Home Sandilyan Yavana Rani Part 1 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

116
0
Yavana Rani Part 1 Ch44 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch44 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 44 வாழ்வின் இறுதி இதுதான்!

Yavana Rani Part 1 Ch44 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

பாரதத்தின் மேற்குக் கடலின் பெரும் நீர்ப் பரப்பில், தொடுவானத்தருகே துள்ளி விளையாடிய மெல்லிய அலைகளில் தவழ்ந்து கொண்டிருந்த குங்குமச் சிவப்பேறிய பெரும் பழமெனத் திகழ்ந்த கதிரவன், வானத்தைச் சிவக்க அடித்ததன்றி அலைகள் மீதும் பொன்னிறக் கிரணங்களைப் பாய்ச்சி விட்டதாலும், தன்மீது தவழ்ந்த அந்தப் பெரும் பழத்தை விழுங்க ஆசைப்பட்ட கடலரசனும் தன் வாயைத் திறந்து பழத்தின் அடி விளிம்பைச் சிறிதளவு கவ்விக் கொண்டதாலும், அந்த மாலை நேரம் மிக மனோரம்மியமாகக் காட்சியளித்தது இளஞ்செழியனுக்கு. அப்பொழுது தேய்பிறை மறைந்து வளர்பிறை தளிர்விட்டிருந்ததால் மற்றொரு புறத்தே வான்மதியும் மெல்ல எழுந்து ஆகாய ஆதிக்கத்தைப் பகலவனிடமிருந்து பெற முயன்று கொண்டிருந்ததால், அந்த ஸந்தியா காலத்தின் அழகு இளஞ்செழியன் இதயத்தில் எத்தனை எத்தனையோ காவியப் பாக்களை எழுப்பி அவன் இதயமெங்கும் இன்பத்தைப் பரப்பத்தொடங்கியது. தொடு வானத்தருகே எழுந்த புகை மண்டலத்தைக் கண்டு, ஹிப்பலாஸ் மனமிடிந்து வாழ்வு நாசமடைந்து விட்டதாகக் கூறிய சமயத்திலும் இளஞ்செழியனின் இலக்கிய இதயம் மட்டும் இயற்கையின் அழகிலேயே நாட்டம் கொண்டு நிற்கவே, “ஹிப்பலாஸ், புகாரில் காலை நேரம் மனோகரமாயிருப்பதைப் பார்த்திருக்கிறாய். இதோ இந்த எரித்ரியக் கடலின் மாலை நேரத்தைப் பார். மனத்தை அப்படியே தன் வனப்பில் லயிக்கச் செய்கிறது” என்றான்.

ஆனால் புகை மண்டலம் தாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த மரக்கலத்தை நோக்கி வெகுதுரிதமாக வந்துகொண்டிருந்ததை நோக்கிய ஹிப்பலாஸ், எரித்ரியக் கடலின் மாலை நேர ரம்மியத்தை அனுபவிக்க இஷ்டப் படாததால், “பிரபு! புகை மண்டலம் நெருங்கி வருகிறது. அதனால் உண்டாகும் ஆபத்தை எண்ணிப் பாருங்கள்” என்று மன்றாடினான்.

ஹிப்பலாஸின் வற்புறுத்தலால் ஒரு முறை புகை மண்டலத்தை ஏறிட்டு நோக்கிய இளஞ்செழியன், தன் பார்வையை மீண்டும் பாதி அமிழ்ந்துவிட்டதால் வெட்டப்பட்ட பொன்தகடுபோல் தெரிந்த கதிரவனையும், எதிர்ப் புறத்தே உதயமாகி மெள்ள மெள்ள ஒளியேறி வானத்தை வெள்ளி மயமாக்கிக் கொண்டிருந்த சந்திரனையும் மாறி மாறி நோக்கி, “உலக மக்கள் ஆசைப்படும் இருபெரும் உலோகங்களைப் பார், ஹிப்பலாஸ். இயற்கையிலும் அவை பெரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன” என்றான்.

“என்ன சொல்லுகிறீர்கள் படைத்தலைவரே” என்று ஏதுமறியாமல் கேட்டான் ஹிப்பலாஸ்.

“அதோ பார். இயற்கையின் கைகள் அடித்த பெரும் பொற்காசு கடலில் அமிழ்கிறது. அதோ பார். புறப்படுகிறது இயற்கையின் வெள்ளிப்பணம்” என்று கதிரவனையும் வெண்மதியையும் சுட்டிக் காட்டிய இளஞ்செழியன், “இந்த இரண்டைப் பார்த்துதான் ஆதி மனிதனும் பொன்னையும் வெள்ளியையும் உயர்ந்ததாக எண்ணினானோ? இவை இரண்டும் வட்டமாக இருப்பதால்தான் பொன் வெள்ளிக் காசுகளையும் மனிதன் வட்டமாக அமைத்துக் கொண்டானோ?” என்று ஏதேதோ கேட்டுக் கொண்டே கடலையும் கதிரவனையும் வெண்மதியையும் வெறித்து நோக்கினான்.

இயற்கையுடன் செயற்கையை இணைக்கும் இந்த மனோதத்துவ விவகாரத்தில் ஈடுபட இஷ்டமில்லாததால் ஹிப்பலாஸ் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாலும், சோழர் படை உபதலைவன் மட்டும் உள்ளத்தே எழுந்து ஓடிய எண்ணங்களை வார்த்தைகள் மூலமாக உதிர விடத் தொடங்கி, “ஆம் அப்படித்தான் இருக்கவேண்டும் ஹிப்பலாஸ்! இல்லாவிட்டால் யவனர், சோனகர், தமிழர், வடபாரதத்தார் ஏன், உலகமக்கள் அனைவரும் பொன்னையும் வெள்ளியையும் ஏன் உயர்வாக மதிக்கவேண்டும்? ஏன் அந்த உலோக நாணயங்களை வட்டமாக அமைக்க வேண்டும்? இயற்கையிலிருந்து மனிதன் பாடம் கற்கிறான். ஆனால் முழுப்பாடத்தையும் அவன் கற்பதில்லையே. கற்றால் உலகில் சண்டை இருக்காது, மாற்சரியமிருக்காது. போட்டி இருக்காது, சுபிட்சமே நிறைந்திருக்கும்” என்று சொல்லிய தன்றி, இயற்கையின் மற்றொரு விசித்திரத்தையும் கவிகளின் இதயத்தையும் எண்ணிப் பார்த்து மெல்லச் சிரிக்கவும் செய்தான்.

அதுவரை படைத்தலைவனின் இயற்கை வர்ணனை யைக் கேட்டுக்கொண்டிருந்த ஹிப்பலாஸின் பொறுமையும் எல்லையைக் கடக்கவே அவன் கேட்டான் குரலிலும் சற்று எரிச்சல் உறவாட, “ஏன் சிரிக்கிறீர்கள் பிரபு?” என்று.

“வான்மீகரை நினைத்தேன். சிரிப்புவந்தது” என்றான் படைத்தலைவன், முதலில் உதிர்ந்த சிரிப்பைப் புன்முறுவ லாகக் குறுக்கிக் கொண்டு.

“யாரது வான்மீகர்?” எரிச்சல் சற்று அதிகமாகக் குரலில் எழுந்து விளையாட வந்தது ஹிப்பலாஸின் கேள்வி.

“பாரத நாட்டின் ஆதிகவி. வடமொழியின் பெரும் காவியமாக நாராயண காவியத்தை எழுதியவர்.”

“அவருக்கும் நாம் இப்பொழுதிருக்கும் நிலைக்கும் என்ன சம்பந்தம்?”

“நாம் இப்பொழுது இருப்பது மாலைவேளை ஹிப்பலாஸ்! இதை ஸந்தியா காலமென்று வடமொழியில் சொல்லுகிறார்கள். இந்த நேரத்தையே வான்மீக முனிவர் ஒரு பெண்ணாகக் கற்பனை செய்தார்.”

“இந்த நேரத்தையா?”

“ஆம், ஹிப்பலாஸ். ஸந்தியா நேரத்தை ஸந்தியா என்ற பெண்ணாக நினைத்தார் அந்த மகாகவி. இந்த நேரத்தில் ஆகாயமெங்கும் சிவப்புப் படர்ந்திருக்கிறது பார்…”

“ஆமாம்.”

“அந்த ஆகாயத்தை சேலையாக நினைத்தார் மகாகவி. ஸந்தியா என்ற பெண் சிவப்புச் சேலையைக் கட்டிக் கொண்டு நின்றாள். அவள் காதலனாகிய சந்திரன் அந்தச் சமயத்தில் வானத்தில் எழுந்து தன் கிரணங்களாகிய கையை அவள் மீது வைத்தான். அதனால் அவள் உடல் சிலிர்த்து மயிர்க்கூச் செறிந்தாள். உடல் சிலிர்க்கும்பொழுது திடீரென எழும் ரோமங்களைப் போல நட்சத்திரங்கள் எழுந்தன. அது மட்டுமா? காதலன் வந்ததும் அந்தக் காதலி தான் உடுத்தியிருந்த சிவப்புச் சேலையையும் நழுவ விட்டு விட்டாளாம். ஏன் தெரியுமா?” என்று குதூகலத்துடன் விவரித்தான் படைத் தலைவன்.

“ஏன்?” என்றான் ஹிப்பலாஸ் சற்றே வெறுப்புடன்.

“சந்திரன் எழுந்ததும் ஆகாயத்தின் சிவப்பு நிறம் மறைந்து விடுகிறதல்லவா? அப்பொழுது ஸந்தியாவுக்கு சிவப்புச்சேலை ஏது?” என்று கூறிய இளஞ்செழியன், கனவுலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, அந்த உவமையின் காரணமாகத் தன் காதலைப் பகிர்ந்துகொண்ட இரு பெண்களின் நினைப்பும் உள்ளத்தே எழுந்ததால், அந்த இரண்டு பேரும் சிவப்புச் சேலை கட்டியிருந்தால், எத்தனை அழகாயிருப்பார்கள் என்று எண்ணியும் பார்த்தான். பூவழகியின் தாழை நிற மேனியில் சிவப்புச் சேலை சுற்றி நின்றால் இருக்கக் கூடிய நிலையையும், யவன ராணியின் வெண்ணிற மேனியைச் சிவப்புச் சேலை தழுவி நின்றால் அவள் அளிக்கக்கூடிய காட்சியையும் மனக்கண்ணிலே சீர்தூக்கிப் பார்த்த படைத்தலைவன், ‘வான்மீகர் நீலநிற வானைச் சிவப்புச் சேலையாக்கி ஸந்தியாவுக்குக் கட்டினாரே யொழிய ஒரு மஞ்சள் நிற மங்கைக்கோ, வெண்ணிற வேல்விழியாளுக்கோ சிவப்புச் சேலை கட்டி உவமை கூற வில்லையே, என்ன கவி இவர்!’ என்று அந்த ஆதி கவியையும் கடிந்து கொண்டான்.

இப்படி ஆதி கவியையும் ஸந்தியா காலத்தையும் தன் மனத்தை ஆட்கொண்ட அழகிகள் இருவரையும் இணைத்துப் பார்த்துக்கொண்டு வேறு உலகத்தில் சஞ்சரித்ததால் கண்கள் மயக்கம் தட்ட மரக்கலத்தின் பலகையில் சாய்ந்து கொண்டிருந்த படைத்தலைவனையும் பார்த்து, மிக அருகே வந்து கொண்டிருந்த புகை மண்டலத்தையும் பார்த்த ஹிப்பலாஸின் கோபம் உச்ச நிலையை அடையவே படைத் தலைவனைப் பிடித்து அவன் ஒரு உலுக்கு உலுக்கி, “படைத் தலைவரே! கனவு முடிந்துவிட்டால் சிறிது நனவுலகத்துக்கு வாருங்கள். நீங்கள் கனவைத் தொடர்ந்து காண அவகாசம் நிரம்பக் கிடைக்கும். தயவுசெய்து அதோ பாருங்கள்” என்று மீண்டும் புகை மண்டலத்தைச் சுட்டிக் காட்டினான்.

ஹிப்பலாஸ் தன்னைப் பிடித்து உலுக்கியதால் காவிய உலகத்திலிருந்து சுயநினைவுக்குத் திரும்பிய இளஞ்செழியன், “அந்தப் புகைமண்டலம்தானே ஹிப்பலாஸ்! அதற்கென்ன, அதைத்தான் அப்பொழுதே பார்த்தேனே” என்றான்.

படைத்தலைவனை உற்று நோக்கிய ஹிப்பலாஸ் பார்வையில் அனுதாபம் பெரிதும் பரவி நின்றது. அந்த அனுதாபம் குரலில் தொனிக்கச் சொன்னான் ஹிப்பலாஸ், “படைத்தலைவரே, நான் என்னைப்பற்றிக் கவலைப் படவில்லை. உங்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன்” என்று .

“எதற்காகக் கவலை?”

“அந்தப் புகைமண்டலம் ஏது தெரியுமா?”

“தெரியாது.”

“அது ஒரு கப்பல் எழுப்பும் புகை. கப்பல் நம்மை நோக்கி வருவதால் புகை மண்டலமும் நம்மை நோக்கி வருகிறது.”

“கப்பலிலிருந்து புகை எழுப்பப்படுகிறதா? எதற்கு?”

“இந்தக் கப்பலைப் பிடிக்க.”

“அதற்கு புகை போடுவானேன்?”

“புகை போடுவது கொள்ளைக்காரர் பழக்கம்.”

“கொள்ளைக்காரர்களா?” அப்போதுதான் உண்மை நிலையைச் சற்று ஊகித்துக் கொண்ட இளஞ்செழியன், மரக் கலத்தின் பக்கவாட்டுப் பலகையில் சாய்ந்த நிலையை விட்டுச் சற்று நிமிர்ந்து நின்று ஹிப்பலாஸை உற்றுப் பார்த்தான்.

“ஆம் படைத்தலைவரே! அதோ பாருங்கள். அந்தப் புகை மண்டலத்துக்குள்ளே தோன்றும் மரக்கலத்தை” என்று சுட்டிக்காட்டினான் ஹிப்பலாஸ்.

படைத்தலைவன் புருவங்களின் மேல் வலது உள்ளங் கையைக் குடையாக அமைத்துக் கண்களை நிலைநாட்டி ஊன்றிக் கவனித்துவிட்டு, “ஆம் ஹிப்பலாஸ்! மரக்கலந்தான் வருகிறது. ஆனால் மிகச் சிறியது” என்றான்.

“புகை போடும் கப்பல் எப்பொழுதும் சிறிதுதான் படைத்தலைவரே!”

“புகை போடும் கப்பலா?”

“ஆம் படைத்தலைவரே! இந்தக் கடல் பிராந்தியத்திலே சதா உலாவும் கொள்ளைக்காரர்கள் கையாளும் முறை அது. இந்தக் கொள்ளைக்காரர்கள் கப்பல் நூறுக்குக் குறையாமல் இருக்கின்றன. அவை இந்தக் கடற்கரையில் பல இடங்களில் பிரிந்து நிற்கும். அவற்றில் சில சிறு மரக்கலங்கள், இக்கடலில் வரும் மரக்கலங்களை வேவு பார்க்கும். அவற்றிலொன்று ஏதாவது ஒரு வர்த்தக மரக்கலத்தைக் கண்டுவிட்டால், அந்த வேவு பார்க்கும் மரக்கலத்திலுள்ள கொள்ளைக்காரர்கள் துணிகளில் எண்ணெய் ஊற்றிப் பெரும் அண்டாக்களில் போட்டுச் சருகுகளை மேலே தூவிப் பெரும் புகை மண்டலத்தை எழுப்புவார்கள். இந்தப் புகை மண்டலம்தான் மற்றக் கொள்ளைக் கப்பல்களுக்கு அழைப்பு. இதைக் கண்டதும் கொள்ளைக் கப்பல்கள் அந்தப் பிராந்தியத்தை நோக்கி நாலா பக்கங்களிலிருந்தும் விரையும். பல கப்பல்களால் சூழப்படும் ஒரு மரக்கலத்தின் கதியைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை” என்று ஹிப்பலாஸ் விவரித்ததும் உண்மையைக் கிரகித்துக் கொண்ட இளஞ்செழியன் சிறிது நேரம் ஏதோ சிந்தித்து விட்டுக் கேட்டான், “வர்த்தகக் கப்பல்களைப் பிடித்துக் கொண்டதும் கொள்ளைக்காரர்கள் என்ன செய்வார்கள்? பொருள்களைக் கைப்பற்றி மனிதர்களை விட்டு விடுவார்களல்லவா?” என்று.

“வர்த்தகப் பொருள்களிருந்தால் கைப்பற்றுவார்கள்” என்று விளக்கி, அர்த்தபுஷ்டியுடன் படைத்தலைவனை நோக்கினான் ஹிப்பலாஸ்.

ஹிப்பலாஸ் சொல்ல முயன்றதை நொடிப் பொழுதில் ஊகித்துக் கொண்ட படைத்தலைவன், “புரிகிறது ஹிப்பலாஸ்! இந்தக் கப்பல்களில் வர்த்தகப் பொருள்கள்….” என்று ஆரம்பித்து முடிக்காமலே விட்டான்.
“நம்மைப் போன்ற அடிமைகள்தான்” என்று பூர்த்தி செய்தான் ஹிப்பலாஸ்.

“நம்மை என்ன செய்வார்கள்?”

“கொள்ளைக் கப்பல்களில் துடுப்புத் தள்ள ஆட்கள் தேவை” என்று இழுத்தான் ஹிப்பலாஸ்.

“அப்படியா?”

“ஆமாம். நமக்கும் அந்தப் பணி நிச்சயமாகக் கிடைக்கும்.”

“இந்தக் கொள்ளைக்காரர்கள் எந்த நாட்டவர்?”

“பல நாட்டவரும் இருக்கிறார்கள். அராபியர், அபிஸீனியர், எகிப்தியர், யவனர் இப்படியாகப் பலரும் இருக்கிறார்கள்.”

“இவர்களுக்கு நாட்டுப்பற்றுக் கிடையாதா?”

“கிடையாது. பணப்பற்று, பொருள் பற்று இவைதான் உண்டு. இவர்களுக்கு நாடு கடலோரக் காடுகள். ஓடுவது பெருங்கடல். கொள்கை கொள்ளை. இவர்களுக்கு உல்லாச விளையாட்டுகள்…”

“சொல் ஹிப்பலாஸ்…” வறண்ட குரலில் தூண்டினான் இளஞ்செழியன்.

“கொள்ளையிடப்படும் மரக்கலங்களில் உள்ள குழந்தைகளைக் கொல்லுதல், பெண்களைக் கற்பழித்தல், ஆடவரைச் சாட்டைகொண்டு அடித்து அவர்கள் துன்புறு வதைப் பார்த்து மகிழ்தல்.”

“மனிதத் தன்மை…?”

“அணுவளவும் கிடையாது.”

“இரக்கம்?”

“இல்லை – அரக்க குணம்தான்.”

“அவர்களிடம் நாமிருவரும் அகப்பட்டுக் கொண்டால்?” என்று கேட்ட இளஞ்செழியனை நோக்கிய ஹிப்பலாஸ், “ஏதாவது மரக்கலத்தில் துடுப்புத் தள்ளலாம். சில சமயங்களில் சமைக்கச் சொல்வார்கள். கொள்ளைத் தலைவர்களுக்குக் கால் பிடிக்கும் வேலையும் கிடைக்கும். காலைச் சரியாகப் பிடிக்காவிட்டால் கசையடி நிரம்பக் கிடைக்கும்” என்றும் விளக்கினான்.

ஹிப்பலாஸின் வார்த்தைகளால் எத்தனை மோசமான வாழ்வு தனக்கும் கப்பலிலுள்ள மற்றவர்களுக்கும் காத்திருக் கிறது என்பதை அறிந்த இளஞ்செழியன் கப்பலின் மறுபுறத்தில் ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந்த அடிமை வர்த்தகனை “இதோ இப்படி வாருங்கள்” என்று அழைத்தான். அடிமை வர்த்தகன் ஹிப்பலாஸுக்குச் சற்று முன்பாகவே அந்தப் புகை மண்டலத்தைக் கவனித்து விட்டதாலும், அதன் விளைவையும் அவன் பூரணமாக அறிந்து கொண்டிருந்த தாலும், இளஞ்செழியன் தன்னை அழைத்ததை லவலேசமும் லட்சியம் செய்யாமல் தன் ஆட்களைத் திரட்டி மரக்கலத்தின் பாய்மரத்தை அவிழ்த்துத் திசையை மாற்றுவதில் முனைந்தான். “அவிழ்த்துவிடு பாய்மரச் சீலையை” என்று அவனிட்ட உத்தரவை நிறைவேற்ற அராபிய ஊழியர்கள் வெகுவேகமாகப் பாய்மரத்திலும் இணைப்புக் கயிறுகளிலும் தொத்திக் குரங்குகள் போல் கனவேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள்.

“பாய்மரச் சீலையை அவிழ்த்ததும் சுக்கானை வலப்புறம் திருப்பி மரக்கலத்தின் திசையை மாற்றிவிடு” என்று சுக்கான் பிடித்தவனுக்கு உத்தரவிட்ட அடிமை வர்த்தகன், சில வினாடிகள் சுக்கான் அறைக்குச் சென்று பெரும் சாட்டையுடன் திரும்பி வந்தான்.

அடிமைக் கப்பலில் வேலை மிகத் துரிதமாக நடந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்கள் அவிழ்த்துக் கீழே தள்ளப்பட்டன. சுக்கான் வெகு வேகமாக மரக்கலத்தின் திசையை மாற்றியது. அடிமை வர்த்தகன் சாட்டையுடன் நின்று துடுப்புத் தள்ளுபவர்கள் இருந்த அடித்தளத்தில் இறங்கி, சொடேல் சொடேலென அடிமைகளை அடித்து, “ஊம்… வேகம், வேகம்” என்று கூவினான்.

இந்த ஏற்பாடுகளால் மரக்கலம் வெகுவேகமாக எதிர்ப்புறம் சுழன்று கரையை நோக்கி மீண்டும் ஓடத் தொடங்கியது. “மரக்கலத்தை எந்தப்புறம் திருப்பி இருக்கிறான் ஹிப்பலாஸ்?” என்று வினவினான் இளஞ்செழியன்.

“மீண்டும் ஏகிடித் தீவுக்குப் போகப் பார்க்கிறான்” என்று ஹிப்பலாஸ் பதில் சொன்னான்.

“தீவில் சென்றால்?”
“அங்கு அடிமை வர்த்தகர்கள் கூட்டம் பெரிது. கொள்ளைக்காரர்கள் கூட அதனருகே வர அஞ்சுவார்கள்.”

“அப்படியா?”

“ஆமாம் படைத்தலைவரே! ஆனால் இந்த மரக்கலம் ஒருக்காலும் தீவை அணுகாது. பார்த்துக்கொண்டே இருங்கள்.”

நேரம் துரிதமாக ஓடியதா அல்லது அந்தக் கப்பல்தான் வேகமாக ஓடியதா என்று திட்டமாகச் சொல்ல முடியாத நிலையில் அடிமை வர்த்தகன் துடுப்புத் துள்ளும் அடிமை களைத் தூண்டி மரக்கலத்தை ஓட்டினான். தவிரப் புதிதாகத் தன்னிடம் சிக்கிய அடிமைகள் நிலவரத்தைப் புரிந்து கொள்ளுவதற்காக அவர்களை ஒன்றுதிரட்டி உள்ள நிலையை அறிவித்தான். “அந்தப் புகைக் கப்பல் நம்மை அணுகிவிட்டால் உங்கள் கதி அதோகதிதான். உங்களுக்குக் கசையடியும் மரணமும் கிடைக்கும். பெண்கள் சீரழிக்கப்படுவார்கள். ஆகவே என்னுடன் ஒத்துழைத்து, பேசாமல் இருங்கள். உங்களை நல்லவர்களிடம் விற்று நீங்கள் வாழ்வில் வளம் பெற ஏற்பாடும் செய்கிறேன். என்ன கஷ்டமிருந்தாலும் உங்களை யவன நாட்டுக்கே கொண்டுபோய் அங்கேயே விற்கிறேன். யவனர்கள் உங்களைப் பிரியமாக நடத்துவார்கள். அராபியர்களைப் போல் கொடுமைப்படுத்த மாட்டார்கள். உங்கள் எசமானர்களிடம் நீங்கள் ஒழுங்காக நடந்து கொண்டால் பணத்துக்கும் சுகத்துக்கும் குறைவிருக்காது” என்று விளக்கிய அடிமை வர்த்தகன், தான் ஏதோ அவர்களுக்குப் பெரிய உதவியைச் செய்துவிட்ட நோக்கத்துடன் திரும்பச் சென்றான்.

“எதற்காக இந்த உபதேசம் ஹிப்பலாஸ்?” என்று கேட்டான் படைத்தலைவன்.

“இந்தச் சமயத்தில் அடிமைகள் புரட்சி செய்யாதிருக்க” என்று பதில் சொன்ன ஹிப்பலாஸ், பெரிதாக நகைத்து மரக்கலத்துக்கு வெளியே நோக்கினான்.

ஹிப்பலாஸ் பார்த்த திசையில் பார்வையை ஓட்டிய இளஞ்செழியன் அந்த நகைப்புக்குள்ள காரணத்தைப் புரிந்து கொண்டான். அடிமைக் கப்பல் வெகு வேகமாகத் தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் புகை மண்டலம் எழுப்பிய கப்பல் அதைவிட வேகமாகத் தங்கள் மரக்கலத்தை நோக்கி வந்து கொண்டிருந்ததையும், அது நெருங்கி வந்த அதே சமயத்தில் கடலின் நாற்புறங்களிலிருந்தும் பல மரக்கலங்கள் முளைத்து விட்டதையும் கண்ட இளஞ்செழியன் ‘இனி இந்த மரக்கலம் தப்புவது குதிரைக் கொம்புதான்’ என்று தீர்மானம் செய்துகொண்டு ஹிப்பலாஸின் முகத்தின்மீது தன் விழிகளை நாட்டினான்.

ஹிப்பலாஸின் முகம், மனத்தே ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சிகளால் பெரிதும் விகாரமடைந்திருந்தது. கதிரவன் கடலில் பூரணமாக அமுங்கி ஒரு நாழிகைக்கு மேலாகி விட்டதால் வெண்மதியின் தளிர்க்கிரணங்களால் பேரொளி பெற்றாலும், பெரும் பிசாசுகளைப் போல நாற்புறத்திலும் நெருங்கி வந்த கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களைக் கவனித்ததால் அந்த யவன வீரனின் முகம் ரத்தச் சிவப்பாகிக் கிடந்தது.

அடிமை வர்த்தகனும் நிலைமையைப் புரிந்துகொண்டு விட்டதால் மரக்கலத்தின் மேற்குப் பகுதிக்கு வந்து மண்டி யிட்டு ஆண்டவனை நோக்கிக் கைகளை உயர்த்தினான். அதைக் கண்டு நகைத்த இளஞ்செழியன் ஹிப்பலாஸை நோக்கி, “ஹிப்பலாஸ்! மனிதர்களைப் பிடித்து அடிமையாக்கும் துன்மார்க்கனுக்கும் ஆண்டவன் உதவி சில சமயங்களில் தேவையாயிருக்கிறது பார்த்தாயா?” என்றான்.

ஹிப்பலாஸ் எதையும் ரசிக்கும் நிலையில் இல்லை. அடுத்த ஒரு நாழிகையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இளஞ் செழியன் மனோதிடத்தைக்கூடக் குலைத்துவிட்டன. கொள்ளைக்காரக் கப்பல்கள் மிகத் துரிதமாக நாற்புறமும் சூழ்ந்து வந்ததன்றி, சற்றுத் தூரத்திலிருக்கும்போதே பெரும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணிப்பந்தகளுக்குத் தீ வைத்துப் பொறிகளைக் கொண்டு வீசத் தொடங்கியதால் அடிமை மரக்கலத்தின் மீது தீப்பந்தங்கள் திடீரென்று விழுந்தன. அடுத்த சில வினாடிகளில் கேட்டதெல்லாம் பெரும் கூச்சல்! கசையடி ஒலிகள்! கொள்ளைக்காரர்கள் மரக்கலத்துக்குள் தாவிக் குதித்ததால் ஏற்பட்ட தடால் தடால் என்ற சத்தம்! அடிமை வர்த்தகனால் பிடிக்கப்பட்ட பெண்களின் அலறல்!

அந்தப் பெரும் குழப்பமான அபாயமான நிலையில், ‘இனிச் சாவு ஒன்றுதான் வழி’ என்பதைத் தீர்மானித்துக் கொண்ட இளஞ்செழியன் தன்மீது தாவிய கொள்ளைக்காரன் ஒருவனை அடித்து வீழ்த்தி அவன் வாளைப் பிடுங்கிக் கொண்டு, “ஹிப்பலாஸ்! உனக்கும் ஒரு வாள் சம்பாதித்துத் தருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு கொள்ளைக் கூட்டத்தின் இடையே உருவிய வாளுடன் புகுந்தான்.
“போரிட்டு வீரசொர்க்கம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் முடிவு ஹிப்பலாஸ். சற்றுப் பொறு. உனக்கு ஒரு வாளைக் கொடுக்கிறேன். நீயும் வந்து போராடு. பெரும் போர்களில் என்னுடன் தோளுக்குத் தோள் நின்று போராடியிருக்கும் உனக்குக் கடுமையான போரிலிருக்கும் இன்பம் எத்தன்மையது என்று நான் சொல்லவேண்டுமா?” என்று கூறிக்கொண்டே, கொள்ளைக் கூட்டத்திடையே புகுந்த இளஞ்செழியனின் வாள் கனவேகத்தில் சுழல ஆரம்பித்தது. அடுத்த விநாடி எங்கும் ரணகளம், ஒரே இரைச்சல்! ஒரே பயங்கர நிலை! அடுத்து அதைவிடப் பெரிதாக இருந்த தன் வாழ்வின் இறுதி நிலையை எண்ணி வாளை மின்னல் வேகத்தில் சுழற்றிய சோழர்படை உபதலைவன் பலரை வெட்டி வீழ்த்தினான். எத்தனை முறை தடுத்தாலும் ஓயாத கடலலைகளைப் போல மேலும் மேலும் கொள்ளைக்காரர்கள் சாரி சாரரியாக வந்து அவன்மீது விழுந்தார்கள். சளைக்காத அவன் கையும் சளைக்கும் நிலைக்கு வந்தது.

Previous articleYavana Rani Part 1 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch45 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here