Home Sandilyan Yavana Rani Part 1 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

104
0
Yavana Rani Part 1 Ch32 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch32 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 32 இவர் வாழ்வில் எத்தனைப் பெண்கள்!

Yavana Rani Part 1 Ch32 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

நடுக் காடா நந்தவனமா என்று நிர்ணயமாகச் சொல்ல முடியாத மரக் கூட்டங்களின் இடையே முளைத்திருந்த முட் புதர்களின் மறைவிலிருந்து எழுந்த முரடர்களால் தாக்கப் பட்டுச் சுய நினைவை இழந்துவிட்ட சோழர் படையின் உபதலைவன், சுரணை வந்து கண் விழித்து நீண்ட நேரம் வரைக்கும் அரைமயக்கத்திலேயே இருந்தானாகையால் தானும் ராணியும் சிக்கியிருப்பது யாரிடம், தங்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் திராணியை இழந்திருந்தானென்றாலும், வேகமாகச் சென்ற ஒரு ரதத்தில் தான் கிடப்பதை அறிந்து கொண்ட தோடு, தன் கன்னத்தில் இழைந்து கொண்டிருந்த வழவழப்பான மற்றொரு கன்னம் அளித்த இன்ப ஆதரவால் தன்னுடன் அதே ரதத்தில் ராணியும் கட்டுண்டு கிடக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். அந்த அரை மயக்கத் தோடு ராணியின் சரீரத்தின் அண்மை அளித்த இன்பமயக்க மும்படைத்தலைவன் உணர்ச்சிகளை எங்கெங்கோ சுழற்றியதால் அவன் தெளிவாகச் சிந்திக்கும் சக்தியை அறவே இழந்து, தலையில் அடிபட்ட இடத்திலிருந்து தன் கன்னத்தில் வழிந்தோடிய ரத்தத்தில் ராணியின் கன்னம் இழைந்ததால் அவள் கன்னமும் எத்தனை சிவப்பாய் மாறியிருக்கும்? இப்படி எதற்காக ஒரு ரத்த பந்தம் எங்களுக்குள் ஏற்படுகிறது?’ என்று ஏதேதோ பித்தனைப்போல் எண்ணிப் புரண்டு கொண்டிருந்தான்.

அடிபட்டதால் ஏற்பட்ட அரை மயக்கம். ராணியின் அழகாலும் அந்த அழகின் அண்மையாலும் அத்தனை ஆபத்திலும் அவள் தோள் தன் தோளுடன் உராய்ந்து சொல்லிய ஆயிரமாயிரம் செய்திகளின் உல்லாசத்தாலும் முழு மயக்கமாக மாறி, படைத்தலைவனுக்குப் போதையைப் பூர்ணமாக அளிக்கவே, அவன் சிந்தை பழைய சிந்தனைகளில் லயித்தது. ‘புகாரின் கடற்கரையில் ராணி என் காலடியில் விழுந்த இரவில் கலங்கரை விளக்கம் வீசிய பொன்னொளியில் கடலரசன் அவன் கழுத்துவரை எத்தனை பொன்னலை ஆடைகளைப் போர்த்துப் போர்த்துப் பிரித்தான்? நான் அவளைத் தூக்கிச் சென்றபோது அவள் அழகிய தேகம் எத்தனை மென்மையுடனும் திண்மையுடனும் என் உடலில் இழைந்தது! அவளைக் கொண்டுபோய்ப் புகாரில் என் மாளிகையறையில் கிடத்தியபோது அவள் லாவண்யத்தின் எல்லையைக் கண்டேன். அப்பொழுது என் மனம் என்ன பாடுபட்டது. அந்தக் காட்சியைக் காணவும் சக்தியில்லாமல் தானே ஹிப்பலாஸைவிட்டு அவள் மோகன உடலைப்போர்த்தச் செய்தேன்!’ என்றெல்லாம் எண்ணிய படைத் தலைவனின் நிலையற்ற புத்தியில் அத்தனை காட்சிகளும் வலம் வந்தன. வாணகரையில் தன் மாளிகையின் மாடியறையில் அவள் வலையில் தான் விழுந்தது, மிக கேவல நிலையில் தன்னையும் அவளையும் குமரன் சென்னி கண்டது, இந்தக் காட்சிகளும் இளஞ்செழியன் புத்தியிலே சுற்றிச் சுற்றி வந்ததால் அவன் நாட்டு வாழ்வையும், தன் வாழ்வையும் அடியோடு மறந்தான். தான் அப்பொழுதிருந்த அபாய நிலையைக்கூட மறந்தான். அடிப்பட்ட தலையில் அழகுக்கு அடிமைப்படும் எண்ணங்களே நிரம்பி நின்றதால் ரதம் சாலையில் வேகமாகப் புரண்டோடி இரண்டுமுறை திரும்பியதைக்கூடப் படைத்தலைவன் கவனிக்க மறந்தான்.

ஆனால், படைத்தலைவனின் இந்த மயக்கத்தையும் தீர்க்கத் தமிழ்நாட்டு மண் தன்னாலானவரை முயன்று தன் மேனிமீது உருண்டோடிய ரதத்தின் சக்கரங்களைப் பல மடிப்புகளில் தட்டுப்பட்டுத் தூக்கி எறியும்படிச் செய்ததாலும் தமிழன்னையின் மேனியில் பிறந்து, மேனியில் முளைத்து, அவளிட்ட உணவில் செழித்து வளர்ந்த ரதத்தின் சக்கர மரத் துண்டுகளும், இணைப்புச் சகடைகளும் ரத ஓட்டத்தில் ‘சட் சட்’ என்று சத்தம் கிளப்பி, “நாடு இந்தப் பாட்டிலிருக்கும் போது இந்த மயக்கமா உனக்கு?” என்று கேலி செய்வதுபோல காதைத் துளைத்ததாலும், படைத்தலைவன் மெள்ளச் சுரணை வரப்பெற்றுத் தன் நிலையை ஆராய முற்பட்டுத் தலையை மெள்ளத் தூக்கினான். தலையில் ஏதோ பெரும் பாறாங்கல்லைக் கட்டிவிட்டிருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதால் தலையில் அடி பலமாகவே விழுந்திருக்கிற தென்பதை உணர்ந்து கொண்ட படைத்தலைவன், சற்றுத் திரும்ப முயன்ற தன் கால்கள் பலமாகப் பிணைக்கப் பட்டி ருப்பதன்றிக் கைகளும் முதுகுப் பக்கமாகச் சேர்த்து வலுவான கயிறுகளால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். இந்த உணர்வின் காரணமாகத் தன்னைப் பிடித்துக் கட்டியவர் யாராயிருந்தாலும் அவர்கள் பணியைத் திறம் படவே புரிந் திருக்கிறார்களென்பதை அறிந்துகொண்ட படைத்தலைவன், கட்டுண்ட தன் காலை மெள்ள நகர்த்தி ராணியின் நிலை எப்படியிருக்கிறதென்று பரிசோதித்தான். கட்டுண்ட கால்களை நன்றாக முழங்கால் பகுதியில் வளைத்து ராணியின் கால்களைத் தன் கட்டை விரல்களால் தடவிப் பார்த்த இளஞ்செழியன், அவள் கால்களும் நன்றாகப் பிணைக்கப்பட்டிருப்ப தோடு, அந்தக் கால் கட்டிலிருந்து வலிய கயிறு ஒன்று மேற்பக்கமாக ஓடியதைக் கவனித்து அவள் உடலில் குறுக்கிலும் ஒருகட்டு இருக்கிறதென்பதைப் புரிந்துகொண்டான். இப்படி தன்னைவிட ஒரு பங்கு அதிகமாக ராணியைப் பிணைந் திருப்பதிலிருந்து தான் தப்பினாலும் ராணியைத் தப்பவிடக் கூடாது என்ற உறுதி தங்களைப் பிடித்தவர்களுக்கு இருக்க வேண்டுமென்பதை அறிந்து கொண்ட இளஞ்செழியன், ‘என்னைவிட ராணியை அத்தனை முக்கியமாக மதிப்பதற்கு என்ன காரணமிருக்க முடியும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாலும் விடை காணமுடியாமல் தவித்தான்.

ரதம் வேகமாக இரண்டு சாலைகளில் திரும்பி மூன்றாவது சாலையில் ஓட ஆரம்பிக்கவே இனி அனாவசிய சர்ச்சைகளில் ஈடுபடுவதில் அர்த்தமில்லையென்பதை உணர்ந்த இளஞ்செழியன் பாரமாயிருந்த தலையைத் தூக்காமலே மெள்ளப் பக்கவாட்டில் புரண்டு பக்கத்தில் கிடந்த ராணியைக் கவனித்தான். ராணியின் நீலமணிக் கண்கள் நன்றாக விகசித்துக் கிடந்தன. மூன்றாவது ஜாமம் நடந்து கொண்டிருந்ததால் கிளம்பிவிட்ட பின்நிலவுக் கிரணங்கள் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்திருந்த பெரு மரங்களின் கிளைகளின் இடுக்குகள் வழியாக அவ்வப் பொழுது அந்தக் கண்களின்மீது வட்ட வட்டமாக விழுந்ததாலும், ரதமோடிய வேகத்தில் அந்த வட்ட நிலவுக்குழிகள் வேகமாக மாறி மாறிப் பதித்ததாலும் கண்களின் சோபை நூறு மடங்கு அதிகமாகத் தெரிந்தது. அவ்வளவு அழகையும் பெரு மயக்கத்தையும் தந்த அந்தக் கண்கள் தன் கண்களை ஏறிட்டு நோக்கி ஏதோ சேதி சொல்ல முற்பட்டதைக் கண்ட படைத்தலைவன் ராணியின் வாயில் துணியடைக்கப் பட்டிருப்பதைக் கவனித்து, அவள் வாயில் துணியடைத்த வர்கள் தன் வாய்க்கும் அதே தடையை விளைவிக்க முற்படாததன் காரணத்தை ஊகித்துக் கொண்டான். தலையில் பலமாகத் தாக்கப்பட்டுத் தான் சுயநினைவு இழந்துவிட்டதால் நீண்ட நேரம் கூச்சலிட முடியாதென் பதைத் தன்னைத் தாக்கியவர்கள் நிச்சயித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அந்த நிச்சயத்தாலேயே ராணிக்குக் கிடைத்த உபசாரம் தனக்குக் கிடைக்கவில்லையென்றும் தீர்மானித்துக்கொண்ட இளஞ்செழியன், ‘வாயால் சேதி சொல்ல முடியாத ராணி, கண்களால் என்ன சொல்கிறாள்?’ என்பதை அறிய அவள் கண்களைக் கவனித்தான். ராணியின் கண்கள் ஒருமுறை மேற்புறம் நோக்கிப் பிறகு ரதத்தின் பக்க வாட்டையும் பார்த்ததைக் கண்ட படைத்தலைவன் அவள் கண் சென்ற இடங்களில் தன் கண்களையும் ஓடவிட்டான்.

ரதத்தின் அமைப்பு இளஞ்சேட்சென்னியின் பந்தய ரதங்களின் அமைப்பைப் பெற்றிருந்ததையும், யவனர் ரதப் போட்டியில் அது பலமுறை கலந்து கொண்டிருப்பதற்கு அறிகுறிகள் இருந்ததையும் கவனித்த இளஞ்செழியன், இந்த ஒற்றைக் குதிரை ரதத்தில் சரியான புரவி கட்டப்பட்டிருந்தால் அடர்த்தியான தோப்புகளின் வழியாகக்கூட இதை வேகமாகச் செலுத்த முடியும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, ரதத்தை ஓட்டுபவன் யாரென்பதைப் பார்க்க ராணியின் கண்கள் சென்ற திக்கில் தன் கண்களையும் செலுத்தினான். ரதத்தை ஓட்டியவன் யவனர் ரதமோட்டும் பாணியில் நின்று கொண்டே ரதத்தை ஓட்டிக் கொண்டேயிருந்தானானாலும், அவன் உடையிலிருந்தும் அவன் நின்று புரவியின் முகக்கயிறுகளைப் பற்றியிருந்த மாதிரியிலிருந்தும் அவன் தமிழ் நாட்டு வீரன்தானென்பதையும், அதுவும் சேர நாட்டைச் சேர்ந்தவனென்பதையும் புரிந்துகொண்டான் படைத்தலைவன். சாலை இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த அடர்த்தியான மரங்கள் முழுநிலவை உள்விட மறுத்ததால் நிழலும் நிலவும் மாறிமாறி வந்த நிலையிலிருந்த ரதத்திலிருந்து அதிகப்படி தகவல்களைப் படைத்தலைவனால் உணர முடியவில்லையென்றாலும், முன்னும் பின்னும் ஓடிய குதிரை களின் குளம்படிச் சத்தங்களால் சரியான காவலுடனேயே தாங்கள் கொண்டு செல்லப்படுவதை மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது.

‘இவ்வளவு பலமான காவலுடன் செல்லும்போது தப்ப முடியாது. அப்படியிருக்க ராணி எதற்காக ரதத்தின் பக்கத்தில் தன் கண்களை ஓட்டினாள்?’ என்று எண்ணிய படைத் தலைவன் அந்தப் பக்கத்திலும் தன் கண்களைத் திருப்பி ராணியினுடைய பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டான். ரதத்திலிருக்கும் இருவரும் தப்புவது எந்த விதத்திலும் சாத்தியமல்ல என்ற உறுதியில் ரதமோட்டிய வீரன் தன் வாளை ரதத்தின் பக்கவாட்டில் செருகியிருந்தான். ரதமோட்டுபவன் நிராயுதபாணி என்பதை வலியுறுத்தவே ராணி அந்தப் பகுதியில் தன்னைப் பார்க்கச் செய்தாளென்பதை இளஞ்செழியன் அறிந்து கொண்டாலும், ‘இவன் நிராயுதபாணியாயிருப்பதால் நமக்கு என்ன பயன்?’ என்று யோசித்தான்.

ஏதேதோ யோசித்துப் பார்த்தும் தப்ப எந்த வழியும் தோன்றவில்லை படைத்தலைவனுக்கு. முன்னே நான்கு வீரர் களும் பின்னே நான்கு வீரர்களும் வேகமாக வந்து கொண் டிருக்க இந்த ரதத்திலிருந்து எப்படித் தப்ப முடியும் என்பது அடியோடு புரியாவிட்டாலும் ஏதாவது சந்தர்ப்பம் அகப்படுமா என்று மட்டும் கண் குத்திப் பாம்புபோல் ரதமோட்டியைக் கவனித்துக்கொண்டேயிருந்த இளஞ்செழியனைக் கவனித்த ராணியின் கண்களில் சாந்தி நிலவியது. நிலைமை நெருக்கடியாகும்போது, படைத் தலைவன் முகம் மந்தப்பட்டுக் கண்களும் மங்குவதுபோல் தோன்றும். அந்தப் பார்வை, படைத்தலைவன் வதனத்தில் பூரணமாகப் படர்ந்து கிடந்ததைக் கவனித்த ராணி, ‘இதே பார்வைதான் அன்று புகாரின் மாளிகையில் யவன வீரர்கள் இவரைச் சூழ்ந்து கொண்டபோதும் இருந்தது. ஆகவே விமோசனத்துக்கு வழி கண்டிப்பாய் இருக்கும்’ என்று தன்னைத் தைரியமும் படுத்திக் கொண்டாள்.

ரதம் அந்த நெடுஞ்சாலையில் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஓரிரு மடிப்புகளில் சக்கரம் எழுந்து விழும் சப்தத்தையும், ரதத்தின் புரவியும் காவல் வீரர் புரவிகளும் ஓடியதால் ஏற்பட்ட குளம்படி ஒலிகளையும் தவிர வேறு ஒலிகள் இல்லாத அந்த இரவில் மூன்றாம் ஜாமத்தில் சாலை ஓவென்று பயங்கரமாகவே இருந்தது.

சாதாரணமாக நல்ல காற்று வீசும் சாலை மரங்கள் கூட ரதத்தில் போகும் இருவர் கதி என்ன ஆகுமோ என்ற திகிலால் உற்றுப் பார்த்துக்கொண்டு சலனமற்று நின்றனவேயொழிய, ராணியொருத்தி போகிறாளே என்று மதித்து ஆலவட்டம் வீசக்கூட முற்படவில்லை. அத்தனை நிசப்த இரவில் அந்த நீள் சாலையில் ஓடிய அந்த ஒற்றைப் புரவி ரதத்தை ஓட்டிய வீரன்கூட, இனி அஞ்ச வேண்டிய அவசியமில்லையென்ற துணிவினால் ஒருமுறை ரதத்தில் கட்டுண்டு கிடந்தவர்களைப் பார்த்தான். சிறைப்பட்ட இருவரும் பிணம்போல் கிடப்பதைக் கண்டு திருப்தியுடன் புன்முறுவல் செய்துகொண்ட அந்த வீரன், குதிரையின் கடிவாளக் கயிறுகளைச் சற்று எடுப்பாயிருந்த ரதத்தின் முகப்பின் உட்புறத்தில் அழுத்திச் செருகவே அந்தக் கயிறுகளின் நுனிகள் படுத்துக் கிடந்த இளஞ்செழியன் முகத்தருகே தொங்கின. அப்படித் தொங்கிய கயிற்று நுனிகள் முகத்தைத் தடவியதுமே அதுவரை காணாத பெரும் சாந்தி படைத் தலைவன் முகத்திலே படர்ந்ததைக் கண்ணை அரைவாசி திறந்து கொண்ட ராணி கவனித்தாள்.
கடிவாளக் கயிறுகளை ரதத்தின் உட்புறத்தில் செருகிய பின்பு ரதமோட்டிய வீரன் ரதத்தின் முகப்பில் நன்றாகச் சாய்ந்துகொண்டு தன் இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டான். இரு கால்களை மட்டுமே ஏர்க்காலில் ஊன்றிக் கையைக்கூடப் பிடிக்காமல் வெகுவேகமாகச் செல்லும் பந்தய ரதத்தில் நிற்கக் கூடியவன் சாமானிய வீரனாக இருக்க முடியாதென்பதைப் புரிந்துகொண்ட படைத்தலைவன் பக்கத்திலிருந்த ராணியை அருகில் நகரும்படி சைகை செய்தான். ராணி ஓசைப்படாமல் கடலில் அசையும் வாளை மீனைப்போல் மிக மிருதுவாக அசைந்து அருகில் வந்தாள். இளஞ்செழியன் மெள்ள மல்லாந்தவாக்கிலிருந்து குப்புறப் புரண்டு அவள் வாயிலடைக்கப்பட்டிருந்த துணியைத் தன் பற்களால் மெள்ளக் கடித்து இழுத்து வெளியே தள்ளிவிட்டு அவளையும் குப்புறப் படுக்கும்படி ஜாடை காட்டினான். அவன் கட்டளைப்படி ராணி படுத்ததும் இளஞ்செழியன் மெல்லத் தலைநிமிர்த்தித் தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த ரதமோட்டியையும் பார்த்து முன்னே பிரிந்த சாலையையும் கவனித்தான். சாலை சற்றுத் தூரத்தில் வலப் பக்கத்தில் திரும்புவதையும் இடது பக்கம் சரிவாகப் பள்ளமாக இருந்ததையும் பார்த்த இளஞ்செழியன் நடவடிக்கைக்குத் தயாராகி, மெள்ளத் தலையை மட்டுமன்றி முழங்கால்களை ஊன்றி உடலையும் சிறிது நிமிர்த்திக் கொண்டான்.

ரதத்துக்குப் பின்னால் காவல் புரிந்து வந்த வீரர்கள் மட்டும் சற்று எச்சரிக்கையாயிருந்திருந்தால் இளஞ்செழியன் உடல் நிமிர்ந்ததைக் கவனித்திருக்கலாம். ஆனால் கருவூரை விட்டுக் கிளம்பிய ஒன்றரை ஜாம காலத்தில் சாதிக்க முடியாத எதையும் அதற்குமேல் படைத்தலைவன் சாதிக்க முடியா தென்ற உறுதியாலும், முன்னாலும் பின்னாலும் ஆயுதம் தரித்த காவலிருக்கையில் கைகள் கட்டுண்ட ஒருவன் ஏதும் செய்ய முடியாதென்ற நினைப்பாலும், பின் வந்த காவலர் சிரித்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டே வந்ததால் படைத்தலைவன் செய்கை எதையும் அவர்களால் கவனிக்க முடியாமல் போயிற்று. அவர்கள் கவனித்தபோது காரியம் தலைமிஞ்சிப் போய்விட்டது.

சாலையின் திருப்பம் வந்து வலது புறத்தில் ரதம் சுழல் வதற்கும் இளஞ்செழியன் தலையைத் தூக்கித் திடீரென்று ரதமோட்டியைப் பின்பக்கத்தில் பலமாக முட்டி இடப் பக்கச் சரிவில் உருட்டி விடுவதற்கும் பட்டுக் கத்தரித்தது போல் நேரம் திட்டமாக வகுக்கப்பட்டதாலும், ‘ஐயோ’ என்ற பேரிரைச்சலுடன் ரதமோட்டி சரிவில் உருண்டதால் திகைத்த பின்காவலர் அவனைக் கவனிக்கச் சரிவில் ஓட்டுக்குக் குதிரைகளை நடத்தியதாலும் கிடைத்த இடைவேளையில் ரதப் புரவியின் கடிவாளக் கயிறுகளை உட்புறத்திலிருந்து பற்களால் கடித்துக்கொண்ட படைத்தலைவன் கையால் ரதமோட்டும் வேகத்தில் வாயாலும் கயிறுகளை அசைத்து ஓட்டவே புரவி கனவேகத்தில் பறந்தது. பின்னால் கேட்ட அலறலால் திடீரெனத் திரும்பிய முன்காவலரின் குதிரைகள் நிதானப்படுவதற்குள் இளஞ்செழியன் ரதப் புரவி காவலர் வரிசையில் பாய்ந்து ஊடுருவிச் சென்று விட்டதால், பின்னால் விரைந்த காவலர்களின் புரவிகளும் முன்காவலர் புரவிகளும் மோதிக் கொண்டன. அந்தக் குழப்பம் ஏற்பட்ட இடை நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இளஞ்செழியன் சாலையைவிட்டு மாறி, பக்கத்தில் அடர்த்தியாயிருந்த தோட்டத்துக்குள்ளே ரதத்தைச் செலுத்தினான்.

பல்லால் கடிவாளக் கயிறுகளை பற்றி ஓட்டி, அவன் கண்களால் செய்த ஜாடையைக் கண்ட ராணியும் ரதத்தில் ஊர்ந்து மெள்ள நிமிர்ந்து படைத்தலைவன் கைக் கட்டுக் களைப் பற்களால் கடித்து இழுத்து அவிழ்த்தாள். அவன் பாதக் கட்டுகளையும் தன் பற்களால் கடிக்கப்போன ராணியைத் தடுத்த இளஞ்செழியன், “வேண்டாம் ராணி, காலில் உன் உதடுகள் படவேண்டாம்” என்றான்.

“அதுதான் என் பாக்கியம் பிரபு! தடுக்காதீர்கள்” என்று சொல்லிக் கொண்டே ராணி அவன் காற்கட்டுகளையும் பற்களால் மெள்ள மெள்ள ஏதோ ஒரு பெரும் கடமையைப் புரிபவள்போல அவிழ்த்து எடுத்தாள். கையும் காலும் சுதந்திர மடைந்துவிட்ட படைத்தலைவனுக்கு ஒரு கையால் ரதத்தைச் செலுத்திக்கொண்டே இன்னொரு கையால் ராணியின் கட்டுகளை அவிழ்ப்பது ஒரு பிரமாதமான காரியமல்ல அல்லவா! ராணியின் கட்டுகளும் சீக்கிரமே அவிழ்க்கப்பட்டுச் சுதந்திர மடைந்தாலும் அவர்களைப் பின்னால் துரத்தி வந்த குதிரை வீரர்கள் அவர்கள் சுதந்திரம் எந்த நேரத்திலும் பாதிக்கப்படலாம் என்பதை வலியுறுத்தினார்கள். கை சுவாதீனப்பட்டு விட்டதாலும் எப்பொழுதும் ஆபத்து வந்தால் உற்சாகப்படக் கூடிய இதயத்தாலும், பந்தய ரதங்களை ஓட்டி யவனர்களையே வெற்றி கொண்டதால் உள்ளூர இருந்த பெருமிதத்தாலும் அந்த ஒற்றைப் புரவி ரதத்தைத் தோட்டமரங்களின் குறுகிய பாதைகளில் ஏதோ மந்திரவாதிபோல வளைத்து வளைத்து ஓட்டினான், இளஞ்செழியன். மந்திரத்தால் சுழல்வதுபோல் தோட்டத்தில் சிறு பாதைகளிலும் பறந்து சென்ற ரதம் பலமுறை மரங்களில் பட்டுப் பட்டு தூளாகி விடும் போலிருந்தாலும், மயிரிழையில் விலகிச் சென்று கொண்டிருந்ததைக் கண்ட ராணி இளஞ்செழியன் கையில் புரவி இஷ்டப்படி திரும்புவதை நினைத்து ஆச்சரியப்பட்டு, ‘இவர் சென்ற பிறவியில் யவனரோ!’ என்று நினைத்து மகிழ்ச்சி கொண்டு பின்புறமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

கடிவாளக் கயிறும் புரவியும் கையில் சிக்கியதும் இளஞ் செழியன் உலகத்தையே மறந்தான். எதிரே தன் கை வண்ணத் தால் அம்புபோல் பறக்கும் புரவி, பக்கத்தே சக்கரங்கள் குறுக்குச் சட்டங்கள் தெரியாமல் சுழலும் விந்தை, பின்னே ரதம் எழுப்பி, துரத்தி வருபவர்களுக்கும் தனக்கும் இடையே இட்ட பெரும் புழுதித்திரை, மேலே இத்தனையையும் பார்த்து நகைத்த விண்மீன்கள், வெண்ணிலவு-இவற்றையெல்லாம் கவனித்து, வானவெளியில் ரதமோட்டும் தேவன்போல் அலட்சியமாகப் புரவியைத் தூண்டினான் இளஞ்செழியன்.

ரதத்தின் வேகத்துக்கு இணையாக வர முடியாவிட்டாலும் துரத்தி வந்தவர்கள் ரதத்தைக் கண்பார்வையில் வைத்துக் கொண்டே தொடர்ந்தனர். இளஞ்செழியனும் அவர்கள் தொடருவதை நன்றாக உணர்ந்து கொண்டு அக்கம் பக்கத்தையும் சாலை சென்ற வழியையும் பார்த்தான். கருவூரி லிருந்து ரதம் வெகுதூரம் வந்து விட்டதையும், தானிருப்பது அநேகமாகச் சோழ நாட்டு எல்லையே என்பதையும் தீர்மானித்துக் கொண்ட படைத்தலைவன் தூரத்தே தெரிந்த தென்னந்தோப்பையும் அதற்குமேல் காட்சியளித்த வான விளிம்பையும் பார்த்தான். அக்கம் பக்கத்திலிருந்த சோலை களையும் தூரத்தே தெரிந்த மாட மாளிகைகளையும் கவனித்து உறையூரின் எல்லையைத் தான் அடைந்து விட்டதையும் புரிந்து கொண்டான்.

இதற்குப் பிறகு திட்டமிடுவது மிகச் சுலபமாகி விட்டது இளஞ்செழியனுக்கு. இளஞ்சேட் சென்னிக்கு அடுத்தபடி ரதங்களைச் செலுத்துவதில் இணையற்றவனென்று பெய ரெடுத்த இளஞ்செழியன், ரதத்தின் புரவியின் காதில் படும் படியாக ஏதோ வார்த்தைகளைக் கூறிக்கொண்டே ரதத்தைச் செலுத்தியபடி கடிவாளக் கயிற்றை இறுக்கி ரதத்தின் முகப்பில் கட்டிவிட்டு, ரதம் ஒரு மூலையில் திரும்புகையில் சட்டென்று ராணியை அணைத்துக் கொண்டு ரதத்தின் பக்கவாட்டில் விழுந்து புரண்டு ஒரு புறமாக அவளை இழுத்துக்கொண்டு பதுங்கினான். ரதம் வெகு வேகமாகத் தோப்பைக் கடந்து உறையூரின் பெருஞ்சாலையை நோக்கிப் பாய்ந்து சென்றது. அதைத் துரத்திக் கொண்டு வீரர்களும் குதிரைகளை வேகமாகச் செலுத்திச் சென்றனர்.

குதிரைகள் கண்ணுக்கு மறைந்ததும் இளஞ்செழியன் எழுந்திருந்து ராணியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு தோப்பின் நிழலில் நடந்து சென்று தூரத்தே தெரிந்த சில விடுதிகளை அணுகினான். “ராணி! பத்திரமான இடத்துக்கு வந்துவிட்டோம், பயப்படாதே” என்று தைரியம் கூறிய படைத்தலைவன், அவள் கையைப் பற்றிய வண்ணமே சென்று எதிரே தெரிந்த வீதியை அணுகி ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.

“யார் அது?” என்று மென்மையான பெண் குரலொன்று உள்ளிருந்து கேட்டது.

“நான்தான்” என்றான் இளஞ்செழியன். உள்ளே யாரோ ஆச்சரியத்தால் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டதுபோல் காதில் விழுந்தது ராணிக்கு. கதவும் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டது. “வாருங்கள்” என்று அழைத்தாள் ஒரு பெண்.
பேசாமல் படைத்தலைவனுடன் உள்ளே நுழைந்த ராணி அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தாள். தலையில் சுருண்டு தொங்கிய கருங்குழலுடன் சந்திரனைப் பழிக்கும் அழகைப் பெற்ற அந்தப் பெண்ணின் கண்களில் படைத்தலைவனைக் கண்டதும் அன்பு ஆறாகப் பெருகுவதைக் கவனித்த ராணியின் உள்ளத்தில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.

“படைத்தலைவருக்கு இன்னும் எத்தனை அழகான பெண்களின் நேசம் உண்டு?” என்று உள்ளுக்குள் எண்ணிச் சீறினாள் ராணி.

அந்தச் சீற்றத்தை அந்த அழகி பன்மடங்காக விசிறத் தொடங்கி, படைத்தலைவனை ஆசை ததும்பும் கண்களுடன் நோக்கி, கையிலிருந்த விளக்கையும் ஒருபுறம் வைத்தாள். “என் வீடு இப்பொழுதுதான் உங்களுக்கு அடையாளம் தெரிந்ததா?” என்று கெஞ்சிய அந்தப் பாவையின் செவ்விய இதழ்கள் புன்முறுவலால் விகசித்தன. மிகச் சுதந்திரமாகப் படைத்தலைவன் கையைத் தன் கையில் கோத்துக்கொண்டு ராணியைக் கவனியாமலே உள்ளே நடந்து சென்றாள் அந்த அழகி.

உள்ளே செல்லும்போது இளஞ்செழியனும் அந்த இள மங்கையும் சிரித்துப் பேசிக் கொண்டது ராணியின் கோபத்தை உச்சநிலைக்குக் கொண்டுபோனதன்றி, அந்தப் பெண் படைத்தலைவனை நோக்கிக் கேட்ட கேள்வி ராணியை அடியோடு அதிரவைத்தது. அதைக்கூடப் பொறுத்துக் கொண்டாள் ராணி ஓரளவு. ஆனால் படைத் தலைவன் அவளுக்குச் சொன்ன பதில் சே! சே! வெட்கக் கேடு! அவள் உயிரையே அழித்துவிடும் போலிருந்தது!

Previous articleYavana Rani Part 1 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here