Home Sandilyan Yavana Rani Part 1 Ch51 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch51 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

74
0
Yavana Rani Part 1 Ch51 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch51 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch51 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 51 இரவில் நிகழ்ந்த இந்திர ஜாலம்

Yavana Rani Part 1 Ch51 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

இருங்கோவேளிட்ட தீயால் கருகிய இடதுகாலைச் சுற்றியிருந்த புலித்தோல் பட்டையைத் தடவிக் கிடந்த நீளமான உறையிலிருந்து தன் வாளை உருவிக் கொண்டு குடிசையின் இருளில் வாயில் தட்டியின் மறைவில் யவன வீரர்களை எதிர்பார்த்து நின்ற கரிகாலன், முதல் இரண்டு வீரர்கள் உள்ளே நுழையுமட்டும் அரவம் ஏதும் செய்யாமல் செயலற்று இருந்துவிட்டு, மூன்றாமவன் உள்ளே நுழைந்ததும் தட்டிக் கதவைச் சடாலென்று சாத்தியதன்றி, சாத்தப்பட்ட கதவின் சத்தத்தைக் கேட்டுச் சரேலெனத் திரும்பிய யவன வீரன் மார்பில் கூரிய தன் வாளை மின்னல் வேகத்தில் பாய்ச்சி இழுத்து அவனை விண்ணுலகுக்கு விரையவும் விட்டான். குடிசையில் தாங்கள் எதிர்பார்த்த பெண்ணுக்குப் பதில், எண்ணத்தின் வேகத்தை விடத் துரிதமாகவும் எண்ணிய இடத்தில் திண்ணமாகவும் வாளைப் பாய்ச்சவல்ல அபாயகரமான ஒரு வீரன் மறைந்து நின்றிருந்ததை முதல் யவனன் மாண்டவுடன் புரிந்து கொண்ட மற்ற இரு யவன வீரர்களும் உருவிய வாட்களைச் சுழற்றித் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு எதிரி எங்கிருக்கிறான் என்பதைப் பார்க்க முயன்று, இருட்டு அதிகமாயிருந்ததால் முடியாததால் வாட்களைச் சற்று நீட்டி நீட்டித் தடவிக் கரிகாலன் இருப்பிடத்தை உணரப் பிரயத்தனம் செய்து குடிசையைத் தடதடவெனச் சுற்றி வந்தார்கள். கரிகாலனையும் அந்த இருட்டுப் பெரிதும் பாதித்ததால், யவன வீரர்களின் கவசங்கள் பலமாக உராய்ந்ததால் ஏற்பட்ட ஒலியைக் கொண்டே அவர்கள் வளையவந்த இடங்களை அறிந்து கொண்ட சோழர் குல இளவல், தன் வாளை அந்த ஒலி இடங்களை நோக்கிப் பாய்ச்சி மற்றும் ஒரு யவனனைக் கழுத்தில் காயப்படுத்தினான். இருள் மண்டிக் கிடந்த அந்தக் குடிசையின் குறுகலான பிரதேசத்திலும் தங்கள் கைக்கு அகப்படாமலும், சுழற்றப்பட்ட தங்கள் வாட்களுக்குத் தட்டுப்படாமலும், கவச ஒலியைக் கொண்டு தங்களைத் தாக்க வல்லவன் சாதாரண வீரனாயிருக்க முடியாதென்பதைப் புரிந்து கொண்ட யவன வீரர் இருவரில், கழுத்தில் காயமடைந்தாலும் உயிரிழக்காது தப்பியவன், மற்றவனைப் பார்த்து, “இந்த இருட்டில் போரிட நம்மால் முடியாது. இதோ இருக்கும் பின்புற வழியாகச் சென்று வாயிலிலிருந்து பந்தமொன்று கொண்டுவா” என்று உத்தரவிட்டான்.

ராணியையும் சமண அடிகளையும் வெளியே அனுப்பத் தான் வகுத்த பின்புற வழியே எதிரி தப்புவதற்கும் உபயோகப்படுவதைக் கவனித்த கரிகாலன், நீண்ட தன் வாளால் குடிசைக்கு வெளியே செல்ல முயன்ற யவன வீரனைத் தடுக்கவே மீண்டும் குடிசைக்குள் பழையபடி சண்டை மும்முரமாகத் தொடங்கியது. வெளியேயிருந்த வெளிச்சத்திலிருந்து உள்ளே வந்ததன் விளைவாகச் சிறிதுநேரம் அடியோடு கண் தெரியாமல் தவித்த யவன வீரர் இருவருக்கும் சண்டை துவங்கிய சில வினாடிகளுக்குள் இருட்டுப் பழகிவிட்டதாலும் கரிகாலன் வெட்டி வழி உண்டாக்கிய பின்புறத்திலிருந்து வந்த மங்கலான இயற்கை வெளிச்சம் உள்ளேயும் சிறிது பாய்ந்ததாலும், அவர்கள் இருவரும் சிறிது நிதானத்துடன் குழப்பமில்லாமலும் கரிகாலனை எதிர்த்தனர். எதிரேயிருந்தவன் வயது முதிர்ச்சி யடையாத வாலிபனென்பதை உணர்ந்து கொண்டதாலும், அவன் கைகள் நீளமாயிருந்ததாலும் மிக மெல்லியவையாய் வலிவற்றவைபோல் காணப்பட்டதாலும், யவன வீரர்களின் தாக்குதலில் ஓரளவு அலட்சியம் இருக்கவே செய்தது.
கழுத்தில் காயம்பட்ட பிறகும் மிக உக்கிரமாகப் போராடத் தொடங்கிய யவன வீரனுடைய வீரத்தை உள்ளுக்குள்ளேயே மெச்சிக் கொண்ட கரிகாலன், யவனர்கள் வாட்கள் சுழல்கின்ற மாதிரியிலிருந்தே தன் வயதையும் கைகளையும் கண்டு அவர்கள் தன்னைக் குறைத்து மதிப்பீடு செய்திருக்கிறார்களென்பதைப் புரிந்து கொண்டானாகையால் ஓரளவு புன்முறுவலும் கொண்டு, தன் வாளைக் கரகரவென்று சுழற்றிக் காயமடைந்தவனின் வாளுடன் அதை உராயவிட்டுப் பின்னுக்காக ஓர் இழுப்பு இழுக்கவே அந்த யவனனின் வாள் குடிசையின் ஒரு மூலையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்படி விழுந்த வாளை மீண்டும் யவனன் எடுக்க அணுகு முன்பாகவே அதைக் காலால் மிதித்து எதிரி அதைத் தொட முடியாத வண்ணம் செய்த கரிகாலன் மற்றொரு எதிரியின் வாளுடன் தன் வாளை மோதவிட்டான். இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட கத்தி இழந்த யவனன் குடிசையின் பின்புற வழியாக வெளியே ஓடினான். அவன் ஓடுவதைத் தடுக்க வழியில்லாததால் மற்றவன் மீது தாக்குதலை மும்முரமாகத் தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வாள் பிடித்த அவன் கையில் ஆழத் தன் வாளைச் செலுத்திவிட்ட கரிகாலன் அதற்கு மேலும் அங்கு நிற்பது ஆபத்து என்பதை உணர்ந்து தானும் பின்புற வழியாக வெளியே நடந்தான்.

சில விநாடிகளுக்குள்ளாகவே குடிசைக்குள் சண்டை முடிந்துவிட்ட போதிலும், கையில் காயம் பட்டு வாளை நிலத்தில் நழுவவிட்ட யவனன், “ஓடுகிறான். பிடியுங்கள், பிடியுங்கள்” என்று பெருங் கூச்சலிட்டதாலும், அதற்கு முன்னதாகப் பின்புற வழியாகச் சுற்றிச் சென்ற யவன வீரன், வெளியிலிருந்த வீரர்களில் நால்வரை வாயில் வழியாகக் குடிசைக்குள் நுழையவிட்டு மீதி நால்வருடன் பின்புறத்துக்கு வந்ததாலும், முன்புற வழியாக உள்ளே நுழைந்த வீரர்களும் குடிசையைத் துழாவிப் பார்த்து மார்பில் கத்தி பாய்ந்து மாண்ட யவன வீரனையும் வாள்பிடிக்க முடியாமல் கையில் காயமடைந்த யவன வீரனையும் தவிர வேறுயாருமில்லாத படியால் துரிதமாகப் பின்புற வழியாக வெளியே வந்ததாலும், ஏககாலத்தில் எட்டு யவன வீரர்களைச் சமாளிக்கும் அவசியம் ஏற்பட்டது கரிகாலனுக்கு. இரு வழியிலும் வீரர்கள் தன்னை அணுகுவதற்கு முன்பாகவே குடிசையிலிருந்து சிறிது தூரம் நடந்துவிட்ட இளஞ்சேட் சென்னியின் வீரமகன், யவன வீரர்கள் வெகுவேகமாகத் தன்னைச் சூழ்ந்துகொள்ள வருவதைக் கவனித்ததும் நடையை நிறுத்திமேலிருந்த தன் போர்வையை உடலைச் சுற்றி வளைத்துக் கவசம்போல் போட்டுக்கொண்டு, தன் வாளை கை எட்டு மட்டும் நீட்டித் தூரத்திலேயே எதிரிகளை நிறுத்தினான். நீளமான வாளும் வாலிபன் கையுமாகச் சேர்ந்து சுமார் ஆறடித் தூரத்திலேயே தங்களை நிற்கவைத்துவிட்டதையும், வாளைப் பிடித்த வாலிபன் தங்களைப் பக்கவாட்டில் நுழையவொட்டாமல் வாளைக் குறுக்கே வீசித் தன் எதிரிலேயே வரிசையாகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டதையும் கண்ட யவனர்களின் தலைவன், எதிரி வயதில் குறைந்தவனானாலும் வாட்போரில் எவ்விதத்திலும் குறைந்தவனல்லவென்பதைச் சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்துகொண்டான். தவிர வாலிபன் கை மெல்லியதாயிருந்தாலும் அது உறுதியுடன் வாளைப் பிடித்திருந்ததையும், அந்த வாளும் மற்ற வீரர்களின் வாட்களை எப்படியோ மீறிக்கொண்டு வீரர்கள் கண் முன்பாகவும் முகத்திற்கு வெகு அருகாமையிலும் அடிக்கடி காட்சியளித்ததையும் கண்டு, கை மெல்லியதாயிருந்ததே வாள் இஷ்டப்படி வளைவதற்கு அனுகூலமாயிருந்ததால் யவனரின் திண்மைப் புஜங்களும் குறுகிய பட்டை வாட்களும் எதிரியின் போர்த்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொண்டான் யவன வீரர் தலைவன். ஆகவே, “பக்கவாட்டில் செல்லாதீர்கள். எதிர்ப்புறமே நின்று கும்பலாக அவனை அணுகுங்கள்” என்று வீரர்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு, தானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கரிகாலனை வேகமாக அணுகினான்.

யவன வீரர் தலைவனுடைய எச்சரிக்கையையும், அவன் மிகுந்த ஜாக்கிரதையுடன் தன்னை அணுக முற்பட்டதையும் கண்ட கரிகாலன், லேசாகப் புன்முறுவல் செய்து, நின்ற இடத்தைவிட்டு நகராமலே இந்திர ஜாலம் போல் வாளைக் கரகரவென்று சுழற்றினான். அவன் வாள் சுழன்ற வேகத்தில் தனது வீரர்களின் வாட்கள் இரண்டு ஆகாயத்தில் பறந்து தூரத்தில் போய் விழுந்துவிட்டதையும், இன்னும் இரண்டு பேர்களும் எதிரியின் வாளுக்கு இலக்காகிக் கடற்கரை மணலில் சாய்ந்து ரத்தத்தைச் சிந்திக் கொண் டிருப்பதையும் கண்ட யவனவீரர் தலைவன் அதற்கு மேலும் சுய பலத்தில் நம்பிக்கை வைப்பது தகாது என்பதை உணர்ந்து, “டேய் யாரங்கே? தப்புகிறான். உதவிக்கு வாருங்கள்!” என்று பெருங்குரல் கொடுத்தான். அந்தக் குரல் கடற்கரை முழுவதும் ஊடுருவிச் சென்றதால் தூரத்தே நடந்து கொண்டிருந்த பரதவர் ஆட்டங்கள் திடீரென நின்றன. தடதடவென்று பெருவாரியாகக் கோட்டைக் காவலரும் பரதவரும் ஓடிவரும் காலடி ஓசை திமுதிமுவெனக் கடற்கரையில் கேட்டதன்றி, அதுவரை கேளிக்கைக்கு உபயோகப்பட்ட தம்பட்டங்களைத் தட்டிக் கொண்டும் பலவிதமான கூச்சல்களைக் கிளப்பிக் கொண்டும், பந்தங்களை வீசிக் கொண்டும் ஓடி வந்த பரதவ மங்கையரின் அரவமும் கடற்கரைப் பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், கடற்கரைப் பிரதேசம் ஏதோ ரணகளப்படுவது போன்ற பிரமையையே சிருஷ்டித்தது. இவற்றையெல்லாம் கவனித்த கரிகாலன் அதற்கு மேல் அங்கு நிற்பதால் பல கண்டங்கள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டானாதலால், தான் நின்ற இடத்தைவிட்டுச் சற்றுத் தள்ளி ஒருபுறமாகக் குதித்ததன்றித் தன் போர் முறையையும் சரேலென மாற்றிக் கொண்டு, திடீரென யவன வீரர்கள் மீது பாய்ந்து, இருவரை நிராயுதபாணிகளாக்கி யவன வீரர் தலைவனையும் தன் உடலால் மோதிக் கீழே தள்ளி அவன் மார்பில் தன் கத்தியை ஊன்றிக்கொண்டு, “உங்கள் தலைவன் பிழைக்க வேண்டுமானால் வாட்களைக் கீழே போடுங்கள்” என்று மற்ற வீரர்களுக்கு உத்தரவிட்டான். எதிர்பாராத இந்தப் போர்த் திருப்பத்தால் அசந்துபோன யவனர்கள் வாட்களைக் கீழே போட்டுவிடவே, தலைவன் வாளையும் பிடுங்கி அவற்றுடன் சற்றுத் தூரத்தில் எறிந்த கரிகாலன் வீரர்களை நோக்கி, “இருபதடி பின்னால் செல்லுங்கள்” என்று மீண்டும் ஆணை இட்டான். ஆணையிடும் சக்தி ரத்தத்திலேயே ஊறியிருந்ததாலும் அந்தச் சக்தி கண்களிலும் சந்தேகமின்றிப் பிரதிபலித்ததாலும், யவன வீரர்கள் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்படும் பாவைகளைப்போல் பின்னுக்குச் சென்றனர். அடுத்த வினாடி யவன வீரர் தலைவன் மார்பிலிருந்து வாளை எடுத்துக்கொண்ட கரிகாலன் அந்த இடத்திலிருந்து இருட்டில் வெகுவேகமாக நடந்து மறைந்தான்.

திடலில் அன்று இருட்டு அதிகமாகவே இருந்தது. இருப்பினும் சற்றுத் தூரத்தில் ஓடி வந்துகொண்டிருந்த பரதவரின் கைகளில் தெரிந்த பந்தங்கள் வெளிச்சத்தை அளிக்குமாதலாலும், இடமும் சுங்கச் சாவடித் துறைக்கு அருகிலிருந்ததால் எதிரி மறைவதும் சாத்தியமில்லையென்ற தைரியத்தாலும் எப்படியும் எதிரியைப் பிடித்தேவிடலாம் என்று துணிவு கொண்ட யவன வீரர் தலைவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்து, மற்ற வீரர்களை நோக்கி, “ஏன் மரம்போல் நிற்கிறீர்கள்? வாட்களைப் பொறுக்கிக் கொள்ளுங்கள். அதோ அந்தப் பந்தங்களை வாங்கி வாருங்கள். ஒரு சிறு பயல்! அவனைப் பிடிக்க முடியவில்லை யென்றால் கடற்படைத் தலைவர் கழுத்தைத் திருகிவிடுவார்” என்று மிரட்டியதன்றி ஓடிவந்த பரதவர்களுக்கும் நடந்த விஷயத்தைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லி, “அவன் காலில் புலிப்பட்டை இருக்கும். பாதரட்சைகளும் புலித்தோலால் செய்யப்பட்டவை” என்று அடையாளமும் கூறி, அவனை எப்படியும் தேடிப் பிடிக்கும்படி பணித்தான்.

யவன வீரர் தலைவன் யாரைப் பிடிக்கத் தங்களைப் பணிக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளாத பரதவ குல ஆடவரும் பெண்டிரும், களியாட்டங்களின்போது அருந்திய மது போதையில் உண்டான வெறியால் கையிலேந்திய பந்தங்களை ஆட்டிக்கொண்டு அந்தக் கடற்கரையில் நாலா புறமும் ஓடினர். இருட்டிக் கிடந்த திடலில் பல பந்தங்கள் வீசியும் எந்த இடத்திலும் கரிகாலனைக் காணாத யவன வீரர் தலைவன் பிரமித்தான். பரதவ மங்கையரும் ஆடவரும் பந்தங்களுடன் கடற்கரையில் ஓடிஓடி எதிரியைத் தேடிய காட்சியைக் கண்டு ஒருபுறம் வியந்த அந்த யவனனுக்கு அந்தப் பெரும் திடலில் எங்கும் ஒளிந்துகொள்ள குடிசையோ வேறு விடுதியோ இல்லாத அந்தப் பகுதியில் – எப்படி அந்த வாலிபன் திடீரென மறைய முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததோடு, ராணியைப் பிடித்து வராதது மட்டு மன்றிக் குடிசைக்குள்ளிருந்த ஆளையும் இழந்துவிட்டதால் டைபீரியஸ் தன்னை என்ன செய்வானோ என்ற பீதியும் ஏற்படவே, அவன் வெகு மும்முரமாகக் கரிகாலனைத் தேடும் பணியில் இறங்கினான். பெரும் கும்பல் தேடியும் கரிகாலன் எங்கும் கிடைக்கவில்லை . சங்கமத் துறை, பரதவர் குடிசைகள், பரதவர் பேரில்லங்கள், சுங்கச் சாவடியின் படித்துறை – எல்லா இடங்களிலும் பரதவர் தேடியும் புலிப்பட்டைக் கட்டிய வாலிப வீரன் கிடைக்கவில்லை. இது யவன வீரர் களுக்கு மட்டுமல்ல, சுங்கச் சாவடிக்குச் சற்றுத் தள்ளியிருந்த பெரும் தூண்களின் கூட்டத்தில் ராணியுடன் மறைந்து கிடந்த அடிகளுக்கும் பெருவியப்பாக இருந்தது.

புகாரின் சுங்கச் சாவடியின் படிகளின் பக்கத்தில் இருந்த பெரும் தூண்களின் மறைவில் பதுங்கி, கடற்கரை மணல் திடலில் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டே நின்றிருந்த சமண அடிகள், அந்த இடத்தில் தன்னைக் காத்திருக்கும்படி கரிகாலன் கூறியதன் காரணத்தை நன்றாக உணர்ந்தே இருந்தார். சுங்கச் சாவடியின் சுவரை அணைத்த வண்ணம் எழுப்பப்பட்ட பெரும் தூண்களின் மறைவு, சாதாரணமாகக் காவிரி மூலம் உள்நாட்டிலிருந்து வந்து வெளிநாடு செல்லக் காத்திருக்கும் பொதி மூட்டைகளை அடுக்கவே உபயோகப்பட்டு வந்ததென்பதையும், நூற்றுக்கால் மண்டபம் போல் விசால அரங்கமாக, தூண்களும் கருங்கல் கூரையும் தவிர, வேறெதுவுமில்லாத பெரு மண்டபமாக இருந்ததாலும், பொதி மூட்டைகளும் ஏராளமாகக் கிடந்ததாலும் அதன் மறைவிலிருப்பவர்களைக் கண்டு பிடிப்பது எளிதல்லவென்பதையும் உணர்ந்த அடிகள், நீண்ட நேரம் அந்தத் தூண்களின் ஒரு கோடியிலிருந்த மூட்டைகளுக்கு அடியில் பதுங்கியிருந்தார். அப்படிப் பதுங்கியிருந்த நேரத்தில் தூரத்தே பெரும் ஓசை கேட்கவே, ராணியை மெள்ளத் தூக்கிச் சென்று சில பஞ்சு மூட்டைகளின் மறைவில் உட்கார வைத்து, “புகாரின் ராணி உட்கார இது ஏற்ற இடமில்லைதான். இருந்தாலும் வேறு வழியில்லை” என்று சமாதானம் சொல்லி ராணியை மறைக்க அவள் முன்பாக இரண்டு பஞ்சு மூட்டைகளையும் எடுத்து அடுக்கினார். பிறகு தாம் மட்டும் வெளியே வந்து ஒரு தூண் மறைவில் நின்று தூரத்தில் நடப்பதைக் கவனித்தார்.

தூண்களிருந்த இடத்துக்கும் பரதவர் குடிசைகளுக்கும் இடையே இருந்த இருட்டின் காரணமாக அடிகளின் கண்களுக்கு முதலில் எதுவும் திட்டமாகத் தெரியாவிட்டாலும், பரதவர் பந்தங்களுடன் ஓடிவந்த பிறகு தூர நிகழ்ச்சிகளை அவர் ஓரளவு ஊகித்துக் கொண்டார். பந்தங்கள் வேகமாக எங்கும் அசைந்ததாலும் உருவிய வாளால் யவன வீரர் தலைவன் அங்கும் இங்கும் அடையாளம் காட்டியதாலும் கரிகாலனைத் தேட முயற்சி நடக்கிறதென்பதை அறிந்த அடிகள் குடிசையைத் தாக்கிய வீரர்களிடமிருந்து கரிகாலன் தப்பிவிட்டானென்பதை அறிந்து கொண்டதால் ஓரளவு ஆச்சரியமும் கொண்டார். ‘குடிசையின் குறுகிய உட்பகுதியில் மூன்று வீரர்களை வாள் கொண்டு சமாளிப்பதே கஷ்டம். தவிர அவர்களை மீறி வெளியே வருவது அதைவிடக் கஷ்டம். வெளியே வந்தாலும் சூழ்ந்துகொள்ளக்கூடிய மற்ற வீரர்களைச் சமாளிப்பது மாபெரும் கஷ்டம். இத்தனையையும் மன்னர் எப்படிச் சாதித்தார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட அடிகள், கரிகாலனை ஏராளமான பேர்கள் தேடுவதைக் கண்டு அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் என்ன ஆவதென்று கவலையும் கொண்டார். அந்தக் கவலையின் விளைவாகத் தாமாவது சென்று கரிகாலனுக்கு உதவலாமா என்று நினைத்தார். அந்த நினைப்பைச் செயல்படுத்து முன்பாக, தூண்களை நோக்கிப் பந்தங்கள் நகருவதைக் கண்ட அடிகள் தன் தலையை நீட்டினால் வீண் ஆபத்தைத் தவிர உதவி ஏதுமில்லை யென்பதைப் புரிந்துகொண்டு, பரபரவென்று பின்னாலிருந்த ராணிக்கு அருகில் பொதிகளுக்கு இடையில் தாமும் பதுங்கிக் கொண்டு தமது மீதும் இரண்டு பொதிகளை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

பந்தங்களுடன் வந்த பெரும் கூட்டம் நீண்ட நேரம் அந்த மண்டபத்தின் பகுதிகளைச் சோதனை செய்தது. சில பரதவர் பொதி மூட்டைகளில் சிலவற்றையும் அகற்றி ஆராய்ந்தனர். அடிகளைப் பிடித்த நல்ல காலமோ அல்லது ராணியைப் பிடித்த நல்ல காலமோ தெரியாது. வந்திருந்த பரதவர் அதிக நேரம் தேடாமல் வெகு சீக்கிரம் பந்தங்களை எடுத்துக் கொண்டு அகன்றனர். அதுவரை பதுங்கிக் கொண்டிருந்த அடிகள் மெல்ல எழுந்து தமது மீது படிந்திருந்த பொதிப் பஞ்சு உதிரிகளைத் துடைத்துக் கொண்டார். மூக்கிலும் பஞ்சின் பகுதிகள் சில நுழைந்து இருந்ததால் தும்மலொன்று அவருடைய பெரும் நாசியிலிருந்து எழுந்தது. அடிகள் சகுன சாத்திரத்தை நன்றாக அறிந்தவர்தான். எந்த நல்ல காரியத்திற்கும் ஒற்றைத் தும்மல் கெடுதல் என்பதை அவர் அறியாதவரல்ல. ஆனால் ஒருவன் ஒரு நல்ல காரியத்துக்குக் கிளம்பும்போது வேறு ஒருவன் தும்மினால் தான் கெடுதல் என்று தமிழகத்தில் சொல்லுவார்கள். ஆனால், தமது தும்மலே தமக்குப் பெரும் விரோதி என்பதை அடிகள் அன்றுதான் உணர்ந்தார். அவர் தும்மலை எதிர்பார்த்தவை போல் புகாரின் அந்தப் பெரும் தூண்களுக்கிடையேயிருந்த பொதி மூட்டைகள் திடீரெனப் புரண்டன. சில பொதிகள் அவரை நோக்கி மெல்ல நகரவும் தொடங்கின. அடுத்த வினாடி புரண்ட பொதிகளின் மறைவிலிருந்து வாள் தாங்கிய நூறு உருவங்கள் திடீரென எழுந்தன. அவை அடிகளை மட்டுமல்ல, பொதிக்கும் அடியிலிருந்த ராணியையும் வளைத்துக் கொண்டன. “ராணி! எழுந்திரு!” என்று அதட்டலான குரலொன்றும் சற்றுத் தூரத்திலிருந்து எழுந்தது. அந்த உத்தரவை ஆமோதிப்பதுபோல் பெரும் தூண்களும் பரந்த அந்த மண்டபத்தின் பாறாங்கற் கூரையும் ‘ராணி எழுந்திரு! ராணி எழுந்திரு!’ என்று பயங்கரமாக எதிரொலி செய்தன. அடிகள் ஏதும் புரியாமல் இரவில் நிகழ்ந்த அந்த இந்திர ஜாலத்தைக் கண்டு, அடியோடு திகைத்ததல்லாமல் தன்னைச் சூழ்ந்தவர்களை நோக்கி ஆடு திருடிய கள்ளன்போல் விழித்துக் கொண்டும் நின்றார்.

Previous articleYavana Rani Part 1 Ch50 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch52 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here