Home Sandilyan Yavana Rani Part 1 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

99
0
Yavana Rani Part 1 Ch42 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch42 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 42 இவன் விலை என்ன?

Yavana Rani Part 1 Ch42 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

தெய்வம் உண்டா இல்லையா? ஆதிகாலம் முதல் மனிதன் தன்னைத்தானே கேட்டுவரும் கேள்வி இது. அவ்வப்பொழுது பதிலும் சமயோசிதமாக வந்திருக்கிறது. உடலில் கொழுப்பும் ரத்த வேகமும் உள்ள சமயங்களில் மனிதனின் மனத்தில் நாத்திகமும், அந்தச் சக்திகள் அகன்றதும் ஆத்திகமும் எழுந்து நிற்பதே இயற்கையாக இருந்திருக்கிறது. கொழுப்பும் ரத்த வேகமும் நிரம்பியவர்களுக்கும் அவர்கள் முயற்சிகள் தோல்வியடையும்போது தெய்வ சிந்தனை உண்டாகிறது. ‘தெய்வம் இருக்கிறது. அதன் சக்தி தான் பிரதான சக்தி’ என்பதை உணருகிறார்கள். இந்த உண்மையை வலியுறுத்தவே ஓர் ஆங்கில ஆசிரியர், ‘மனிதப் பிரயத்தனங்கள் அனைத்தும் தோல்வியடையும்போது தெய்வம் பிறக்கிறது’ என்று சொன்னார். ‘அனாதரவான நிலையில் ஆண்டவன் துணை நிற்கிறான். ஆகவே அனைத்தையும் துறந்து அவனைச் சரணடைந்து விடு’ என்று சனாதன சரணாகதி சாத்திரமும் உபதேசிக்கிறது.

மூங்கில் தட்டியில் கயிறுகளைக் கொண்டு நன்றாகத் தன் உடலைப் பிணைத்துவிட்டு, “சரி, தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்” என்று மரக்கலத் தலைவன் உத்தரவிட்டதும் சரணாகதி சாத்திரத்தின் முழுத் தத்துவக் கடலில் மூழ்கி விட்டான் சோழர் படை உபதலைவன். எத்தனையோ படைகளை நடத்தி, தமிழகத்தில் வெற்றி வாகை சூடிய தனக்கு இத்தகைய கதி ஒரு நாள் வரும் என்று கனவிலும் கருதாத இளஞ்செழியன் எண்ணமெல்லாம் பெரிதும் குழம்பி நின்றதால் அவன் மூச்சுக்கூட விடும் சக்தியை இழந்து அசல் பிணமாகவே மூங்கில் தட்டியில் கிடந்தான். சோழர் படை உபதலைவன் மரணத்தைத் திரணமாக மதிப்பவனென்பதை அவனுடன் பழகிய அனைவரும் உணர்ந்தேயிருந்தார்கள். வீரனாகப் பிறப்பவனின் உயிர் என்றும் நிலையற்றது என்ற சித்தாந்தத்தில் பூரண நம்பிக்கையுள்ள படைத்தலைவன் ஆபத்தை ஒரு பொருட்டாக என்றுமே கருதியதில்லை யென்பதும் உண்மைதான். ‘என்றாவது ஒரு நாள் போரில் மடிவோம். வேல் பாய்ந்து இறக்கலாம். வாளி பாய்ந்து மாயலாம், வாள் பாய்ந்து மரணமடையலாம்’ என்று தீர்மானித்து அதற்கு எப்பொழுதும் இளஞ்செழியன் தயாராயிருந்தானானாலும், தான் உயிருடனிருக்கும் போதே பிணமாக மதிக்கப்பட்டு மூங்கில் தட்டியில் பிணைக்கப்பட்டுக் கடலில் இறக்கப்படுவானென்பதையோ, மேற்குக் கடலின் பெரும் சுறாக்களுக்கு உணவாக வேண்டியிருக்கு மென்பதையோ என்றும் நினைத்திராதவனாகையால் மரக்கலத்தின் தலைவன் தன்னைக் கடலில் எறிந்துவிடும்படி உத்தரவிட்டதும் தெய்வத்தின் மீது உளக் கண்களை ஓட்டினான். ‘எந்தெந்த சமயத்திலே யார் யார் எப்படி எப்படி இறக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே நிர்ணயித்திருக்கும் தெய்வத்தின் பெரும் உயிர்த் திட்டத்தின் எந்தக் கட்டத்தில் நானிருக்கிறேனோ?’ என்று உள்ளே எண்ணமிட்ட இளஞ்செழியனுக்குத் திடீரெனத் தான் காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அடுத்த விநாடி எழுந்த சரேலென்ற பெரும் சத்தமும் உடலைச் சில்லிடச் செய்த கடல் நீரின் ஸ்பரிசமும் யவனர்கள் தனக்கு ஜலசமாதியளித்து விட்டதை வலியுறுத்தியதால் தன் வாழ்வின் இறுதி விநாடி சமீபித்துவிட்டதென்பதை இளஞ்செழியன் உணர்ந்து கொண்டான்.

திடீரென மரக்கலத்தின் பக்கப்பலகையிலிருந்து எறியப்பட்டதால் இடையிலிருந்த காற்றைக் கிழித்துக் கொண்டு சர்ரென்று நீருக்குள் நுழைந்த மூங்கில் தட்டி, மரக்கலத்தின் அடித்தளத்தில் ஒரு முறை மோதி அகன்று எங்கோ பாதாளப் பிரயாணம் செய்வதை உணர்ந்த இளஞ்செழியன் பலமாகப் பிணைக்கப்பட்டிருந்த கயிறுகளிலிருந்து கைகளை விடுவித்துக் கொள்ளக் கைகளை அப்படியும் இப்படியும் முறுக்கிக் கால்களையும் உதைத்து உதறி, சற்று சுவாதீனப் படுத்திக் கொள்ள முயன்றான். கயிறுகளின் கட்டு பலமாக இருந்ததால் கைகளைத் தான் விடுவித்துக் கொள்வதில் பெரும் கஷ்டமிருந்தாலும் ஹிப்பலாஸும் யவன மருத்து வனும் ஒரு பெரும் உதவியைத் தனக்குச் செய்திருப்பதை அறிந்த இளஞ்செழியனின் மனத்தைரியமும் மெள்ள மெள்ளத் திரும்பத் தொடங்கியது. பிணங்களை மூங்கில் தட்டியில் கட்டி எரியும்போது அவை மீண்டும் மேலே வந்து மிதக்காதிருப்பதற்காக, யவனர் மூங்கில் தட்டியுடன் பலமான மரக்கட்டையையும் வைத்துக் கட்டுவது வழக்கமென்பதைக் கேள்விப்பட்டிருந்த இளஞ்செழியன், அத்தகைய ஒரு கட்டையைத் தனது தட்டிக்கு வைத்துக் கட்டவில்லை யாகையால், அது நேராகச் சர்ரென்று கடலின் அடிநோக்கி இறங்காததையும் தான் மூச்சை இழுத்துப் பிடித்தவுடன் கடலுக்குள் ஒரு நிதானத்திலேயே மிதக்கத் தொடங்கி மெள்ள மெள்ளவே கடலடிக்கு இறங்க முற்பட்டதையும் கவனித்ததால் சுறாக்கள் தன்னை அணுகுமுன்பு கைகால்களை எப்படியாவது விடுவித்துக் கொண்டு அவற்றுடன் போரிட்டாவது மடியும் பாக்கியத்தைத் தனக்கு அளிக்கவேண்டுமென்று இறைவனை இறைஞ்சிய வண்ணம் தட்டியுடன் நீருக்குள் சுழன்று சுழன்று வலது கையை முதலில் விடுவித்துக் கொள்ள மன்றாடினான்.
கடலுக்குள் தட்டியுடன் நுழைந்து விட்டவன் சோழர் படை உபதலைவனைத் தவிர வேறு யாராகவேனுமிருந்தால் முதல் இண்டு விநாடிகளிலேயே மூச்சை விட்டு மூதாதை களிடம் உறவாட, கடலைவிட்டு வானை நோக்கி பறந்திருப் பான். பூம்புகாரில் பரதவர்களுடன் சதா பழகி அவர்களிடமே நீந்தவும், நீண்ட நேரம் கடலுக்குள் மூழ்கி மூச்சுப் பந்தம் செய்யவும் பழகியிருந்த இளஞ்செழியனுக்கு அன்று மேற்கு கடலின் அடியில் விளைவிக்க வேண்டியிருந்த உயிர்ப் போர் அதிக பயங்கரமானதாயில்லை. நாழிகைக் கணக்கில் கடலுக்குள் இருக்கவும் பழக்கப்பட்ட இளஞ்செழியன் மூச்சை நன்றாக இழுத்துப் பிடித்து, சடலத்தை மிக லேசாகச் செய்துகொண்டு வலது கையையும் இடது கையையும் மெள்ள மெள்ளச் சுழற்றத் தொடங்கினான். அவன் கைகளை எடுக்க முயன்ற ஒவ்வொரு முறையும், உடலை நெளித்ததாலும், கடலடியில் உள்ள பிரவாகங்கள் வேகமாகப் பல பக்கங்களிலும் மூங்கில் தட்டியை மேலும் கீழும் புரட்டிய தாலும், நீருக்குள் சக்கரமாக சுழன்று கொண்டே கைகளை முறுக்கி முறுக்கி கயிறுகளிலிருந்து இழுக்கவேண்டியதாயிற்று. அந்தப் போராட்டத்தில் அவன் ஈடுபட்டிருக்கையில் எத்தனை ஜீவராசிகள் அவன் உடலைத் தடவி நீந்திச் சென்றன. சின்னஞ்சிறு மீன்கள் சில அவன் உடலை மூடியிருந்த துணிக்குள் நுழைந்து மார்பு கழுத்துப் பிரதேசங்களில் ஊர்ந்தன. உள்புறமாக நீந்தி வந்த பெரும் கடல் சிலந்திகள் சில தங்கள் கால் நரம்புகளால் அவன் காலில் ஊர்ந்து சதைகளைக் கிழித்து விட்டதால் கால் தோல் பல இடங்களில் பிய்ந்து ரத்தம் வரத்தொடங்கியதன்றிக் காயம்பட்ட இடத்தில் கடலின் உப்பு நீர்ப்பட்டதால் பெரும் எரிச்சலும் எடுக்கத் தொடங்கியது. அந்த வேதனையின் காரணமாக முயற்சியை அதிகப்படுத்தத் தொடங்கியதன்றி ஆண்டவனையும் பன்முறை நினைத்த இளஞ்செழியன் மெள்ள மெள்ள கயிறுகளை அசைத்து வலது கையை மீட்டுக் கொண்டான். அப்படி விடுவிக்கப்பட்ட பின்பும் வலது கை சில விநாடிகள் செயலற்றுக் கிடந்ததன் விளைவாக ஏதும் செய்ய முடியாமல் திணறினான் சோழர் படை உபதலைவன்.

பலமாகப் பிணைக்கப்பட்டு ஒரே நிலையிலிருந்ததால் நன்றாக மரத்துப்போன இளஞ்செழியனின் வலது கரம், கடலடியின் நீர்ச் சில்லிப்பில் அதிகமாக மரத்து உணர்ச்சி யிழந்து கிடந்தது. சில விநாடிகள் நரம்புகள் வேலை செய்யாத தால் துவண்டு துணியெனத் தொங்கிய கையில் நரம்பு உணர்வு கொடுக்கத் தொடங்கியதும் கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரம் முட்களை எடுத்துக் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது படைத்தலைவனுக்கு. எந்த விநாடியும் சுறாக்கள் நூற்றுக் கணக்கில் தன்னை நோக்கி விரைந்து வரலாம் என்பதை நினைப்பில் வைத்துக் கொண்டிருந்த படைத் தலைவன், கையை அப்படியும் இப்படியும் நீரில் புரட்டியும் தட்டியும் அடித்தும் முழுச் சுரணையை வரவழைத்துக் கொண்டு ஹிப்பலாஸ் செருகியிருந்த கத்தியையும் மடியிலிருந்து மெள்ள மெள்ள இழுத்துக் கொண்டான். கத்தி கையில் கிடைத்த பின்பும் விடுதலை அத்தனை சுலபமானதாயில்லையாகையால், பெரும் கஷ்டத்துடனேயே தன்னை விடுவித்துக் கொள்ளும் பணியில் இறங்கினான் படைத் தலைவன். மூங்கில் தட்டி கடலடி நீர்ப் பிரவாகத்தில் பல திசைகளில் சுழற்றப்பட்டதாலும் மற்றொரு கையும்காலும் உணர்விழந்து கிடந்ததாலும் நாலாபுறமும் கடல் ஜீவராசிகள் தன்மீது ஊர்ந்தும் நெளிந்தும் முகத்தைத் தடவியும் துன்புறுத்தியதாலும், சற்று சிரமத்துடனேயே தட்டியுடன் சுழன்று மெள்ள மெள்ளக் கயிறுகளை அறுத்துக் கொண்டு முகத்திலிருந்த துணியையும் நீக்கிக் கொண்ட படைத் தலைவன் கடலுக்கடியில் மெள்ளக் கண்களைத் திறந்தான்.

அத்தனை ஆபத்திலும் ரசிகனான படைத்தலைவன் கடலடியில் தெய்வம் சிருஷ்டித்திருந்த பயங்கர அற்புதத்தைக் கண்டு வியக்கவே செய்தான். திறந்த கண்ணில் தெரிந்த தெல்லாம் கும்மிருட்டென்றாலும், அவ்வப்பொழுது நீந்திக் கொண்டு வந்த மீன்களின் கண்களிலிருந்தும் உடலிலிருந்தும் எழுந்த ஒளி, நீருக்கடியில் பெரும் விந்தையைச் சிருஷ்டித்துச் சிருஷ்டித்து மறைந்தது. அந்த ஒளியில் அவ்வப்பொழுது தோன்றிய மகேந்திர ஜாலங்கள் இளஞ்செழியனை எந்த உலகத்துக்கோ கொண்டு சென்றன. ‘அப்பப்பா! எத்தனைவித வண்ண மீன்கள்! என்ன பளபளப்பு! தங்க மீனும் வெள்ளி மீனும் நீல மீனும் ஆஹா! இவையெல்லாம் சதையும் ரத்தமும் நரம்பும் கலந்த சிருஷ்டியா! அல்லது தங்கத்தாலும் வெள்ளியாலும் நீலமணிக் கற்களாலும் செய்யப்பட்டு மனிதனைப் பிரமிக்கச் செய்யவே சிருஷ்டிக்கப்பட்ட இயற்கையின் இந்திர ஜாலங்களா?’ என்றெல்லாம் நினைத்துக் கண்விழித்துப் பிரமித்துப்போன படைத்தலைவன் கடைசியாக மேல் நோக்கிச் செல்லக் கால்களைப் பலமாக நீரில் உதைத்தான். உதைத்ததும் ஒருபடி மேலே சென்ற படைத்தலைவன் அடுத்தபடி செல்ல இயலாமல் திணறினான். காலில் நங்கூரம் பிணைக்கப்பட்டது போன்ற உணர்ச்சியால் திரும்பி, தலையை வளைத்து அடியில் நோக்கிய படைத்தலைவன் ஏதோ ஒரு பெரிய உருவம் தன் காலைக் கவ்வி நிறுத்தியிருப்பதை உணர்ந்தான்.

கண் மூளையின் பலகணி. எந்த இருட்டிலும் பழகிய சில விநாடிகளில் பார்வை பெறக்கூடிய சக்தி வாய்ந்தது. ஆகவே பல விநாடிகள் கடலடியில் பழக்கப்பட்டுவிட்டதால் அந்த நிலவரமும் நன்றாகத் தெரிந்தது படைத்தலைவனுக்கு. காலைக் கவ்வியிருந்தது சுறாவல்ல. எத்தனையோ சுறாக் களைப் பூம்புகார்க் கடலில் பரதவர் துணைக் கொண்டு பிடித்திருக்கும் படைத்தலைவனுக்குத் தன் காலைப் பிடித்து நிறுத்தியது சுறாவல்ல என்பதை ஊகிக்க அதிக நேரம் ஆகவில்லை. சுறாவாயிருந்தால் பற்களைக் கொண்டு கவ்வி யிருக்கும். அத்தனை நேரம் காலின் எலும்புகளைக் கரகரவென்று கடித்து நொறுக்கி முழங்காலுக்கு மேல் போஜனமும் செய்திருக்கும். காலைக் கவ்வி நின்றதன் வாய் மிக மிருதுவாயிருக்கிறது. ஏதோ பஞ்சினால் செய்த பெரும் தலையணைகள் இரண்டைக் காலில் வைத்து இறுகக் கட்டியிருப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டதால், மெள்ள குனிந்து காலுக்கடியில் இருந்த உருவத்தைத் தடவிப் பார்த்த படைத்தலைவன் கைப்பட்ட இடமெல்லாம் பெரும் ஓடுகள் தட்டுப்பட்டதைக் கவனித்து ‘சரி சரி, பெரும் கடல் ஆமையின் வாயில் அகப்பட்டு விட்டோம்’ என்பதைத் தீர்மானித்துக் கொண்டான். பூம்புகார்க் கடலிலிருந்து குழந்தைகளை விழுங்கவல்ல பெரிய ஆமைகளைப் பரதவர் கொண்டு வந்திருப்பதைப் பார்த்திருக்கும் படைத்தலைவன், ஆமைப் பிடி குரங்குப் பிடியைவிடப் பலமென்பதை அறிந்திருந்தது மட்டுமன்றி அதனிடமிருந்து தப்பும் முறையையும் அறிந்திருந் தான். பூம்புகாரின் பரதவர் ஆமை வாயை மூட அதற்கு இன்பமான பெரு மீன்களை நீட்டுவது பழக்கமென்பதை அறிந்திருந்த படைத் தலைவனும் தன்னைச் சுற்றி ஓடிய பெரு மீன்களில் ஒன்றைப் பிடித்துத் தன் காலுக்குப் பக்கத்தில் அதை மெள்ள மெள்ள வெளியே இழுத்தான். ‘இனிப் பயமில்லை. நீந்தி வெளியே செல்லலாம்’ என்ற முடிவுக்கு வந்தான். அப்பொழுது வேறொரு யோசனையும் படைத் தலைவன் புத்தியில் எழுந்தது.

எந்த நிமிடமும் தான் சுறாக்களிடம் சிக்கிக் கொள்ளக் கூடும் என்பதை உணர்ந்திருந்த இளஞ்செழியன் ஆமையின் ஓடு மிகவும் பலமுள்ளதென்பதையும் அதை உடைப்பது அத்தனை சுலபமல்லவென்பதையும் அறிந்திருந்தானாகையால் அந்த ஆமையைக் கொன்று ஓட்டை எடுக்க முயன்று மீண்டும் அதை நோக்கி வளைந்து ஆமையின் இதயத்தே தன் கையிலிருந்த கத்தியைப் பல முறை பாய்ச்சிவிட்டு, மேலோட்டை மிகவும் சிரமத்துடன் சதையிலிருந்து கத்தியால் வெட்டியெடுத்துக் கையில் அதைப் பிடித்துக்கொண்டு மேற்புறம் நீந்திச் சென்று ஜலமட்டத்தை அடைந்தான்.

ஜல மட்டத்தை அடைந்ததும் ஒரு முறை தலையை உலுக்கி நல்ல காற்றைச் சுவாசித்ததும் சற்று வலுப்பெற்று ஒரு கையில் கத்தியும் இன்னொரு கையில் ஆமையின் பெரும் முதுகு ஓடும் இருந்ததால், காலால் நீரை உதைத்தே நீந்திக் கரையை நோக்கிச் சென்றான். அத்தனை அந்தகாரத்திலும் கரை தூரத்தே இருந்ததை அறிந்த இளஞ்செழியன், ‘எத்தனை தூரமிருந்தாலும் நீந்திவிடலாம். ஆனால் சுறாக்களிடமிருந்து தப்ப வேண்டும். தவிர, நீலகண்ட நகரத் துறைமுகத்தில் சுழல்கள் பல உண்டு என்று கேள்வி. நமக்குப் பழக்கமில்லாத இடமாகையால் சுழல்கள் எங்கிருக்கின்றன என்பது தெரியாது. எதற்கும் நீலேசுவரன் விட்ட வழி’ என்று நீலகண்ட நகரத்தில் கோயில் கொண்டிருந்த நீலேசுவரனைப் பிரார்த்தித்துக் கொண்டே கரையை நோக்கி நீந்தினான்.

‘மனித வாழ்வில் எதிர்பார்ப்பதைப் போல் கெட்டது நடக்கலாம். நல்லது நடக்காது’ என்று பிரும்மானந்தர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது எத்தனை சரியென்பதை அந்த இரவில் படைத்தலைவன் சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்து கொண்டான். அவன் நினைத்தபடி சுறாக்கள் அவனை நோக்கி வந்தன. அத்தனை இருட்டிலும் தன்னிடமிருந்து சுமார் நூறு அடிகள் தள்ளி ஜலமட்டத்திற்கு வெளியே இருமுறை பெரும் படகுகளைப் போல் எழுந்து உள்ளே அழுந்தியவை சுறாக்களென்பதைத் திட்டமாகப் புரிந்து கொண்ட படைத்தலைவன் சட்டென்று ஜலத்துக்குள் தானும் அமிழ்ந்தான். சுறாக்களிடம் காலையோ தலையையோ கொடுத்து விட்டால் உயிருடன் மீள முடியாதென்பதையும் நீருக்குள் மூழ்கி அவற்றின் மூக்குக்கு எதிரே சென்று கண்களைக் கத்தியினால் குத்தி அவித்தால்தான் அவற்றைக் கொல்ல முடியும் என்பதையும் பரதவர் சொல்லிக் கேட்டிருந்த படைத்தலைவன், நீருக்குள் மூழ்கி மற்றப் பெரும் மீன்களோடும் தானும் ஒரு மீனாக நீந்திச் சென்றான். இரு சுறாக்களையும் ஏக காலத்தில் சமாளிக்க முடியாதாகையால் ஒன்றை மட்டும் எதிர்க்கச் சித்தமான படைத்தலைவன் நீருக்குள் நீந்திய வண்ணம், ஆமை ஓட்டைக் கையில் கேடயமாகப் பிடித்துக் கொண்டு வாளையும் நேராகச் சுறாவை நோக்கி நீட்டினான். முதல் சுறா அவனுக்கு முகத்தைக் கொடுக்காமல் பின்புறமாக வளைந்து வாலால் அவனை ஒருமுறை சுழற்றி அடிக்கவே கப்பலிலிருந்து தள்ளப்பட்டதை விட வெகு வேகமாகச் சமுத்திர அடிக்குச் செல்லத் தொடங்கிய படைத்தலைவன், அந்த அடியினால் ஒருமுறை நிலை குலைந்தாலும் சுயநிலையை ஒரே வினாடியில் வரவழைத்துக் கொண்டு சுறாவின் தலைப்பகுதியை நோக்கிச் சென்று ஒரு கண்ணில் கத்தியைப் பாய்ச்சினான். அதனால் வெகுண்ட சுறா பயங்கரமாகத் தண்ணீரில் சுழன்று படைத்தலைவன் மீது தன் உடலைப் புரட்டியது. சேரநாட்டு யானைகளால் இழுக்கப்படும் பெரும் மரமொன்றை மேலே சாய்த்தால் என்ன உணர்ச்சி ஏற்படுமோ அந்த உணர்ச்சியைச் சுறாவின் உடல் மேலே அழுந்தியதால் அடைந்த படைத்தலைவன் பெரிதும் திணறி அதனிடமிருந்து விலகி அப்புறம் நீந்திச் சென்றான். ஆனால் கண்களில் ஒன்றை இழந்த சுறா பெரும் சினத்துடன் அவனை விடாமல் துரத்திச் சென்றது. அதனிடமிருந்து தப்ப முயன்ற படைத்தலைவன், மீண்டும் இருமுறை அதன் உடலில் கத்தியைப் பாய்ச்சி இழுத்தானானாலும் அதற்கெல்லாம் அது மசியாமற் போகவே அதனிடமிருந்து தப்ப வெகு வேகமாக மற்றொரு திசையில் நீந்திச் சென்றான். கத்திக் காயம்பட்டு அவனைத் துரத்திய சுறா, அவனுக்குப் பின்புறம் வாயை ‘ஆ’வென்று பயங்கரமாகத் திறந்து கொண்டு வந்து கொண்டிருந்தது. எதிர்ப் புறத்தை நோக்கினான். அங்கு மற்றொரு சுறா வாயைப் பிளந்து தன் கோரப் பற்களைக் காட்டி நகைத்தது.

அபாயம் மீளவும் அவனை எதிர் நோக்கினாலும், அதுவே இளஞ்செழியன் உணர்ச்சிகளுக்கு உறுதியை அளித்தது. கடலடிப் பிராணிகளின் பயங்கர எதிர்ப்பு, இயற்கையாகவுள்ள அவன் துணிவுக்கு ஊக்கத்தை அளிக்கவே, ஓரளவு உற்சாகத்துடனேயே சில சமயம் கடலுக்கு அடியிலும் சில சமயம் ஜலமட்டத்திலும் உயிருக்குப் போராடிய இளஞ்செழியன், பலமுறை சுறாக்களின் பற்களால் தீண்டப்பட்டு உடலின் பல பகுதிகளில் காயமடைந்தாலும் மெள்ள மெள்ள முதல் சுறாவின் மற்றொரு கண்ணையும் அவித்து அதன் பெரு உடலிலும் கத்தியைப் பாய்ச்சவே, அது இறந்து அடியை நோக்கி அமிழ்ந்தது. இரண்டாவது சுறா மட்டும் அவனுடன் விடாமல் போரிட்டது. பலமுறை அவன் மீது பாய்ந்து வாலால் அடித்தது. அவனைப் பலமுறை உடலால் அழுத்தி அடியில் தள்ளியது. பலமுறை இளஞ் செழியனும் அதன் உடலைப் பற்றிச் சுழன்று சுழன்று அதன்மீது பல இடங்களில் கத்தியைப் பாய்ச்சி இழுத்தான். அத்தனைக்கும் அசையாத அந்தப் பெரும் சுறா அவனை மீண்டும் மீண்டும் நெருங்கி வந்தது.

மெள்ள மெள்ள தன் கை சளைப்பதை உணர்ந்தான் இளஞ்செழியன். சுறாவின் சிறு கண்கள் அவனை நோக்கிக் கடல் நீருக்குள்ளே பயங்கரமாகப் பச்சை விழி விழித்தன. இரண்டு சுறாக்களுடன் நீண்ட நேரம் போராடியதாலும் அடிக்கடி நீருக்குள் நீண்ட நேரம் இருக்க அவசியமேற் பட்டதாலும் மூச்சும் திணற ஆரம்பித்ததால் இளஞ்செழியன் இரண்டு வாய் நீரையும் குடித்தான். களைத்த அந்த நிலையில் இரண்டாவது சுறா மிகப் பயங்கரமாக அவனைப் புரட்டிப் புரட்டி நீருக்குள் அடித்தது. இளஞ்செழியன் கையிலிருந்த கத்தியும் நழுவத் தொடங்கவே கடைசியாகக் கை பலம் முழுவதையும் திரட்டி இருமுறை கத்தியைச் சுறாமீது பாய்ச்சினான். எங்கு பாய்ச்சினான், எப்படிப் பாய்ச்சினான் என்பதை அறியும் திராணியையும் இழந்தான் இளஞ்செழியன். அவன் கை மட்டுமன்றி உடலும் களைத்துக் கிடந்தது. வலக்கையிலிருந்த கத்தியும் இடக்கையில் கேடயம் போலிருந்த ஆமையோடும் நழுவி நீருக்குள் எங்கோ சென்றன. பெரும் பலவீனம் படைத்தலைவனை ஆட்கொண்டது. நீருக்குள் தான் மெள்ள மெள்ள அமிழ்வதை உணர்ந்தான். ஏதோ நீளமான பெரும் சதை தன்னைச் சுற்றி வருவது போல் தெரிந்தது. ‘ஒருவேளை கடற்பாம்போ! ஆம். அப்படித் தானிருக்க வேண்டும். இத்தனை வழவழப்பாக, வேறு எது இருக்கும்?’ என்று நினைத்த படைத்தலைவன் தெய்வத்தைப் பல முறை நினைத்தான். வாள் பலமும், கை பலமும், ஏன் மனிதன் நம்பும் சகல பலத்தையும் இழந்த படைத்தலைவனுக்கு அந்தச் சமயத்தில் தெய்வ பலத்தின் மகிமை நன்றாகப் புரிந்தது. புரிந்ததை ஜீரணிக்கக்கூடிய நிலையில் புத்தியில்லை. புத்தி எங்கோ பறந்தது. கடலின் அடியை நோக்கி அமிழ்ந்து கொண்டிருந்தான் படைத்தலைவன்.

நீண்ட நேரம் கழித்துச் சுரணை அடைந்த படைத் தலைவன் அக்கம்பக்கத்தில் கத்தியைத் தேடினான். அகப்பட வில்லை. ஆனால் சுறாவின் பெருந் தேகம் மட்டும் கைக்கு அகப்பட்டதாக தோன்றவே அதைப் பலமாகப் பற்றினான். “என்னடா! பெரிய தொந்தரவாயிருக்கிறது! இவனைப் பிரித்துப் போடு” என்று யாரோ கூறும் சத்தம் காதில் விழுந்தது. துழாவிய கைகளில் தண்ணீரையும் காணோம். ஒரு வேளை விண்ணுலகுக்கு வந்து விட்டோமோ என்று நினைத்த படைத்தலைவனுக்கு அதுவும் இல்லையென்பது மறுவிநாடி புரிந்தது. “இவனைப் பிரித்துப் போடு” என்று சொல்லியவனை வேறொருவன் கேட்டான், “சரி சரி! இவன் விலை என்ன சொல்” என்று.

“நூறு பொற்காசுகள்” என்றான் முதலில் பேசியவன்,

“இவனுக்கா நூறு பொற்காசு! அத்தனை பெற மாட்டான்! பத்துப் பொற்காசுகள் கொடுக்கிறேன்” என்றான் இரண்டாமவன்.

இந்த உரையாடலிலிருந்து தனது அபாய நிலையைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் மிதமிஞ்சிய கிலிக்கு உள்ளாகியதன்றி, ‘அட கடவுளே! இதற்குப் பதில் அந்தச் சுறாவுக்கு நீ என்னைப் பலியாக்கியிருக்கலாமே!’ என்று கடவுளை நிந்திக்கவும் தொடங்கினான்.

Previous articleYavana Rani Part 1 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here