Home Sandilyan Yavana Rani Part 1 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

71
0
Yavana Rani Part 1 Ch35 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch35 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 35 புனல் வெள்ளத்தில் மோக வெள்ளம்

Yavana Rani Part 1 Ch35 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

உறையூர் எல்லைக் காவலர் வண்டியை நிறுத்திய போதும் சோழப் பேரமைச்சரின் அதிகார ஓலை தன்னிட மிருக்கிறதென்று கூறிய பின்பும் காவலர் அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் வாட்களைக் கொண்டு தன் மார்பைத் தடவியபோதும், ஏன், காவலரில் ஒருவன் வண்டியின் முகப்புத் திரைச்சீலையை அகற்றி, இதோ இருக்கிறாள். இதோ இருக்கிறாள்’ என்று ராணியைச் சுட்டிக்காட்டிக் கூவிய போதும் கூட, சுயநிலையிலிருந்து சிறிதும் பிறழாமலும் நிதானத்தை எள்ளளவும் இழக்காமலும் உட்கார்ந்திருந்த டைபீரியஸ், காவலர் தலைவன் வண்டிக்குப் பின்புறம் சென்று திரைக்குள் தலையை நுழைத்து “உம், இறங்கு கீழே” என்று ராணியை அதட்டியதுமின்றிக் கையையும் பிடித் திழுக்கத் தொடங்கியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளையும் நிதானத்தையும் அடியோடு மறந்து விட்டான். புயலின் ஆரம்பத்தை உணர்ந்த மரங்களின் உச்சிக்கிளைகள் ஆடுவதைப் போல் அவன் கைகள் லேசாக நடுங்கியதன்றிக் கோபம் உள்ளூர கொந்தளிக்கத் தொடங்கி விட்டதை நிரூபிக்க முகத்திலும் ரத்தம் குபீரென்று பாய்ந்து வெளேரென்ற அவன் முகத்தைச் செக்கர்வானமாக அடித்தது. டைபீரியஸின் கூரிய பெரும் விழிகளும் எதிரே வாட்களை உருவி நின்ற எல்லைப்புறக் காவலர்களை நோக்கிப் பயங்கரமாகச் சுழன்றன. அந்த நேரத்திலும் புரவிகள் கடிவாளக் கயிறுகள் தன் கைவசமேயிருப்பதையும், அவற்றைப் பறித்துக் கொள்ளாமலே சோழ வீரர்கள் தங்கள் அலுவலில் கவனமாயிருப்பதையும் உணர்ந்த டைபீரியஸ், அந்தக் கடிவாளக் கயிறுகளை ஒருமுறை தளர்த்தி இழுத்தால் புரவிகள் எதிரே நின்றிருக்கும் வீரர்களைச் சிறிது விழச் செய்து ஊடுருவிச் சென்றுவிடுமென்பதையும் ஊகித்துக் கொண்டானாகையால், வண்டிக்குப் பின்புறம் சென்று, அநாகரிகமாகத் திரைக்குள் தலையிட்ட காவலர் தலைவனுக்கு அவன் ஜன்மத்தில் அனுபவித்திராத படிப்பினையும் அளிக்கலா மென்ற உறுதியுடன் கடிவாளக் கயிறுகளைக் கையில் சற்று இறுக்கியும் பிடித்தான். சாதாரண சமயத்தில் அவன் திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேறியிருக்கும். ஆனால் ராணியை எந்தக் காரணத்தைக் கொண்டும் கைநழுவ விடக் கூடாதென்ற கண்டிப்பான உத்தரவைப் பெற்றிருந்த குதிரை வீரர்களில் ஒருவன், டைபீரியஸின் முகபாவங்களையும் அவனுடைய கைவிரல்கள் கடிவாளக் கயிறுகளைச் சற்றே இறுக்கிப் பிடித்ததையும் கண்டு விட்டானாகையால், தன் வாளை அவன் மார்பில் பலமாகவே அழுத்தி, “புரவிகளை விரட்டும் முயற்சி பலிக்காது யவன வீரரே! உமது கை விரல்கள் இன்னும் ஒருமுறை கயிறுகளை இறுக்கிப் பிடித்தால் என் வாள் தயை தாட்சண்யமின்றி உமது இதய ரத்தத்தைக் குடித்துவிடும்” என்று எச்சரித்ததுமல்லாமல், இன்னொரு வீரனைப் புரவியிருந்த கடிவாளக் கயிறுகளைப் பறித்துக் கொள்ளுமாறும் பணித்தான். அந்தக் கட்டளைப்படியே எல்லைப்புறக் காவலனொருவன் டைபீரியஸின் கையிலிருந்த கடிவாளக் கயிறுகளையும் அகற்றி விடவே சிறகிழந்த பட்சியைப் போலத் தவித்த யவனர் கடற்படைத்தலைவன் ராணியின் கதி அதோகதிதான் என்ற முடிவுக்கு வந்த தல்லாமல், தன்னைப் போன்ற கடற்படைத்தலைவனுக் கெதிரில் யவன ராணியொருத்தி, பிறரால் சிறைப்படுவதால், அதைவிடப் பெருத்த அவமானம் தனக்கு நேரிட முடியா தென்பதையும் அறிந்து மனம் வெதும்பிக் கலங்கினான். எந்தச் சமயத்திலும் எதிரிகளிடமிருந்து தப்ப ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிக்கும் ஆற்றல் வாய்ந்த இளஞ்செழியன் எதற்காக எதுவும் பேசாமலும், சிறிதும் அசையாமலும் இடித்த புளிபோல் வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறான் என்று சோழர் படை உபதலைவனைச் சபிக்கவும் தொடங்கினான் டைபீரியஸ்.

டைபீரியஸின் இந்த மனச் சஞ்சலத்தையோ, காவல் வீரர்களின் துராக்ருதச் செயலையோ சிறிதும் கவனிக்காமல் வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்த இளஞ்செழியனின் செயலற்ற நிலையைக் கண்டு வெகுண்ட டைபீரியஸ், சோழர்படை உபதலைவனால் தனக்கோ ராணிக்கோ அந்தச் சமயத்தில் எந்தவித உதவியும் கிடைக்காதென்ற தீர்மானத்துக்கு வந்தான். அவன் தீர்மானம் சரியென்பதை உணர்த்த ஏற்பட்ட அடுத்த நிகழ்ச்சி ஒருபுறம் டைபீரியஸுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொரு புறம் விவரிக்க இயலா வியப்பும் அளித்தது. ராணியைப் பிடித்திழுத்துக் கீழே இறக்கத் திரைச்சீலைக்குள் தலையை நுழைத்த காவலர் தலைவன் ஒருகணம் ஏதோ சிந்தித்துவிட்டு, வண்டிக்குள் ஏறிக்கொண்டு சிறிது நேரத்துக்கெல்லாம் வண்டியின் முன்புறத் திரைச் சீலையை விலக்கித் தலையை வெளியே நீட்டி வண்டியை மறித்து நின்ற குதிரைக் காவலரை நோக்கி, “டேய்! இவரிடம் ஏதோ ஓலையிருப்பதாகச் சொன்னாரே அதை வாங்கிப் படியுங்கள்” என்று உத்தரவிட்டான்.

“அந்த ஓலையைப்பற்றி நமக்கென்ன கவலை, தலைவரே! நமக்கும்தான் உத்தரவு திட்டமாயிருக்கிறதே” என்றான் வீரர்களில் ஒருவன்.

வண்டிக்குள் திடமாக அமர்ந்துவிட்ட காவலர் தலைவனின் பதிலும் திட்டமாகவே வெளிவந்தது. “சொல் கிறபடி செய். நமது உத்தரவைப் போலவே இவர்கள் அதிகார ஓலையும் திட்டமானதாயிருந்தால் பேரமைச்சரின் சீற்றத் துக்கு நாம் இலக்காக வேண்டியிருக்கும்” என்றான் காவலர் தலைவன்.

காவலர் தலைவனுக்கு அத்தனை நேரம் ஏற்படாத ஞானோதயம் திடீரென ஏற்பட்டதைக் கண்டு வியந்த டைபீரியஸ் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாதென்ற காரணத்தால், “இதைப்பற்றி அனாவசிய சர்ச்சை எதற்கு? ஓலையைத் தருகிறேன், பாருங்கள்” என்று தன் கச்சையிலிருந்த ஓலையை எடுத்து, எதிரே நின்ற வீரனிடம் நீட்டாமல், தன் பக்கத்தில் தலையை நீட்டிக் கொண்டிருந்த காவலர் தலைவனிடமே நீட்டினான். காவலர் தலைவனும் உள்ளிருந்து எழுந்து திரைச் சீலைக்கு முன்பு வந்து டைபீரியஸின் பக்கத்தில் வண்டியோட்டும் முகப்பு மணையில் அமர்ந்து ஓலையை வாங்கி ஒருமுறைக்கு இரு முறையாகப் படித்தான். பிறகு ஒரு வினாடி யோசித்து விட்டு, “சரி! இவரிடமிருக்கும் வாளை அகற்றுங்கள். அந்தக் கடிவாளக் கயிறுகளை என்னிடம் கொடுங்கள். வண்டியை நான் ஓட்டி வருகிறேன். காவலுக்கு இருவர் இருந்தால் போதும். மற்றவர் முன் சென்று பேரமைச்சரிடம் இவர்கள் சிறைப்பட்டதை அறிவியுங்கள்” என்று கூறி, காவல் வீரன் கையிலிருந்து கடிவாளக் கயிறு களைத் தன் கையில் வாங்கிக் கொண்டான்.

டைபீரியஸின் உள்ளத்தில் மீண்டும் கவலை படர்ந்தது. பேரமைச்சரின் அதிகார ஓலையைக் கண்டு காவலர் தலைவன் பயந்து தங்களைப் போக விடுவான் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததன் விளைவாக அவன் இதயத்தில் கவலையுடன் கோபமும் வியப்பும் கலந்து விளையாடவே டைபீரியஸ் கேட்டான்: “காவலர் தலைவரே! ஓலையைப் படித்தீரல்லவா?”
“ஒரு முறைக்கிருமுறை படித்தேன்” என்றான் காவலர் தலைவன் எரிச்சலுடன்.

“இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்ல யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல அந்த ஓலை எனக்கு அதிகாரமளிக்கிறது.”

“உண்மை.”

“அப்படியிருந்தும் ஏன் எங்களைப் போகவிட மறுக்கிறீர்?”

“உங்கள் ஓலையைப் போலவே என்னிடமும் ஓர் ஓலை இருக்கிறது. வேண்டுமானால் படித்துப் பாருங்கள்” என்று காவலர் தலைவன், தன் மடியிலிருந்து ஓர் ஓலையை எடுத்து, டைபீரியஸிடம் கொடுத்தான்.

அந்த ஓலையை வாங்கிப் படித்த டைபீரியஸ் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைக் கவனித்துச் சற்று உரக்கவே நகைத்த காவலர் தலைவன், “அந்த ஓலையும் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோக எனக்கு அதிகாரமளிக்கிறது. இல்லையா?’ என்றான்.

“ஆம்.” டைபீரியஸின் வறண்ட குரல் சற்று அதிக வறட்சியுடனே ஒலித்தது.

“அதனால் உங்களைக் கொண்டு போகிறேன் உறையூர் சிறைச் சாலைக்கு. உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோக ஓலை அதிகாரமளிக்கிறதல்லவா?” என்று கேட்ட காவலர் தலைவனின் ஏளனக் குரல் முன்னைவிட அதிக ஏளனத்துடன் ஒலித்தது.

உணர்ச்சிகளின் மிகுதி, கோபத்தின் உச்சம், ஆத்திரத்தின் எல்லை-இவை மூன்றும் வாய்க்குப் பூட்டுப் போட்டு விட்டதால் அதற்கு மேல் ஏதும் பேசாமல் உட்கார்ந்து விட்டான் யவனர் கடற்படைத் தலைவன். டைபீரியஸுக்குக் காவலர் தலைவன் பேச்சும், அந்தப் பேச்சில் தொனித்த ஏளனமும் வேப்பங்காயாயிருக்கவே, ‘இந்தத் தமிழர்கள் எல்லாருமே விஷமிகள் போல இருக்கிறது’ என்று மனத்திற்குள்ளேயே எண்ணமிட்டான். டைபீரியஸிடம் தன் ஓலையைக் காட்டிய பிறகு, அதைத் திரும்பக்கூடப் பெற்றுக் கொள்ளாமல் வீரர்களில் மற்றவரைப் பேரமைச்சரிடம் ஓடிச் சேதி சொல்லவும், இருவரை மட்டும் வண்டியின் முன் செல்லவும் பணித்த காவலர் தலைவன், குதிரைகளின் கடிவாளக் கயிறுகளைத் தளர்த்திப் பின்பு இழுத்து அவற்றை அரை ஓட்டத்தில் செலுத்தலானான். அப்படிச் சிறிது தூரம் சென்றதும் பொழுது புலருவதற்கான அறிகுறிகள் எங்கும் தோன்றலாயின.

உறையூரையும் புகாரையும் பிணைக்கும் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் உள்ள பெரிய மரங்களில் இரவில் உறங்கிய புள்ளினங்கள் சில, காலை வரவை உணர்த்தப் பெரும் சத்தமிட்டன. மற்றும் சில, மரப்பொந்துகளிலிருந்து வெளிவந்து ஆகாயத்தில் ஏதோ ஒரு மூலையை நோக்கிப் பறந்தன. எல்லைப்புறக் கோடியிலுள்ள வீடுகளிலுள்ள கோழிகள் மந்திர சுருதியில் கரகரப்புடன் அருணனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடின. கீழ்வானமும் மெள்ள மெள்ள வெளுக்கத் தொடங்கியது. அதைப் பார்த்த காவலர் தலைவன், காவலுக்கு வந்த இரு வீரர்களையும் நோக்கி, “நீங்கள் இருவரும் நேராக அரண்மனைக்குச் செல்லுங்கள். நான் இந்தப் பாதை வழியாக வருகிறேன்” என்று கூறினான்.

“ஏன் தலைவரே?” என்று வினவினான் வீரர்களில் ஒருவன் சற்றுச் சந்தேகத்துடன்.

அந்தச் சந்தேகத்தைக் கவனித்த காவலர் தலைவன் முகத்தில் கோபம் சுடர்விட்டு எரியவே, “காரணம் என்னையா கேட்கிறாய்? உத்தரவிட்டவர்களைக் கேள். மன்னரின் எல்லைப்புற மாளிகைக்கு ராணியை அழைத்து வரும்படி தான் எனக்கு உத்தரவு” என்று அவன் கூறினான், உள்ளே எழுந்த கோபத்தின் உக்கிரத்தைக் குரலிலும் ஓரளவு பாய்ச்சி.

அதற்குமேல் காவலர் தலைவனை எதிர்த்து நிற்கச் சக்தியற்ற வீரர்கள் இருவரும் அவன் உத்தரவுப்படியே அரண்மனைச் சாலையில் புரவிகளை நடத்திச் சென்றார்கள். இப்படி அந்த இரு காவலரும் சென்றதும், அந்த மூடு வண்டியைப் பக்கத்துப் பாதையில் இறக்கிச் சிறிது நேரம் உறையூர் எல்லைப்புற மாளிகையை நோக்கி ஓட்டிய காவலர் தலைவன், பிறகு எந்தக் காரணத்தாலோ வேறு பக்கம் திரும்பி நெடுஞ்சாலைப் பகுதிக்கு வந்தான். அவன் வண்டியை முதலில் பக்கத்துப் பாதையில் திருப்பியபோது, எதிரே தூரத்தில் பிரும்மாண்டமாக எழுந்து நின்ற சோழ மன்னர் களின் உறையூர் எல்லைப்புற மாளிகை சில விநாடிகள் மெள்ள மெள்ள வேறு பக்கத்தில் திரும்பிவிட்டதையும், அதை அடுத்து ஓடிய காவிரியும் கண்ணிலிருந்து மறைந்ததையும் கவனித்த டைபீரியஸ், ‘எந்தக் காரணத்தால் இவன் சுவடு மாறி வண்டியை ஓட்டுகின்றான்?’ என்று எண்ணி ஏதும் புரியாததால் ஒருகணம் திகைத்தாலும் அடுத்த கணத்தில், அதாவது வண்டி பெருஞ்சாலையில் ஓடிய பின்பு உண்மையை உணர்ந்து கொண்டான்.

பெருஞ்சாலையில் ஏறி வண்டி சிறிது தூரம் சென்றதும், “ஒரு புறமாக வண்டியை நிறுத்து” என்று உள்ளிருந்து வந்த சோழர்படை உபதலைவனின் அதிகாரக் குரல் ஓரளவு உண்மையை டைபீரியஸுக்கு விளக்கியது. அந்த உத்தரவுப்படி வண்டியைக் காவலர் தலைவன் நிறுத்தியதும் அவன் இடையிலிருந்த கச்சை அவிழ்க்கப்பட்டு அது வாளுடன் திரைச் சீலைக்குள் இழுக்கப்பட்டு மறைந்ததையும் கவனித்ததும் அதுவரை டைபீரியஸின் இதயத்தைச் சூழ்ந்து நின்ற சந்தேக இருட்டு சட்டென்று கிழிக்கப்பட்டது. வண்டி நின்றதும், உள்ளிருந்து கீழே குதித்த இளஞ்செழியன் காவலர் தலைவனையும் இறங்கச் சொல்லி, “சற்று இந்தப்புறம் வருகிறீர்களா?” என்று அவனை அழைத்துக் கொண்டு சாலையை அடுத்திருந்த மரங்களின் மறைவுக்குச் சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காவலன் உடுப்பை அணிந்து கொண்டு இளஞ்செழியன், கடிவாளக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு புரவிகளைப் புகாரின் பெருஞ்சாலையில் வேகமாகத் தூண்டிவிட்டான்.

காலைக் கதிரவன் மெள்ள எழுந்து புகாரின் சாலை மரங்களின் இலைகளின் அடர்த்தியையும் ஊடுருவி, வண்டி யின் முகப்பிலிருந்து இளஞ்செழியன் மீதும் டைபீரியஸின் மீதும் தன் கிரணங்களைப் பாய்ச்சினான். அந்தக் கிரணங்களின் சக்தியால் ஓரளவு பேசும் சக்தியைப் பெற்ற டைபீரியஸ் படைத் தலைவனை வியப்பைக்கக்கும் விழிகளுடன் நோக்கி, “மௌனத்தினால் பலனிருக்கிறது படைத் தலைவரே” என்று பாராட்டினான்.

“மௌனம் எல்லாவற்றையும் சாதிக்கவல்லது என்றொரு வடமொழிப் பழமொழியிருக்கிறது, யவனர் தலைவரே!” என்றான் இளஞ்செழியன்.

“பேரமைச்சர் ஓலையைப் பற்றிக் கூறி நான் எத்தனை மிரட்டியும் வீரர்கள் கேட்கவில்லை.”

“அதைப் பார்த்துத்தான் பேச்சுப் பயனில்லை என்று தீர்மானித்தேன்.”

“வண்டியின் பின்புறம் வந்து அத்தனை அநாகரிகமாகக் காவலர் தலைவன் நடந்து கொள்வானென்று நான் நினைக்க வில்லை.”

“நினைக்கிறபடி எதுவும் நடப்பதில்லை யவனர் தலைவரே! அவன் அநாகரிகமாக நடப்பானென்று நீங்களும் நினைக்கவில்லை. அந்த அநாகரிகத்தின் விளைவு என்ன வென்பதை அவனும் நினைக்கவில்லை.”

“ஆமாம்.”

“அவன் அப்படி முன்பின் யோசிக்காமல் அநாகரிகமாக மூடு வண்டிக்குள் தலையை நீட்டியிராவிட்டால் நமக்கு விமோசனமும் இருந்திருக்காது.”

“வாஸ்தவம், நிலைமையை நன்றாகச் சமாளித்திருக் கிறீர்கள்.”

“தலையைத் தானாகக் கொண்டு வந்து அவன் நீட்டிய பின்பு நான் செய்த எதிலும் சாமர்த்தியமென்ன இருக்கிறது? தலையை உள்ளே நீட்டியதும் ஒரு கையால் அவன் கழுத்தை அழுத்தி மற்றொரு கையால் என் குறுவாளை அவன் ஊட்டியில் தடவினேன். பேசாமல் உள்ளே ஏறி ஒழுங்காக நடந்தும் கொள்ளும்படி காதில் மந்திரம் ஓதினேன். அவன் வண்டியில் ஏறினான். இரு புறமும் மூடப்பட்ட வண்டியில் உள்ளே குறுவாளின் சந்நிதானத்தில் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டான். அவன் திரைச்சீலை முன்பு வந்து கடிவாளக் கயிறுகளைப் பிடித்துக் கொண்ட சமயத்திலிருந்து இங்கு வரும்வரை என் குறுவாள் அவன் முதுகுப்புறத்தில் ஊன்றி எந்த நிலையையும் சமாளிக்கத் தயாராயிருந்தது. என் இஷ்டவிரோதமாக அவன் எதைச் செய்திருந்தாலும் அதே விநாடி அவன் பிணமாய் இருப்பான். ஆபத்திலிருக்கும் எந்த மனிதனுக்கும் மூளை துரிதமாக வேலை செய்கிறது, யவனர் தலைவரே. ஆகவே, தன் பிராணனைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனை சாமர்த்தியமாக நடந்து கொள்ள முடியுமோ அத்தனை சாமர்த்தியமாக நடந்து கொண்டான் காவலர் தலைவன். பிராண பயம் யாரை விட்டது?” என விளக்கி வேதாந்தமும் பேசிய இளஞ்செழியன், தான் சர்வ சகஜமான ஏதோ ஒரு காரியத்தைச் செய்தவன் போல் புரவிகளை முடுக்கினான்.

டைபீரியஸின் சித்தத்தில் சோழர் படை உபதலை வனைப் பற்றிய மதிப்பு முன்னைவிட ஆயிரம் மடங்கு அதிகரித்து நின்றது. ‘எத்தகைய அபாயமான நிலையையும் புத்தித் தெளிவாலும் நிதானத்தாலும் தனக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்த இத்தகைய விரோதியை எப்படி வெற்றி கொள்ளப் போகிறோம்?’ என்று நினைத்து எதற்கும் சலிக்காத டைபீரியஸே சலித்து நின்றான். அவன் சலிப்பையோ தன்னிடம் மதிப்பு அதிகரித்ததால் டைபீரியஸின் முகத்தில் ஏற்பட்ட பாவத்தையோ சிறிதும் கவனிக்காமலே ஆழ்ந்த யோசனையுடன் புரவிகளைத் தூண்டி நீண்ட நேரம் வண்டியை வாயுவேகத்தில் பறக்க விட்ட இளஞ்செழியன், சூரியோதயமாகி ஒரு ஜாமத்திற்குப் பிறகு காவிரியின் கரையோரத்திலிருந்த ஒரு சத்திரத்தில் வண்டியை நிறுத்தி ராணியையும் டைபீரியஸையும் முகம் கழுவி, பல் துலக்கச் செய்து, ஆகாரத்தை முடித்துக் கொள்ளச் செய்தான். இதற்காகச் சில நிமிஷங்களே நிதானித்த இளஞ்செழியன் மீண்டும் வண்டியைப் புகாரின் சாலையில் இயக்கினான்.

அடுத்த மூன்று நாட்களில் பல காட்டுப் பாதைகளையும் நாட்டுச் சாலைகளையும் கடந்துவிட்ட இளஞ்செழியன் புகாரை அணுகியதும், “இனி வண்டி தேவையில்லை. படகில் செல்லலாம்” என்று ராணிக்கும் டைபீரியஸுக்கும் அறிவித்து வண்டியை நிறுத்தினான். அந்தச் சமயத்தில் இரவு நன்றாகக் கவிந்திருந்தது. தூரத்தே புகாரின் விளக்குகள் ஜாஜ்வல்யமாக எரிந்து கொண்டிருந்தன. காவிரியில் படகுகள் ஆடி ஆடிச் சென்றதால் அவற்றின் விளக்குகளும் ஆடிக்கொண்டிருந்த சிறப்புக் காட்சியைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டான் இளஞ்செழியன். வண்டியைப் புரவியுடன் நிறுத்திவிட்டுக் காவிரிக்கரைக்கு டைபீரியஸுடனும் ராணியுடனும் வந்த இளஞ்செழியன், காவிரியின் பெருநீர்ப் பரப்பிலே தவழ்ந்து வந்த காற்றைப் பருகியதால் புத்துணர்வு பெற்றான். மீண்டும் தாயைக் கண்ட சேயென அவன் முகம் மலர்ந்தது. “இன்னும் ஒரே நாழிகை! அதோ உள்ள வாணகரையை அடைந்துவிடலாம் ராணி!” என்று தான் செல்லவிருந்த இடத்தையும் மகிழ்ச்சியுடனும் குறிப் பிட்டான் இளஞ்செழியன்.

டைபீரியஸ் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான். காவிரிக்கரை மேட்டிலிருந்து கீழே துறையில் நின்றிருந்த படகோட்டியை அழைக்க இளஞ்செழியன் சென்றபோது கூட, ராணியை அழைத்துக் கொண்டு போகவோ இளஞ்செழியனுக்கு எதிராக வேறுவித நடவடிக்கை எடுக்கவோ அவன் முயலாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட ராணி சுட்டிக் காட்டினாள், “டைபீரியஸ்! படைத் தலைவருக்கும் நமக்கும் இப்பொழுது தூரம் அதிகமிருக்கிறதே” என்று.

டைபீரியஸின் முகத்தில் நன்றிப் புன்முறுவல் படர்ந்தது. “உண்மைதான் ராணி. ஆனால் நாம் தப்பியது படைத்தலைவரால். இப்போது நாம் அவர் வசமிருக்கிறோம். இந்தச் சமயம் அவர் நம்மை நம்பித் தனிமையில் விட்டுச் சென்றிருக்கிறார். வீரனாயிருப்பவன் இன்னொரு வீரனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டான். போரிடலாம், ராஜதந்திரத்தில் இறங்கலாம். இரண்டையும் யவனர் அறவழி அனுமதிக்கிறது. ஆனால் நன்றி கொல்லுதல், நம்பிக்கை மோசம் செய்தல் இரண்டையும் அனுமதிக்கவில்லை” என்றான் டைபீரியஸ்.

டைபீரியஸின் வார்த்தைகள் ராணியின் இதயத்தில் மகிழ்ச்சிப் புயலைப் பாய்ச்சின. இளஞ்செழியன் படகு ஒன்றை ஏற்பாடு செய்த பிறகு மூவரும் காவிரியின் பெரும் புனல் பரப்பிலே பயணம் செய்த சமயத்தில் அந்த மகிழ்ச்சிப் புனல் பெருவெள்ளமாகியது. அவள் உள்ளத்தேயிருந்த மகிழ்ச்சி வெள்ளம் பெரிதா, புறத்தே இருபுறமும் கண்ணுக் கெட்டிய தூரம் படர்ந்த காவிரி வெள்ளம் பெரிதா என்பதை அவளால் அளவிட முடியவில்லை. அதை அளவிட டைபீரியஸும் சக்தியற்றவனாகவே வீற்றிருந்தானாகையால் அவன் கண்கள் எங்கோ தெரிவது போலிருந்த கடற்பகுதியை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன.

நடுக்காவிரியில் சென்ற அந்தப் படகின் உடையிலே மூன்றுநாள் பிரயாண அலுப்பின் விளைவால் படுத்துக் கிடந்த இளஞ்செழியன் தலையை ராணி எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டாள். இரவு கவிந்துவிட்டதால் நன்றாகச் சூழ்ந்துவிட்ட இருளில் படகின் முகப்பில் அவர்களிடமிருந்து சில அடிகள் தள்ளி உட்கார்ந்திருந்த டைபீரியஸ்கூட அந்த இருவரின் நிலையைக் கவனித்ததாகத் தெரியவில்லை. படகின் முகப்பிலும் சுக்கான் பிடிக்கும் இறுதிப்பகுதியிலுமே இருந்த இரு விளக்குகளைச் சுக்கான் பிடிப்பவனும் துடுப்புத் தள்ளுபவனும் மறைத்திருந்ததால் படகின் நடுவில் இருட்டு மண்டிக் கிடந்தது. அந்த இருட்டிலே ராணியின் மடியிலே, மடியை நிர்மாணித்த மலர்த்தூண்களிலே கிடந்த இளஞ்செழியன் தலை ஒருமுறை புரண்டதால் படகின் இருபுறங்களைத் தாக்கிய காவிரியின் அலைகளைப் போலவே உணர்ச்சி அலைகளும் ராணியின் இதய ஓரங்களைத் தாக்கின. அதன் விளைவாகப் படைத் தலைவன் முகத்தை நோக்கி இடையை வளைத்துக் குனிந்த அந்த யவன மங்கையின் பட்டுக்கன்னமும் அவன் கன்னத்தில் இழைந்தது. ஜாதி மல்லிகையின் வாசனையைப் போல் இயற்கையாகவே அவள் உடலிலிருந்து எழுந்த வாசனையை அவள் சற்று முன்பாகக் கழுத்தில் தடவியிருந்த யவன நாட்டு மலர்த்துளிகளின் சுகந்தம் அதிகப்படுத்தியது. அத்துடன் பக்கத்தில் படகைத் தாக்கிய ஓரிரு அலைகள் அவள் முகத்தில் வாரியடித்த நீர்த்துளிகள் வேறு தங்கள் நறுமணத்தையும் அத்துடன் சேர்க்கவே, காளிதாஸ் மகாகவி திலீப் மகாராஜனுடைய அனுபவத்தைப் பற்றி எழுதிய வர்ணனையில் மயக்க உலகத்துக்குப் படைத்தலைவனும் சென்று விட்டான்.

‘தன் மனைவியும், இணையில்லா அழகுடையவளு மான சுதுணையின் முகத்தை முகர்ந்த திலீபன், காட்டுப் பிராந்தியத்தில் சிறு தூறல் போட்டால் எழும் மண் வாசனையை முகர்ந்த யானைக் கூட்டங்கள் எப்படிச் சிறிதும் திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் அந்த வாசனையை முகர்ந்து மயங்குமோ அப்படியே மயங்கினான்’ என்ற காளிதாஸன் விளக்கம் எத்தனை தத்ரூபமானது என்று இளஞ்செழியன் அத்தனை மயக்கத்திலும் எண்ணமிட்டான். வண்டல் மண்ணை வாரி வந்த காவிரியின் நீரில் மிதந்து வந்த தென்றலில் உலாவிய தமிழகத்து மண் மணம், யவன மாதரசியின் உடலிலே எழுந்த இயற்கையும் செயற்கையும் கலந்த அதி அற்புதப் பெண் மணம், இரண்டும் சேர்ந்து எங்கோ ஒரு கனவுலகத்துக்கு இழுத்துச் சென்றதால், படைத்தலைவன் அந்த யவன மங்கையின் மடியிலே மயங்கிக் கிடந்தான்.

புகாரின் சங்கமத் துறைக்கருகே முதன்முதலாக அவன் காலடியில் கடலரசன் வீசிய மோகனாஸ்திரம் அந்த இரவில் காவிரியன்னையின் நீர் மடியில், படகின் தாலாட்டில், அவள் அழகிய உடல் பல இடங்களிலுமிருந்து தொடுத்த மலர்க் கணைகளால் பெரு வலுப்பெற்றது. அந்த வலுவின் விளைவோ, அல்லது மூன்று நாள் பயணத்தின் அலுப்போ தெரியாது இளஞ்செழியன் கண்கள் மெள்ள மூடின.
இன்ப உலகத்திலே, இதய உல்லாசத்திலே அந்தச் சமயத்திலே அவன் கண்களை மூடினான். கண்களைத் திறந்த போது தான் இருந்த சூழ்நிலை வேறு, உலகமே வேறு என்பதை உணர்ந்தான். உணர்ந்ததால் பெரும் திகைப்புக்குள்ளானான். தன் வாழ்வு திடீரென இத்தனை கேவலமான பாதையிலே திரும்புமென்று அவன் எதிர் பார்க்காததால் முதன் முதலாக அதைரியத்துக்குக்கூட இலக்காகி இடி விழுந்தவன் போலானான்.

அதே சமயத்தில் ராணியின் வாழ்விலும் பெருமாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருந்ததையும், அலைமேல் வந்த அந்த அழகியின் கதையின் இரண்டாம் பகுதி துவங்கிவிட்டதையும், அதனால் தமிழகத்தின் பெரும் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருப்பதையும் அலைமேல் தவழ்ந்து கொண்டிருந்த படைத் தலைவன் எப்படி உணர்வான்? அவன் கண் திறந்த அதே வினாடியில் ‘யவன ராணி’ வரலாற்றின் இரண்டாம் பாகத்தைத் துவக்கிய டைபீரியஸ், புகாரின் வசந்த மாளிகையில் பேய்ச்சிரிப்பாக ராணியை நோக்கி, இல்லை இல்லை, தமிழகத்தையே நோக்கி நகைத்துக் கொண்டிருந்ததையும் யவனர் கப்பலில் சிறைப்பட்டுக் கிடந்த தமிழகத்தின் அந்த மாபெரும் வீரன் அறியாததில் வியப்பென்ன இருக்கிறது?

Previous articleYavana Rani Part 1 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here