Home Sandilyan Yavana Rani Part 1 Ch61 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch61 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

73
0
Yavana Rani Part 1 Ch61 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch61 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch61 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 61 கண்ணீரும் காலநீரும்

Yavana Rani Part 1 Ch61 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

பெருமக்கள் பிறக்கும் புண்ணிய நாடுகளில் சில இழி மக்களும் பிறக்கத்தான் செய்கிறார்கள். செந்நெல் பயிர் விளையும் உயர் நிலங்களில் விழலும்கூடத்தான் விளைகிறது. நறுமலர்களை அளிக்க எழும் செடிகள் பிறக்கும் இடங்களில் அந்தச் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் பிறக்கின்றன. ஆக்கத்துக்குச் சிலரும் அழிவுக்குச் சிலரும் தோன்றுவது இயற்கை. அரசியல், எழுத்து, தொழில் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் இது உண்மை.

விழலில் நெல் விளையாது. ஆனால், நெல்லை விளைவிக்கும் பயிரை அது அழிக்கமுடியும். பூச்சி, புஷ்பத்தை உற்பத்தி செய்யாது. ஆனால் புஷ்பத்தை உற்பத்தி செய்யும் செடியை அது அழிக்கமுடியும். துரோகியால் நாட்டுக்கு நலன் செய்ய முடியாதிருக்கலாம். ஆனால், நாட்டுக்கு நலன் செய்யும் பெருமக்களின்மீது அவதூறு கிளப்பி அவர்களை ஒழித்துவிட முடியும். வேகத்துடன் மொழியைக் கையாண்டு எழுதி மக்களின் அன்பைப் பெற முடியாதவர்கள் இருக்கலாம். அவர்களால் எழுத முடியாதே தவிர எழுதுபவர் களைப்பற்றி வசை கூறமுடியும். வசை கூறிக் கூறி அவர்கள் எழுத்துத் திறனை அழிக்கவும் முடியும்.

நல்லதும் பொல்லாததும், திறமையும் திறமையின்மையும், ஆக்கமும் அழிவும் இப்படி அக்கம் பக்கத்திலேயே தோன்றுகின்றன. ஆகவே நலன் செய்யும் பெருமக்கள் பிறக்கும் நாடுகளில் இழிமக்கள் பிறப்பதில் விந்தையென்ன இருக்கிறது? ஆகவே கலைகளைப் போற்றி வளர்த்த உத்தம மன்னர்களான சோழர்கள் பிறந்த புண்ணிய பூமியில் இருங்கோவேள் பிறந்ததில்தான் என்ன விந்தை இருக்கிறது? அவர்கள் அரியணையில் அவன் அமர்ந்ததுதான் என்ன விந்தை ?

விந்தையில்லைதான். விந்தையென்று யாரும் நினைக்க வில்லைதான். அன்று அந்த எல்லைப்புற மாளிகையின் மாடியறையில் சந்தித்த சமண அடிகளுக்கோ, பூவழகிக்கோ இன்பவல்லிக்கோ யாருக்குமே அது, புதுமையில்லைதான். ஆனால் அன்று கரிகாலன் விவரித்த பயங்கர நிகழ்ச்சிமட்டும் அவர்கள் யாருமே எதிர்பாராதது. அதுமட்டும் அவர்கள் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கவே செய்தது. அப்பேர்ப் பட்ட பயங்கர நிகழ்ச்சி அது. அதற்கு அஸ்திவாரமாகத் துவங்கியதோ அல்லியை அரியணைக்கு உயர்த்தும் இன்பச் செய்தி. இன்பமும் பயங்கரமும் எப்படி. ஒன்றையொன்று அடுத்து வருகிறது என்று நினைத்த பூவழகியென்ன, எல்லோருமே பிரமித்துப் போனார்கள்.

சோழர்கள் அரியணையில் தனக்குப் பக்கத்தில் பட்டத்து ராணியாக அமரவேண்டியவள் பணிமகளான அல்லி என்பதைக் கரிகாலன் சொன்னதுமே பிரமிப்பு அடைந்த அடிகளும் பூவழகியும் இன்பவல்லியும் அல்லிக்கு அந்தப் பதவி எப்படி எட்டியது என்பதை அவன் விவரிக்கத் தொடங்கியதும், அவர்கள் இதயத்திலிருந்த பிரமிப்பு அகன்று எல்லையற்ற வெறுப்பும் ஆத்திரமும் மூளவே, அவர்கள் முகங்களிலும் அந்த உணர்ச்சிகள் சந்தேகத்துக்கு இடமின்றிச் சுடர்விட்டன. மன்னன் விஷயத்தை விளக்க முற்பட்ட அந்த விநாடிவரை அவன் பேசிய பேச்சுக்களுக்குக் காரணத்தை அறியாமல் தவித்துக்கொண்டிருந்த அல்லிக்குக்கூட மெள்ள மெள்ள உறையூர் அரண்மனையில் யாரும் அறியாமல் நடந்தேறிய பயங்கர நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்கள் சிறிது சிறிதாக உள்ளத்தில் சென்று தைக்கவே அவள் உணர்ச்சிகள் ஒரு திசையில் செல்லாமல், கரைகளைப் பல இடங்களில் உடைத்துக்கொண்ட காட்டாற்றைப்போல பல வழிகளில் பாய்ந்து அவளை நிலைகுலைக்கத் தொடங்கின.

கரிகாலன் வெளியிட்ட அந்த நிகழ்ச்சியின் தன்மை அது. இன்பமாக ஆரம்பித்த அவன் பேச்சு, அவர்கள் அனைவரையும் அத்தனை துன்பப் பாதையில் இழுத்துச் செல்லும் என்பதை எல்லாவற்றையும் முன்கூட்டி ஊகிக்கக் கூடிய சமண அடிகளாலேயே ஊகிக்க முடியவில்லை யென்றால், மற்றவர்களைப்பற்றிக் கேட்பானேன்?

அத்தனைக்கும் சமண அடிகள் சற்று வேடிக்கையாகவே அன்று பேச்சைத் தொடங்கினார். கரிகாலன் அல்லியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து, ‘இவள் தான் சோழ நாட்டின் பிற்கால ராணி’ என்று அறிமுகப்படுத்தியதும், “யாரையும் ராணியாக்கிக் கொள்ள மன்னர்களுக்கு உரிமையுண்டு” என்று சற்று விஷமமாகவே சொன்னார் சமண அடிகள்.

அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட கரிகாலன், “அடிகளே! பல ராணிகளை ஏற்றுக் கொள்ள விரும்பும் மன்னர்களுக்குத் தாங்கள் சொல்வது தகுதியாயிருக்கலாம். ஆனால் ஒருத்தி முகம் தவிர, வேறு முகம் பார்க்காத இளஞ்சேட் சென்னியின் மகனுக்கு அது பொருந்தும் என்று நினைக்கிறீர்களா?” என்று வினவினான் தன் கையிலிருந்து அல்லியின் கையை விடுவிக்காமலே.
சமண அடிகள் சற்று ஏதோ சிந்தித்தார். பிறகு கேட்டார், “இளஞ்சேட்சென்னியின் மகன் நாட்டு நலனைக் கருதாமலிருக்க முடியுமா?” என்று.

கரிகாலன் பதில் திட்டவட்டமாக உடனே வந்தது. “முடியாது அடிகளே. முடியவே முடியாது. எந்தச் சொந்த உணர்ச்சிகளுக்காகவும் மன்னன் நாட்டு நலனைக் கைவிட முடியாது” என்றான்.

“அப்படியானால் மன்னர் நாங்கூர்வேள் மகளையல்லவா மணக்கவேண்டும்?” என்று மறுபடியும் கேட்டார் அடிகள் குழப்பம் நிறைந்த பார்வையுடன்.

“வேறு யாரையும் மணக்க நான் திட்டமிடவில்லையே” என்றான் கரிகாலன் அல்லியை ஒருமுறை நோக்கிவிட்டு.

“இந்த அல்லி…” என்று ஏதும் சொல்லவோ மெல்லவோ முடியாமல் விழுங்கினார் அடிகள்.

கரிகாலன் தீர்மானமான, உறுதி பரிபூரணமாகத் தொனித்த குரலில், “இந்த அல்லிதான் நாங்கூர்வேளின் மகள். யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்று ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொருவர் மனத்திலும் நன்றாகத் தைக்க மெள்ள மெள்ளச் சொன்னான்.

“அல்லி நாங்கூர்வேள் மகளா?” பூவழகிகூட நிதானத்தை இழந்து கூவினாள். அடிகளும் இன்பவல்லியும் ஏதும் சொல்ல முடியாமல் விழித்தார்கள். அல்லியின் உணர்ச்சிகள் கடலலைகளாக கொந்தளித்து எழுந்து அவள் உள்ளத்தில் மோதிக் கொண்டிருந்தன.

கரிகாலன் சொல்லியதின் முழு அர்த்தத்தையும் உடனே மனத்தில் வாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த சமண அடிகள், ‘அல்லி நாங்கூர்வேள் மகள்… அல்லி நாங்கூர்வேள் மகள்…’ என்று தனது மனத்திற்குள் இருமுறை சொல்லிக் கொண்டு தம்மைச் சற்றே திடப்படுத்திக் கொண்டு கரிகாலனை நோக்கி, சந்தேகம் சிறிதும் குறையாத குரலில் கேட்டார், “அல்லி நாங்கூர்வேள் மகளாகி எத்தனை நாட்களாகின்றன?” என்று,

“மூன்று நாட்களுக்கு மேலாகின்றன அடிகளே” என்றான் கரிகாலன், பதற்றம் சிறிதுமில்லாமலே.

“இந்த விஷயம் பிரும்மானந்தருக்குத் தெரியுமா?” என்று அடிகள் வினவினார்.

“தெரிந்திருக்காது.”

“எப்படி ஊகிக்கிறீர்கள்?”

“தெரிந்திருந்தால் உம்மை இங்கு அனுப்பியிருக்க மாட்டார்.”

“அவருக்குத் தெரியாதது மன்னருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?”

“எனக்கா?”
“ஆம். வேறு யாரை என் நாவு மன்னனென்று அழைக்கும்?”

அடிகளின் இந்த ராஜ பக்தியால் உணர்ச்சிகளுக்கு அடிமையான கரிகாலன், அல்லியின் கையைத் தன் பிடியி லிருந்து நழுவவிட்டு அந்த அறையில் இருமுறை அப்படியும் இப்படியும் நடந்தான். பிறகு சற்றே நின்று அடிகளின்மீது தன் கூரிய விழிகளை நாட்டிவிட்டுச் சொன்னான், “அடிகளே! பிரும்மானந்தர் இன்றைய தமிழகத்தில் பெரிய ராஜதந்திரி என்பதை அனைவரும் உணருவார்கள். யவனர் கடற்படைத் தலைவனும், புகாரை இப்பொழுது தனது இரும்புப் பிடியில் வைத்திருப்பவனுமான டைபீரியஸே அவரைக் கண்டு அஞ்சுகிறான். அவர் ஒற்றர்கள் இல்லாத இடமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அவருக்கே சோழநாட்டு விடுதலைச் சுமை அனைத்தையும் கொடுப்பது சரியல்ல என்ற காரணத்தால் என் மாமன் இரும்பிடர்த்தலை யாரும் நானும் போர்ப் படைகளைத் திரட்டினோம். ஒற்றர் படையும் திரட்டினோம். பிரும்மானந்தருக்கு எத்தனை விஷயங்கள் இன்றைய சோழ நாட்டைப் பற்றித் தெரியுமோ அத்தனை விஷயங்கள் எனக்கும் தெரியும்…”

இந்த இடத்தில் சற்று வார்த்தைகளை நிறுத்திய கரிகாலன் சில விநாடிகள் யோசித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினான்: “அடிகளே! இப்படி இருவகை ஒற்றர்படை என் சார்பாக உலாவுவதால் கிடைக்கும் விவரங்கள் சில வேளைகளில் மாறுபடுகின்றன. ஒருவருக்குக் கிடைக்கும் செய்தி மற்றவருக்குக் கிடைப்பதில்லை. கிடைக்காத செய்தி யால் முடிவுகளும் மாறுபடுகின்றன. அதனால்தான் மாரப்ப வேளின் மகளை இருங்கோவேளுக்குப் பலி கொடுக்கத் துணிந்தார் பிரும்மானந்தர். நாங்கூர்வேளையும் மாரப்ப வேளையும் இருங்கோவேளுடன் இணைக்க அவர் செய்யும் முயற்சிக்கு அஸ்திவாரம் ஒன்று இருந்தது. அது தகர்ந்து விட்டது…” என்று சொல்லி, அடிகளை நோக்கினான் இளஞ்சேட்சென்னியின் மகன்.

மன்னன் பேச்சுகளால் குழப்பம் மீறி நின்ற அடிகள் கேட்டார், “என்ன அஸ்திவாரம் அது?” என்று.

“நாங்கூர்வேள் என்ற அஸ்திவாரம்.”

“அது எப்படித் தகர்ந்தது?”

பதிலுக்கு எல்லோரும் திகைத்து மூச்சடைத்து நிற்கும் படி, பெருவெடியை எடுத்து வீசினான் கரிகாலன். “நாங்கூர் வேள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்” என்ற கரிகாலன் சொற்கள், மீண்டும் அந்த அறைச் சுவர்களில் தாக்கி எழுந்து பலமுறை எதிரொலி செய்யவே பல பேர் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பயங்கரச் சூழ்நிலை அந்த இடத்தில் ஏற்பட்டது.

அதுவரை மஞ்சத்தைவிட்டுச் சில அடிகள் நகர்ந்து வந்து நின்றுகொண்டிருந்த பூவழகி இருமுறை தள்ளாடி, பின்புறம் நடந்து பஞ்சணையில் தொப்பென உட்கார்ந்து தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டாள். அவள் நிலையைக் கவனித்த அல்லியும், இன்பவல்லியும் பஞ்சணையை நோக்கி ஒட்டி அவளுக்கு இரு புறங்களிலும் அமர்ந்து அவளைப் பிடித்துக் கொண்டார்கள். சமண அடிகள் நிலையும் கிட்டத்தட்டப் பூவழகியின் நிலையை ஒத்திருந்ததானாலும் அவர் தம்மை மெள்ளச் சமாளித்துக் கொண்டு, “தமிழகத்தின் பெருமகனான நாங்கூர்வேளை விஷம் வைத்துக் கொன்று விட்டானா இருங்கோவேள்! இது எப்பொழுது நடந்தது? ஏன் நடந்தது மன்னவா?” என்று கேட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடந்ததாக உறையூரிலுள்ள எனது ஒற்றர்களிடமிருந்து செய்தி கிடைத்தது. பூம்புகாரை யவனருக்குச் சாஸனம் செய்து கொடுத்து வேற்று நாட்டு அரசு ஒன்று தமிழகத்தில் துளிர்விட இடங்கொடுத்ததை நாங்கூர்வேள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தாராம். அந்த எதிர்ப்பு சமீபத்தில் உச்ச நிலையை அடைந்ததாகவும், பகிரங்கமாக அரண்மனையில் பலர் முன்னிலையில் நாங்கூர்வேள் அத்துமீறி இரைந்துவிட்ட தாகவும், அதன் விளைவாக மூன்று நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து நாங்கூர்வேளை இருங்கோவேள் ஒழித்துக் கட்டிவிட்டதாகவும் செய்தி கிடைத்தது” என்று விவரித்தான் கரிகாலன்.

“என்ன துணிவு அவனுக்கு, தனக்கு உதவிவந்த ஒரு பெரும் கரத்தை வெட்டிச் சாய்க்க…!” அடிகள் திகைப்பும் வியப்பும் கலந்த குரலில் மெள்ளச் சொன்னார்.

“மன்னர் இளஞ்சேட்சென்னியைத் தீயினால் மாய்த்து என்னையும் தீயிலிட்டுக் கொல்ல முயன்றவன், வேண்டாத வரை விஷம் வைத்துக் கொல்வதில் விந்தையென்ன இருக்கிறது அடிகளே!” என்ற கரிகாலன் மேலும் பேச்சைத் தொடர்ந்து, “அடிகளே! பிரும்மானந்தர் நல்ல எண்ணத் துடன் காரியங்களைச் செய்கிறார். ஆனால் அவர் முறைகளை நான் ஒப்புக் கொள்ளவில்லையென்று அவரிடம் சொல்லும். இளஞ்செழியனிடம் இதயத்தைப் பறிகொடுத்திருக்கும் இந்த ஏந்திழையின் வாழ்க்கையைப் பாழடித்து நான் பதவி ஏற்க விரும்பவில்லையென்பதை எடுத்துச் சொல்லும். விஷத்தினாலும் நெருப்பினாலும் நல்லவர்களை அழிக்கும் நச்சுப் பாம்பை நசுக்க வேறு வழிகளை நான் வகுத்து விட்டதாகக் கூறும். விரைவில் நான் பிரும்மானந்தரைச் சந்திக்கிறேன் என்று சொல்லும். அத்துடன் நாங்கூரின் அடுத்த பங்காளி இப்பொழுது இருங்கோவேளின் அரண்மனையில் அலுவல் புரியும் அல்லியின் தந்தை என்பதையும் தெரியப்படுத்தும்” என்று உணர்ச்சிகள் உள்ளே கொந்தளிக்க, கொந்தளித்த உணர்ச்சிகள் சொற்களிலும் ஊடுருவச் சொன்னான்.

அடிகளுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. பிரும்மானந்தர் திட்டங்கள் எதிர்பாராத விதமாக உறையூரில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளால் காற்றில் பறப்பதை உணர்ந்தார். அத்தனை குழப்பத்திலும் பூவழகியை உற்றுப் பார்த்தார். அவர் பார்ப்பதைக் கண்ட அல்லி கேட்டாள்: “அடிகளே! இருங்கோவேளுக்கும் மாரப்பவேள் மகளுக்கும் திருமணம் நடக்க முடியாதென்பதற்குக் காரணம் காட்டுவதாகத்தானே உம்மை இங்கு அழைத்து வந்தேன்?”

“ஆம்.” அடிகளின் குரல் சற்றுப் பலவீனமாக ஒலித்தது.

“காரணத்தை இதோ பாரும்” என்ற பூவழகியின் இளைத்த உடலைச் சுட்டிக் காட்டினாள் அல்லி. “இந்த வஞ்சிக்கொடியை நெருப்பையும் விஷத்தையும் ஏந்தி நிற்கும் இருங்கோவேளிடம் சேர்க்கமுடியுமா? நெருப்பில் இந்தக் கொடி வெந்துவிடுமே அடிகளே! இந்தச் சிறு விஷயம் உமக்கும் பிரும்மானந்தருக்கும் ஏன் புரியவில்லை?” என்று கேட்டாள், அல்லி குரலில் கோபமும் துக்கமும் கலந்து விளையாட.

“ஆனால் இளஞ்செழியன்…” என்று அப்பொழுதும் விடாமல் ஏதோ சொல்ல முயன்றார் அடிகள்.

பூவழகி ஆசனத்திலிருந்து எழுந்து அடிகளின் மீது தன் அழகிய விழிகளை நாட்டினாள். “கண்டிப்பாய்த் திரும்பி வருவார் அடிகளே!” என்றாள் உறுதி நிரம்பிய குரலில்.

“எப்படித் தெரியும் பூவழகி? அவர் ஒருவேளை….” என்று இழுத்தார் அடிகள்.

“துணிவுடன் சொல்லுங்கள், அடிகளே! இறந்திருந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்கள்? நீர் கேட்பதில் தவறில்லை. ஏனென்றால் என் இதயம் உமக்கில்லை யல்லவா?” என்றாள் பூவழகி, கிளியும் வெட்கப்படும் குரலில்.

“உன் இதயமா?”

“ஆம் அடிகளே!”

“அதற்கென்ன?”

“அதற்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும்.”

“எப்படித் தெரியும்?”

“அவர் இருக்குமிடங்களில் தானே அதுவும் இருக்கும். அவர் செல்லுமிடங்களுக்கு அதுவும் தொடரும். உமக்குப் புரியாது அடிகளே. என் இதயத்துக்குத் தெரியும். அவர் உயிருடனிருக்கிறார் திரும்பவும் வருவார் என்று. அவருக் காகவே காத்து ஏங்கி நிற்கிறது இந்த உடல் உயிரைத் தாங்கி” எனக் கூறிய பூவழகி, கண்களில் எழுந்து திரண்ட நீரை மற்றவர்களுக்குக் காட்ட இஷ்டப்படாமல் சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே பார்த்தாள். அவள் கண்களில் திரண்ட நீர்த்துளிகள், உருண்டோடி ஆறு முறை சாளரத்தை நோக்கிச் சொட்டின. கால வெள்ளமும் ஆறு மாதங்களைத் தன் ஆழ் நீரில் கவர்ந்து கொண்டது. அந்த ஆறாவது மாதத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு பெரும் சம்பவம் உருவெடுத்தது.

முதல் பாகம் முற்றும்

Previous articleYavana Rani Part 1 Ch60 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here