Home Sandilyan Yavana Rani Part 2 Ch11 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch11 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

82
0
Yavana Rani Part 2 Ch11 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch11 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch11 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 11 ஆண்ட வன் ஒருவன்!

Yavana Rani Part 2 Ch11 | Yavana Rani |TamilNovel.in

தேய்பிறை மெள்ள மெள்ள முடிந்து இரண்டு மூன்று நாட்களில் அமாவாசை வர இருந்ததால், கானாவின் கடலலைகள் பெரிதும் சாந்தப்பட்டு, சத்தத்தை அடக்கிக் கொண்டிருந்ததாலும், சாதாரணமாகச் சுழன்றடிக்கும் மலைக் காற்று அன்றிரவில் தன் சொரூபத்தை அதிகமாகக் காட்டாமல் மெல்லவே வீசியதாலும், மதகுருவின் வருகையை எதிர்பார்த்ததாலோ என்னவோ, எப்பொழுதும் உரத்து எச்சரிக்கைக் கூச்சலிடும் கடற்கரைக் காவலர் கூடத் தங்கள் குரலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததாலும், இலி-ஆஸு வின் மாளிகைப் பிரதேசத்தில் குலை நடுக்கமெடுக்கக் கூடிய நிசப்தம் சூழ்ந்து கிடந்ததையும், அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு தூரத்தே எழுந்த பேரிகை ஒலி இன்னும் அதிகமான பயங்கரச் சூழ்நிலையைச் சிருஷ்டித்ததையும் கண்ட சமயத்திலும் சிறிதும் கவலைப்படாத இளஞ்செழியன் மதகுருவின் வருகைக்குக் காரணத்தைக் கேட்டதும் சிறிது மனத் தளர்ச்சியே அடைந்தானென்பதை அவன் முகபாவத்தி லிருந்தே கண்டு கொண்ட அலீமா, “ஆம், தமிழக வீரரே! அச்சத்துக்கு இடமிருக்கிறது. இடம் பெரிதுமிருக்கிறது” என்று அவனைப் பார்த்துக் கூறியதன்றி, அவனை அருகில் நெருங்கி அவன் கைகளிலொன்றோடு தன் அழகிய கையொன்றையும் பின்னிக் கொண்டாள்.

புஷ்ப மாலைபோல் தன் கையை வளைத்துத் தழுவிய அவள் கை கிலியால் மெல்ல நடுங்கியதையும் அந்த நடுக்கத்தைத் தடுக்கவும் கையைத் திடப்படுத்திக் கொள்ளவும் அவள் விரல்களும் தன் விரல்களோடு பின்னிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதையும் கவனித்த இளஞ்செழியன், “அச்சத்துக்கு இடமிருக்கத்தான் செய்கிறது அலீமா!” என்று சொல்லி சற்றுப் பெருமூச்சும் விட்டான். அவன் நாசியிலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சையும் அவன் சொற்களில் துளிர்த்த வெறுப்பு உணர்ச்சியையும் கண்ட அலீமா, “இலி-ஆஸு மிக கொடியவனென்று நான் முன்னமே சொல்ல வில்லையா? உங்களைப் போன்ற மாவீரர்களையும் அச்சுறுத்தும் செயல் வாய்ந்தவன் இந்த மன்னன்” என்று தன் கருத்தை வெளியிட்டாள்.

இளஞ்செழியனின் விழிகள் சாளரத்துக்கு வெளியே யிருந்த இருட்டில் எதையோ ஊடுருவிப் பார்த்தன. வெளியி லிருந்து இருட்டு உள்ளத்தையும் சூழ்ந்து வருவதுபோல் தோன்றியது படைத் தலைவனுக்கு. அந்த நிர்க்கதியான நிலையில் சிறிது கோபத்தையே அடைந்த படைத்தலைவன், “வீரர்கள் செய்யக்கூடிய எந்த அலுவலிலும் இலி-ஆஸு என்னை அச்சுறுத்த முடியாது அலீமா. ஆனால் இந்த மத மாற்றம்! சீச்சீ, நினைக்கவும் வெறுப்பாயிருக்கிறது” என்றான்.

“மதமாற்றத்தைப் பற்றிக்கூட நான் பயப்படவில்லை” என்றாள் அலீமா.

“நான் பயப்படுகிறேன் அலீமா” என்றான் படைத் தலைவன்.

“அதில் பயப்படுவதற்கு ஏதுமில்லை வீரரே! நான் இரண்டு மூன்று முறை மதம் மாறியிருக்கிறேன். இந்தப் பக்கங்களில் மதம் மாறுவது மிகவும் சகஜம்” என்று அலீமா கூறி இளஞ்செழியனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
“என்ன, இரண்டு மூன்று முறை மதம் மாறியிருக் கிறாயா!” என்று இளஞ்செழியன் ஆச்சரியத்துடன் வினவிய தல்லாமல் அந்த ஆச்சரிய ரேகை முகத்திலும் படர அவளை நோக்கினான்.

“இதில் ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது? முதலில் நான் இந்த நாட்டைச் சேர்ந்தவள். இந்த நாட்டு மதப்படி வளர்க்கப்பட்டேன். பிறகு யவனர்களிடம் அடிமையானேன். அவர்கள் மதத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். மறுபடியும் இலி-ஆஸு என்னை மீட்டான். மீண்டும் சொந்த மதம் திரும்பினேன்” என்றாள் அலீமா சர்வ சகஜமாக.

இந்த விசித்திரத்தைக் கேட்ட இளஞ்செழியன் பிரமித்துப் போனான். மதம் இஷ்டப்படி புறக்கணிக்கக்கூடிய அத்தனை அல்ப விஷயமா என்று நினைத்ததால், முதலில் உண்டான பிரமிப்பு இரட்டை மடங்காகவே, “மிகவும் விந்தையாயிருக்கிறது அலீமா, இங்குள்ள மனிதர்களின் பழக்கம்” என்றான் சோழர் படை உபதலைவன்.

‘இதில் விந்தை என்ன?”

“மதத்தை அத்தனை அல்பமாக நினைக்கிறீர்களே!”

“யார் அல்பமாக நினைப்பது?”

“நீங்கள் தான்.”

“நாங்கள் மதத்தை அல்பமாக நினைத்தால் அதற்கு மற்றவர்களை மாற்றுவானேன்?”
“மதத்திற்கு மாற்றுபவர்களைப் பற்றி நான் சொல்ல வில்லை. மதம் மாறுபவர்களைப் பற்றிச் சொல்லுகிறேன்.”

“உங்கள் நாட்டில் மதமாற்றம் என்பது கிடையாதா, பல மதங்கள் இல்லையா?”

“உண்டு. ஆனால் மதமாற்ற முறைகள் வேறு, மதத் தத்துவங்களே வேறு.”

“என்ன வித்தியாசம்?”

‘மத மாற்றத்தில் கட்டாயம் இல்லை. மன்னனோ மற்றவரோ சிறைப்பட்டவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுக்க முயல்வதில்லை. எங்கள் நாட்டு வேதாந்தமே வேறு.”

“என்ன வேதாந்தமோ?”

“மனிதனுடைய ஆத்மா உடலைத்தான் உடையைப் போல் உரித்து விடுகிறது என்பது எங்கள் வேதாந்தம். எப்படி உடைகளை மனிதன் தேவைக்குத் தகுந்தபடி களைந்து மாற்றிக் கொள்கிறானோ அப்படியே ஆத்மாவும் பாவ புண்ணியத்துக்குத் தகுந்தபடி உடல்களை மாற்றிக் கொண்டு ஜன்மாக்களை எடுக்கிறதென்பது பாரத நாட்டு வேதாந்தம். உடையைப் போல் மதங்களைப் பாவிக்க முடியாது. ஒரு மதத்தைக் களைந்து வேறு மதத்தை ஏற்க முடியாது.”

“அப்படியானால் வேறு மதங்களை ஏற்பவர்களே உங்கள் நாட்டில் இல்லையா?”
“இருக்கிறார்கள். ஆனால் கட்டாயத்தினால் அவர்கள் மதம் மாறவில்லை. இஷ்டத்தினால் மாறினார்கள். எங்கள் நாட்டில் பல மகான்கள் பிறந்திருக்கிறார்கள். தங்கள் தத்துவங் களை எடுத்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அவற்றில் லயித்து, அந்தத் தத்துவ முறைகளில் தங்களுக்கு நற்பதவி கிடைக்கும் என்று நம்பிய மக்கள் மதம் மாறியிருக்கிறார்கள். ஆனால் எல்லாம் பழைய மறைகளின் வழிவந்த மதங்கள், பெருவாரியான கொள்கைகளில் அவற்றுக்குள் வித்தியாசம் கிடையாது. ஆகவே விரோதமும் கிடையாது. அன்பு மிகுதியால் ஆதி மதத்திலிருந்து சமண பௌத்த மதங்களை நாடியவர்களும் உண்டு. அவற்றிலிருந்து பழையபடி பழைய மதத்துக்குத் திரும்பியவர்களும் உண்டு. மதம் அவரவர் சொந்த விஷயம் என்று எங்கள் நாட்டில் கருதப்படுவதாலும் எல்லா மதங்களும் உயர்வானவை என்ற நம்பிக்கை உலாவுவதாலும் யாரும் இன்னொருவரை மதம் மாற்ற முயன்றது கிடையாது.”

“மத விஷயத்தில் கட்டாயமே கிடையாதா?” என்று அலீமா வியப்புடன் வினவினாள்.

“கிடையாது” என்றான் இளஞ்செழியன்.

“இங்கு கட்டாயம் உண்டு” என்று குறிப்பிட்டாள் அலீமா.

“மற்ற மதங்கள் உபயோகமற்றவை என்று நீங்கள் கருதுவதுதான் அதற்குக் காரணம்” என்று விளக்கினான் படைத்தலைவன்.

அலீமாவின் விரல்கள் அவன் விரல்களுடன் நன்றாக இணைந்தன. “உங்கள் நாடு மிகவும் நல்ல நாடாயிருக்க வேண்டும்” என்று கூறினாள் அலீமா.

“அதைவிடச் சிறந்த நாடு உலகில் கிடையாது” என்றான் இளஞ்செழியன்.

“அதன் பெருமையை அத்தனை தூரம் உணர்ந்திருக் கிறீர்கள்!” என்று கேலியாகச் சொன்னாள் அலீமா. அந்தக் கேலியில் மதகுருவின் வருகையால் ஏற்பட்ட அச்சத்தைக் கூடச் சிறிது மறந்தாள்.

“பாரத நாட்டின், அதுவும் எங்கள் தமிழகப் பிரிவின் உயர்வை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன் அலீமா! ஆனால் அது எத்தனை உயர்ந்தது என்பதை இந்தப் பகுதிக்கு வந்ததும்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. யாரும் இஷ்டப்படி வாழக்கூடிய சுதந்திரமான பாரதம் எங்கே, அவனவனுக்குச் சொந்தமான மத விஷயத்திலும் கட்டாயத்தைக் கையாளும் மேற்கு நாடுகள் எங்கே? பாரதம் உயர்ந்தது அலீமா! எத்தனையோ மதங்கள் பகையின்றி அக்கம் பக்கம் வாழ வகை செய்துள்ள பண்பின் சின்னமான பாரதம் எங்கே? இந்த மதம்தான் வாழலாம் இப்படித்தான் மனிதன் வாழலாம் என்று தனி மனிதன் சுயேச்சைக்கும் கரை கட்டும் மேற்கு நாடுகள் எங்கே?” என்று பேசிய இளஞ் செழியன் சட்டென்று அவள் கையை உதறிக் கொண்டு சில வினாடிகள் மௌனமாக நின்றான்.

தூரத்தே கேட்ட பேரிகை ஒலி வரவரப் பெரிதாகக் கேட்கத் தொடங்கியதையும் அந்தப் பேரிகை ஒலி விழுந்ததால் கானாவின் வீதிகளில் ஏற்பட்ட மக்கள் நடமாட்டத்தில் சத்தமும் அதிகரித்துவிட்டதையும், மௌனமாக நின்ற அந்தச் சில வினாடிகளில் கவனித்த படைத்தலைவன் அலீமாவை நோக்கி, “அலீமா! எங்கள் நாட்டில் வீரர்கள் உயிர் போனாலும் மூன்று விஷயங்களைத் துறப்பதில்லை. தன் வாள், மனைவி, மதம், இம்மூன்றையும் யார் பறிக்க விரும்பினாலும் அந்த வீரன் உயிரை உடலிலிருந்து விரட்டிய பின்பு தான் பறிக்க முடியும். ஆகையால் இலி-ஆஸு மத மாற்றத்திற்கு என்னை வற்புறுத்தினால் அவன் அரியணையில் அமர்ந்திருக்கும் போதே பிணமாகி விடுவான்” என்று உறுதியுடன் கூறினான். இந்த வார்த்தைகளைத் திடமாக அவன் உதடுகள் உதிர்த்த போது அவற்றில் கடுமை கலந்த புன்சிரிப்பும் துளிர்விட்டதைக் கண்ட அலீமா படைத் தலைவன் உறுதியைக் கண்டு சற்றே அச்சப்பட்டாளாதலால், “அப்படி ஏதாவது நடந்தால் அடுத்த வினாடி நீங்கள் கண்ட துண்டமாய் வெட்டியெறியப்படுவீர்கள்” என்று தலையை நிமிராமல் கண்களைத் தரையில் ஓட்டிய வண்ணம் சொன்னாள்.

“அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”

“இத்தனை நேரம் கவலைப்பட்டீர்களே?”

“நாட்டுக்குப் பணிசெய்ய உயிர் தேவை. அதற்குத்தான் கவலைப்பட்டேன்.”

“அந்த நாட்டுப் பணிக்காக மதம் மாறினால் என்ன?”

“எந்தப் பணியும் அறவழியில் நடக்க வேண்டும். அது முடியாதென்றால் உயிரை வைத்திருப்பதிலும் பயனில்லை.”
இதற்கு மேல் அலீமா பதிலேதும் பேசவில்லை . “போயும் போயும் மத மாற்றம் இத்தனை பெரிதாகப் போய் விட்டது” என்று சில வினாடிகள் மௌனமாயிருந்த பிறகு சொன்னாள்.

“என்னை இந்த மதத்தில் சேர்க்க மதகுரு வருகிறார் என்பதைச் சொன்ன போது நீயே நடுங்கினாயே!” என்றான் இளஞ்செழியன்.

“உங்களை இந்த நாட்டு தில் மாற்ற மட்டும் மதகுரு இங்கு வந்தால் நான் பயப்படமாட்டேன்” என்று சொல்லி அலீமா தயங்கினாள்.

“வேறு எதற்குப் பயப்படுகிறாய்?” “இலி-ஆஸுவின் திட்டம் வேறு.”

“என்ன திட்டம் அது?”

“உங்களை மதம் மாற்ற மதகுருவுடன் உங்களை தன் நாட்டுக்கு அனுப்பிவிட யோசிக்கிறான் மன்னன். இங்கிருந்து பல மலைகளுக்கு அப்புறம் பெரும் குகையிலிருக்கும் ஐஸிஸ் தேவியின் ஆலயத்தில் நீங்கள் சிக்கி விட்டால் உங்களை ஆண்டவன் கூடத் தப்புவிக்க முடியாது. அந்தக் குகை ஆலயத்தில் மதகுருக்களும், பழைய அரசர்களின் சவ அறைகளும் பணியாட்களும் இருக்கிறார்கள். அங்கு நீங்கள் ஒரு மாதம் சேவை செய்தால் இலி-ஆஸுவின் அந்தரங்க ஊழியர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள். பிறகுதான் உங்களைக் கானாவின் படைத் தலைவனாக இலி-ஆஸு நியமிப்பான். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் உங்களுக்கு மத தீட்சைகள் நடக்கும். மதகுருவின் முன்னிலையில் உங்கள் தலை மயிர் வாங்கப்படும்.”

“என்ன! தலையை முழுக்க…” என்று மென்று விழுங்கினான் இளஞ்செழியன்.

“ஆம். வழித்தெடுத்து விடுவார்கள். ஐஸிஸின் ஆலயத்தில் வேலை செய்யும் பணி மக்களுக்கும் மதகுருமார் களுக்கும் வித்தியாசம் கிடையாது” என்றாள் அலீமா.

“எகிப்து பாரோ மன்னர்கள் ஆலய வழக்கமல்லவா இது?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“ஆம். அதே மதம்தான் இங்குள்ள நாடுகளில் கையாளப் படுகிறது! எகிப்து நாட்டு மன்னர்களின் ஆதிக்கம் இங்கு ஓங்கிய காலத்திலிருந்து அதே கலாச்சாரமும் மதமும்தான் இங்கு பரவிக் கிடக்கின்றன” என்று விளக்கினாள் அலீமா. பிறகு, “உங்களுக்கு மதகுரு தீட்சை நடக்கும் போது உங்களை இரண்டு வீரர்கள் பிடித்துக் கொள்வார்கள். பல வீரர்கள் காவல் புரிவார்கள். உங்கள் கை, கால் எதுவுமே சுவாதீனத்திலிருக்காது” என்றும் உள்ள நிலையின் தீவிரத்தை வலியுறுத்தினான்.

“அதுவும் இந்நாட்டுப் பழக்கங்களில் ஒன்றோ?” என்று படைத்தலைவன் வினவினான்.

“ஆம்!” என்றாள் அலீமா.

இளஞ்செழியன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து அறையில் இங்குமங்குமாக நீண்டநேரம் உலாவினான். ‘இலி-ஆஸுவின் தந்திர உள்ளத்தை எத்தனை அல்பமாக மதித்துவிட்டோம்’ என்று நினைத்துத் தன்னைத்தானே நொந்து கொண்டான். ‘கொள்ளையர் கப்பலைத் தன்னந்தனியாக யுக்தியால் பிடித்துக் கொடுத்ததால் என் திறமையை உணர்ந்து கொண்டான் இலி-ஆஸு. அப்படிப்பட்டவனைத் தமக்கு மீளா அடிமையாக்கிக் கொள்ள மதம் மாற்றி வளர்ப்பு மகளைக் கொடுத்து, மதகுருவின் ஆலயத்துக்கு அனுப்பி உணர்ச்சிகளைப் பணிய வைத்துப் பிறகு ஒரு பதவி அளிக்கத் திட்டமிட்டிருக்கிறான். மதகுரு ஆலயம் எங்கோ மலைகளுக்குப் பின்னால் குகையில் இருக்கிறது. எதிரே கடலில் ஆடி நிற்கும் கப்பலும், உதவ அடிமை வர்த்தகர்களும், பலமாகக் கை கொடுக்க வீரனான ஹிப்பலாஸும் இருக்கும் நிலையிலேயே இலி-ஆஸுவிடமிருந்து தப்புவது பிரும்மப் பிரயத்தனம் போலிருக்கிறதே! மலைகளுக்குப் பின்னால் போய்விட்டால் அவ்வளவுதான். ஆயுள் சமாதிதான்-‘ என்று எண்ணி எண்ணிப் பெரிதும் குழம்பிய இளஞ்செழியன் கடைசியாக ஏதோ ஒரு முடிவுக்கு வந்து “அலீமா!” என்று திடீரென்று அழைத்தான்.

“ஏன்?” தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு வினவினாள் அலீமா.

“மத மாற்றம் எப்பொழுது நடக்கும்?” என்று மீண்டும் ஒரு கேள்வி போட்டான் படைத் தலைவன்.

“இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நடக்கும்” என்றாள் அலீமா.

“இரண்டு மூன்று நாட்கள் எதற்கு?”

“சந்திரனே இல்லாத நாள் அப்பொழுதுதான் வருகிறது.”

அவள் அமாவாசையைக் குறிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன், “அலீமா! இந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் நான் இங்கு சிறையில் கிடக்கும் அடிமை வர்த்தகர்களைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.

“நீங்கள் பார்ப்பது கஷ்டம்.”

“ஏன்?”

“நீங்கள் மதம் மாறிய பிறகுதான் அவர்களை விடுவிக்க உத்தேசித்திருக்கிறான் மன்னன். சிறைச்சாலைப் பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தவிர நாளையிலிருந்து நீங்கள் மதகுருவின் பாதுகாப்பில் இருப்பீர்கள்.”

“மதகுருவின் பாதுகாப்பிலா?”

“ஆம்.”

“சரி சரி. அது கிடக்கட்டும். நீயாவது அவர்களைப் பார்க்க முடியுமா?”

“முடியும்.”

“சரி, வெளியிலிருக்கும் ஹிப்பலாஸைக் கூப்பிடு.”

அறைக் கதவைத் திறந்து கொண்டு ஹிப்பலாஸை அழைக்க அலீமா வெளியே சென்றதும் மஞ்சத்தின் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்ட படைத் தலைவன் கண்கள் ஏதோ ஒரு உலகத்துக்கு அவன் புத்தி சென்று விட்டதை வலியுறுத்தின. அறைக்குள் திரும்பி வந்த அலீமா படைத்தலைவன் கண்கள் மயக்க நிலையில் இருப்பதைக் கவனித்து அவன் பெரும் பீதிக்குள்ளாகியிருப்பதாக நினைத் தாள். ஆனால் ஹிப்பலாஸ் மட்டும் கணப்பொழுதில் புரிந்து கொண்டான். படைத்தலைவன் புத்தியில் ஏதோ பயங்கரத் திட்டமொன்று உருவாகிறதென்று. அந்த நினைப்பின் விளைவால் அலீமா படைத்தலைவனை நெருங்க முயன்றதையும் அவள் கையைப் பிடித்து நிறுத்திய ஹிப்பலாஸ், ஏதும் பேச அது சமயமல்லவென்பதைத் தன் பார்வையாலும் குறிப்பிட்டான் அவளுக்கு. அப்பொழுதும் ஏதும் புரியாததால் அவன் அவள் காதுக்கருகில் குனிந்து, “படைத் தலைவர் ஏதோ யோசிக்கிறார், பேச வேண்டாம்” என்று ரகசியமாகச் சொன்னான்.

அதைக் கேட்டதும் ஹிப்பலாஸைத் திரும்பி நோக்கிய அலீமாவின் விழிகளில் வியப்பு மிதமிஞ்சி நின்றது. “படைத் தலைவரா இவர்!..” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டாள் அலீமா.

“தமிழகத்தின் பெரும் படைத் தலைவர்களில் ஒருவர்”. என்று விளக்கினான் ஹிப்பலாஸ்.

அலீமாவுக்கு அப்பொழுதுதான் மெள்ள மெள்ள உண்மை விளங்கலாயிற்று. பெரும் ஆபத்துக்களைச் சமாளிக்கக் கூடிய ஒருவர், கொள்ளையர் கண்களிலும், ஏன் இலி-ஆஸுவின் கண்களில்கூட ஓரளவு மண்ணைத் தூவக் கூடிய திறமை வாய்ந்த ஒருவர், சாதாரண மனிதராயிருக்க முடியாது என்று தான் நினைத்தது சரியாகி விட்டதை நினைத்து, பெரிதும் பூரிப்படைந்து விட்டாள். படைத் தலைவன் பேசிய சமயங்களிலெல்லாம், அவனிடம் காணப்பட்ட ஒரு கம்பீரம், அவன் நடையிலிருந்த ஒரு பெரும் தோரணை, பகல் வேளையில் அவன் சதா கோட்டைப் பகுதிகளையும் மலைப் பிராந்தியங்களையும் வெறித்து வெறித்துப் பார்த்த காரணம், எல்லாமே அலீமாவுக்குப் பொருள் தந்தன. அவன் கண்கள் மங்கிக் கிடந்த அந்தச் சமயத்திலும், முகத்தின் ஒளியும் மயங்கிவிட்ட அந்தச் சில நிமிஷங்களிலும் முகத்தின் கம்பீரமோ கண்களின் அழகோ சிறிதும் குறைவு படாததை அலீமா கவனித்து உலகத்தின் பெரிய அறிவாளியொருவன் முன்னிலையில் தான் இருப்பதை உணர்ந்தாள். சில நிமிஷங்களுக்குப் பிறகு மௌனத்தை உதறிப் பேச முற்பட்ட படைத்தலைவனின் குரல் சர்வ சாதாரண நிலையை அடைந்து விட்டதைக் கவனித்த அலீமா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில், அவனுக்குள்ள திறமையைக் கண்டு பிரமித்தாள்.

சில நிமிடங்களிலேயே தான் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறையை நிர்ணயித்துக் கொண்ட இளஞ்செழியன் ஹிப்பலாஸை நோக்கிக் கேட்டான்: “ஹிப்பலாஸ்! உனக்கு மதம் மாறிப் பழக்கமுண்டா ?” என்று முகத்தில் புன்முறுவலைக் காட்டி.

“அந்தப் பாக்கியம் இதுவரை அடியவனுக்குக் கிட்ட வில்லை” என்று நகைச்சுவையைக் காட்டினான் ஹிப்பலாஸ்.

“எனக்குக் கிடைத்திருக்கிறது” என்றான் இளஞ் செழியன்.
“படைத்தலைவர் எல்லா விஷயங்களிலும் பாக்கிய சாலி, மதம் கிடைக்கிறது. பதவி கிடைக்கிறது. தவிர-” என்று சொல்லி அலீமாவின் மீது கண்களை ஓட்டினான் ஹிப்பலாஸ்.

இளஞ்செழியன் மெள்ள நகைத்துவிட்டுச் சொன்னான், “உனக்கும் அந்தப் பாக்கியங்கள் கிடைக்க வேண்டும் ஹிப்பலாஸ்!” என்று.

“அத்தனைக்கு எனக்குத் தகுதி ஏது?”

“இருக்கிறது. இல்லையேல் நான் உண்டாக்கித் தருகிறேன்.”

“எப்படி?”

“நாளை மதம் மாறும்படி இலி-ஆஸு என்னைக் கேட்கப்போகிறான்?”

“என்ன!” பாதி ஆச்சரியமும் பாதி திகிலும் கலந்த குரலில் கேட்டான் ஹிப்பலாஸ்.

“ஆமாம் ஹிப்பலாஸ்! என்னை மதம் மாற்ற இலி-ஆஸுவின் மதகுருவே வருகிறார். அதோ பேரிகை ஒலி கேட்கவில்லை உனக்கு?”

“ஆமாம், கேட்கிறது.”

“அது மதகுரு வருவதைக் குறிக்கிறது?”
“அப்படியா?” இம்முறை ஹிப்பலாஸின் குரலில் நகைச் சுவைக்குப் பதில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.

“ஆம்! அப்படி அவரிடம் நான் மதம் மாற ஒப்புக் கொள்ளும் போது உன்னையும் மதம் மாற்றும்படி இலி-ஆஸு வைக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்.”

“மதம் மாறுவதைவிட உயிரை விடுவேன்” என்று கூவினான் ஹிப்பலாஸ்.

“அதற்குக் கானாவில் சந்தர்ப்பங்கள் நிரம்ப இருக்கின்றன” என்று சுட்டிக் காட்டிய இளஞ்செழியன் சில நிமிட நேரங்களில் தான் வகுத்த பயங்கரத் திட்டத்தை மெள்ள மெள்ள, ஹிப்பலாஸுக்கும் அலீமாவுக்கும் விவரித்தான். அவன் விவரிக்க விவரிக்க அந்தத் திட்டத்திலிருந்த பேராபத்துக்களை நன்கு உணர்ந்த அலீமாவும் ஹிப்பலாஸும் உணர்ச்சிகளால் பல திசைகளில் அலைக்கழிக்கப் பட்டதல்லாமல் இறுதியில் மிதமிஞ்சிய கலவரமும் அடைந்து அடியோடு புத்தி குழம்பி நின்றார்கள். கடைசியாகப் பேச நா வந்தபோது, “மிகப் பயங்கரத் திட்டம்” என்று குழறினான் ஹிப்பலாஸ்.

“தோற்றால் நாம் சித்திரவதை செய்யப்படுவோம். இலி-ஆஸு நமது கால்களை வெட்டி, நாவைத் துண்டித்து உயிரை வைத்தே ஒவ்வொரு நிமிஷமும் கொல்லுவான்!” என்று கூறி நடுங்கினாள் அலீமா.

“ஆண்டவனிருக்கிறான்” என்று மிக மெதுவாக ஆனால் திடமாக வார்த்தைகளை உச்சரித்தான் படைத்தலைவன்.
“யார் ஆண்டவன், உங்கள் ஆண்டவனா, இலி-ஆஸு வின் ஆண்டவனா?” என்று நடுக்கத்துடன் கேட்டாள் அலீமா.

“இருப்பவன் ஒருவன். அறவழிக்கும் அன்புக்குமே துணை செய்பவன்.” வேத மந்திரங்களை உதிர்ப்பது போல இந்த வார்த்தைகளை உதிர்த்தான் படைத்தலைவன். அந்த வார்த்தைகளைச் சொல்வதிலேயே அவன் உள்ளம் ஆனந்த மடைந்தது. முகத்திலும் தைரியப்பொலிவு துலங்கியது.

ஆனால் அலீமாவின் முகத்தில் ஈயாடவில்லை . ‘என் தெய்வமே சக்தியுடையது என்று இலி-ஆஸு நம்புகிறான். இலி-ஆஸு என்ற பெயரின் பொருளே அதுதானே! இவர் திட்டமோ மிகப் பயங்கரம்! விளைவு என்ன ஆகுமோ? திட்டம் தோற்றுவிட்டால்..’ என்று எண்ணிய அலீமா மேலும் ஏதும் பேச முடியாமல் திணறினாள். அவள் எண்ணங்கள் மிகுந்த திகிலால் மேலே ஓடாமல் பாதியிலேயே அறுந்தன. ஆகவே சொற்களும் அறுந்தன. ஏதும் பேச இயலாமல் இளஞ்செழியன் முகத்தில் தன் விழிகளை நாட்டிக் கொண்டு பிரமை பிடித்தவள் போல் நின்றாள். பேரிகை ஒலி மிகப் பெரிதாகக் கேட்டது. பேரிகையை அடித்த பெரும் கழிகள் அவள் உள்ளத்தை அடித்தன. அவள் உள்ளமே கிழிந்த ஸ்திதிக்கு வந்து கொண்டிருந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch12 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here