Home Sandilyan Yavana Rani Part 1 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

120
0
Yavana Rani Part 1 Ch37 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch37 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 37 யவன மந்திரம்! பூதத்தின் தந்திரம்

Yavana Rani Part 1 Ch37 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

உருவிய வாட்களுடன் தன்னை நோக்கி நகர்ந்த யவனக் காவலரையும், தானிருந்த இடத்திலிருந்து பத்தடி எட்டத் தள்ளி நின்று தன்னை நோக்கிப் பேய்ச் சிரிப்பாகச் சிரித்த யவனர் கடற்படைத்தலைவனையும் மிக அலட்சியமாகப் பார்த்த யவனராணியின் மனத்தில், ‘உணர்ச்சிகளைச் சிறிதும் சிதறவிடும் பழக்கம் இல்லாத டைபீரியஸே உணர்ச்சிகளுக்கு முழுதும் இடம் கொடுத்து இரைந்து இடியெனச் சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டானே’ என்ற எண்ணம் ஏற்படவே அவள் தன்னைப் பெரிதும் திடப்படுத்திக் கொண்டு, ‘என்ன இருந்தாலும் ராணி ராணிதான், அடிமை அடிமைதான்’ என்பதை டைபீரியஸுக்கு வலியுறுத்திக் காட்டுவதற்காக முகத்தில் ஏளனச் சிரிப்பு ஒன்றைப் படரவிட்டுக் கொண்டதன்றி, சற்று நிமிர்ந்தும் கம்பீரமாக நின்று கொண்டாள். ராணியைத் தான் சிறைசெய்ய உத்தர விட்டதுமே அவள் முகத்தில் இளஞ் செழியனைப் பற்றி ஏற்பட்ட கவலை உணர்ச்சி மறைந்து விட்டதையும், அவள் முகத்தில் புன்முறுவல் படிந்ததன்றிக் கண்களிலும் அலட்சியப் பார்வை ஏறிவிட்டதையும் கவனித்த டைபீரியஸ், தன் பேய்ச் சிரிப்பைச் சற்றே அடக்கிக் கொண்டு, ராணியை நோக்கி நகைத்துவிட்ட தவற்றை உணர்ந்தவன் போல் மரியாதையுடன் தலையையும் தரையை நோக்கித் தாழ்த்தினான். டைபீரியஸின் பேய்ச்சிரிப்பைக் கண்டு ராணி எப்படிக் கலங்கவில்லையோ, அப்படியே அவன் காட்டிய மரியாதையைக் கண்டோ தலை தாழ்த்திச் செய்த வணக்கத்தைக் கண்டோ சிறிதும் மசியாமல் அவனை உற்றுப் பார்த்த வண்ணம் நின்றாள். அவளுடைய கால்கள் திடீரெனக் குவிந்த முறை, சாளரத்தில் துவண்டு சாய்ந்து கிடந்த உடல் திடீரென நிமிர்ந்த வகை, முகத்தில் பட்டென்று பளிச்சிட்ட கம்பீரம், உதடுகளில் தோன்றி அப்பொழுதும் தவழ்ந்து கொண்டிருந்த ஏளனப் புன்முறுவல்-இவையனைத் தையும் நொடிப்பொழுதில் டைபீரியஸ் மட்டுமன்றி, யவன ராஜ குடும்பத்தை அணுகுவதையே குற்றமெனக் கருதக்கூடிய யவனக் காவலரும் அறிந்திருந்தார்களாதலால், ராணியை நெருங்கிய அந்தக் காவலர் அடுத்து என்ன செய்வதென்பதை அறியாமல் டைபீரியஸைத் திரும்பி நோக்கினர்.

ஆனால் டைபீரியஸின் கண்கள் அவர்களைத் திரும்பி நோக்காமலும் அடுத்தபடி செய்ய வேண்டியதைக் குறித்து எந்தவித ஜாடையும் காட்டாமலும் மெள்ள மேலெழுந்து ராணியின் கண்களையே சந்தித்து நின்றன. ஈட்டிகளை விடக் கூர்மையான அந்த நீலமணிக் கண்களை நீண்ட நேரம் பார்க்க முடியாத காரணத்தாலோ என்னவோ மறுபடியும் கண்களைக் கீழே தாழ்த்திய டைபீரியஸ் தரையைப் பார்த்துக் கொண்டே ராணியிடம் பேச முற்பட்டு, “ராணி, இன்று உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்கிறேனென்றால் அதற்குக் காரணம் தாங்கள் தான். என்னிடம் கோபப்பட்டுப் பயனில்லை. நீங்கள் யவன நாட்டுப் பெருமையை, யவன மக்கள் அபிலாஷைகளை, யவன குருமார்களின் கட்டளையை நினைப்பில் வைத்துக் கொண்டிருந்தால், உங்கள் உணர்ச்சிகளின் முன்னணியில் அவற்றைப் பிரதானமாக வைத்து நடந்து கொண்டிருந்தால், இன்று நீங்களிருக்கும் நிலை மட்டுமல்ல, புகாரின் நிலையும் வேறாயிருந்திருக்கும். ஆனால், நிலைமையைச் சிக்கலாக்கி விட்டீர்கள். சிக்கலை அவிழ்க்கும் தருணம் இது. இதை விட்டால் மறுதருணம் கிடைப்பது கஷ்டம். ஆகவே, அந்த ஓலையில் கையெழுத்திட்டுக் கொடுங்கள். மறுக்காதீர்கள். மறுத்து என்னைச் சங்கடமான நிலைக்கு உள்ளாக்காதீர்கள்” என்றான்.

ராணி மீண்டுமொருமுறை தன் கையிலிருந்த ஓலையைப் பிரித்துப் படித்துப் பார்த்தாள். இம்முறை அவள் ஓலையைப் படித்த போது அதில் பதட்டமில்லை. உடல் நடுங்கவில்லை, உணர்ச்சிகள் கொந்தளிக்கவும் இல்லை. மிக நிதானமாகவே படித்துவிட்டு அந்தப் பழைய ஏளனச் சிரிப்புடனேயே டைபீரியஸைப் பார்த்து, “இந்த ஓலையில் நான் கையெழுத்திட்டால்…” என்று வினவினாள்.

“தாங்கள் புகாரின் ராணியாவீர்கள்” என்று பதில் சொன்னான் டைபீரியஸ் அமைதியாக.

“தாங்கள் என்னுடைய பேரமைச்சராகவும் படைத் தலைவராகவும் பதவியேற்பீர்கள்!” என்று கேள்வி கேட்பது போல ஓலையிலிருந்த விஷயத்தை விவரித்தாள் ராணி.

“ஆம் ராணி!”

“பிறகு…?”

“புகார் யவனர் படைத்தளமாகும்.”

“எப்படி?”

“புகாரில் தற்சமயம் ஐயாயிரம் யவன வீரர்கள் இருக்கிறார்கள்.”

“அத்தனை பேர் இருக்கிறார்களா?”

“ஆம் ராணி, அத்தனை பேர் இருக்கிறார்கள். புகாரின் பாதுகாப்பே யவனர் கைகளில் தானிருக்கிறது.”

“தமிழர் படை ஏதுமில்லையா?”

“இருக்கிறது ராணி, ஆனால் புகாரில் இருக்கும் படை சொற்பம், சுமார் ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள்.”

“ஏன் அத்தனை குறைவாகச் சோழ மன்னர்கள் தமிழ் வீரர்களை இந்த முக்கியத் துறைமுகப் பட்டினத்தில் வைத்திருக்கிறார்கள்?”

“யவனர்கள் மீது அத்தனை நம்பிக்கை அவர்களுக்கு.”

“ஓ அப்படியா?” என்று சொன்ன ராணி, மெள்ள நகைத்தாள்.

“ஏன் சிரிக்கிறீர்கள் ராணி!” என்று வினவினான் டைபீரியஸ், யோசனைகள் எங்கெங்கோ பறந்து கொண் டிருந்ததால் அவள் சிரிப்பின் காரணத்தை ஊகிக்க முடியாமல்.

“யவனர்கள் மோசச் செயலில் இறங்கி விட்டார்களே என்று சிரிக்கிறேன் டைபீரியஸ். நேர்மைக்கும் வீரத்துக்கும் பெயர் போனதால் யவனர்களால் தேவதூதன் என மதிக்கப்படும் யவனர் கடற்படைத் தலைவன் நம்பிக்கை மோசமாகிற இழிசெயலில் இறங்குகிறானே என்பதை நினைத்துச் சிரிக்கிறேன். இத்தகைய இழிசெயலில் நிறுவப் படும் அரசு எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று நினைத்துச் சிரிக்கிறேன்” என்றாள் ராணி.

“சாதாரண வாழ்க்கை முறைக் கொள்கைகளும் கோட்பாடுகளும் ராஜீய வாழ்க்கைக்கு ஒவ்வாது ராணி! தினசரி வாழ்க்கைத் துறையில் தனி மனிதன் கொண்டாடும் நம்பிக்கை மோசம் ராஜீயத் துறையில் ராஜதந்திரம் எனப்படும். தனி மனிதன் இன்னொருவனுடைய உயிரை வாங்குவது கொலை. அதே கொலையை மனிதர்கள் கூட்டமாகப் பெரு அளவில் செய்யும் போது அது போர் என்ற புனிதச் சொல்லால் அழைக்கப்படுகிறது. இரண்டுக்கும் அடிப்படை வேறு. தத்துவங்கள் வேறு” என்று டைபீரியஸ் விளக்கினான்.

டைபீரியஸ் மிகச் சாவதானமாக விளக்கிய தத்துவங்கள் எத்தனை உண்மையென்பதை ராணி அறிந்திருந்தாலும் கபடமான முறைகள் பலவற்றைக் கையாண்டாலும் முடிவு பயன் தருமானால் அவை ‘ராஜதந்திரம்’ என்ற போர்வைக்குள் அடங்கிவிடுமென்பதையும் அவள் சந்தேகமற உணராததுபோலேவே பேசத் தொடங்கி, “உன் தத்துவங்களை அரசியல் தந்திர முறைகளை, நான் ஒப்புக் கொள்ளவில்லை டைபீரியஸ். அவை யவனர்களுக்கு உதவுவதற்குப் பதிலாகத் தீமையையே விளைவிக்கும். ராஜதந்திரங்கள் பல உண்டென்றாலும் அறவழியில் அரசு சம்பாதிப்பதை நமது குருமார்களும் தடுக்கவில்லை. தமிழர் அரசியல், யவன அரசுக்குத் தொலைதூரத்தில் இன்று நாமிருக்கிறோம். இங்கிருப்பவர் களை நம்பிக்கை மோசம் செய்து வென்றோம் என்றால் மக்கள் கொதித்தெழுவார்கள். பெரு வீரர்களாயிருக்கலாம். ஆனால் எழுந்துவரும் கடலை எதிர்த்து நிற்க முயன்ற பேதையின் கதையாகவே அது முடியும்” என்றாள் ராணி.

“அதையும் யோசித்தேன் ராணி. ஒரு நடவடிக்கையை எடுக்கும் போது பலாபலன்களை யோசிக்காமல் நடவடிக்கை எடுப்பேனென்று நீங்கள் நினைப்பதானால், உங்கள் கடற்படைத் தலைவனைப் பற்றி எத்தனை தாழ்மையான அபிப்பிராயம் தங்களுக்கு இருக்க வேண்டும்?” என்று கூறிச் சற்று வருத்தப்படுபவன் போல் பாசாங்கு செய்த டைபீரியஸ் மேலும் சொன்னான்: “ராணி! தமிழர்கள் யவனர்களை நம்பி இந்தக் கோட்டையை அவர்கள் காவலில் வைத்திருக்கிறார்கள். யவனர்களும் நெடுங்காலமாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறார்கள். ஆகவே தமிழர்கள் அந்தப் பணிக்குப் பரிசாக இந்தப் பூம்புகாரை யவனர்களுக்கு அளிக்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது? மன்னனான இருங்கோவேளே இதை நமக்களித்திருக்கிறான். யவனர்களாக அபகரிக்கவில்லையே இதை….?”

“இருங்கோவேள்! கொலைகாரன்” என்றாள் ராணி.

“அதைப்பற்றி நமக்கென்ன ராணி? ஒருவரையொருவர் கொலை செய்து கொள்ளத் தமிழர்களுக்கு உரிமை யில்லையா?” என்று டைபீரியஸ் மேலும் தன் கருத்தைச் சொல்ல முற்பட்டு, “ராணி! தமிழர் அரசியல் குழப்பங்கள் நமது முன்னேற்றத்துக்கு அவசியம். இளஞ்சேட் சென்னியை இருங்கோவேள் கொலை செய்திருக்கிறான். இதனால் அவனுக்கு எதிர்ப்பு இருக்கிறது. புகாரை நமக்கு அளிக்கிறான் அவன்மீது வெறுப்பு இன்னும் அதிகமாகும். ஆகவே மக்கள் நோக்கம் அவனை அழிப்பதில் முனைந்து நிற்கும். மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க இருங்கோவேள் குரூர வழிகளில் இறங்குவான். அப்பொழுது புகார் சரியாக ஆளப்பட்டால் இங்கு சீரும் சிறப்பும் மிகுந்து கிடந்தால், மக்கள் இந்த ஆட்சியை விரும்புவார்கள். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, யவன வீரர் என்ற வெள்ளம் இந்த வாயில் வழியாகப் பிளவுபட்ட தமிழகத்தில் பாயும். யவன சாம்ராஜ்யம் இங்கும் விரியும். இங்கு தமிழர்களுக்கு அமைதி நிலவும். யவனர் ஆயுத பலம் மக்களைக் காத்து நிற்கும். அதன் பலனாக யவனர்கள் நாடு பொன்னாலும் முத்தாலும் மணியாலும் வளப்பம் பெறும். இப்பொழுதும் தமிழர் வாணிபத்தால் நமது நாட்டுச் செல்வம் இங்கு வருகிறது. அப்பொழுது இந்நாட்டுச் செல்வம் அங்குச் செல்லும். யவனர் ஆளும் வர்க்கமாக மாறுவார்கள். தமிழர்களிடம் இன்றிருப்பது போல நாம் சேவை செய்ய மாட்டோம். அவர்கள் நம்மிடம் சேவை செய்வார்கள்” என்றான்.

டைபீரியஸின் கண்கள் கனவுலகத்தில் சஞ்சரித்தன. யவனர்களின் பெரிய ஏகாதிபத்தியத்தை, எங்கும் விரிந்த பேரரசை, தமிழகத்தை வளைத்துக் கொண்ட பெருவலையை அகக் கண்களில் கண்டான். அவன் புறக் கண்கள் ஏதோ மயக்கத்தில் இருப்பன போல் தெரிந்தன. உதடுகள்

வார்த்தைகளைச் சில வேளைகளில் மென்மையுடனும் உதிர்த்தன. அவன் நிலையை ராணி கண்டாள். உணர்ந்தாள். யவன ஏகாதிபத்ய வெறியின் வலையில் அவன் சிக்கிச் சுழல்வதைப் பார்த்துப் பரவசப்பட்டாள். அதே சமயத்தில் தனக்கு அடிபணிய வேண்டியவன் தன்னை மயக்கத்தி லாழ்த்திச் சிறையெடுத்து வந்திருக்கிறான். தன்னிஷ்டப்படி ஓர் ஓலையில் கையொப்பத்தினை இடச் செய்கிறான் என்ற நினைப்புகள் அவள் உள்ளத்தில் எழுந்ததாலும் இளஞ்செழி யனைத் தான் மீண்டும் சந்திக்க முடியாத இடத்துக்கு அனுப்பிவிட்டானே என்ற துடிப்பினாலும், மீண்டும் தன் பிடிவாதத்தையே காட்ட முயன்ற ராணி, “உன் கனவு எனக்கும் உண்டு டைபீரியஸ். யவன அரசு விரிவடைவதில் என்னை விட உனக்கு அக்கறையிருக்க முடியாது. ஆனால் தமிழகத்தை நீ கைப்பிடிக்க முயலும் முறை தற்சமயம் ஆபத்தானது. நீ நினைப்பது போல் இருங்கோவேள் அத்தனை பலமானவனல்ல. இன்று உள்ள பலமும் அவனுக்குச் சேரன், பாண்டியன் இவர்கள் உதவியால் கிடைத்திருக்கிறது. அந்த உதவி அகன்றால் அவன் அரசாள முடியாதது மட்டுமல்ல, அவன் கதியே அதோகதியாகும்! அவன் இன்று நமக்கு சாஸனம் செய்யும் புகாரும் அவன் கதியே அடையும். ஒரு அயோக்கியனை அண்டியதால் மக்கள் நம்மை வெறுப்பார்கள். லட்சக்கணக்கான உள் நாட்டு மக்களின் ஆவேசத்தை ஐயாயிரம் என்ன, பத்தாயிரம் யவனரும் அடக்க முடியாது. ஆகவே இந்த ஓலையில் கையெழுத்திட்டு நானும் நீயும் ராணியும் அமைச்சருமாக மாறுவது இங்குள்ள யவனர்களின் பிற்காலத்தை உருக்குலைப்பதாகும். தவிர யவன குருமார்கள் நம்பிக்கைக்கும் முரண்பாடாகும்” என்றாள்.

“என்ன! யவன குருமார்கள் நம்பிக்கைக்கு முரண்பாடா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் டைபீரியஸ்.

“ஆம். டைபீரியஸ்! யவன குருமார்கள் என்ன சோதிடம் கூறினார்கள் தெரியுமா?”

“தெரியுமே. தாங்கள் புகாரின் ராணியாவீர்கள் என்று சொன்னார்கள்.”
“அது மட்டுமல்ல டைபீரியஸ்! நான் தமிழகம் வந்ததும் ஒரு தமிழனைச் சந்திப்பேன். யவன அரசை நிறுவ அவன் உதவுவான் என்றும் கூறினார்கள்.”

“ஆமாம்.” டைபீரியஸ் மெள்ளப் பதில் சொன்னான்.

ராணியின் அடுத்த சொற்களில் வெறுப்புக் கலந் திருந்தது. “நமக்கு உதவக்கூடிய ஒரே தமிழனை யவன நாட்டுக்கு அனுப்பிவிட்டாய். இந்த மண்ணை நான் தொட்ட முதல் நாளே என்னைக் காத்தவர் சோழர் படை உபதலைவர். பிறகு ஒவ்வொரு சமயத்திலும் என்னைக் காத்திருக்கிறார். வந்திருந்த அன்றே அவரிடம் நான் சொன்னேன், விதி எங்கள் இருவரையும் பிணைத்திருக்கிறதென்று. அவர் நம்பவில்லை. நான் நம்பினேன், ஹிப்பலாஸ் நம்பினான். அந்த நம்பிக்கைக்கு அத்தாட்சிகள் தொடர்ந்து வந்தன. அவர் இதயத்தை நான் பிளந்தேன். நான் இந்த நாட்டுக்கு வரும்வரை அவர் இதய மண்டபம் ஒன்றாயிருந்தது. ஒரே ஒரு சிலை அதில் வாசம் செய்தது. அந்த மண்டபத்துக்கு நான் குறுக்குச் சுவர் எடுத்தேன். ஒரு மண்டபத்தை இரண்டாக்கினேன். ஒரு அறையில் நானும் அமர்ந்தேன். இரண்டுபட்ட இதயத்துடன் அவர் திண்டாடினார். விதி அவரையும் என்னையும் இணை பிரியாமல் சேர்த்தே வைத்தது. இன்னும் சில நாட்களில் அந்த இதய மண்டபம் முழுதுமே எனக்குச் சொந்த மாயிருக்கும். அவர் உதவியால் புகாருக்கு ராணியாகி யிருப்பேன். இது யவன குருமார்கள் சோதிடத்துக்கும் சரியாயிருந்திருக்கும். இந்தப் பிரவாகத்துக்குக் குறுக்கே நீ அணை போட்டிருக்கிறாய் டைபீரியஸ். அந்த அணை நிலைக்காது. மனிதர் திட்டப்படி காரியங்கள் நடப்பதால் விதியின் கரத்துக்கு வலுவிருக்குமா? பொறுத்துப் பார் டைபீரியஸ்” என்றாள்.
பொறுத்துப் பார்க்கும் நிலையில் டைபீரியஸ் இல்லை. யவன ஆதிக்கத்தைத் தவிர வேறெதுவும் தெளிவான அவன் சிந்தைக்கு எட்டவில்லை. அவனும் யவனன்தான். விதியின் நம்பிக்கை உள்ளவன்தான். ஆனால் டைபீரியஸ் பெருவீரன். அந்தந்தச் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் அனுகூலங்களை நழுவவிட இஷ்டமில்லாதவன். ஆகவே புகாரைத் தன் கையிலிருந்து நழுவ விடக்கூட இஷ்டமில்லாமல் ராணியைப் பார்த்துத் திட்டமாகச் சொன்னான்: “ராணி! படைத்தலைவன் என்ற முறையில் நான் கற்ற வித்தை இதுதான். புகாரை இருங்கோவேள் நமக்களிக்கிறான். நீங்கள் பேரமைச்சரின் சாசன ஓலையை மறைக்காத பட்சத்தில் அப்பொழுதே புகாரின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன். நாட்கள் சில கடந்து விட்டன. இன்னும் காரியம் மிஞ்சிவிடவில்லை. ஆகவே சோழ மன்னன் வெகுமதியை அங்கீகரிக்கும்படி உங்களைக் கேட்கிறேன். கிழக்குப் பகுதியில் பெரும் கோட்டை வலுவுள்ள ஒரே துறைமுகம் புகார். இதை அடைவதாலுண்டான அனுகூலங்களை நான் அறிவேன். ஓலையில் கையெழுத் திடுங்கள். இல்லையேல்…”

“இல்லையேல்…?” ராணி கேட்டாள் அலட்சியமாக.

“இல்லையேல் உங்கள் சார்பில், யவனர் சார்பில் நான் அங்கீகரிப்பேன் புகாரை?”

“நான் மறுத்தால்?”

“மறுக்கும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள்.”

“என்னைச் சிறையிடுவாய்?”

“நான் விரும்பாத அந்தப் பணிக்கு என்னை ஏவாதீர்கள்?”

ராணியின் கண்களில் லேசாகக் கோபம் துளிர்த்தாலும் அதை அவள் உடனே மறைத்துக் கொண்டாள். “புகாரை இந்தத் தருணத்தில் என் வசமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை டைபீரியஸ்” என்று தன் கருத்தைத் திட்டமாகச் சொன்னாள்.

டைபீரியஸின் உள்ளத்தில் எத்தனை எத்தனையோ உணர்ச்சிகள் எழுந்து தாண்டவமாடினாலும் அவன் முகம் மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கல்லாயிருந்தது.

“அப்படியானால் காவலரைத் தொடர்ந்து செல்லுங்கள் ராணி!” என்று வறட்டுக் குரலில் கூறினான் டைபீரியஸ்.

ராணி அவனை நன்றாக ஏறெடுத்து நோக்கினாள். அவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லையென்றாலும், அந்தச் சமயத்தில் தன் திட்டங்களை நிறைவேற்றுவதில் டைபீரியஸ் உறுதி கொண்டிருக்கிறானென்பதையும் அதற்காகத் தன்னைச் சிறை செய்வதை ஒரு கடமையாகவே கருதுகிறானெனன்பதையும் அந்தக் கல் முகத்திலிருந்தே உணர்ந்து கொண்டாளாதலால், அவள் வேறெதுவும் பேசாமல் வீரர்களைத் தொடர்ந்து சென்றாள். டைபீரியஸ் உத்தரவிட்டதும் அவளை முதலில் அணுகிய வீரர்கள், அவர்கள் இருவருக்கும் நடந்த தர்க்கத்தைக் கேட்டதும் பெரிதும் திகைத்து விட்டார்களாதலால், ராணியை அதிகமாக நெருங்காமல் சற்றுத் தள்ளியே நடந்து இந்திரவிழா விடுதியின் கீழறையொன்றில் அவளைப் புகச் செய்து வாயிலிலே நின்று கொண்டார்கள். காவலர் தன்னைத் தொடர்ந்து உள்ளே வரவில்லையென்றாலும் வாயிலில் காவல் செய்கிறார்களென்பதைப் புரிந்து கொண்ட ராணி, அறையை சுற்றுமுற்றும் கவனித்தாள். ஒரு அரசிக்கு வேண்டிய சகல சௌகரியங்களும் அந்த அறையில் இருந்ததைக் கவனித்த ராணி தன்னைச் சிறை செய்யும் முன்னேற்பாட்டுடனேயே டைபீரியஸ் நடந்து கொண்டிருக்கிறானென்பதையும் புரிந்து கொண்டாள். அறை விசாலமாயிருந்தது. அறையின் இருகோடிகளில் உள்ளறைகளும் இருந்தன. ஸ்நான அறை, படுக்கை அறை, ஓய்வெடுக்கும் அறை எனப் பல அறைகள் அந்தப் பெரு அறைக்குள்ளேயே இருந்ததைப் பார்த்த ராணி, ‘இது சோழ நாட்டு ராணிகள் தங்கும் அறைகளில் ஒன்றாயிருக்க வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டாள். அந்த அறையின் தெற்கோடியிலிருந்த சாளரத்தை அணைத்துக் காவிரி ஓடிக் கொண்டிருந்தது. அந்தச் சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்த ராணி, எதிரே தெரிந்த வாணகரைக் குன்றையும், அதன் பலமான கோட்டை வரிசைகளையும் கண்டு பெருமூச்செறிந்தாள். அந்தக் கோட்டையின் தலைவன் யவன நாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறான் என்பதை அங்குள்ள குமரன் சென்னியும் பரத வல்லாளனும் அறிவார்களோ என்னவோ என்று நினைத்து, விடை காணாது கலங்கினாள் ராணி. டைபீரியஸ் ஒரு காரியத்தில் முனைந்தால் அதைத் திட்டமாகச் செய்து முடிப்பானென்பதில் சிறிதும் சந்தேகமில்லாத ராணி, இளஞ்செழியன் கதியை நினைத்துப் பெரும் கவலை கொண்டாள். இளஞ்செழியன் நிலை பற்றிய தகவலை வாணகரைக் குன்றுக்கு எப்படி அனுப்பலாமென்பதை அன்று பகல் முழுவதும் யோசித்துப் பார்த்தாள். யோசனை சிறிதும் பயன் தராததால் பெரிதும் வியாகூலத்திற்கு உள்ளானாள்.
தனக்கு உணவு கொண்டுவந்த பணியாட்களிடமும், உடையையும் ஆபரணங்களையும் கொண்டு வந்த யவனப் பணிப் பெண்களிடமும் புகாருக்குச் சமீபத்தில் வந்த யவனர் கப்பலின் பெயர் என்ன? என்று அந்தக் கப்பல் புறப்பட்டது’ என்பதை விசாரிக்க அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீணாயின. பணியாட்களும் பணிப்பெண்களும் அவளுக்கு எந்தவிதப் பதிலும் சொல்லத் தரமற்றவர்களாக இருந்தார்கள். மேலுக்கு மரியாதை காட்டினார்கள். “ராணி! ராணி!” என்று பயந்து பயந்து அழைத்தார்கள். ஆனால் அந்த மரியாதையும் மேற்பூச்சாகவே இருந்தது. அவர்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது தானல்ல, டைபீரியஸ்தான் என்பதை ராணி உணர்ந்தாள். உணர்ந்ததால் எதற்கும் சோகம் கொள்ளாத ராணிகூட பெரும் சோகத்துக்குள்ளானாள்.

பகல் சென்று இரவு வந்தது. ஆனால் அந்த இரவும் எந்தச் சாந்தியையும் அளிக்கவில்லை அவளுக்கு. சில வினாடிகள் படுக்கையிலும் பல வினாடிகள் பலகணிக்கருகிலுமாகக் காலத்தை ஓட்டினாள். அந்தப் பலகணியும் முதல் ஜாமத்திற்குப் பிறகு சாத்தப்பட்டு அதன் வெளிப்புறங்கள் பெரும் இரும்புச் சலாகைகளால் இறுக்கப்படுவதை ராணி அறிந்தாள். அறையின் வாயிற்கதவுகள் மட்டும் மூடப்படாமலிருந்தாலும் அவற்றை வீரர்கள் காத்து நிற்பதை அவள் உணர்ந்தாள். அன்று முழுவதும் டைபீரியஸ் அவளை வந்து பார்க்கவே இல்லை. நாழிகை ஓட ஓடச் சங்கடப்பட்ட ராணி அந்தப் பெரு அறையின் நடு மஞ்சத்திலேயே படுத்துப் புரண்டாள். இரண்டாவது ஜாமமும் முடிந்தது.

அதற்குமேல் தனக்கு உதவி ஏதும் வரக் காரணமில்லை யென்பதையும், இனி தான் டைபீரியஸின் அடிமைதான் என்பதையும் புரிந்து கொண்ட ராணி, ஓரளவு மனோ தைரியத்தை இழக்கவும் தொடங்கினாள். அவள் நினைவு, கடலில் எங்கோ சென்று கொண்டிருந்த இளஞ்செழியனைத் தொடர்ந்து சென்றது. அதனால் ஓரளவு சாந்தி பெற்ற ராணி மஞ்சத்தில் சயனித்துச் சிறிது நேரம் கண்களை மூடினாள். அப்புறம் தூக்கம் வராததால் எழுந்திருந்து அந்தப் பெரு அறையின் மூலையிலிருந்த உள்ளறைப் பஞ்சணையில் படுக்கச் சென்றாள்.

மூன்றாவது ஜாமம் ஏறிக் கொண்டிருந்ததால் புகாரின் அரவம் அடங்கிவிட்டதன் விளைவாக இருப்புச் சலாகையில் பிணைக்கப்பட்ட பெரும் சாளரத்தின் மூலம் வந்து கொண் டிருந்த ஜனநடமாட்ட ஓசை அடங்கிக் காவேரிப் பிரவாக ஒலி மட்டுமே ஓங்கி நின்றதால் அச்சமூட்டும் அமைதியே அந்த அறையில் பரவிக் கிடந்தது. அந்த நிசப்தத்தைக் கூட லட்சியம் செய்யாமல் ராணி உள்ளறைக்குச் சென்று பஞ்சணையில் படுத்தாள். கண்களையும் அசதியால் சற்றே மூடி, உறங்க முயன்றாள். அப்படிக் கண்களை மூடினாலும் உறக்கம் பிடிக்காததால் விழித்தே சிலையெனக் கிடந்த ராணி திடீரென எச்சரிக்கை யடைந்தாள். அவள் படுத்திருந்த கட்டில் மெள்ள மெள்ள யாராலோ அசைக்கப்படுவதுபோல் தோன்றியதால் ராணி மூச்சைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தாள். இருமுறை அசைக்கப்பட்டதால் ஆடிய கட்டில் பிறகு அறையின் ஓர் ஓரத்தை நோக்கி மிக மெதுவாக நகரவும் தொடங்கியது.

ராணி பிசாசுகளில் நம்பிக்கையில்லாதவள் தான். ஆனால் இரவில் ஒரு கட்டில் தானாக நகர்ந்தால் யாரைத்தான் அச்சம் அணுகாது? ஆகவே ஓரளவு அச்சத்துடனேயே ராணி மெள்ளப் பஞ்சணையில் புரண்டு மஞ்சத்தின் அடிப்பாகத்தை நோக்கினாள். அங்கு யாரும் இருப்பதாக ராணிக்குத் தெரியாததால் அவள் பீதிக்கும் குழப்பத்துக்கும் இலக்கானாள். பூம்புகாரை டைபீரியஸ் அடிமைப்படுத்த முயலுவதால், அந்தப் பெரும் துறைமுக நகரின் காவல் தேவதையான நாளங்காடிக் காவற்பூதமே தன் கட்டிலை அசைத்தெடுத்துச் செல்கிறதோ என்று நினைத்த ராணி மெள்ள நடுங்கவும் செய்தாள். அவள் நடுக்கத்திற்கு நியாயம் கற்பிக்கும் முறையில் கட்டிலுக்குச் சற்றுத் தூரத்திலிருந்த சாளரமும் யார் உதவியுமின்றி மெள்ள அசையத் தொடங்கியது. இது காவற்பூதத்தின் தந்திரம்தானென்று தீர்மானித்துக் கொண்ட ராணி, மஞ்சத்திலேயே மண்டியிட்டு உட்கார்ந்து நீண்ட நேரம் யவன குருமார்கள் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை ஓதி, பயத்திலிருந்து விடுபட முயன்றாள். அந்த மந்திரம் அவள் உள்ளத்தே ஒலித்தது. ஆனால், காதில் ஒலித்தன, “ராணி! ராணி!” என்ற சொற்கள் தெளிவுடன் இருமுறை. அந்தக் குரலை எங்கோ கேட்டது போலிருந்தது ராணிக்கு. ஆனால் உருவம் ஏதுமில்லாமல் அந்த ஒலி மட்டும் எப்படிக் கேட்கிறது என்பது புரியாததால் ராணி கண்களை விழிக்காமலே, “யார் நீ?” என்று கேட்டாள். பதில் திடமாகவும் மெள்ளவும் வந்தது. பதிலைக் கேட்டதும் உடல் சிலிர்த்தது ராணிக்கு. ‘என்ன அதிசயம்! இது எப்படிச் சாத்தியம்!’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ராணி.

Previous articleYavana Rani Part 1 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here