Home Sandilyan Yavana Rani Part 2 Ch10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

105
0
Yavana Rani Part 2 Ch10 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch10 | Yavana Rani |TamilNovel.in

Yavana Rani Part 2 Ch10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 10 பேரிகை ஒலியும் அலீமாவின் கிலியும்

Yavana Rani Part 2 Ch10 | Yavana Rani |TamilNovel.in

கொள்ளைக்காரர்களிடமிருந்து எப்படியாவது தப்பித் தமிழகம் திரும்பவேண்டுமென்ற எண்ணத்தால் அவர் களுடைய பொன்னாசையைக் கிளறிவிட்டு, கப்பலின் திசையைத் திருப்பிக் கானாவுக்குக் கொண்டு வந்து அவர்களனைவரையும் இலி-ஆஸுவிடம் சிக்க வைத்த இளஞ் செழியன், கானாவை அடைந்த சில நாட்களுக்குள்ளாக இலி-ஆஸுவிடம் கொள்ளைக்காரர்களை விட ஒருபடி அதிகமாகத் தான் சிக்கியிருப்பதை உணர்ந்து, காட்டுத் தீக்குத் தப்பியவன் மடுவில் விழுந்த கதையாகத் தன் தந்திரம் பலனளித்து விட்டதை நினைத்துப் பெரிதும் மனம் கலங்கினான். கானாவுக்குத் தான் கப்பலைக் கொண்டு வந்த இரவில் இரண்டு ஜாமங்களுக்குள்ளாகத் தனக்கு ஏற்பட்ட சௌகரியங்களை நினைத்து ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்ட இளஞ்செழியனுக்கு இரண்டு நாட்கள் ஓடி மறைந்தவுடனேயே அந்தச் சந்தேகம் வலுப்பட்டு, இலி-ஆஸுவின் திடீர் அபிமானத்துக்கு ஆழ்ந்த காரணம் ஏதோ இருக்க வேண்டுமென்ற ஞானோதயமும் ஏற்பட்டது. அலீமா முதல் நாளிரவு சொன்னபடி மறுநாட் காலையில் அவன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டதுமே இலி-ஆஸு அவனைத் தன் அந்தரங்க அறைக்குக் கூப்பிட்டனுப்பி, எதிரே பொற் கிண்ணங்களிலிருந்த பழ வகையறாக்களையும் எடுத்துக் கொள்ளப் பணித்ததன்றி, தனக்குப் பக்கத்தில் தன் ஆசனத்திலேயே சரிசமானமாக உட்காரவும் அனுமதித்தான். அப்படி அவன் உட்கார்ந்திருப்பதைக் காவலருக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் மாளிகைக் காவலர் தலைவனை வரவழைத்து, “நேற்றிரவு பிடிப்பட்டவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள். இன்னும் இரண்டு நாட்களில் அவர்களை விசாரிக்கிறேன். அதுவரை இந்த வீரனுடன் எனக்குச் சில அலுவல்கள் இருக்கின்றன” என்று உத்தரவிட்டுக் கடைசி வார்த்தைகளை உச்சரித்த சமயத்தில் படைத் தலைவன் முதுகையும் ஆசையாகத் தன் பெரும் கையினால் தட்டிக் கொடுத்தான். இலி-ஆஸுவுக்குச் சமானமாக இளஞ்செழியன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியக்குறி ஒரு வினாடி துளிர்த்ததானாலும், மன்னனிடமிருந்த மிதமிஞ்சிய அச்சத்தால் சட்டென்று ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு உத்தரவுகளை மிகப் பணிவுடன் கேட்டுச் சிரம் தாழ்த்தி விட்டுச் சென்றான்.

காவலர் தலைவன் சென்றதும் இலி-ஆஸு இளஞ் செழியனை நோக்கி, “தமிழா! உன்னால் இருவித உதவிகளை நான் அடைந்திருக்கிறேன். அதற்கு என்ன கைம்மாறு செய்வ தென்று எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லி மகிழ்ச்சி முகத்தில் பொங்கப் புன்முறுவல் செய்தான்.

இலி-ஆஸு எந்த இருவித உதவிகளைக் குறிப்பிடு கிறான் என்பது புரியாததால் இளஞ்செழியன் பணிவு நிரம்பிய குரலில், “இருவித உதவிகள் ஏது மன்னவா! செய்தது ஒரு பணி. அதை உதவி என்று சொல்வதும் பொருந்தாது” என்றான்.

இதைக் கேட்ட இலி-ஆஸு விஷமமாகச் சிரித்தான். அவன் சிரித்தபோது அவன் பெரும் கன்னக் கதுப்புகளில் பயங்கரமே இருந்ததைக் கவனித்த இளஞ்செழியன் இலி-ஆஸுவின் குரூரம் எத்தனை தூரம் வேண்டுமானாலும் செல்ல வல்லது என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்துப் பேசிய இலி-ஆஸுவின் சொற்கள் மேலுக்கு சாந்தமாகவும் சந்துஷ்டி வாய்ந்ததாகவும் தோன்றிய போதிலும், ஏதோ ஆழமான உட்கருத்து அவற்றுக்குப் பின்னாலிருப்பதை இளஞ்செழியன் சந்தேகமற உணர்ந்து கொண்டான்.

சிரித்துக் கொண்டே சொன்னான் இலி-ஆஸு, “தமிழர் கெட்டிக்காரர்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் வணிகர்களைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் உன்னைப் போன்ற ஒரு திறமைசாலியை நான் பார்த்ததில்லை. வீரன் மட்டுமல்ல. தந்திரசாலியுங்கூட. எண்ணிய காரியத்தைச் சாதிப்பதிலும் வல்லவன்” என்று.

“மன்னவர் இந்த ஏழையை அனாவசியமாகப் புகழ்கிறார்” என்று குழைந்தான் இளஞ்செழியன், இலி-ஆஸு வின் மன ஆழத்தை அளக்க எண்ணி.

“புகழவில்லை தமிழா! இலி-ஆஸு உண்மையைத்தான் பேசுகிறான்.”

“மன்னர் சொல்வது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.”

“இதில் எந்த அறிவுக்கும் எட்டாதது எதுவுமே இல்லை. இருபெரு உதவிகளை எனக்குச் செய்திருக்கிறாய். ஆனால் எந்த உதவியையும் செய்யவில்லை என்று சாதிக்கிறாய், அத்தனை அடக்கம் எதற்கு? இலி-ஆஸுவைத் திருப்தி செய்ய மனம் கவர் வித்தையைக்கூடத் தமிழகத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள் போலும்!” என்று பதில் சொன்ன இலி-ஆஸு தான் ஏதோ பெரிய மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டவன் போலும், யாரும் சொல்ல முடியாத ஹாஸ்யத்தைச் சொல்லிவிட்டது போலும் இடி இடியென ராட்சஸச் சிரிப்புச் சிரித்து அந்த அறையின் சுவர்களையே குலுங்க வைத்தான்.
இலி-ஆஸுவின் வார்த்தைகளையும் இடி நகையையும் கேட்டதும் உணர்ச்சிகள் பழைய நிலையைப் பூரணமாக அடைந்துவிடவே தனக்கும் இடைவெட்டாகப் பேசத் தெரியுமென்பதைக் காட்ட முற்பட்ட படைத்தலைவன், “மன்னர் ஊகம் சரியல்ல. தமிழகத்தில் மனம் கவர் வித்தையென்பது தனியாகக் கிடையாது. பண்பு என்பது ஒன்று உண்டு” என்று கூறிப் பண்பு என்ற சொல்லைச் சற்று அழுத்திச் சொன்னான்.

“பண்பா? அது என்ன அது?” என்று வினவினான் இலி-ஆஸு.

“தமிழர்களின் தனிச்செல்வம்.”

“முத்து, பவளம் இவற்றைவிட விலை உயர்ந்ததா?”

“விலையுயர்ந்தது என்பதைவிட விலையற்றது என்று சொல்லலாம்.”

“அப்படியானால் அந்தச் செல்வம் மிகக் குறைவாகத் தான் கிடைக்கும்.”

“இல்லை, எங்கள் நாட்டில் அதிகம். மற்ற நாடுகளில் அத்தனை அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை.”

இளஞ்செழியன் பேச்சில் ஏதோ விஷமமிருப்பதாகப் புரிந்து கொண்டதன் சாயை இலி-ஆஸுவின் முகத்தில் மெள்ளப் படர்ந்தது. அடுத்தபடி அவன் கேட்ட கேள்வி அவன் உண்மையை ஓரளவு புரிந்து கொண்டு விட்டானென்பதையும் உணர்த்தியது. “அந்தச் செல்வம் உன்னிடமும் இருக்கிறதா?” என்று கேட்டான் இலி-ஆஸு.

அதற்கு மேலும் இலி-ஆஸுவிடம் தன் சாமர்த் தியத்தைக் காட்டுவது ஆபத்தில் கொண்டுவிடும் என்பதைத் தெரிந்து கொண்ட இளஞ்செழியன், “அதை நானே சொல்வது தற்பெருமையாகும். தான் செய்த காரியங்களைப் பெரிதாக மதிக்காதிருத்தல், செய்த உதவியைப் பறைசாற்றாதிருத்தல், பிறர் மனம் புண்பட நடக்காதிருத்தல் இந்த மாதிரி சில நல்ல குணங்களின் தொகுப்பைத்தான் எங்கள் நாட்டில் பண்பு என்கிறோம். முத்தையும் பவளத்தையும் வைர வைடூரியங் களையும் விட இந்தச் செல்வத்தைப் பெரிதாக மதிக்கிறோம்” என்று மெள்ள விளக்கினான்.

இதைக் கேட்ட இலி-ஆஸு மீண்டும் அசுரச் சிரிப்புச் சிரித்து, “தமிழா! நீ செய்கையில் மட்டுமல்ல, பேச்சிலும் வல்லவன். ஆனால் உன் பண்பு எத்தகையதானாலும் நீ செய்த உதவிகளை இலி-ஆஸுவிடம் மறைக்க வேண்டிய அவசிய மில்லை. கொள்ளைக் கப்பலை எந்தக் காரணத்தை முன்னிட்டுப் பிடித்துக் கொடுத்தாலும், பிடித்துக் கொடுத்தது பெரும் உதவி, அந்தக் கப்பலின் தலைவன் அறையிலிருந்த இரும்புப் பெட்டியில் லட்சக்கணக்கான பொற் காசுகள் பெறுமான நகைகளும், வைரங்களும் கிடைத்தன. அந்தக் கப்பலும் கிரேக்கர்கள் கப்பல். பக்கத்துக்கு முப்பது துடுப்புகள் துழாவக்கூடியது. சாம்பிராணிப் பொதிகளை அவர்களுக்கு வழங்குவதாக நீ ஆசை காட்டாவிட்டால் அந்த அயோக் கியர்கள் என்னிடம் அகப்படுவார்களா! நீ செய்த உதவியை எந்தப் பண்பை முன்னிட்டும் மறைக்க வேண்டியதில்லை. தவிர நீ செய்த இன்னொரு பெரும் உதவி என் மகள் சம்பந்தப் பட்டது. நான் அளித்த பரிசை நீ ஏற்றதற்கு என்றும் நான் கடமைப்பட்டவன்” என்று கூறியதன்றி, இளஞ்செழியனைக் கையைப் பிடித்து இழுத்து அணைத்து, “அலீமா உன் அன்பைக் கவர்ந்ததைச் சொன்னாள். திருமணத்தைப் பற்றிக் கவலைப்படாதே, இன்னும் ஒரே மாதம். அது வரைக்கும் அலீமாவைச் சந்திப்பதும் தவறல்ல. அலீமா என்ன, இந்தக் கானா, இங்குள்ள பொருள்கள் எல்லாமே உன்னுடையது’ என்றும் தெரிவித்தான்.

இலி-ஆஸுவின் முகவாய்க்கட்டையின் நடுப்பகுதியி லிருந்த முரட்டுத் தாடி தன் கன்னத்திலும் உதடுகளிலும் உராய்ந்ததால் சற்று சங்கடப்பட்ட இளஞ்செழியன் மெள்ளத் தன்னை விடுவித்துக் கொண்டு, “அலீமாவை மணக்க முன் வந்ததை உதவியென்று எப்படிச் சொல்ல முடியும்? அப்படி யானால் இந்த மதுவை நான் அருந்துவதும், பழங்களைப் புசிப்பதும்கூட உதவிதான் மன்னருக்கு” என்றான்.

இதைக் கேட்ட இலி-ஆஸுவின் உள்ளம் குளிர்ந்தது. அது முகபாவத்திலும் தெரிந்தது. அந்தச் சமயத்தில் நன்றி தெரிவிக்கும் முறையில் தன் சந்தேகத்தையும் தெரிவிக்க முயன்ற இளஞ்செழியன், “மன்னர் என்னைப் பார்த்து மூன்று ஜாமங்களே ஆகின்றன. அதற்குள் இத்தனை தூரம் என்னைக் கௌரவிப்பது அதிர்ஷ்டம்தான்” என்றான்.

இலி-ஆஸுவின் தடித்த உதடுகள் சற்று மடிந்தன. பிறகு சொற்களை உதிர்க்கத் தொடங்கிய போது அவற்றில் ஓர் உறுதியும் காணப்பட்டது. “தமிழா! உன் உள்ளத்தில் சந்தேகம் உருவெடுத்திருக்கிறது. நீ சந்தேகப்படுவதும் நியாயம்தான். சந்தேகத்தின் மூலகாரணம், நீ இலி-ஆஸுவைப் புரிந்து கொள்ளாததுதான். எந்த முடிவையும் கணநேரத்தில் செய்வது இலி-ஆஸுவின் பழக்கம். போர்க்களத்தில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை எப்படிக் கண நேரத்தில் முடிவு செய்கிறேனோ அப்படித்தான் சாதாரண வாழ்க்கையிலும் நான் முடிவுகளைச் செய்கிறேன். உன் நாடு ஆயிரக்கணக்கான ஸ்டேடியாக்களுக்கு அப்பாலிருக்கிறது. கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டாய். ஆகவே வழக்கமாக கார்டாபிமுனை வர்த்தகர்களிடமோ, அல்லது அடுலீஸ் நகர அடிமைச் சந்தைக்கோ நீ போயிருக்க வேண்டும். அப்படிக் கின்றி இங்கு வருகிறாய் – இந்த கானா துறைமுகத்துக்கு! – யவனர்களும் கால் வைக்க நடுங்கும் இலி-ஆஸுவின் துறைமுக நகருக்கு!- வந்ததும் உன் நிலையை மாற்றி, உன் நிலையில் கொள்ளையரை வைத்து விடுகிறாய்! எனக்குத் தெரியும் தமிழா. இத்தனையும் சாதிக்க எத்தனை தந்திரமும் திறமையும் வேண்டுமென்று. உன்னை அன்றிரவு கண்ட வுடனேயே புரிந்து கொண்டேன். நீ சாதாரண மனிதனல்ல என்று, நீ கொள்ளையரைப் பிடிக்கச் சொன்ன வழிகளைக் கேட்டதும் முடிவுக்கு வந்தேன். அபாரமான புத்திக்கூர்மை புள்ள, படைகளைக் கூட நிர்வகிக்கவல்ல மனிதன் நீ என்று. நீ தமிழகத்தில் படைகளை நடத்தும் தலைவனென்று சொன்னாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகைய மனிதன் கிடைத்த போது இலி-ஆஸு அவனைக் கை நழுவவிட மாட்டான். உன்னை விட நான் இஷ்டப்படவில்லை. எரித்திரியக் கடலில் கொள்ளையர் வலுத்து வருகிறார்கள். நாள் செல்லச் செல்ல கானாவுக்கும் சாம்பிராணிக் குவியல்களுக்கும் ஆபத்து நேரிடலாம். இங்கே துறைமுகத்தைக் காக்கச் சரியான தலைவன் வேண்டும், உன்னைப் போன்ற திறமைசாலி அதற்குத் தேவை. இலி-ஆஸுவின் இஷ்டப்படி நடந்து கொண்டால் இந்தத் துறைமுகப் படைகளுக்குத் தலைமைப் பதவியும் நீ அடையலாம்” என்றான் இலி-ஆஸு.

“மன்னரின் நம்பிக்கைக்கு நன்றி” என்றான் இளஞ்செழியன்.

“வேறெது வேண்டுமானாலும் கேள்” என்றான் இலி-ஆஸு.

“அந்தக் கொள்ளையர் கப்பலைக் கேட்டால் மன்னர் கொடுப்பாரா?” இளஞ்செழியன் சற்றுத் தயக்கத்துடன் கேட்டான்.

இலி-ஆஸு சற்றும் தயக்கமில்லாமலே சொன்னான், “தாராளமாக எடுத்துக் கொள். அதை நடத்த மாலுமிகள் வேண்டுமானாலும் தருகிறேன்” என்று.

“மன்னர் அவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. எனக்கு உதவி செய்த அடிமை வர்த்தகர்களைக் கொடுத்தால் போதும். அவர்களைக் காப்பதாக வாக்குக் கொடுத்திருக் கிறேன்” என்றான் இளஞ்செழியன்.

“நீ வாக்குக் கொடுத்தால் என்ன? நான் கொடுத்தால் என்ன? அவர்களை விடுவித்துக் கப்பலைப் பழுது பார்க்கச் சொல்” என்று உடனே அந்த வரத்தையும் அளித்தான் இலி-ஆஸு.

அத்துடன் அன்றைய சந்திப்பு முடிந்தது. அந்தச் சந்திப்புக்குப் பிறகு கானாவின் மாளிகைக் கதவுகள் மட்டு மின்றிக் கோட்டைக் கதவுகளும் படைத் தலைவனுக்குத் திறந்தன. அன்று முழுவதும் இளஞ்செழியன் ஹிப்பலாஸை அழைத்துக் கொண்டு கானா நகரத்தைச் சுற்றினான். துறை முகப் பகுதிக்குச் சென்று மலைப்பாறைகளையும் கடலில் அலைந்து அலைந்து நின்ற கொள்ளையர் மரக்கலத்தையும் கவனித்தான்.

கானா அப்படிப் பெரிய நகரமல்ல. சிறு நகரம்தான். சாம்பிராணி நாட்டுத் தலைநகரத்திலிருந்து இலி-ஆஸு கானாவுக்கு வருவது வருஷத்தில் சில மாதங்கள் தான் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டான் இளஞ்செழியன். கானா நகரம் சிறியதாயிருந்தாலும் பலமான கோட்டை வசதிகளை உடையதென்பதும் அதிலிருந்து யாரும் வெளிச் செல்வதோ அதற்குள் நுழைவதோ அத்தனை எளிதல்லவென்பதும் படைத்தலைவன் ஆராய்ச்சிக் கண் களுக்குப் புலனாகியது. மலைப் பாறைகளில் கூட மேலும் கத்தியும் வில்லும் தாங்கிய அராபிய வீரர்கள் சதா காவலில் இருப்பதைக் கண்டான் இளஞ்செழியன். நகரத்தின் தென்முனையிலிருந்து கலங்கரை விளக்கத்தின் பக்கத்தி லிருந்த மற்றொரு ஸ்தூபியில் கடலை ஆராயும் வீரர்கள் மாறி மாறிக் காவல் செய்வதையும் சோழர் படை உபதலைவன் கவனித்தான்.

இத்தகைய காவலிலிருந்து தப்புவது அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்து கொண்ட இளஞ்செழியனுக்கு மற்றொரு விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது. தான் கேட்ட மாத்திரத்தில் அடிமை வர்த்தகர்களையும், கொள்ளையரின் கிரேக்கக் கப்பலையும் தானம் செய்து விட்ட இலி-ஆஸுவின் நடவடிக்கை இளஞ்செழியனுக்குத் திருப்தியை அளிக்க வில்லை. அந்தத் தானத்தின் அடிப்படையில் இலி-ஆஸுவின் எச்சரிக்கையின் கண்ணோட்டமும் கலந்திருக்கின்றதென்பது மறுநாளே தெரிந்தது படைத்தலைவனுக்கு. தனக்கு மேலுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறதேயொழிய உண்மையில் இலி-ஆஸுவின் வீரர்கள் தன்னைக் கண்காணித்து வருவதை உணர்ந்தான் இளஞ்செழியன். அவன் சென்ற இடங்களுக் கெல்லாம் பணிவிடை புரியும் பாவனையில் இலி-ஆஸுவின் பணிப்பெண்கள் இருவராவது அவனைத் தொடர்ந்தனர். அவன் கடற்கரையோரம் சென்ற சமயங்களில் வீரர் இருவர் அவனுக்கு உதவி செய்ய விரைந்தனர். அடுத்த நாலைந்து தினங்களில் கானாவில் தான் எதைச் செய்தாலும் இலி-ஆஸு வின் கண்களில் புடாமல் செய்ய முடியாதென்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொண்டான் படைத்தலைவன்.

அவனுக்குக் கிடைத்த உபசரணைகள் பல. மன்னன் கேளிக்கைக் கூடத்தில் மன்னனுக்குச் சரிசமானமாக அவனுக்கும் ஆசனம் போடப்பட்டது. யவன அடிமைப் பெண்கள் அரசனுக்கு அளித்த மதுவையே அவனுக்கும் அளித்தனர். அவன் பள்ளியறையும் அரசனுடைய அறைக்குச் சமானமாக ஜோடிக்கப்பட்டது. அலீமா அவன் அறைக்குத் பிரதி தினம் இரவில் வந்து அவனுக்கு வேண்டிய சகல சிசுருஷைகளையும் செய்து வந்தாள். ஆனால் அவன் கானாவி லிருந்து தப்பும் வழியை மட்டும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கப்பலை அடிமை வர்த்தகர்கள் பழுது பார்த்து முடித்துப் பத்து நாட்களுக்குப் பிறகும் நிலைமை அப்படியே நீடித்தது. இளஞ்செழியன் நம்பிக்கைக்கூட மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பத்து நாட்களில் அலீமா எதையும் பேச மறுத்தாள். அவள் முகத்திலும் கவலை மண்டிக் கிடப்பதை இளஞ்செழியன் கவனித்தான். அந்தக் கவலை அவள் அழகிய உடலைக்கூட வதக்கியதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

பதினோராம் நாள் இரவும் நெருங்கியது. இளஞ்செழியன் பள்ளி அறையில் அலீமா கவலையே உருவாய், படைத்தலைவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். எங்கும் நிசப்தம் நிரம்பிக் கிடந்தது. ஏதோ எதிர்த்து வரும் அபாயத்தின் குறிபோல் கடல்கூட அலைகளின் இரைச்சலைப் பெரிதும் அடக்கிக் கொண்டிருந்தது. பஞ்சணையில் படுத்துக் கிடந்த வண்ணமே அலீமாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இளஞ்செழியன், “அலீமா! உன் முகம் ஏன்களை இழந்து கிடக்கிறது? இங்கிருந்து தப்ப வழி ஏதும் தெரியவில்லையா?” என்று வினவினான்.

“வழி தெரிந்திருக்கிறது. ஆனால் இடையே ஒரு ஆபத்து அதைத் தடை செய்கிறது” என்றாள் அலீமா.

“என்ன ஆபத்து அலீமா?”

அலீமா பதில் சொல்லவில்லை. திடீரென்று பஞ்சணையில் நிமிர்ந்து உட்கார்ந்து எதையோ உற்றுக் கேட்டாள். பிறகு அறைச் சாளரத்தை நோக்கி நடந்து காதைச் சாளரத்தில் வைத்துக் கொண்டாள். கடற்காற்று அப்பொழுது மெல்ல அடித்துக் கொண்டிருந்தது. அந்தக் காற்றில் எங்கோ ‘டம்! டம்! டம்!’ என்று பேரிகை ஒலி ஒரே சீராகக் கேட்டது. அந்த சப்தம் இளஞ்செழியன் காதிலும் மெள்ள விழவே அவனும் பஞ்சணையிலிருந்து எழுந்து சாளரத்தருகே சென்று அந்த ஒலியை உற்றுக் கேட்டான். “அது என்ன் சப்தம் அலீமா!” என்றும் விசாரித்தான்.
அலீமாவின் அழகிய உடல் நடுங்கியது. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று அவள் சொன்ன போது உதடு களும் நடுங்கியதைக் கண்டான் இளஞ்செழியன்.

“ஏன் நடுங்குகிறாய் அலீமா! இலி-ஆஸுவின் வளர்ப்பு மகளான உன்னை யார் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“வரும் ஆபத்து எனக்கல்ல. உங்களுக்கு!” என்றாள் அலீமா பயத்தின் உச்சத்தைக் கண்களில் காட்டி.

“எனக்கா ஆபத்து! என்ன ஆபத்து?”

“அதோ அந்தப் பேரிகை ஒலி எதைக் குறிக்கிறது தெரியுமா?”

“தெரியாது அலீமா!”

“இலி-ஆஸுவின் மதகுருவின் வருகையை அறிவிக் கிறது.”

“அதனால் நமக்கென்ன?”

அலீமா தன் அழகிய விழிகளை அவன் கண்களோடு பல வினாடிகள் உறவாட விட்டாள். “மதகுரு ஏன் வருகிறார் தெரியுமா?” என்று கேட்டாள்.

“ஏன்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

அலீமாவின் பதில் இடிபோல் இறங்கியது இளஞ் செழியன் தலையில். எத்தனை பெரிய படுகுழியில் தன்னைத் தள்ள இலி-ஆஸு முடிவு செய்திருக்கிறான் என்பதை அப்பொழுதே உணர்ந்து கொண்ட இளஞ்செழியன் பிரமை பிடித்து நின்றான். “உங்களை மதம் மாற்ற வருகிறார் இலி-ஆஸுவின் மதகுரு” என்று திகிலுடன் அலீமா உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் அவன் மனத்தை ஆயிரம் ஆயிரம் சுத்திகளைக் கொண்டு சுக்கு நூறாக உடைக்கத் தொடங்கின.

Previous articleYavana Rani Part 2 Ch9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch11 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here