Home Sandilyan Yavana Rani Part 1 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

77
0
Yavana Rani Part 1 Ch39 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch39 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 39 பிரும்மானந்தர் உறுதி கூறினார்

Yavana Rani Part 1 Ch39 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

சொற்கள் இரண்டேதான்! ஆனால் எத்தனை சுடு சொற்கள்! எதற்கும் அஞ்சாத நெஞ்சுரமுள்ள யவன ராணியின் சித்தத்திலே பாய்ந்து ரத்தத்திலே வெகு வேகமாகச் சுழன்று அவள் உணர்ச்சிகளையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்ட சொற்களையல்லவா பிரும்மானந்தர் சொன்னார்:

“இளஞ்செழியன் அழிந்தே போவான்” என்று பிரும்மா னந்தர் வாயிலிருந்து வந்த இரண்டே சொற்களைக் கேட்ட ராணியின் இதயத்தில் இரண்டு சொற்களும் இரண்டு அம்புகளாகப் பாய்ந்து விடவே அவள் ஒருகணம் திக்பிரமை பிடித்து நின்றாள். மறுகணம் பின்னாடி நகர்ந்து சென்று ஆசனத்தில் தொப்பென்று விழுந்து, “கூடாது! கூடாது! எது நடந்தாலும் அது கூடாது” என்று இரைந்தும் சொல்லிக் கொண்டாள். அந்த நேரத்தில், வாணகரைக் குன்றின் உச்சி மாளிகையின் முன்கூடத்தில் யவன ராணி தான் புகாரில் புரண்ட நாள் முதல் அன்றுவரை தன் வாழ்வில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளையும் நினைத்துப் பார்த்தாள். அன்று தானிருந்த நிலையையும் எண்ணி அன்னப்பறவை ஆபரணத்தையும் ஒருமுறை நோக்கினாள். எந்த அன்னப்பறவை ஆபரணம் யவன ராஜ குடும்பச் சின்னமோ எந்த அன்னப்பறவை ஆபரணத்தை அணிந்தவர்களை எதிர்த்தாலோ வணங்க மறுத்தாலோ யவன நாட்டில் தலைபோகும் தண்டனை கிடைக்குமோ, எந்த அன்னப்பறவை ஆபரணம் யவன குருமார்களின் அந்தரங்கப் பொற்கொல்லர்களால் அரச குடும்பத்தாருக்கெனப் பல தந்திர வசதிகளுடன் தனிப்படச் செய்யப்படுகிறதோ, எந்த அன்னப்பறவை ஆபரணம் அரசை மட்டுமன்றி அழிவையும் அளிக்க வல்லதோ, அந்த ஆபரணத்தை நோக்கிய ராணி அதன் மகிமையெல்லாம் தமிழ்நாட்டில் பறந்துவிட்டதோ என்று எண்ணி வெறுப்புக் கலந்த சிரிப்பு ஒன்றையும் உதிர விட்டாள். இந்த ஆபரணத்தைக் கண்டதும் தலை தாழ்த்த வேண்டிய டைபீரியஸ் தன்னைச் சிறை செய்தானென்பதையும் தன் கட்டளையைச் சிரமேல் ஏற்கவேண்டிய அந்த யவனர் கடற்படைத்தலைவன், தான் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றித் தனக்கே கட்டளையிட முற்பட்டதையும் நினைத்துத் தமிழ் நாட்டு மண் மாற்றாருக்குப் பெரும் விபரீதங்களை விளைவிக்கவல்லது என்று தீர்மானித்துக் கொண்டாள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய ராணியான தானே சோழர்படை உபதலைவனிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்து விட்டதையும் அதை உபயோகப் படுத்திக் கொண்டு தன்னைக் கைப்பாவையாக்கிக் கொள்ள அந்தச் சிறுகண் பிரும்மானந்தர் தன் முன்னால் பளிச் பளிச்சென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததையும் கவனித்த ராணி மீண்டும் வெறுப்புக் கலந்த சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள். ‘ஒருபுறம் டைபீரியஸ் எனக்குக் கட்டளையிடுகிறான்; இன்னொரு புறம் பிரும்மானந்தர் கட்டளை யிடுகிறார். பிறர் கட்டளைகளை நிறைவேற்றுபவள் ராணியா? அத்தகைய அடிமை ராணிக்கு ஒரு அரச குடும்பச் சின்னம் தேவையா? என்ன அடையாளமிது! அதிகார அடையாளமா? அல்ல அல்ல… அடிமையின் அடையாளம்’ என்று அன்னப்பறவை ஆபரணத்தை நோக்கி வெறுப்புடன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

“இளஞ்செழியன் அழிந்தே போவான்” என்ற தன் சொற்களால் யவன ராணி நிலைகுலைந்து போனதையும், ஆசனத்தில் தொப்பென்று விழுந்து அன்னப்பறவை ஆபரணத்தைப் பார்த்து நகைத்ததையும், பிறகு ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டதையும் கண்ட பிரும்மானந்தர் அவள் உள்ளத்தே ஓடிய எண்ணங்களை நன்கு புரிந்து கொண்டாராதலால், ராணி கண்டிப்பாகத் தன் கருத்துக்கு இணங்குவாள் என்று தீர்மானித்துக் கொண்டார். பிரும்மானந்தர் துறவியானாலும் காதலின் வேகத்தையும் அது சம்பந்தமான உணர்ச்சிகளின் உட்போக்கையும் சந்தேகமற உணர்ந்திருந்தாராதலால், ‘யவன ராணி குழப்பத்திலிருந்து கொஞ்சம் தெளிவுக்கு வரட்டும்’ என்று சற்று நேரம் மௌனமாகவே இருந்தார்.

உள்ளத்தே கொந்தளித்தெழுந்த உணர்ச்சிகளை வெகு சீக்கிரம் கட்டுப்படுத்திக் கொண்ட ராணி மெள்ளக் குனிந்த தலையை நிமிர்த்திப் பிரும்மானந்த அடிகள் மீது தன் நீல மணிக் கண்களைச் சில விநாடிகள் நாட்டினாள். பிறகு தன் வலது கையால் இடது கரத்திலிருந்த ஆபரணத்தைச் சுட்டிக் காட்டி, “அடிகளே! இது என்ன தெரியுமா?” என்று வினவினாள்.

“தெரியும் ராணி! என் ஆசிரமத்தில் முதன் முதலில் சந்தித்தபோது அதைக் கொண்டுதானே நீ யார் என்பதைத் தீர்மானித்தேன்” என்றார் பிரும்மானந்தர்.

“இது ஆட்சிச் சின்னம் அடிகளே!” என்று ராணி சுட்டிக் காட்டினாள்.

“தெரியும் ராணி” என்றார் பிரும்மானந்தர்.

“அடிமைச் சின்னமல்ல” வற்புறுத்தி ராணி கூறினாள்.
“அதுவும் தெரியும் ராணி” என்று பிரும்மானந்தர் ஒப்புக் கொண்டார்.

“தெரிந்துமா டைபீரியஸுக்கு அடிமையாகச் சொல் கிறீர்கள்? என்னைச் சிறை செய்த டைபீரியஸின் சொற்படி நடந்தால் யவனர்கள் எனக்கு என்ன மதிப்பு வைப்பார்கள்?” என்று வினவினாள்.

பிரும்மானந்தர் சிறிதும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னார்: “ராணி! யவனர்கள் மதிப்பு வைப்பார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் தமிழர்கள் மதிப்பு வைப்பார்கள். தமிழ்நாடு மூழ்கிவிட இருந்த சமயத்தில் அதைக் காப்பாற்றிய தாயென்று உன்னைப் போற்றுவார்கள். எங்கிருந்தோ வந்தாள் ஒரு ராணி, அவளால் தமிழ் நாடு பெரும் பாதாளத்திலிருந்து மீண்டும் எழுந்தது என்று உன்னைப்பற்றித் தமிழர் சரித்திரம் புகழுரைகள் கூறும். தமிழ்ப் பாவலர் பாட்டிசைப்பார்கள்.”

“புகழும் பாட்டும் எனக்குத் தேவையில்லை அடிகளே!”

“ஆனால் காதலும் கடமையும் தேவை.”

ராணி இதற்குப் பதில் சொல்லவில்லை. மௌனமாகவே இருந்தாள். மௌனத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட பிரும்மானந்தர் சொன்னார்: “அந்தத் தேவை பூர்த்தியாக வேண்டுமானால் வழி நான் சொல்வதுதான் ராணி. சோழர் படை உபதலைவர் திரும்பி வந்தாலொழிய, சோழ நாடு சீர்படாது. போர் மூண்டாலும் சோழநாடு தோல்வியே அடையும். அப்படி அழிய இருக்கும் நாட்டைக் காக்க முடியாதென்றால் இளஞ்செழியனைக் காக்கவோ தேடித் திருப்பிக் கொண்டு வரவோ நான் பாடுபட மாட்டேன். படைத்தலைவர் அழிந்து போவதானாலும் எனக்குக் கவலையில்லை. படைத்தலைவரிடம் நீ கொண்டுள்ள காதல், அவரிடம் உனக்குள்ள கடமை, இரண்டுடனும் சோழநாட்டின் பிற்காலம் பிணைக்கப் பட்டிருக்கிறது. நான் சொல்வது போல் செய். புகாரின் ஆட்சியை ஏற்றுக்கொள். டைபீரியஸின் இஷ்டப்படி தற்சமயம் நடந்துகொள்.”

“டைபீரியஸின் இஷ்டத்துக்கு இணங்கி நான் புகாரின் ராணியானால் உண்மையில் நான் அவனுக்கு அடிமையாகவே இருக்க வேண்டி வரும் அடிகளே. பெயரளவில்தான் நான் ராணியாக இருப்பேன்.”

“புலி பதுங்குவது பாய்வதற்காக மகளே! சமயத்திற்கு வளைந்து கொடுப்பது ராஜதந்திரம். டைபீரியஸின் கட்டளைப்படி ராணியானால் புகாரில் சில காலம் குழப்பம் ஏற்படாது. தமிழகத்தின் கிழக்குப் பகுதியின் பெரு வாயிலான புகார் யவனர் கைகளுக்கு மாறிவிட்டது என்பதை அறிந்தால் சேரனும் பாண்டியனும் போர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இருங்கோவேளும் யவனர் ஆதரவு இருப்பதாக நினைத்து அயர்ந்துவிடுவான். நாட்டில் நிம்மதி நிலவும். அந்த நிம்மதி நல்ல நிம்மதி அல்லவென்று எனக்குத் தெரியும். அடிமை நாட்டு நிம்மதி ஒரு நிம்மதி அல்ல மகளே! ஆனால் அந்த நிம்மதியும் படைத்தலைவர் வரும்வரை தேவை. அதை அளிக்க உன்னால்தான் முடியும். டைபீரியஸ் இஷ்டப்படி சிறிது நாள் அவனுக்கு அடிமையாயிரு, அவன் சொற்படி கேள்” என்று பிரும்மானந்தர் கெஞ்சினார்.

ராணி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு அடிகளை நோக்கிய அவள் கண்களில் சற்று சந்தேகமும் படரவே அவள் கேட்டாள்: “நானும் யவன நாட்டுப் பெண் அடிகளே! தெரியுமல்லவா உங்களுக்கு?” என்று.

“அதில் சந்தேகமென்ன? நன்றாகத் தெரியுமே” என்றார் பிரும்மானந்தர்.

“இங்கு யவன ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே நான் வந்தேன்” என்றாள் ராணி மீண்டும்.

“அதுவும் தெரியும்” என்றார் பிரும்மானந்தர்.

வியப்பெய்திய விழிகளை அவர்மீது நாட்டிய ராணி, “நீங்கள் இப்பொழுது வகுக்கும் திட்டத்தால் யவனர் எண்ணம் நிறைவேறுகிறதே, புரியவில்லையா?” என்று கேட்டாள்.

“நிறைவேறுகிறது ராணி!”

“அப்படியானால் நீரே தமிழகத்தை யவனர்களிடம் ஒப்படைக்கிறீரா?”

“இல்லை, யவனர்களிடம் ஒப்படைக்கவில்லை. அவர்கள் ராணியிடம் ஒப்படைக்கிறேன்.”

“இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“நிரம்ப இருக்கிறது ராணி! யவனர்கள் எங்கள் தமிழகத்தை அடிமை கொள்ள நினைக்கிறார்கள். ராணிக்கு அந்த நினைப்பு ஆரம்பத்திலிருந்தாலும் இப்பொழுதில்லை.”

“எப்படித் தெரியும் உமக்கு?”

“பிரும்மானந்தனை என்னவென்று நினைத்தாய் ராணி? விவரம் புரியாமல், மனிதர்கள் மனத்தின் தரத்தை அறியாமல், விளைவுகளை எண்ணிப் பாராமல், எதையும் செய்பவனல்ல பிரும்மானந்தன். ராணி! நீ தமிழருக்குத் தீமை விளைவிப்பதாயிருந்தால் அதற்கு நல்ல சந்தர்ப்பம் ஒன்றிருந்தது. அதை நீ உபயோகித்துக் கொள்ளவில்லை. நீ மட்டும் மனம் வைத்திருந்தால், இருங்கோவேள் இஷ்டப்படி பல நாட்களுக்கு முன்னரே சோழப் பேரமைச்சர் அனுப்பிய புகார் சாஸன ஓலையை டைபீரியஸிடமிருந்து மறைக்காம லிருந்தால், இத்தனை நாள் புகார் யவனர் படைத்தளமா யிருக்கும். ஆனால் சாஸன ஓலையை மறைத்தாய். அதைப் படைத்தலைவரிடம் அளித்தாய். புகார் பிழைத்தது ராணி.

இன்னும் அது பிழைத்திருக்க வேண்டுமானால் உன்னைவிட அதை ஏற்றுக் காப்பாற்றக்கூடியவர் வேறு யார் இருக் கிறார்கள்? ஆகையால் புகாரை ஏற்றுக்கொள் ராணி. புகாரை ஏற்பது சம்பந்தமாக டைபீரியஸ் எதைச் சொன்னாலும் அதைச் செய்ய மறுக்காதே. சில நாட்கள் டைபீரியஸிடம். அடிமைத் தளைகளை அணிந்து கொள். சோழர்படை உபதலைவரைக் கொண்டு அவற்றை அவிழ்த்து எறிகிறேன்.”

யவன ராணியின் அழகிய நீலமணிக் கண்கள் மறுபடியும் ஒரு முறை நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்தன. அவள் கையிரண்டும் மடியில் சந்தித்து விரல்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டன. மிருதுவான குரலில் ராணி கேட்டாள்: “படைத்தலைவர் எந்தக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டார் தெரியுமா?” என்று.

பிரும்மானந்தர் நிதானமாகவே பதில் சொன்னார்: “இங்கு வாணிபத்துக்கு வந்த யவனர் கப்பலில் கொண்டு செல்லப்பட்டார். கப்பல் புறப்பட்ட பிறகுதான் எங்களுக்குச் செய்தி தெரிந்தது.”

“யார் கொண்டு வந்தது செய்தி?”

“உங்களைப் படகில் ஏற்றிக்கொண்டு வந்தானே அந்தப் பரதவன்.”

“அவன் ஏன் முன்னமே சொல்லவில்லை உங்களிடம்?”

“டைபீரியஸ் படகோட்டியைக் காவலில் வைத்து விட்டான்.”

“காவலில் வைத்துவிட்டான் என்பதை எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?”

பிரும்மானந்தர் ராணியை நோக்கிப் புன்முறுவல் செய்துவிட்டு, “ராணி, பூம்புகாருக்கு வந்தாயே தவிர அதன் அழகிய கடற்கரையை, அங்குள்ள பரதவர் வாழ்க்கையை, அவர்கள் மகிழ்ச்சிக் கேளிக்கைகளை, திருவிழாக்களை நீ பார்க்கவில்லை. எத்தனை எத்தனையோ இன்பமான காட்சிகள் இக்கடற்கரையில் உண்டு…” என்று சொல்லிச் சற்றே நிறுத்திய பிரும்மானந்தர் புகாரின் கடற்கரைப் பகுதிக்கே சென்றுவிட்டாராதலால் கனவை விவரிப்பவர்போல் நெடுந்தூரப் பார்வையைக் கண்களில் தவழவிட்டுக் கொண்டு தொடர்ந்து சொன்னார்: “மகளே! பூம்புகாரின் பெரும் செல்வத்தைக் கொணர்பவர்கள் பரதவர். கடல் ஒளித்திருக்கும் முத்துக்களையும், நன்மணிகளையும் அவர்களே கொண்டு வருகிறார்கள். புகாருக்குச் செல்வம் சேர்க்கச் சில சமயங்களில் உயிரையும் இழக்கிறார்கள். காலையில் கடலோடும் பரதவர் இரவில் திரும்புவார்கள். சில வேளைகளில் திரும்பாமலே இருப்பதும் உண்டு. அவர்கள் திரும்பாததற்கு அறிகுறிகளும் உண்டு…”

“என்ன அறிகுறிகள் அடிகளே?” என்று ராணி இடைமறித்துக் கேட்டாள்.

*”கடலோடும் பரதவர் இரவில் திரும்பும்போது அவரவர் இல்லங்களின் இருப்பிடத்தை உணர்த்த, பரதவ மங்கையர் தங்கள் வீட்டு மாடங்களில் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். பரதவர் தூர இருந்தே அந்த விளக்குகளைப் பார்த்து எண்ணுவார்கள். வீடு வந்து சேரும் பரதவர் இல்லங்களின் மாடவிளக்குகள் அவர் வந்துவிட்டதற்கு அறிகுறியாக அணைக்கப்படும். வராத பரதவரின் இல்லங்களில் அந்த அடையாள விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். அந்த அடையாளத்திலிருந்து வராத பரதவர் பட்டியல் அன்றன்று தயாரிக்கப்படும். பரதவரில் ஒருவன் வராதுபோனாலும் மறுநாளே செய்தி கிடைக்கும். ராணி, உங்களுக்குப் படகோட்டிய பரதவன் வீட்டு விளக்கு அன்றிரவு அணையவே இல்லை. மறுநாள் விசாரித்ததில் அவனை யவனர் கடற்படைத் தலைவன் நங்கூரம் பாய்ச்சிக் கடலில் நின்ற யவனர் மரக்கலத்துக்கு அழைத்துச் சென்றதாகச் சில படகோட்டிகள் கூறினார்கள். மீதியை ஊகித்துக் கொண்டோம். டைபீரியஸின் சிறையிலிருந்தென்ன எந்தச் சிறையிலிருந்தும் பரதவர் தங்கள் தோழர்களைத் தப்புவிக்கும் ஆற்றலுள்ளவர்கள்.”

பிரும்மானந்தர் டைபீரியஸின் வஞ்சகத்தை அறிந்த முறை இன்னதென்று அறிந்துகொண்ட ராணி, ‘இந்தப் பரதவர்கள் இருக்கும்வரை புகாரை யாரும் வெற்றிகொள்ள முடியாது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அடிகளை நோக்கி, “அப்படியானால் முன்பு போல் வலை வீசி சாளரத்தின் மூலமாக என்னைக் கொண்டு வந்திருக்கலாமே, ஏன் அப்படிச் செய்யவில்லை?” என்று வினவினாள்.

“டைபீரியஸ் திறமையுடன் காரியங்களைச் செய்திருக் கிறான் ராணி. இந்திர விழா விடுதியில் சாளரத்துக்கு மேல் வலைகள் தொத்தும் தளைகளை அறுத்துவிட்டான் டைபீரியஸ். ஆகையால் தான் நிலவறை வழியாக உன்னை அழைத்துவர ஏற்பாடு செய்தேன்” என்றார் பிரும்மானந்தர். மேற்கொண்டும் சொன்னார் பிரும்மானந்தர்: “மகளே! நான்காம் ஜாமம் துவங்கப் போகிறது. ஊரடங்கி மக்கள் ஆழ்ந்து துயில் கொள்ளும் வேளை இது. மறுபடியும் வந்த வழியே போ. நான் மன்றாடிக் கேட்பதை மட்டும் செய்.”

ராணி ஆசனத்தைவிட்டு எழுந்து பிரும்மானந்தரை நோக்கி, “செய்கிறேன் பிரும்மானந்தரே! படைத்தலைவர் நலனுக்காக, உங்கள் நாட்டு நலனுக்காக எந்த யவன ராணியும் இதுவரை செய்யாத காரியத்தைச் செய்கிறேன். என் அடிமையான டைபீரியஸிடம் அடிமையாகி அவன் சொற்படி கேட்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை…” என்றாள்.
“நிபந்தனை தெரியும் ராணி. ஒப்புக்கொண்டு விட்டேன்” என்று பிரும்மானந்தர் பிரமாணம் செய்தார்.

“என்ன தெரியும் அடிகளே?” என்று ராணி கேட்டாள்.

“சில நாட்களுக்கு முன்பு சமண மடத்தில் சொன்ன அதே நிபந்தனை தானே ராணி, படைத்தலைவர் உன் மணாளராக வேண்டும். அவ்வளவுதானே, ஒப்புக்கொண்டு விட்டேன்” என்றார் அடிகள்.

அதுவரை அவ்விருவர் சம்பாஷணையிலும் ஈடுபடாமல் நின்று கொண்டிருந்த குமரன் சென்னி, “இது தாங்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமா அடிகளே” என்று கூறி இகழ்ச்சிப் புன்முறுவலும் பூத்தான்.

பிரும்மானந்தர் தன் ஆசனத்தை விட்டு எழுந்து, “சென்னி! இந்த ராணி நமது நாட்டுக்காக எத்தனை பெரிய தியாகத்தைச் செய்கிறாள் தெரியுமா? அவள் வந்த காரியம், யவன மக்களிடம் அவளுக்குள்ள இணையற்ற பெரும் பதவி, ஏன் யவன நாட்டில் அவளுடைய பிற்கால நலன், வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்கிறாள். அந்தத் தியாகத்திற்கு ஈடாக இந்த நாட்டின் படைத்தலைவரில் ஒருவரென்ன எத்தனை படைத்தலைவர்களைக் கேட்டாலும் கொடுக்க லாம்” என்று நிதானம் மீறியே பேசினார்.

“அத்தனை படைத்தலைவர்களும் தேவையில்லை அடிகளே! ஒரே ஒரு படைத்தலைவர். அதுவும் என்னை முதன் முதலாக இந்தப் பூம்புகாரில் தொட்டுத் தூக்கியவர், அவர் மட்டும் போதும்” என்று கூறிய ராணி மகிழ்ச்சிப் புன்முறுவலும் செய்தாள்.

அவள் சிரிப்பைக் கண்டு நிதானத்தை ஓரளவு திரும்பிப் பெற்ற பிரும்மானந்தர் ராணியைப் பழையபடி இந்திர விழா விடுதிக்கு அனுப்பும் ஏற்பாடுகளைச் செய்தார். படகு நிற்கும் இடத்தில் மூழ்கி நிலவறைக் கதவைத் திறந்து உள்ளே பாய்ந்து உடனே கதவை மூட வேண்டிய முறையை மறுபடியும் விவரித்தார் பிரும்மானந்தர். அந்த வழிகளைச் சரியாகத் தெரிந்து கொண்ட ராணியைக் குமரன் சென்னியும் பரத வல்லாளனும் பழையபடி இந்திர விழா விடுதியின் சுவர் ஓரமாகக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். நீண்ட நாள் பழகியவளைப் போல் ராணி நீரில் மூழ்கிச் சென்று நிலவறைக் கதவையும் சாத்தி விட்டதைப் படகுத்துடுப்பால் தட்டியறிந்த குமரன் சென்னி அவள் தைரியத்தைப் பற்றிய ஆச்சரியத்தி, லேயே மனத்தைப் பறிகொடுத்துத் திரும்பினான்.

ராணி வெகு நிதானமாக நிலவறைப் படிகளில் ஏறி, பள்ளியறையை அடைந்து ஈர உடைகளை களைந்து வைத்து விட்டுத் தலை துவட்டிப் புது உடைகளை அணிந்து கொண்டு கட்டிலை நகர்த்தி நிலவறை இடத்தை மறைத்து விட்டு, மீண்டும் பெரிய அறையின் மஞ்சத்திலே படுத்து மிகுந்த நிம்மதியாக நித்திரை செய்தாள். வெயில் புறப்பட்டு நீண்ட நேரம் கழித்து எழுந்திருந்த ராணியைச் சந்தித்த டைபீரியஸ் ஒரே இரவில் அவள் போக்கு மாறி விட்டதைக் கண்டு பெரிதும் சந்தேகத்துக்குள்ளானான். முதல் நாளிரவு தன்னை நோக்கிப் புலிபோல் சீறிய ராணி மறுநாள் காலையில் மலர்ந்த முகத்துடன் தன்னை வரவேற்ற காரணம் என்னவென்பதைப் பற்றி நீண்ட நேரம் யோசித்த பின்பும் அதற்கு விடை காண இயலவில்லை . டைபீரியஸுக்கு அதிகார ஓலையில் கையெழுத்துப் போடும்படி அவன் காலையில் கேட்டதும் மறுக்காமல் ராணி ஒப்புக் கொண்டு ஓலையில் கையெழுத்தைப் பொறித்தது கண்டு அவன் சந்தேகம் பன்மடங்காயிற்று. அந்தச் சந்தேகத்தால் சலனப்பட்ட டைபீரியஸின் கழுகுக் கண்களுக்குப் பள்ளியறைக் கோடியிலிருந்த ராணியின் நனைந்த உடைகள் தெள்ளெனத் தெரிந்தன. அவற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடிய நீரின் சுவட்டையும் அவன் கண்கள் கண்டன. ‘ராணி எப்பொழுது நீராடினாள்? நீராடினால் ஆடைகள் முழுவதும் நனை வானேன்? இதில் ஏதோ மர்மமிருக்கிறது’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாத டைபீரியஸ் ஓலையில் ராணி கையொப்பத்தைப் பொறித்ததும் தலைதாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே சென்றவன் தன் அறையை அடைந்ததும் கோட்டைத் தலைவனைக் கூப்பிட்டனுப்பினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தன் முன் வணங்கி நின்ற கோட்டைத் தலைவனைக் கூர்ந்து நோக்கிய டைபீரியஸ், “கோட்டைத் தலைவரே! ராணியை நாம் தங்க வைத்திருக்கும் அறையைவிட்டு வெளியே செல்ல வாயிலைத் தவிர வழி ஏதாவதிருக்கிறதா?” என்று கேட்டான்.

“இல்லை படைத்தலைவரே! எந்த வழியும் இல்லை” என்றான் கோட்டைத் தலைவன்.

“நீராட மட்டும் வசதியிருக்கிறதல்லவா?” என்று கேட்டான் டைபீரியஸ்.

“நீராடவா? ஆம், ஓர் அறை இருக்கிறது, ஆனால் தற்சமயம் அதில் நீராட வசதிகள் இல்லை. முன்பு சோழ ராணிகள் தங்கும் போது அந்த ஸ்நான அறை நன்றாகப் பரிபாலிக்கப்பட்டிருந்தது. பிறகு அதைக் கவனிப்பாரில்லை. ஆகவே வேறு மஞ்சன அறை கட்டிவிட்டோம்” என்றான் கோட்டைத் தலைவன்.

டைபீரியஸின் இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை படர்ந்தது. கோட்டைத் தலைவனை நோக்கி இறுதியாக உத்தர விட்டான்.

“கோட்டைத் தலைவரே! இன்று முதல் ராணியை நன்றாகக் கண்காணிக்க வேண்டும். அவள் செயல்களைக் கவனிக்கத் திறமையுள்ள ஒற்றர்களை ஏவுங்கள். அவள் எதைச் செய்தாலும், எந்த இடத்தை நோக்கினாலும், யாரிடம் பேச முயன்றாலும், அத்தனையும் கவனிக்கப் படவேண்டும்.”

“ஏன்? ராணி உங்கள் சொற்படி கேட்கவில்லையா?” என்று பணிவுடன் கேட்டான் கோட்டைத் தலைவன்.

“கேட்டுவிட்டாள். அதனால்தான் அஞ்சுகிறேன். கேட்காதிருந்தால் பயப்படமாட்டேன். ராணி ஒரே இரவில் மனத்தை மாற்றிக் கொண்டது வியப்பையும் அச்சத்தையும் ஒருங்கே தருகிறது. எதற்கும் எச்சரிக்கையுடனிரு. ராணியை நன்றாகக் கவனியும்” என்றான் டைபீரியஸ்.

அவன் உத்தரவுப்படியே ராணியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் யவன ஒற்றர்கள் கவனித்தார்கள். ஆனால் டைபீரியஸுக்கு அந்த இரவு சம்பந்தமான நிகழ்ச்சிகளின் தகவல் எதுவுமே கிடைக்கவில்லை. மர்மத்தை உடைக்க முடியாத டைபீரியஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் தன் திட்டங்களைத் தயாரித்தான். புகாரை யவனர் படைத்தள மாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தன. ஆனால் அந்தத் திட்டங்களைப் பற்றிச் சிறிதும், கவலைப்படாத ராணி அவன் எதைச் சொன்னாலும் ஆமோதித்தாள். அடுத்த சில தினங்களில் ராணி சுரணை சிறிதுமின்றியே நடமாடிய வண்ணம் சதா சர்வகாலம் சோழர் படை உபதலைவனைப் பற்றிய எண்ணங்களிலேயே ஆழ்ந்திருந்தாள். அவள் நினைத்த சமயங்களிலெல்லாம் இளஞ்செழியன் பேராபத்தில் சிக்கி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். அவனை அழித்து விடச் செயற்கைச் சக்திகளோடு இயற்கைச் சக்திகளும் சேர்ந்து கொண்டன. விதியை நம்பினான். அந்த யவனர் கப்பலிலேயே தன் வாழ்க்கை அஸ்தமித்து விடும் என்றும் தீர்மானித்துக் கொண்டான்.

Previous articleYavana Rani Part 1 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here