Home Sandilyan Yavana Rani Part 1 Ch50 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch50 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

112
0
Yavana Rani Part 1 Ch50 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch50 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch50 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 50 கடற்கரைக் குடிசையில்

Yavana Rani Part 1 Ch50 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

கரிகாற்சோழனும் சங்கமப் பொற்கொல்லரான சமண அடிகளும் சம்பாஷணையில் இறங்கிய சில நிமிடங்களுக் குள்ளாகவே ஓசைப்படாமல் அந்த ஓலைக் குடிலில் தட்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, ஏதோ செய்தி சொல்ல முயன்று முடியாமல் அடிகளின் கையில் குப்புற விழுந்த அந்தப் பரதவப் பெண் கையையோ காலையோ சிறிதும் அசைக்காமல் ஓவியப் பாவையெனச் செயலற்றுக் கிடந்தாள். தரையில் பந்தம் தீய்க்கப்பட்டு அணைக்கப் பட்டதன் விளைவாக அப்பொழுதும் குடிசையின் உட்புறத்தைப் புகை சூழ்ந்திருந்ததாலும், கோடியிலிருந்த விளக்கும் மிக மங்கலாக இருந்ததாலும், அப்பெண் யாராயிருக்க முடியும் என்பதை அறியும் வாய்ப்பில்லாவிட்டாலும் அவளை ஏந்தியிருந்த அடிகளுக்கும் அவள் விழ இருந்தபோது அடிகளுடனே அவளை நோக்கி நகர்ந்தாலும் அடிகள் பிடித்துக் கொண்டதால் வாளாயிருந்துவிட்ட கரிகாலனுக்கும் உள்ளே வந்த பெண் மிகுந்த அழகி என்பது மட்டும் திட்டமாகப் புலனாகியது. அதிகச் சிவப்பில்லா விட்டாலும் அந்தப் பெண்ணின் மேனியில் திறந்த இடங்கள் மாநிறமாக இருந்ததையும், அவள் தலையில் துணியால் போடப்பட்டிருந்த கட்டு அவள் குழலை மறைத்திருந்தாலும், குழலின் பெருமுடியிலிருந்த கூந்தல் மிக அடர்த்தியாக இருக்க வேண்டுமென்பதையும் ஊகித்துக் கொண்ட அடிகள், ‘இவள் யார்? எப்படி வந்தாள்? ஏதோ சொல்ல முயன்றாளே, அது என்ன?’ என்பதைச் சிந்தித்துப் பார்த்து விடை காணாததால் கரிகாற் சோழனைச் சற்றே திரும்பிப் பார்த்து, “இந்தப் பெண்ணைச் சற்றுப் பிடிக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“ஏன்? நீங்கள் தான் பிடித்துக் கொண்டிருங்களேன். தலையை நிமிர்த்திப் பெண்யாரென்று பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே பெண்ணின் முகத்தை நிமிர்த்த முயன்ற கரிகாலனைத் தடுத்த அடிகள், “மன்னவா! பெண்யாரென் பதைப் பார்க்கு முன்பாக இதோ ஆழப் பதிந்திருக்கும் கத்தியை எடுத்துக் காயத்தின் ஆழத்தில் துணியைப் புதைத்துக் கட்டி, குபுகுபுவென்று குமிழியிடும் குருதி ஓட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று கூறிவிட்டு மெள்ள அந்தப் பெண்ணைக் கரிகாலன் கைக்கு மாற்றியவர், சற்றே தம் கைகளைக் கவனித்த வுடன் பெண்ணையோ, கத்தியையோ குருதியையோ சிறிதும் பார்க்காமலும் பிரமை பிடித்தவர் போல் மிரள மிரள விழித்துக் கொண்டும் ஒரு விநாடி நின்றார்.

கத்தி பாய்ந்து ரத்தமிழந்து மயக்கமுற்றிருந்த அந்தப் பெண்ணுக்குச் சிசுருஷை செய்யத் துடித்த அடிகள் பெண்ணைத் தன்னிடம் கொடுத்ததும் ஏதும் செய்யாமல் சொந்தக் கைகளை உற்றுப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்று விட்டதைக் கண்ட கரிகாலன் மிதமிஞ்சிய வியப்பெய்தி, “என்ன அடிகளே! ஏன் அப்படி நின்றுவிட்டீர்?” என்று வினவினான்.

“கொஞ்சம் இருங்கள். இந்தப் பெண்ணின் கை கால் முதுகு இவற்றைக் கொஞ்சம் தடவிப் பார்க்கிறேன்” என்று கூறிய அடிகள், விடுவிடு என்று குடிசை மூலைக்குச் சென்று அங்கிருந்த விளக்கை எடுத்து வந்து, கரிகாலன் கைகளிலும் தாம் கொடுத்தபடி குப்புறவே கிடந்த அந்தப் பரதவ எழிலரசியின் பாதி திறந்த முதுகையும், கையையும், காலையும் பலமாகத் தன் கையால் அழுத்தித் தடவினார்.
அவர் செய்கைக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத கரிகாலன், “அடிகளே! நீர் பெண்ணை இப்படித் தொடுவது சரியல்ல” என்று சற்றுக் கடுமையாகக் கூறினான்.

கரிகாலனுடைய அபிப்பிராயத்தையோ கோபத்தையோ சிறிதும் லட்சியம் செய்யாத அடிகள், “நான் இந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்காவிட்டால் வேறு யார் பார்த்துவிட முடியும்? வேறு யாருக்கு நிலவரம் புரியும்?” என்று சொல்லிக்கொண்டு குப்புறக் கிடந்த அந்தப் பெண்ணின் கன்னத்தையும் சற்றுத் தடவினார்.

அடிகளுடைய விசித்திரப் போக்கையும், தான் சொன்னதைக்கூட மதியாமல் அவர் பித்தர்போல் பெண்ணின் கை கால்களையும் கன்னத்தையும் வழித்தெடுப்பதையும் கண்டதாலும் அவர் சொன்ன விந்தை மிக்க பதில்களாலும் கோபம் உச்ச நிலைக்கு ஏறிய கரிகாலனின் அடுத்த சொற்கள் மிக உஷ்ணமாக வெளிவந்தன. “அடிகளே! நீர் செய்யும் பெண் ஆராய்ச்சி இத்துடன் நிற்க வேண்டும். இல்லையேல் நீர் ஒரு துறவியென்பதை மறந்துவிடுவேன்.” என்று கூறிய கரிகாலன் வாசகத்தை முடிக்காமல் விட்டாலும் அதில் புதைந்து கிடந்த மிரட்டலை அறிந்த அடிகள் சிறிது வாய்விட்டுச் சிரித்ததன்றி, “துறவியென்பதை நீங்கள் மறக்க வேண்டியதில்லை மன்னவா! நானே மறந்து விட்டேன். நானே சில நாட்களாகச் செய்யும் தொழில் துறவியின் தொழிலா?” என்று விஷமம் பிரதிபலிக்கும் முறையில் கூறினார்.

கரிகாலன் தன் கூரிய கண்களை அவர்மீது நாட்டி, “விந்தைப் பேச்சுக்கு இது சமயமில்லை அடிகளே” என்றான் சினத்தின் சாயை வதனம் பூராவும் மெள்ளப் படர்ந்தேற.
“உண்மைதான் மன்னவா! விந்தை நிகழ்ச்சிகள் நடந்தேறும்போது விந்தைப் பேச்சு எதற்கு?” என்றார் அடிகள் மீண்டும் தமது கையை விளக்கில் பரிசோதித்துக் கொண்டு..

“விந்தை நிகழ்ச்சிகளா!” என்று கரிகாலன் வினவினான் விவரம் ஏதும் புரியாமல்!

“ஆம் மன்னவா! உங்களைச் சந்திக்க இங்கு நான் வரவில்லை .”

“ஆம்.”

“ஆனால் சந்தித்தேன்.”

“ஆமாம்.”

“வேறு ஒருவரைச் சந்திக்க வந்தேன்.”

“ஓகோ !”

“அவரைச் சந்திக்க முடியவில்லையே என்று ஏங்கினேன்.”

“ஏங்கினேன் என்றால்? இப்பொழுது ஏக்கம் போய் விட்டதா?”

“போய்விட்டது.”

“ஏன் போய்விட்டது?”
“சந்திக்க வந்தவரைச் சந்தித்துவிட்டேன்.”

அடிகள் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் அவர் வதனத்தைத் துழாவிய கரிகாலனின் கண்களின் முன்பு தனது உள்ளங்கைகளைக் காட்டினார் சமண அடிகள். அதுவரை விவரம் புரியாததால் சிந்தனை தடுமாறக் குழம்பியிருந்த கரிகாலன் கண்களில் விஷயம் விளங்கிவிட்டதற்கு அடையாளமாகத் திடீரென ஒளியொன்று பளிச்சிட்டது. அவன் கண்கள் அடிகளின் கைகளையும் ஆராய்ந்து அடிகளின் கண்களையும் சந்தித்தன. பிறகு பெண்ணின் உடலின்மீது அவன் கூரிய விழிகள் சில விநாடிகள் பதிந்தன.

“இந்தப் பெண் உடலின் நிறம் இதுவல்ல அடிகளே!” என்று தான் புரிந்து கொண்டதை விளக்கினான் கரிகாலன்.

“ஆம் மன்னவா? நிறத்தை மறைக்கச் சாயம் பூசியிருக்கிறாள்” என்றார் அடிகள்.

“என்ன சாயம்?”

“சாயம் என்பதைவிடச் சாறு என்று சொல்வது பொருந்தும். இவள் முகம், கைகளின் முன்பகுதி இவற்றில் செம்பருத்திச் சாறு பூசியிருக்கிறாள். ஆகையால்தான் இவள் மேனி லேசாகக் கறுப்பு ஓடிய தாமிர வர்ணத்தைப் பெற்றிருக்கிறது. இவள் உடம்பு என் கைகளில் குப்புற விழுந்ததுமே ஏதோ பசை ஒட்டுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது எனக்கு. சரி, இவள் செம்பருத்திச் சாறு பூசியிருக் கிறாள் என்பதை உடனே உணர்ந்து கொண்டேன். இந்திர விழாக் காலங்களில் புகாரில் வேஷம் போட்டு விளையாடும் நமது பெண்களும் இதைத்தானே பூசிக்கொள்கிறார்கள்.”

“ஆம். இவள் எதற்காக இப்படி சாறு பூசிக் கொண்டாள்?”

“என்னைத் தேடி வருவதற்காக.”

“உங்களைத் தேடியா!”

“ஆம், இருவரும் இன்றிரவு இங்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.”

துறவியின் இந்தப் பதிலைக் கேட்டதும் கரிகாலன் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறுவலொன்று லேசாகப் படர்ந்தது. “முன்பு நீங்கள் சொன்னது உண்மைதான் அடிகளே!” என்ற கரிகாலன் சொற்களிலும் அந்த இகழ்ச்சி ஓரளவு ஒலிக்கவே செய்தது.

“எது மன்னவா?” என்று வினவினார் அடிகள்.

“துறவறத்தைத் துறந்துவிட்டதாகக் கூறினீர்களே அது” என்று சொல்லி மீண்டும் கரிகாலன் நகைத்ததால் சற்றே சங்கடப்பட்ட அடிகளும் சற்று விஷமத்துடனேயே பதில் சொல்லத் தொடங்கி, “மன்னவா! இதில் நகைப்பதற்கு இட மில்லை. எச்சரிக்கைக்கும் பயத்துக்குந்தான் இடமிருக்கிறது” என்றார்.

“பயத்துக்கு என் இதயத்தில் இடமில்லை அடிகளே! எங்கள் வம்சத்தில் யாரையுமே பயம் என்ற வியாதி பிடித்ததில்லை…” என்று கடுமையாக மேலும் ஏதோ சொல்லத் துவங்கிய கரிகாலனை இடைமறித்த அடிகள், “தங்களுக்குப் பயமில்லாதிருக்கலாம். ஆனால், சோழர் அரியணையில் அமர வேண்டிய உங்கள் நலனைப்பற்றி அக்கறையுள்ள எனக்குப் பயம் ஏற்படத்தான் செய்கிறது. இவள் யார் என்பதைப் புரிந்து கொண்டால் பயத்துக்குக் காரணத்தை அறிந்து கொள்வீர்கள்” என்று கூறி அப் பெண்ணின் தலையை மறைத்திருந்த சீலையைச் சரேலென அவிழ்த்தெறிந்தார். யவனராணியின் பொன்னிறக் குழல்கள் அவிழ்ந்து அலை அலையாகக் கரிகாலன் கைகளிலும் மார்பிலும் விழுந்தன.

மங்கலான அந்தக் குடிசை வெளிச்சத்திலும் தகதக வெனப் பிரகாசித்த அந்தத் தங்கநிறக் குழல்களையும், அவை இருந்த அடர்த்தியையும் குப்புறக் கிடந்த ராணியின் கழுத்துப் பிரதேசத்திலிருந்து அவை எழுந்து அலையோடிய கவர்ச்சியையும் கவனித்த கரிகாற் சோழன், ஒரு கணம் பிரமித்துப் பின்புறத்திலேயே பெரும் வசீகர எழிலுடைய அந்த அழகு பிம்பத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தான். பரதவ ஸ்திரீகளைப் போல் உடையணிந்து, செம்பருத்திச் சாறு பூசி, உடல் வண்ணத்தின் வெண்மையை மாற்றியிருந்த அந்த நேரத்திலும் அவள் பின்னழகு சித்தத்தைக் குலைத்ததையும், குப்புறக் கிடந்ததால் வளைந்தோடிய பின்புற எழிற்கோடுகள் பெரும் பிரமையைத் தந்ததையும் கண்ட அந்த வாலிபனின் கண்கள் உணர்ச்சி வசப்பட்டு சலித்ததோடு உடலும் ஒருமுறை சிலிர்த்ததைக் கண்ட அடிகள் விஷமப் புன்முறுவல் செய்து, “மன்னவா! இந்த ஆராய்ச்சிக்கு இப்பொழுது நேரமில்லை. எப்பொழுது இவள் முதுகில் கத்தி பாய்ந்திருக்கிறதோ, இவளை யாரோ துரத்தி வந்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். இவள் இங்கு வந்து நிமிடங்கள் பல ஓடியும் இன்னும் குடிசைக்கு யாரும் வராததிலிருந்து, எப்படியோ துரத்தி வந்தவர்களை ராணி ஏமாற்றியிருக்கிறாள் என்பது புலனாகிறது…” என்று சொல்லிக் கொண்டே போனவர் சட்டென்று நின்று, “ஆமாம்! ராணியை உங்களுக்கு….?” என்று வார்த்தையை முடிக்காமல் இழுத்தார்.

ராணியின் பேரழகில் லயித்திருந்ததாலும், அவளைத் தாங்கி நின்ற கைகளைத் தடவிய எழிற்பகுதிகள் அளித்த இன்ப வேதனையாலும் சற்றே சுயநிலை மறந்திருந்த கரிகாலனின் உணர்ச்சிகள் அடிகள் குறிப்பிட்ட ஆபத்தினால் சற்றே நிதானத்துக்கு வரவே அவன் சொன்னான்: “ராணியை நன்றாகத் தெரியும் அடிகளே! கருவூர் மடத்தில் தெரியாமல் அவள் அறையில் ஏறிக் குதித்த என்னை இருங்கோவேளிட மிருந்து காப்பாற்றியவளே ராணிதானே, நினைப்பில்லையா உங்களுக்கு?”

“ஆம், ஆம், உண்மை உண்மை” என்று தலையசைத்த அடிகள், கரிகாலனையும் மண்டியிட்டு உட்காரச் சொல்லி, தாமும் உட்கார்ந்து, மெள்ள ராணியின் முதுகிலிருந்த கத்தியைப் பிடுங்கினார். கத்தி ஆழமாகப் பதிந்திருந்ததால் தமது மேல் காஷாயத்தைச் சிறிது கிழித்து அந்தக் காயத்தில் கத்தியாலேயே துணியைச் செலுத்தி ரத்தத்தை மெள்ள நிறுத்தினார். பிறகு சுற்றிலுமுள்ள ரத்தத்தைத் துடைத்து இன்னொரு கிழிசலால் காயத்தை அழுந்தச் சுற்றிலும் கட்டினார். பிறகு, “ராணியை இப்படிக் கொடுத்துவிட்டு, குடிசை மூலையில் தண்ணீர் இருக்கிறதா பாருங்கள்” என்று கரிகாலனைப் பார்த்துக் கூறவே, கரிகாலனும் ராணியை அடிகளின் கைகளில் மாற்றிவிட்டு, குடிசை மூலையிலிருந்த பாத்திரமொன்றிலிருந்து ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்து ராணியின் முகத்தில் தெளித்து உதடுகளிலும் சிறிது நீரைப் புகட்டினான்.

செம்பருத்திச் சாறு ஆங்காங்கு அழிந்துவிட்டதால் முகம் சில இடங்களில் பழுப்பாகவும் தெரிந்த அந்த நேரத்திலும் கவர்ச்சியெல்லாம் ஒன்று திரண்டெழுந்தது போல் காட்சியளித்த யவன ராணி, கரிகாலன் அளித்த நீரைப் பருகியதும் மெள்ள தன் நீலமணிக் கண்களை விழித்து அடிகளையும் சோழர்குல இளவலையும் சற்றே ஏறெடுத்து நோக்கினாள். அவள் செவ்விய இதழ்கள் மெள்ள புன்முறுவலால் விகசித்தன. “அடிகளை இங்கு நான்தான் வரச் சொன்னேன். ஆனால் மன்னவரை நான் எதிர்பார்க்க வில்லை” என்ற சொற்களும் மதுரமாக அவள் இதழ்களி லிருந்து உதிர்ந்தன.

“நானும் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று சற்றுச் சங்கடப்பட்டுக் கொண்டு பதில் சொன்ன கரிகாலனை நோக்கிய யவன ராணி, அவன் சங்கடத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டாளாதலால் மீண்டும் மோகனப் புன்முறுவல் செய்தாள். அந்தப் புன்முறுவலாலும், ரத்தம் செலவாகியதால் ஏற்கெனவே ஏற்பட்ட களைப்பு அப்பொழுதுமிருந்ததால் பெருமூச்சின் காரணமாக வேகமாக எழுந்து தாழ்ந்த உடற்கவர்ச்சியைக் கண்டதாலும், உணர்ச்சிகளைப் பறக்க விட்ட கரிகாலனுடைய ராஜகளை சொட்டும் முகம் ஓரளவு குழப்பமே அடைந்தது. “மன்னவா! தாமதிக்க நேரமில்லை. என்னைத் துரத்தி வந்தவர்கள் எந்த வினாடியிலும் இங்கு வரலாம். அவர்களுக்கு வேறு வழியில் போக்குக் காட்டி இங்கு வந்துவிட்டேன். இருப்பினும் அவர்கள் இந்தக் குடிசைக் கூட்டத்திலும் என்னைத் தேடாமல் விடமாட்டார்கள். ஆகையால் சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்று துரிதப்படுத்தினாள்.

துரிதத்தின் அவசியத்தை அடிகள் மட்டுமன்றி மன்ன வனும் உணர்ந்திருந்ததால், ராணியை மெள்ளத் தூக்கி இருவரும் நிறுத்திய போதும், ராணி நடக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்டார்கள். அந்தக் கஷ்டத்துடன் கஷ்டமாக ராணி கூறினாள்: “அடிகளே! அந்தக் கத்தியை இங்கு போட வேண்டாம். எடுத்து என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று.

“அது யவனர் தங்கள் மீது வீசிய கத்தி. அதன் பிடியில் யவன லிபி இருக்கிறது” என்றார் அடிகள்.

“அதை நானும் கவனித்தேன். ஆனால் யவன ராணி மீது துணிந்து கத்தி வீசக்கூடிய யவனன் ஒருவன் இருக்கிறானோ!” என்று கேட்டான் கரிகாலன்.

“யவனராணி பரதவப் பெண்ணானால் வீசலாமல்லவா? அதுவும் இந்திர விழா விடுதியிலிருந்து இருட்டில் திருட்டுத்தனமாக ஓடுபவர்மீது எந்த யவனன் கத்தி வீசாதிருப்பான் மன்னவா! அவன் வீசியது நியாயம். அதுவும் வீசியவன் டைபீரியஸாயிருக்கும்போது அது பெரிதும் நியாயமாகிறது. புகாரின் ராணியைக் கத்தி முனையிலும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யவனர்களின் படைத் தலைவனுக்கு இல்லாவிட்டால் வேறு யாருக்கு இருக்க முடியும்?” என்று சொன்ன ராணி, “சரி சரி. அதையெல்லாம் அப்புறம் பேசிக் கொள்வோம். சீக்கிரம் இந்தக் குடிசையிலிருந்து தப்பிச் செல்வோம்” என்று கூறிக்கொண்டே இருக்கையில் யவன வீரர்களின் ‘சரக் சரக்’கென்ற பாதரட்சையொலி குடிசைக்குச் சற்றுத் தூரத்தில் கேட்டது.

இடையிலிருந்த தன் கத்தியை உருவிக் கொண்ட கரிகாலன், “அடிகளே! ராணியை அழைத்துக் கொண்டு குடிசையின் பின்புறம் செல்லுங்கள். இதோ வழி” என்று நீண்ட தன் வாளால் குடிசையின் பின்புறத் தட்டிகளை இரண்டே வெட்டுகளில் அகற்றிச் சிறுவழியொன்றை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு மேலும் சொன்னான்: “அடிகளே, ராணி நடந்து வருவதானால் துரிதமாக நீர் செல்ல முடியாது. ஆகையால் ராணியைத் தோளில் தூக்கிச் செல்லும். பின்பக்கம் திறந்தவெளித் திடலிருந்தாலும், கேளிக்கையை முன்னிட்டு விளக்குகளெல்லாம் கடலை நோக்கியிருப்பதால் திடலில் தாண்டித் தென்புறம் சென்றால் காவிரியோரமாகச் சுங்கச் சாவடியின் பக்கச் சுவர்களும் பெரும் தூண்களும் இருக்கின்றன. அந்தத் தூண்களின் மறைவில் ராணியை வைத்திரும். நான் வருகிற வீரர்களைக் கவனித்துவிட்டு வருகிறேன்.”

சமண அடிகள் சங்கடத்தால் தவித்தார்.

“என்ன அடிகளே!” என்று அவர் ஆலசியத்தின் காரண மாக ஆத்திரம் மெள்ள இதயத்தில் உதயமாகக் கேட்டான் கரிகாலன்.

“காவி உடை அணிந்து சுரமுண்டனம் செய்து கொண்டுள்ள நான் ராணியைத் தூக்கிச் செல்வதை யாராவது பார்த்தால் வித்தியாசமாக நினைப்பார்கள். நீங்கள் தூக்கிச் செல்லுங்கள். அந்தக் கத்தியை என்னிடம் கொடுத்தால் வருகிற வீரர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். அதுவும் மன்னரை இத்தகைய ஆபத்தில் தன்னந்தனியாக நான் விட்டுச் செல்வதைப் பிரும்மானந்தரும் ஒப்புக் கொள்ள மாட்டார்” என்று கூறினார் அடிகள்.

“அடிகளே, தர்க்கத்துக்கு நேரம் இதல்ல. சீக்கிரம் ராணியைத் தூக்கிச் செல்லும். இது என் கட்டளை” என்று கரிகாலன் சொல்லிக் கொண்டிருக்கையிலே வாயிலில் யவன வீரர்கள் தடதடவென்று வரும் ஓசை கேட்டது.

“உம் சீக்கிரம்!” என்று அடிகளைத் துரிதப்படுத்தி அவர் தோளில் ராணியைத் தூக்கிச் சாத்திய கரிகாலன் அவரை சரசரவென்று இழுத்துச் சென்று குடிசையின் பின்புறவழியில் திணித்து வெளியே தள்ளினான். பிறகு கனவேகமாக வாயில் தட்டிக்கு அருகில் வந்து விளக்கை ஊதி விட்டு உருவிய கத்தியுடன் எதிரிகளை எதிர்பார்த்து நின்றான். நீண்டநேரம் அவன் நிற்க வேண்டிய தேவையும் இல்லாது போயிற்று. அடுத்த விநாடி, “யாரங்கே! கதவைத் திற!” என்ற அதிகாரக் குரல் குடிசைக்கு வெளியே கேட்டது. பதிலேதும் கிடைக்காததால் வெகுண்ட யவன வீரர்களின் தலைவன், “அந்தப் பந்தத்தை இப்படிக் காட்டு” என்று கூறிக்கொண்டு குடிசையின் தட்டிக் கதவைப் பலமாகக் காலால் உதைத்தான். கதவு படீரென்று திறந்ததும், “உள்ளே நுழையுங்கள், அந்தப் பெண்ணிருந்தால் இழுத்து வாருங்கள்” என்று கூறவே, இரண்டு மூன்று வீரர்கள் உருவிய வாளுடன் தடதடவெனக் குடிசைக்குள் நுழைந்தனர்.

Previous articleYavana Rani Part 1 Ch49 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch51 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here