Home Sandilyan Yavana Rani Part 1 Ch54 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch54 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

61
0
Yavana Rani Part 1 Ch54 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch54 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch54 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 54 அபாய மேகங்கள்!

Yavana Rani Part 1 Ch54 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

இரும்புச் சுருள்களைப்போல் வளைந்து கிடந்த கேசங்கள் கொண்ட தலையுடனும் இரும்பைவிடத் திட முள்ள நெஞ்சுடனும் வளர்ந்த இரும்பிடர்த்தலையாரே யவன ராணியின் இகழ்ச்சி நகைப்பினாலும் அதையடுத்து அவள் சொல்லிய விவரங்களாலும் உறுதி தளர்ந்து குழம்பி விட்டாரென்றால் இரும்பிடர்த்தலையார் அளவுக்குத் துணிவு பெறாத அடிகளின் நிலையைப்பற்றிக் கேட்கவா வேண்டும்? மெள்ள மெள்ளச் சிரித்த வண்ணம் ராணி அவிழ்த்து உதறிய ராஜ ரகசியச் சிக்கல்களைக் கேட்கக் கேட்கப் பெரும் வியப்பும் திகிலும் அடைந்த அடிகள், டைபீரியஸ் உண்மையில் யவனர்கள் நினைப்பதுபோல் தேவதூதனாகத்தானிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அடிகள் முகத்தில் தட்டிய பிரமை, திகில் இவை இரண்டையும் தன் நீலமணிக் கண்களின் ஓரத்தாலேயே கவனித்துப் புன்முறுவல் கொண்ட ராணி, “திகிலுக்கு இடமிருக்கிறது அடிகளே. ஆகவே எச்சரிக்கைக்கும் இடமிருக்கிறது” என்று கூறிவிட்டு இரும்பிடர்த்தலையாரை நோக்கி, “இரும்பிடர்த்தலையாரே! டைபீரியஸை சாமான்யமாக நினைக்க வேண்டாம். அவனுக்கிருப்பது இரண்டு கண்களல்ல. ஆயிரம் கண்கள். இந்தப் புகாரின் பிராந்தியத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும் அவன் கண்களிலிருந்து தப்ப முடியாது. நீங்களும் மன்னவரும் உங்களைச் சேர்ந்திருப்ப தாக நீர் கூறும் ஐந்நூறு வீரர்களும் வர்த்தகர் வேடத்தில் மறைந்து புகாரில் உறைவதும் புகாரின் உயிர் நிலைகளில் உங்கள் வீரர்கள் உலாவுவதும் டைபீரியஸுக்குத் தெரியவில்லையென்று நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் ஒன்று நிச்சயமாகக் கூறமுடியும். புகாரின் உயிர் நிலைகளில் உங்கள் வீரர்கள் இருப்பதால் புகாரை உங்கள் கைவசமாக்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களே அது மட்டும் நடவாது” என்றாள்.

“ஏன் நடவாது?” என்று சற்றுத் துடிப்புடனேயே ராணியை வினவிய இரும்பிடர்த்தலையார் மேலும் விவரிக்கத் தொடங்கி, “ராணி, யவனநாட்டுக் கடற்படைத் தலைவனின் புத்தி கூர்மையையோ வீரத்தையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. எதிரியின் திறமையையும் பலாபலத்தையும் குறைத்து மதிப்பிடுபவன் சரியான ராஜ தந்திரியாகவும் இருக்க முடியாது. ஆனால், டைபீரியஸும் மனிதன். சகலத்தையும் அவன் அலசிவிட முடியுமென்று எண்ணுவது, அவன் பலத்தை என்ன, எந்தத் தனி மனிதனின் பலத்தையும் அளவுக்கு மீறி மதிப்பிடுவதாகும். போர்களிலும் ராஜதந்திரப் போட்டியிலும் எதிரியின் பலாபலத்தைக் குறைத்து மதிப்பீடு செய்வது எத்தனை அபாயமோ அத்தனை அபாயம் அதிகப்படியாக மதிப்பீடு செய்வதும். அளவுக்கு மீறிய எச்சரிக்கையும் எதிரியின் பலாபலத்தைப் பற்றிய அதிக மதிப்பீடும் செயலைத் தடை செய்யும். செயல் தடைப்பட்டால் வெற்றி காண்பதும் கஷ்டம். எதிரி அசந்திருக்கும் போது தாக்குவது விவேகம், சிந்தித்துப் பார் ராணி. நாங்கள் இப்படி மறைந்துறைவது டைபீரியஸுக்குத் தெரிந்தால் எங்களை உயிருடன் விட்டு வைப்பானா? பொதி மூட்டைப் படகுகள் சாதாரணமாகச் சுங்கச் சாவடியைத் தாண்டிச் செல்வதைத்தான் அனுமதிப்பானா? இந்த ஐந்நூறு வீரர்கள் இங்கு வந்து எத்தனை நாளாகின்றன தெரியுமா?” என்றும் கேட்டார்.

“எத்தனை நாளாகின்றன?” என்று விசாரித்தாள் ராணி, இரும்பிடர்த்தலையார் விளக்கிய விஷயங்களால் எந்தவித வியப்பையோ அதிர்ச்சியையோ முகத்தில் காட்டாமலே.
“சுமார் பத்து நாட்களாகின்றன. இந்தப் பத்து நாட்களில் புகாரின் வீரர்கள் பலர் இந்தப் படையில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஐந்நூறு பேர் கொண்ட படை மட்டும் தான் இருக்கிறதென்று நினைக்காதே ராணி. சுமார் அறுபது எழுபது நாழிகைக்குள்ளாக இந்தப் புகாரைச் சூழ்ந்து கொள்ளப் பெரும் படையும் உருவாகி வருகிறது. படை நடப்பின் மர்மங்களை விளக்குவது படைத்தலைவன் விவேகத்துக்கு அறிகுறியில்லைதான். இருப்பினும் துணிவுடனேயே உன்னிடம் சொல்கிறேன். இந்தப் புகாரை மூன்று புறங்களில் சூழ்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் யவனர் படைகளை நசுக்கிவிடச் சகல ஏற்பாடுகளும் சித்தமாயிருக்கின்றன” என்ற இரும்பிடர்த்தலையார் ராணியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

அவர் சொல்வதையெல்லாம் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி இரும்பிடர்த்தலையாரின் படை திரட்டும் முறையையும் போர் ஏற்பாட்டையும் எண்ணிப் பெரிதும் அவரிடம் மதிப்புக் கொண்டாளானாலும், ‘அத்தனை ஏற்பாடுகளையும் விநாடி நேரத்தில் குலைத்துவிட டைபீரியஸால் முடியுமே’ என்ற நினைப்பால் பெருமூச் செறிந்தாள். பிறகு சற்றுத் தூரத்தேயிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து இரும்பிடர்த்தலையாருக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள சம்பாஷணையை மௌனமாகவே கேட்டுக் கொண்டிருந்த கரிகாலனை ஏறெடுத்துப் பார்த்து, ஓரளவு கவலையும் கொண்டாள். “இந்த இளைஞனை அரியணையில் அமர்த்துவதையே லட்சியமாகக் கொண்ட இளஞ்செழியன் மட்டும் இங்கிருந்தால் நிலைமை எத்தனை தூரம் மாறி யிருக்கும்’ என்று தானே கேட்டுக்கொண்ட அவள், ‘இரும்பிடர்த்தலையாருக்குப் பலமிருக்கிறது. திடசித்தமிருக் கிறது. இருப்பினும் அவர் கவியென்று சொல்கிறார்களே. ஆகவே, கவிகளுக்குள்ள பெரும் தோரணையும் புத்தியில் கலந்துதானே இருக்கும். அத்தகைய சிந்தனையில் அரசியல் விஷமங்கள் இடம் பெற நியாயமில்லையே’ என்ற முடிவுக்கும் வந்தாளாதலால் டைபீரியஸின் சக்தியைப் பற்றி அவருக்கு நேர்முகமாக உணர்த்தாமல் மறைமுகமாக உணர்த்த முற்பட்டு, சமண அடிகளை நோக்கி, “அடிகளே, நீர் எனக்கு மகுடம் செய்ய அளவெடுக்க வந்தபோது என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“நான் அளவெடுப்பதைப் பக்கத்து அறையிலிருந்து இரண்டு கண்கள் கவனிப்பதாகக் கூறினீர்கள். பிறகு என் அளவு சரியில்லையென்று கூவினீர்கள். நீங்களே அள வெடுப்பதாகக் கூறி நறுக்கு ஓலையில் என்னைக் கடற்கரைக் குடிசையில் சந்திக்கும்படி செய்தியும் எழுதிக் கொடுத்தீர்கள்” என்றார் அடிகள், அவள் எதற்கு அந்தப் பழைய விவரங்களைக் கேட்கிறாள் என்பதை அறியாமலே.

“எந்தக் குடிசையில் சந்திக்கச் சொன்னேன்?” என்று மீண்டும் மீண்டும் வினவினாள் ராணி.

“எந்தக் குடிசையிலிருந்து பந்தம் இருமுறை ஆடியதோ அந்தக் குடிசையில்.”

“பந்தம் இருமுறை ஆடியதா?”

“இல்லை.”

“ஏன் இல்லை ?”
“அந்தக் குடிசையில் இருந்த மன்னவர் பந்தத்தை வேறு விதமாக அசைத்தார்.”

“காரணம் தெரியுமா?”

காரணம் தெரியாமல் விழித்த அடிகளை நோக்கி இரும்பிடர்த்தலையார் சொன்னார்: “காரணம் நான் சொல்கிறேன் அடிகளே. அந்த ஒரு குடிசை மட்டும் பல நாட்களாகக் குடியிருப்பு இன்றிக் கிடக்கிறது. அந்தக் குடிசையிலிருந்து பந்த ஒளியின் ஜாடை காட்டினால் என் வீரர்களை ஏற்றிச் செல்லும் படகுகள் வரும். அந்தப் படகுகளில் ஏறிச் செல்லவேண்டியவர்களும் புகாரில் யவனர் நடவடிக்கைகளை அவ்வப்பொழுது வேவு பார்க்க வேண்டியவர்களுமான என் வீரர்கள் மாறு உடைகளில் செல்வார்கள். இப்படிப் பலமுறை சுங்கச்சாவடி மூலம் போய் வந்து பழகிவிட்டால் சுங்கச் சாவடிக் காவலரோ மற்ற எதிரி வீரர்களோ சந்தேகம் கொள்ளமாட்டார்கள். அப்படிச் சந்தேகத்தைத் துடைக்க இந்தப் படை நடமாட்டத்தை நடத்தத் தீர்மானித்தேன். படைகள் மறைந்திருக்கக் குடிசைக்குப் பின்னால் சற்றுத் தூரத்திலிருந்த பொதியெடுக்கும் பெரும் தூண்களும் வசதியாயிருந்தன” என்றார்.

இதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட அடிகள், “ஓகோ! நீங்கள் இருப்பது தெரிந்துதான் ராணியையும் என்னையும் தூண்களின் மறைவுக்குச் செல்ல மன்னர் உத்தரவிட்டாரா?” என்று வினவினார்.

“ஆம் அடிகளே!” என்று ஒப்புக்கொண்ட இரும்பிடர்த்தலையார் மேலும் சொன்னார்: “அதனால்தான் பந்தத்தின் ஒளி ராணி கூறியதுபோல் இருமுறை அசையாமல், மன்னன் சிறையிருந்த கருவூர் நதிக்கரை மாளிகையில் சுழன்று அசைந்ததுபோல் அசைந்தது. எந்த ஒளிச் சுழலையும் அசைவையும் கொண்டு மன்னனைச் சிறை மீட்க முயன் றேனோ, அதே அடையாளங்களைக் கொண்டே புகாரையும் யவனர் சிறையிலிருந்து மீட்க முற்பட்டேன்.”

இரும்பிடர்த்தலையாரின் ஏற்பாடுகளைக் கேட்ட அடிகள் உண்மையில் அவர் திறமையை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாரானாலும், ராணி மட்டும் அதைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமலே கேட்டாள்: “இரும்பிடர்த்தலையாரே! அந்தக் குடிசை வெறும் குடிசையாக இருப்பதை எத்தனை நாட்களாகக் கவனித்தீர்கள்?” என்று.

“பத்து நாட்களாக” என்றார் இரும்பிடர்த்தலையார்.

“அந்தக் குடிசையை யார் அமைத்தது தெரியுமா?” என்று ராணி இன்னும் ஒரு கேள்வியை வீசினாள்.

“தெரியாது.”

“டைபீரியஸ் நிர்மாணித்தான் அந்தக் குடிசையை. அதுவும் என் உத்தரவுக்கிணங்கி நிர்மாணித்தான். இராக் காலங்களில் கடலில் நீராட விரும்பினால் என் ஆடைகளை மாற்றிக்கொள்ள மறைவிடம் வேண்டுமென்று கூறியதால் நிர்மாணித்தான். நான் நீராடவும் பல சமயங்களில் அந்தக் குடிசையை உபயோகித்தேன். டைபீரியஸின் சந்தேகக் கண்களிலிருந்து விடுபடவே நீராடினேன். அந்தக் குடிசையில் தங்கினேன். எப்படி எப்படியோ நடித்தேன், இரும்பிடர்த் தலையாரே. அவன் சந்தேகம் சற்றுக் குறைந்தது என்று எண்ணிய சமயத்தில் இந்த அடிகளும் என் தலையை அளவெடுக்க இந்திர விழா விடுதிக்கு வந்தார். அவர் என் தலையை அளவெடுக்கும் முன்பாகவே நான் அவர் யாரென்பதை அளந்துவிட்டேன். யாரையும் நம்பாத டைபீரியஸ் பொற்கொல்லரையும் கவனிக்கத் தவற மாட்டான் என்பது எனக்குத் தெரிந்ததால் என் பக்கத்து அறைமீதும் ஒரு கண் வைத்தேன். அறையை மறைத்த திரைக்குப் பின்னால் டைபீரியஸின் இரு கால்களும் தெரிந்தன. அதனால்தான் அடிகளின் அளவு சரியில்லை யென்று குறை கூறினேன், கூவினேன், நடித்தேன். அந்த அறைக்குள் சரேலென நுழையவும் செய்தேன். நான் அங்கு செல்வதற்குள் டைபீரியஸ் அங்கிருந்து போய் ஏதோ தற்செயலாக வருவது போல் மீண்டும் பழைய அறைக்கு வந்து எங்களைச் சந்தித்தான்” என்று ராணி அந்த இரவின் ஆரம்ப நிகழ்ச்சிகளை விளக்க விளக்க வியப்பெய்திய அடிகள், “அப்படியானால் நான் யாரென்பது டைபீரியஸுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

ராணி தன் மஞ்சத்தைவிட்டு எழுந்திருந்து இரும்பிடர்த் தலையாரையும் கரிகாலனையும் உற்று நோக்கினாள். பிறகு அடிகளின் மீது கண்களை நாட்டிக் கூறினாள்: “தெரியுமோ தெரியாதோ சொல்ல முடியாது அடிகளே. ஆனால் சீக்கிரம் டைபீரியஸ் தெரிந்துகொள்வான். இன்று எத்தனையோ சாமர்த்தியமாக இந்திர விழா விடுதியிலிருந்து தப்ப முயன்றேன். எனக்குப் பணிவிடை புரியும் பரதவப் பெண்ணிடம் செம்பருத்திச் சாறு கொண்டுவரச் சொல்லி மாறுவேடம் புனைந்து, அவள் கொண்டுவந்த உணவுத் தட்டை நான் சுமந்து காவலர் கண்களில் மண்ணைத் தூவி வெளியே வந்தேன். ஆனால், வெளியேயிருந்த அறையில் தட்டை வைத்துவிட்டு விடுதியிலிருந்து நழுவி மரங்களின் நிழல்களில் நான் நகர்ந்தபோது டைபீரியஸ் என் அசைவைக் கவனித்தான். நான் மரக்கூட்டத்தில் மறைந்தேன். ஆனால் ஒரு காலெடுத்து வைக்குமுன்பாகவே அவன் வீசிய கத்தி என் முதுகில் பாய்ந்தது. அப்படியும் நிற்காமல் மரங்களின் நிழல்களில் பதுங்கிக் கடற்கரை வாயிலைத் தாண்டினேன். யவன வீரர்கள் தொடர்ந்தார்கள். மணலில் ஓடினேன். களியாட்டம் ஆடிக்கொண்டிருந்த பரதவர் கூட்டத்தில் புகுந்து மறைந்தேன். பின்பு நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே.”

ராணியின் துணிகரச் செயலைக் கேட்ட அடிகளும் கரிகாலனும், ஏன், இரும்பிடர்த்தலையாரும்கூட எல்லையற்ற பிரமிப்பில் ஆழ்ந்தனர். ராணியின் நீலமணிக் கண்கள் அவர்கள் பிரமிப்பைக் கண்டு சற்று நகைத்ததல்லாமல், அந்தச் சிரிப்பு அவள் செவ்விய இதழ்களிலும் படர்ந்தது. அந்தப் புன்முறுவலை அடக்காமலே மேலும் பேசத் தொடங்கிய ராணி, “பிடர்த்தலையாரே! குடிசை என் ஆணையால் கட்டப்பட்டது. இந்திரா விழா விடுதியிலிருந்து மறைந்து பரதவப் பெண் அங்கு சென்றிருக்கிறாள். என்னைத் தொடர்ந்த யவன வீரர்களிடமிருந்து இதையறிந்தால் டைபீரியஸுக்கு அந்தப் பரதவ மங்கை யாரென்று தெரியாமல் போகுமா? அது கிடக்கட்டும். நான் அங்கு சமயத்தில் வரமுடியாததால் மன்னர் பந்தத்தை அசைத்துச் சைகை செய்தாரே, அதை அடிகள் மட்டும் தான் கவனித் திருப்பாரா? யவன வீரர்கள் கவனித்திருக்க மாட்டார்களா? கண்டிப்பாகக் கவனித்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் டைபீரியஸிடம் தெரிவிக்கப்படும். எந்த மர்மத்தையும் விரைவில் அலசக்கூடிய டைபீரியஸின் ஆராய்ச்சி மனம் இதையும் அலசிவிடும்” என்று விளக்கினாள்.
“இத்தனை ஆபத்திருக்கும்போது என்னை எதற்காகக் கடற்கரைக் குடிசையில் சந்திக்கச் சொன்னீர்கள் ராணி?” என்று கேட்டார் அடிகள்.

“அதைவிடப் பெரிய அபாயம் உங்கள் நாட்டைச் சூழ்ந்திருப்பதால்தான். நீர் என் தலையை அளவெடுக்க வந்த காரணம் எனக்குத் தெரியும் அடிகளே. இந்திர விழா விடுதிமீது ஆகாயத்தை அளாவி எழும் இரு தூண்களின் மர்மத்தை அறியவே முக்கியமாக வந்திருக்கிறீர். உம்மை அனுப்பியதும் பிரும்மானந்தர்” என்றாள் ராணி.

அடிகளின் விழிகள் ஆச்சரியத்தால் பெரிதாக மலர்ந்த தல்லாமல் அவர் உள்ளமும், ‘ராணிக்கு ஒருவேளை சோதிட மும் தெரியுமோ?’ என்று சந்தேகித்தது. அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட ராணி “இதில் சோதிடம் ஏதுமில்லை அடிகளே! ஊகிப்பதிலும் கஷ்டம் எதுவும் இல்லை. டைபீரியஸைச் சரியாக எடைபோட்டுச் சமாளிக்கக்கூடியவர்கள் இருவர்தான் உண்டு. ஒருவர் உங்கள் படைத்தலைவர். இன்னொருவர் பிரும்மானந்தர். வாணகரைக் குன்றிலிருக்கும் தன் கண்ணெதிரே எழும் தூண்களைக் கவனிக்காமலிருப்பாரா அவர்? அல்லது அவற்றை டைபீரியஸ் ஏன் எழுப்புகிறான் என்பதை அறியத்தான் முயலாதிருப்பாரா? கண்டிப்பாய் முயலுவார் என்பது எனக்குத் தெரியும் அடிகளே. பொற்கொல்லர் வேடத்தில் நீங்கள் வந்ததுமே அதைப் புரிந்து கொண்டேன். உமது மூலம் பிரும்மானந்தருக்குச் செய்தியனுப்பும் நோக்கத்துடனேயே உம்மைக் கடற்கரைக்கு வரும்படி நறுக்கு ஓலையில் செய்தி பொறித்தேன்” என்று கூறினாள்.
ராணியின் கூரிய அறிவையும் டைபீரியஸின் நோக்கத்தை மட்டுமன்றி, பிரும்மானந்தர் நோக்கத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியென அவள் உணர்ந்த விந்தையையும் எண்ணிப் பெரிதும் வியந்த இரும்பிடர்த்தலையார் ஏதோ கேட்க வாயெடுத்தார். அதற்கு முன்பாகவே தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து அதுவரை பூண்டிருந்த மௌன விரதத்தைக் கலைத்துவிட்ட கரிகாலன், “அந்தத் தூண்கள் எதற்காக எழுப்பப்படுகின்றன ராணி? அந்தத் தூண்களிலிருந்து எதை அறியப் பிரும்மானந்தர் விரும்புகிறார்?” என்றான்.

இளஞ்சேட்சென்னியின் மகனுடைய வீர வதனத்தை நோக்கித் தன் அழகிய விழிகளைத் திருப்பிய யவன ராணி சொன்னாள்: “எகிப்திலிருந்து வரவிருக்கும் யவனர் கப்பல் களுக்கு வழிகாட்ட” என்று.

“யவனர் கப்பல்களா?” ஆச்சரியத்துடன் வினவினான் கரிகாலன்.

“ஆம் மன்னவா! இன்னும் மூன்று மாதங்களில் யவனர் போர்க் கப்பல்களை எதிர்பார்க்கிறான் டைபீரியஸ். எந்த யவனர் மரக்கலத்தில் சோழர் படையின் உபதலைவர் சிறைப்படுத்தப்பட்டுச் சென்றாரோ, அந்தக் கப்பலின் தலைவன் மூலமே யவன நாட்டுக்குச் செய்தி அனுப்பப்பட்டிருப்பதாகக் கோட்டைத் தலைவனிடம் டைபீரியஸ் கூறியதை நானே கேட்டேன். யவனர் கடற்படையில் ஒரு பகுதி புகாருக்கு வந்துவிட்டதால் நீங்கள் உங்கள் பரம்பரை அரியணையில் அமருவதும் முடி சூடுவதும் பகற்கனவாகும்” என்றாள் ராணி.
“ஆனால் நீங்கள் முடிசூடுவது நனவாகுமே ராணி” என்று பதிலிறுத்தான் கரிகாலன்.

“உண்மைதான் மன்னவா. ஆனால் டைபீரியஸின் உதவியால் முடிசூடுவதை நான் விரும்பவில்லை. நான் புகாரின் ராணியாக முடிசூட உதவக் கூடியவர் என்னை முதன்முதலாகக் கடலலைகளிலிருந்து தூக்கியெடுத்த சோழர் படை உபதலைவர் ஒருவர்தான். யவன குருமார்கள் சொல்லியிருப்பதும் அதுதான். குருமார்களின் வாக்கு பொய்க்காது. விண்மீன்களைக் கொண்டு அவர்கள் செய்யும் ஆராய்ச்சி வீணாகாது. விதி வலிது, மன்னவா. விதி எங்கள் இருவரையும் பிணைத்திருக்கிறது. இந்த மாளிகைக்கு வந்த முதல் நாளே இளஞ்செழியனிடம் நான் கூறினேன். அவர் அன்று நகைத்தார். இனி நகைக்க மாட்டார். ஆகவே இளஞ் செழியன் வரும்வரை நான் காத்திருக்க வேண்டும். அதுவரை இங்கு நிலைமை க்ஷணிக்கவிடாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்களும் உதவ வேண்டும்….” என்றாள் ராணி.

ராணியின் போக்கு சரியாக அடிகளுக்கு விளங்காததால் கேட்டார்,”அதற்கு இவர்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று.

ராணி இரும்பிடர்த்தலையாரைப் பார்த்து, “மன்னவர் நலனை முன்னிட்டுச் சொல்கிறேன் இரும்பிடர்த் தலையாரே, புகாரை விட்டுச் சென்று விடுங்கள். நீங்கள் திரட்டிய படை வேண்டுமானால் இங்கிருக்கட்டும். சமயத்தில் அந்தப் படை உபயோகப்படலாம். ஆனால் நீங்கள் இச்சமயம் கண்காணிக்க வேண்டியது புகாரல்ல, உறையூர். உறையூரில் இன்னும் பத்தே நாட்களில் பெரும் ஒப்பந்தம் ஒன்று தயாராக இருக்கிறது. அதை உடைக்க வேண்டும், இல்லையேல் சோழ நாடு உங்களுடையதல்ல” என்று உள்ளத்திலிருந்த உறுதி சொற் களிலும் தொனிக்கச் சொன்னாள்.

“என்ன ஒப்பந்தம்?” இரும்பிடர்த்தலையாரின் கேள்வி வெறுப்புடன் வெளிவந்தது.

“இதுவரை இருங்கோவேளிடமிருந்து மாரப்பவேளும் நாங்கூர்வேளும் விலகி நிற்கிறார்கள். அவர்களையும் இழுக்க சேர பாண்டிய மன்னர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். என் ஊகம் சரியானால் மாரப்பவேள் மகள் பூவழகிக்கும் இருங்கோவேளுக்கும் திருமணம் நிச்சயமாகலாம். அந்தத் திருமணம் நிறைவேறினால் வேளிர்கள் அனைவருமே இருங்கோவேளின் பக்கம் இணைந்தது போலாகும். தமிழகத் தின் அத்தனை வேளிர்களையும் சேர சோழ பாண்டியர்களை யும், புகாரின் யவனர்களையும் ஏக காலத்தில் எதிர்த்து நிற்கும் சக்தி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்ட ராணி நிமிர்ந்து நின்று “இந்த ஏற்பாட்டை முதலில் தகர்த்தெறியுங்கள் இரும்பிடர்த்தலையாரே. பூவழகியை இருங்கோவேள் மணம் புரிந்தால் யவனர் பிடியிலிருந்து திரும்பும் இளஞ்செழியனின் உதவியைக் கண்டிப்பாய் இழப்பீர்கள்” என்று சுட்டிக் காட்டினாள் ராணி.

ராணியின் விவரத்தைக் கேட்ட கரிகாலன் நீண்ட யோசனையில் ஆழ்ந்தான். அவன் யோசனையைக் கண்ட ராணி மெல்லச் சிரித்துக் கொண்டே புறப்படச் சித்தமாகி இரும்பிடர்த்தலையாரைக் கடைசியாக நோக்கி, “இரும் பிடர்த்தலையாரே! நான் சென்று வருகிறேன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இளஞ்செழியன் இதயம் உங்கள் கப்பலில் இருக்கும்வரை, நானும் உங்கள் பக்கம் தான். சந்தேகமிருந்தால் பிரும்மானந்தரைக் கேளும்” என்று கூறிவிட்டு, “அடிகளே! இந்திர விழா விடுதியின்மீது எழுப்பும் பெரும் தூண்கள் இரண்டும் யவனர் கப்பல்களுக்கு வழிகாட்ட மட்டும் நிர்மாணிக்கப்படவில்லை. வேறு மர்மம் அதில் பிணைந்திருக்கிறது. வாரும் காட்டுகிறேன்” என்று சொல்லி அந்த அறையைவிட்டு வெளியே நடக்கத் துவங்கினாள். அடிகளும் அவளைப் பின் தொடர்ந்தார். அவர்களைத் தடுக்க முயன்ற இரும்பிடர்த் தலையாரைக் கரிகாலன் கையமர்த்திடவே அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற இரும்பிடர்த்தலையார் சோழ நாட்டின் எதிர்காலம் என்னவோவென்று பிரமை பிடித்துக் கவலை முகமெங்கும் பாய்ந்து, பெருமூச்சொன்றும் விட்டார்.

அதைவிட அதிகப் பிரமை ஏற்பட்டது சமண அடிகளுக்கு. அன்றிரவில் மிக சாமர்த்தியமாக இந்திர விழா விடுதிக்குள் அடிகளை அழைத்துச் சென்ற யவன ராணி மெள்ளத் தன் அறைக்குள் நுழைந்து மறைவு வழி ஒன்றால் மேல்தளத் தூண்கள் இருந்த இடத்தை நாடி நடந்து அந்தத் தூண்கள் ஒன்றின் அடிக் கதவைத் திறந்து, “அடிகளே! உள்ளே பாருங்கள்!” என்று கட்டளையிட்டாள். அந்தக் கட்டளையைத் தொடர்ந்து உள்ளே கண்களைச் செலுத்திய அடிகள் ஸ்தம்பித்துப் போய் நீண்ட நேரம் நின்றார். இது தூண்தானா? அன்றி சனாதனிகள் நம்பும் நரகத்தின் உறைவிடமா!’ என்று தமக்குள்ளேயே பெரும் திகிலுடன் சொல்லிக் கொண்டார். அவரை அதிக நேரம் தாமதிக்க விடாத யவன ராணி, மீண்டும் தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்று நீண்ட ஓலையொன்றையும் எழுதி அவரிடம் கொடுத்து, “அடிகளே! இதைப் பிரும்மானந்தரிடம் கொடுங்கள். அவர் புரிந்து கொள்வார்!” என்று உத்தரவிட்டாள்.
தூண்களின் உள்ளே பார்த்ததால் உண்டான பிரமிப்பும் திகிலும் மாறாமலே இந்திர விழா விடுதியை விட்டு வெளியேறிய அடிகளின் பிரமிப்பைவிடப் பன்மடங்கு அதிகப் பிரமிப்பை அடைந்தார் மறுநாள் காலையில் அந்த ஓலையைப் படித்த பிரும்மானந்தர். அந்த ஓலையைப் படித்த பின்பு பிரும்மானந்தர் டைபீரியஸை மறந்தார், புகாரை மறந்தார், உறையூரைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே மறந்தார். சோழ நாட்டைப் பெருத்த அபாய மேகங்களும் சூழ்வதை நினைத்துப் பெருமூச்செறிந்தார். ஆகவே இருங்கோவேளின் ஏற்பாடுகளை உடைக்க மிகப் பயங்கரமான திட்டமொன்றையும் வகுத்தார். அதை நிறைவேற்றும் கருவியாக சமண அடிகளை உபயோகிக்க எண்ணி அவரிடம் தமது யோசனையையும் கூறினார். அந்த யோசனையைக் கேட்டு வெகுண்ட சமண அடிகள், “முடியாது! முடியாது. துறவி செய்யும் வேலையா இது? சுத்த அநியாயம். இந்த அக்கிரமத்துக்கு நான் உடன்படவே மாட்டேன்” என்று கூவினார்.

Previous articleYavana Rani Part 1 Ch53 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch55 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here