Home Sandilyan Yavana Rani Part 1 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

116
0
Yavana Rani Part 1 Ch33 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch33 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 33 குங்கும பந்தமும், ரத்த பந்தமும்

Yavana Rani Part 1 Ch33 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

தரையில் தங்க நாணயங்கள் விசிறினால் ஏற்படும் இன்ப நாதத்துக்கிணையாக சற்று பலமாகவே கலகலவெனச் சிரிப்பொலியை உதிரவிட்டதன்றி, மிகவும் சுதந்திரமாகப் படைத் தலைவன் கையையும் பற்றி, உள்ளே அழைத்துச் சென்ற அந்தக் கருங்குழற் காரிகையை உட்கூடத்தில் நன்றாக ஏறெடுத்துப் பார்த்த யவன ராணி அழகில் அவள் பூவழகிக்கு ஈடாக மாட்டாளென்றும் எந்த ஆடவன் மனத்தையும் வசீகரிக்கும் சுருட்டை மயிரும் சுந்தர வதனமும் பளீரென்று மின்னும் கண்களும் அவளுக்கு இருந்ததைக் கவனித்து, படைத்தலைவன் அவளிடம் மனத்தைப் பறிகொடுத்தால் அதில் வியப்பேதுமில்லையென்றே நினைத்தாள். நாணங்கலந்திருந்த போதிலும் அந்தப் பெண்ணின் நடையில் ஒரு அலட்சியமிருந்ததையும், அந்த அலட்சியத்தின் காரணமாகச் சிற்றிடை சற்று வேகமாகவே அசையவே, இதர அங்க லாவண்யங்களும் கவர்ச்சி தரும் முறையில் இயங்கியதையும் கண்ட ராணி இந்தப் பெண்ணிடமிருந்தும் ஆண்களின் ஆசைக் கண்கள் தப்ப முடியாதென்பதை உணர்ந்து கொண்டாளாகையால், அந்தப் பெண்ணிடம் படைத்தலைவன் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அவளுக்கு அடியோடு கசக்கவே செய்தது. ஆனால் யவன ராணியைச் சற்றும் திரும்பிப் பார்க்காமலும் அவன் மனக் கசப்பையோ முக வெறுப்பையோ சிறிதும் கவனிக்காமலும் ஒருவரையொருவர் மட்டும் பார்த்துக் கொண்டு உட்கூடத்தில் நின்றுவிட்ட படைத்தலைவனும் அந்தப் பெண்ணும் எதையோ எண்ணித் திடீரென நகைத்தனர்.
படைத்தலைவன் சிரித்ததன் காரணத்தைப் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாதவள் போல நடித்த அந்தப் பெண், “எதற்காக நகைக்கிறீர்கள்?” என்று வினவி வெட்கத் துடன் அவனைப் பார்த்தாள்.

“நீ எதற்காக நகைத்தாய் அல்லி? அதற்கு முதலில் காரணத்தைச் சொல்” என்றான் படைத்தலைவன் மீண்டும் நகைத்துக் கொண்டே.

“உங்கள் கைகளைப் பார்த்தேன். சிரிப்பு வந்தது” என்றாள் அல்லி.

“கன்னத்தைப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையோ?” என்று படைத்தலைவன் கேட்டான்.

யவனராணியின் இதயம் இந்தக் கேள்வி பதில்களால் எரிமலையாகிக் கொண்டிருந்தாலும், அதைப்பற்றிச் சிறிதும் கவனிக்காமலே இருவரும் பேச்சைத் தொடர்ந்தார்கள். அல்லியின் அடுத்த வார்த்தைகளைக் கேட்டு அடியோடு ஸ்தம்பித்துப்போன யவன ராணி, ‘இப்படியொரு வெட்கம் கெட்டவள் இருப்பாளா?’ என்று தனக்குள்ளே வியந்து கொண்டாள்.

“கன்னத்தைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வராது படைத்தலைவரே! அதைப் பார்த்துச் சிரிக்க வேறொருத்தி இருக்கிறாள். முதலில் என்னை உங்கள் கைகளில் தூக்கிக் கொள்ளுங்கள். என்னைப் பிடித்துத் தூக்கி நீண்ட நாளாகி விட்டதே!” என்ற அல்லி மீண்டும் நகைக்கத் தொடங்கி தன் முத்துப் பற்களைக் காட்டினாள்.
அல்லியின் பேச்சும் சிரிப்பும்தான் வெட்கம் கெட் டிருந்ததென்றால் அதைவிட மோசமாகப் பதில் சொன்ன படைத்தலைவனைக் கண்ட யவனராணிக்கு அவனை அந்த இடத்திலேயே கொன்று போட்டுவிடலாம் போலிருந்தது.

“கையில் தூக்கிக் கொள்கிறேன் அல்லி. ஆனால் நீ நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளவில்லையே” என்றான் படைத்தலைவன்.

“குங்குமப் பொட்டு அவசியம் வேண்டுமா?” என்று அல்லி ஏதும் புரியாதது போல் வினவினாள்.

“அவசியம் வேண்டும் அல்லி. அப்பொழுதுதானே உன் முகத்தில் நான் கன்னத்தை இழைக்க முடியும்?” என்றான் படைத்தலைவன்.

இத்தனை தூரம் எவ்வளவோ சங்கடத்துக்கிடையில் சம்பாஷணையைப் பொறுத்துக் கொண்டிருந்த யவனராணி, பொறுமையைச் சரேலென்று கைவிட்டுத் தன் அழகிய காலைத் தரையில் உதைத்து, “படைத்தலைவரே, உங்கள் சரச சல்லாபத்துக்குச் சாட்சி அவசியமாயிருந்தால் வேறு யாரை யாவது பாருங்கள். அவள்தான் வெட்கம் கெட்டு உளறுகிறா ளென்றால் நீங்களுமா மட்டு மரியாதை, மதி அனைத்தையும் காற்றில் பறக்க விட்டீர்கள்” என்று சீறினாள்.

அப்பொழுதுதான் ராணி தன்னுடன் வந்திருப்பதை நினைவு படுத்திக்கொண்ட படைத்தலைவன் ஒரு நிதானத் துக்கு வந்து, “மன்னிக்க வேண்டும் ராணி; அல்லியைப் பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. ஆகையால் சற்று விளையாடினேன்” என்றான்.

ராணியின் செவ்விய இதழ்கள் ஒரு ஓரத்தில் மடிந்து இகழ்ச்சி நகை புரிந்ததல்லாமல் அடுத்து வந்த அவள் சொற் களிலும் இகழ்ச்சி ஒலி பூரணமாகத் தொனித்தது. “விளை யாட்டா படைத்தலைவரே! விந்தையான விளையாட்டுதான். நெறியுடனிருப்பவர்கள் விளையாட வேண்டிய முறை தானிது!” என்று கடிந்துகொண்ட ராணி, படைத்தலைவனை நோக்கி வெறுப்பு நிரம்பிய பார்வையொன்றையும் வீசினாள்.

“இது அண்ணன் தங்கை விளையாட்டு ராணி! தவறாக நினைக்காதே” என்றான் படைத்தலைவன்.

“அண்ணன் தங்கை விளையாட்டா படைத் தலைவரே!”

“ஆம் ராணி!”

“நீங்கள் அண்ணன்…!”

“ஆம்.”

“அவள் தங்கை.”

“சந்தேகமென்ன!”

“சந்தேகமில்லை, படைத்தலைவரே! சந்தேகமே யில்லை. தெளிவாயிருக்கிறது. மிகத் தெளிவாயிருக்கிறது.”

“எது ராணி?”

‘அண்ணன் தங்கை விளையாட்டு முறை. இவள் குங்குமப் பொட்டு இட்டு வருவாள். நீங்கள் இவளைக் கைகளில் தூக்கிக்கொள்வீர்கள். உங்கள் கன்னத்தில் அவள் முகத்தை இழைப்பாள்…” இதயம் படபடவென்று அடித்துக் கொண்டதாலும் உணர்ச்சிகளின் வேகத்தில், சொல்லும் வாயிலிருந்து வெளிவர மறுத்ததாலும் மீதி சொல்ல வேண்டியதைக் கண்களாலேயே ராணி சொன்னாள்.

ராணியின் உணர்ச்சிகளின் வேகத்துக்குக் காரணத்தை அறிந்த அல்லி, அவளை விந்தை விளையாடிய விழிகளுடன் நோக்கிப் படைத்தலைவனையும் பார்த்தாள். “இவள்தான் யவன ராணியா படைத்தலைவரே?” என்றும் கேட்டாள்.

“ஆம் அல்லி, இவள்தான். இந்த ராணியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? இவள் தமிழகத்தில் கால் வைத்துப் பத்து நாட்கள் கூட ஆகவில்லையே,” என்றான் படைத்தலைவன்.

“நாட்கள் ஆகாவிட்டாலும் இங்கு நாடாள வந்திருக்கும் ராணியைப்பற்றி உறையூரே பேசுகிறது படைத்தலைவரே” என்றாள் அல்லி பதிலுக்கு.

“அப்படியா?”

“ஆம். இந்த ராணியைக் கண்டு இருங்கோவேளே அஞ்சுவதாகவும், இவளைப் பிடித்து வரவே அவன் கருவூர் போனதாகவும் ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள்.”
“அப்படியா! அதிருக்கட்டும். இவள்தான் யவன ராணி என்பது உனக்கெப்படித் தெரியும்? தமிழகத்தில் யவன மங்கையர் பலர் இருக்கிறார்களே!”

“இருக்கலாம். ஆனால் அதோ அந்த அன்னப் பறவை ஆபரணத்தை அணிந்தவர்கள் யாரும் இருக்க முடியாதாம்.”

“இதுவும் ஊரில் புரளியா!”

“புரளியோ என்னவோ தெரியாது. ஆனால் இந்த ஆபரணத்துடன் இவள் பட்டனத்துள் நுழைந்தால் இவளைச் சிறை செய்யச் சோழ வீரர்களுக்கு உத்தரவிருக்கிறது. இதைப் பற்றி என் தந்தையே சொன்னார்” என்று அல்லி கூறினாள்.

படைத்தலைவன் கைகளிரண்டையும் மார்பில் கட்டிக் கொண்டு நீண்ட நேரம் அந்த உட்கூடத்தில் உலாவினான். வாயிலிலிருந்து கொண்டுவந்து உட்கூடத்தில் வைத்த விளக் கொளியில் அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய அல்லி, படைத்தலைவன் பெரும் கவலையால் பீடிக்கப்பட்டிருக்கிறா னென்பதை உணர்ந்து கொண்டாலும், ‘இத்தனை அக்கறை இந்த ராணிமீது எதற்குப் படைத்தலைவருக்கு?’ என்ற நினைப்பில் ராணியின்மீதும் கண்களை நாட்டி ராணியின் இணையற்ற எழிலைப் பார்த்து, ‘காரணம் புரிகிறது புரிகிறது’ என்று மனத்துக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.

ராணியின் மனத்தில் மட்டும் அடுத்துவரும் ஆபத்தைப் பற்றிக் கவலை சிறிதுமில்லாததால், ‘இந்தப் பெண் யார்? இவளுடன் சரசம் பேசிவிட்டு இவளைத் தங்கை முறை கொண்டாடுகிறாரே படைத்தலைவர்’ என்ற எண்ணங்களே ஓங்கி நின்றதன் விளைவாக அவள் படைத்தலைவரை நோக்கித் திட்டமான கேள்வியொன்றை வீசினாள். “இவள் யார்? இவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.”

ராணியின் கேள்வியில் தொனித்த கடுமையின் காரண மாக, படைத்தலைவன் ஆழ்ந்த யோசனையிலிருந்து சற்றே மீண்டு, “அதைப்பற்றிச் சிந்திக்க இப்பொழுது அவசியமில்லை ராணி. உன்னைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் தற்சமயம் யோசிக்கவேண்டும்” என்று கூறித் தன் குரலிலும் சற்றுக் கடுமையைக் காட்டினான்.

ராணி மிகுந்த சீற்றத்துடன் மீண்டும் சொன்னாள்: “என்னைப் பாதுகாப்பதைப்பற்றிய கவலை வேண்டாம் படைத்தலைவரே! இவள் யார்? முதலில் அதைச் சொல்லுங்கள்.”

“அதுதான் சொன்னேனே. இவள் பெயர் அல்லி. என் தங்கை .”

“உடன் பிறந்தவளா?”

“இல்லை.”

“வளர்ப்புத் தங்கையா?”

“இல்லை.”

“வேறு எப்படித் தங்கை ?”
“சூழ்நிலையால் தங்கையானவள். இவள் தங்கையான தால்தான் என் வாழ்வே நசிந்தது.”

“வாழ்வு வளம் பெற்றது என்று சொல்லுங்கள். இவள் தான் உங்கள் கன்னத்தில் முகத்தை இழைப்பாளே!”

“அதனால் வந்த வினைதான் அனைத்தும்.”

இதைச் சொன்ன படைத்தலைவன் குரலில் வெறுப்பும் வருத்தமும் கலந்திருந்ததை ராணி கவனித்தாள். ஆகவே சீற்றத்தைச் சற்றுக் குறைத்துக் கொண்டு, “விளக்கிச் சொல்லுங்கள்” என்றாள்.

“சொல்கிறேன் ராணி, சொல்கிறேன். அந்தப் பழைய கதையை மீண்டும் சொல்கிறேன்” என்று அலுத்துக்கொண்ட படைத்தலைவன் கூறலானான்:

“இரண்டு வருஷங்களுக்கு முன்பு நடந்த கதை அது ராணி. பூம்புகாரில் வருஷாவருஷம் நடக்கும் இந்திர விழா அன்றும் நடந்தது. அந்த விழாவிலே கலந்துகொள்ள மன்னர் இளஞ்சேட்சென்னி தமது சிறப்பு ரதத்தில் வந்தார். ரதத்தின் பெரும்பகுதி சேரநாட்டு யானைகளின் தந்தத்திலிருந்து கடைந்தெடுத்து, பெரும் இரிசுகள், குடங்கள், ஏர்க்கால்கள், சக்கரங்கள் நீங்கலாக எல்லா இணைப்புக்களுமே தந்தத்தால் செய்த ரதம். அந்த அற்புத ரதத்தைப் பார்க்கவே மக்கள் திரண்டு வருவார்கள். அதன் வெண்ணிறப் புரவிகளைப் பார்க்கவரும் கூட்டத்தை வார்த்தையால் வர்ணிக்க இயலாது. அந்த ரதத்தை மன்னர் இளஞ்சேட்சென்னி செலுத்தினால் அவ்வேகத்தைப் பார்க்க வீரர்கள் கூட்டம் ஏராளமாயிருக்கும். யவனர்கள், சோனகர், வட நாட்டார், குடபுலத்தார் முதலியோர் கலந்து நிற்கும் அந்தக் கூட்டத்தின் இடையே யுள்ள பாதையில் இளஞ்சேட்சென்னி ரதம் காற்றைப்போல் சீறிவரும். அந்த ரதத்தின் புரவிகள் எழுப்பும் புழுதியில் புகாரே மறையும். அத்தனை வேகத்துடன் வரும் ரதத்தை வேடிக்கை பார்த்த பலருள் இந்த அல்லி ஒருத்தி. திடீரென்று கும்பலால் தள்ளப்பட்டு ரதத்தின் பாதையிலே விழுந்தாள். பக்கத்திலே நின்றிருந்த நான் ரதத்துக்குக் குறுக்கே பாய்ந்து அவளை அள்ளித் தூக்கிக் கொண்டு எதிர்ப்பக்கத்தில் உருண்டிருக்கா விட்டால் இன்று அல்லி இங்கு இருக்க மாட்டாள், நகைக்க மாட்டாள், உன் சீற்றத்திற்கும் இலக்காகி இருக்கமாட்டாள். ரதத்துக்கு இந்திர விழாவின் பலியாக அன்றே மாண்டிருப்பாள்…” என்று சொல்லிக் கொண்டே போன படைத்தலைவன் சற்றுக் கதையை நிறுத்தினான்.

படைத்தலைவன் பேசப் பேச நெக்குருகிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கிய அல்லி தனது தழுதழுத்த குரலில் படைத்தலைவன் விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தாள்.

“இளஞ்சேட்சென்னியின் ரத வேகத்தாலும் திடீரென ஏற்பட இருந்த விபத்தாலும் நான் மூர்ச்சையாகிவிட்டேன். படைத்தலைவர் என்னை இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டு என் தந்தை இறங்கியிருந்த இல்லம் சென்றார். என் தலை துவண்டு தொங்கியது. ஆகவே நெற்றியை நிமிர்த்தி தன் கன்னத்தை முட்டுக் கொடுத்தார். என் நெற்றியிலிருந்த குங்குமப் பொட்டு அவர் கன்னத்தில் பதிந்தது. அதன் தூள்கள் மார்பிலும் விழுந்தன. என்னை வீட்டில் தந்தையிடம் ஒப்படைத்த படைத்தலைவர் அவசர அவசரமாகத் தன் முறைப் பெண்ணைப் பார்க்க ஓடினார். ஓடி முறையை இழந்தார். பெண்ணையும் இழந்தார். அதைப் பற்றி பின்னால் சொன்னார். முறைப்பெண் சொன்னதை விவரமாக அப்படியே என்னிடம் சொன்னார். இப்பொழுது அந்த வார்த்தைகளை மறந்து விட்டேன். பூவழகி என்னென்ன கேட்டாள் படைத்தலைவரே?”

“யார் அந்தக் குங்குமக் கன்னி என்றாள். போனது, இந்திர விழாவல்ல, காமன் பண்டிகை என்றாள். கண்ணாடி யில் கன்னத்தைப் பாருங்கள் என்று சீறி உள்ளே சென்றாள்”

என்று சொன்ன படைத்தலைவன், பழைய சம்பவங்கள் கண்முன்னே எழுந்ததால் நெஞ்சில் துக்க அலைகள் கிளம்ப தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டான்.

ராணியை ஏளனச் சிரிப்புடன் ஏறெடுத்துப் பார்த்து அல்லி சொன்னாள்: “கேட்டாயா ராணி! ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து காக்கப்போய் முறைப் பெண்ணின் சீற்றத்துக்கு இலக்கானார். அதை அறிந்த என் நெஞ்சு என்ன பாடு பட்டிருக்கும். எண்ணிப் பார், ராணியாயிருந்தாலும் நீயும் ஒரு பெண்தானே… எண்ணிப் பார் என் இதயக் குமுறலை. இவருக்கு ஆறுதலளித்தேன். நாங்கள் அண்ணன் தங்கையானோம். அதில் ஆறுதல் கண்டோம். நான் சில நாட்களில் தந்தையுடன் இங்கு வந்துவிட்டேன். இருப்பினும் சென்ற இரண்டு வருடங்களில் படைத்தலைவர் பலமுறை இங்கு வந்தார், தங்கையைப் பார்க்க. சில வேளைகளில் அந்தத் துக்கக்கதையை எண்ணி, போயும் போயும் என்னை நினைத்துப் பொறாமை கொண்டாளே அந்த வேளிர் குலப் பாவை, அந்த விந்தையை எண்ணி, இருவரும் நகைப்போம். விளையாடுவோம், அந்தக் கதையைத்தான் இன்றும் பேசினோம். நாங்கள் அதைப்பற்றி மேலுக்கு விளையாடு கிறோம் ராணி. ஆனால், அது விளையாட்டல்ல. அந்த நிகழ்ச்சி படைத்தலைவர் இதயத்தில் கீறிவிட்ட பெரும் வினை. அழிக்க முடியாத பெரும் வேதனை. அதனை நினைத்து மேலுக்கு நகைக்கிறோம், பேசுகிறோம். இப்பொழு தாவது புரிந்துகொள் ராணி. ஆண் பெண் உறவில் ஒரேவித உறவு முறைதான் உண்டு என்ற தவறான எண்ணத்தை நீக்கி விடு.”

ராணியின் கண்களில் மெள்ள மெள்ளச் சீற்றம் மறைந்து அன்பும் பரிதாபமும் மண்டின. அவள் கூடத்தில் நடந்து சென்று அல்லியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “அல்லி! உன்னைத் தவறாக நினைத்து விட்டேன். மன்னித்து விடு. படைத்தலைவர் இதயத்தில் பூவழகி கீறி விட்ட அந்தப் புண்ணை ஆற்ற நானும் பாடுபடுகிறேன். படைத் தலைவருக்கு இனிவரும் காலம் பொற்காலம். அவர் இஷ்டப்பட்டால் பெருவாழ்வும் அரியணையும் அவருக்காகக் காத்திருக்கும்” என்று கூறிவிட்டு, “படைத்தலைவரே! என் ஆபத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; நான் யாரிடத்தும் சிக்க மாட்டேன். யவன குருமார்கள் என் பிற்காலத்தைப் பற்றித் திட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். விதியின் வழியில் மனிதனுடைய பிரயத்தனம் குறுக்கிட்டு எதுவும் செய்ய முடியாது படைத்தலைவரே! கவலை வேண்டாம்” என்று தைரியம் சொன்னாள்.

“மீண்டும் விதி! யவன குருமார்கள் சோதிடம்! இவை தான் உன்னைச் சற்று முன்பு ரதத்திலிருந்து காப்பாற்றினவா?” என்று கடிந்து கொண்டான் படைத்தலைவன்.
“சந்தேகமென்ன படைத்தலைவரே! விதிக்குத் தக்கபடி புத்தி இயங்குகிறது. ஆகையால்தான் உமது புத்தியும் சுறுசுறுப் புடன் வேலை செய்தது. நாம் தப்பினோம்” என்றாள் ராணி.

படைத்தலைவனின் கோபம் உச்சியை அடைந்தாலும், அவன் ஏதும் சொல்லமாட்டாமல் சிறிது நேரம் தவித்தான். ‘விதியாம் விதி. விதியால் என் புத்தி இயங்கியதாம். ஏன், அந்த விதி இவள் புத்தியை இயக்குவதுதானே’ என்று உள்ளுக்குள் ராணியை ஒரு விநாடி சபித்தான். பிறகு, வேறு துறையில் பேச்சைத் திருப்பி, “சரி, சரி, பொழுது புலர இன்னும் சற்று நேரம் இருக்கிறது, அதுவரை இளைப்பாறுவோம்” என்று கூறி அல்லியை நோக்கினான் படைத்தலைவன்.

“ஒரு அறைதான் காலியாயிருக்கிறது படைத்தலைவரே, மற்றொன்றில் வேறொரு விருந்தினர் படுத்திருக்கிறார்” என்றாள்.

“பாதகமில்லை. ஒரு அறை போதும், வா அல்லி” என்று படைத் தவைன் கூற, ராணியையும் படைத்தலைவனையும் அழைத்துக் கொண்டு அல்லி அந்த விடுதியின் மாடிக்குச் சென்று விசாலமான அறையொன்றைக் காட்டினாள். படைத் தலைவன் கட்டளைப்படி அறையிலிருந்த ஒரே மஞ்சத்தில்

ராணி படுத்துக் கொண்டாள். “உங்களுக்கு” என்று வினவிய அல்லிக்கு, “எனக்குப் படுக்கை வேண்டாம் அல்லி. இந்தக் காயத்தைக் கழுவ வேண்டும். கொஞ்சம் நீர் கொண்டுவா” என்றான் படைத்தலைவன்.

அதுவரை தலைக் காயத்தையோ அதிலிருந்து வழிந்து காய்ந்துவிட்டிருந்த ரத்தத்தையோ பார்க்காத அல்லி ரத்தத்தைப் பார்த்ததும் திகிற்பட்டு, கீழே ஓடி நீருடன் வந்து காயத்தைக் கழுவிக் கட்டியதன்றி, ஒருவேளை ராணிக்கும் காயமிருக்குமோ என்று அவளையும் கவனித்தாள். ராணி கன்னத்தில் ரத்தமிருந்தது. ஆனால் அது காயத்திலிருந்து வழிந்த ரத்தமல்ல, படைத் தலைவன் தலை ரத்தம் அவள் கன்னத்தில் இழைத்த ரத்தக் குழம்பு அது என்று புரிந்து கொண்டாள் அல்லி. ராணியின் வெண்மைக் கன்னத்தில் செவேலென்று தெரிந்தது, ரத்தக் குழம்பு. ‘எனக்கும் இவருக்கும் குங்கும பந்தம்! இவருக்கும் அவளுக்கும் ரத்த பந்தம் போலிருக்கிறது!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட அல்லி, ‘இந்த ரத்த பந்தத்தால் என்ன ஆபத்து இவருக்கு விளையப் போகிறதோ?’ என்று உள்ளுக்குள்ளே அச்சப் பட்டாலும், அதை வெளிக்குக் காட்டாமல் படைத் தலைவனையும் இளைப்பாறச் சொல்லிவிட்டுக் கீழே சென்றாள்.

அந்த ரத்த பந்தத்தால் அந்த இரவிலேயே அவள் இல்லத்திலேயே படைத்தலைவனுக்குப் பேராபத்து விளைய இருந்ததை அந்தப் பேதை எப்படி அறிவாள்? அறியாமையால் அவளும் சற்றுப் படுத்தாள். மாடியறையில் ராணியின் மஞ்சத்துக்குப் பக்கத்தில் தரையில் படைத்தலைவனும் படுத்துச் சில வினாடிகளில் கண்களை மூடினான். ஆனால் படுத்த ஒருவன் எழுந்தான். அவன் தான் பக்கத்து அறையிலிருந்த புது விருந்தாளி. மாடித் தாழ்வாரத்தில் காலோசை கேட்டதுமே விழித்துக் கொண்டாலும் தூங்குவதுபோல் பாசாங்கு செய்த அல்லியின் மற்றொரு விருந்தாளி, அல்லியும் கீழே போய், படைத்தலைவனும் படுத்து, வீட்டில் நிசப்தம் உலவியதும் தனது படுக்கையைவிட்டு எழுந்து, அடிமேலடி எடுத்து வைத்து ராணியிருந்த அறைக்கு வந்து அவ்விருவரையும் சில விநாடிகள் உற்றுப் பார்த்தான். பிறகு மீண்டும் தன் அறைக்குச் சென்று நீண்ட வாளுடன் திரும்பி அந்த வாளின் நுனியால் ராணியை மெள்ள இருமுறை தட்டினான். ராணி சட்டென்று விழித்து மஞ்சத்தின் பக்கத்தில் நின்ற அந்த மனிதனை நோக்கினாள். நோக்கிய மறுகணமே அவள் விழிகள் திடீரென மலர்ந்தன. மலர்ந்த அந்த மோகன விழிகளில் விவரிக்க இயலாத உணர்ச்சியொன்றும் வெகு வேகமாகப் படர்ந்தது.

Previous articleYavana Rani Part 1 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here