Home Sandilyan Yavana Rani Part 1 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

102
0
Yavana Rani Part 1 Ch40 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch40 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 40 யவன மருத்துவன்

Yavana Rani Part 1 Ch40 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

‘ஹோ’ என்ற பேரிரைச்சல் காதில் விழுந்தது! சரேலென்று பெரும் நீர்த்துளிகள் முகத்தில் வாரியடித்தன! கண்ணுக்கெதிரே தெரிந்தது வானமா, நிலமா, நீர்ப்பரப்பா அல்லது எதுவுமற்ற இடைவெளியா? எதுவுமே தெரிய வில்லை. மங்கலான ஏதோ ஒரு விவரிக்க இயலாத தோற்றம் தலையைத் தாங்கியிருந்ததும் மடியை அமைத்திருந்த மலர்த் தூண்களல்ல. கழுத்தை அழுத்த வலியை அளித்த கடினமான மரக்கட்டை!

‘காவிரியின் பெரும் நீர்ப்பரப்பிலே இதுவரை மிதந்து வந்தது இன்பத் தென்றல்தானே! சூறாவளியைப் போன்ற இந்தப் பேரிரைச்சல் எழுவது எங்கிருந்து? காவிரியின் தென்றலே உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் சூறாவளியாக மாறிவிட்டதா என்ன? இருக்காது! இருக்காது! காது செவிடுபடும் இந்தப் பேரொலி எழுவது வேறிடத்திலிருந்து. ஆனால் கண்ணில் தெரிகிறதே அகண்டமான காவி வண்ண இடைவெளி, இது ஏது? இப்படிக் காவிரியில் எப்பொழுதுமே கண்டதில்லை! காவிரி நீருக்கும் காவி வண்ணமுண்டு. ஆனால் அதிக அலைகளின் துளிரிலிருந்து எழும் வெள்ளை நுரைகளையும் காணலாம். அது எதுவுமே செக்கச்செவேலென்ற இந்த இடைவெளியில் காணோமே. முகத்தில் வாரியடித்ததே சில்லென்று, அது எதுவாயிருக்கும்? யவன நறுமண மலர்த்துளிகளை என்மீதும் தெளிக்கிறாளா ராணி? இருக்காது இருக்காது. மலர்த் துளிகள் உப்புக் கரிக்காதே, உதட்டில் விழுந்த துளிகள் உப்புக் கரிக்கிறதே. ஒருவேளை புகாரின் கடலில் இருக்குமோ? புகாரின் கடலில் பேரிரைச்சலுண்டு. ஆனால் இத்தனை கோர சப்தத்தை இதுவரை கேட்டதில்லையே. இதென்ன தலையில் கட்டை? இந்த மரக்கட்டை எங்கிருந்து வந்தது? படகில் என்னைக் கிடத்திவிட்டு ராணி சென்றுவிட்டாளா?” என்று ஏதேதோ எண்ணமிட்ட சோழர்படை உபதலைவன் எதற்கும் விடையோ விளக்கமோ காணாமல், ஒரு தெளிவில்லாமல் மூளை தர்க்கிக்க, உடல் கனல் கக்க, ஒரு முறை இருந்த இடத்திலே புரண்டு படுத்தான்.

அவன் படுத்துக்கிடந்த இடமோ ஒரு நிலையில் நில்லாமல் இஷ்ட விரோதமாக அவனை அப்புறமும் இப்புறமும் பேயாட்டமாக ஆட்டி அங்கும் இங்கும் தூக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. திறக்க முயன்ற கண்கள் முழுதும் திறவாததால் எதிரே சில நேரம் ஏதோ பழுப்பாகவும் சில நேரம் வெள்ளையாகவும் சில நேரம் இருட்டடித்து முழுக்கறுப்பாகவும் பலவித வர்ணங்கள் தெரிந்ததால், அவற்றுக்கெல்லாம் என்ன காரணம் என்பதை அறிய முயன்றும் அறியச் சக்தியற்ற படைத்தலைவனின் காதில் மட்டும் சதா ‘ஹோ’ என்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலை மூளை அதிகப்படுத்தி உள்ளுக்குள் விபரீதமான ரீங்காரத்தைக் கிளப்பிவிட்டதால் தலையில் ஏதோ ‘நொய்’ என்ற சத்தம் கேட்டுக் கொண்டே யிருந்தது.

அவன் உடம்பை அப்பொழுதும் அனலாகத் தகித்துக் கொண்டிருந்த கடும் சுரத்துக்கு அவன் மீது வாரியடித்த உப்பு நீர் சிறிது ஆறுதலை அளித்ததென்றாலும், அரை மயக்கத்தி லிருந்த படைத்தலைவன் அந்த ஆறுதலை அனுபவிக்கவும் திராணி இல்லாதிருந்தான். மயக்கம் மெள்ள மெள்ளத் தெளிந்து கொண்டிருந்தாலும் சரேலென சுயநிலை அடைய முடியாததால் உலகத்திலே இல்லாத பலவிதக் காட்சிகளைக் கண்டு கொண்டிருந்த கண்ணும் இதயத்துக்கு அனுகூலமும் பிரதிகூலமும் விளைவிக்கும் உண்மைக் காட்சிகளைத் திரித்துக் காட்டிக் கொண்டிருந்த புத்தியும், தங்கள் அலுவல் களை மிக வேகத்தில் செய்து கொண்டிருந்தமையால், இளஞ்செழியன் பெரும் குழப்பத்துக்கு உள்ளானாலும் தன் கண்ணுக்கெதிரே சில மனித உருவங்கள் நடமாடுவதை மட்டும் கண்டான். அந்த உருவங்கள் யார், எந்த நாட்டவர் என்பதை உணர முடியாததாலும், கண் அப்பொழுதும் பஞ்சடைந்து கிடந்ததாலும், இரண்டு மூன்று முறை உணர்ச்சிகளை முடுக்க முயன்று முடியாமற்போகவே மீண்டும் தலையைத் தாங்கி நின்ற மரக்கட்டையில் புரண்டான் படைத்தலைவன். அப்படி இரண்டு மூன்றுமுறை புரண்டதால் கொஞ்சம் உணர்ச்சிகள் திரும்பவே சற்றுத் திடப்பட்ட படைத்தலைவன், தான் இருப்பது காவிரி நீர்ப்பரப்பின் படகல்ல வென்பதையும் கடலில் செல்லும் ஒரு பெரும் மரக்கலத்தில் தான் கிடப்பதையும் சந்தேகத்துக்கிட மின்றிப் புரிந்து கொண்டான்.

“இந்த மரக்கலத்துக்கு எப்படி வந்தோம்?” என்பதை இரண்டு மூன்று முறை எண்ணிப் பார்த்தும் விடைகாணாததால் மெள்ளக் கைகளில் ஒன்றை ஊன்றி எழுந்திருக்க முயன்று முடியாமையால் மீண்டும் கீழிருந்த பலகையில் விழுந்தான். விழுந்தது மிக லேசாகத்தான் விழுந்தானென்றாலும் உடம்பே நொறுங்கிவிடுமோ என்று அச்சப்படக் கூடிய அளவுக்கு அவன் எலும்புகள் வலித்தன. சதைப்பகுதிகளும் மரண வேதனையை அளித்தன. பெரும் பலஹீனமான ஸ்திதியில் தானிருப்பதை உணர்ந்த இளஞ் செழியன், ‘அத்தனை பலவீனம் எனக்கு எப்படி வந்தது?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அதற்கு விடையை அவன் புத்தி அளிக்கவில்லையே தவிர வேறொரு இடத்திலிருந்து விடை மிகத் தெளிவாகக் கிடைத்தது.
“இவன் உடல் இரும்பாயிருக்க வேண்டும் பிரபு. இல்லாவிட்டால் பதினைந்து நாட்கள் கடல் சுரத்தைத் தாங்கியிருப்பானா? இதுவரை நமது வீரர்களிலேயே பத்து பேர் மாண்டு விட்டார்களே!” என்று யாரோ ஒருவன் இரைந்து பேசியது இளஞ்செழியன் காதில் கேட்டது.

“அப்படியானால் பிழைத்து விடுவானா?” என்று மற்றொருவன் கேட்டான்.

“இனிமேல் பயமில்லை. கண்டிப்பாய் பிழைத்து விடுவான்” என்றான் முதலில் பேசியவன்.

“இவன் இறந்துவிடுவானென்று ஐந்து நாட்களுக்கு முன்பே சொன்னீர்களே!” என்று மீண்டும் ஒலித்தது இரண்டாமவன் குரல்.

“அன்று இருந்த நிலைமை அது. இன்று இருக்கும் நிலை இது.”

“அப்படியானால் இவன் சாகமாட்டானா?”

“ஊஹும்.”

“என்ன காரணத்தால் அப்படித் திட்டமாகச் சொல் கிறீர்கள்?”

“இதோ இந்தக் கடல் நீரைப் பார்த்தீர்களா?”

“பார்த்தேன்.”
“பலமுறை இவன்மீது அலைத்துளிகளை வாரியடித் திருக்கின்றன.”

“ஆமாம்.”

“அவற்றில் பாதியையும் உடல் உறிஞ்சிவிட்டது.”

“உண்மை.”

“எதனால் உறிஞ்சிவிட்டது பிரபு? உடலில் நல்ல சுரமிருக்கிறது. மயக்கத்துக்குப் பிறகு சுரம் வரும் மனிதன் சாக மாட்டான். சுரம் என்பதே மனித ரத்தம் வியாதியுடன் போராடுவதால் ஏற்படும் உஷ்ணம். அது ஆறாதவரை மனிதன் இறக்க மாட்டான் என்று மருத்துவ நூல் கூறுகிறது. மயக்கமடைந்த மனிதனுக்கு மீண்டும் சுரம் வருகிறதென்றால் உணர்ச்சிகள் திரும்புகின்றன என்று அர்த்தம்.”

“சுரம் ஓய்ந்தால்?”

“சுரத்தின் ஓய்வு இருவிதத்தில் முடியும். ஒன்று மரணம்; இன்னொன்று ஜீவனம்.”

“இவன் விஷயம் எப்படி?”

“அதுதான் பிழைத்துவிட்டான் என்றேனே!”

இதைக் கேட்ட மற்றவன் பெருமூச்சு விட்டதன்றி, “உம், கடைசியில் பிழைத்து விட்டான்!” என்று இரைந்து தன் வருத்தத்தையும் தெரிவித்தான். இந்த சம்பாஷணை பூராவையும் கேட்ட இளஞ்செழியனுக்கு அத்தனை சுரத்திலும் உள்ளூரச் சிரிப்பு எழுந்தது. தான் பிழைப்பதைக் கண்டு இத்தனை வருத்தப்படும் இந்த மனிதன் யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பிக் கண்களை அகல விரிக்க முயன்றான். அந்தச் சமயத்தில் அவன் கண்களைப் பலமான ஒரு கரம் பொத்தியது. நாவில் யாரோ விரல் கொண்டு சில துளிகளைத் தடவினார்கள். அத்துடன் சுய நினைவை இழந்தான் இளஞ்செழியன்.

எத்தனை நேரம் அந்த மயக்க நிலையில் இருந்திருப்பா னென்பதை படைத்தலைவனால் ஊகிக்க முடியவில்லை யென்றாலும் மீண்டும் அவனுக்குச் சுரணை வந்தபோது கண்களை நன்றாகத் திறக்க முடிந்தது. சுற்றுமுற்றும் பார்த்துத் தன் நிலையை, இருப்பிடத்தை, மனிதர்களைக் கூட அறிந்து கொள்ளும் சக்தி ஏற்பட்டிருந்தது. சுரணை வந்த உற்சாகத்தில் தானிருந்த இடத்தைச் சுற்றிக் கண்களை இருமுறை திருப்பினான். படுத்திருந்த இடத்தையும் நன்றாக அழுத்திப் பார்த்தான்.

படுத்திருந்தது அந்தப் பழைய மரக்கட்டையல்ல. மெத்தென்ற ஆட்டுத்தோல் பஞ்சணை. அவனிருந்த இடமும் திறந்த வெளியல்ல. மிகப் பெரியதாக இல்லாவிட்டாலும் ஒரு சிற்றறை என்று சொல்லலாம். ஆனால் அந்தச் சின்னஞ்சிறு அறையும் ஆடு, புலித் தோல்களாலும் பலவகை முத்து கிளிஞ்சல் முதலியவற்றாலும் சிங்காரிக்கப்பட்டு வெகு ரம்மியமாகவே இருந்தது. ஒரு பக்கத்திலிருந்த மரக்கட்டை சிறிது பிளக்கப்பட்டுச் சாளரம் போலிருந்ததால், வெளியே சீறியெழுந்து கொண்டிருந்த கடலலைகளையும் அறையின் மரச்சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்த ஆயுதங்களையும் பார்த்த இளஞ்செழியன் தான் ஒரு யவனர்கள் கப்பலில் சிக்கியிருப்பதை உணர்ந்தானானாலும், ‘அந்தக் கப்பல் யாருடையது? எங்கு செல்கிறது?’ என்ற விஷயங்களை அறிய முடியாமையால் மெள்ளத் தட்டுத் தடுமாறி அந்த ஆட்டுத் தோல் பஞ்சணையிலிருந்து எழுந்து சாளரத்தை நோக்கி நடந்தான். பஞ்சணைக்கும் சாளரத்துக்கும் இடையிலே இருந்தது சில அடிகளே என்றாலும், சற்றுச் சிரமத்துடனேயே இடைப் பகுதியைக் கடந்து சாளரத்தின் மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு வெளியே நோக்கிய படைத்தலைவன் கண்ணுக்குத் தெரிந்த இயற்கையின் வனப்பைக் கண்டு பிரமித்து நின்றுவிட்டான். கண்ணுக்கெதிரே பெரும் மலைகள் பச்சைப் பசேலென்று எழுந்து – ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டு நின்றன. அதன் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த சில வெண்ணிற மேகங்கள் சற்றே அசைந்து அசைந்து ரோமாபுரி வீரர்களின் கிரீடங்களில் அலையும் வெண்ணிறப் பறவை இறகுகள் போல் காட்சியளித்தன. மலையடிவாரங்களில், கடற்கரையைத் தொட்டுக் கொண்டு தென்னை மரக் கூட்டங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை சோலைகளாகக் காட்சியளித்தன. அந்தத் தென்னை மரங்களிலிருந்த பாளைக் குருத்துக்கள் லேசாக அவிழ்ந்து, தங்களைத் தாக்கவரும் கடலலைகளைப் பார்த்துத் தங்கள் மணிக்குரும்புகளைக் காட்டி நகைத்தன.

தென்னை மரங்கள் மிகுதியாகத் தெரிந்ததாலும் மலைகளும் இணைந்து சுவர்போல் அடர்த்தியாக நின்றதாலும், தமிழகத்தின் மேற்குப் பகுதிக்கு மரக்கலம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட இளஞ்செழியன், தான் தமிழகத்தை விட்டுப் பதினைந்து நாட்களுக்கு மேலாகவே ஆகிவிட்டதென்பதைத் தெரிந்து கொண்டான். கப்பல் யவனர் கப்பலாயிருந்ததாலும் அது மேற்குக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்ததாலும் ஏதோ சூது செய்து டைபீரியஸ் தான் தன்னை அக்கப்பலுக்கு அனுப்பியிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான் இளஞ்செழியன். அந்தக் கதிக்குத் தன்னை ஆளாக்கிய டைபீரியஸைச் சோழ வீரர்களிடமிருந்து உறையூரில் தான் காப்பாற்றியது சரிதானா என்று நினைத்துப் பார்த்த இளஞ்செழியன் மனம், ‘நீ அவனைக் காப்பாற்ற முயன்றது யவன ராணிக்காக. அவளிடமுள்ள மயக்கத்தில் ஊரை இழந்தாய், சுற்றத்தை இழந்தாய். உன் வீரர்களை இழந்தாய், பூவழகியையும் இழந்தாய், இப்பொழுது இந்த ஆழ்கடலில் ஆடிச் செல்லும் மரக்கலத்தில் நீயும் ஆடுகிறாய், உன் வாழ்க்கையும் ஆடுகிறது’ என்று குத்திக் காட்டியது.

அந்தக் குற்றச்சாட்டுகள் நெஞ்சத்தைத் துளைக்கவே தலையை ஒரு விநாடி தொங்கப் போட்டுக் கொண்ட இளஞ்செழியன் மீண்டும் தலையை நிமிர்த்தி, எதிரேயிருந்த இயற்கைக் காட்சியில் லயித்ததன்றிப் பெருமூச்சும் விட்டான். அவன் எண்ணங்களால் தூண்டப்பட்ட கண்கள் எதிரேயிருந்த கடற்கரையை, தென்னஞ்சோலைகளை, பெரு மலைச் சாரல்களைச் சுற்றிச் சுற்றி வந்தன. அப்படி வந்த ஒவ்வொரு முறையும் அதில் பூவழகியும் யவனராணியும் மாறி மாறிச் சிரித்துக் கொண்டு ஓடினார்கள். இரண்டு பேருக்கும் சிரிப்பில் கூட எத்தனை வித்தியாசங்கள்!

‘அதோ பூவழகியின் அழகிய முகத்தில் எத்தனை நாணம்! அந்த நாணமே சிரிப்பின் அழகை உயர்த்துகிறதே! அதோ யவன ராணியும் சிரிக்கிறாள். எத்தனை மயக்கமான சிரிப்பு! சாய்ந்த நீலமணிக் கண்களில் துளிர்விடுவது நாணமா? ஏளனமா? தெரியவில்லையே! அப்பப்பா, என்ன மயக்கம் ராணியின் பார்வையில்! பூவழகி எத்தனை அடக்கம், அடக்கத்தில்தான் எழில் எப்படி எப்படி அசைந்து கண்ணுக்கு எந்தெந்த விதமான இன்பங்களை ஊட்டுகிறது! ஆனால் ராணியும் நடக்கிறாளே, அந்த அலட்சிய நடை, அதில் அசையும் இடை அதிக நேரம் பார்த்தால் அவளை விட்டு இவளைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்’ என்று எதிரே தெரிந்த மலைக் காடுகளிலும் தென்னஞ் சோலைகளிலும் தன் இதயத்தை ஆட்கொண்ட இரு பெண்மணிகளின் வனப்பின் வண்ணத்தையெல்லாம் கண்டு கண்டு உள்ளம் விண்ட இளஞ்செழியன் மெள்ள மறுபுறம் திரும்பிப் படுக்கைக்குச் செல்ல ஓர் அடி எடுத்து வைத்தவன், அந்தச் சிற்றறையின் வாயிற் கதவுக்கருகில் சாய்ந்து நின்ற வண்ணம் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு யவனனைக் கண்டு மீண்டும் காலைப் பின்னுக்கு வாங்கி, சாளரக் கட்டையில் சாய்ந்து கொண்டான்.

யவனன், சோழர் படை உபதலைவனை நோக்கிப் புன்முறுவல் செய்ததன்றி, “என் வைத்தியம் பலித்தது. கப்பல் தலைவன் சோதிடம் செத்தது” என்று கூறினான். யவனன் கிரேக்க மொழியில்தான் பேசினானென்றாலும், நீண்ட நாள் யவனர்களுடன் பழகிய படைத் தலைவனுக்கு அவன் சொன்னதைப் புரிந்து கொள்வதோ, அவனுடன் சம்பா ஷணையில் இறங்குவதோ அதிகச் சிரமமில்லாதபடியால், “கப்பல் தலைவன் என்ன சோதிடம் சொன்னார்?” என்றான். கிரேக்க பாஷையைப் படைத் தலைவன் தெளிவாகப் பேசியதால் வியப்படைந்த யவனன். “நீங்கள் தமிழர் தானே?” என்று சந்தேகத்துடன் வினவினான்.
“ஆம்” என்றான் படைத்தலைவன், தன்னை அத்தனை மரியாதையுடன் அந்த யவனன் அழைத்ததை உள்ளுக்குள் வியந்து கொண்டே.

“கிரேக்க பாஷை நன்றாகப் பேசுகிறீர்களே.”

“கிரேக்க பாஷையும் வரும். ரோமர் பாஷையும் வரும். யவனர் பேசும் மொழிகள் எல்லாமே வரும்.”

“எங்கு கற்றீர்கள்?”

“பூம்புகாரில்.”

இதைக் கேட்டதும் சற்று யோசனையில் ஆழ்ந்த அந்த யவனன், மெல்ல அறைக் கதவைச் சாத்திக் கொண்டு இளஞ்செழியன் படுத்திருந்த பஞ்சணையை நோக்கிச் சென்று உட்கார்ந்து கொண்டு தன் பக்கத்தில் வந்து உட்காரும்படி படைத்தலைவனுக்கும் சைகை செய்தான். அவன் இஷ்டப் படியே உட்கார்ந்த படைத்தலைவனை நோக்கிய அந்த யவனன், “புகாரில் நீங்கள் யார்? உங்கள் தொழிலென்ன?” என்று ரகசியமாக விசாரித்தான்.

“ஏன் கேட்கிறீர்கள்?”

“நீங்கள் கண்டிப்பாய் இறந்து விடுவீர்களென்று எங்கள் கப்பல் தலைவன் சோதிடம் சொன்னான். இறக்கமாட்டீர்கள் என்று நான் சொன்னேன். நான் சொன்னது சரியாயிற்று!” என்று ஏதோ பெரிய ரகசியத்தைச் சொல்பவன்போல் சொன்னான் யவனன்.
“நான் பிழைத்தது உங்களுக்குக் கஷ்டமாயிருக்கிறதா?”

“எனக்குக் கஷ்டமில்லை. கப்பல் தலைவனுக்குக் கஷ்டம்.”

“ஏன்?”

“இறந்தால் கடலில் இழுத்து எறிந்து விடும்படி யவனர் கடற்படைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.”

“யார், டைபீரியஸா?”

“ஆம்.”

“ஓகோ !”

“ஆமாம். ஆனால் நீங்கள் இயற்கையாக இறக்கா விட்டால் யவன ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் காட்டவேண்டிய மரியாதையை உங்களுக்குக் காட்டும்படி உத்தரவிட்டிருக்கிறார். நீங்கள் கப்பலைவிட்டுத் தரையில் இறங்க முடியாது. ஆனால் இந்தக் கப்பலில் நீங்கள் அரச ருக்குச் சமானம்.”

“அப்படியா! நான் சிறையிலிருக்கும் மன்னன்?”

“ஆம். ஆகையால்தான் கேட்கிறேன். இத்தனை உயர் பதவியை டைபீரியஸே அளிக்க விரும்பும் நீங்கள் யார்? புகாரின் மன்னரா, படைத்தலைவரா!”

“எப்படியிருந்தால் என்ன?”

“நான் கேட்பதற்குக் காரணமிருக்கிறது” என்று சொன்ன யவனன், கதவிற்காக மீண்டும் பார்வையை ஓட்டி அங்கு யாருமில்லையென்பதைப் புரிந்து கொண்டு, “உங்களை நான் பிழைக்க வைத்ததற்குக் காரணம் தெரியுமா உங்களுக்கு?” என்று வினவினான்.

படைத்தலைவன் யவனனை உற்றுநோக்கிவிட்டு, இதழ்களில் புன்முறுவலொன்றையும் படரவிட்டு, “நீங்கள் மருத்துவர்தானே?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“ஆகவே கடமையைச் செய்தீர்கள்.”

‘எத்தனை ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் சிரிக்கிறானே இந்தத் தமிழன்’ என்று உள்ளூர நினைத்த மருத்துவன், சற்று வாய்விட்டே சிரித்து, “உங்களைக் காப்பாற்றியதற்குக் காரணம் கடமையல்ல. கடமையை நான் செய்திருந்தால் நீங்கள் இந்தச் சமயத்தில் என்னுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் உயிர் நீங்கள் கப்பலுக்கு வந்த மூன்றாம் நாள், அதாவது பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிட்டுக் குருவிபோல் வானத்தை நோக்கி ஓடியிருக்கும். நீங்கள் கப்பலுக்கு வந்த அன்று, அதாவது சரியாகப் பதினெட்டு நாட்களுக்கு முன்பு, முழு மயக்கத்தில் வந்தீர்கள். உங்கள் உயிர் உடலில் ஊசலாடிக் கொண் டிருந்தது. உங்கள் முகத்தை முதன் முதலில் விளக்கொளியில் பார்த்தேன். அதில் பரவிக் கிடந்த மஞ்சள், முகத்தில் முத்து முத்தாகத் துளிர்ந்த வியர்வை இரண்டிலிருந்தும் டைபீரியஸ் யவன நாட்டின் கடுமையான விஷத்துளிகளால் உங்களை மயக்கியிருக்கிறார் என்பதையும், அந்தத் துளிகளிலிருந்து கிளம்பும் விஷப்புகையை அதிகநேரம் தங்கள் நாசியில் பிடித்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டேன். அப்பொழுதே தெரியும் எனக்கு, டைபீரியஸ் உங்களைக் கொல்லும் அளவுக்கு, மயக்கத் துளிகளை முகர வைத்திருக்கிறார் என்று. சுமார் இருபது துளிகளையாவது அவர் கையில் தடவி உங்கள் நாசியில் பிடித்திருக்கவேண்டும். அதைவிடப் பயங்கரக் கொலை இருக்க முடியாது. மயக்க மருந்தில் பத்துத் துளிகளுக்குமேல் பிரயோகித்தால் அது சுவாசப் பையை அழித்துவிடும். இது டைபீரியஸுக்கும் தெரிந்தே இருக்கும்” என்று விவரித்தான்.

படைத்தலைவன் பதிலேதும் சொல்லாமல், ‘மேலே சொல்லுங்கள்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டுமே ஆட்டவே, யவன மருத்துவன் கதையைத் தொடர்ந்தான்.

“உங்களை நான் உற்றுக் கவனித்ததை டைபீரியஸும் கவனித்தார். ‘இவருக்கு ஐந்தாறு துளிகளே கொடுத்திருக் கிறேன் தெரியுமா?’ என்றார் என்னை நோக்கி. நான் சந்தேகத் துடன் தலையை ஆட்டினேன். ‘சந்தேகம் வேண்டாம். ஐந்தாறு துளிகள் தான், மாற்று மருந்து தேவையில்லை’ என்று திட்டமாகச் சொன்னார். புரிந்து கொண்டேன் என்பதற்கு அடையாளமாக நானும் தலையை அசைத்தேன். கப்பல் தலைவரும் மாற்று மருந்து அளிக்க வேண்டாமெனக் கூறினார். உங்களை இந்த அறையில் கூடப் படுக்க விடவில்லை . கடல் நீர் வாரியடிக்கும் கப்பலின் சுக்கான் பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். ஆனால் நான் ரகசியமாக இரவு நேரத்தில் மாற்று மருந்து கொடுத்தேன். கப்பல் பாய் விரித்து ஓடுவதால் துடுப்புக் காரர்களும் தூங்கும் நடுநிசியில் மாற்று மருந்தைப் புகட்டினேன். நாலைந்து நாட்களுக்கு முன்பு வரை நீங்கள் பிழைப்பீர்களென்று நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் மருந்தின் பலம், உங்கள் உடல் வலு, ஆண்டவன் அருள் மூன்றிலும் பிழைத்தீர்கள்.”

“நான் பிழைப்பதில் கப்பல் தலைவனுக்கு இஷ்ட மில்லையா?”

“இல்லை. நீங்கள் இறக்காவிட்டால் இன்னும் மயக்கத் துளிகளைக் கொடுக்கவும் உத்தரவிட்டான். நான் மறுத்தேன். டைபீரியஸ் நீங்கள் இறக்கவேண்டும் என்று நினைத்தார். அதுவே கப்பல் தலைவனுக்கு ஆணையாயிற்று.”

“நீங்கள் ஏன் கருத்து வேறுபாடு கொண்டீர்கள்?”

யவன மருத்துவன் பதிலேதும் சொல்லாமல் எழுந்து சென்று கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்து மீண்டும் கதவை மூடிக்கொண்டு திரும்பிப் பஞ்சணைக்கு வந்து படைத்தலைவன் காதோடு காதாக ஏதோ சொன்னான். படைத்தலைவன் முகத்தில் சொல்ல வொண்ணாத வியப்பு படர்ந்தது. “இருக்காது. இருக்க முடியாது. இது சுத்த பொய். எப்படி முடியும் யவனரே?” என்று கூவினான் படைத் தலைவன்.

“உஸ்! இரையவேண்டாம்! தெரிந்தால் இருவர் உயிரும் போய்விடும். இந்தாருங்கள். இதைப் பாருங்கள்” என்று தன் மடிக் கச்சையை அவிழ்த்து, ஏதோ ஒரு பொருளை எடுத்துப் படைத்தலைவன் கையில் வைத்துப் பத்திரமாக மூடிய யவன மருத்துவன், “ஊஹூம்! இப்பொழுது வேண்டாம். இரவில் பாருங்கள். துடுப்பு தள்ளுபவர்கள் தூங்கியதும் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து அடிமேல் அடி எடுத்து வைத்து வெளியேறினான்.

நடுநிசி வந்து மெள்ள அந்த அறைக் கதவும் திறந்தது. உருவம் ஒன்று இருட்டில் ஓசைப்படாமல் வந்து படைத் தலைவன் பஞ்சணையில் உட்கார்ந்தது. “மருத்துவரே!” என்று மெள்ள அழைத்தான் படைத்தலைவன். பதிலுக்கு அந்த உருவம் நகைத்தது. ஏதோ சந்தேகம் ஏற்படவே எழுந்திருக்க முயன்ற படைத்தலைவனைப் பலமான கரம் ஒன்று அழுத்தி மீண்டும் படுக்க வைத்தது. வந்தது மருத்துவனல்ல என்பதைப் புரிந்துகொண்டான் படைத்தலைவன்.

Previous articleYavana Rani Part 1 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here