந்தரே, ஆனால் ஒரு நிபந்தனை” என்றாள் ராணி.

“என்ன நிபந்தனை ராணி?” என்று கேட்டார் பிரும்மானந்தர்.

“படைத்தலைவர் என்னை மணக்கவேண்டும்- அதுவும் இன்றே மணக்கவேண்டும். இவரை முதலில் பார்த்த நாளே இவர்தான் என் மணாளர் என்பதை முடிவு கட்டிவிட்டேன்” என்று மிக மிருதுவான குரலில் கூறிய ராணி மற்றவர்கள் முகத்தில் படர்ந்த ஆச்சரியத்தையும் திகிலையும் கண்டு வெகுண்டாள். அந்தக் கோபத்தில் தெளிவாக மீண்டும் சொன்னாள்: “இந்த வரம் நீங்கள் எனக்குக் கொடுங்கள் அடிகளே. நீங்கள் கேட்ட வரத்தை, சோழ நாட்டின் பொற் காலத்தை இந்த இடத்திலேயே சிருஷ்டிக்கிறேன். இல்லை யேல்…” அத்துடன் பேச்சை நிறுத்தினாள் ராணி. வாசகத்தை முடிக்காவிட்டாலும் அவள் இதயத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரும்மானந்தர், ‘இதென்ன கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே’ என்று திகைத்து, ‘இவளுக்குத் திருமணம் தேவை. நமக்கு நாட்டின் நலன் தேவை. ஆனால் படைத் தலைவனுக்கு…’ என்று யோசித்துப் படைத்தலைவனை நோக்கிப் பரிதாபமும் கெஞ்சலும் கலந்து நின்ற பார்வையொன்றை வீசினார்.

Previous articleYavana Rani Part 1 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here