Home Sandilyan Yavana Rani Part 1 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

69
0
Yavana Rani Part 1 Ch31 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch31 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 31 இருளில் வாட்போர்

Yavana Rani Part 1 Ch31 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

சச்சதுரமான கருங்கற்களைக் கொண்டே அமைக்கப் பட்ட பாதாளக் குகையின் சமதரையில் விழுந்து கிடந்த குறுவாளைப் பார்த்ததுமே தனக்கு முன்பாக யாரோ அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்களென்பதை அறிந்ததால், ஒரு விநாடி பெரும் பீதி அடைந்த யவன ராணி, இயற்கையாகவே அவளுக்குள்ள நெஞ்சுறுதியாலும் வேறு நாட்டில் யவன அரசை ஸ்தாபிக்க வந்திருப்பவள் கோழையாயிருப்பது கேவலம் என்ற நினைப்பாலும் அந்தப் பீதியை நொடி நேரத்தில் உதறிக் கொண்டாளதலால், குகையில் பயங்கரச் சிரிப்பு ஊடுருவிச் சென்றதையோ தன் கழுத்தில் ஒரே சமயத்தில் நான்கு வாட்களின் நுனிகள் புதைந்ததையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் கீழே கிடந்த குறுவாளைக் கையிலெடுத்துப் பரிசோதிக்கத் தொடங்கினாள். புத்த பகவான் திருவடியிலிருந்து எடுத்து வந்து கருங்கல் தூணின் இடையே வெளிப்பட்டு நின்ற முகப்பு ஒன்றில் அவள் வைத்திருந்த விளக்கின் வெளிச்சம், மற்ற இடங்களிலிருந்த பெரும் தூண்களின் காரணமாக வேறெந்த இடத்திலும் விழாமல் உட்கார்ந்திருந்த அவளுடைய வெண்ணிற தேகத்தின்மீது மட்டும் விழுந்ததால் விளக்கின் ஜோதிக்கு மெருகு கொடுக்கவந்த மற்றொரு ஜோதிபோல் யவன ராணி விளங்கினாள். எதிரே சற்றுத் தூரத்திலிருந்து ஊர்ந்து அவளை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்து குகையில் என்றும் கேட்காத சிரிப்பொலி கேட்டதும் தலையைத் தரையில் போட்டுப் படுத்துவிட்ட முதலைகளின் கண்கள் விளக்கொளியில் பளீரெனப் பயங்கரமாக மின்னின. ஆனால் அத்தனை பயங்கரத்தையும் சமாளிக்கும் ஆற்றல் ராணிக்கு உண்டு என்பதை வலியுறுத்த, தோளிலிருந்து விலகித் தொங்கிய ஆடைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த அன்னப்பறவை ஆபரணம் தன் தீ விழிகளை வெளியே காட்டியது. விளக்கு ஒரே தூணின் இடைப்பகுதியில் இருந்ததால் மற்றத் தூண்கள் விகாரமான நிழல்களைக் குகை யெங்கும் பாய்ச்சி, முதலைக் குட்டை நீரையும் முக்கால்வாசி மூடிவிட்டாலும் ராணிக்குச் சற்று அப்பால் மிகுதியிருந்த நீர்ப்பரப்பு முதலைகளின் வால்களால் அப்படியும் இப்படியும் எழுப்பப்பட்டு விளக்கொளியில் ஏதோ பலரை விழுங்கக் காத்திருக்கும் மந்திரக் குட்டைபோல் காட்சியளித்தது. போதாக் குறைக்கு எந்தப் பாதாளத்தில் கட்டடம் கட்டினாலும் அந்த இடத்தைக் கண்டு பிடித்து உறையும் சுவர்க் கோழியின் ஓசையும், வௌவால்களின் சப்தமும் குகையின் பயங்கரத்தை மிகவும் அதிகப்படுத்தின.

இந்தச் சூழ்நிலையில் கத்திகளுக்கிடையில் அகப்பட்டுக் கொண்ட யவனராணி கத்திகளைச் சிறிதும் சட்டை செய்யாமல் கீழே கிடந்த குறுவாளைக் கவனிப்பதிலேயேமும் முரமாயிருந்ததைக் கண்டு அவள்மீது கத்தி வீசியவர்களுக்கே பிரமிப்பு உண்டாகியிருக்க வேண்டும். ஆகவே கத்தியை வீசி அவள் கழுத்தைத் தடவியவர்கள் மேற்கொண்டு எந்த எச்சரிக்கையும் செய்யாமலும், கத்திகளை குறிவைத்த இடத்தி லிருந்து அகற்றாமலும், மறைவிடங்களை விட்டு வெளிவராம லும் மௌனமாகவே இருந்தார்கள். அவர்கள் மௌனத்தையும் நிதானத்தையும் பயன்படுத்திக் கொண்ட ராணி மிகச் சாவதானமாகவே கத்தியைப் பரிசோதிக்கத் தொடங்கி, அதன் பிடியிலிருந்த அரச முத்திரையைப் பார்த்து, “இது சங்கு முத்திரை. சேரர்களின் அரசுச் சின்னம். ஆகையால் அந்த மரபில் யாருக்கோ ஒருவருக்கு இந்தக் குகையின் மர்மம் தெரிந்தேயிருக்கிறது” என்று சற்று உரக்கவே சொன்னாள். இதைக் கேட்டதும் வந்திருப்பவன் யாராயிருந்தாலும் அவன் கூட்டாளிகள் எப்பேர்ப்பட்டவர்களாயிருந்தாலும் ஏதாவது பதில் பேசுவார்கள் என்று ராணி எதிர்பார்த்தாள். ஆனால் வந்த பேர்வழிகள் வாயையும் திறக்கவில்லை; தாங்கள் ஒளிந்திருந்த மறைவிடத்திலிருந்து வெளிவரவும் இல்லை. கரகரப்பான ஒரு குரல் மட்டும் மிகவும் கடுமையாக எழுந்து, “ராணி! பரிசோதனை முடிந்து விட்டால் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். போவோம்” என்று கூறியது.

அந்தக் குரலை அதற்கு முன் எந்த இடத்திலும் கேட்ட தாக ராணிக்குத் தோன்றாததால், யாரோ முன்பின் அறியாத புது மனிதனிடம் தான் சிக்கிக் கொண்டிருப்பதை அவள் அறிந்தாலும், ‘இவன் மாத்திரம் என் பெயரை எப்படித் தெரிந்து கொண்டான்’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு அதற்கு விடை காணாததால், “நீ யார்? உனக்கு எப்படி இந்த இடம் தெரிந்தது? என்னைச் சிறைப்படுத்த உனக்கு அதிகாரம் அளித்தது யார்?” என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்த இடத்திலிருந்து மெள்ள எழுந்து நின்றாள். அவள் எழுந்தபோது கழுத்தில் ஊன்றியிருந்த வாட்களும் ஊன்றியது ஊன்றியபடியே எழுந்தனவே யொழிய, கழுத்தை விட்டு விலகவில்லை. மறைந்திருந்த வீரர்களும் வெளிவரவில்லை. குகையின் இருட்டிலிருந்தே பதிலும் வந்தது யவன ராணிக்கு. “ராணி! நான் யாரென்பதைப் பற்றிச் சொல்ல எனக்கு உத்தரவில்லை; சொல்ல அவசியமுமில்லை. உங்களைச் சிறை செய்வதும் உங்கள் நன்மையை முன்னிட்டுத் தான். ஆகவே, பேசாமல் அந்தத் தூணுக்குச் சென்று விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மீண்டும் பேசியது பழைய குரல்.

ராணி அந்தக் குரலின் ஒலியை நன்றாகக் கவனித்துக் கேட்டாள். வந்திருப்பவன் யாராயிருந்தாலும் அவன் வேண்டு மென்றே குரலை மாற்றிப் பேசுகின்றான் என்பதையும், அது அவன் இயற்கைக்குரல் அல்லவென்பதையும் புரிந்து கொண்டாளானாலும், குரலுக்குடையவன் இன்னானென்பதை அறிய முடியாததால் அதைப் பற்றிச் சிந்தனை செய்யாமல் அடுத்து நடக்க வேண்டியதைப்பற்றிச் சிந்தனை செய்தாள். அவள் முகத்திலோடிய சிந்தனைக் குறியை மறைவில் நின்று உத்தரவிட்டவன் கவனித்திருக்க வேண்டும். அவன் சற்று முன்னைவிடக் கடுமையாகவே கூறினான்: “தப்ப முயலுவதிலோ உங்களை மீறிச் செல்ல வழி அகப்படுமா வென்று ஆராய்ச்சி செய்வதிலோ பயனில்லை ராணி! நீங்கள் எங்கள் கட்டளையை மீறச் சற்று முயன்றாலும் உங்களைக் கண்ட துண்டமாக வெட்டிப்போட எங்களுக்கு உத்தரவிட்டி ருக்கிறது. பேசாமல் நடந்து சென்று அந்த விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.”

அதற்கு மேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்து கொண்ட ராணி மிகக் கம்பீரமாக நிமிர்ந்த தலையுடன் விளக்கிருந்த தூணை நோக்கி நடந்து சென்று தன்னைச் சிறை செய்ய வந்தவன் ஆணைப்படி விளக்கையும் கையிலெடுத்துக் கொண்டாள். “ராணி! திரும்பி அந்தக் குட்டையைப் பார்த்துக் கொண்டு ஒரு விநாடி நில்லுங்கள்” என்று மறுபடியும் உத்தரவிட்டது அந்தப் பழைய குரல். வார்த்தை பேசாமல் ராணி முதலைக் குட்டையை நோக்கித் திரும்பி நின்று கொண்டாள். “டேய்! யாராவது ஒருவன் ராணியின் கண்களைக் கட்டுங்கள்” என்று உத்தரவிட்டான் அந்த மனிதன். கழுத்தில் பதிந்திருந்த நான்கு கத்திகளில் ஒன்று அகன்று அதற்குடையவன் தூண் மறைவிலிருந்து வெளியே வந்து, ராணியைப் பின்புறமாக அணுகி அவள் கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டினான். அதற்குப் பிறகு மற்ற வாள் களும் தன் கழுத்தைவிட்டு அகன்றுவிட்டதையும் தன்னைச் சுமார் நான்கு பேர் சூழ்ந்து கொண்டு விட்டதையும், ஐந்தாவது ஒருவன் மட்டும் முரட்டுப் பிடியாகத் தன் கையைப் பிடித்துக் கொண்டதையும் உணர்ந்த ராணி அவர்கள் கட்டளைப்படி மெள்ளத் தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித் தாள். கண் தெரியாததாலும் கால் நிதானத்திலேயே நடக்க வேண்டியிருந்ததாலும் இரண்டு மூன்று முறை கீழே கால் தடுக்கியதால் விழ இருந்த ராணி, “இந்தா, இந்த விளக்கையாவது பிடித்துக் கொள்ளுங்கள். தரையிலும் கருங்கற்கள் சரியாகப் பாவவில்லை ” என்று கூறி, விளக்கை அக்கம் பக்கத்தில் நீட்டுவது போல் பாசாங்கு செய்து அருகிலிருந்த வீரன் முகத்தில் சுடரை வைத்துத் தீய்த்து விடவே, “அடி சண்டாளி!” என்று பெரிதாக அலறினான் சுடப்பட்டவன். ராணியைப் பலமாகப் பிடித்திருந்த அவன் கையும் திடீரென நழுவவே, ராணி சட்டென்று குனிந்து குகையின் ஒரு புறத்துக்கு ஓடினாள்.

“பிடியுங்கள்! அவளை விடாதீர்கள், அவளைத் தப்ப விட்டால் பேராபத்து. தலைவர் நமது விழியைப் பிடுங்கி விடுவார்!” என்று கூவி அவளைச் சிறை செய்ய உத்தர விட்டான் வந்திருந்த வீரர்களின் தலைவன். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றுவது மட்டும் அத்தனை சுலபமல்ல வென்பதை அவன் கூட்டாளிகள் உணர்ந்து கொண்டபடியால் அவர்களில் ஒருவன், “அவள்தான் உங்கள் முகத்திலேயே இருட்டாயிருக்கிறதே. என்ன செய்வது?” என்று கேட்டான். அதே சமயத்தில் கையில் அணைந்த திரியிலிருந்து கடைசிப் புகையை மட்டும் விட்டுக் கொண்டிருந்த வெண்கல விளக்கை ஓங்கி, பேசியவனிருந்த இடத்தைக் குரலாலேயே அனுமானித்து ராணி எறியவே, விளக்கு சரியாக அவன் புருவ மத்தியில் தாக்க, “ஐயோ எசமான்! இது ராணியல்ல, பிசாசு!” என்று அலறிக் கொண்டே பேசியவன் கீழே சாய்ந்தான்.

“பிசாசுமல்ல பேயுமல்ல! பிடியுங்கள் இந்த ராணியை! இல்லையேல் உங்களனைவரையும் காலையில் கழுவேற்றி விடுவேன். உம், குகை மூலைகளைத் தடவிப் பாருங்கள்” என்று அவர்கள் தலைவன் உத்தரவிட்டதன்றி, தானும் உருவிய வாளை நீட்டியபடி குகைத் தூண்களைத் தடவித் தடவிக் கொண்டு திரிந்தான். மற்ற நான்கு வீரர்களும் குகைக்குள் மிகவும் எச்சரிக்கையாக வலம் வந்தனர். யவன ராணியும் தன் கண்கட்டை அவிழ்த்தெறிந்து விட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் குகையின் மூலைப் பாறைகளில் ஒட்டிப் பதுங்கிப் பதுங்கி நகர்ந்து பழைய படிகளைக் கண்டுபிடிக்க முயன்றாள். குகையில் இருள் நன்றாகச் சூழ்ந்திருந்தபடி யாலும், குகை சிறிதாகையால் எந்த விநாடியும் அந்த முரடர்கள் கையில் தான் சிக்கிவிடக்கூடும் என்ற பயத்தாலும், அவ்வப்பொழுது இடம்விட்டு இடம் மாறிய ராணிக்குப் படிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது பிரம்மப் பிரயத்தனமாயிருந்தது! அந்தப் படிகளில்லாவிட்டாலும் குகையில் நுழைபவர்களைத் தொலைதூரம் கொண்டு போய் விடக்கூடிய வேறு வழிகள் இருக்கக்கூடும் என்பதற்காகச் சுவர்களில் யந்திரசூட்சுமங்கள் எங்கிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே ராணி சென்றாள். எங்கும் யந்திர சூட்சுமம் கிடைக்காததாலும், அத்தனை இருளிலும் தன் தலையில் இரவு செருகியிருந்த ஒற்றைச் செண்பகப் பூவின் நறுமணம் அந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாகவே குகையில் சூழ்ந்ததாலும், அந்த நறுமணத்தைக் கொண்டே வீரர்கள் தன்னை நெருங்கிவிட முடியும் என்ற உணர்வாலும் ராணி மிகுந்த எச்சரிக்கை யுடனும் ஓரளவு பயத்துடனுமே குகைச் சுவர் ஓரமாக நடந்து சென்றாள்.

குகையில் மிகப் பயங்கர நிலை சூழ்ந்து கிடந்தது. அந்தக் குகையின் அமைப்பும் நிசப்தமுமே யாருக்கும் திகிலை விளைவிக்கக்கூடிய கோர நிலையைச் சிருஷ்டிக்க முடியும். அத்துடன் இருட்டும் சூழ்ந்து நிசப்தத்தை உடைத்த முதலைகள் புஸ்புஸ்ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு யார் கால் தங்கள் வாயில் அகப்படும் என்று நெளிந்து நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்ததாலும், அப்படித் தரையில் ஊர்ந்து வராத முதலைகள் வாலைச் சுழற்றித் தண்ணீரில் திடீரென அடித்ததாலும், பிசாசுகள் போல் இருட்டில் உலாவிய வீரர்களின் காலடிச்சத்தம் வேறு கேட்டதாலும் யாருக்கும் குலைநடுக்கமெடுக்கக்கூடிய சூழ்நிலை மண்டிக் கிடந்தது. திடீரென யாரோ ஒரு வீரன் காலை முதலை யொன்று பிடித்துக் கொள்ளவே, “ஐயோ! முதலை! முதலை” என்று அவன் கூச்சலிட்டது குகையின் கூரைக் கற்களையே சாய்த்து விடுவதுபோன்ற கிலியை உண்டாக்கியது. அந்த அலறலைத் தொடர்ந்து அவன் தன் கத்தியால் முதலையை வெட்டத் துணிந்ததன்றி அந்தக் கத்தி அதன் முரட்டு முதுகை ஊடுருவ முடியாததால் பயம் தலைக்கேற, “உதவுங்கள், ஐயோ! முதலை இழுக்கிறது. உதவுங்கள்” என்று மரணக் கூச்சலிட்டான்.

முதலைகளிடமிருந்த பயத்தில் மற்ற வீரர்கள் அவனிருந்த பக்கத்தைவிட்டு விலகியது மட்டுமல்லாமல் ராணியைத் தேடுவதையும் சற்று நிறுத்தவே முதலையிடம் அகப்பட்ட வீரன், “செத்தேன், வாருங்கள், உதவுங்கள்” என்று பெருத்த ஓலமிட்டாலும் அந்த ஓலமும் சில விநாடிகளே கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் குட்டையில் அவன் உடல் பல முதலைகளால் புரட்டப்படுவதை ஓசையிலிருந்தே ராணி தெரிந்து கொண்டாள். அவன் பயங்கர முடிவைக் கண்டு அவளைச் சிறை செய்ய வந்தவர்களின் தலைவனும் திகைத்திருக்க வேண்டும். ஆகவே, அவன் எந்த உத்தரவும் இடாமல் திக்பிரமை பிடித்துச் சில விநாடிகள் நின்று விட்டான். குகையில் அந்த இருட்டில் நிகழ்ந்த அந்தப் பயங்கர மரணத்தை ராணியைப் பிடிக்க வந்ததால் கொடுக்க வேண்டி வந்த அந்தக் கொடூர பலியை, நினைத்து அவன் சொல்லவொண்ணாத்திகில் கொண்டானாதலால் குகையில் மௌனமே நிரம்பி நின்றது. அந்த மௌன நிலையின் பயங்கரத்தைக் குட்டையிலிருந்த சடலத்தின் எலும்புகளை முதலைகள் தங்கள் பெரும் பற்களால் கரகரவெனக் கடித்து எழுப்பிய சப்தம் உச்ச நிலைக்குக் கொண்டு போகவே ராணியின் இரும்பு இதயம்கூட ஓரளவு நெகிழ்ந்து மாண்டவனின் கோர மரணத்தை நினைத்துத் துக்கித்தது.

யவன நாட்டுச் சிறைச்சாலைகளில் இதைவிடக் கோரமான மரணங்களைப் பார்த்திருக்கும் ராணி வெகு சீக்கிரம் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, எப்படியும் தன்னைச் சிறை செய்ய வந்தவர்களிடமிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மெள்ள மெள்ள நகர்ந்து படிகளைத் தேடினாள். படிகள் கிடைக்காவிட்டாலும் அவள் மீண்டும் நகரத் தொடங்கியதால் கேட்ட கலவரத்தைக் கவனித்த வீரர்களின் தலைவன், “அதோ, அந்த மூலையில் இருக்கிறாள் ராணி. பிடியுங்கள்” என்று சொல்லிக் கொண்டு அவளிருப்பிடத்தை நோக்கி நடந்தான்.

அவளைப் பிடிக்க மீதியிருந்த வீரர்கள் மூவரும் அவர் கள் தலைவனும் குகையைச் சுற்றி வந்தும் பயனில்லாமற் போகவே, “டேய்! குகையின் முற்புறத்தை மட்டும் சூழ்ந்து கொள்ளுங்கள். முதலைக் குட்டையை விட்டு விடுங்கள். இவள் அதில் விழுந்து சாவதானால் சாகட்டும். மற்ற மூன்று புறமும் மூவர் வந்தால் இவள் கையில் தட்டுப்படுவாள். நேராக எதிர்ப்பக்கம் வந்தால் இங்கே நானிருக்கிறேன்” என்று கூறவே வீரர்கள் பிரிந்து மூன்று புறங்களிலும் சுவரைத் தடவித் தடவிக்கொண்டு வந்தார்கள். தலைவனும் நேர்ப்புறமாகத் தூண்களைத் துழாவித் துழாவி நடந்து வந்தான். இனித் தான் தப்பமுடியாது என்பதை உணர்ந்து கொண்ட ராணி தன் மடியிலிருந்து தாழைச் சர்ப்பம் போன்ற கத்தியை உருவிக் கொண்டாள். அடுத்த விநாடி அந்தக் கத்தி அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது. யாரோ ஒருவன் அவளைக் குழந்தைபோல் எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். மறுகணம் நீண்ட வாளொன்றும் அந்த மனிதன் கரத்தில் எழுந்து நாற்புறமும் சுழன்றது.

அவளைத் தூக்கிக் கொண்ட மனிதன் வேண்டு மென்றே தன் வாளை இருமுறை குகையின் கருங்கல் தூண்களில் தட்டினான். ராணியைச் சிறை செய்ய வந்த வீரர்கள், தங்களைத் தவிர வேறு ஒரு வீரனும் குகைக்குள் வந்து விட்டா னென்பதையும் அறிந்துகொண்டு வாட்களை உருவிக் கொண் டார்கள். வந்த மனிதன் ராணியைத் தோளில் போட்டுக் கொண்டு இடதுகையால் அவளைப் பிடித்தபடியே வலது கையால் வாளைச் சுழற்றி எதிரிகளைச் சமாளித்துக் கொண்டு அவர்களிருந்த திக்கிற்கு நேர் எதிர்ப்பக்கமாக நகர்ந்தான். அவன் காலடி ஓசைகளைக்கொண்டு அவனைத் துரத்திய வீரர்கள் வாள்களை வீசித் தாக்கத் தொடங்கினார்கள்.

தன்மீது பாய்ந்த நான்கு வாட்களையும் நீண்ட தன் வாளால் தடுத்து நிறுத்திப் போரிட்டபடியே நகர்ந்தான் அந்த மனிதன். இரண்டு விநாடிகளுக்குள் ராணியைச் சிறை செய்ய வந்த வீரர்களில் இருவர் நிராயுதபாணியானார்கள். அந்த வீரனுடைய வாளால் சுழற்றப்பட்டுக் கையிலிருந்து பறந்தோடிய எதிரி வீரர் வாட்கள் ‘கிளாங் கிளாங்’ என்ற ஒலியுடன் குகைத் தூண்களில் தாக்கி, சளக் சளக்கென்று முதலைக் குட்டையில் விழவே முதலைகள் வேறு சீறி எழுந்து தரையில் சரசரவென்று ஊரத் தொடங்கின. ராணியைத் தூக்கிக்கொண்ட வீரனுடைய கண்கள் அந்தக் கும்மிருட்டில் புலியின் கண்களைப்போல் ஒளியிட்டன. வாளும் ஏதோ கண்ணுக்குத் தெரியாத தேவாஸ்திரம் போல் சுழன்று அவனை அதிகமாக நெருங்கிய இரு வீரர்களின் மார்புகளிலும் பாயவே அவர்கள் அலறி விழுந்தனர். அந்த அலறல் குகைச் சுவர்களில் தாக்கி எழுப்பிய பயங்கர எதிரொலியுடன் ராணியைத் தூக்கிக்கொண்டு திடமாக நடந்த அந்த மனிதனின் காலடி ஓசையும் கலந்து கொண்டது. தோளில் இருபுறமும் தொங்கிய ராணியை இடது கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு குகையின் ஒரு மூலைக்கு ஓடிய அந்த வீரன் அங்கிருந்த படிகளில் தடதடவென்று ஏறிச் சென்றான். அவன் காலடி ஓசையைக் கொண்டே மீதியிருந்த இரண்டு எதிரிகளும் அவனைப் பின்பற்றினாலும், எப்பொழுதும் அவர்கள் முகத்தை மிக லேசாகத் தடவிய அந்த வீரனுடைய நீண்ட வாள் அவர்களை அணுக வொட்டாமல் செய்து கொண்டிருந்தது. அந்த வாளிடமிருந்த பயத்தாலோ அல்லது வந்த வீரன் வேறு திசையில் மறைந்துவிட்ட காரணத்தாலோ எதிரிகள் அவனைத் தொடருவதைக் கைவிட்டனர்.

சிறிது தூரம் படிகளில் ஏறிச் சென்ற அவ்வீரன் எதிரிகள் தன்னைத் தொடர்ந்து வரவில்லையென்பதை அறிந்ததும் சிறிது நிதானமாகவே நடக்கத் தொடங்கினான். படிகள் ஏறி முடிந்த இடத்தில் நீண்ட தாழ்வாரமொன்று எங்கோ ஓடியது. அந்தத் தாழ்வாரத்தின் கோடியிலிருந்த மலர்களின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது. வீரன் அவளை அப்பொழுதும் கீழே இறக்காமலே தூக்கிக் கொண்டு தாழ்வாரத்தின் எதிர் வாசலை அடைந்தான். அவனுடைய இடது கையின் அணைப்பிலும் திரண்ட தோளிலும் கிடந்த ராணியும் அந்த உயர் பதவியிலிருந்து கீழே இறங்க இஷ்டமில்லாமல் செயலற்றுக் கிடந்தாள். முதன் முதலில் குகையில் அவன் கை மேலே பட்டபோதே அவனை இன்னானென்று அறிந்து கொண்ட ராணிக்குப் பயமெல்லாம் காற்றில் பறந்து, புயலில் சிக்கிய மரக்கலம் தரையை அடைவதால் ஏற்படக்கூடிய சாந்தியை அடைந்தாள், அவள். ‘முன்பொருமுறை பூம்புகாரில் என்னைத் தூக்கித்தான் சென்றார். ஆனால் அப்பொழுது உணர்விழந்திருந்தேன். இப்பொழுது உணர்விருக்கின்றது. அப்பப்பா! இந்த ஆண்மகனுக்குத்தான் எத்தனை பலம்! மெல்லிய இந்தக் கரங்களுக்குத்தான் எத்தனை வலிமை!’ என்று எண்ணி எண்ணிப் பூரித்தாள்.

ராணி அப்படி மனப்பூரிப்பிலிருக்கையிலேயே அவளைக் கீழே இறக்கிய படைத் தலைவன், “இரு ராணி! வருகிறேன்” என்று கூறிவிட்டு எதிரேயிருந்த பெரும் கதவு ஒன்றைத் திறக்க முடியாமல் திணறினான்.

“அதை அத்தனை லேசாகத் திறக்க முடியாது. இப்படி வாருங்கள்” என்று அவனைப் பின்னுக்கிழுத்த ராணி, தான் முன் சென்று கதவைத் தடவிப் பார்த்து ஒரு ஆணியைத் திருகவே கதவு சத்தம் ஏதும் செய்யாமல் மெள்ளச் சுழன்று திறந்து வழியும் கொடுத்தது. அந்த வழியின் மூலமாக வெளி நிலத்துக்கு வந்த ராணி இளஞ்செழியனைப் பார்த்து, “இது கருவூரில் எந்தப் பகுதி?” என்று வினவினாள்.

படைத்தலைவனும் சுற்றும் முற்றும் நோக்கினான். வந்த இடம் காடா, நந்தவனமா என்று புரியாத பெரும் விசித்திரப் பிரதேசமாயிருந்தது அவனுக்கு. ஏதோ காரணமாகவே அந்த நந்தவனப் பிரதேசத்தில் காட்டுச் செடிகளையும் முட்புதர் களையும் வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் புரிந்து கொண்டான். திட்டமாக இடம் எது என்று தெரியாததால், “தெரியவில்லை ராணி. எது எப்படியிருந்தாலும் இனி ஆபத்து ஏதுமில்லை. வா போவோம்” என்று கூறி ஆசுவாசத்திற்கு அறிகுறியாகப் பெருமூச்சும் விட்டு அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு ஓர் அடி எடுத்து வைத்தான்.

அவன் நினைத்தபடி ஆபத்து தீரவில்லை. பக்கத்தி லிருந்த புதர்களிலிருந்து எழுந்த சில முரடர்கள் அவ்விருவர் மீதும் பெரும் கம்பளங்களைத் திடீரென வீசினார்கள். படைத்தலைவன் வாளிடம் கையைக்கொண்டு போவதற்குள் அவன்மீது நாலைந்து பேர் பாய்ந்தார்கள். தலையில் பலமான வாளொன்று இடிபோல் இறங்கியது. எதிர் பாராத அந்தத் தாக்குதலால் படைத்தலைவன் கண் இருண்டது. எங்கோ யாரோ தன்னைத் தூக்கிக்கொண்டு போவது போன்ற உணர்ச்சி! “இருவரையும் ரதத்தில் போடுங்கள்” என்று யாரோ உத்தரவிட்டது எங்கோ தூரத்திலிருந்து பேசுவது போல் காதில் விழுந்தது படைத் தலைவனுக்கு, ‘ராணி! ராணி!’ என்று கூப்பிட முயன்ற உதடுகள் அசைந்தனவே யொழிய, சத்தம் வரவில்லை . அவ்வளவுதான். அந்த அசைவும் நின்றது, நினைவு பறந்தது!

Previous articleYavana Rani Part 1 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here