Home Sandilyan Yavana Rani Part 1 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

87
0
Yavana Rani Part 1 Ch47 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch47 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 47 அடிகளின் அலுவல்

Yavana Rani Part 1 Ch47 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

பரத வல்லாளனைப் பின்தொடர்ந்து அசாத்திய அடக்கவொடுக்கத்துடனும், மேலுக்குப் பணிவும் உண்மையில் விஷமமும் ததும்பிய விழிகளுடன் வாணகரை உச்சி மாளிகையின் முன் கூடத்தில் நுழைந்த புகாரின் பொற் கொல்லன் சங்கமனைக் கண்ட மாத்திரத்திலேயே வேல் வீரனான குமரன் சென்னி பிரமிப்படைந்து விட்டானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. வந்தவன் வேஷத்துக்கும் தொழிலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதிருந்தாலும், வந்தவுடன் சங்கமனும் பிரும்மானந்தரும் செய்து கொண்ட பரஸ்பர மரியாதையாலும், ‘இவன் யாராயிருந்தாலும் பொற்கொல்லனல்ல’ என்ற முடிவுக்கு வந்த குமரன் சென்னிக்கு, பிரும்மானந்தர் சங்கமனைக் கேட்ட கேள்விகளும் சங்கமன் சொன்ன பதில்களும் பிரமிப்பை மட்டுமன்றி வியப்பையும் சேர்த்தளித்தன.

கையில் நிறுவைக்கருவியும் சாமணமும் அடங்கிய பேழையுடனும் கழுத்தில் ஆரத்துடனும் காதில் சிறந்த கடுக்கன்களுடனும் காட்சியளிக்க வேண்டிய பொற்கொல்லன், இடையில் காஷாயம் கட்டி மேலேயும் பிரும்மானந்தரைப் போலவே ஒரு முழம் காஷாயத் துண்டைப் போட்டுக் கொண்டு சிரமுண்டனத்துடன் மாளிகை முன் கூடத்தில் நுழைந்த மாத்திரத்தில் “அடிகள் வரவேண்டும், வரவேண்டும்” என்று பிரும்மானந்தர் அவரை எதிர் கொண்டு அழைத்ததன்றித் தமக்கு எதிரிலுள்ள ஆசனத்தில் அமர்த்தவும் செய்தார். வந்த துறவியும் கையில் மடித்து வைத்திருந்த இரண்டு வெள்ளைத் துணிகளை விரித்துப் பிரும்மானந்தர் கையில் போட்டுத் தலை தாழ்த்தினார். இந்த மரியாதையின் விளைவாக வந்த துறவி பௌத்த மதத்தையோ சமண மதத்தையோ சார்ந்தவராயிருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொண்ட குமரன் சென்னி மட்டுமன்றி, பரத வல்லாளனும் திகைக்கும்படியாக இரண்டு துறவிகளுக்கும் சம்பாஷணை துவங்கலாயிற்று. தமது கையில் மிகுந்த பணிவுடன் சமர்ப்பிக்கப்பட்ட வெள்ளைத் துணி இரண்டையும் விரல்களால் தடவிப் பார்த்த பிரும்மானந்தர், “அடிகளே! பட்டையும் தோற்கடிக்கும் வழவழப்பு இந்த ஆடைக்கு இருக்கிறதே. இது தாங்களே செய்ததோ?” என்று வினவினார்.

நேராகப் பதில் சொல்லாத சமணத் துறவி சிறிது வெட்கப்படுபவர்போல் பாசாங்கு செய்து, “என்னைக் கண்டால் அடிகளுக்கு எப்பொழுதும் கேலிதான். ஏதோ தெரிந்தவரையில் செய்திருக்கிறேன். அதுவும் அடிகளின் மாசுமறுவற்ற பேருடலில் முரட்டுத் துணி பட்டால் தாங்காது என்பதற்காகக் கொஞ்சம் மெல்லிய நூலிழைகளையே தறியில் செலுத்தினேன். அந்த மேனிக்கு இந்தத் துணி மிகவும் பொருத்தமாயிருக்கும். கொஞ்சம் காவி மட்டுந்தான் அடிகள் சேர்க்க வேண்டியது” என்றார் குரலில் பணிவைக் காட்டி, ஆனால் சொற்களில் விஷமத்தை ஊட்டி.

குமரன் சென்னிக்கும் பரத வல்லாளனுக்கும் பொற்கொல்லன் பதில் வேடிக்கையாகவே இருந்ததால் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒரு விநாடி பார்த்துக் கொண்டனர். அடுத்தபடி பிரும்மானந்தர் கண்களைச் சந்தித்த குமரன் சென்னியின் கண்களில், ‘இவர் யார்? பொற்கொல்லரா, வெறும் துறவியா?’ என்ற கேள்விகள் திட்டமாகவே எழுந்து நின்றாலும் அதைக் கவனிக்காதவர் போலவே பிரும்மானந்தர் வந்த அடிகளுடன் மேற்கொண்டு பேச்சைத் தொடுத்து, “இத்தனை அழகாகவும் இழைகள் ஒன்றன் மேலொன்று முரண்டு படுக்காமலும் முடிச்சுகள் இல்லாமலும் ஆடை தயாரிக்கும் வல்லவர் அடிகளைத் தவிர, புகாரில் வேறு யார் இருக்க முடியும்! ஆனால் பளிச்சென்று இருக்கும் இந்த வெள்ளை ஆடையைக் காவியேற்றி நாசம் செய்ய எனக்கு இஷ்டமில்லை. ஆகையால் இதை அடிகளே வைத்துக் கொள்வது நல்லது” என்று சொல்லித் துணிகளிரண்டையும் வந்தவரிடம் திருப்பிக் கொடுத்தார்.

பிரும்மானந்தர் பேச்சைத் தட்ட முடியாததால் துணிகளைத் திரும்ப வாங்கிக்கொண்ட சமணத் துறவியின் விழிகளில் மெள்ள மெள்ள சந்தேகச் சாயை படர்ந்தது. “இதை ஏன் திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள் அடிகளே?” என்று சந்தேகம் குரலிலும் பிரதிபலிக்கக் கேட்டார் சமணத்துறவி.

“நான் காஷாயத்தை விட்டு வேறெதுவும் அணிந்து வழக்கமில்லை” என்றார் பிரும்மானந்தர்.

“காவி ஏற்றிக் கொள்ளலாமென்றுதான் சொன்னேனே” என்று மீண்டும் வற்புறுத்தினார் சமணத்துறவி.

“காவி ஏற்றி இத்தனை நல்ல ஆடையைக் கெடுக்க எனக்கு இஷ்டமில்லை என்று ஏற்கெனவே சொல்ல வில்லையா?”

“காவி ஏற்றுவது கெடுப்பதாகுமா? காவி துறவறத்தின் அடையாளமல்லவா?”
“துறவறத்தின் அடையாளமே தவிர, அழகின் அடையாளமல்லவே.”

“அழகைப்பற்றி நமக்கென்ன கவலை?”

“நமக்கு என்று எதற்காகச் சொல்கிறீர்கள். எனக்கு வேண்டுமானால் வயதாகி விட்டது. அடிகள் வாலிப வயதுதானே?”

“அதனால்?”

“அந்தக் காஷாயத்தைக் களைந்துவிட்டு இந்த வெள்ளை ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.”

பிரும்மானந்தரின் இந்தப் பதிலைக் கேட்ட பரத வல்லாளனும் குமரன் சென்னியும் திகைத்துப் போய் விட்டார்களென்றாலும் சமணத்துறவி மட்டும் எள்ளளவும் அசையாமல் தீர்க்காலோசனை தவழ்ந்த கண்களை பிரும்மானந்தர் மீது நாட்டியதன்றி, “இந்தப் புது வேஷம் எதற்கு அடிகளே” என்று கேட்கவும் செய்தார்.

“புகாரின் பொற்கொல்லர் காவியணிந்து துறவியாகச் சென்றால் அவர் பொற்கொல்லர் என்று யார் நம்புவார்கள்?” என்று வினவினார் பிரும்மானந்தர்.

“துறவறத்துக்கும் பூர்வாசிரமம் இருக்காதா? ஆதியில் பழகிய தொழில்கள் துறவறத்தில் மறந்துவிடுமா? துறவறம் பூண்ட பின்புதானே அடிகளுக்கு அந்த மகர கண்டிகையைச் செய்து கொடுத்தேன். அடிகள் பூர்வாசிரமத்தில் சிற்பத் தொழில் செய்யவில்லையா? அடிகளுக்கு வாள் வீச்சு, சிற்பத் தொழில் இரு கலைகள் தெரியும். அடியவனுக்கு, அணி செய்தல், துணி நெய்தல், இவற்றுடன் அடிகள் கற்பித்த போர்த் தொழிலும் தெரியும். துறவறம் தொழில்களை அழித்து விடுமா என்ன?” என்று பதிலுக்குக் கேட்டார் சமணத் துறவி.

“நன்றாகச் சொன்னீர்கள்! துறவறமா தொழில்களை மறக்க அடிக்கும்? துறவறம் மேற்கொண்டால் புதிது புதிதாக எத்தனை தொழில்கள் ஏற்பட்டுவிடுகின்றன! எத்தனை தொழில்களைச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது! அதற்காகச் சொல்லவில்லை அடிகளே! உங்களுக்கு நிகரான பொற்கொல்லர் புகாரில் என்ன, சோழ மண்டலத்திலேயே இல்லையென்பது எனக்குத் தெரியும். ஆனால் காவியுடன் அடிகள் பொற்கொல்லராகப் பணி புரியச் செல்வது மிகவும் கடினம். நுழைய வேண்டிய இடம் அத்தனை கெடுபிடியானது. அடிகள் உண்மையில் யாரென்று தெரிந்துவிட்டால்…” என்ற பிரும்மானந்தரை இடைமறித்த சமணத்துறவி, “தெரிந்து விட்டால் உயிர் போய்விடும், அவ்வளவுதானே!” என்று கேட்டார்.

“அடிகளின் உயிர் போவதைப் பற்றி அடியவன் கவலைப்படவில்லை” என்றார் பிரும்மானந்தர்.

“பின் எதைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள்?”

“திட்டம் குலைந்துவிட்டால் நாட்டின் பிற்காலம் சீர்குலைந்துவிடும். அதற்காகத்தான் கவலைப்படுகிறேன்.”

சமணத்துறவி நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மெள்ளத் தலையை நிமிர்த்தி பிரும்மானந்தரை நோக்கினார். பிரும்மானந்தர் முகத்தில் கவலை பெரிதும் படர்ந்திருப்பதைக் கண்டு பெருமூச்சொன்றை விட்டுச் சொன்னார், “அடிகள் சொன்னது எதையும் இதுவரை நான் தட்டியதில்லை. துறவியாகப் பணித்தீர்கள், துறவியானேன். மேற்கில் செல்லச் சொன்னீர்கள், சென்றேன். மீண்டும் புகாருக்கு வந்து பொற்கொல்லர் தொழில் செய்ய உத்தரவு வந்து ஒரு மாதங்கூட ஆகவில்லை . புகார் வந்தேன். சங்கமப் பொற்கொல்லனானேன். இதுவரை மனம் பல பற்றுதல்களில் ஈடுபட்டுச் சிக்கித் தவித்திருக்கிறது. போதாதற்குத் துறவற அடையாளத்தையும் நீக்கச் சொல்கிறீர்களே. இதைத்தான் என்னால் சகிக்க முடியவில்லை ” என்று .

சமணத்துறவி அப்படிச் சொன்னபோது அவர் குரலில் ஓரளவு சங்கடமும் ஏக்கமும் கலந்து தாண்டவமாடியதைக் கவனித்த பிரும்மானந்தர் சில விநாடிகள் ஏதோ யோசித்து விட்டுச் சொன்னார்: ‘அடிகளுக்குத் துறவறத்தில் உள்ள பற்று அடியவன் அறியாததல்ல, துறவறம் பெரிதும் உள்ளத்தைப் பொறுத்தது. ஆடையைப் பொறுத்ததல்ல. ஆடையில் ஏற்படும் சில மாறுதல், அதுவும் சில நாட்களுக்கே ஏற்படும் மாறுதல், நாட்டுக்கு நன்மை பயக்குமானால், அதைச் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது. நாட்டின் நிலை பயங்கரப் பாதையில் சென்று கொண்டிருப்பதை அடியவன் உணர்த்தத் தேவை யில்லை.”

“அதுதான் வெட்ட வெளிச்சமாயிருக்கிறதே” என்றார் சமணத்துறவி.

“அப்படியானால் சங்கமரின் உதவி கிடைக்குமா?”

“அடிமை காத்திருக்கிறேன். இருப்பினும் காஷாயத்தை நீக்காமலே காரியத்தை முடிக்க முடியும் என்பது அடியவன் துணிபு.”
இவ்விதம் சமணத் துறவி மெள்ளத் தமது வேஷத்தை நாட்டுக்காகச் சில நாள் தியாகம் செய்ய முன் வந்தவுடன் நன்றி ததும்பும் கண்களை அவர் மீது நாட்டிய பிரும்மானந்தர் குமரன் சென்னியை நோக்கி, “சென்னி! சங்கமரை நீ அறியமாட்டாய். ஆனால் அவர் உன்னை அறிவார். இந்தச் சோழ மண்டலத்தில் அடிகளைப்போல் அணி செய்யும் திறன் வாய்ந்தவர்களோ நவரத்தினங்களின் மதிப்பைத் திட்டமாகப் போடுபவர்களோ யாருமே கிடையாது. அவர் தற்சமயம் தங்கும் இடத்தை இன்று வல்லாளன் பார்த்திருப்பதால் இனி அவரை இங்கு வரவழைப்பதும் நமக்கு மிக எளிது. ஆகவே அவரைக் கொண்டுதான் நாம் டைபீரியஸின் நோக்கத்தை அறியவேண்டும்” என்று கூறி விட்டு, பொற்கொல்லருக்காகத் திரும்பி, “சோழர் படை உபதலைவருக்கு ஏற்பட்ட கதி அடிகளுக்குத் தெரியுமல்லவா” என்று வினவினார்.

“தெரியும்” என்றார் சமணப் பொற்கொல்லர்.

“இளஞ்செழியன்.”

“யவன நாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.”

“ஆம். அதனால் சோழர் படைகளைச் சரியாக நடத்தி, வெற்றி சம்பாதிக்கக் கூடிய ஒரு பெரும் தலைவனை நாடு இழந்து நிற்கிறது.”

“ஆம்.”

“படைத்தலைவர் இல்லாத சமயத்தில் போர் மூண்டால் நாடு அழிந்து விடும்.”
“ஏன் அடிகளே! வேறு படைத்தலைவர்களே நாட்டில் இல்லையா?”

“இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இருங்கோவேளின் பக்கத்தில் இருக்கிறார்கள். வேளிர்கள் வேளிர் குலத்தானுக்குத்தானே உதவுவார்கள், அடிகளே! அப்படி உதவியிராவிட்டால் இளஞ்சேட்சென்னி உயிரிழக்க நேரிட்டிருக்குமா? அல்லது.”

“கரிகாலர் அனாதையாக நாட்டில் அலையத்தான் நேரிடுமா?”

“ஆம். அடிகளே! இந்த நிலை ஏற்பட்டதே நாட்டின் துரதிர்ஷ்டம். திருமாவளவன் போர்த் திறம் படைத்தவர்தான். ஆனால் படைகளை நடத்திப் பரிச்சயமில்லாதவர். அனுபவம் போதாத சிறுபிள்ளை. அதற்கு இந்தப் பாண்டிய நாட்டு வாலிபன்தான் தேவை.”

“ஏன் இரும்பிடர்த் தலையாருக்கு என்ன?”

“இரும்பிடர்த்தலையார் நீண்டநாள் போர்களை விட்டு விலகி, கவிபாடிக் காவிய உலகில் ஆழ்ந்து விட்டவர், படைகளை நடத்தி நாளாகிறது. தவிர, யவனர் நமது நாட்டுக்கு வந்த பிறகு போர் முறைகளும் பெரிதும் மாறிவிட்டன.”

“அப்படியானால்?”

“படைத்தலைவர், வரும்வரை போரை மூளவிடக் கூடாது. அப்படிப் போர் மூண்டாலும் புகாரை நம் கையிலிருந்து நழுவவிடக் கூடாது.”

“கையிலிருந்து நழுவிவிடும் போலிருக்கிறதோ?”

பிரும்மானந்தர் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சங்கமரை உற்று நோக்கினார். “புகாரில் நடப்பது அடிகளுக்குத் தெரியாதா?” என்றும் கேட்டார்.

“தெரியும். இந்திர விழா விடுதி யவனர் காதல் தெய்வத்தின் விடுதியாகப் போகிறது” என்றார் சமணத் துறவி.

“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இந்திர விழா விடுதியின் பக்கப் பகுதிகள் சிலவற்றை டைபீரியஸ் இடித்து விட்டான்” என்று சுட்டிக் காட்டினார் பிரும்மானந்தர்.

“அதை நான் கவனிக்கவில்லையே” என்றார் சமணத்
துறவி.

இதைக் கேட்டதும் பிரும்மானந்தர் கண்களில் கோபக் குறி எல்லையின்றி எழுந்தது. ஆசனத்தைவிட்டுச் சரேலென எழுந்து பிரும்மாண்டமான தமது உடற்சதைகள் ஆட சமணத் துறவியை நோக்கி வந்த பிரும்மானந்தர் குரலும் இடியென ஒலித்தது. “இதைக்கூடக் கவனியாமல் புகாரில் என்ன வேலை செய்கிறீர்? வாணகரையிலிருந்து இதைக் கவனிக்க பிரும்மானந்தன் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்று கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீரா?” என்று சீறினார் பிரும்மானந்த அடிகள்.
இரண்டு துறவிகளும் அரசியல் விவகாரங்களைப் பற்றித் தீவிரமாகத் தர்க்கித்ததையும், இறுதியில் பிரும்மானந்தர் சமணத் துறவியை மிரட்டியதையும் கண்ட குமரன் சென்னிக்கு வியப்பு மிதமிஞ்சி விட்டதால் அவன் கேட்டான், “இந்த அடிகளுக்குப் புகாரில் பொற்கொல்லர் அலுவல் என்றுதானே சொன்னீர்கள்” என்று.

பிரும்மானந்தர் சீற்றத்தைச் சற்றே தணித்துக் கொண்டு குமரன் சென்னியை நோக்கி, “சென்னி! நிதானத்தைச் சற்று இழந்துவிட்டேன். புகாரில் டைபீரியஸின் நடவடிக்கைகளைக் கவனிக்கவே அடிகளை வரவழைத்தேன். அதை அவர் சரியாகச் செய்யாததால் கோபம் வந்தது. யாரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் பார்” என்று சமண அடிகளுக்கு வேவு பார்க்கும் தொழிலைத் தவிர வேறு தொழில் அவசியமில்லாதது போல் பேசினார் பிரும்மானந்தர்.

பிரும்மானந்தரின் கோபத்தால் சமணத்துறவி அதிர்ச்சியடைந்து விடுவாரென்று குமரன் சென்னியோ பரத வல்லாளனோ எண்ணியிருந்தால், அந்த எண்ணம் மிகத் தவறென்பதைச் சமணத் துறவியின் முகம் காட்டியது. பிரும்மானந்தரின் சத்தத்துக்குச் சிறிதும் அசையாமலும் சாவதானமாகவே சொன்னார் சமண அடிகள், “இந்திர விழா விடுதியை இங்கிருந்து பார்ப்பது சுலபம், புகாரிலிருந்து பார்ப்பது கஷ்டம்” என்று.ḥ

ஆச்சரியம் ததும்பும் கண்களைச் சமண அடிகள் மீது நாட்டிய பிரும்மானந்தர் கேட்டார், “ஏன்?” என்று.

“இந்திர விழா விடுதிப் பக்கம் காவல் பலமாயிருக்கிறது. யாரும் போக அனுமதிக்கப்படுவதில்லை. அதற்குப் போகும் வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டுவிட்டன” என்று பதில் சொன்னார் சமண அடிகள்.

இந்தப் பதிலைக் கேட்ட பிரும்மானந்தர், “அப்படியா! இந்திர விழா விடுதிப் பக்கம் செல்ல வசதியில்லையானால் பக்கச் சுவர்கள் இடிக்கப்படுவது தெரியாதிருக்கலாம். அதன்மீது நிர்மாணிக்கப்படும் பெரும் தூண்கள், கண்ணுக்குத் தெரியலாமல்லவா?” என்று மீண்டும் ஒரு கேள்வியை வீசினார்.

ஏதோ குற்றவாளியை விசாரிக்கும் நீதிபதியைப் போல் தன்னைப் பிரும்மானந்தர் விசாரித்தும் சிறிதும் கோபம் கொள்ளாத சமண அடிகள், “அதைக் கவனித்துக் கொண்டு தானிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

“கவனித்துக் கொண்டு சும்மா இருந்து லாபமென்ன? எனக்குத் தகவல் அனுப்பவில்லையே!” என்று கேட்டார் பிரும்மானந்தர்.

“கண்ணுக்கெதிரே ஆகாயமளாவ எழும் தூண்களைப் பற்றி, ‘இதோ தூண்கள் எழுப்பப்படுகின்றன’ என்று தெரிவிப் பதில் அர்த்தமென்ன இருக்கிறது அடிகளே? அவற்றைத் தான் எல்லோரும் பார்க்கிறார்களே. அந்தத் தூண்கள் ஏன் எழுப்பப்படுகின்றன, அவற்றைக் கொண்டு எதைச் சாதிக்க டைபீரியஸ் முயலுகிறான் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.”

“அதைக் கவனித்து வருகிறீரா?”

“புகாருக்கு வந்து டைபீரியஸ் மீது ஒரு கண் வைத்துக் கொள்க என்று அடிகள் செய்தியனுப்பிய நாளாக அதே அலுவல்தான் அடியேனுக்கு. அடிகள் அவசரப்பட்டு இங்கு அழைத்திராவிட்டால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பல தகவல்களைத் தந்திருப்பேன். அடியேனது சீடர்கள் பலர் யவனர் விடுதிகளில் சேவகம் செய்து வருகிறார்கள்.” “நல்லது அடிகளே! தங்கள் சீடர்கள் மட்டும் வேவு பார்ப்பது போதாது. டைபீரியஸைப் போன்ற அறிவாளியை அடிகளைப் போன்ற தந்திரசாலிதான் சரியாகக் கவனிக்க முடியும். ஆகவே ஏதாவது தந்திரத்தால்…” என்று பிரும்மானந்தர் முடிக்கு முன்பே தமது ஆசனத்தை விட்டு

எழுந்துவிட்ட சமணத்துறவி பிரும்மானந்தரை நோக்கி மெல்ல நகைத்து, “தந்திரம் தேவையில்லை அடிகளே! என்னை டைபீரியஸே அழைத்திருக்கிறான். ராணிக்கு இன்னும் பதினைந்து நாட்களில் புகாரில் மகுடம் சூட்டத் திட்டமிடுகிறான் டைபீரியஸ்!” என்று கூறினார்.

“மகுடம் சூட்ட அடிகளை அழைப்பானேன்?” வியப்புடன் வினவினார் பிரும்மானந்தர்.

“அடிகளை அழைக்கவில்லை. புகாரின் சிறந்த பொற் கொல்லனை அழைத்திருக்கிறான்” என்று சற்றுப் பெருமை யுடனே கூறினார் சங்கமர்.

“அப்படியானால் வெள்ளை உடை அணிந்து…” என்று இழுத்தார் பிரும்மானந்தர்.

“இல்லை. காவியை விட இஷ்டமில்லை அடிகளே. காவியை விட அவசியமுமில்லை. காவி என் உடையில்லை. உடலில் ஊறிவிட்டது. ஆனால் காவியென்று சிறிதளவும் தெரியாதபடி சரிகை வேலைப்பாடு செய்த அங்கி செய்திருக் கிறேன். என் முகமோ முண்டமோ தெரியாதபடி தலை மயிரும் தாடி மீசைகளும் சித்தமாயிருக்கின்றன. நாளை வயோதிகனும் தீட்சையுள்ளவனுமான பொற்கொல்லனொருவன் டைபீரியஸைச் சந்திப்பான். பிறகு ராணியின் தலையை மகுடத்துக்கு அளவெடுப்பான். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு அடிக்கடி இந்திர விழா விடுதிப் பகுதியில் நடமாடுவான். இதில் ஏதாவது…”

“குறையில்லை. நல்ல திட்டம். அடிகளைச் சந்தித்தது நல்லதாகப் போய்விட்டது. இல்லையேல் வேறு வழியில் ராணியை மீண்டும் இங்கு வரவழைத்திருப்பேன். ஆனால் அது அபாய வழி, மிகவும் ‘திருப்தி அடிகளே. நாளை ராணியைச் சந்தித்த பிறகு தகவல் அனுப்புங்கள். அடிகளிடமிருந்து தகவல் ஏதும் வராததால்தான் சற்று நிதானம் தவறினேன்” என்று மன்னிப்புக் கேட்கும் முறையில் சங்கமரிடம் பேசிய பிரும்மானந்தர் அவரைப் பழையபடி புகாரில் விட்டு வர வல்லாளனைப் பணித்தார்.

சமணத் துறவி தமது சொற்படி மறுநாள் காலையில் விளக்கு வைத்த பிறகு சரிகை வேலைப்பாடுகள் அமைந்த பெரு அங்கியையும் தாடி மீசைகளையும் அணிந்து இந்திர விழா விடுதியை நோக்கிச் சென்றார். பொற்கொல்லன் சங்கமன் வருகையைப்பற்றி டைபீரியஸ் காவலருக்கு ஏற்கெனவே அறிவித்திருந்ததால், இந்திர விழா விடுதியில் முதல் இரண்டு கட்டுக்கதவுகளும் அவருக்குத் தாராளமாகத் திறந்து வழிவிட்டன. காவலர் அறிமுகம் கூற மூன்றாம் கட்டில் பெரிய அறையின் நடுவில் உட்கார்ந்திருந்த ராணி முன் நின்ற சங்கமப் பொற்கொல்லர், அவளை ஏறெடுத்துப் பார்க்காமல் தலை தாழ்த்தி வணங்கி, “அடிமை மகுடம் தாங்கவேண்டிய அழகிய தலையை அளவெடுக்க வந்திருக்கிறேன்” என்றார்.

எதிரே பெருமுடியுடனும் தாடியுடனும் நின்ற பொற்கொல்லனை ராணியின் நீலமணிக் கண்கள் ஊடுருவிச் சில விநாடிகள் நோக்கின. பிறகு அருகே வரும்படி அவள் அழகிய கரம் சைகை காட்டவே ராணியை நெருங்கி, கையிலிருந்த பேழையைக் கீழே வைத்துத் திறந்து பட்டுக் கயிறு ஒன்றை எடுத்து, இயற்கைப் பொன்முடி பெருமுடியாகத் திரட்டிக் கட்டப்பட்டிருந்த அவள் தலையின் சுற்றளவு குறுக்களவு முதலிய விவரங்களை நறுக்கு ஓலையில் பொறித்துக் கொண்டார். வேலை முடிந்ததும், “ராணி! அளவுகளை எடுத்துக் கொண்டு விட்டேன். மகுடத்தின் அச்சுத் தயாரானதும் செப்பில் முதலில் தயாரித்துத் தலையில் வைத்துப் பார்க்கிறேன். பிறகு தமிழகத்திலேயே இணையற்ற மணிமுடியை சிருஷ்டிக்கிறேன்” என்றார்.

“மகிழ்ச்சி! போதிய சன்மானம் அளிக்கப்படும், கவலை வேண்டாம்” என்றாள் ராணி.

“சன்மானத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை ராணி” என்றார் பொற்கொல்லர்.

“ஏன் கவலைப்படவேண்டும்?”

“என் தலையை அளவெடுத்ததன் விளைவாக உமது தலை போய்விடுமே, அதற்காகவாவது கவலைப்பட வேண்டாமா?”

ராணியின் கேள்வியைக் கேட்ட சங்கமப் ‘ பொற்கொல்லர் சற்றே விழித்தார். அவர் விழித்ததைக் கண்ட ராணி, “பொற்கொல்லரே! நீர் என் தலையை அளவெடுக்க வந்தீரா அல்லது இந்திர விழா விடுதியை அளவெடுக்க வந்தீரா?” என்று மிக ரகசியமாக வினவினாள்.

பொற்கொல்லர் பதறிப் போனார். ராணி, “நீர் யாரென்று எனக்குத் தெரியும்” என்று சொன்னபோது அவள் விழிகளிலும் ஏளனச் சிரிப்பு துளிர்த்து நின்றது.

பொற்கொல்லர் மிக அவசரமாக வெளியே செல்ல முயன்றார். “நில்லுங்கள்” என்று ராணியின் அதிகாரக் குரல் அவரை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தது. மிகத் தைரியசாலி யான அடிகளின் கால்களும் சற்றே நடுங்கின. அதுவரை நகைத்துக் கொண்டிருந்த நீலமணிக் கண்களில் கோப ஜ்வாலை கொழுந்துவிட்டு எரிந்தது. அதே சமயத்தில் பக்கத்து அறையில் யாரோ ஒருவர் நடமாடும் அரவமும் அடிகளின் காதில் விழுந்தது.

Previous articleYavana Rani Part 1 Ch46 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch48 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here