Home Sandilyan Yavana Rani Part 1 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

96
0
Yavana Rani Part 1 Ch43 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch43 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 43 தொடுவானம்! புகை மண்டலம் !

Yavana Rani Part 1 Ch43 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

யாரோ இருவர் தன்னை விலை பேசியதைக் கேட்ட வுடனேயே தன்னுடைய உண்மை நிலையை ஊகித்துக் கொண்ட படைத்தலைவனின் மனம் பின்னோக்கிச் சில வினாடிகள் ஓடவே, அவன் பழைய வாழ்க்கையை எண்ணினான். புகாரை எண்ணினான், பூவழகியை எண்ணினான். தன் கண் அசைந்த திக்குகளிளெல்லாம் படைப்பிரிவுகள் அசைந்ததையும் எண்ணினான். அந்த எண்ணங்களுடன் அப்பொழுதிருந்த அனாதரவான, பயங்கரமான, பரிதாபத்துக்குரிய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்த படைத்தலைவன், ‘வாழ்க்கையின் மாறுதல்கள் எத்தனை சீக்கிரமாகவும் எத்தனை விசித்திரமாகவும் ஏற்படுகின்றன! விதிதான் வலிது என்று ராணி சொன்னாளே, அது உண்மைதான். சந்தேகமேயில்லை. அதற்கு உதாரணமாகத் தான் நானிருக்கிறேனே’ என்று தனக்குள்ளே ஏங்கவும் செய் தான். அந்த ஏக்கத்தின் விளைவாகச் சற்று அசைந்த அவன் உடலில் முதுகுப்பகுதியில் பாறையொன்று குத்தியதால், தான் ஏதோ மலைச்சரிவில் கிடத்தப்பட்டிருப்பதை அறிந்து கொண்ட படைத்தலைவன், ‘இது எந்த மலைச்சரிவாயிருக்கும்? நீலகண்ட நகரத் துறைமுகத்துக்கும் ஸஹ்யாத்திரி மலைத் தொடருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கடக்கப் பன்னிரண்டு நாழிகைகளாவது ஆகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே. அப்படியானால் அரை நாள் மூர்ச்சையாக இருந்திருக்கிறேனா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு வலது கையை மெள்ளப் புரட்டினான். இளஞ்செழியனை விலை பேசிய இருவரில் ஒருவன் இதைக் கண்டுவிட்டதால் சினம் தலைக்கேறக் கூறினான், “இவனை அவனிடமிருந்து பிரித்துப் போடு. இவன் பிடி சுத்தக் குரங்கு பிடியாயிருக்கிறது” என்று.

கண்கள் அப்பொழுதும் தீப்பற்றியது போல் எரிந்து கொண்டிருந்ததால் விழிக்க முடியாமல் தத்தளித்ததாலும் உடலுக்கு முழுச் சுரணை வராததால் எழுந்து உட்காரச் சக்தி யில்லாததாலும், ‘யாரை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன்? யாரிடமிருந்து என்னைப் பிரிக்கச் சொல்கிறான்?’ என்று கருத்திலே கேள்விகளை எழுப்பிக் கொண்ட படைத்தலைவன், கேள்விகளுக்கு விடையேதும் காணாவிட்டாலும் தான் அடிமை வியாபாரிகளிடம் சிக்கிக்கொண்டு விட்டதையும் தன்னைக் காப்பாற்ற முயன்ற யாரையோ தன் கரங்கள் இழுத்துப் பிணைத்துப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதையும் மட்டும் ஊகித்துக் கொண்டதன் விளைவாக தன் பிடிப்பை விட்டுவிடச் சற்று நகர்ந்தான். ஆனால் அவன் நகர்ந்து விலகுவதற்கு முன்பாகவே அவன் கைகளை யாரிடமிருந்தோ விலக்கி அவனைச் சரசரவென்று பாறாங்கற்களில் இழுத்து ஒரு புறமாகத் தள்ளிய இரு முரடர்களை நோக்கி, “சரி சரி, போதும்” என்று உத்தரவிட்டு நிறுத்திய அடிமை வர்த்தகன் தொடர்ந்து இளஞ்செழியனை விலை பேச முற்பட்டவனைப் பார்த்து, “இவனைப் பாருங்கள். என்ன வாளிப்பான உடல்! இவனுக்கு நூறு பொற்காசுகள் கொடுப்பது வீணாகாது. என்னை நம்புங்கள்” என்றான்.

“இவன் உடலில் சதைப்பிடிப்பே இல்லையே. அதற்கு அந்தப் பக்கத்திலிருப்பவன் பாதகமில்லை. நல்ல கட்டான உடல். சவுக்கடி கொடுத்தாலும் தாங்குவான்” என இளஞ்செழியனின் பக்கத்திலிருந்த ஓர் உருவத்தைச் சுட்டிக் காட்டினான் படைத்தலைவனை வாங்க வந்தவன்.
ஆனால் அடிமை வர்த்தகன் விடுவதாயில்லை. “பிரபு! அராபிலும் எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் எத்தனையோ அடிமைகளை விற்றிருக்கும் உங்களுக்கு நான் ஆள் தராதரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இரண்டு பேரும் இரண்டு விதம். அவன் உடல் பெரிது. வாளிப்பு இல்லை. கிரேக்க அராபிய கட்டட வேலைகளுக்கு மரம் தூக்கவும், மரக்கலங்களில் துடுப்புத் தள்ளவும் உதவுவான். இவன் சக்தி வேறு விதமானது. இந்த வாளிப்பான கைகள் வாள் சுழற்ற வல்லவை. அதோ பாருங்கள். உடலில் எத்தனைக் கத்தித் தழும்புகள், வேல் காயங்களும் இருக்கின்றன. யவன நாட்டில் இத்தகைய புருஷனை யாரும் வாங்குவார்கள். தவிர, அதோ அந்த முகத்தைக் கவனியுங்கள். நல்ல அழகு, நல்ல கம்பீரம், ரோமாபுரிப் பெண்கள் பார்த்தால் என்ன விலை யானாலும் இவனைத் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள்” என்று மிகச் சாதுரியமாக இளஞ்செழியனை விலை கூறினான் அடிமை வர்த்தகன்.

வர்த்தகனின் சொற்களைக் கேட்ட இளஞ்செழியன் இதயத்திலே விவரிக்க இயலாத உணர்ச்சிகள் பெரும் அலைகளாக எழுந்து மோதியதல்லாமல், தன் அழகையும் குணத்தையும் அத்தனை திறமையாக வர்ணிக்கத் தமிழ்நாட்டுக் கவிகளாலும் இயலாது என்பதை எண்ணிப் பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டான். அடிமை வியாபாரி தன்னைப் போட்ட எடையையும் மதிப்பையும், வாங்க வந்தவன் ஒப்புக் கொள்கிறானா என்று காத்திருந்த இளஞ்செழியனின் நகைச்சுவையை உச்சிக்குக் கொண்டு போகும் முறையில் மற்றவன் பேசினான்.

“நீ சொல்வதெல்லாம் உண்மையாயிருக்கலாம். ஆனால் இவனை யவனநாடு கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு எத்தனை நாள் பிடிக்கும், என்ன செலவாகும், யோசித்துப் பார். உனக்கும் நூறு பொற்காசுகள் கொடுத்து, இன்னும் நூறு பொற்காசுகள் செலவழித்து இவனை யவன நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். அப்படிச் சேர்த்தாலும் இவனை யவன அழகிகள் விரும்புவார்கள் என்பது நிச்சய மில்லை. இவன் உடலில் எத்தனைக் காயங்கள் பார். முக்கால் வாசி கடல் ஜந்துக்கள் கடித்தும் கீறியும் ஏற்பட்டவை. இவை ஆறினாலும் தழும்புகள் இருக்கும். உடல் பூராவும் தழும்புகள் நிறைந்தவனை யார் வாங்குவார்கள்? எந்த அழகி விரும்புவாள்?” என்று கேட்டான் வாங்க வந்தவன்.

“உடலுக்கு ஆடை அணிந்து விற்றுவிட முடியாதா?” வர்த்தகன் வினவினான்.

“முடியாது. அரபு நாட்டிலும், ரோமாபுரியிலும், ஏன் எகிப்திலும்கூட, உடை அதிகமின்றி உரித்து நிறுத்தி உடலைக் காட்டித்தான் விற்க முடியும். இவன் உடலைப் பார்த்தால் ரோமாபுரி அழகிகள் காறி உமிழ்வார்கள்: எகிப்திய வர்த்தகர்கள் என்னைச் சாட்டையாலடித்துத் தோலை உரித்துவிடுவார்கள். அராபியப் பிரபுக்கள் அப்புறம் என்னை உயிருடன் வைக்கமாட்டார்கள்” என்று பதில் கூறினான் வாங்க வந்தவன்.

“அப்படியானால்….”

“இதோ பார், கடைசி விலை இவனுக்கு இருபது பொற்காசுகள் தருகிறேன். அதோ அந்தத் தடியனுக்கு ஐம்பது பொற்காசுகள். ஆக, எழுபதுதான் கொடுப்பேன்.”
“கொஞ்சம் உயர்த்துங்கள் பிரபு!”

“எதற்காக உயர்த்தவேண்டும்? கடலோரத்தில் ஒதுங்கிக் கிடந்தவர்களை எடுத்து வந்து கிடத்தினாய். அவ்வளவு தானே? பதுங்கியிருந்து வழிப் பிரயாணிகளைத் தூக்கி வந்தாயா? அல்லது போரிட்டதில் உன் ஆட்களுக்கு ஏதாவது சேதமா? தரையில் தூக்கி வந்த கஷ்டம்தானே?”

“பிரபு! என்ன அத்தனை அற்பமாகச் சொல்லிவிட்டீர்கள்? நெல்ஸிந்தாவிலிருந்து இந்த மலைச்சரிவுக்கு இவர்களைக் கொண்டு வருவது எத்தனை ஆபத்து, தெரியாதா உங்களுக்கு? நெல்ஸிந்தா துறைமுகம் சேர நாட்டுக்குச் சொந்தம். அடிமை வர்த்தகம் தமிழ் நாட்டில் எங்குமே அனுமதிக்கப் படுவதில்லை. இவர்களை நான் விற்பனை செய்யத் தூக்கி வந்ததைச் சேர வீரர்கள் பார்த்திருந்தால் என் தலை மட்டுமென்ன, என் ஆட்கள் தலைகளும் இத்தனை நேரம் வெட்டுப்பாறையில் துண்டிக்கப்பட்டிருக்கும்.”

“இதோ பார், எனக்கு அதிகம் பேச அவகாசமில்லை. ஒரே விலை, இருவருக்குமாக என்ன சொல்கிறாய்?” என்று அதட்டிக் கேட்டான் வாங்க வந்தவன்.

“நூற்று இருபது என்று-” இழுத்தான் விற்க முயன்றவன்.

“முடியாது”

“எவ்வளவுதான் கொடுப்பீர்கள்?”

“எழுபத்து ஐந்து.”
“மிகவும் குறைவு.”

“ஆனால் சரி” என்று கூறிவிட்டு வாங்க வந்தவன் தன் ஆட்களை நோக்கி, “சரி, வண்டிகளைப் பூட்டுங்கள். புறப்படுவோம்” என்றான்.

“வேண்டாம் பிரபு! கோபம் வேண்டாம். எழுபத்து ஐந்துக்கே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சினான் வர்த்த கன்.

இத்தனையையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்த இளஞ்செழியன் மனத்தில் தன் வாழ்க்கையைப் பற்றி வெறுப்பே ஓங்கி நின்றதால் அவன் மௌனமாகவே படுத்துக் கிடந்தான். தமிழகத்தின் மேலைக் கடற்கரையோரத்திலும் “ஏகிடித் தீவிலும், பாலேபட்மேயிலும் ஆட்களைப் பிடித்துக் கொண்டு மேலை நாட்டு அடிமைச் சந்தைகளில் விற்கும் கூட்டங்கள் இருந்ததைப் பற்றிப் படைத்தலைவன் கேட்டிருந்தானானாலும் அந்த வர்த்தகப் பொருளாக, தானே ஒரு நாள் அகப்பட்டுக்கொள்ள நேரிடும் என்பதை அவன் கனவிலும் கருதவில்லையாகையால், அவன் உணர்ச்சிகள் அந்தச் சந்தர்ப்பத்தில் மரத்தே கிடந்தன. பாரதத்தின் மேற்குக் கரையெங்கும் உலாவிய அபிஸீனியக் கொள்ளைக்காரர்கள் பாரத நாட்டு மக்களில் அகப்பட்டவர்களைப் பிடித்துக் கொண்டு போய் அராபியாவிலும், எகிப்திலும், ரோம் நாட்டிலும் விற்கிறார்களென்பதையும், அவர்களுக்கு உதவியாக உள்நாட்டுக் கொள்ளைக்கார வர்த்தகர்களும் பலர் இருக்கிறார்களென்பதையும் கேள்விப்பட்டிருந்த இளஞ் செழியன், ‘இத்தகைய கொடியவர்களை ஒழிக்க முடியாத சமுதாயம் ஒரு சமுதாயமா?” என்று பாரத சமுதாயத்தையே வெறுத்தான். ‘இத்தகைய வெறுப்பிலும் தன்னுடன் விலை பேசப் பட்டவன் யார்’ என்பதை அறிய ஆசையாயிருந்தது படைத் தலைவனுக்கு. ‘யார் பிணைப்பில் நான் கிடந்தேன்? யாரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தேன்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட படைத்தலைவன், ‘கடலில் அமிழ்ந்தேன். அடி நோக்கியும் சென்று விட்டேன். அப்பொழுது யாராவது காப்பாற்றினார்களா? அப்படித் தானிருக்க வேண்டும். நீளமான சதையொன்று என் உடலைச் சுற்றி வந்ததே அதைச் சுறாவென்று நினைத்தேன். தவறு தவறு, யாருடைய கையோ என் உடலைச் சுற்றியிருக்கிறது. அது யாருடைய கையாயிருக்கும்….? யார் அந்த நேரத்தில் சுறாக்கள் மிகுந்த கடலில் நீந்துவார்கள்? ஒருவேளை…?’ என்று பதில் சொல்லிக் கொண்டே போய் உண்மை உதயமாகவே சட்டென்று நினைப்புக்களை அறுத்துக் கொண்டு வியப்பில் மூழ்கினான்.

உள்ளத்தே துளிர்விட்ட வியப்பினால் அவன் முகம் மலர்ந்தது. ‘சே! என்ன முட்டாள்தனம்! என் பிணைப்பி லிருந்தவனைத் தடியன் என்று வர்த்தகன் குறிப்பிட்ட போதே அது ஹிப்பலாஸாகத்தானிருக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டாமா? ஆம் ஆம், இப்பொழுது புரிகிறது. ஹிப்பலாஸின் பெரும் கரம்தான் என் உடலைக் கடலடியில் சுற்றி வந்திருக்கிறது. சந்தேகமில்லை . என்னைக் காப்பாற்றித் தூக்கி நீந்திய ஹிப்பலாஸ், கரைக்கருகே களைத்து என்னையும் போட்டுக்கொண்டு விழுந்திருக்கிறான். அடிமை வர்த்தகன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறான் எங்களை’ என்று தான் தப்பிய விவரங்களை அலசிப் பார்த்து, ‘பாரதமக்களை அடிமை கொள்ள முயலும் யவனநாட்டிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லதும் பொல்லாததும் கலந்ததே சமுதாயம்’ என்று வேதாந்தத்திலும் இறங்கிய படைத்தலைவன் ஓரளவு மனச் சாந்தியையும் அடைந்தான்.
எழுபத்து ஐந்து பொற்காசுகள் கொடுத்து இளஞ் செழியனையும் ஹிப்பலாஸையும் வாங்கியவன், அவர்களிரு வரையும் ஆட்களைக் கொண்டு எடுத்து மூடு வண்டியில் போட்டபோதும் மனச்சாந்தி தொடர்ந்தே நிலவியது படைத்தலைவனுக்கு. அந்த மூடுவண்டி நகர ஆரம்பித்ததும் மற்றும் பல மூடுவண்டிகளும் அதைத் தொடருவதைச் சக்கரங்கள் உருளும் சப்தத்தாலேயே அறிந்த படைத் தலைவன், தங்களைப் போலவே இன்னும் பலர் அபகரிக்கப் பட்டிருக்கிறார்களென்பதை உணர்ந்து கொண்டான். தவிர வண்டிகள் வடநாட்டுப் பெரும் காளைகளால் இழுக்கப் படுவதையும், மலைகளின் சரிவுப்பாதையில் பயணம் செய்வதையும் ஊகித்துக் கொண்ட படைத்தலைவன், கற்கள் அடிக்கடி தானிருந்த சக்கரங்களைத் தூக்கிப்போட்டதன்றி, வண்டியும் ஒருபுறமாகச் சாய்ந்து சென்றதால் மிக அபாயமான பாதையில் பிரயாணம் நடக்கிறது என்பதை அறிந்ததல்லாமல், தனக்கும் ஹிப்பலாஸுக்கும் தங்களுடன் பிடிபட்டிருக்கும் மற்றவர்களுக்கும் பிரயாண முடிவில் ஏற்படவிருக்கும் கதியைப்பற்றியும் சந்தேகமின்றிப் புரிந்து கொண்டான். இறுதிக்கதி அடிமை வாழ்வு என்றாலும் அதற்கும் தனக்கும் இடையே குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேல் இருக்கிறதென்ற காரணத்தால் மனச் சாந்தியில் தைரியமும் கலந்து உறவாட, விழித்துக்கொண்டே பயணம் செய்தான். அந்தச் சாந்தியாலும் தைரியத்தாலும் பக்கத்தில் கிடந்த ஹிப்பலாஸின் உடலை ஒரு முறை தடவிக் கொடுத்தான். மூக்கிலும் விரலை வைத்துப் பார்த்தான்.

ஹிப்பலாஸின் மூச்சு ஒரே சீராக வந்து கொண் டிருந்தாலும் அவன் அப்பொழுது மயக்கத்திலிருப்பதை உணர்ந்து கொண்ட படைத்தலைவன், தன் ஈர உடையின் ஒரு பகுதியைக் கிழித்து அவன் கண்களில் ஜலத்தைப் பிழிந்த தன்றிக் கண்களைத் துணியால் துடைக்கவும் செய்தான்.

இந்த உபசரணைகளின் காரணமாகச் சற்று சுரணை வரப்பெற்ற ஹிப்பலாஸ், இருமுறை முனகினான், சற்று அசைந்தான். பிறகு மெள்ள மெள்ளக் கண்களை விழித்துத் திரும்பினான். அதற்குள் படைத் தலைவனின் கண்ணெரிச் சலும் சற்றுக் குறையவே அவனும் கண்களைத் திறக்க, இருவர் கண்களும் பேராவலுடன் சந்தித்தன. அவர்கள் கண் விழித்து ஒருவரையொருவர் நோக்கியபோது பொழுது புலர்ந்து வெயிலும் நன்றாக ஏறியிருந்தது. நேரத்தைக் கவனித்த படைத்தலைவன், தானும் ஹிப்பலாஸும் நள்ளிரவு தாண்டிச் சிறிது நேரத்திற்கெல்லாம் நெல்ஸிந்தாவின் கரையில் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், இருளில் ஆள் பிடிக்க உலாவும் அடிமை வர்த்தகன் தங்களை இரவோடு இரவாக மலைக்காட்டுக்குள் கொண்டு சென்றிருக்க வேண்டுமென்றும் ஊகித்துக் கொண்டான். தவிர, அடிமையாக மனிதர்களைத் தமிழகத்தில் விற்பது அபாயமாகையால் தன்னை வாங்கிய வர்த்தகன் விற்ற வர்த்தகனை அனுப்பிவிட்டு வெகு வேகமாக வடக்கு நோக்கிச் செல்கிறானென்பதையும் புரிந்து கொண்டான்.

படைத் தலைவனுக்குத் தெளிவான விஷயங்கள் ஹிப்பலாஸுக்கும் தெளிவாகியிருக்க வேண்டும். விழித்த அவன் கண்களில் அந்தத் தெளிவைக் கண்டான் படைத் தலைவன். ஹிப்பலாஸ் தன் பெரும் கண்களால் பக்கத்தி லிருந்த படைத் தலைவனை ஒருமுறை பார்த்துவிட்டு வருத்தம் கலந்த புன்முறுவலொன்றைத் தன் இதழ்களில் தவழ விட்டான். அந்தப் புன்முறுவலைக் கவனித்த படைத் தலைவன் கேட்டான்: “வருத்தம் எதற்கு ஹிப்பலாஸ்?” என்று.
“நமக்கு நேர்ந்த கதிக்கு” என்று ஹிப்பலாஸ் பதில் சொன்னான்.

“விதி விதித்த வழி ஹிப்பலாஸ். அதற்கு வருந்து வானேன்?” என்று கேட்டான் படைத்தலைவன் மீண்டும்.

“உங்களுக்கும் விதியில் நம்பிக்கை வந்துவிட்டதா?” ஆச்சரியத்துடன் ஒலித்தது ஹிப்பலாஸின் கேள்வி.

“அனுபவம் அந்த நம்பிக்கையைத்தான் வலியுறுத்து கிறது” என்றான் படைத்தலைவன்.

படைத்தலைவன் பதிலைக் கேட்ட ஹிப்பலாஸ் மெள்ள வருத்தத்துடன் நகைத்தான். “பிரபு! எனக்கு விதியில் நம்பிக்கை போய்விட்டது?” என்று கூறினான்.

“ஏன் ஹிப்பலாஸ்?” படைத்தலைவன் கேள்வி, வியப்பு நிரம்பிய குரலில் வெளிவந்தது.

“கடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பாருங்கள் படைத் தலைவரே! தங்கள் உதவியால் தமிழ் நாட்டின் மணிமகுடம் சூடப்போவதாக ராணி அடிக்கடி சொல்லியிருக்கிறாள்.”

“ஆம்.”

“அதை அவள் சொல்லவில்லை. கிரேக்க குருமார்கள் சொன்னார்கள்.”

“அப்படித்தான் ராணி கூறினாள்.”
“கூறியது மட்டுமல்ல. விதி அப்படி வகுத்திருப்பதாகத் திடமாகவும் நம்பினாள்.”

“இருக்கட்டுமே! அதனாலென்ன?”

“அதனாலென்னவா? மணிமுடி சூட உதவ வேண்டிய நீங்கள் அடிமைத்தளை சூடப்போகிறீர்களே!”

“தவறில்லை ஹிப்பலாஸ். நான் அங்கிருந்தால் ராணியை மணிமுடி சூட விடமாட்டேன். ஆகவே, விதி என்னை இங்கு கொண்டு வந்துவிட்டது. முட்டுக்கட்டை யாயிருப்பவன் விலகுவதும் ஒரு வகையில் அவன் செய்யும் உதவிதானே? ஆகவே விதி விதித்தது சரிதான். விதியை நம்பு ஹிப்பலாஸ். நானே நம்புகிறேனே!” என்ற படைத்தலைவனின் பதிலைக் கேட்டுச் சற்றுப் பெரிதாக நகைத்தான் ஹிப்பலாஸ்.

அத்தனை உற்சாகத்துக்குத் தயாராயில்லாத படைத் தலைவன், “ஹிப்பலாஸ்! நகைப்பதற்கு இது நேரமல்ல. இந்த வண்டிகள் எங்கு போகின்றன தெரியுமா?” என்றான்.

“நன்றாகத் தெரியும்” என்றான் ஹிப்பலாஸ்.

“எங்கு செல்கின்றன?”

“ஸஹ்யாத்ரி மலைக் காடுகள் வழியாக ஏகிடித் தீவை நோக்கிச் செல்கின்றன.”

“அப்படியா?”
“ஆம் படைத்தலைவரே! அங்கு சென்ற பின்பு நமது விதி நிர்ணயிக்கப்படும்.”

ஹிப்பலாஸ் அத்தனை திட்டமாகச் சொல்லியதில் எந்தவித வியப்பும் ஏற்படவில்லை படைத்தலைவனுக்கு. யவன நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஹிப்பலாஸ் கடல் பயண விவரங்கள் முழுவதையும் அறிவான் என்பதைப் படைத் தலைவன் உணர்ந்தேயிருந்ததால் மேற்கொண்டு சம்பாஷிக் காமல் மௌனமாக இருந்துவிட்டான். வண்டிகள் வெகு வேகமாகப் பயணம் செய்து நடுப்பகல் சிறிது தாண்டியதும் ஓரிடத்தில் நின்றன. தலையில் முக்காடிட்டு உடல் முழுவதையும் நல்ல வெள்ளைத் துணியால் மூடிக் கொண் டிருந்த அடிமை வர்த்தகர்கள் வண்டியிலிருந்தவர்களைக் கீழே இறங்கச் சொல்லி, அவர்களைக் கூட்டமாக நடுவில் உட்கார வைத்துச் சுற்றிலும் நீளமான தோற்சாட்டைகளுடன் நின்றுகொண்டு ஆட்களைக் கொண்டு உணவளிக்கச் செய்தார்கள். அடிமைகளுக்கு வர்த்தகர்கள் அளித்த உணவு நல்ல உணவாகவே இருந்தது. ஆட்டு இறைச்சிக் குழம்பும், மீன் கறியும், அவற்றுடன் சேர்த்துக் கிளறப் பட்ட சோறும் நல்ல சுவையாயிருந்தன அடிமைகளுக்கு. பிரயாண அலுப்பு வருங்கால நிலைபற்றிய சோகத்தை அடித்து விட்டதால் பிடிபட்டவர்கள் உணவைப் பறந்து கொண்டு தின்றார்கள். உணவளித்ததும் அடிமைகளுக்கு மாற்று உடைகளும் அளிக்கப்பட்டன. அராபிய உடைகளில் அடிமைகள் அலங்கரிக்கப்பட்டதும் பயணம் மீண்டும் துவங்கியது.

இப்படி நான்கு நாட்கள் பயணம் நடந்தது. பயண நாட்கள் பூராவும் உணவுக்குக் குறைவேயில்லை. இளஞ்செழியனுக்கு ராஜோபசாரம் நடந்தது. அவன் காயங்களுக்கு நல்ல மருந்து போடப்பட்டது. காயங்கள்கூட மெல்ல மெல்ல ஆறத் தொடங்கின. இத்தனை உபசாரத்துக்குக் காரணமும் தெரிந்திருந்ததால் ஒரு நாள் வண்டியில் படுத்திருந்த இளஞ்செழியன் பெரிதாக நகைத்தான். அந்தச் சிரிப்புக்குக் காரணத்தை அறிய முயன்ற ஹிப்பலாஸ் கேட்டான், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.

“ஒன்றுமில்லை ஹிப்பலாஸ், ஆட்டை நினைத்து நகைத்தேன்” என்றான் படைத்தலைவன்.

ஹிப்பலாஸுக்கு ஏதும் விளங்காததால், “ஆட்டையா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“ஆமாம் ஹிப்பலாஸ், நமது தமிழகத்தில் கிராம தேவதை விழா பார்த்திருக்கிறாயல்லவா?”

“ஆமாம்.”

“அதில் பலியாவது ஆடுதான்.”

“ஆமாம்.”

“அந்தப் பலி ஆட்டைப் பலி கொடுப்பவர்கள் நன்றாக உணவூட்டி வளர்ப்பார்கள். மஞ்சள் நீரை அதன் கழுத்தில் கொட்டி அதற்கு மாலை சூட்டி அலங்கரிப்பார்கள். இத்தனையும்…”

“பலி கொடுப்பதற்கு.”
“அதைப் போலத்தான் நானும். எனக்கு என்ன உபசாரங்கள், போஷாக்குகள் நடக்கின்றன பார். இத்தனையும் பலியாட்டிற்கு நடக்கும் உபசாரங்கள் ஹிப்பலாஸ். யவன நாட்டில் என்னை நல்ல விலைக்கு விற்கலாம், என் பழைய தேகநிலை திரும்பிவிட்டால். ரோம அழகிகள் என்னை வாங்கப் போட்டி போடுவார்கள், இல்லையா?” இதைச் சொல்லி மீண்டும் நகைத்தான் படைத்தலைவன். உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் பதில் சொல்லாமலே இருந்தான் ஹிப்பலாஸ். ஆனால் படைத்தலைவன் விடாமல் பேச்சுக் கொடுத்தான்.

“ஹிப்பலாஸ்!”

“பிரபு!”

“நீ எப்படி என்னைக் காப்பாற்றினாய்?”

“என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? உங்களைக் கயிறு கட்டி அவர்கள் தள்ளியதும் கப்பலின் வேறொரு புறம் சென்று நானும் கடலில் குதித்து உங்களை நாடி வந்தேன்.”

“யவன வர்த்தகனுக்கு இது தெரியுமா?”

“இதில் ரகசியமேதுமில்லை பிரபு. எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாகவே குதித்தேன்.”

“பெரும் அபாயமல்லவா ஹிப்பலாஸ்.”

“இது உங்கள் உப்பைத் தின்று வளர்ந்த உடல் பிரபு. உங்களுக்கு ஆபத்தில் உதவாவிட்டால் இந்த உடல் எதற்கு?” ஹிப்பலாஸின் பதில் உறுதியுடன் வந்தது. இதைக் கேட்டதும் இளஞ்செழியன் கரம் ஹிப்பலாஸின் கைவிரல்களை ஆர்வத்துடன் தடவிக் கொடுத்தது. ‘நன்றி கெட்ட டைபீரியஸ் பிறந்த யவன நாட்டில் இந்த மாதிரியும் ஒருவன் பிறந்திருக் கிறான்’ என்று எண்ணி உளம் கனிந்த படைத்தலைவன் மேற் கொண்டு எதுவுமே பேசவில்லை.

சுமார் ஒருவார காலம் சுற்று வழிகளில் காட்டு மறைவில் சென்ற வண்டிகள் மெள்ள ஏகிடித் தீவுக்கருகில் வந்து சேர்ந்தன. வண்டிகளுக்குப் பணம் கொடுத்து அத்துடன் திரும்பிவிட்ட அடிமை வர்த்தகர்கள் கடலிலிருந்த தங்கள் மரக்கலத்திற்கு, பிடிபட்டவர்களைக் கொண்டு சென்றார்கள். மரக்கலமும் பாரதத்தின் கரையோரமாக இரண்டுநாள் பயணம் செய்தது. பிடிபட்டவர்கள் பல ஜாதி மக்கள்; பல மொழிகளைப் பேசுபவர்கள். ஆகவே அவர்களிடமிருந்து ஹிப்பலாஸும் இளஞ்செழியனும் பிரிந்தே நின்றார்கள். அந்த அபிஸீனிய மரக்கலத்தில் யாருக்கும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. பூரண சுதந்திரம் இருந்தது. அளவு மீறிய அந்தச் சுதந்திரத்தைக் கண்ட இளஞ்செழியன் பெரிதும் வியந்து ஹிப்பலாஸைக் கேட்டான்: “இதென்ன நம்மைக் கேட்பாரே யில்லையே!”

“கேட்க அவசியமில்லை படைத் தலைவரே!” என்றான் ஹிப்பலாஸ்.

இருவரும் அந்தச் சமயத்தில் மரக்கலத்தின் ஒரு பகுதியில் சாய்ந்துகொண்டு எங்கும் நீர்ப் பரப்பே தெரிந்த கடலின் அகண்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹிப்பலாஸின் பதிலைக் கேட்ட இளஞ்செழியன் ஏதும் புரியாமல் வினவினான், “கேட்க அவசியமில்லையா?” என்று.
“ஆம் படைத்தலைவரே!”

“ஏன்?”

ஹிப்பலாஸ் பதில் சொல்லவில்லை; அந்த மாலை வேளையில் மகோன்னதமாயிருந்த பகுதியை வெறித்து நோக்கினான். தூரத்தே கடலைத் தொட்டுத் தடவிய தொடுவான விந்தையையும் ஊன்றிப் பார்த்தான். பார்த்தவன் கையை அந்தப் பகுதியில் நீட்டி, “அதோ பாருங்கள் படைத்தலைவரே” என்று இளஞ்செழியனையும் நோக்கிக் கூறினான்.

ஹிப்பலாஸ் காட்டிய பகுதியை இளஞ்செழியன் கூர்ந்து நோக்கினான். தொடுவானத்தின் அருகே எழுந்து கொண்டிருந்தது மெல்லிய புகை மண்டலம்.

“அது என்ன புகைமண்டலம் ஹிப்பலாஸ்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

இளஞ்செழியனை நோக்கித் திரும்பிய ஹிப்பலாஸின் முகத்தில் ஈயாடவில்லை . “பிரபு! அது புகை மண்டலம் அல்ல. நம்மைச் சூழ வந்திருக்கும் பெரும் விஷ மண்டலம்” என்றான் குரலில் நடுக்கம் தொனிக்க.

“விஷப் புகையா! மாளத்தானே மாளுவோம். போனால் போகிறோம்! சாவுக்கா பயப்படுகிறாய்?” என்றான் இளஞ்செழியன், குரலில் எந்த உணர்ச்சியுமின்றி.

“மாள மாட்டோம் படைத்தலைவரே! அந்தப் பாக்கியம் நமக்கில்லை. அதோ தெரிவது விதி செய்யும் மோசம். வாழ்வின் பெருநாசம். தீர்ந்தது நம் வாழ்வு! இனி துளிர்ப்பது நம் தாழ்வு” என்று அடியோடு மனம் உடைந்ததால் இடிந்து போய்க் குழறினான் ஹிப்பலாஸ்.

இளஞ்செழியனுக்கு ஏதுமே புரியவில்லை. தூரத்தே கிளம்பிய புகைமண்டலம் மெள்ள மெள்ள விரிந்தது.

அது விரிய விரிய ஹிப்பலாஸின் முகத்தில் தோன்றிய கிலியும் விரிந்தது.

ஆனால் அந்தப் புகை மண்டலமோ இளஞ்செழியனை யும் ஹிப்பலாஸையும் விழுங்கவரும் பெரும் நாகத்தைப் போலப் பெரிதாக வானத்தில் விரிந்து நன்றாகக் கறுத்து அவர்களை நோக்கி நகரவும் தொடங்கியது.

Previous articleYavana Rani Part 1 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here