Home Sandilyan Yavana Rani Part 1 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

107
0
Yavana Rani Part 1 Ch30 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch30 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 30 பாதாளக் குகை

Yavana Rani Part 1 Ch30 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

ராணியின் விசித்திர நிபந்தனையையும் அதை யொட்டிப் பிரும்மானந்தர் தன்மீது வீசிய பரிதாபங் கலந்த பார்வையையும் கவனித்த இளஞ்செழியன் முதலில் ஆச்சரியமும் ஓரளவு கோபத்தையும் அடைந்தானென்றாலும் சற்று யோசித்த பின்பு ராணியின் போக்கில் ஆரம்பத்திலிருந்து அன்றுவரை ஒரு தொடர்ச்சியும், உறுதியும் இருப்பதைக் கண்டான். அவளைப் பாதத்திலிருந்து கழுத்துவரை தொட்டுத் தடவிய அலைகளிலிருந்து தன் கைகளில் தூக்கி, பூம்புகாரிலுள்ள தன் மாளிகைக்குக் கொண்டுவந்த அன்றிரவே அவள் விதியைப் பற்றிப் பிரஸ்தாபித்ததையும், பிறகு ‘விதி நம்மிருவரையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது படைத் தலைவரே’ என்று அழுத்திச் சொல்லி இருவரும் எந்தக் காரணத்தாலும் பிரிய முடியாது என்பதை வலியுறுத்தி யிருப்பதையும் நினைத்துப் பார்த்த இளஞ்செழியன், அவள் தன்னைத் தனித்திருக்க விடமாட்டாள் என்று தீர்மானமாகத் தெரிந்து கொண்டான். யவன குருமார்களின் சோதிடத்தில் நம்பிக்கை வைத்த ராணி, தன்னைக் கொண்டே தமிழ் நாட்டில் ஒரு யவன முடியரசை ஸ்தாபிக்க முயலுகிறாள் என்பதிலும் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லாதிருந்தது. ஒரு புறம் தமிழகத்தில் தனியரசை ஸ்தாபிக்க முயலும் யவனர்கள், இன்னொரு புறம் சோழ அரசை வஞ்சகத்தால் கவர்ந்துள்ள வேளிர்கள், மற்றொரு புறம் அந்த வஞ்சகத் துக்குத் துணை புரிந்து சோழர்களின் தனியரசைத் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட குறுநிலமாக்க முனைந்துள்ள பாண்டிய சேர அரசுகள்; இந்த மூன்று சக்திகளுக்கிடையில் திண்டாடும் சோழ மண்டலத்தின் கதிக்கும், இந்தப் புத்தர் சிலைக்கும் என்ன சம்பந்தமிருக்கக்கூடும் என்பது மட்டும் இளஞ்செழியனுக்கு விளங்காமற் போகவே, “எனது திருமணம் ஒருபுறமிருக்கட்டும், பிரும்மானந்தரே ! இந்தப் புத்தர் சிலை மர்மத்தை நாம் அறிய வேண்டிய அவசியமென்ன?” என்று வினவினான்.

பிரும்மானந்தர் முகத்தில் கவலை பெரிதாகப் படர்ந்தது. அவர் சொன்னார்: “படைத் தலைவரே! இந்தத் தமிழகம் எப்படி தர்மத்துக்கும், வாணிபத்துக்கும், இலக்கியத் துக்கும், கலைக்கும் பெயர் போனதோ அம்மாதிரியே யவன நாடு பொறி இயலுக்குப் பேர்போனது. அவர்கள் யந்திரங்கள், யந்திரங்களால் இயக்கப்படும் சுரங்க வழிகள், அந்த வழிகளிலுள்ள பாதுகாப்புகள், படுகுழிகள் இவற்றையெல்லாம் அறிந்து அளவிடத் தமிழகத்தில் எந்தச் சிற்பியுமில்லை . இங்கு சிற்பமும் பொறி இயலும், கோவில் சுரங்கங்களை அமைப்பது, கலைத் தெய்வங்களை அமைப்பது, மன்னர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது இத்தகைய ஆக்க வேலைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் யவனர்கள் பொறிஇயல் பிற மக்களை வெற்றி கொள்ளும் ஆதிக்க வெறிக்கே இயக்குகிறது. இந்த உண்மையை அறியாத தமிழ் மன்னர்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே யவனர்களைக் கொண்டு பல இடங்களில் சுரங்க வழிகளையும் ஆயுத சாலைகளையும் சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த யவனர்கள் மன்னர்களின் பாதுகாப்புக்கு மட்டும் ஆயுத சாலைகளையும் சுரங்கங்களையும் அமைக்கவில்லை. பிற்காலத்தில் தங்கள் மக்களின் ஆக்கிரமிப்பு இந்நாட்டில் ஏற்படுமானால் அதற்கும் உதவட்டும் என்ற எண்ணத்துடன் வேறு பல சூட்சுமங்களையும் இணைத்து இந்த ஆயுதசாலைகளைச் சிருஷ்டித்தார்கள். அத்தகைய ஆயுத சாலைகளில் இந்தப் புத்தர் சிலையும் ஒன்று. பல வருடங்களுக்கு முன்பே இதன் மர்மத்தை நானறிந்தேன். காலஞ் சென்ற மன்னர் இளஞ்சேட் சென்னிக்கும் இதோ இருக்கும் இரும்பிடர்த்தலையாருக்கும் இதைப்பற்றிய தகவலைச் சொன்னேன். ஆனால் இதை இயக்கும் முழு விவரம் எனக்குத் தெரியாது. இது ஒரு பயங்கர இயந்திரம் என்பது மட்டும் தெரியும்.”

“இந்தப் புத்தர் சிலையைச் சமண மடத்தில் அமைக்க எப்படி மக்கள் ஒப்புக் கொண்டார்கள்? யவனர்கள்தான் ஆகட்டும் ஜைனமதக் கடவுளை ஏன் இங்கு அமைக்க வில்லை?” என்று வினவினான் இளஞ்செழியன்.

“தமிழர்களை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா படைத்தலைவரே! தமிழ்நாட்டில் உதித்த உமக்குமா நான் இதை விளக்கவேண்டும்? இங்கு ஒரு சமயத்துக்கும் மற்ற சமயத்துக்கும். பேதம் ஏது! சிவபிரான் கோட்டங்களில் விஷ்ணுவின் சிலைகளும், விஷ்ணுவின் கோயில்களில் சிவமூர்த்திகளும் பிரதிஷ்டையாவதும், பிற மதத்தார் சகலரும் அதைப் பூசை செய்வதும் தமிழகத்தில் சர்வ சகஜமல்லவா? பூம்புகாரில் மணிவண்ணன் கோட்டமும் குமரன் கோட்டமும் ஒரே பகுதியில் இல்லையா? தவிர பௌத்தத்துக்கும் ஜைனத்துக்குமுள்ள வித்தியாசம் மிகக் குறைவு. சமணர்களுக்குப் புத்தர் அனுக்கிரகம் உண்டாவது கூட இலக்கிய மரபில் காணப்படுகிறது. ஆகவே, இங்கு புத்தர் சிலை அமைக்க அதிக ஆட்சேபணை ஏற்பட்டிருக்காது. சமண மடத்தில் யவனர்கள் புத்தர் சிலையை வைத்ததற்குக் காரணங்கள் உண்டு” என்றார் பிரும்மானந்தர்.

“என்ன காரணம்?”
“புதிதாக வரும் யவனர்கள் மாறுபட்ட மதச் சிலைகளுள்ள கோயில்களைக் கண்டறிந்தால் யவனர் பொறி இயல் சாலைகள் எங்கிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவசியம் ஏற்பட்டால் தமிழர்களை எதிர்க்கவோ தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ அந்தச் சாலைகளை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய ஒரு ஆயுத சாலை இந்தப் புத்த பகவான் சிலை. இந்த மாதிரி தமிழ்நாட்டில் எத்தனை சிலைகள் இருக்கின்றனவோ தெரியாது…”

பிரும்மானந்தரின் இந்தக் கடைசி வார்த்தையில் இடையே புகுந்த யவன ராணி, “மொத்தம் எட்டுச் சிலைகள் இருக்கின்றன” என்றாள்.

பிரும்மானந்தர் அதிகத் திகைப்பினால் சற்று நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டார். “என்ன, எட்டுச் சிலைகளா! எந்தெந்த இடங்களில்?” என்று குரலில் நடுக்கம் காணக் கேட்கவும் செய்தார்.

“அந்த ரகசியத்தை அத்தனை சுலபமாகச் சொல்லி விட முடியுமா அடிகளே! என்னை இந்த நாட்டில் ஒரு ராணி யாக்க இஷ்டப்பட்ட யவன குருமார்கள் இந்த நாட்டிலுள்ள விவரங்களைச் சொல்லாமலா அனுப்பியிருப்பார்கள்?” என்று ராணி கேட்டுச் சற்றுப் புன்முறுவலும் செய்தாள்.

இரும்பினால் செய்யப்பட்டது போலவே விளங்கிய தலையுடனிருந்த இரும்பிடர்த்தலையாரின் சிரம்கூட இதைக் கேட்டதும் சுற்ற ஆரம்பித்தது. ‘எத்தகைய ஆபத்துக்களை இந்தத் தமிழகம் அடக்கிக் கொண்டிருக்கிறது!’ என்று எண்ணிச் சமணத் துறவியை நோக்கினார். சமணத் துறவியின் மூளை அதுவரை கேட்ட சம்பாஷணையால் பெரிதும் குழம்பிப் போயிருந்ததால் அவர் முகத்தில் உணர்ச்சி எதையும் காட்டச் சக்தியற்றவராய், கல்லாய்ச் சமைந்து நின்றார்.

அங்கிருந்த ஒவ்வொருவர் மனப்போக்கையும் ராணியின் கண்கள் கவனிக்கத் தவறாததால் அவள் ஓரளவு சினங் கொண்டு பிரும்மானந்தரை நோக்கித் தமது இறுதி அஸ்தி ரத்தை வீசத் தொடங்கி, “பிரும்மானந்தரே! இருங்கோவேள் இந்தச் சிலையின் மர்மத்தை அறிய விரும்பினான். புகாரை மட்டுமன்றி வஞ்சி வரையில் இருபது ஊர்களையாவது தொடர்ச்சியாகக் கொடுத்து என்னைச் சோழ மன்னனுக்குச் சமமான ராணியாக்கினால் இந்தச் சிலையின் மர்மத்தைச் சொல்ல ஒப்புக் கொண்டேன். அவன் இணங்கவில்லை. எதிர்த்து என் கைகளைத் துணிந்து பிடித்தான். நீர் குறுக்கிடா திருந்தால் இத்தனை நேரம் இருங்கோவேள் இந்த இடத்தில் ஐந்தாறு துண்டங்களாக விழுந்திருப்பான். அடுத்தபடி நீர் இந்தச் சிலையின் மர்மத்தைக் கேட்டீர். நீர் சிற்பியென்பது எனக்குத் தெரியும். இதை இயக்கும் முறையையும் நீர் அறிவீர் என்பதையும் உமது நண்பர்களுக்கும் இந்த மர்மம் ஓரளவு தெரியும் என்பதையும் நீங்கள் பார்த்த பார்வையிலிருந்தே தெரிந்துகொண்டேன். ஆனால் இந்த ஆயுத சாலையையும் அதற்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பெருமர்மம் பூராவும் உமக்குத் தெரியாது. அதைப்பற்றிக் கேட்டீர். அதற்கும் நிபந்தனை கூறினேன். உம்மிடமிருந்து பதிலேதும் வரவில்லை. என்ன சொல்கிறீர், அடிகளே! படைத்தலைவர் என்னை மணக்கப் போகிறாரா இல்லையா?” என்று கேட்டாள்.

இந்தக் கேள்வியால் பிரும்மானந்தரும் இரும்பிடர்த் தலையாரும் பெரிதும் சங்கடத்திற்குள்ளானார்கள். “ராணி! உனக்குத் தெரியாத விஷயமில்லை. திருமணத்தில் கட்டாயம் உதவுமா? அதுவும் படைத்தலைவர்…” என்று இழுத்தார்.

யவன ராணி கோபத்தைவிட்டு மெள்ள நகைத்தாள். “படைத்தலைவர் இதயம் உமது ஆசிரமத்தில் நான் சந்தித்த அந்தத் தமிழ்ப் பெண்ணிடம் லயித்து விட்டதென்று கூறுகிறீர்கள். அது எனக்குத் தெரியும். ஆனால் நானிருக்கும் வரையில் படைத்தலைவர் அவளை மணக்க முடியாது” என்று திட்டமாகப் பதிலும் சொன்னாள்.

“ஏன்?” என்று இடைபுகுந்து கேட்டார் இரும்பிடர்த் தலையார்.

“விதி எங்கள் இருவரையும் ஒன்றாக்கியிருக்கிறது. பல வருஷங்களுக்கு முன்பே எங்கள் இருவர் வாழ்க்கையும் ஒன்றாகிவிட்டது…” என்று சொல்ல ஆரம்பித்த யவன ராணி யின் கண்கள் சொப்பன உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தன. அப்படிப் பிரமைதட்டிய கண்களுடன் முற்காலத்தையும் பிற்காலத்தையும் பற்றிப் பேச முற்பட்ட ராணி கூறினாள்: “ஆம்! எங்கள் இருவரையும் விதி என்றோ பிணைத்துவிட்டது. யவன குருமார்கள் சின்னஞ்சிறு வயதிலேயே ஆகாயத்தைப் பார்த்து நக்ஷத்திரங்களைக் கணக்கிட்டு, ‘இவளுக்கு உதவ ஒரு தமிழன் வருவான். அவன் இவளுடன் பிணைந்தே நிற்பான். அவனால் இவள் தமிழகத்தில் ஒரு ராணியாவாள்’ என்று சொன்னார்களே, அது பொய்யாகுமா? ஒருக்காலும் அவர்கள் வாக்குப் பொய்யாகாது. அவர்கள் சொன்னபடி தமிழகத்தில் நான் புரண்ட அன்றே இவர் காலில் தட்டுப்படவில்லையா? பிறகு என்றாவது இவரைப் பிரிந்திருக்கிறேனா? வஞ்சிக்கு வரும்போதுகூட இந்த வஞ்சியும் கூடத்தானே வந்தேன். பிரும்மானந்தரே, விதியை வெல்ல முடியாது. ஆகவே படைத் தலைவரை ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள். இந்த விநாடியில் இந்தச் சிலையின் மர்மத்தை உடைக்கிறேன். இந்த ஒரு சிலையின் மர்மம் உடைந்தால் தமிழ்நாட்டிலுள்ள எட்டுச் சிலைகளின் மர்மமும் உடைந்த மாதிரிதான். பிறகு உங்கள் இளவரசர் திருமாவளவன், சோழர் நாடு என்ன தமிழ் மண்டலத்தையே ஏகசக்ராதிபதியாக ஆளலாம். அவரை இன்று எதிர்க்கும் பெருஞ்சேரலாதனும் பாண்டியனும் சோழப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர்களாவார்கள். அந்த முதல் வெற்றியை இப்பொழுதே ஆரம்பிக்கிறேன். இன்றே இருங்கோவேள் மறைவான். சில நாழிகைகளில் சேரமன்னனும் சிறைப்படுவான். என்ன சொல்கிறீர்?”

ராணியின் வார்த்தையைக் கேட்ட பிரும்மானந்தர் அதிக வியப்பைக் காட்டாவிட்டாலும் இரும்பிடர்த் தலையாரின் முகத்தில் மட்டும் சற்று ஆச்சரியக்குறியும் அவ நம்பிக்கையும் தோன்றவே, “திருமாவளவன் உயிருடன் இருப்பது உனக்குத் தெரியுமா! வெற்றியை இன்றே ஆரம்பிக்கிறாயா?” என்று கேட்டார்.

“திருமாவளவன் உயிருடனிருப்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் தற்சமயம் என் அறையில்தான் இருக் கிறார். அவர் இருங்கோவேள் கண்ணில் படவேண்டுமென்ப தற்காகவும், இருங்கோவேள் ஏதாவது தீங்கு செய்ய முற்பட்டால் புத்தர் சிலையைக்கொண்டு அவனைத் தீர்த்துவிடவுமே அவனை இந்தக் கூடத்துக்கு அழைத்து வந்தேன்” என்று பதில் கூறினாள் ராணி.

“திருமாவளவன்…” என்று ஏதோ சந்தேகம் கேட்கத் துவங்கினார் சமணத் துறவி.

“மடத்தைச் சுற்றிக் காவலிருப்பதைப் பார்த்து நீங்கள் ஏறி இறங்கும் சாளரம் வழியாக என் அறைக்கு வந்தார். அதே சமயத்தில் அறைக்கதவை இருங்கோவேள் இடித்தான். நான் அவனைக் கூடத்தில் சந்திப்பதாகக் கூறியனுப்பி உங்கள் மன்னரைப் பத்திரப்படுத்திவிட்டு இங்கு வந்தேன்” என்றாள் ராணி.

“புகாரையும் இருபது கிராமங்களையும் கொடுத்தால் புத்தர் சிலை மர்மத்தை அவனுக்குக் கூறுவதாகச் சொன்னாயே ராணி?” என்று சமணத் துறவி மீண்டும் கேட்டார்.

“ஆம், சொன்னேன். ஆனால் நாட்டைக் கைப்பற்ற ஆங்காங்கு தீ வைத்து மன்னர் குடும்பத்தை அழிக்க முயலும் இருங்கோவேள் அதற்கு உடன்பட மாட்டானென்பது எனக்குத் தெரியும்” என்று பதிலிறுத்தாள் ராணி.

“இந்த நிபந்தனைக்கு நான் மட்டும் இணங்குவே னென்று உனக்கெப்படித் தெரியும்?” என்று கோபத்தால் உதடுகள் துடிக்கக் கேட்டான் இளஞ்செழியன்.

“பொது நலத்துக்காக, தமிழ்நாட்டின் பிற்காலத்துக்காக, நீங்கள் எந்தத் தியாகத்தையும் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று ராணி தனது முழு நம்பிக்கையைத் தெரிவித்தாள்.
“அப்படி வலிய என்னை மணக்கும் உன்னிடத்தில் அன்பிருக்கும் என்று நினைக்கிறாயா?” என்று இளஞ்செழியன் வினவினான்.

“மணந்தபின் அன்பை உருவாக்க எனக்கு வழி தெரியும். தவிர யவன குருமார்கள் நம்பிக்கையும்…” என்று மேலும் ஏதோ சொல்லப்போன ராணியை, “நிறுத்து ராணி, நிறுத்து. எதற்கெடுத்தாலும் அந்த யவன குருமார்களைக் கொண்டு வராதே. அந்தச் சனியன்கள் உன் புத்தியில் உருவாக்கி யிருக்கும் நம்பிக்கைகளால் நம் இருவர் வாழ்க்கையும் பாழாகும். நான் சொல்வதைக் கேள். இப்பொழுது திருமணத்துக்கு நான் உடன்பட மாட்டேன். பிற்காலத்திலும் உடன்படமாட்டேன். என் மனம் வேறு இடத்தில் லயித்திருக்கிறது” என்றான்.

“மனம் ஒரு குரங்கு. நிலையில்லாதது. எந்தப் பக்கமும் சாயக்கூடியது. இதை உங்கள் சாத்திரமே சொல்லுமே!”

“என் மனம் அப்படிப்பட்டதல்ல. நிலையானது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தாவாதது.”

பகிரங்கமாக நடந்த இந்தத் தர்க்கத்தால் பிரும்மானந்தர் மட்டுமன்றி மற்ற இருவருங்கூட சற்று வெட்கப்பட்டனர். பிரும்மானந்தர் அத்தனை வெட்கத்திலும் காரியத்திலே கண்ணுள்ளவராய், “படைத்தலைவரே! ராணியும் அழகாகத்தான் இருக்கிறாள். நாட்டுக்கு அவள் உதவி தேவையாயிருக்கிறது…” என்று ஆரம்பித்தவர் இளஞ்செழியனின் ஒரு பார்வையால் வாயைச் சட்டென்று மூடிக் கொண்டார்.

வீரம் ததும்பும் கண்களைப் பிரும்மானந்தர் மீதும் இரும்பிடர்த்தலையார் மீதும் நாட்டிய இளஞ்செழியன் ஆவேசத்துடன் கூறினான்: “அடிகளே! சோழ மண்டலத்தின் பிற்காலம் இந்த யந்திர சாலைகளால், பிறநாட்டு ராணிகளால் தீர்மானமாகாது. இதோ இருக்கும் இந்த வாளினாலும் என் படை பலத்தாலும் தீர்மானிக்கப்படும். இவள் புத்தர் சிலை மர்மத்தை உடைத்தால் ஏற்படக்கூடிய லாபமென்ன வென்பது எனக்குத் தெரியும். இந்த ஆயுத சாலைக்குக் கீழே அரச மாளிகைக்குச் செல்லும் சுரங்கமிருக்கலாம். அதன் மூலம் நாம் ஆட்களை நடத்திச் சென்று சேரனைப் பிடித்துக் கொண்டு போகலாம். இவள் உதவியினால் பாண்டியனுக்கும் அதே கதி ஏற்படலாம். மதுரை எல்லையிலும் இப்படியொரு சிலை யிருக்கக்கூடும். ஆனால் இத்தகைய வஞ்சகத்தால் எதிரிகளை வெற்றி கொள்ள நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். கரிகாலரும் ஒப்புக் கொள்ளமாட்டார். வீரவாளேந்தி வெஞ்சமரில் போர்க்களத்தே நாட்டப்படும் சோழ மண்டலத்தின் பெரு வெற்றி! அதற்கு நடுயந்திரமாக விளங்கப் போவது பூம்புகார். புகாரில் யவனர்களைத் தீர்த்துக் கட்டும் எனது படை! சேரனையும் பாண்டியனையும் நடுநிலத்தில் சந்திக்கும்! பொறுத்துப் பாரும் அடிகளே! ஹிப்பலாஸின் பட்டாக்கத்தி எதிரிகள் மார்பில் பாய்வதையும் குமரன் சென்னியின் நெடு வேல்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து மாற்றார் உடலைப் பிளப்பதையும் பார்க்கப் போகிறீர்! அப்புறம்தான் நிலைநாட்டப்படும் சோழப் பேரரசு! யந்திரத்தாலல்ல, தந்திரத்தாலுமல்ல, திருமணத்தாலும் அல்ல?”-இப்படிப் பிரும்மானந்தரைப் பார்த்துக் கூறிய இளஞ்செழியன் ராணியைப் பார்த்து, “ராணி, இந்தச் சிலையின் மர்மத்தை உன் மணாளனுக்குச் சொல்லிக்கொடு. ஆனால் இது நிச்சயம். நான் உன் மணாளனல்ல” என்று கூறிவிட்டுக் கூடத்தைவிட்டு அகன்று வெகு வேகமாகப் படிகளில் ஏறி, தான் முதல் நாளிருந்த அறைக்குச் சென்று விட்டான்.

அவன் ஆவேசத்தாலும் வார்த்தைகளாலும் ராணி கோபப்படுவாளென்று மற்றவர்கள் எதிர்பார்த்திருந்ததால் ஏமாந்தே போனார்கள். இளஞ்செழியன் பேச்சைக் கேட்ட ராணி தலையை நன்றாகத் தூக்கிச் சற்று நிமிர்ந்து நின்றாள். அவன் படிமேல் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, “சரி. அடிகளே! ஸ்நானபானாதிகளை முடித்துக்கொண்டு இரவு இருங்கோவேளுடன் உறையூருக்குப் புறப்படச் சித்தமாயிருப்போம்” என்று கூறிவிட்டு, தன் எழிலெல்லாம் அசைந்தாட வெகு ஒய்யாரமாக, நிதானமாக, ஏதும் நடக்காததுபோல மாடிப்படிகளில் ஏறிச் சென்றாள்.

பகல் நொடிப் பொழுதில் ஓடி விட்டது. கரிகாலனும், இரும்பிடர்த் தலையாரும், பிரும்மானந்தரும் பல முறை சந்தித்துப் பேசியும் அன்றிருந்த நிலைக்குச் சரியான முடிவு ஏதும் ஏற்படாததால் பெரிதும் குழம்பிப் போயிருந்தனர். அவர்கள் குழப்பத்தை இரவு இன்னும் அதிகப்படுத்தியது. அவர்களை உறையூருக்கு அழைத்துப் போவதாகச் சொன்ன இருங்கோவேள் நடுநிசிவரை தலையைக் காட்டவில்லை. வாணகரையிலிருந்து இளஞ்செழியன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் புகாரிலிருந்து டைபீரியஸைப் பற்றி வந்த செய்தியின் விளைவாகக் கிளம்பி துரிதமாகக் கருவூரை அடைந்த பிரும்மானந்தர் கருவூரில் சமண மடத்தில் ஏற்பட்ட நிலைகண்டு அதிர்ச்சியுற்றுப் படுத்திருந்தார். இரும்பிடர்த் தலையார் மட்டும் அந்த மடத்திலிருக்க இஷ்டப்படாமல் இரவு சற்று ஏறியதும் கரிகாலனை அழைத்துக் கொண்டு தன் இருப்பிடத்திற்குச் சென்றார்.
நடுநிசியும் தாண்டியது. எங்கும் ஒரே நிசப்தம். நிசிவரை சப்தித்துக் கொண்டிருந்த கௌளிகூடத் தன் கூச்சலை நிறுத்திக் கொண்டது. ராணி மெள்ளக் கண் விழித்துப் பக்கத்துப் படுக்கையிலிருந்து இளஞ்செழியனைக் கவனித்தாள். படைத் தலைவன் நல்ல உறக்கத்திலிருப்பதைக் கண்டு அவனை இருமுறை ஆட்டிப் பார்த்தாள். உறக்கம் பலமாக இருந்ததால் திருப்தியடைந்து அடிமேலடி வைத்து மெள்ள அறைக்கு வெளியே சென்றாள். அறைக்கு வெளியே வந்ததும் மற்ற அறைகளையும் நன்றாகச் சாத்தி வெளியே தாழிட்டுப் படிகளில் இறங்கி மீண்டும் புத்தர் சிலையிருந்த கூடத்துக்குள் வந்தாள். அங்கு வந்தது முதல் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்ட ராணி கூடத்தில் மிக மெதுவாக நடந்து சென்று எல்லாக் கதவுகளையும் தாழிட்டாள். பிறகு புத்தர் சிலையை மெள்ள அணுகி அதன் பீடத்துக்கு அருகில் நின்று கொண்டு புத்தர் பிரான் திருவடிகளின் கட்டை விரல் நகங்களை லேசாகத் திருகினாள். அவள் ஒரு திருகு திருகியதுமே புத்தர் சிலை ஒரு முறை கிர்ரென்று சுழன்றது. பிறகு ஏதோ கட்டடமே இடிந்து தலையில் விழுவது போன்று ஒரு சப்தம் பயங்கரமாகக் கேட்டதன்றி, சிலையும் சரிபாதியாக வெடித்து அகன்றது. அதன் இரண்டு கைகளிலிருந்தும் இரண்டு பெரிய கத்திகள் அசுர வேகத்தில் கிளம்பிக் கூடம் பூராவிலும் சுழன்றன. புத்தர் சிலைக்குள்ளே சம பாகமாகத் தெரிந்த இரண்டு பகுதிகளிலும் தமிழகத்தின் யவன ஆயுதங்களும் கலந்து காட்சியளித்தன. வடநாட்டு பின்டீபாலம் முதல், யவனர் இரும்பு முள்கதைகள் வரை சகல ஆயுதங்களும் இருந்ததால் பெரிய ஆயுத சாலையாக அந்தச் சிலைப் பகுதிகள் தெரிந்தன. சுமாரான வீரர்கள் தரிக்கக் கூடிய ஆயுதங்களைக் கொண்ட அந்த இரு பகுதிகளையும் சற்று நேரம் உற்றுக் கவனித்த ராணி, சிலையின் இரு கைகளையும் அழுத்தினாள். மீண்டும் இடிபோன்ற பெரும் சப்தம் அந்த இரவில் கிளம்பி, சமண விஹாரத்தின் சுவர்களிலும் பிரதிபலித்து மிகப் பயங்கரமாக ஒலித்தது.

சிலை இரண்டாகப் பிரிந்த இடத்தில் ஒரு பெரும் பாறை அகன்றது. கீழே பாதாளத்தை நோக்கிப் படிகள் ஓடின. புத்த பகவான் திருவடிகளில் ஒன்றிலிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கிச் சென்ற ராணி சுமார் நூறு படிகளைக் கடந்ததும் சமதரைக்கு வந்தாள். சமதரையின் அடித்தளம் கருங்கற் பாறைகளால் அமைக்கப்பட்டு, பெரிய கூடம் போல் தெரிந்தது. சுற்று முற்றும் எங்கும் பெரும் தூண்கள் எழுந்து நின்றன. பாதாள குகையை யவனர்கள் திறம்படவே சிருஷ்டித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த ராணி பெருமையால் புன்முறுவல் செய்தாள். தூண்களிலிருந்த கருங்கற்களின் அமைப்பு எகிப்திய பாரோமன்னர்கள் சமாதி மண்டபங்களைப் போலிருந்ததைக் கண்ட ராணி அந்தக் கல்லில் ஒன்றைப் பிடுங்கினாலும் குகை தலைமேல் விழுந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்டு சுற்றுமுற்றும் நோக்கினாள். குகையின் ஓரத்தில் ஒரு பயங்கரக் குட்டை இருந்தது.

அதன் கரையில் முதலைகள் பல படுத்துக்கிடந்ததன்றி, மனித அரவம் கேட்டதால் ஓரிரண்டு முதலைகள் அவளை நோக்கி ஊர்ந்து வரவும் முற்பட்டன. மிகப் பயங்கரமான சூழ் நிலை. ராணி பயந்திருந்தால் அந்தக் குகைக்குப் பயந்திருக்க வேண்டும். அல்லது முதலைகளுக்குப் பயந்திருக்க வேண்டும். இரண்டுக்கும் அஞ்சாத அவளையும் அச்சப்படுத்த ஒரு குறுவாள் அந்த மண்டபத்தின் நடுவில் கிடந்தது. தனக்கு முன்பாக யாரோ அங்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட ராணி பெரும் பீதியடைந்து அந்த வாளை அணுகி அதை எடுக்கப் போய்ச் சற்றுக் குனிந்தாள்.

அதே சமயத்தில் அவள் அச்சத்தை உச்ச நிலைக்குக் கொண்டுபோக எழுந்த சிரிப்பு, அந்தக் குகையைப் பயங்கரமாக ஊடுருவிச் சென்றது.

அடுத்த வினாடி நீண்ட வாட்கள் நான்கு, குகைத் தூண்கள் அடித்துவிட்ட இருட்டிலிருந்து கிளம்பி அவளது வெண்மையான கழுத்தில் பதிந்தன.

Previous articleYavana Rani Part 1 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here