Home Sandilyan Yavana Rani Part 1 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

84
0
Yavana Rani Part 1 Ch36 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch36 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 36 காமக் கண்ணும் கடமைக் கண்ணும்

Yavana Rani Part 1 Ch36 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

வங்கக் கடலில் முளைத்த ஒரு தங்கப் பழமென எழுந்த காலைக் கதிரவன், நீர் மட்டத்தில் அரை நாழிகை தவழ்ந்து விட்டுத் தொடு வானத்தில் ஊர்ந்து ஏறிவிட்டதன் விளைவாக அவன் கிரணங்கள் பொன்னிறம் மாறி வெண்மையும் உஷ்ணமும் பெற்றும், கடலலைகளைச் சிறிது சூடுபடுத்தி விட்டதால் அலைத் திரைகள் பூம்புகாரின் கடற்கரைக்கு மெல்ல மெல்ல ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆவணித் திங்கள் புகுந்து நாட்கள் பல ஆகிவிட்ட போதிலும் அந்தக் காலை வேளையைக் கோடையின் காலை வேளையைப் போலவே கதிரவன் உஷ்ணப்படுத்தியிருந்ததால், பூம்புகார் கடற்கரையில் மெருகு கொண்ட கருமணல் இடையிடையே பொடி வைரங்களை ஒளித்துக் கொண்டிருந்தது போல் பளிச்சிட்டுக் கொண்டும், காலை வைத்தால் தகித்துக் கொண்டும் இருந்ததனாலும், அதைச் சிறிதும் சட்டை செய்யாத பரதவர்கள் சிலர் அந்தச் சுடுமணலில் நிதான நடை போட்டுத் தங்கள் படகுகளை நோக்கிக் கரையில் கட்டுச் சாதங்களுடனும் தோளில் பெருவலை, தூண்டில் முதலிய சாதனங்களுடனும் சென்று கொண்டிருந் தார்கள். ஏற்கெனவே படகுகளை அடைந்துவிட்ட பரதவர், படகுகளை அலைகள் மீது தள்ளித் தாங்களும் தாவி ஏறிக் கடலோட முற்பட்டனர். அவர்களுக்கும் முன்பாகக் கடலில் பாய்ந்து விட்ட மற்றும் சில பரதவரின் படகுகள் பாய் விரித்து கடலின் நீர்மட்டத்தை ஊடுருவி வெகுவேகமாகச் சென்று விட்டனவாதலால் தூரத்தே பல வெள்ளைப் புள்ளிகள் உலாவுவதைப் போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இரவில் நடுச்சாமத்துக்கு மேல் புகாரை அடைந்ததால் வாணிபப் பொருள்களையோ வணிகர்களையோ இறக்காமல் கடலின் சிறிது தூரத்திலேயே நங்கூரம் பாய்ச்சி நின்ற மரக்கலங்கள் சில, வணிகர்களையும் அவர்கள் சரக்குகளையும் தரைசேர்க்க முயற்சியெடுத்து, கப்பல்களைச் சுற்றி நின்ற படகுகளில் வணிகர்களை இறக்கிக் கொண்டிருந்தன. அப்படி இறங்கிய வணிகர்களின் உடல்களிலே சூரியகிரணங்களின் உக்கிரம் அந்தக் காலை வேளையிலேயே வியர்வையைக் கிளப்பிவிட்டு, பட்டாடைகளைச் சிறிது நனைத்துவிட்ட போதிலும் அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமலே தாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்த வாணிபப் பொருள்களையும், பொன் நாணயப் பேழைகளையும் இறக்குவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த அந்தப் பெருமக்களைக் கவனித்த காவிரியன்னை, திரைகடலோடிப் பொன்னும் மணியும் பொருளும் கொணர்ந்து சோழநாட்டை வளப்படுத்தும் அவர்களுக்கு நல்வரவு கூறுவதுபோல் சங்குத் துறைக்கு அருகிலிருந்த சுங்கத்துறை கருங்கற்படிகளில் தன் சிற்றலைகளைத் தாக்கித் தாக்கி மகிழ்ச்சி ஒலிகளைக் கிளப்பியதன்றி, அந்தக் காலை வேளையின் சூரிய வெப்பத்திலிருந்து ஆறுதல் பெறச் சங்கமத் துறையில் இறங்கிய புகாரின் பெண்மணிகளையும் சிறுவர்களையும் தன் தண் புனலால் அணைத்து ஆதரவு தந்தாள். காவிரியன்னையின் ஆதரவைப் பெற்ற வரையில் தன் சொரூபத்தைக் காட்ட முடியாத கதிரவன், அவர்கள் கரையேறியதும் முன்னை விடச் சுடு கிரணங்களைப் புகாரின் தரைமீது பாய்ச்சவே கொதிக்கும் மணலில் சுருங்கச் சுருங்க அடியெடுத்து வைத்துப் பெண்மணிகள் இல்லங்களை நோக்கி விரைந்தனர். வாணிபப் பொருள்களுடன் படகுகளில் சுங்கத் துறையைச் சேர்ந்த வணிகப் பெருமக்கள் மட்டும் பலவித சீதோஷ்ண ஸ்திதிகளைப் பார்த்தவர்களாதலால் அந்த வெயிலுக்குச் சிறிதும் அஞ்சாமல் கருங்கற்படிகளில் நீண்ட நேரம் சுங்கக் காவலருடன் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். காலையில் படகேறிக் கடலோடும் கணவன் இரவில் வருவானோ மாட்டானோ என்ற நிலையில் வாழ்ந்து வந்த பரதவ மங்கையருக்கு, சுகதுக்கங்கள் மழையும் வெயிலும் போலச் சமமாகவே இருந்தபடியால், அவர்கள் அந்தக் காலை வெப்பத்தை அணுவளவும் லட்சியம் செய்யாமல் தங்கள் வேலைகளைக் கவனிக்கச் சுடுமணலில் நிதானமாகவே நடந்து சென்றனர்.

இப்படி எங்கும் உயிர் நடமாட்டம் மிகுந்து, அரவம் பெருகி, கதிரவன் தன் சுடுவிழியைப் புகாரின் மீது நாட்டி நாழிகை நான்கு ஆகியும், இந்திர விழாவின் போது மன்னர் குலத்தார் தங்குவதால் இந்திர விழா மாளிகையென்றும், வசந்த காலம் முழுவதுமே சில சமயங்களில் தங்க நேரிட்டால் வசந்த மாளிகையென்றும் பிரசித்தி பெற்ற பெருவிடுதியிலே சாளரத்தின் மூலமாகச் சூரியக் கிரணங்கள் பாய்ந்து தொட்டெழுப்ப முயன்ற பின்பும் சிறிதும் அசையாமல் சித்திரப் பாவைபோல் பஞ்சணையிலே படுத்துக் கிடந்த யவன ராணியை, டைபீரியஸும் புகாரின் கோட்டைத் தலைவனும் நீண்ட நேரம் மௌனமாகவே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றனர். உடல்மீது கழுத்து வரையில் நன்றாகப் போர்த்தப்பட்டிருந்த பாண்டிய நாட்டுத் தங்கத்தகடியில் பட்ட சூரிய ரச்மிகள் லேசாக அந்தப் பொன்னாடையிலிருந்து பிரதிபலித்து, அவள் முகத்தின் மீதும் தங்கநிற ஒளியை மெல்லப் பாய்ச்சியும் ராணியின் மலர் விழிகள் சிறிதும் மலராமல் மூடிய மொட்டுப் போலவே கிடந்ததைக் கண்ட கோட்டைத் தலைவன் முகத்தில் கவலைக்குறி லேசாகப் படரவே டைபீரியஸை நோக்கிக் கேட்டான்: “ராணியை மயக்க முறச் செய்ய நீங்கள் உபயோகித்த விஷத் துளிகள் அவர்களைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது?” என்று.

அந்தப் பெரு மாளிகையின் கூரையைத் தொட்டு விடுபவன் போல மிக உயரமாகவும் கம்பீரமாகவும் நின்ற டைபீரியஸ் ஒரு விநாடி திரும்பிப் பக்கத்தில் நின்ற கோட்டைத் தலைவனைப் பார்த்தான். பிறகு மீண்டும் தன் கண்களை ராணி மீதே நாட்டினான். ராணி அப்பொழுதும் மயக்கத்திலிருந்தாலும் அவளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படக்காரணமில்லை என்பதைச் சந்தேகமற அறிந்திருந்தாலும் கோட்டைத் தலைவன் கிளப்பிவிட்ட சந்தேகத்தால் கவலைக்குள்ளான டைபீரியஸ் தன் கையை அவள் மூக்குக்கு அருகில் வைத்துச் சோதித்துப் பார்த்தான். சுவாசம் ஒரே சீராக வந்து கொண்டிருந்ததை மூச்சுக் காற்றுக் கையில் பட்டதால் மட்டுமன்றி ராணியின் உடல் மெள்ள மெள்ள எழுந்து எழுந்து தாழ்ந்து கொண்டிருந்ததிலிருந்தும் அறிந்த டைபீரியஸ், ராணியின் கை நாடியையும் சிலவிநாடிகள் பரிசோதித்தான். யவனக் கடற்படைத் தலைவனின் கை தன் மீது பட்ட காரணத்தாலோ என்னவோ திடீரென்று ஒருமுறை உடலைச் சிலிர்த்துக் கொண்ட யவன ராணி, தன் கைகளில் ஒன்றை எடுத்துத் தன் மார்புமீது குறுக்கே போட்டுக் கொண்டாள். இதனால் கொஞ்ச நஞ்சமிருந்த கவலையும் நீங்கிவிடவே டைபீரியஸ் கோட்டைத் தலைவனை நோக்கி, “ராணி விழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ராணி முகத்தைக் கழுவிக் கொள்ளப் பணியாட்கள் நீர் கொண்டு வரட்டும். அத்துடன் மதுவையும் கொண்டுவரச் சொல் லுங்கள்” என்று உத்தரவிட்டான்.

ராணி பள்ளியெழுந்ததும் அவளுடைய உபசரணைக்கு வேண்டிய சகலமும் நொடிப் பொழுதில் வந்தன. இரண்டு பொற்கிண்ணங்களில் வடிகட்டிய காவிரி நீர், பல் துலக்க மதுரமான மரப்பட்டைகளும், பவழ வெள்ளி பஸ்பங்களும் சேர்ந்து பரிமளிக்கும் நறுமணப் பொடி, முகம் கழுவி வாய் கொப்புளிக்க ஆழமான பெரும் பொன் தட்டு-இத்தனையும் யவனக் காவலர் தாங்கி நின்று ராணியின் பள்ளி யெழுச்சிக்குக் காத்திருந்தனர். டைபீரியஸ் எதிர்பார்த்தது போல் ராணி மெள்ள ஒருமுறை கண் விழித்தாளானாலும் தங்கத் தகடியிலிருந்து பிரதிபலித்த சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் மீண்டும் சில வினாடிகள் கண்களை மூடினாள். மறுபடியும் அவள் கண்திறந்த போது அப்புறமும் இப்புறமும் நின்றிருந்த யவனக் காவலர்களைப் பார்த்து ஏதும் புரியாமல் சில வினாடிகள் விழித்தாளென்றாலும், சற்றுத் தள்ளி நின்றிருந்த டைபீரியஸைக் கண்டதும், அவளுக்கு மெள்ள மெள்ள உண்மை புரியலாயிற்று. உள்ளத்தில் மலர்ந்த அந்த உண்மை சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தொகுத்துப் பார்க்கச் சில வினாடிகள் மற்றுமொருமுறை ராணி கண்களை மூடினாள்.

கண்களை மூடியதும் உள்ளத்தே முதலில் எழுந்த அந்த இன்ப உலகம் எப்படி இருண்ட உலகமாயிற்று என்பதற்குத் தெளிவுபெற முயன்ற ராணி காவிரியன்னையின் நீர் மடியில் மிதந்த படகில் தன் மடியில் படுத்துக் கிடந்த சோழர் படை உபதலைவனைப் பற்றிச் சற்றே எண்ணமிட்டாள். அந்த எண்ணத்தால் அவள் முகத்தில் மென்மைக்குறி படர்ந்தது. இரவளித்த அமைதியில், மடியிலிருந்த காதலனை நோக்கித் தான் இடைவளைத்துக் குனிந்து கன்னத்தோடு கன்னத்தை இழைந்தவரையில் அவளுக்கு நினைப்பு இருந்தது. ‘பிறகு யாரோ என்னை நோக்கி நடந்து வந்தார்கள். நான் நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு கரங்களே தெரிந்தன. பிறகு?… ஏதுமே தெரியவில்லை… ஏன்?’ என்று கடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துப் பார்த்த ராணி, வஞ்சகமாகத் தன்னை மயக்கி, புகாரின் அந்த மாளிகைக்குக் கொண்டுவந்தவன் டைபீரியஸே என்று தீர்மானித்துக் கொண்டதால், அவள் முகத்தில் மென்மைக் குறியைத் தொடர்ந்து கோபக் குறியும் படர்ந்தது. ஆகவே அவள் கண் விழித்து டைபீரியஸை நோக்கியபோது அந்த விழிகளில் நட்புக்கும் நன்றிக்கும் பதிலாகக் கோபத்தையே கண்டான் யவனர் கடற்படைத் தலைவன்.

மாறுபட்ட அவள் முகபாவங்களைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு நின்ற டைபீரியஸ், அவள் உள்ளத்தி லோடிய எண்ணங்களைச் சந்தேகத்துக்குச் சிறிதும் இட மின்றிப் புரிந்து கொண்டானாகையாலும் அவள் சுடு விழிகளை அவன் மீது நாட்டிய போது அவன் எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் மிகுந்த அமைதியுடனேயே நின்றிருந்தான். ராணியும் தன் கோப விழிகளைச் சிறிது நேரம் அவன் மீது நாட்டினாலும் டைபீரியஸின் முகமிருந்த தோரணையைக் கவனித்து, அவன் எதற்கும் துணிந்திருக்கிறானென்பதை ஊகித்துக் கொண்டாளாதலால் தன் கோபத்தை உள்ளடக்கி உதடுகளில் லேசாகப் புன்முறுவலைப் படரவிட்டதன்றி, “நீண்ட நேரம் தூங்கி விட்டேன் டைபீரியஸ்” என்று கூறி, சம்பாஷணையைச் சகஜமாகவே துவங்கினாள்.

அவள் கோபவிழிகளைக் கண்டு சிறிதும் அஞ்சாத டைபீரியஸ் அவள் சிரிப்பைக் கண்டு சிறிது அஞ்சவே செய்தானானாலும் அதை வெளிக்குக் காட்டாமலே, “அரச குடும்பத்தினர் நீண்ட நேரம் உறங்குவது தவறல்ல ராணி” என்று கூறி, மிகுந்த மரியாதையுடன் அவள் முன்பாகத் தலை தாழ்த்தி வணங்கினான். ராணி அவனை நோக்கி, கோட்டைத் தலைவனையும் இதர யவனக் காவலரையும் ஒருமுறை நோக்கிவிட்டு, கிண்ணங்களையும் மதுரப் பொடியையும் தட்டையும் அருகில் கொண்டு வரும்படி சைகை செய்து மெள்ளப் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து, பல் துலக்கி, முகம் கழுவினாள். முகத்தைத் துடைக்கக் காவலர் நீட்டிய பட்டாடையில் பட்டைவிட வழவழப்பான தன் முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டு, கிண்ணத்தில் கொடுக்கப் பட்ட மதுவையும் மெள்ள அருந்தி விட்டுக் கட்டிலிலிருந்து எழுந்து சாளரத்தை நோக்கி அன்னத்தையும் பழிக்கும் வண்ணம் நடந்து சென்றாள் யவன நாட்டுப் பேரழகி.

அவள் சாளரத்தை நோக்கிச் சென்றதுமே பணியாட் களையும் கோட்டைத் தலைவனையும் அறையை விட்டு வெளியே செல்லும்படி கண்களாலேயே கட்டளையிட்ட டைபீரியஸ், ராணி பேச்சைத் துவக்குவதற்காகக் காத்துக் கொண்டு நின்றான். ராணி நீண்ட நேரம் சாளரத்துக்கு வெளியேயிருந்த காவிரியையும், காவிரிக்கு அப்பாலிருந்த வாணகரைக் குன்றையுமே நோக்கிக் கொண்டு மௌனமாக நின்றாள். கடைசியாக அறையின் உட்பக்கத்தை நோக்கித் திரும்பி, சாளரத்தின் மீது சாய்ந்து கொண்டு நின்றவாறே டைபீரியஸை நோக்கி, “டைபீரியஸ்! மயக்கத் துளிகளில் எத்தனைத் துளிகள் எனக்கு அளித்திருப்பாய்!” என்று வினவினாள்.

டைபீரியஸ் சிறிதும் கலக்கமில்லாத முகத்துடன் ராணியை நோக்கிச் சொன்னான்: “நான்கே துளிகளைத் தான் என் உள்ளங்கையில் தடவிக் கொண்டேன். அவை போதுமானதாயிருந்தது. முகர்ந்ததுமே படகில் சாய்ந்து விட்டீர்கள்.”
“நான்கே துளிகளைக் கொண்டா மயக்கி விட்டாய் டைபீரியஸ்! மிகவும் சாமர்த்தியசாலிதான்” என்று கூறிய ராணி, குரூரப் புன்முறுவல் ஒன்றையும் இதழ்களில் தவழ விட்டாள்.

“வேறு சமயமாயிருந்தால் தங்களை மறக்க அதிகத் துளிகள் தேவையாயிருந்திருக்கும். ஆனால் நீங்கள் ஏற்கெனவே அரை மயக்கத்திலிருந்தபடியால் நான்கே துளிகளில் காரியத்தை முடிக்க முடிந்தது” என்ற டைபீரியஸ் இகழ்ச்சிப் புன்முறுவல் கோட்டினான்.

டைபீரியஸ் எதைக் குறிப்பிடுகிறான் என்பதை ராணி அறிந்தே இருந்தாள். சோழர் படை உபதலைவனிடம் தனக்கிருந்த காதல் மயக்கத்தையே அவன் சுட்டிக் காட்டுகிறா னென்பதை உணர்ந்து கொண்ட ராணி, மீண்டும் விஷமமாகவே பேசத் தொடங்கி, “அப்படியானால் படகிலும் சோழர் படைத்தலைவர் உனக்கு உதவியிருக்கிறார் டைபீரியஸ்” என்றாள்.

“உண்மைதான் ராணி! அவர் தங்களுக்கு அளித்த அரை மயக்கந்தான் என் வேலையைச் சுலபமாக்கியது” என்றான் டைபீரியஸ்.

“என்ன வேலை அது டைபீரியஸ்? நீ பணிய வேண்டிய ராணியின் நாசியில் மயக்கத் துளிகளைத் தடவுவதுதான் அந்தப் புனிதப் பணியா? அதற்காகத்தான் யவன குருமார்கள் இங்கு உன்னை அனுப்பினார்களா?” என்று கூறிய ராணியின் முகம் மெள்ளக் கோபத்தால் சிவக்கத் தொடங்கியது.

“யவன குருமார்கள் இங்கு நம்மிருவரையும் அனுப்பிய காரணத்தைத் தாங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை” என்று பதில் கூறிய டைபீரியஸ், ‘நம்மிருவரையும்’ என்ற சொல்லைச் சற்று அழுத்தியும் வாசகத்தின் இதர பகுதிகளில், போதிய கடுமையைக் காட்டியும் பேசினான்.

பதிலுக்கு யவன ராணி தன் கையிலிருந்த அன்னப் பறவை ஆபரணத்தையும் நோக்கி, டைபீரியஸையும் நோக்கினாள். அவள் பார்வையின் பொருளை நன்றாகப் புரிந்து கொண்ட டைபீரியஸ் சொன்னான்: “ராணி! அன்னப் பறவை ஆபரணத்தை அணிந்த யவன ராஜ குடும்பத்தாரை எதிர்த்து எதுவும் செய்ய எந்த யவனனுக்கும் உரிமை கிடையாது. இதை என்னைவிட நன்றாக அறிந்தவர் வேறு யாருமில்லை ” என்று.

“அறிந்துதான் ராணிக்கு மயக்க மருந்தை அளித்தாயா?”

“ஆம், ராணி! அறிந்துதான் அளித்தேன். அதோ உங்கள் கையில் மின்னும் அன்னப்பறவை ஆபரணம் யவன அரச குடும்பச் சின்னம்! யவன அரச குடும்பம் யவனப் பொது மக்களின் பெருமைச் சின்னம். ஆகவே யவன மக்களின், யவன நாட்டின் பெருமையை அதிகப்படுத்தவும், அதற்காக மாநிலப் பகுதிகளைப் பல இடங்களில் சேர்க்கவும் யவன குருமார்கள் திட்டமிட்டார்கள். ஐந்து கிரகங்கள் உச்சமாயுள்ள நீங்கள் அதற்கு உதவியாயிருப்பீர்கள் என்று எண்ணி என் துணை யுடன் உங்களை இங்கு அனுப்பினார்கள். ஆனால் இங்கு வந்த பின் நடந்த கதை வேறு. யவன நாட்டு ராணி தன் கடமையை மறந்தார்கள். பதவியை மறந்தார்கள். வந்த பணியை மறந்தார்கள், கேவலம் ஒரு தமிழனுக்கு அடிமையானார்கள். பேரரசர்களும், ராணிகளும் கடமையை முன்னிட்டுத் துறக்க வேண்டிய காம இழிகடலில் விழுந்தார்கள். அழுந்தவும் இருந்தார்கள்…” என்று சொல்லிக் கொண்டே போன டைபீரியஸ் ராணியைத் தன் கூரிய விழிகளால் ஒருமுறை நோக்கினான்.

ராணி பதிலேதும் சொல்லாமல் மேற்கொண்டு சொல்’ என்பதற்கு அடையாளமாகக் கையை மட்டும் ஆட்டினாள். “அந்தக் கடலிலிருந்து ராணியைத் தப்புவிப்பது என் கடமையாயிற்று. இந்நாட்டை நெருங்குமுன் கடற் கொள்ளைக்காரர்களால் நமது கப்பல் எரிந்து போனபோது உங்களைக் காப்பாற்றியது பெரிதல்ல ராணி. அதில அழிந்திருந்தால் உங்கள் உயிர் மட்டும் அழிந்து போயிருக்கும். ஆனால் இங்கு உங்கள் உள்ளம், யவன நாட்டின் பெருமை எல்லாம் அழிந்துவிடும் போலிருந்தது. அந்தக் கடலிலிருந்து உங்களைக் காப்பாற்ற முற்பட்டேன்” என்றான் டைபீரியஸ்.

“டைபீரியஸ்!”

“ராணி!”

“கருவூர் வஞ்சியில் என்னைச் சோழர்படை உபதலைவர் இருங்கோவேளிடமிருந்து காப்பாற்றினாரல்லவா?”

“ஆம் ராணி!”

“அதைப்பற்றி உறையூரில் அவரிடம் என்ன கூறினாய்?”

“அவருக்கு யவனர்கள் கடமைப் பட்டிருப்பதாகக் கூறினேன்.”

“இன்னும்…”

“ராணிக்குச் செய்த உதவி என் இதயத்தில் நன்றி எனும் கோலால் என்றும் வரையப்பட்டிருக்கும் என்றேன்.”

“இன்னும்…?”

“சமயம் வரும்போது பிரதி உதவி செய்ய டைபீரியஸ் தவறமாட்டான் என்றும் கூறினேன்.”

“இங்கு வந்தபின் அவர் காவிரிக் கரையில் படகு அமர்த்தச் சென்றாரே அப்பொழுது நான் தப்பச் சொன்னே னல்லவா?”

“ஆம்.”

“நீ என்ன சொன்னாய்?”

“அது நன்றி கெட்ட செய்கையாகும் என்றேன்.”

இதைக் கேட்ட ராணியின் உதடுகள் கோபத்தால் துடித்தன. இகழ்ச்சியும் அவள் முகத்தில் பரிபூரணமாகப் படர்ந்தது. “ஆஹா! யவனர் கடற்படைத் தலைவரே! என்னென்ன பேசினீர்? எப்பேர்ப்பட்ட பொன்மொழிகளை உதிர்த்தீர்! வீரனாயிருப்பவன் இன்னொரு வீரனுக்குத் துரோகம் செய்ய மாட்டான்! நன்றி கொல்லுதல், நம்பிக்கை மோசம் செய்தல் இரண்டையும் யவனர் அறவழி அனுமதிக்காது! ஆஹாஹா! எத்தகைய அறிவுரைகள்! நீர் சொல்லிய ஒவ்வொன்றையும் யவனர் சரித்திரப் பொன்னேடுகளில் பொறிக்கலாம். ஆனால் சொல் ஒன்று செய்கை ஒன்று. நீர் யவனர் சாதியில் எப்படிப் பிறந்தீர்?” என்று கோபத்தினால் என்றுமே வழக்கமில்லாத மரியாதையையும் காட்டிப் பேசினாள் ராணி.

டைபீரியஸ் அவள் பேச்சையும் பேச்சில் தொனித்த ஆத்திரத்தையும் கண்டு மெல்ல நகைத்தான். “ராணி! சரித்திரத்தையும் நீங்கள் காமக் கண்கொண்டு பார்க்கிறீர்கள். நான் யவன குருமார்களின் கட்டளையால் ஒரே துறையில் செலுத்தப்பட்ட கடமைக் கண்கொண்டு பார்க்கிறேன். தவிர நிலைமையைப் புரிந்து கொண்டு நடக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டு சொன்னான்.

“கடமை! நிலைமை! என்ன கடமை அது? என்ன நிலைமையைப் புரிந்து கொண்டாய்?” இம்முறை ராணி பழைய ராணியானாள். மரியாதையைக் கைவிட்டாள். கேள்வியும் கோபத்தில் தோய்ந்தே எழுந்தது.

“யவன ராஜ்யத்திற்குத் தமிழகத்தில் அடிகோலுவது என் கடமை. அதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது என் பொறுப்பு. காவிரிக் கரையில் படகுத் துறையில் உங்கள் பேச்சைக் கேட்டு ஓடியிருந்தால், மீண்டும் உங்களை இளஞ்செழியன் அணுகுவது பிரமாதமல்ல. சோழர் படை உபதலைவரைப் போன்ற சிறந்த வீரனை, அறிவாளியைத் தந்திரக்காரரை நான் என் வாழ்வில் இதுவரை கண்டதில்லை ராணி. உங்களை அவரிடமிருந்து பிரித்தால்தான் யவனர் ஆட்சியை இங்கு நிறுவுவது சாத்தியம். அவர் சோழ நாட்டில் இருக்கும்வரை அது நடவாது, ஆகவே…” என்று சற்றுப் பேச்சை நிறுத்தினான் டைபீரியஸ்.
“ஆகவே?” கவலையுடன் கேட்டாள் ராணி.

“அவர் என்றும் உங்களை அணுக முடியாத இடத்துக்கு அனுப்பிவிட்டேன்” என்று சொல்லி நகைத்தான் டைபீரியஸ்.

“கொன்றுவிட்டாயா?”

“இல்லை. அத்தனை சிறந்த வீரனைக் கொல்ல மனம் வரவில்லை.”

“வேறு என்ன செய்தாய்?”

“யவன நாட்டுக்கு அனுப்பிவிட்டேன்!” பதிலை மெள்ளத்தான் சொன்னான் டைபீரியஸ். ஆனால் மெள்ள வந்த ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு இடியாக ராணியின் தலைமீது இறங்கவே அவள் தலை சுழன்றது. சாளரத்தின் பக்கச் சுவரைப் பிடித்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

அடுத்தபடி டைபீரியஸின் சொற்கள் பேரிரைச்சலுடன் எழுந்தன. “ராணி! எதற்காக வந்தோம் என்பதை மறந்து விட்டீர்கள். நாட்டை மறந்தீர்கள், கடமையை மறந்தீர்கள். குற்றமும் செய்திருக்கிறீர்கள். இதற்கு யவன நாட்டில் என்ன தண்டனை என்பது உங்களுக்கே தெரியும்” என்று சுரீர் சுரீரென ராணியின் உணர்ச்சிகளைத் தீண்டுமாறு கடுமையான சொற்களைப் பிரயோகிக்கத் தொடங்கினான் டைபீரியஸ்.

“குற்றமா?” கோபத்துடன் கேட்டாள் ராணி.

“ஆம். புகாரை யவனர்களுக்கு அளித்துச் சோழப் பேரமைச்சர் எழுதியனுப்பிய சாசன ஓலையை மறைத்தீர்கள். அதை மட்டும் நீங்கள் மறைக்காமலிருந்திருந்தால் இன்று யவனர்கொடி புகார்மீது பறந்து கொண்டிருக்கும். கேவலம், சொந்த உணர்ச்சிகளுக்காக நாட்டு நன்மையைப் பலியிட் டீர்கள். படைத்தலைவனுடன் கருவூருக்கு ஓடினீர்கள். ஆனால் ராணி! உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க ஒரு டைபீரியஸ் இருக்கிறான் என்பதை மறந்துவிட்டீர்கள். இனியாவது கடமையை உணர்ந்து என் சொற்படி நடவுங்கள். இந்த ஓலையில் கையெழுத்திடுங்கள்” என்று மடியிலிருந்து ஓலையை எடுத்து ராணியிடம் நீட்டினான்.

ஓலையைப் படிக்க படிக்க ராணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “டைபீரியஸ்! யவன ராணியிடம் விளையாடி உயிரை இழக்காதே. இதில் ஒருக்காலும் கையெழுத்திடமாட்டேன். என்னை மிரட்ட உனக்கு எத்தனை துணிச்சல்!” என்று கூறிய ராணி,”டேய்! யாரங்கே!” என்று இரைந்தாள். அடுத்த வினாடி ஆயுதபாணிகளாய் உள்ளே நுழைந்த இரு காவலரை நோக்கி, “இவனைச் சிறை செய்யுங்கள்” என்று உத்தரவு இட்டவள் மறுகணம் பிரமித்து நின்றாள்.

வீரர்கள் டைபீரியஸை நோக்கி நகரவும் மறுத்தார்கள். டைபீரியஸ் அந்தக் கட்டடமே அதிரும்படியாகப் பேய்ச் சிரிப்பாகச் சிரித்தான். “டேய்! இந்த ராணியைச் சிறை செய்து கீழ் அறையில் அடைத்து வையுங்கள். மீண்டும் இவர்களை இரவில் சந்திக்கிறேன்” என்று உத்தரவும் இட்டான். இம்முறை காவலர் தயங்கவில்லை. உருவிய வாட்களுடன் ராணியை நெருங்கினர்.

Previous articleYavana Rani Part 1 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here