Home Sandilyan Yavana Rani Part 1 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

66
0
Yavana Rani Part 1 Ch41 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch41 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 41 எண்சாண் உடம்பு! எட்டு முழக் கயிறு!

Yavana Rani Part 1 Ch41 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

கடல் நீரைத் தொட்டுக் காற்று உந்தியதால் எழுந்த அலைகளின் பேரரவத்தாலும் அந்த அலைகள் மரக்கலத்தின் பக்கப் பகுதிகளில் தாக்கித் தாளம் போட்டதற்கு இசை அமைக்கும் பாவனையில் காற்றும் சுழன்றடித்து ‘ஊ’ என்று ஊழிக் கூச்சல் போட்டதாலும், பெரும் சுறாக்கள் திடீர் திடீரென மரக்கலத்தின் அடிப்புறத்தில் பாய்ந்து தங்கள் பெருவால்களால் படீர் படீரெனத் தாக்கியதாலும் பயங்கர சப்தங்களை எங்கும் எழுப்பிப் பிசாசுகளும் நடுங்கும் சூழ்நிலையை இயற்கை சிருஷ்டித்துவிட்டிருந்த அந்த நடுநிசியில், விளக்கும் அணைக்கப்பட்டுச் சாளரமும் சாத்தப் பட்டிருந்ததால் மையிருட்டு அறையெங்கும் பாய்ந்து முகமும் விளங்காதிருந்த அந்த அர்த்த ராத்திரியில், எதிர்பார்த்தபடி யவன மருத்துவன் வராமல் வேறு ஒருவன் தன் பஞ்சணையில் உட்கார்ந்து லேசாக நகைத்தது மல்லாமல், எழுந்திருக்க வொட்டாமல் தன்னை அழுத்திப் படுக்க வைத்ததையும் கண்ட சோழர் படை உபதலைவன் ஒருகணம் சினத்துக்கு இடம் கொடுத்தானானாலும், அடுத்த கணம் பெரும் சந்தேகமும் வியப்பும் கலந்த உணர்ச்சி அவன் உடலெங்கும் பாய்ந்து சென்றது. சொற்களால் விவரிக்க முடியாத வியப்பு படைத்தலைவனைப் பற்றிக்கொண்டதால் அவன் மெள்ளத் தன் வலது கரத்தைத் தொட்டுத் தடவிக்கொண்டே போய் தோள்புறம் வந்ததும் சற்றுத் தடவுவதை நிறுத்தி, ஆள்காட்டி விரலால் வருடிப் பார்த்துவிட்டு, ‘ஆம் ஆம். சந்தேகமில்லை’ என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டதன்றிச் சற்று நிம்மதியாகப் படுக்கையிலும் திரும்பிப் படுத்தான். பஞ்சணையில் உட்கார்ந்த உருவம் அவன் அசைவதைக் கண்டதும் மெள்ளத் தலைதாழ்த்தி இதழ்களை காதுக்கருகில் கொண்டுவந்து, “அசையக்கூட வேண்டாம். இந்த மரக் கலத்தின் தலைவனுக்குச் சந்தேகம் சிறிது வந்தாலும் மூன்று உயிர்கள் சிட்டாகப் பறந்துவிடும். ஆகையால் மெள்ளப் பேசுங்கள்” என்று எச்சரித்தது.

அந்த எச்சரிக்கைப்படியே மிக மெதுவாகப் பேசத் துவங்கிய படைத்தலைவன், “யார் அந்த மூன்று பேர்?” என்று கேட்டான்.

“நீங்கள், நான், மருத்துவன்” என்று பதில் கூறிய அந்த உருவம், “பேசாமல் படுத்திருங்கள். வெளியே போய் நிலைமை எப்படியிருக்கிறதென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, வெளியே சென்று, சில வினாடிகளுக் குள்ளேயே திரும்பியதன்றி, அறைக் கதவை மிக எச்சரிக்கை யுடன் மூடித் தாழிட்டதானாலும் சாத்தியிருந்த சாளரக் கதவுகளை மட்டும் நன்றாகத் திறந்துவிட்டது.

“சாளரக் கதவுகளை ஏன் திறக்கிறாய் ஹிப்பலாஸ்?” என்று மெள்ள வினவினான் இளஞ்செழியன்.

“நாம் பேசுவதற்கு அனுகூலமாக இருக்கும்” என்று ஹிப்பலாஸ் பதில் சொன்னான்.

“என்ன அனுகூலமிருக்கிறது இதில்?”

“ஊது காற்று அடிக்கிறது. அலைகளின் இரைச்சலும் இருக்கிறது.”

“ஆமாம். அதனாலென்ன?”

“சாளரத்தைத் திறந்ததில் அந்தப் பேரிரைச்சல் இந்த அறை பூராவும் நிரம்பிவிட்டது பார்த்தீர்களா?”

“ஆமாம் ஹிப்பலாஸ்!”

“இந்த இரைச்சலில் இரைந்து பேசினாலும் வெளியே கேட்காது” என்று விளக்கிய ஹிப்பலாஸ், “இருந்தபோதிலும் மெதுவாகவே பேசுவோம் படைத்தலைவரே!” என்று கூறிக் கொண்டே மீண்டும் பஞ்சணையில் வந்தமர்ந்தான்.

ஹிப்பலாஸின் வார்த்தைகளைக் கேட்ட இளஞ்செழியன் தன் மனம் குழப்பத்திலாழ்ந்திருந்ததால் சாதாரண விஷயங்களைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டதையும், சாளரத்தின் கதவுகள் திறக்கப்பட்டதால் கடலின் பேரிரைச்சலில் சம்பாஷிக்கலாமென்ற சிறு விஷயத்தையும் ஹிப்பலாஸ் சொல்லித், தான் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதையும் நினைத்துப் பார்த்து, சற்று நகைக்கவும் செய்தான். சமயம் மட்டும் வேறாயிருந்தால், இருக்குமிடம் யவனர்கள் மரக்கலமாயில்லாது, சோழ நாட்டு மண் தரையாயிருந்தால் ஹிப்பலாஸிடம் தான் உரையாடும் முறையே வேறு விதமாயிருக்கும் என்பதை எண்ணிய படைத்தலைவன் அந்த நகைப்பைப் புன்முறுவலாகச் சுருக்கிக் கொண்டு, “இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் ஹிப்பலாஸ்?” என்று வினவினான்.

புகாரில் சில நாட்களுக்கு முன்பு தனக்கும் படைத் தலைவனுக்கும் நடந்த சம்பாஷணையை நினைத்துக் கொண்டதால் ஹிப்பலாஸின் இதழ்களிலும் புன்முறுவல் அரும்பியதன்றி, அவன் சொன்ன பதிலிலும் விஷமம் நிரம்பி நின்றது. “அறிவு அஸ்தமிக்கும் இடத்தில் இருக்கிறோம் படைத் தலைவரே?” என்றான் ஹிப்பலாஸ்.

மயக்கத் துளிகளை முகர்ந்ததால் அப்பொழுதும் சரிப்படாத சிந்தனையின் விளைவாகச் சற்று குழப்பத் துடனேயே இருந்த இளஞ்செழியன், “என்ன! அறிவு அஸ்தமிக்குமிடத்திலா?” என்று வினவினான் ஏதும் புரியாமல்.

“ஆம், படைத்தலைவரே மேற்குத் திசையில் இருக் கிறோம்.”

“அங்கு அறிவு…?”

“கதிரவனைப் போன்றதென்று நீங்கள் தானே கூறி னீர்கள்? கதிரவன் உதயமாவது கீழ்த்திசையாகையால் கீழ் நாடுகளில்தான் அறிவு உதயமாகிறதென்றும், மேல்திசையில் அது அஸ்தமிக்கிறதென்றும் உபதேசித்திருக்கிறீர்களே பிரபு.”

யவன ராணியை முதன் முதலாகப் பூம்புகாரின் கடற்கரையிலிருந்து தூக்கிக் கொண்டு போய்த் தனது அறையில் கிடத்திய அன்று சொன்ன அந்தச் சொற்களை ஹிப்பலாஸ் நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்த படைத்தலைவன் சொன்னான், “உண்மைதான் ஹிப்பலாஸ்! என் அறிவும் இப்பொழுது அஸ்தமித்துத்தான் கிடக்கிறது” என்று.

படைத்தலைவன் வியப்புடன், வேதனையும் கலந்த குரலில் சொன்ன அந்தச் சொற்கள் ஹிப்பலாஸின் மனத்தை இளக்கிவிட்டதால் அவன் இளஞ்செழியனின் கரத்தைப் பணிவுடன் பற்றிக்கொண்டு, “படைத் தலைவரே! அறிவைப் பறிகொடுக்கச் சமயம் இதுவல்ல. அறிவை நன்றாகத் தீட்டி வைத்துக் கொண்டாலொழிய நாம் இந்த மரக்கலத்திலிருந்து தப்ப முடியாது” என்று உணர்ச்சி ததும்பக் கூறினான்.

சோழர் படை உபதலைவன், ஹிப்பலாஸ் கூறியதை ஆமோதிக்கும் முறையில் படுத்தபடியே தலையைச் சிறிது அசைத்தான். பிறகு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தான். கடைசியாக, “ஆமாம் ஹிப்பலாஸ்! இந்த மரக்கலத்துக்கு நீ எப்பொழுது வந்தாய்? எப்படி வந்தாய்?” என்று கேள்விகளையும் வீசினான்.

“நீங்கள் இந்த மரக்கலத்துக்கு வந்த மூன்றாம் நாள் நானும் இதை அடைந்தேன்” என்று பதில் கூறினான் ஹிப்பலாஸ்:

“எந்த இடத்தில் இதை அடைந்தாய்?”

“காயலுக்கு அருகில்.”

“காயல் பட்டணத்துக்கு அருகிலா?”

“ஆம்.”

“ஏன், காயல் துறைமுகத்திலேயே ஏறுவதுதானே?”

“வேண்டாமென்று பிரும்மானந்தர் சொன்னார்.”

இதைக் கேட்டதும் பஞ்சணையிலிருந்து திடீரென்று கீழே இறங்க முற்பட்ட இளஞ்செழியனை, “வேண்டாம் படைத்தலைவரே. இப்படியே பேசுவோம். நடக்க வேண்டாம். உங்களுக்கு இன்னும் பூரணமாகக் குணமாகவில்லையென இந்தக் கப்பலிலுள்ள யவன மருத்துவன் சொல்லியிருக்கிறான்” என்று தடுத்த ஹிப்பலாஸ் மேலும் சொன்னான்: “அது மட்டுமல்ல படைத்தலைவரே! டைபீரியஸ் கொடுத்த மயக்கத் துளிகளைவிட, மிகப் பயங்கரமான விஷத் துளிகளை உமக்குக் கொடுத்திருப்பதாகவும், அவை உம்மைக் குணப்படுத்துவது போல் காட்டிப் பிறகு திடீரெனக் கொன்றுவிடுமென்றும் மருத்துவன் கப்பல் தலைவனிடம் பொய் சொல்லியிருக்கிறான். ஆகவே உங்கள் உடல் நிலை சிறிது சிறிதாகத் தெளிவ தாகத்தான் நீங்கள் பாசாங்கு செய்ய வேண்டும். உடனே எழுந்து நடமாடினால் சந்தேகத்துக்கு இடமாகும். படுத்தபடி இருப்பதில் நமக்கு அனுகூலம் இருக்கிறது.”

“என்ன அனுகூலம்?”

“படுத்தபடி இருந்தால் அதிகக் கண்காணிப்பிருக்காது.”

“உண்மைதான் ஹிப்பலாஸ்” என்று ஒப்புக்கொண்ட சோழர் படை உபதலைவன் மீண்டும், பஞ்சணையில் சாய்ந்து கொண்டு வினவினான்: “நான் சிறைப்பட்டது பிரும்மா னந்தருக்கு எப்படித் தெரியும்?”

“புகாரின் பரதவர் கண்களில் படாமல் யாரையாவது காவிரிப் புனலில் கொண்டுபோக முடியுமா படைத் தலைவரே, உங்களைக் கொண்டுபோன படகோட்டி மூலமே விஷயமறிந்தோம். உடனே காயலுக்குப் புறப்படும்படி பிரும்மானந்தர் எனக்குக் கட்டளையிட்டார். ‘கடல் பிரயாணத்தைவிட கரைப்பிராயணத்தைத் துரிதமாகச் செய்யலாம். குதிரையில் ஏறிக் காற்று வேகத்தில் செல். ஏதாவது உடைந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு நீந்தி மரக்கலத்தை அடை. துறைமுகத்தில் ஏறவேண்டாம்” என்று அடிகள் உத்தரவிட்டார். அவர் கருத்தைப் புரிந்து கொண்டேன். அவர் சொற்படியே காயலுக்கருகில் மரக்கலத்தை எதிர்பார்த்து நின்றேன், அது காயல் துறைமுகத்தை அடைவதற்குச் சிறிது தூரத்திற்கு முன்பே உடைந்த மரத்துண்டு ஒன்றுடன் கடலில் நீந்திச் சென்றேன். யவனர் மரக்கலம் சற்றுத் தூரத்திலிருக்கும்போதே மரக்கட்டைமீது படுத்து மிதந்தேன். கப்பலோட்டிகள் என்னைத் தூக்கிக் கப்பலில் போட்டார்கள். எனக்கு உபசரணையும் செய்தார்கள்…”

இளஞ்செழியன் நன்றி ததும்பிய கண்களை அவன்மீது நாட்டி, “ஹிப்பலாஸ்! மிகுந்த முன்யோசனையுடன் திட்டமாக உன் பணியை நிறைவேற்றியிருக்கிறாய்” என்று பாராட்டியதன்றி, தன் உள்ளத்தே எழுந்த உணர்ச்சிகளுக்கு அறிகுறியாக ஹிப்பலாஸின் பெரும் தோளையும் தன் கையால் அழுத்தினான்.

எந்த ஒரு படைத்தலைவனின் ஒரே சொல்லில் பெரும் படைகள் அசையுமோ, எந்த ஒரு படைத்தலைவனைப் பின் பற்றுவதைத் தமிழகத்தின் வீரர்கள் மட்டுமன்றி, யவனர்களும் கடுமையாக மதித்தார்களோ, அந்தப் படைத் தலைவன் தோழமை உணர்ச்சியுடன் சரிசமமாகத் தன் தோள்களைத் தொட்டதால் உடல் புல்லரிக்க, நாத் தழுதழுக்கப் பேசத் தொடங்கிய ஹிப்பலாஸ், “பிரபு! முன் யோசனை என்னுடையதல்ல. நாமனைவரும் வணங்கும் பிரும்மானந்தருடையது. யவனர் கப்பலில் நீங்கள் சிறைப்படுத்தப்பட்டதை அறிந்த உடனேயே அவர் திட்டங்களை அணு அணுவாக வகுத்தார். அவர் கைக்கருவிதான் நான். அவர் சொற்படி நடந்தேன், அவர் உத்தரவுப்படி படகுடைந்து நடுக்கடலில் திண்டாடுபவனாக நடித்து இந்த மரக்கலத்தை அடைந்தேன். அவர் உத்தரவுப்படி அவர் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத நல்முத்துக்களைக் கொடுத்து யவன மருத்துவனை நம் வசமாக்கினேன். எல்லாம் பிரும்மானந்தர் செய்தது. என் பங்கு இதில் சொற்பம்” என்று மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறி விளக்கினான்.

எதிர்பாராதவிதமாக ஹிப்பலாஸின் உதவி தனக்குக் கிடைத்ததன் மர்மத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட இளஞ்செழியன் பிரும்மானந்தரை மனத்தால் வணங்கினான். ஹிப்பலாஸை மனதார வாழ்த்தினான். “ஹிப்பலாஸ்! எனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை . ஆனால் அப்படி ஒரு உறவைச் சம்பாதிக்க யவன நாட்டிலிருந்து நீ வருவாய் என்பதை நான் அறியவில்லை” என்று இளஞ்செழியன் கூறியதால் சற்றே சங்கடத்துக்குள்ளான ஹிப்பலாஸ், “பிரபு! நான் தங்கள் அடிமை. தங்களால் படைகளை நடத்தும் பயிற்சி பெற்றவன். எந்தத் தமிழகத்தின் உப்பைத் தின்றேனோ அந்தத் தமிழகம் ஆபத்திலிருக்கிறது. யாரை என் தெய்வமாக மதிக்கிறேனோ அவர் யவனரால் வஞ்சிக்கப்பட்டார். எனக்கு அன்னமிட்ட நாட்டுக்கும் என்னை வீரனாக்கிய படைத்தலைவருக்கும் நான் இந்தச் சிறு பணியையும் செய்யவில்லையென்றால், கடமையைக்கூட நான் செய்யாவிட்டால் அதைவிட நன்றி கொன்ற செய்கை என்ன இருக்க முடியும். அது கிடக்கட்டும் பிரபு! இப்பொழுது மேலே நடக்க வேண்டியதை நாம் யோசிக்க வேண்டும்” என்றான்.

“சொல் ஹிப்பலாஸ்.”

“முத்துக்களுக்கு ஆசைப்பட்டு மருத்துவன் உங்கள் உயிரை மீட்டிருக்கிறான்.”

“ஆமாம்.”

“அவனுக்குக் கப்பல் தலைவனிடமிருந்து ஆபத்து வரக்கூடாது.”

“சரி.”

“ஆகவே, நீங்கள் அடுத்த இரண்டு நாட்கள் உடம்பு குணமாகிவிட்டது போல் பாசாங்கு செய்யவேண்டும்.”

“அது பிரமாதமல்ல.”

“அறையைவிட்டு வெளியே வந்து மற்ற யவனர்களுடன் கலந்து பழக வேண்டும்.”

“அதுவும் பிரமாதமல்ல.”

“இன்றிலிருந்து மூன்றாம் நாள் காலை மரக்கலத்தில் மற்றவர்களிடையே உலாவும்போது திடீரென மயக்கம் போட்டு விழவேண்டும்.”
இதைக் கேட்ட சோழர்படை உபதலைவன், ஹிப்பலாஸும் மருத்துவனும் சேர்ந்து வகுத்துள்ள திட்டத்தைப் புரிந்து கொண்டான். முதலில் குணப்படுவது போல் குணப்பட்டு, பிறகு நலிவுற்று இறந்துவிடுவான் என்று யவன மருத்துவன் தன்னைப்பற்றிக் கப்பல் தலைவனிடம் கூறியிருப்பதால், அதைப்போல் தான் நடித்து மீண்டும் மயக்க முற்றுப் படுத்துவிட வேண்டியதென்றும், பிறகு தான் இறந்து விட்டதாக மருத்துவன் அறிவித்து விடுவானென்றும் புரிந்து கொண்ட இளஞ்செழியன், அதற்கடுத்த திட்டம் என்ன என்பதை அறியாததால், “சரி, இறந்துவிடுகிறேன் ஹிப்பலாஸ்! ஆனால் நிரந்தரமாக இறக்க முடியுமா? மீண்டும் பிழைக்க வழி இருக்கிறதா?” என்று விசாரித்தான்.

“பிணங்களை மூங்கில் தட்டிகளில் வைத்துத் துணியால் மூடிக் கடலில் எறிந்துவிடுவது யவனர்கள் வழக்கம்” என்று சொல்லிய ஹிப்பலாஸ் படைத்தலைவனை உற்று நோக்கினான்.

படைத்தலைவன் ஹிப்பலாஸின் யோசனையை நன்றாக அறிந்துகொண்டதால், “புரிகிறது ஹிப்பலாஸ்! மூங்கில் தட்டியில் வைத்துத் துணியால் மூடுவார்கள்! ஆனால் மற்ற பிணங்களைப்போல் இந்த உயிருள்ள பிணத்தைக் கயிறு கொண்டு கட்ட மாட்டீர்கள். கட்ட மறந்து, கடலில் அப்படியே தள்ளிவிடுவீர்கள்” என்றான் மகிழ்ச்சியுடன்.

“ஆமாம் படைத்தலைவரே, அதுதான் திட்டம். இரவில் உங்களைக் கடலில் தள்ளிவிடுகிறேன். சற்று நேரத்திற் கெல்லாம் நானும் குதித்துவிடுகிறேன். இருவரும் கரையில் சந்திப்போம்.”
“கரை எது?”

“நெல்ஸிந்தாவின் அருகாமை.”

இதைக் கேட்டதும் இளஞ்செழியன் உணர்ச்சிகள் வரம்பு மீறித் துள்ளியதன் விளைவாக அவன் ஹிப்பலாஸின் எச்சரிக்கையையும் மீறிப் பஞ்சணையிலிருந்து கீழே குதித்து அறையிலே சற்று நேரம் உலாவினான்.

“மிகவும் அபாயத் திட்டம் ஹிப்பலாஸ்! *நெல்ஸிந்தா என்று யவனர் அழைக்கும் நீலகண்ட நகரத்தின் துறைமுகத் துக்கும் அருகிலுள்ள கடல் பயங்கர சுறாக்களுக்குப் பெயர் போனது. இப்பொழுது நாம் செல்லும் கடற் பிராந்தியமே அபாயமானது. இங்கேயே பெரும் சுறாக்கள் உண்டு. ஆனால் நீலகண்ட நகரத் துறைமுகத்தருகே உள்ள கடலிலுள்ள சுறாக்களுக்கு இணை எங்கும் கிடையாதென பரதவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னையும் என்னையும் போல் இரண்டு பேரை விழுங்கக்கூடிய சுறாக்கள் சதா கடலில் சஞ்சரிக்குமாம். கேள்விப்பட்டதில்லையா நீ?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்கவும் செய்தான் படைத்தலைவன்.

இதற்குப் பதில் சொன்ன ஹிப்பலாஸின் குரலிலும் கவலை தோய்ந்துதானிருந்தது. “உண்மைதான் பிரபு! ஆனால் வேறு வழியில்லை. நெல்ஸிந்தாவைத்தான் நாம் நான்காம் நாள் இரவில் அடைவோம். அன்றுதான் திட்டத்தை நிறைவேற்ற முடியும். இல்லையேல்…”

“இல்லையேல்?”

“என் பெயருள்ள காற்று வீசத் தொடங்கிவிடும்?”

“ஹிப்பலாஸ் என்ற தென்மேற்குப் பருவக்காற்று தானே?”

“ஆம், பிரபு, இது தாங்கள் அறியாததல்ல. அந்தக் காற்றில் மரக்கலம் திருப்பப்பட்டால் எரித்திரியக் கடலின் குறுக்கே யவன நாட்டை நோக்கி ஓடுவோம். பிறகு தப்புவதைப் பற்றி எண்ணுவதில் அர்த்தமில்லை. நெல் ஸிந்தாவுக்கு அருகில்தான் திட்டம் நிறைவேற வேண்டும். வேறு வழியில்லை !” என்றான்.

“சரி ஹிப்பலாஸ்! ஆண்டவன் விட்ட வழியாகட்டும். கடலில் தள்ளும்போது எதற்கும் இந்தப் பிணத்தின் மடியில் ஒரு கத்தியைச் செருகிவை” என்று இளஞ்செழியன் கூறினான்.

“அப்படியே செய்கிறேன் படைத்தலைவரே! நீங்கள் எப்படி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவன் இன்று பகல் உங்களிடம் கொடுத்த ஓலையில் இருக்கும். படித்து நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு ஹிப்பலாஸ் சென்று விட்டான்.

அன்றிரவு முழுவதும் இளஞ்செழியன் உறங்கவே யில்லை. நீலகண்ட நகரத்தின் துறைமுகத்துக்கெதிரில், சுறாக்களின் வாயிலிருந்து தப்பினால் வாழ்வு உண்டு. இல்லையேல் வாழ்வில்லை என்ற நிலைமையை நினைத்துப் பெருமூச்செறிந்தான். அதில்லையேல் கப்பல் தலைவன் கையால் தனக்கு மட்டுமன்றித் தன்னைக் காத்த யவன மருத்துவனுக்கும் மரணம் என்பதை நினைத்துப் பார்த்த இளஞ்செழியன், ‘சே, கூடாது, ஒருக்காலும் கூடாது?’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். எந்தக் காரணத்தை முன்னிட்டும் மருத்துவனைக் காட்டிக் கொடுக்கக் கூடா தென்ற முடிவுக்கு வந்து, மருத்துவன் ஓலையில் குறிப்பிட் டிருந்தபடி மறுநாள் முதல் நடக்கத் துவங்கினான். காலையில் எழுந்ததுமே அறையைவிட்டுக் கப்பல் பாய்மரத்தருகில் வந்து எதையோ புதிதாகப் பார்ப்பவன்போல் மிரள மிரள விழித்தான். பிறகு கப்பல் தளத்தில் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். அடுத்த நாள் சற்றுத் திடமாக நடந்தான். அவன் உடலில் வலு வந்து நடப்பதைக் கண்டு யவன மரக்கலத்தின் தலைவனும் மகிழ்ந்தான். மருத்துவனும் மகிழ்ந்தான். “விளக்கு அணைவதற்கு இந்தப் பிரகாசம் ஏற்பட்டிருக்கிறது” என்று கப்பல் தலைவனிடம் மருத்துவன் கூறினான். இளஞ்செழியன் தான் வகுத்த திட்டப்படி நடப்பதால் தன் தலை தப்பிவிடும் என்று உள்ளூர மகிழ்ந்த மருத்துவன் மேலுக்குக் கப்பல் தலைவனை நோக்கி, “நீங்கள் விரும்பியபடி செய்துவிட்டேன். இனி என்மேல் தவறில்லை” என்று கூறிக் கடமையைச் செய்தவன் விடும் திருப்திப் பெருமூச்சு ஒன்றையும் விட்டான். மூன்றாம்நாள் காலையில் இளஞ்செழியன் கப்பல் தளத்தில் மயங்கி விழுந்ததும் பேருவகை கொண்ட கப்பல் தலைவன் ஆனந்தம் தாங்காமல் மருத்துவனை முதுகில் தட்டியும் கொடுத்தான்.

அடுத்த நாள் முழுதும் கண்மூடிக் கொண்டும், கப்பல் தலைவன் வந்து பார்க்கும்போதெல்லாம் மூச்சு விடாமலும் படுத்திருக்க வேண்டிய நரகவேதனையை அனுபவித்த இளஞ் செழியன், “இதைவிடச் சுறாக்களின் வாயில் அகப்படுவது பெரும் பாக்கியம்’ என்று சொல்லிக் கொண்டான். அத்தனை கஷ்டத்திலிருந்த படைத்தலைவனுக்கு விடுதலை தரும் நான்காவது நாள் இரவும் வந்தது. அந்த நான்காம் நாளிரவின் முதல் ஜாமத்தின் இரண்டாவது பகுதியில் அறைக்குள்ளே நுழைந்த யவன மருத்துவன் இளஞ்செழியனை எச்சரித்து விட்டு, திடீரென ஓடி, கப்பல் தலைவனுடன் திரும்பி வந்தான். கையிலிருந்த பந்தத்தை உயர்த்திப் படைத்தலைவன் முகத்தை ஆராய்ந்த கப்பல் தலைவன், “இந்த வீரன்…” என்று மருத்துவமனை நோக்கிக் கேட்டான்.

“வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான்” என்று சொல்லிக் கப்பல் தலைவனை நோக்கிய மருத்துவன், “பிரபு! மேற் கொண்டு நடக்கவேண்டியது நடக்கலாமா?” என்று கேட்டான்.

“நடக்கலாம், பிணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?” என்று கூறிய கப்பல் தலைவன் விடு விடு என்று நடந்தான்.

மருத்துவன் திட்டப்படி சகலமும் நடந்தது. மூங்கில் தட்டியைக் கொண்டுவந்த யவனர்களில் ஹிப்பலாஸைத் தவிர மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்ட மருத்துவன், இளஞ்செழியனைத் தட்டியில் படுக்கச் சொல்லிப் பெரும் துணியால் அவன் உடலை மூடினான். ஹிப்பலாஸ் பலமான கத்தியொன்றை அவன் இடையில் செருகினான். இருவரும் மூங்கில் தட்டியை இருபுறமும் பிடித்துத் தூக்கிக்கொண்டு அறையைவிட்டு மரக்கலத்தின் தளத்துக்கு வந்து ஓர் எட்டில் தட்டியைச் சாயவைத்துக் கடலில் சடலத்தைத் தள்ளிவிட முயன்று சற்றே தட்டியைத் தூக்கிய சமயத்தில், “நில்!” என்று ஒரு அதிகாரக் குரல் வரவே திடுக்கிட்டுத் திரும்பிய ஹிப்பலாஸும் யவன மருத்துவனும் தங்களுக்குப் பின்னால் கப்பல் தலைவன் நிற்பதைக் கண்டு மிதமிஞ்சிய பிரமிப்புக்கும் கலவரத்துக்கும் உள்ளானார்கள்.
கப்பல் தலைவன் கேட்ட கேள்வி அவர்கள் கலவரத்தை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது. கடுஞ்சினத்துடன் கேட்டான் கப்பல் தலைவன், “ஏன் இந்தப் பிணத்தைக் கயிறு கொண்டு தட்டியுடன் பிணைக்கவில்லை?” என்று.

“தேவையில்லை என்று நினைத்தேன்” என்று மருத்துவன் குழறினான்.

கப்பல் தலைவன் பதில் சொல்லாமல் படைத் தலைவன் உடலை மூடிய துணியைத் திறந்து நோக்கி, “இது ஏது கத்தி? யார் செருகியது இங்கே!” என்று சீறினான். ஹிப்பாலஸுக்குப் பிராணனே போய்விடும் போலிருந்தாலும் அதை வெளிக்குக் காட்டாமல் அடக்கத்துடன் பதட்ட மில்லாமலே சொன்னான்: “தமிழ் நாட்டில் வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை இது. அவர்கள் வாளுடன் இருப்பார்கள். வாளுடனே இறப்பார்கள். வாளை அவர் களிடமிருந்து பிரிப்பது வழக்கமில்லை ” என்று .

கப்பல் தலைவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, “பிணத்துடன் இந்தக் கத்தியும் தொலையட்டும். ஆனால் இந்தப் பிணத்தை மூங்கில் தட்டியுடன் பலமாகப் பிணைத்துவிடுங்கள்” என்று கூறியதன்றி, மரக்கலத்திலிருந்த வீரர்களில் சிலரை அழைத்து, “டேய்! பூம்புகாரிலிருந்து பெரும் தாழை நார்க் கயிறுகளைக் கொண்டு வந்தோமே, அவற்றில் எட்டு முழம் எடுத்து வந்து இந்தப் பிணத்தைத் தட்டியுடன் இறுகப் பிணையுங்கள்” என்று உத்தரவிட்டுத் தானே நேரில் நின்று இளஞ்செழியன் உடலைத் தட்டியுடன் நன்றாகக் கயிறுகளைக் கொண்டுவந்து கட்டவும் செய்தான். கட்டி முடிந்ததும் தட்டியையும் உடலையும் ஒருமுறை அசைத்துப் பார்த்து, “சரி, தூக்கிக் கடலில் எறிந்துவிடுங்கள்” என்றும் ஆணையிட்டான்.

Previous articleYavana Rani Part 1 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here