Home Sandilyan Yavana Rani Part 1 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

78
0
Yavana Rani Part 1 Ch38 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch38 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 38 நீரும் நிலவறையும்

Yavana Rani Part 1 Ch38 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

நள்ளிரவு தாண்டிக் கொள்ளையிருள் சூழ்ந்துவிட்டதால் குலை நடுக்கம் தரும் அமைதி மண்டியிட்ட மூன்றாம் ஜாமத்தில், பள்ளியறைப் பஞ்சணை யார் உதவியுமின்றித் தானாகவே நகர்ந்ததாலும் அந்த உள்ளறையின் சிறு சாளரமும் இடம் மாற ஆரம்பித்ததாலும், அத்தனையும் நாளங்காடிக் காவற்பூதத்தின் சேஷ்டையாகத்தானிருக்க வேண்டுமென்று தீர்மானித்து மஞ்சத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து பூதத்தை விரட்ட யவன நாட்டு மந்திரங்களை ஓதிய ராணி, தன்னை யாரோ இருமுறை அழைக்கத் தொடங்கியதும் ஒரு வினாடி அதுவும் பூதத்தின் விவகாரமாகத் தானிருக்குமென்று நினைத்தாலும் மறு வினாடி அந்தக் குரலொலியை அடையாளம் கண்டு பிடித்து விட்டாளாதலால், அந்த அறையில் நடந்த விசித்திரங்களில் மனித முயற்சியும் கலந்திருக்கிறதென்று உணர்ந்து ஓரளவு தைரியம் கொண்டாள். அப்படித் தைரியம் ஏற்பட்ட பின்பும் பக்கத்தேயிருந்த பிரதான அறையின் வாயிற்காவலர் கண்ணிமை கொட்டாமல் பாதுகாத்து உலாவும் அரவம் ஏற்பட்டதாலும், சாளரங்களையும் முன்னெச்சரிக்கையாக டைபீரியஸ் மூடி இருப்புச் சலாகைகளைக் கொண்டு தாழிடவும் ஏற்பாடு செய்திருந்ததை ராணி அறிந்திருந்தபடியாலும், அந்த உள்ளறையில் மனிதர் யாராலும் நுழைய முடியாதென்பதைத் திட்டமாக தெரிந்து கொண்டாளாதலால், ‘இத்தனை கட்டுக் காவல்களைக் கடந்து இவள் எப்படி இங்கு வந்தாள்? எப்பொழுது புகாருக்கு வந்தாள்? புகாருக்கு வந்தாலும் நான் இந்த அறையில் சிறைப்பட்டிருப் பதை எப்படி உணர்ந்தாள்?’ என்ற எண்ணங்கள் பல அலை மோதவே, “அல்லி!” என்று மெள்ள அழைத்தாள்.

அல்லி உடனே பதில் கூறாமல் ராணியை எச்சரிப்ப தற்கு அடையாளமாக அவள் தோள்மேல் கையை வைத்துக் காதுக்கருகில் தன் உதடுகளைக் கொண்டுபோய், “ராணி! பக்கத்துப் பெரு அறையின் வாயிற்கதவுகள் திறந்திருக்கின்றன. காவலரும் கண் விழித்திருக்கிறார்கள். அந்தக் கதவைத் தாழிட்டு வாருங்கள்” என்றாள். அல்லி செய்த எச்சரிக்கையின் அவசியத்தை உணர்ந்த ராணி, “சரி அல்லி! இந்தப் பஞ்சணையிலேயே உட்கார்ந்திரு. இதோ வருகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளறையிலிருந்து பெரிய அறைக்கு வந்து, “யாரங்கே?” என்று அதட்டிக் காவலரை அழைத்தாள். அந்த அதட்டலைக் கேட்டதும் காவலர் இருவரும் உள்ளே ஓடி வரவே அவர்களை நோக்கித் தீ விழி விழித்த ராணி, “இந்த அறையில் நிம்மதியாக உறங்க முடியுமா, முடியாதா?” என்று சீறினாள்.

ராணிக்கு எந்த அசௌகரியம் நேர்ந்தாலும் டைபீரியஸின் சினத்துக்கு ஆளாக வேண்டுமென்பதை அறிந்திருந்ததால் பேரச்சம் கொண்ட காவலர்களிருவரும் ஒரு வினாடி நடுங்கினாலும் அவர்களிலொருவன் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ராணிக்கு நிம்மதி தேவையென்பதற்காகத்தான் கடற்படைத் தலைவர் சாளரங்களைக்கூடத் தாழிடச் சொன்னார்” என்று பணிவுடன் கூறினான்.

“சாளரங்களைத் தாழிட்டுவிட்டு உங்களைக் கூச்சலிடச் சொன்னாரா படைத்தலைவர்?” என்று மீண்டும் கடிந்து கொண்டாள் ராணி.

“நாங்கள் கூச்சலிடவில்லையே ராணி!” என்றான் மற்றொரு காவலன் பணிவுடன்.

“எதற்காக இரவு முழுவதும் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறீர்கள்? எனக்குச் சத்தம் கூடாது என்பதற்காகவா?” என்று ராணி தொடர்ந்து வினவினாள் பொய்ச் சீற்றத்தைக் காட்டி.

“யவன நாட்டில் அரச குடும்பத்தினருக்குக் காவல் புரியும் முறை, ராணி அறியாததல்ல” என்றான் முதல் காவலன்.

“இது யவன நாடு அல்லவே” என்றாள் ராணி.

“அல்ல ராணி!” என்று முதல் காவலன் மறுமொழி கொடுத்தான் குரலில் சற்றே நடுக்கத்தைத் தோற்றுவித்து.

“அப்படியானால் இந்நாட்டு முறைப்படி காவல் புரிந்தால் போதும். குறுக்கும் நெடுக்கும் அலையாமல் அரவம் ஏதும் கேட்காமல் பேசாமல் நின்ற இடத்தில் நின்று காவல் புரியுங்கள். மூன்றாவது ஜாமத்திலும் சில நாழிகைகள் ஓடிவிட்டன. ஒன்றரை ஜாமமாவது என்னை உறங்க விடுங்கள்” என்று படபடவெனச் சொற்களைப் பொறிந்து தள்ளிய ராணி, சரேலெனக் கதவுகளைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டு அந்தப் பெரிய அறையிலிருந்த மஞ்சத்திலேயே தொப்பென்று விழுந்து சில வினாடிகள் படுத்திருந்தாள். கதவு சாத்தப்பட்ட பிறகு மஞ்சத்தில் தான் விழுந்ததால் ஏற்பட்ட சப்தத்தாலும் அதைத் தொடர்ந்து நிலவிய அமைதியாலும் தான் பெரிய அறையிலேயே படுத்து விட்டதாகக் காவலர் நினைக்கட்டுமென்று அங்கேயே படுத்திருந்த ராணி, சில வினாடிகளுக்கெல்லாம் எழுந்திருந்து அடிமேலடி எடுத்து வைத்துப் பூனைபோல் நடந்து பழையபடி பஞ்சணையிருந்த உள்ளறைக்கு வந்து அந்த அறைக் கதவுகளையும் ஓசைப் படாமல் மூடினாள்.

ராணியின் ஏற்பாடுகளைக் கண்டு வியந்த அல்லி, ‘ராணி பெரிய சாகசக்காரி. உலகத்தையே வேண்டுமானாலும் ஏமாற்றும் வல்லமை படைத்தவள்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல், ராணி பேச்சைத் துவங்கட்டும் என்று காத்திருந்தாள். உள்ளறைக் கதவை மூடியதுமே ராணி பஞ்சணையை நோக்கி வேகமாக வந்தாள். இருளில் ஒருவர் உருவம் மற்றொருவருக்கு தெரியாவிட்டாலும் ராணி பஞ்சணையில் உட்கார்ந்ததும், தன் கையை எடுத்து அல்லியின் மடியில் போட்டுக் கொண்டு ஸ்பரிசத்தையும் உணர்ச்சிகளையுமே கண்களாகக் கொண்டு அல்லியைப் பார்த்து, நேரிடையாகப் பேசுவது போலவே பேசத்தொடங்கி “அல்லி!” என்று அழைத்தாள்.

“ராணி!”

“கட்டில் தானாக அசைந்ததைக் கண்டதும் பயந்து விட்டேன்.”

“ராணிக்கும் அச்சத்துக்கும் அதிக தூரம் என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் கட்டிலை நகர்த்தினேன்.”

“கத்திக்கும் கலங்க மாட்டேன் அல்லி! வேல்களையும் அம்புகளையும் கண்டும் அஞ்ச மாட்டேன். பெரும் போர்களில் மனிதர்கள் வெட்டிக் குவிக்கப்படும் காட்சியும் எனக்குக் குலை நடுக்கம் தருவதில்லை . ஆனால், இரவில் பஞ்சணை நகருவது, சாளரம் அசைவது இவை மனித சக்திக்கு மீறியவை அல்லவா?”

“ராணி! மனித சக்திக்கு எதுவும் மீறியதல்ல. பிசாசுகளையும் பூதங்களையும் சிருஷ்டித்தவனே மனிதன் தான். அவற்றை அடக்க மந்திரங்களையும் அவனே சிருஷ் டித்தான். பூதங்களின் அலுவல்களைப் போலவே நிகழ்ச்சிகள் ஏற்படக் கட்டிலை நகர்த்தவும் சாளரங்களை அசைக்கவும் சூட்சுமங்களை அமைத்தவனும் அவன்தான்.”

ராணி வியப்பினால் ஒருமுறை ‘ஊம்’ கொட்டிவிட்டு அந்த வியப்பு வார்த்தைகளிலும் ஒலிக்கக் கேட்டாள், “அப்படியானால் இவையெல்லாம் யந்திர சூட்சுமங்களா?” என்று.

“ஆமாம் ராணி! இல்லாவிட்டால் இந்த அறையில் இந்த நேரத்தில் நான் எப்படி வரமுடியும்?” என்று அல்லி கேட்டாள்.

“இதற்கு நிலவறை வழி ஏதாவது இருக்கிறதா?” என்று வினவினாள் ராணியும்.

“இருக்கிறது ராணி! இது இந்திரவிழா விடுதியல்லவா?”

“ஆமாம். அதனாலென்ன?”

“மன்னர்கள் தங்கும் இடம் இது.”
“கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“வசந்த காலத்தில் மன்னர்கள் பல நாட்கள் தங்குவதும் உண்டு.”

“அதுவும் தெரியும்.”

இம்முறை அல்லிதான் ஆச்சரியமடைந்தாள். ஆனால் அதை வெளிக்குக் காட்டாமல் ராணியை நன்றாக நெருங்கி, “ராணி! அரச மாளிகைகளில் நிலவறைகள் இல்லாம லிருக்குமா? பதவியுடன் பகைமையும் வருகிறதல்லவா? அரசர்களை அழிக்க எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? அவர்களிடமிருந்து தப்பிவர எத்தனை சுரங்கவழிகளை, தந்திர அறைகளை, யந்திர சூட்சுமங்களை அமைக்க வேண்டி யிருக்கிறது? மூவரசுகளில் முதல் அரசும் சூரிய குலத்தோரால் ஆளப்படுவதுமான சோழநாட்டுப் பேரரசர் தங்குமிடங்களில் பாதுகாப்பு சாதாரணமாகவா இருக்கும்? இந்த விடுதியின் சூட்சுமங்கள்…” என்று சொல்லிக் கொண்டே போன அல்லியை இடைமறித்த ராணி, “அனைத்தும் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“எனக்கு எப்படித் தெரியும் ராணி?” என்றாள் அல்லி.

“வேறு யாருக்குத் தெரியும்?”

“என்னை அனுப்பியவருக்குத் தெரியும்.”

“யார் உன்னை அனுப்பியது?”

“பிரும்மானந்தர்.”

ராணி சட்டென்று பஞ்சணையிலிருந்து எழுந்து விட்டாளாதலால், அவள் கூடவே எழுந்துவிட்ட அல்லி, “என்ன ராணி, ஏனிப்படிப் பதட்டப்படுகிறீர்கள்?” என்று வினவினாள்.

“பதட்டத்துக்குக் காரணமிருக்கிறது அல்லி. அது கிடக்கட்டும். பிரும்மானந்தர் கருவூரிலிருந்து எப்பொழுது வந்தார்?” என்று ராணி விசாரித்தாள். அதுவரை சற்று இழுத்து இழுத்தே பேசிய ராணி, திடீரெனத் துணிவு பெற்று விட்டதால் அவள் குரலில் தைரியம் பூரணமாகத் திரும்பி விட்டதைக் கண்ட அல்லி, ‘பிரும்மானந்தர் என்ற சொல்லே தைரியமளிக்கும் பெரும் மந்திரம் போலிருக்கிறதே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாளாதலால் அவள் உதடுகளில் புன்முறுவலொன்று படர்ந்தது. “அவர் வந்து இரண்டு நாட்களாகின்றன ராணி! ஏன் கேட்கிறீர்கள்?” என்று அவள் ராணியிடம் சொன்ன வார்த்தைகளில் ஆச்சரியமும் கலந்திருந்தது.

“காரணமாகத்தான் கேட்கிறேன் அல்லி. பிரும்மானந்தர் இப்பொழுது எங்கிருக்கிறார்?”

“வாணகரையில்.”

“வாணகரையிலா?” ராணியின் குரலில் மீண்டும் பலவீனம் தெரிந்தது. அதைரியமும் அவள் பேச்சில் ஊடுருவி நின்றது.

“ஏன் ராணி? அவர் எங்கிருந்தாலென்ன?” என்று கேட்டாள் அல்லி.
“புகாரிலிருப்பார் என்று நினைத்தேன்.”

“ஏனிப்படி நினைத்தீர்கள்?”

“நீ நிலவறை வழியாக இங்கு வந்ததாகச் சொல்ல வில்லையா?”

“சொன்னேன்.”

“பிரும்மானந்தரையும் அப்படி அழைத்துவரச் சொல்ல லாம் என்று நினைத்தேன்.”

“பிரும்மானந்தரை இங்கு அழைத்து வர முடியாது ராணி.”

“ஏன்?”

“யவனர் காவல் பலமாயிருக்கிறது. நான் வந்ததே பிரும்மப் பிரயத்தனம். வேண்டுமானால் இதோ பாருங்கள்” என்று ராணியின் கையை எடுத்து தன் ஆடை மீது வைத்தாள்.

மிதமிஞ்சிய ஆச்சரியத்தாலும் விவரம் ஏதும் புரியாத குழப்பத்தாலும் தெளிவை இழந்த ராணி, “இதென்ன அல்லி? ஆடை நனைந்திருக்கிறதே” என்று கேட்டாள்.

“ஏன் நனையாது ராணி? காவிரியில் நீருக்குப் பஞ்சமா?” என்றாள் அல்லி.

“நிலவறை வழியாகத்தானே வந்தாய் அல்லி?”
“ஆமாம் ராணி.”

“அப்படியானால் காவிரியில் நீ இறங்குவானேன்?”

“என் தலையைத் தொட்டுப் பாருங்கள் ராணி” என்று அல்லி கூறினாள்.

அவள் தலையையும், தலையைத் தொடர்ந்து உடலின் இதர பகுதிகளையும் தொட்டுப் பார்த்த ராணி, “அல்லி! இதென்ன, காவிரியில் முழுகியா வந்தாய்?” என்று உள்ளத்தி லெழுந்த பிரமிப்பு குரலிலும் ஓங்கக் கேட்டாள்.

“காவிரியில் முழுகாமல் இங்கு வரமுடியாது ராணி” என்று அல்லி விளக்க முயன்றாள்.

“எனக்கு விளங்கவில்லை அல்லி” என்று கூறிய ராணி, “விளக்கு!” என்று ஆணையிடும் தோரணையில் அல்லியின் தோளை மெள்ள அழுத்தினாள்.

“ராணி! அந்த அறைக்குக் கீழே ஓடும் நிலவறைப்படிகள் காவிரி நீர் மட்டத்துக்குச் சிறிது கீழேயே ஓடுகின்றன. அந்தச் சுரங்க அறையின் கதவு செங்கற் பொடியும் சுண்ணமும் கலந்து சுவர் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதவின் பொறியை அழுத்தினால் கதவு காவிரி நீர் மட்டத்துக்கு இரண்டடி கீழேயே திறக்கும். அந்தக் கதவைக் காலால் தடவிப் பார்த்துப் பொறியை அழுத்திச் சட்டென்று முழுகி இந்த அறைக்குள் பாய்ந்து, பொறியை மறுபடியும் திருகினால் தண்ணீர் மீண்டும் உட்புகாதபடி சுவர் போன்ற கதவு அடைத்துக் கொள்கிறது. முதலில் கதவு திறக்கப் படுவதால் உள்ளே பாயும் சொற்ப நீரைச் சமயம் வரும்போது ரகசியமாக இந்த அறைக்குக் கொண்டுவந்து, இங்குள்ள சாளரத்தின் வழியாகக் காவிரியில் எடுத்து ஊற்றிவிடப் பிரும்மானந்தர் ஏற்பாடு செய்வார்.”

அந்த விளக்கத்தைக் கேட்ட ராணியின் ஆச்சர்யம் உச்ச நிலையை அடைந்ததாகையால், “இந்த வழியாகவா நீ வந்தாய் அல்லி?” என்று வினவினாள்.

“ஆம் ராணி?”

“இந்த வழியை அவ்வப்பொழுது உபயோகப்படுத்துவ துண்டா?”

“கிடையாது ராணி. இது பெரும் ராஜ ரகசியமாம். புகாருக்குப் பேராபத்து நேரிடும் சமயங்களில் அரசர் தப்பிச் செல்ல மட்டும் உபயோகப்பட இந்த நிலவறையைச் சிருஷ்டித்திருப்பதாகப் பிரும்மானந்தர் சொன்னார். இந்த ரகசியத்தை அறிந்த முதல் பெண் நான் தான் என்றும் தெரிவித்தார்.”

“இந்தப் பெரும் ரகசியத்தை ஏன் என்னிடம் கூறினாய்?”

“பிரும்மானந்தர் உத்தரவு.”

“என்னிடம் அத்தனை நம்பிக்கையா பிரும்மானந்தருக்கு?”

“ஆம் ராணி. நம்பிக்கையில்லாவிட்டால் உங்களை அழைத்துவர என்னை அனுப்புவாரா?”
இதைக் கேட்ட ராணி சரேலெனத் திரும்பினாள். “என்ன! என்னை இந்த வழியாக அழைத்துப் போகப்போகிறாயா?” என்றும் கேட்டாள் ஆச்சரியத்துடன்.

“ஆம்! ராணி!”

“அப்படி அழைத்துச் சென்றால் யவனநாட்டு மங்கை யொருத்தியிடம் இந்த ரகசியம் சிக்கிவிடுமே!”

“ஆமாம்.”

“என்னை எதற்காக அழைக்கிறார் பிரும்மானந்தர்!”

“காரணம் எனக்குத் தெரியாது ராணி. ஏதோ பெரிய அபாயத்தினால் மனம் குழப்பமடைந்தது போல் பகல் முழுவதும் ஒரு நிலையில் இல்லை பிரும்மானந்தர். திடீரென உங்களைப் பார்க்க விரும்பினார். அதற்கு என்னை அனுப்பினார். இங்கு வந்ததும் நீங்களும் அவரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தீர்கள். உங்கள் இருவர் மனமும் ஒரே வழியை நாடிக் கொந்தளிப்படைந்திருக்கிறதாகத் தோன்றுகிறது ராணி” என்றாள் அல்லி.

“அப்படியானால் ஏனித்தனை காலதாமதம் செய்து விட்டாய்?” என்று கடிந்து கொண்டு கேட்டாள்.

“மூன்றாம் ஜாம முடிவில்தான் நிலவறைக்கு வரும்படி பிரும்மானந்தர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு முன்பு காவிரியில் ஏதாவது படகுகளின் நடமாட்டம் இருக்கலாமென்று நம்புகிறார்” என்றாள் அல்லி.
நீண்ட நேர சம்பாஷணையாலும் கவலையின் காரணமாக நேரமும் அனாவசியமாக நீண்டுவிட்டதாலும் சங்கடப்பட்டே பொறுத்திருந்த ராணியை மூன்றாம் ஜாம முடிவில் மெள்ள அழைத்த அல்லி, தான் தரையில் உட்கார்ந்து ராணியையும் உட்காரச் சொன்னாள். பிறகு கீழேயிருந்த சதுக்கக்கல்லை இருமுறை அழுத்தித் திருகவே கட்டில் பழைய இடத்துக்கு நகர்ந்து அதன் அடியில் நிலவறை மெள்ளத் திறந்தது. தூரத்தேயிருந்த சாளரமும் பழைய நிலையை அடைந்தது. அப்பொழுதுதான் பஞ்சணையின் மரக்கால்கள் தரையில் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்ட ராணி, அந்தக் கால்களும் நிலவறையும் சாளரமும் ஒரே பொறியால் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தது மட்டு மல்லாமல், ‘அடாடா! இதைக் கண்டா அஞ்சிவிட்டோம்?’ என்று ஒரு கணம் வெட்கப்பட்டாலும் மறுகணம் ‘தமிழர் பொறிஇயல் யவனர் பொறிஇயலுக்குச் சற்றும் சளைத்த தல்ல போலிருக்கிறதே’ என்று வியப்பும் அடைந்தாள். இந்த எண்ணங்களில் அவள் மனம் அலைந்து கொண்டிருந்த வினாடிகளில் நிலவறை நன்றாகத் திறந்து கொள்ளவே, அல்லி, ராணியை அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கிச் சென்றாள். படியில் ராணி காலைவைக்கும் முன்பாக, “ஜாக்கிரதை ராணி! படிகள் மிகச் சிறியவை. கால் இடறினால் என் மீது விழுவீர்கள். அப்படி விழுந்தால் நானும் நீங்களும் படிகளில் உருண்டு கீழேயுள்ள நிலவறைத் தரையில் நீர் பாய்ந்துள்ள இடத்தில் விழுவோம்” என்று எச்சரித்த அல்லி மிக நிதானமாகப் படிகளில் இறங்கினாள். ராணியும் மிகுந்த எச்சரிக்கையுடன் அல்லியின் தோளைப் பிடித்துப் படிகளில் இறங்கி, தரை மட்டத்துக்கு வந்ததும் கணுக்கால் அளவு நீரில் தானிருப்பதைக் கண்டு, “இன்னும் எத்தனை நேரம் நாம் இப்படி நிற்கவேண்டும் அல்லி?” என்று வினவினாள்.
அல்லி அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல், அடுத்தபடி ராணி நடந்து கொள்ள வேண்டிய முறையையே விளக்க முற்பட்டு, “ராணி! கவனமாய்க் கேளுங்கள். நம் நேர் எதிரில் இருக்கும் சுவரை ஒட்டிக் காவிரியின் நீர் ஓடுகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சுவர் ‘டக் டக்’ என்று இருமுறை தட்டப்படும் ஒலி கேட்கும். ஒலி கேட்டதும் தான் பொறியைத் திருகுவேன். திடீரெனக் காவிரி நீர் பெருவேகத் துடன் உள்ளே பாயும். நீங்கள் ஒரு கையால் சுவரைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு இன்னொரு கையை வெளியே நீட்டுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

ராணி அல்லி சொன்ன விவரங்களையெல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டு அல்லியின் கையைப் பிடித்துக் கொண்டே எதிரேயிருந்த சுவரை நோக்கி மெள்ள நடந்தாள். சுவரை அணுகியதும் ஒரு கோடியில் தான் நின்று கொண்டு இன்னொரு கோடியில் ராணியை நிறுத்தி, “ராணி! இந்தச் சுவரின் நடுப்பாகம்தான் கதவு. அது திறந்ததும் நீங்கள் வலது கையால் சுவரின் கோடியைப் பிடித்துக் கொண்டு புனலுக்கு வெளியே இடது கையை நீட்டுங்கள். உங்கள் கை பற்றப்பட்டதும் சுவரைப் பிடித்திருந்த கையை விட்டு விடுங்கள்” என்று கூறி, அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்ட அல்லி, சுவரின் மற்றொரு பக்கத்தில் அந்தக் காரிருளில் மௌனமாக நின்றாள். ஓடினவை நிமிடங்களேயென்றாலும் ராணிக்கு அந்தச் சில நிமிடங்கள் ஒரு யுகமாகத் தெரிந்தன. இன்னும் எத்தனை நேரம்?’ என்று அலுத்துக் கொண்ட அதே சமயத்தில், கதவின் வெளிப்புறத்தில் ‘டக் டக்’ என்று யாரோ படகுத் துடுப்பால் தட்டும் சத்தம் கேட்டது. அல்லி சொன்னபடி நடக்க ராணி தயாரானாள். திடீரெனச் சுவர் இடைவெளி கொடுத்து, காவிரி நீர் மிக வேகத்தில் உள்ளே பாய்ந்தது. ராணி தலையை நீரில் பாய்ச்சி வெளிப்புறம் கையை நீட்டினாள். பலமான ஒரு கை அந்தக் கையைப்பிடித்து மின்னல் வேகத்தில் வெளியே இழுத்தது. நீர் மட்டத்துக்கு வெளியே தலையை நீட்டிய வினாடியில் பலமான இரு கைகளில் தான் கிடப்பதையும், பெரும் படகினில் காலொன்றினை ஊன்றி, இன்னொரு காலை தண்ணீருக்குள் இந்திர விழா விடுதியின் சுவரில் ஊன்றிக் கொண்டு சிறு பறவையைத் தாங்குவது போல், மிக அலட்சியமாகத் தன்னையும் தூக்கிக்கொண்டு குமரன் சென்னி நிற்பதையும் கண்ட ராணி அவன் திறமையையும் பலத்தையும் எண்ணி வியந்தே போனாள்.

ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பது போன்ற பிரமையே ஏற்பட்டது ராணிக்கு. கண்மூடிக் கண் திறப்பதற்குள் குமரன் சென்னியும் பரத வல்லாளனும் தன்னையும் அல்லியையும் தூக்கிப் படகில் போட்டதையும், குமரன் சென்னி தன் பெரும் வேலின் உதவி கொண்டே நீருக்குள்ளிருந்து நிலவறைக் கதவை மூடிவிட்டதையும் கண்ட ராணி ‘தமிழர்கள் இந்திரஜால வித்தையில் தேர்ந்தவர்கள்’ என்ற முடிவுக்கே வந்தாள். இத்தனை பலமும், நுண்ணறிவும் பொருந்திய படைத் தலைவர்கள் துணைக்கிருந்தும் யவனர் கப்பலில் சிறைப்பட்டு யாருமற்ற அநாதையாக இளஞ்செழியன் போக வேண்டியிருந்ததை நினைத்து வருந்திய ராணி அந்த நினைப்புகளே மேலோங்கி நிற்க, வாணகரைக் குன்றை அடைந்தாள். அவளை, குன்றின் உச்சியிலிருந்த இளஞ்செழியன் மாளிகையில் முன் கூடத்திலேயே சந்தித்த பிரும்மானந்தர், பூர்வ பீடிகைகளை அதிகமாக வைத்துக் கொள்ளாமல், ராணி ஆசனத்தில் அமர்ந்ததுமே அவளை அழைத்த காரியத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கி, “ராணி! சோழ மண்டலம் பேராபத்தில் சிக்கியிருக்கிறது. அதைத் தவிர்க்க உன் உதவி வேண்டும். அதற்காகத்தான் உன்னை இங்கு வரவழைத்தேன். யாருமறியாத நிலைவறையில் நீர்க் கதவு மர்மத்தைக் குமரன் சென்னி, பரத வல்லாளன், அல்லி, நீ ஆகிய நால்வருக்குத் தெரியப்படுத்திய காரணமும் அதுதான்” என்றார்.

ராணி பிரும்மானந்தரைக் கூர்ந்து நோக்கிவிட்டுக் கேட்டாள், “நீங்கள் எப்படி இருங்கோவேளிடமிருந்து தப்பினீர்கள்?” என்று.

“கருவூர்க் கதையைக் கேட்கிறாயா ராணி! அது சாதாரணக் கதை. நீ எங்களை அறையில் வைத்துப் பூட்டியதும் இளஞ்செழியன் சாளரத்தின் மூலமாக இறங்கி எப்படியோ மறைந்துவிட்டான். கரிகாலனும் இரும்பிடர்த் தலையாரும் அன்றிரவு போனவர்கள் தான். பிறகு அவர்கள் இருப்பிடமே தெரியவில்லை. பூவழகியையும் இன்பவல்லியையும் இருங்கோவேள் உறையூர் அழைத்துச் சென்றுவிட்டான். சமணமடத்தின் அறையில் என்னை மாத்திரமா வைத்துத் தாழிட்டிருந்தாய்? என் சீடனான அந்தச் சமணத் துறவியையும் தாழிட்டாய். சமணத் துறவியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே ராணி! அவருக்குச் சாதாரணமாக வாயிற்படி வழியாக உள்ளே வந்து பழக்கமில்லாததால் சாளரத்தின் மூலம் வெளியே சென்று என் கதவைத் திறந்து விட்டார். அது கிடக்கட்டும். கருவூரில் கரிகாலன் மரணமடையாமல் தப்பியதுமே இருங்கோவேள் அந்த ஊரை விட்டு அகன்றான். சோழ நாட்டில் தன் அரியணையைப் பாதுகாக்கச் சகல முயற்சிகளையும் எடுப்பதில் இப்பொழுது முனைந்திருக் கிறான். சேரனும் பாண்டியனும் கூட எச்சரிக்கையடைந்து விட்டார்கள். இனி சோழ நாட்டை இரண்டிலொன்று பார்க்காமல் மூவரும் விடமாட்டார்கள். ஆகவே சோழ நாட்டில் போர் நிச்சயம் ராணி. இப்பொழுதே யுத்த மேகங்கள் சோழ மண்டல வானில் குவிந்து வருவதைப் பார்க்கிறேன். அப்படிப் போர் வருமானால் எனக்கு வேண்டியது…” பிரும்மானந்தர் சற்று நிறுத்தினார்.

“தெரியும். பிரும்மானந்தரே! நீர் விரும்புவது சோழ நாட்டின் வெற்றி” என்றாள் ராணி.

“ஆம் ராணி!”

“அதற்கு என்ன வேண்டும்?”

“அவகாசம் வேண்டும்.”

“அவகாசமா?”

Previous articleYavana Rani Part 1 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here