Home Sandilyan Yavana Rani Part 1 Ch49 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch49 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

65
0
Yavana Rani Part 1 Ch49 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch49 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch49 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 49 பொற்கொல்லன் கரங்களில் ஒரு பூம்பாவை

Yavana Rani Part 1 Ch49 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

தமிழகத்தில் யவனர்களுக்கெனத் தனி அரசு நிறுவும் நிர்ணயத்துடன் நாடு கடந்து கப்பலுடைந்து கடலலைகள் உருட்டியதால் பூம்புகாரின் பொன்மண்ணில் ராணி புரண்டு சுமார் இரண்டு மாதங்கள் ஓடிவிட்ட பிறகு, ஆதியில் ஆவணித் திங்களன்று சோழர் படை உபதலைவன் நடந்த அதே வழியில் அலையோரத்தில் நடந்து சென்ற சமண அடிகளின் மனமும் படைத்தலைவன் மனத்தைப் போலவே பெரும் துன்பத்துக்கு உள்ளாகியிருந்ததால், புகாரின் பிரதான வாசலுக்கருகிலும், பரதவர் குடிசைகளின் வெளிப்புறத்திலும், சங்கமத் துறையின் சுங்கச் சாவடியிலும் இரண்டாம் ஜாமத்தின் ஆரம்பத்திலும் கேட்டுக் கொண்டிருந்த பெருங்கூச்சலைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே துறவியார் நடக்கலானார். ராணி புகாரின் கரையில் புரண்ட நாளாக ஏற்பட்ட சகல நிகழ்ச்சிகளையும் அவ்வப்பொழுது பிரும்மானந்தர் மூலம் அறிந்திருந்த சமணத் துறவி, அந்த ஐப்பசித் திங்களின் இரவில், அலைகள் காலை அலச நடந்த அந்த நேரத்தில், தமக்கும் சோழர் படை உபதலைவனுக்கும் இருந்த பல ஒற்றுமைகளை நினைத்துப் பார்த்து, அத்தனை துக்கத்திலும் தமக்குத் தாமே லேசாகச் சிரித்துக் கொண்டார். ‘ராணியை முதன் முதலில் கண்டு தூக்கிச் சென்ற படைத்தலைவனும் ஒரு பெண்ணை நினைத்துத் துன்பப் பட்டுக் கொண்டுதான் இந்தக் கடற்கரையில் நடந்து சென்றான். அதே மாதிரி இரவொன்றில்தான் நானும் இக்கடற்கரையில் நடக்கிறேன். அதுவும் ஒரு பெண்ணைப் பற்றிய நினைப்புகளால் நிலைகுலைந்து நடக்கிறேன். படைத்தலைவனுக்குக் காதல் துக்கம், எனக்கு அரசியல் துக்கம். அவன் துக்கத்துக்குக் காரணமானவள் பூவழகி, என் துக்கத்துக்குக் காரணமாயிருப்பவள் நாட்டுக்கே துன்பமிழைக்க வந்த யவன ராணி. தனி மனிதன் காதலும் நாட்டுப் பூசலும் சகலமும் பெண்களால். இதனால்தான் அறிவாளிகள், ‘பெண்ணத் துறந்துவிடு. துறவறத்தில் தப்பிப் பிழை’ என்று கூறியிருக்கிறார்கள் போலும்’ என்று எண்ணமிட்ட துறவியார், ‘துறவறத்தால் பெண் தொல்லை போகாது போலிருக்கிறதே. நான் துறவறம் கொண்டு பயனென்ன? நாட்டுக்காக, என் குருநாதர் பிரும்மானந்தர் கட்டளைக்காக இதோ இந்த யவனப் பெண்ணை நோக்கி ஓடுகிறேன். இல்லறத்தைவிடப் பெரும் துன்பம் தரும் துறவறத்தை எதற்காக மேற்கொண்டேன்?’ என்று தனக்குள் மெள்ள முணுமுணுத்துக் கொண்டார். அத்துடன், ‘என்னைச் சங்கமத் துறைக்கு வரச்சொன்ன ராணி எப்படி டைபீரியஸின் பெரும் கட்டுக் காவல்களையும் கண்காணிப்பையும் உதறிவிட்டுக் கடற்கரைக் குடிசைக்கு வர முடியும்?’ என்றும் யோசித்த அடிகள், முதலில் அது அசாத்தியம் என்று நினைத்தாலும், இந்திர விழா விடுதியில் அன்றைய இரவின் ஆரம்பத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து, ‘ராணி எதையும் செய்யும் சாமர்த்தியமுள்ளவள்’ என்ற தீர்மானத்திற்கு வந்தார். தாம் ராணியின் தலையளவை எடுத்த சமயத்தில் அவள் நடந்து கொண்ட மாதிரியையும், பிறகு திடீரென அவள் நடவடிக்கைகள் விநாடிக்கு ஒரு விதமாகப் பல திருப்பங்களை அடைந்ததையும் எண்ணிப் பார்த்த சமண அடிகள், பெண்களே பெரும் மாயை என்று சநாதன அறநூல்கள் சொல்வதில் தவறேதுமில்லையென்று முடிவுக்கு வந்தார்.

இப்படி ராணியைப் பற்றிய சில சிந்தனைகளுடன் நடந்ததால், உலோகக் கவசங்கள் மார்பில் உராய, வாட்கள் இடையிலே தாக்கக் காவற்குரல் கொடுத்துக் கொண்டு புகாரின் பெரும் வாயில்கள் ஓரமாகச் சென்று கொண்டிருந்த யவன வீரர்களின் சத்தத்தையோ, இரண்டாவது ஜாமம் ஆரம்பித்தும் களியாட்டங்களை நிறுத்தாத யவன மங்கையர்களின் இனிய சிலம்பொலியையோ, சங்கமத்துறை சுங்கக் காவலர் கூச்சலையோ காதில் வாங்கிக் கொள்ளாமலே கடமையில் கருத்துடன் சென்ற சமண அடிகள், மெள்ள மெள்ள சங்கமத்துறையை அடைந்து தூரத்தே காவிரிப்பூம் பட்டினக் கடற்கரையின் பெருமணல் பரப்பில் கட்டப்பட்டிருந்த பரதவர் குடிசைகளின் திசையில் கண்ணைச் செலுத்தியதும் சற்றே பிரமித்தே போனார். அன்று குடிசைகள் எல்லாவற்றிலும் விளக்குகள் நிரம்ப இருந்ததன்றி வெளியிலும் சுறா முதுகெலும்புகளை நாட்டி உச்சியில் சுற்றப்பட்ட பெரும் பந்தங்களும் எரிந்து கொண்டிருந்தன. புகாரின் வழக்கத்துக்கு மாறான இந்த விந்தைகளைக் கண்டு பிரமித்த சமணத்துறவி, ‘புகாரின் பரதவர் இல்லங்களில் முதல் ஜாமத்துக்குப் பிறகு விளக்குகள் எரியும். எல்லா இல்லங்களிலும் இன்று ஏன் விளக்குகள் எரிகின்றன? ஏனிப்படிப் பந்தங்களை நட்டுக் களியாட்டம் ஆடுகிறார்கள்? குடிசைகளுக்குப் பின்புறத் திடல்களில்தானே இந்தக் களியாட்டங்கள் நடைபெறும்?’ என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு சரியான விடை காணாததால் சில விநாடிகள் குடிசைகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாக் குடிசைகளிலும் விளக்குகளும் பந்தங்களும் எரிந்துகொண்டிருந்ததால் மாறிமாறிக் குடிசைகள் மீது கண்களை ஓட்டித் துழாவிய அடிகள், எந்தக் குடிசையிலும் ராணி குறிப்பிட்டதுபோல் பந்தம் ஆடாதிருக்கவே, ‘ஒருவேளை ராணி வருவது தடைப் பட்டு விட்டதோ?’ என்று சந்தேகித்துக் கொண்டேயிருக்கையில் அந்தக் குடிசைகளுக்கெல்லாம் நடுமத்தியி லிருந்த குடிசையொன்றின் உட்புறத்தில் மெள்ள ஒரு பந்தம் இரு முறை அசைந்தது. பந்தத்தின் அந்த அசைவு இரு முறைகளுடன் நின்றிருந்தால் அடிகள் அதிக அச்ச மடைந்திருக்க மாட்டார். பந்தம் பக்கவாட்டில் இருமுறை அசைந்தது! பிறகு பின்வாங்கி முன்னுக்கு இருமுறை வந்தது! கடைசியாக மும்முறை ஆலத்தி எடுப்பதுபோல் சுழன்றது!

முதல் இரு முறை பந்தம் பக்கவாட்டில் அசைந்ததும் குடிசையை நோக்கிச் செல்ல முயன்ற சமண அடிகள், பந்தத்தின் மற்ற அசைவுகளைக் கவனித்ததும் பெரும் திகில் உள்ளத்தே ஏற்பட்டதால் பிரமித்து முன்வைத்த காலைச் சட்டென்று பின்னுக்கு இழுத்துக்கொண்டு, ‘சே சே! ஒரு காலும் இருக்காது. இது எப்படிச் சாத்தியம்?’ என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார். அவர் கண்முன்னே பூம்பூகாரின் கடற்கரை மறைந்தது. யவன வீரர்கள் மறைந்தார்கள். பரதவர் குடிசைகளும் மறைந்தன. எழுந்ததோ அந்தப் பயங்கரப் பழைய தோற்றம்! ஆம்பிராவதிக் கரையிலே எரிந்த அந்த மாளிகை! மாளிகை எரிவதற்கு முன்பாக ஏற்பட்ட விளக்கு அசைவின் அடையாளம்! இவையே கண் முன்பு எழுந்தன சமண அடிகளுக்கு. இருங்கோவேளுக்காகச் சோழ மண்டலத்தின் இளவலைப் பெருஞ்சேரலாதன் சிறையிட்ட அந்த மாளிகையிலே, இளஞ்செழியன் கண்ணெதிரிலே அசைந்த அதே மாதிரி ஒளி பூம்புகாரின் கடற்கரையில் பரதவர் குடிசையிலும் அசைவதற்குக் காரணம் என்னவென்பதை அறியாத அடிகள், அந்தக் குடிசைக்குத் தாம் செல்வது சரிதானா என்பதைப் பற்றிச் சிந்தித்தார். தமக்கும் பிரும்மானந்தருக்கும் இரும்பிடர்த்தலையாருக்கும் மட்டுமே தெரிந்த விளக்கசைவு அடையாளங்களைக் கருவூர் சமணமடத்தில் தம்முடன் இளஞ்செழியன் மட்டுமின்றி ராணியும் பார்த்திருந்தாளாகையால், ஒருவேளை ராணியே பந்தத்தை அப்படி அசைக்கிறாளோ என்ற சிந்தனையால் துணிவு கொண்டாலும், பந்தம் இருமுறை அசையும் என்று மட்டுமே இரவு ஆரம்பத்தில் ராணி தம்மிடம் கூறியதை எண்ணி ஓரளவு அச்சமே கொண்ட அடிகள், குடிசைக்குச் செல்வதா அல்லவா என்பதைத் தீர்மானிக்க முடியாமல் சில விநாடிகள் சங்கமத்துறையிலேயே உலாவினார். பிறகு மெள்ள தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குடிசையை நோக்கி நடந்து சென்றார்.

பந்தம் அசைந்த குடிசையை அடுத்திருந்த குடிசை களிலும் அவற்றின் முன்புறங்களிலும் பரதவ மங்கையரின் களியாட்டங்கள் நடந்துகொண்டிருந்ததாலும் ஏராளமான மங்கையர் அவற்றில் பங்கு கொண்டிருந்ததாலும் பல பெண்களைக் கையால் விலக்கிக்கொண்டே நடக்க வேண்டி யிருந்தது அடிகளுக்கு. அந்த இரவில் அடிகள் தாடியும் தலை முடியும் நிறைந்த சங்கமப் பொற்கொல்லராக வராமல் கருவூர் சமண மடத்துத் தலைவராகவே வந்ததால், பரதவ மங்கையர் சிலர் அவர் தங்கள் கூட்டத்தில் நுழைந்து செல்வதைப் பற்றிக் கேலி செய்து நகைத்தார்கள். வெகு துரிதமாகக் கும்மியடித்துச் சுழன்று மற்றும் சில பரதவமங்கையர் தாளத்தையும் குதிக்கும் ஜதிகளையுமே பிரதானமாக மதித்து உலகத்தின் நினைப்பையே மறந்து ஆடியதால், அந்தப் பக்கத்தில் நுழைந்த அடிகள் மீது விழவும், செய்தார்கள். சுகந்தமான புஷ்பங்களைச் சூடியதாலும் சந்தனக் குழம்பை மார்புகளிலும் கைகளிலும் திறந்த தோள்களிலும் பூசியிருந்ததாலும் அந்தக் குடிசைகள் கூட்டத்தின் சூழ்நிலையையே பரிமளமாக அடித்துக் கொண்டிருந்த அந்த மங்கையரின் இன்ப தேகங்கள் சில அடிகளின் மீது பலமாக உராயவும் செய்தன. எதில் திளைத்தாலும் காமத்தை மட்டும் வெற்றி கொண்ட அடிகள் அந்த இன்ப மோதல்களைப் பெரும் வெறுப்புடன் சகித்துக் கொண்டு காரியத்தில் கண்ணுள்ளவராய் அந்தக் கூட்டத்துக்கிடையே சில இடங்களில் நுழைந்தும் சில இடங்களில் கூட்டத்தைவிட்டு விலகியும் அந்த நடுக் குடிசைக்கருகில் வந்து உள்ளேயிருப்பது யாரென்று மெள்ள எட்டிப் பார்த்தார்.

அவர் நினைத்தது சரியாயிற்று. குடிசைக்குள் அவர் கண்ணெதிரே ராணி காட்சியளிக்கவில்லை. முதன் முதலில் ஆடிய பந்தமும் அணைக்கப்பட்டு ஒரு மூலையில் நாட்டப் பட்டுப் புகைந்து கொண்டிருந்தது. அந்தப் புகைத் திரையில் மூலையில் எரிந்துகொண்டிருந்த சிறு விளக்கு ஒன்றும் மங்கலாகவே இருந்ததாலும், வெளியே விளக்குகளும் பந்தங்களும் பெரு வெளிச்சத்தை வீசிக் கொண்டிருந்ததாலும் குடிசையில் பிரகாசம் மிகக் குறைவாக இருந்தது. அந்தக் குறைந்த விளக்கொளியிலும் அடிகளின் ஆராய்ச்சிக் கண்கள் குடிசையை ஒருமுறை துழாவிய பின்பும் குடிசைக் கோடியில் ஓலையைச் சார்ந்த வண்ணம் தலைமுதல் கால்வரை போர்த்திக் கொண்டிருந்த ஓர் உருவம் நிற்பதைக் கண்டன. அந்த உருவம் நின்ற தோரணையிலும் அதை முழுவதும் மறைத்திருந்த போர்வையின் அளவிலும் பார்வையைச் செலுத்திய அடிகள், அது நிச்சயமாக ராணி அல்ல என்ற முடிவுக்கு வந்தார். ராணி வராவிட்டால் ராணியின் சார்பாக வேறு யாராவது வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மீண்டும் அந்த உருவத்தை ஆராயவே அதன் காலடியில் இருந்த ஆடையின் அடிப்பாகத்தின் அடையாளமொன்றைக் கண்டு “இருக்காது! இருக்காது! இருக்கவே முடியாது!” என்று கூவிய அடிகள், சரேலென உள்ளே நுழைந்து குடிசைக்கதவைச் சட்டென்று சாத்தினார். கதவு சாத்தப்பட்டதும் திரும்பிய அந்த உருவத்தின் கண்கள் அடிகளை நன்றாக ஏறெடுத்துப் பார்த்தன. அடிகள் திக்பிரமை பிடித்தவராய்ச் சிறிது நேரம் சிலையென நின்றார். இரண்டு விநாடிகள் குடிசையிலிருந்த அந்த உருவத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அடிகள், “தங்களை நான் எதிர் பார்க்கவில்லை…” என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.

“தங்களையும் இங்கு நான் எதிர்பார்க்கவில்லை அடிகளே” என்று கூறிய அந்த உருவத்தின் கம்பீர வதனத்தில் சிறிது புன்முறுவல் சாயை படர்ந்தது. “ஆனால் பின்புறமிருந்தே என்னைப் புரிந்துகொள்ளக் கூடிய சக்தியை உனக்கு ஆண்டவன் அளித்திருக்கிறான்’ என்று அந்த உருவம் அடிகளைப் பாராட்டவும் செய்தது.

அடிகளும் மெள்ள சுய உணர்வை அடைந்து தம்மைத் தைரியப்படுத்திக்கொண்டு, “அந்தச் சக்தியை அளித்தது ஆண்டவனல்ல” என்று சுட்டிக் காட்டினார்.

“வேறு யார் அளித்தது அடிகளே?”

“இருங்கோவேள் அளித்தான்.”

“இருங்கோவேளா! அந்தப் பாதகனா?”

“ஆமாம், அவன் கருவூரில் தாங்கள் சிறையிருந்த மாளிகைக்குத் தீ வைக்காவிட்டால் தங்கள் காலும் கருகியிருக்காது. நானும் பின்னாலிருந்து அந்தக் காலைக் கண்டு அடையாளம் கண்டுபிடித்திருக்க முடியாது. எல்லாம் இருங்கோவேளின் தயவு” என்று நகைச்சுவையைக் காட்டிய அடிகள், “தவிர திருமாவளவர்…” என்று மேலும் ஏதோ சொல்லப் போனதைத் தடுத்த சோழர் குல இளவல், “திருமாவளவனல்ல அடிகளே, என் சகோதரி கொடுத்த பெயரை மறந்துவிட்டீரா?” என்று வினவினான்.

“இருப்பினும் அது…”

“காரணப் பெயர்தான். காரணப் பெயராயிருந்தாலும் கருகிய என் காலிலே கருவிழிகளிலிருந்து அமுத மழையைப் பொழிந்த, தமிழகத்தின் கற்புப் பாவையளித்த கண்ணியப் பெயரல்லவா அது? அது சரித்திரத்தில் நிலைக்கும் என்று நான் பூவழகிக்கு உறுதியளித்த சிறப்புப் பெயரல்லவா அது? அடிகளே! அரசன் அளிக்கும் உறுதிமொழியை அல்பமாக நினைப்பதும் குற்றம். ஆகவே இனி திருமாவளவன் சரித்திரத்தில் மறைந்துவிட்டான். உயிருடனிருப்பவன் கரிகாலன்தான். சந்தேகம் வேண்டாம். இதோ பாருங்கள்” என்று சொன்ன சோழர் பெருமகன், அடிகளுக்கு எதிரில் கருகிய தன் இடது காலைச் சற்று எடுத்து வைத்தான்.

அடிகள் எல்லை மீறிய ஆச்சரியத்தால் பிரமித்ததன்றி, ‘மனித உணர்ச்சிகளுக்கு, இதய தாபங்களுக்கு, இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் இவனல்லவா சோழர் அரியணையில் அமரத் தகுந்தவன்’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டார். கருகிய அந்த இடது காலில் பல நாட்களுக்கு முன்பு கருவூரின் பாழடைந்த மாளிகையின் அறையில் பூவழகி கட்டிவிட்ட புலித்தோல் அப்பொழுதும் சுற்றியிருந்தது மட்டுமல்லாமல், அவள் அன்று கட்டிவிட்ட பட்டுக் கயிறுகளும் அந்தப் புலித்தோலைச் சுற்றியிருந்தன. கரிகாலன் இரு கால்களிலும் புலித்தோல் பாதரட்சைகளை அணிந்திருந்ததால் இடது காலில் மட்டும் முழங்காலிலிருந்து கணுக்கால் வரை இறங்கிய அந்தப் பழைய புலித்தோல் பட்டை மன்னவனின் ஒரு காலைப் புலிக் காலாகவே அடித்திருந்ததைக் கண்ட அடிகள், அவன் முதுகுப் புறத்தை வாயிற்படிக்குக் காட்டி நின்றிருந்த சமயத்தில் முழங்காற் பட்டைக்கும் அடிக்கால் பாதரட்சைக்குமிருந்த இடை வெளியைக் கவனித்திருக்காவிட்டால் நின்றிருந்தவன் கரிகாலன் என்பதைத் தாம் அறிந்துகொண்டிருக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டார். அவன் கரிகாலன் தான் என்பதை அறிந்ததும் குடிசைக் கதவைச் சாத்திவிட்ட அடிகள் தமது ஆச்சரியத்தையும் ஓரளவு தணித்துக் கொண்டாலும் கரிகாலன் அங்கு எப்படி வந்தான் என்பதைப் புரிந்து கொள்ளச் சக்தியில்லாதவராய்த் தமது கண்களால் அவனை உச்சிமுதல் முழங்கால் வரையில் ஒருமுறை துழாவினார். கரிகாலன் காலில் மட்டும் அந்தப் பழைய புலித்தோற் பட்டையைக் கட்டியிருந்தானேயொழிய, இடுப்பில் பரதவர் களைப்போல் சாதாரண உடையையே அணிந்திருந்ததையும், அவன் கழுத்திலிருந்த வெண்சங்கு மாலையும் கிளிஞ்சல் கொத்தும் அவனை அசல் பரதவனாகவே அடித்திருந்ததையும் பார்த்த அடிகள், ஏதோ முன்கூட்டிச் செய்த திட்டத்துடனேயே கரிகாலன் அங்கு வந்திருக்கிறானென்பதை உணர்ந்துகொண்டாலும், தானும் ராணியும் செய்து கொண்ட ஏற்பாடு மன்னவனுக்கு எப்படித் தெரியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் கேட்டார்: “நான் இங்கு வரப்போவது தங்களுக்கு எப்படித் தெரியும்?”

கரிகாலனின் கூரிய விழிகளில் ஆச்சரியம் சற்றே படர்ந்தது. “நீங்கள் வருவது எனக்குத் தெரியுமென்று யார் சொன்னது?” என்று கேட்டான் இளஞ்சேட் சென்னியின் மகன்.
இந்தப் பதிலால் அடிகளின் வியப்பும் எல்லை மீறவே, “என்ன! நான் வருவது உங்களுக்குத் தெரியாதா!” என்றார்.

“தெரியாது என்பதைத்தான் முன்பே குறிப்பிட்டேனே” என்றான் கரிகாலன்.

“அப்படியானால், இந்தக் குடிசையிலிருந்து பந்தத்தை அசைத்தது நீங்களில்லையா?” என்று கேட்டு பிரமிப்பைக் குறிக்கும் முறையில் கண்களை அகல விரித்தார் அடிகள்.

“நான்தான் பந்தத்தை அசைத்தேன். ஆம்பிரா நதிக்கரையிலிருக்கும் மாளிகையில் அந்த விளக்கை நான் அசைத்ததற்கும் இதற்கும் வித்தியாசம் இருந்ததா?”

“இல்லை. வித்தியாசமில்லை. வித்தியாசமில்லாததால் தான் முதலில் வியப்படைந்தேன். வியப்பைத் தொடர்ந்து அச்சமும் அடைந்தேன்.”

கனல்கணையின் ஜொலிப்பைவிடத் தீட்சண்யமான சோழர்குல இளவலின் சீரிய விழிகள் அடிகளை நன்றாக ஏறெடுத்துப் பார்த்ததன்றி, ராஜகளை சொட்டும் அவன் அழகிய வதனத்தில் கவலை ரேகையும் சற்றே படர்ந்தது. சிறிது யோசித்துவிட்டுக் கேட்டான் கரிகாலன், “அடிகளே! நீர் இப்பொழுது கருவூரில் இல்லையா?” என்று.

“இல்லை” என்றார் அடிகள்.

“இப்பொழுது இந்த ஊரில்தான் இருக்கிறீரா?”

“ஆம்.”

“எந்த மடத்தில் இருக்கிறீர்கள்?”

“எந்த மடத்திலும் இல்லை.”

“ஏதாவது கோட்டத்தில் வசிக்கிறீரா?”

அடிகள் மெல்ல விஷயமாகச் சிரித்தார். பிறகு நமது விழிகளில் பழையபடி விஷமம் பூரணமாகச் சொட்ட கரிகாலனை நோக்கினார்.

“எதற்காகச் சிரிக்கிறீர்கள் அடிகளே?” என்று கேட்டான் கரிகாலன்.

“மடத்தையும் கோட்டத்தையும் பற்றிக் கேட்டீர்களே என்று சிரித்தேன்” என்று அடிகள் பதில் கூறினார்.

“அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று ஏதும் புரியாமல் வினவினான் அரசில்லா மன்னவன்.

“மடத்தையும், கோட்டத்தையும் ஏன், துறவறத்தையும் தொலைத்துத் தலைமுழுகி மாதம் ஒன்றாகிறது” என்று விளக்கிய அடிகள் மீண்டும் விஷமப் புன்முறுவல் கோட்டினார்.

“துறவறத்தையே துறந்துவிட்டீர்களா?”

“ஆம்.”

“ஏன்?”

“அரசியல் பந்தம் பற்றிக் கொண்டு விட்டது.”

“இப்பொழுது நீர்…”

“புகாரின் பொற்கொல்லன் சங்கமன்.”

“பொற்கொல்லரா! ஆபரணங்கள் செய்யத் தெரியுமா?”

“தெரியும். ஆனால், தகாத இடங்களுக்குச் செய்ய வேண்டியிருக்கிறது?”

“தகாத இடங்களா?” அடிகள் பேச்சினால் வியப்பு அதிகமாக, அதிகமாக, குழப்பமும் மேலோங்கக் கேட்டான் கரிகாலன்.

“ஆம் மன்னவா! நான் பரம்பரைப் பொற்கொல்லன். சோழர்கள் தரிக்கும் மணிமகுடத்தைத் தயாரித்தவர்களே என் மூதாதைகள் தான். அவர்கள் கைக்கும் இந்தக் கைக்கும் வித்தியாசம் இருக்கிறது…” என்று தமது இரண்டு கைகளையும் பார்த்துக் கொண்டே அடிகள் மேலும் சொன்னார்: “மன்னவா! என் மூதாதைகளின் கைகள் அறவழியில் அலுவல் புரிந்தன. இந்தக் கைகள் மறவழியில் ஈடுபட்டிருக்கின்றன. தர்மமாக, தலைமுறை தலைமுறையாக வந்த சோழ குலத்தாருக்கு மணிமுடிகள் செய்யவும், பழுது பார்க்கவும் மூதாதைகள் இருந்தார்கள். நான் பகைவருக்குச் சிருஷ்டிக்கிறேன் மணிமகுடம்.”

அவர் சொல்வதன் பொருளை அப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாத கரிகாலன், “பகைவருக்கு மணிமுடியா? யாருக்கு? இருங்கோவேளுக்கா? அவனுக்கா மணிமுடி செய்கிறீர்கள் பொற்கொல்லரே?” என்று வினவினான் குரலில் குரோதம் ஊடுருவ.

“இன்னும் அத்தனை அதர்மத்தை இக்கரங்கள் செய்ய வில்லை பிரபு” என்றார் அடிகள்.

“வேறு யாருக்கு?”

“யவன ராணிக்கு.”

“யவன ராணிக்கா?”

“ஆம்.”

“எந்த இடத்தை அரசாள?”

“புகாரை ஆள.”

கரிகாலன் சற்றே குடிசையில் அப்படியும் இப்படியும் உலாவிக் கொண்டு சிறிது நேரம் மௌனம் சாதித்தான். புகாரை யவனர்களுக்கு இருங்கோவேள் சாஸனம் செய்து ஓலையனுப்பியது, டைபீரியஸ் அதை யவனத் தளமாக்கி ராணிக்கு அதில் முடிசூட்ட ‘ஏற்பாடு செய்வது முதலிய விருத்தாந்தங்களைக் கரிகாலன் கேட்டிருந்தாலும், அவை யெல்லாம் தமிழ்நாட்டில் நிறைவேற முடியாத ஒரு பகற் கனவு என்றே நிச்சயித்திருந்தானாகையால் அடிகள் உரைத்த விஷயத்தால் அது உண்மையாகவும் கூடும் என்பதை உணர்ந்து தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அந்தச் சிந்தனையின் விளைவாக நீண்டநேரம் மௌனமாகவே இருந்துவிட்டுக் கடைசியில் கேட்டான்: “இந்த ராஜ்யம் நிறுவ இன்னும் யார் உடந்தை?” என்று.

அடிகளின் பதில் கரிகாலனைத் தூக்கிவாரிப் போடவே செய்தது. “பிரும்மானந்தர்” என்று அடிகள் சொன்ன பதிலால் அதிர்ச்சியடைந்த கரிகாலன், தன் காதுகளை நம்பாதவனாய், “என்ன! பிரும்மானந்தரா?” என்று மறுமுறையும் வினவினான்.

“ஆம்.” திட்டமாகக் கிடைத்தது அடிகளின் பதில்.

“ராணிக்கு முடிசூட்டுவதில் பிரும்மானந்தரா முனைந் திருக்கிறார்?” மற்றுமொரு முறையும் வினவினான் கரிகாலன் பிரமிப்பின் உச்சநிலைக்குச் சென்று.

“ஆம்.”

“காரணம் தெரியுமா?”

“தெரியும்.”

“என்ன காரணம்?”
இதற்கு அடிகள் பதில் சொல்ல வாயெடுத்தார். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமற் செய்துவிட்டது மற்றொரு குரல், “நான் சொல்லுகிறேன்” என்று குழறிக் குழறி ஒலித்த ஒரு பெண்குரலைக் கேட்டு வாயிற்படியை நோக்கித் திரும்பிய அடிகளையும் கரிகாலனையும் நோக்கி நின்று கொண்டிருந்த சமயத்தில் மெள்ள குடிசைக் கதவைத் திறந்து கொண்டு அந்தப் பரதவப் பெண் உள்ளே நுழைந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டே கரிகாலனும் அடிகளும், தங்கள் பேச்சை எத்தனை தூரம் அவள் கேட்டிருப்பாள் என்பதை அறியாததால் ஒருவரையொருவர் சந்தேகப் பார்வையுடன் பார்த்துக் கொண்டார்கள். எந்த வினாடியிலும் உணர்ச்சியைச் சமாளித்து அடக்கிக் கொள்ளக்கூடிய கரிகாலன் சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “பெண்ணே ! நீ யார்?” என்று அதிகாரம் பூரணமாகத் தொனித்த குரலில் கேட்டான். பதில் சொல்ல அவள் உதடுகளை இருமுறை அசைத்தாள். வாயிலிருந்து சொல் ஏதும் வரவில்லை. மிகவும் துன்பப்படுபவள் போல் முகத்தை ஒருமுறை சுளித்தாள். பிறகு இரண்டடி முன்னுக்கு எடுத்து வைத்துத் தரையில் குப்புற விழப்போனாள். கரிகாலனுக்குச் சற்று முன்னாலிருந்த அடிகள் தாவி அவளைப் பிடித்துக் கொண்டார். பொற்கொல்லரான துறவியின் கைகளில் அந்தப் பரதவ குலப் பூம்பாவை குப்புற விழுந்ததால் அவள் முதுகுப்புறம் அடிகளுக்கு மட்டுமன்றிக் கரிகாலனுக்கும் புலனாகவே இருவரும் ஏககாலத்தில் அதிர்ச்சியடைந்தார்கள். அவள் தோள்பட்டைக்குக் கீழ் முதுகின் மேற்புறச் சதைப் பிடிப்பில் கூரிய கத்தியொன்று ஆழமாகப் பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தமும் குபுகுபுவென்று வெளிப்பட்டு அடிகளின் கைகளை நனைத்ததன்றித் தரையிலும் சில துளிகள் பொட்டுப் பொட்டாக விழுந்தன. அந்த ரத்த வெள்ளம் கூட அத்தனை பயங்கரத்தைத் தரவில்லை. பாய்ந்திருந்த அந்தக் கத்தியின் பிடியில் பொறித்திருந்த சில எழுத்துக்கள், அந்த எழுத்துக்களை அமைத்திருந்த சிவப்புக் கற்கள் ரத்தத் துளிகளைவிடப் பயங்கரமாகவும் சிவப்பாகவும் ஜொலித்துக் கொண்டிருந்ததன்றி, அதே சமயத்தில் அதே குடிசையை நோக்கி விரைந்து கொண்டிருந்த பேராபத்திற்கும் இணையிலாச் சின்னங்களாகக் காட்சியளித்தன.

Previous articleYavana Rani Part 1 Ch48 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch50 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here