Home Sandilyan Yavana Rani Part 2 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

121
0
Yavana Rani Part 2 Ch1 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch1 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 1 இளஞ்செழியன் மதிப்பு!

Yavana Rani Part 2 Ch1 | Yavana Rani | TamilNovel.in

ஆறு மாதங்கள்! மனித சரித்திரத்தில் அந்தக் காலப் பகுதி கண்ணுக்குச் சிறிதும் புலப்படாத மிகச் சிறு புள்ளி.

ஆனால் தனி மனிதன் வாழ்வில் அது பெரும் பகுதி. அதுவும் வாழ்வின் சோதனைகளில் ஈடுபட்டுச் சுழலும் மனித இதயங்களுக்கு அது மாபெரும் யுகம்! அத்தகைய ஒரு யுகத்தையே தாண்டிக் கொண்டிருந்தாள் பூவழகி அந்த ஆறு மாதங்களில். எல்லைப்புற மாளிகையில் இளஞ்செழியனை நினைத்து அவளது கண்களிலிருந்து உருண்டோடி சாளரத்தை நனைத்த அந்த அறு கண்ணீர்த் துளிகளும் புறம்பே தெரிந்த சோகத் துளிகள்! அவற்றை மறைக்க அவள் எத்தனையோ முயன்றும் முடியாமற் போகவே அல்லியும் இன்பவல்லியும் அவற்றைக் காணவே செய்தனர். ஆனால் அடுத்த ஆறு மாதங் களில் அவள் இதயம் சிந்திய ரத்தத் துளிகளை யார் கண்டார்? மனிதர் யாரும் காணவில்லையென்பது நிச்சயம். ஆனால் ஆண்டவன் கண்டுதானிருக்க வேண்டும். இல்லாவிடில் அந்தக் கற்புக்கரசியின் புறக் கண்ணீரும் அகக் கண்ணீரும் எத்தனை கவசங்களாக மாறித் தமிழகத்திலிருந்து திடீரென மறைந்துவிட்ட இளஞ்செழியனைக் காத்து நின்றன!

அந்த அறு மாதங்களில் நிகழ்ந்த பல அற்புதங்களுக்கு ஹிப்பலாஸ் இளஞ்செழியனின் இணையற்ற புத்தி கூர்மை யையும் வீரத்தையுமே காரணமாக நினைத்தான். அவன் நினைத்ததிலும் தவறில்லை. புறக்கண்ணுக்கும் மனித சிந்தைக்கும் எட்டியதைத்தான் அவன் நினைத்தான். ஆனால்

மனித சிந்தைக்கும் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தி, கற்புக் கரசியின் கண்ணீரால் வகுக்கப்பட்ட இணையற்ற பெரும் கவசம் இளஞ்செழியனைக் காத்து நின்றதை அவன் எப்படி அறிவான்! அறிந்தாலும் அவன் எப்படி அதை ஒப்புக் கொள்ளமுடியும்? தன் கண்ணெதிரே இளஞ்செழியன் செய்த வீரச் செயல்களை மற்றொருவரின் செயல் என்று எப்படி ஊகிக்க முடியும்? இதில் மனித சக்தியோ, யுக்தியோ சம்பந்தப் படவில்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அது மட்டும் தான் காரியங்களைச் சாதிக்கிறது என்று நினைப்பதில்தான் பிசகு இருக்கிறது. அந்தப் பிசகை மட்டும் இளஞ்செழியன் செய்யவில்லை. எத்தனையோ போராடியும் பலனில்லாமல் கொள்ளைத் தலைவனிடம் சிக்கிக் கொண்ட இளஞ்செழியன் ஆண்டவனின் திருவிளையாடலைத்தான் எண்ண முற்பட்டான்.

இளஞ்செழியன் விதியென்று ஒன்று உண்டு என்பதை நம்பியவனல்ல. ஆனால் ஆண்டவன் ஒருவன் உண்டு என்பதை மட்டும் திடமாக நம்பினான். விதியென்ற பெயரால் மனிதர்கள் செய்யவேண்டிய கடமையைச் செய்யாது சோர்விழந்து கிடப்பதைத்தான் வெறுத்தானே தவிர, எல்லாம் மனித சக்தியால்தான் நடக்கிறது என்ற நாத்திக வழியில் வந்தவனல்ல. ஆத்திகத்தில் மனிதன் செயலுக்கு முக்கிய இடம் இருக்கிறது. முயற்சி அவசியம், அதைப் புறக்கணிப்பது கடமை தவறுவதாகும் என்ற கொள்கைகளில் வளர்ந்தவன். ஆகை யால் ஆண்டவன் நினைப்புடன் சுய முயற்சியிலும் என்றும் நம்பிக்கையுள்ளவன். அந்த நம்பிக்கையையோ, ஆண்டவ னிடம் உள்ள பற்றுதலையோ சிறிதும் விடாமலே கொள்ளைக் கப்பலில் பயணம் செய்த இளஞ்செழியன் ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.

கொள்ளைத் தலைவன் கப்பல் மிகப் பெரியதாகவும் ஒரு பக்கத்துக்குச் சுமார் முப்பது துடுப்புக்களை உடையதாக வும் இருந்ததால், கொள்ளைக்காரர்களுக்கு மட்டுமன்றி அடிமைக் கப்பலிலிருந்து பிடிக்கப்பட்டவர்களுக்கும் இடம் மிகத் தாராளமாயிருந்தபடியால்யாரும் நெருக்கியடிக்காமல் மிகத் தாராளமாக உட்கார முடிந்ததையும், உட்கார்ந்தவர்களை அந்தந்த இடத்தில் பிணைத்துப் போடுவதற்காகப் பல இரும்பு வளையங்களும் சங்கிலிகளும் உள்ள தளைகள் ஏற்கெனவே கப்பலில் அமைக்கப்பட்டிருந்ததையும் கவனித்த இளஞ்செழியன், அந்தக் கப்பல் கிரேக்கர்களுடையதாயிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான். அது கிரேக்கர்கள் கப்பலானால் கொள்ளைக்காரர்கள் கிரேக்கர்களிடமிருந்து அதைக் கைப்பற்றியிருக்கவேண்டுமென்றும், அப்படியானால் அது யவனர் இருக்குமிடம் போக முடியாதென்றும் முடிவுக்கு வந்தான். ‘யவனர்கள் இருக்குமிடங்களுக்குப் போகவில்லை யென்றால் மரக்கலம் எதற்காக வடமேற்குத் திசையில் ஓடுகிறது? கொள்ளைக்காரனைப் பார்த்தால் அராபியனாகத் தெரிகிறது. ஒருவேளை இன்னும் மூன்று நாள் பயணத்துக்குப் பிறகு திசையைத் திருப்பிக் கொள்வானா? என்றும் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். தவிர, கொள்ளைக்காரர்கள் தலைவன் தன்னைப் பிடித்ததும், தன் பெயரைக் கேட்டதும், பிறகு தன்னால் இருபதினாயிரம் பொற்காசுகள் கிடைக்குமென்று மற்றவர்கள் முன்னிலையில் கூறியதையும், சிறை பிடித்த பின்பும் தனக்கு மட்டும் ஓரளவு சுதந்திரமளித்திருந்ததையும் எண்ணிப் பார்த்து, அவற்றுக் கெல்லாம் ஏதும் காரணம் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் சோழர் படையின் உபதலைவன்.

இப்படிப் பலவிதமாக யோசித்து, சுதந்திரம் ஓரளவு இருந்தபோதிலும் அடிமைகளோடு அடிமையாய் உட்கார்ந்திருந்த இளஞ்செழியனை நோக்கி மரக்கலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து வந்த ஹிப்பலாஸ், “அப்பாடா!” என்று ஆயாசத் துடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். ஹிப்பலாஸை ஏறிட்டு நோக்கிய இளஞ்செழியன், தங்களிருவரும் சிறைப் பட்ட அந்த முதல் மூன்று நாட்களில் ஹிப்பலாஸுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான நிலைமையை நினைத்துப் பெருமூச்செறிந்தான். இளஞ்செழியன் ஒருவனைத் தவிர அடிமைக் கப்பலிலிருந்து பிடிபட்ட மற்ற எல்லோருக்கும் பலவித அலுவல்களைக் கொடுத்திருந்த கொள்ளைத் தலைவன் கூடிய வரையில் கடுமையாக வேலை வாங்கினான். ஹிப்பலாஸின் உயரத்தையும் உடல் உறுதியையும் கவனித்த கொள்ளைத் தலைவன், அவனைத் துடுப்புத் தள்ளும் பணிக்கு நியமித்திருந்தானாகையால் ஹிப்பலாஸின் உரமான கைகள் அந்த மூன்று நாட்களில் பெரும் சோர்வை அடைந்திருந்தன. மிகவும் சோர்வு ஏற்பட்டு மனிதன் மயக்கமுறும் நிலைக்கு வந்த பிறகு இருமுறை அவன் முகத்தில் தண்ணீர் அடித்து அதிலும் பயனில்லாத சமயத்திலேயே ஓய்வு என்பது அளிக்கப்பட்டதால், குற்றுயிரும் குலையுயிருமாகவே தளத்துக்கு வந்த ஹிப்பலாஸ் ஆயாசப் பெருமூச்சு விட்டதன்றி இளஞ்செழியனுக்கெதிரில் படுக்கவும் செய்தான். அப்படி அவன் படுத்தபோதும் இளஞ்செழியன் அவனைக் கவனிக்காமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்து கிடப்பதைக் கண்ட ஹிப்பலாஸ், “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று ஆயாசப் பெரு மூச்சுக்கிடையில் சற்று எரிச்சலுடன் வினவவும் செய்தான்.

“இந்த மரக்கலத்தையும் இது போகும் திசையையும் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஹிப்பலாஸ்” என்றான் இளஞ்செழியன்.

“இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது படைத் தலைவரே!” என்று மீண்டும் கேட்டான் ஹிப்பலாஸ்.

ஹிப்பலாஸில் வார்த்தைகளைக் கேட்ட இளஞ் செழியன் இதழ்களில் இளநகை படர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது பெருநகையாகவும் ஒலித்தது. அத்தனை அபாய நிலையிலும் சோழர் படை உபதலைவன் நகைப் பதைக் கண்டு ஓரளவு வெகுண்ட ஹிப்பலாஸ், “நகைப்பதற்கு என்ன இருக்கிறது படைத் தலைவரே?” என்று வினவினான்.

“நீ அழைக்கும் முறையில் இருக்கிறது ஹிப்பலாஸ்.”

“நான் அழைக்கும் முறையில் தவறென்ன இருக்கிறது?”

“என்னைப் படைத்தலைவரே என்று அழைக்கிறாயே?”

“ஆமாம். அழைக்கிறேன்.”

“படை எங்கே இருக்கிறது?” இதைச் சுட்டிக் காட்டி மீண்டும் சிரித்தான் இளஞ்செழியன். ஹிப்பலாஸ் நகைக்க வில்லை. ஏன் புன்சிரிப்புகூடக் கொள்ளவில்லை. மெள்ள எழுந்து உட்கார்ந்து இளஞ்செழியனை நோக்கிவிட்டுச் சொன்னான், ‘ஹிப்பலாஸ் என்று ஒருவன் இன்னுமிருக் கிறான் பிரபு!” என்று.

“தனி மரம் தோப்பாகுமா ஹிப்பலாஸ்? தனி மனிதன் படையாக முடியுமா?” என்று கேட்டான் இளஞ்செழியன். ஹிப்பலாஸின் பேச்சின் பொருளைக் கிரகித்துக் கொண்டு.

ஹிப்பலாஸ் சுற்றிலும் பரந்து கிடந்த கடற்பரப்பைப் பார்த்தான். பிறகு இளஞ்செழியனை நோக்கி, “பிரபு! இதோ இந்த அகண்ட நீர்ப்பரப்பின் சாட்சியாகச் சொல்கிறேன். ஹிப்பலாஸ் ஒருவன் இருக்கும் வரையில் நீங்கள் படைத் தலைவர்தான். தவிர நான் தமிழகம் திரும்பினாலும் திரும்பாவிட்டாலும் நீங்கள் தமிழகம் திரும்புவது நிச்சயம். மீண்டும் நமது படைகளுக்குத் தலைவராவதும் நிச்சயம்” என்றான்.

அதுவரை ஏதேதோ யோசனையில் ஆழ்ந்து கிடந்ததால் சலித்துக் கிடந்த இளஞ்செழியன் புத்தி, ‘நீங்கள் தமிழகம் திரும்புவது நிச்சயம்’ என்று ஹிப்பலாஸ் சொன்ன மாத்திரத்தில் யோசனைத் தூக்கத்திலிருந்து முழு விழிப்பு விழித்தது. அந்த விழிப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சி, குரலிலும் தொனிக்கக் கேட்டான் இளஞ்செழியன், “ஹிப்பலாஸ்! இதென்ன ஊகமா, அல்லது விதியில் கிரேக்கர்களுக்கு உள்ள நம்பிக்கையா?” என்று.

“ஊகமுமில்லை, விதியிலுள்ள நம்பிக்கையுமில்லை. நான் அறிந்த உண்மை ” என்றான் ஹிப்பலாஸ்.

“எப்படியறிந்தாய் அந்த உண்மையை ஹிப்பலாஸ்? யாரிடமிருந்து அறிந்தாய்? இந்த மரக்கலத்தில் உனக்குச் செய்தி சொல்பவர் யார்?” என்று கேட்டு, கண்களை நாலாபக்கத்திலும் ஓட்டினான் இளஞ்செழியன்.

கப்பலின் பக்கப் பலகைகளிலும் இரு முகப்புகளிலும் ஆயுதபாணிகளான கொள்ளைக்காரர்கள் நின்றுகொண் டிருந்தார்கள். அவர்களில் சிலர் அடிமைகள். அப்படி இப்படி நகர்ந்தாலோ, கூட்டம் கூடிப் பேசினாலோ அடக்கு வதற்காகப் பெரும் தோற்கசைகளைக் கையில் பிடித்துக் கொண்டு அப்படியும் இப்படியும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கசைகளுக்கு அஞ்சிய அடிமைக் கும்பல் ஆங்காங்கு தனித்துத் தனித்துச் செயலற்றுக் கிடந்தது. இவற்றையெல்லாம் துருவிப்பார்த்துப் புன்னகை கொண்ட இளஞ்செழியனைப் பார்த்த ஹிப்பலாஸ் மிகவும் மெதுவான குரலில், “இப்பொழுது எதையும் கேட்காதீர்கள். இரவில் சொல்கிறேன்” என்று கூறிவிட்டுத் தளத்தின் பலகையில் நன்றாக மல்லாந்து படுத்துவிட்டான். இளஞ்செழியன் தான் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்திருந்து மெள்ள நடந்து கப்பல் ஓடிக் கொண்டிருந்த திசையிலிருந்த முகப்புக்குச் சென்றான்.

அப்பொழுது மாலை வேளை மறைந்து இரவு மெள்ள மெள்ள உட்புகுந்து கொண்டிருந்தது. கொள்ளைக்காரர்கள் கப்பலின் முக்கிய பகுதிகளில் பந்தங்களை ஏற்றினார்கள். கப்பல் தளத்தின் ஒரு கோடியிலிருந்த. கொள்ளைத் தலைவனின் அறை முகப்பிலும் ஒரு பந்தத்தைக் கொளுத்தி வைத்தார்கள். இரவின் அந்தப் பயங்கரச் சூழ்நிலையிலும் இயற்கை மிக அழகாகத் திகழ்ந்ததைக் கவனித்தான் இளஞ் செழியன். தென்மேற்குப் பருவக் காற்றில் மிக வேகமாக எரித் திரியக் கடலின் பெரும் நீர்ப்பரப்பைக் கிழித்துச் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலின் அமைதியிலும், அந்த அமைதியைக் கிழிக்க மெள்ள மெள்ள மரக்கலத்தின் பக்கப் பகுதிகளைத் தட்டிக்கொண்டிருந்த அலைகளின் மென்மை யான சப்தத்திலும், வானத்தில் விரிந்து கிடந்த பெரிய கறுப்புக் கம்பளியில் இறைந்து கிடந்த வைரக் குவியல்களிலும், இயற்கையின் இந்திர ஜாலத்தைக் கவனித்த இளஞ்செழியன் ஆண்டவனின் சிருஷ்டி விசித்திரத்தை எண்ணி எண்ணி வியந்தான். இப்படி இயற்கையழகைப் பருகிக்கொண்டு நின்ற இளஞ்செழியன் மனம் நள்ளிரவை நோக்கியே ஓடிக்கொண் டிருந்ததால் சிறிது அமைதியையும் இழந்து நின்றது. ‘இரவில் ஹிப்பலாஸ் எதைச் சொல்லப் போகிறான்? என்ன அப்பேர்ப்பட்ட உண்மையைத் தெரிந்து கொண்டுவிட்டான்?’ என்று திரும்பத் திரும்ப எண்ணியும் விடையேதும் கிடைக்காமற் போகவே கப்பலின் ஓர் ஓரமாகச் சென்று பலகையில் மல்லாந்து சாய்ந்து கொண்டு விண்மீன்களின் நிலையை ஆராய்ந்தான். இப்படி நீண்ட நேரம் ஆராய்ந்து கொண்டே காலத்தைக் கடத்தியவனுக்குக் கொள்ளைக்காரனொருவன் அந்த இடத்திலேயே மரத்தட்டில் சிறிது சோற்றையும் மானிறைச்சியும் கொண்டு வந்து கொடுக்கவே அதை உண்டு, தட்டை நீர் விட்டுக் கழுவி அவனிடம் கொடுத்த இளஞ்செழியன் மற்றவர்களைக் கொள்ளைக்காரர்கள் நடத்தும் முறையையும் கவனித்தான். அடிமைக் கப்பலிலிருந்து பிடிப்பட்ட மற்றவர்கள் கசையடி சப்தத்தால் எழுப்பப்படவே அவர்களுக்கெதிரே மரத் தட்டுக்கள் வெகு அலட்சியமாக வீசப்பட்டன. அவற்றில் சோறும், சரியாக வேகாத கறியும் எறியப்பட்டன. வயிற்றுக் கொடுமையால் அந்த உணவையும் அடிமைகள் ஆவலுடன் உண்பதைக் கவனித்த இளஞ்செழியன், ‘எனக்குமட்டும் ஏன் இப்படித் தனி மரியாதை?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

இப்படிப் பல கேள்விகளாலும் பதில்களாலும் காலத்தை ஓட்டிய இளஞ்செழியன் நடுநிசி மெள்ள நெருங்கி விட்டதை உணர்ந்தான். ‘அதோ புஷ்பக் கொத்துப் போலிருக்கும் புஷ்ப நட்சத்திரத்தின் கூட்டம் இந்தப் பகுதிக்கு வந்துவிட்டது. ஹிப்பலாஸ் வரும் நேரமாகிவிட்டது’ என்று நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைந்த இளஞ்செழியன் கப்பலை சுற்று முற்றும் நோக்கி அடிமைகள் எல்லோரும் உறங்கி விட்டதையும், கொள்ளைக்காரர்களில் சிலர்கூடத் தங்கள் காவலிடங்களிலேயே சாய்ந்து சொப்பன உலகத்துக்குச் சென்றுவிட்டதையும் கண்டு, கப்பலின் பக்கப் பலகையில் சாயந்து கொண்டான்.

கப்பலில் அரவம் அடியோடு அடங்கிவிட்டதால் எரித்திரியன் கடலில் சூழ்நிலை மிகப் பயங்கரமாகி விட்டது. ஏதோ ‘ஹோ’வென்று பெரும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சுழற்றியடித்த தென்மேற்குப் பருவக் காற்றுக் கூட இடையிடையே ஊதி ஊதிச் சப்தம் செய்து ஊழிக் காற்று ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்குச் சான்று காட்டியது. அந்த ஊதல் காற்றுக்கிடையே மிதந்து வருபவனைப்போல் ஓசைப்படாமல் வந்து இளஞ்செழியன் பக்கத்தில் நின்று கொண்ட ஹிப்பலாஸ், “பிரபு! திரும்பிக் கடலைக் குனிந்து பாருங்கள்” என்றான்.

அந்த எச்சரிக்கையின் காரணத்தைப் புரிந்துகொண்ட இளஞ்செழியன் ஹிப்பலாஸ் கூறியதுபோல் கடலின் பக்கம் திரும்பி, மரக்கலத்தின் பக்கப் பலகையில் மார்பை அழுத்திக் கொண்டு கடலைக் குனிந்து நோக்கினான். ஹிப்பலாஸும் படைத் தலைவனை நெருங்கி நின்று கடல் நீரை நோக்கிக் குனிந்து, “பிரபு! எனக்கு நள்ளிரவு வரை துடுப்புத் தள்ளும் பணி இருப்பது தங்களுக்குத் தெரியுமல்லவா?” என்று படைத் தலைவனுக்கு மட்டும் கேட்கும்படியாக மெல்ல வினவினான்.

“தெரியும் ஹிப்பலாஸ்” என்றான் இளஞ்செழியன், தெரிந்த விஷயத்தை ஹிப்பலாஸ் எதற்காக மீண்டும் வலியுறுத்துகிறான் என்பதை அறியாமல்.

“நேற்றும் பணியை முடித்துக் கொண்டு திரும்பினேன்.”

“உம்! சொல் ஹிப்பலாஸ்.”

“வரும்பொழுது மரக்கலத் தலைவன் அறையில் இருவர் பேசும் சப்தம் கேட்டது.”

“ஒட்டுக் கேட்டாயா?”

“ஆமாம்.”

“என்ன பேசிக் கொண்டிருந்தார்கள்?”

“உங்களால் இருபதினாயிரம் பொற்காசுகள் தமிழ் நாட்டில்தான் கிடைக்கும் என்று கொள்ளைத் தலைவன் கூறினான். ஆனால் மற்றவன் ஒப்பவில்லை. யவனர்கள் அதைவிட அதிகப் பணம் கொடுப்பார்கள் என்றான் மற்றவன்.”

“அந்த மற்றவன் யார்?”

“இந்த மரக்கலத்தின் உபதலைவன்.”

“அதற்குத் தலைவன் என்ன சொன்னான்?”

“இவனை யவனர்கள் கால் காசுக்கு மதிக்க மாட்டார்கள். மிஞ்சிப்போய் நாமும் இவன் மதிப்பை உயர்த்திச் சொன்னால் ஐம்பது பொற்காசுகள் தான் கிடைக்கும் என்றான் கொள்ளைத் தலைவன்.”

“அவ்வளவுதானா என் மதிப்பு வெளி நாட்டில்?”

“அப்படித்தான் கொள்ளைத் தலைவன் அபிப்பிராயப் படுகிறான்.”

அத்தனை துன்பத்திலும் இளஞ்செழியன் மெல்ல நகைத்தான். அந்த நகைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இளஞ்செழியனின் ஆத்திரத்தை உச்ச நிலைக்குக் கொண்டு போகவும், ஏன் கப்பல் சம்பந்தமாக அடுத்த சில தினங்களில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு அடிகோலுவதற்குமான ஒரு முக்கிய உண்மையை அடுத்த சொற்களில் எடுத்து வீசினான் ஹிப்பலாஸ். அந்தச் சொற்களைக் கேட்டதும் ஆத்திரத்தாலும், பிரமிப்பாலும் நிலைகுலைந்து போன இளஞ்செழியன் ஈட்டியிலும் கூரிய தன் விழிகளை ஹிப்பலாஸ்மீது திருப்பினான். “இது உண்மையா? அப்படியா சொன்னான் கொள்ளைத் தலைவன்? அப்படியானால் தமிழகத்தின் ஆபத்து அதிகரிக்கிறது!” என்று சுடு சொற்களை உதிர்த்த இளஞ்செழியன், “ஆகவே…” என்று ஏதோ சொல்ல முற்பட்டு வார்த்தைகளைப் பட்டென்று நிறுத்தி, ஹிப்பலாஸை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இளஞ்செழியன் கண்கள் சிறிது மங்கியதையும் முகமும் மந்தப்பட்டுவிட்டதையும் கண்ட ஹிப்பலாஸ் படைத்தலைவன் சிந்தையிலே ஏதோ அபாயமான எண்ணங்கள் உருவாகின்றன என்ற முடிவுக்கு வந்தான். அந்த எண்ணங்கள் அப்பப்பா! எவ்வகை உரு வெடுத்தன! விளைவுகள் தான் எத்தனை விசித்திரம்! அடுத்த சில தினங்களில் ஹிப்பலாஸே ஆச்சரியப்பட்டுப் போனான். நிகழ்ச்சிகள் அத்தனை துரிதத்தில் நிறைவேறின.

Previous articleYavana Rani Part 1 Ch61 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here