Home Sandilyan Yavana Rani Part 2 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

112
0
Yavana Rani Part 2 Ch13 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch13 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 13 தேவியின் அருள்!

Yavana Rani Part 2 Ch13 | Yavana Rani | TamilNovel.in

அன்று அமாவாசை தினமாகையால் எங்கும் மையிருள் சூழ்ந்து கிடந்ததன்றி, கானா துறைமுகப் பாறைகள்மீது அலைகளும் பெரிதாக எழுந்து மோதிக் கொண்டிருந்ததாலும் முதல் இரண்டு நாட்களில் அமைதியாயிருந்த காற்று அந்த அமைதிக்கு ஈடுகட்டும் உத்தேசத்துடன் பலமாகச் சுழன்றடித்து, பேரிரைச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்ததாலும், ஒவ்வொரு அமாவாசையும் வடக்கிலிருந்து பெருக்கெடுக்கும் கடல் நீரோட்டம் அதிவேகமாக வடக்கிலிருந்து தெற்கே பாயத் தொடங்கிவிட்டதன் விளைவாக, தூரத்தே பிசாசுபோல் ஆடிக்கொண்டிருந்த கொள்ளையர் கப்பலும் தெற்குப் பக்கமாக இழுக்கப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்ததாலும் ஏற்பட்ட பயங்கரச் சூழ்நிலை குலை நடுக்கமெடுக்கக் கூடியதாக விளங்கினாலும், அதைச் சற்றும் கவனியாமல் அலட்சியமாகப் பாறைகளில் நடந்து தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மதகுருவை நோக்கிப் பெரிதும் ஆச்சரியப்பட்டதல்லாமல், அவரது இணையற்ற துணிவைக் குறித்து உள்ளுக்குள்ளேயே அவரைப் பாராட்டவும் செய்தான். மக்களின் தலைத் தெய்வமான *ஐஸிஸிடம் அவருக்கிருந்த நம்பிக்கையும், மற்ற மதஸ்தர் களைத் தனது மனத்திற்கு மாற்றிக் கொள்வதில் அவருக்கிருந்த ஊக்கமும் பெரும் வியப்பைத் தந்தன படைத்தலைவனுக்கு. அந்த நம்பிக்கையும் ஊக்கமும் மட்டும் இல்லாவிட்டால் மதகுரு இப்படிக் காவலில்லாமலும் முரசு இல்லாமலும் தன்னுடன் தன்னந்தனியாக மரக்கலத்துக்கு வர ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் என்பதையும், அப்படி அவர் வர இசையாத பட்சத்தில் தன் கதி அதோகதியாகி விட்டிருக்கு மென்பதையும் எண்ணிப் பார்த்த இளஞ்செழியன், அத்தனை மத நம்பிக்கையையும் ஊக்கத்தையும் மதகுருவுக்கு ஊட்டியதைப்பற்றி ஐஸிஸ் தேவியையும் மனத்தால் வணங்கினான். இப்படி யோசனைகளை எங்கெங்கோ அலையவிட்டுக் கொண்டிருந்த போதிலும் எதிரே கடலில் ஆடி நின்ற மரக்கலத்தை மட்டும் கூர்ந்து கவனித்துக் கொண்டே தமக்குப் பின்னால் நடந்து வந்த இளஞ்செழியனைப் பற்றி எந்தவித சிந்தனையுமில்லாமல் கடற்கரையின் பிரதான பாதையை அடைந்த மதகுரு சற்று நடையில் வேகத்தைக் காட்டினார். தன்னை மதமாற்றுவதிலிருக்கும் அக்கறையினாலேயே மதகுரு அத்தனை துரிதப் படுத்துகிறாரென்று நினைத்த இளஞ்செழியன் குருவை நோக்கி, “சற்று நிதானியுங்கள். மரக்கலத்தில் கொடி யேறட்டும்” என்று இரைந்து கூறியதன்றி, அவருக்கு முன்னால் ஓடி நின்று வழியையும் சற்றுத் தடை செய்தான்.

அவன் சொல்வது என்னவென்று புரியாததால் சில வினாடிகள் விழித்த மதகுரு ஆகாயத்தைத் தன் கைகளால் காட்டி, ஒரு உள்ளங்கையை இன்னொரு கையால் பாதியாகக் காட்டி நடு நிசி தாண்டிக் கொண்டிருக்கிறதென்பதை உணர்த்தினார். மூன்றாம் ஜாமம் முடிவதற்குள் தனக்கு முடி வாங்குதல் முதலிய சிட்சைகள் நடக்கவேண்டுமாதலால் மதகுரு அவசரப்படுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட இளஞ்செழியனும் தூரத்திலிருந்த மரக்கலத்தைச் சுட்டிக் காட்டி, தனது கையை முழங்கை வரையில் எழுப்பிக் காட்டியும், அதைக் கொடிபோல் அசைத்தும் ஓரிரு அராபியச் சொற்களை அரைகுறையாகப் பேசியும் மரக்கலத்தில் கொடியேறிய பின்பே அங்கு செல்ல வேண்டுமென்பதை உணர்த்த இல்லாத நாடகமெல்லாம் ஆடினான். அவன் சொல்வதைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாகத் தலையசைத்து, வினாடிகூடத் தாமதிக்க இஷ்டப்படாத மதகுரு வெகு வேகமாக நீர்க் கரையை அடைந்தார். நீர்க் கரையில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது படைத் தலைவனுக்கு.

நீர்க்கரைத் தளையிலிருந்த தனது படகு அவிழ்க்கப் பட்டு மரக்கலத்துக்குச் செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த தன்றி உருவிய வாட்களுடன் நான்கு வீரர்கள் மதகுருவைக் காவல் புரியத் தயாராக நின்று கொண்டிருந்ததையும், அந்த வீரர்களுக்கு நடுவில் அலீமா கைகளிரண்டும் பிணைக்கப் பட்டு நிறுத்தப்பட்டிருந்ததையும் கண்ட இளஞ்செழியன் பெரும் திகிலுக்கு இலக்காகி, “அலீமா! என்ன இது?” என்று கூவியதன்றி, “விடுங்கள் அவளை! கைக் கட்டுகளை நீங்குங்கள்” என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்த வீரர்கள் மீது பாய்ந்தான். அடுத்த வினாடி இளஞ்செழியன் வாள் அவன் கரத்திலிருந்து பலமாகப் பறிக்கப்பட்டது. அந்த வாள் பறிக்கப்பட்ட வினாடியில் இலி-ஆஸுவின் மதகுரு உதிர்த்த பெரும் சிரிப்பு இடிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுவதுபோல் கிளம்பி அந்த மலைப் பிரதேசத்தில் திரும்பத் திரும்ப எதிரொலி செய்ததால், கானாவின் மலைகள்கூட தன்னைப் பார்த்து நகைப்பது போல் தோன்றியது படைத் தலைவனுக்கு. “இதற்கு என்ன அர்த்தம்? மன்னன் வளர்ப்பு மகளைச் சிறை செய்ய யார் அனுமதி கொடுத்தது உங்களுக்கு?” என்று சீறினான் படைத்தலைவன்.

“அடமுட்டாள்! உன்னை ஒரு வினாடிகூட நான் நம்பவில்லை. முதல் நாள் உன்னைப் பார்த்தபோதே நீ பெரிய அயோக்கியனென்று தீர்மானித்தேன். இரண்டாம் நாளன்று நீ கப்பல் ஓட்டும் மரபைச் சேர்ந்தவனென்றும், எந்த தீட்சையும் கப்பலில்தான் உனக்கு நடக்க வேண்டுமென்றும் நீ கேட்டுக் கொண்டபோது அந்தத் தீர்மானம் உறுதியாயிற்று எனக்கு. அத்துடன்.” என்று ஏதோ சொல்ல முயன்று வாசகத்தை முடிக்காத மதகுரு அலீமாவை நோக்கி, “உம்” என்று உறுமி, தான் சொன்னதை மொழிபெயர்க்கும்படி சைகை செய்தார்.

அலீமா மொழி பெயர்த்ததால் உண்மையை உணர்ந்த படைத் தலைவன், மதகுரு எத்தனை தூரம் தன்னைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிய முயன்று, “அத்துடன் என்று விட்டு விட்டீர்களே. முழுவதையும் சொல்லிவிடுங்கள்” என்று கேட்டான்.

இதைக் கேட்ட படைத் தலைவன் முகத்தில் ஏற்பட்ட கிலியைக் கண்டு நகைத்த மதகுரு, “சே! நீ இத்தனை அல்ப மான மனிதனா! உன்னைப் பெரும் தைரியசாலி யென்றல்லவா நினைத்தேன். உன் நடுக்கத்தைப் பார்க்கையில் உனக்கு இந்தப் பெண்ணைக் கொடுப்பதும் தவறு என்று தோன்றுகிறது. உன்னை மதம் மாற்றுவதாலும் கானாவுக்குப் பயனில்லை. கானாவுக்குத் தேவை துணிகர வீரர்கள். கோழைகளல்ல” என்ற மதகுரு நகைப்பில் வெறுப்பையும் காட்டினார்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை தாங்கள்” என்றான் இளஞ்செழியன் சற்றுப் பணிவைக் காட்டி.

“யாருக்கும் மதகுரு பதில் சொல்ல வேண்டியதில்லை. மதகுருவுக்குத்தான் எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். இருப்பினும் சொல்கிறேன் கேள். உன்னைக் கண்ட கணத்தி லேயே நீ நம்பத்தகாதவன் என்பதை உணர்ந்து கொண்டேன். கொள்ளையர் பக்கத்தில் இருப்பதுபோல் நடித்து அவர்களை மோசம் செய்தவன். மற்றவர்களையும் மோசம் செய்யலாம் என்று தீர்மானித்தேன். ஆகவே என் ஆட்களைவிட்டு உன் நடவடிக்கைகளையும், இவள் நடவடிக்கைகளையும் கவனிக்கச் செய்தேன். இலி-ஆஸுவின் வளர்ப்புப் பெண் உன்னுடன் சதா பழகுவதையும் அடிக்கடி உனக்குப் பணிவிடை செய்வதையும், நீங்கள் நாழிக் கணக்கில் தனித்துப் பேசுவதையும் அறிந்தேன். ஆகவே முடிவு செய்தேன் உன்னை எதற்கும் நம்பக்கூடாதென்று. இன்றிரவு நீ என்னை மரக்கலத்துக்கு வரும்படி அழைத்தபோது, தனியாகவே போகலாமென்றும் முரசு தேவையில்லையென்றும் நான் சொன்னதற்குக் காரணம் என்ன தெரியுமா?”

“என்ன?”

“உன்னைச் சோதித்துப் பார்க்கத்தான். நீ உடனே சரியென்று ஒப்புக் கொள்கிறாயா அல்லது முரசில்லாமல் காவலில்லாமல் மதகுரு கிளம்பக்கூடாதென்று கூறுகிறாயா என்று பார்த்தேன்…” என்ற மதகுரு வாசகத்தை முடிக்காமல் விட்டார். மதகுரு தன்னை அலசிப் பார்த்து விட்டதை உணர்ந்த இளஞ்செழியன் மண்டியிட்டு அவரை வணங்கி, “மதகுரு மன்னிக்கவேண்டும்” என்று மன்றாடினான்.

மதகுருவுக்கும் படைத் தலைவனுக்கும் ஏற்பட்ட சம்பாஷணையை அதுவரை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த அலீமாவுக்குக்கூட இளஞ்செழியன் மதகுருவிடம் மண்டியிட்டதைக் கண்டதும் மிதமிஞ்சிய வெறுப்பு ஏற்பட்ட தால், “தமிழகத்தின் வீரம் இவ்வளவுதானா? இந்த வீரத்தை வைத்துக்கொண்டா கானாவின் மதகுருவை ஏமாற்றிக் கப்பலுக்குக் கொண்டுபோய் அவர் உயிரைப் பணயமாகக் காட்டித் தப்பப் பார்த்தீர்கள்!” என்று கூறினாள். அவள் முகத்தில் துளிர்த்த வெறுப்பு குரலிலும் பூரணமாக மண்டிக் கிடந்தது.

அதற்குமேல் பேச்சை வளர்க்க இஷ்டப்படாத மதகுரு, இளஞ்செழியனையும் அலீமாவையும் காவலரையும் படகில் ஏறச் சொல்லித் தூரத்தே நின்ற மரக்கலத்துக்குப் படகைக் கொண்டு போகும்படி உத்தரவிட்டார். தெற்கு நோக்கி நீரோட்டம் பலமாகப் பாய்ந்து கொண்டிருந்ததால் படகு வெகு வேகமாக மரக்கலத்தை அடைந்தது. படகின் வேகத்தை விட அதிக வேகமாக எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சிகளுடன் படகில் உட்கார்ந்து கொண்டிருந்த அலீமாவை இரண்டு மூன்று முறை இளஞ்செழியன் நோக்கி யும், அவனைப் பார்க்க இஷ்டப்படாத அலீமா கண்களை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள். இளஞ்செழியன் வெகு துரிதமாகச் சமீபித்துக்கொண்டிருந்த மரக்கலத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்த மதகுரு, “தமிழா! மரக்கலத்தில் கொடி உயராது. உன் நண்பர்கள் அங்கில்லை. என் வீரர்கள் தான் அங்கு இருக்கிறார்கள்” என்று கூறிப் பேய்ச் சிரிப்பு சிரித்து, “உம்! மொழி பெயர்த்து உன் மணாளனுக்குச் சொல்லு, இந்தத் தமிழனுடன் சதி செய்ததற்காக அவனை மதம் மாற்றுவதல்லாமல் அவன் கையையும் துண்டித்து உனக்குத் திருமணப் பரிசாகத் திருமணத் தினத்தன்று தருகிறேன்” என்று அலீமாவை நோக்கிச் சொன்னார்.

அலீமாவின் உள்ளத்தில் வேதனை அலைகள் பெரிதாக எழுந்து மோதிக்கொண்டிருந்ததாலும், அந்த அமாவாசை இரவின் இருளைவிடப் பெரும் இருள் அவள் இதயத்தைச் சூழ்ந்து கொண்டிருந்ததாலும், வெறுப்பும் இகழ்ச்சியும் ததும்பிய குரலில் அவள் குருவின் வாக்கியங்களை மொழி பெயர்த்துக் கூறிவிட்டு மரக்கலத்தை ஏறிட்டு நோக்கினாள். நிசப்தமாயிருந்த மரக்கலத்தின் தளத்தில் திடீரென வீரர்கள் நடமாடும் அரவம் ஏற்படுவதற்கும் பந்தங்கள் எரிவதற்கும் படகு மரக்கலத்தை அடைவதற்கும் சமயம் சரியாயிருந்தது. ஆயுதம் தாங்கிய பத்து வீரர்கள் மதச் சின்னங்களை அணிந்தும் வாட்களை உருவிய வண்ணமும் மரக்கலத்தின் தளத்தில் காட்சியளித்தார்கள். மதகுருவின் சைகைப்படி காவலரிடையே நூலேணியில் ஏறி மரக்கலத்தின் தளத்தை அடைந்த இளஞ்செழியன், தன்னை மதம் மாற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் அங்கு தயாராயிருப்பதைக் கவனித்ததும் சற்றுப் பிரமித்தான். அவன் பிரமிப்பைக் கண்டதால் திருப்தியடைந்த மதகுரு, “தமிழா! சாம்பிராணி நாட்டார் யாரை மதம் மாற்றுவதானாலும் அவர்கள் திருப்தியையும் கவனிப்பது சம்பிரதாயம். இந்தத் தளத்தில் மதச் சிட்சைகள் நடக்க வேண்டுமென்று விரும்பினாய். அப்படியே நடக்கப் போகிறது. ஆனால் என்னைக் கைப்பற்றி மன்னனை மிரட்டிக் கப்பலுக்கு ஆட்களைப் பெற்று நீ தப்பிவிடலாமென்று நினைத்தது மட்டும் நடவாது” என்று கூறிய மதகுரு, இரண்டு வீரர்களைப் பந்தங்களைப் பிடிக்கச் சொல்லி, அந்த இரண்டு பந்தங்களுக்கு நடுவில் இளஞ்செழியனை மண்டியிட்டு உட்காரச் சொன்னார். படைத்தலைவன் அப்படியே உட்கார்ந்ததும் மற்ற பத்து வீரர்களையும் சுற்றிலும் காவலாகச் சூழ்ந்து நிற்கச் சொல்லி, தாமும் படைத் தலைவன் முன்பாக மண்டியிட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு உரத்த குரலில் அராபிய மொழியில் ஏதேதோ மந்திரங்களை ஓதினார். அவர் மந்திரம் ஓதிய சமயத்தில் வீரர்கள் தலை கவிழ்ந்து பயபக்தியுடன் மௌனமாக நின்றனர். அலீமாவும் தலை கவிழ்ந்துதான் நின்று கொண்டிருந்தாள். இருப்பினும் அடுத்து நிகழவிருந்த ஏற்பாடுகளைக் குறித்து அவள் மனம் பெரும் வேதனைப்பட்டதன் விளைவாக, படைத்தலைவன் தலைமீதும், அடர்ந்து கருத்து சுருண்டு தொங்கிக் கன்னங்களில் விளையாடிய குழல்கள் மீதும் அவள் கண்கள் பதிந்தன. இத்தன அழகான குழல்கள் இன்னும் கால் ஜாமத்திற்குள் நீக்கப்படுமே’ என்று நினைத்து உள்ளம் உருகினாள் அலீமா. ‘மதகுருவைக் கடத்திச் செல்ல முயன்றபோது இவரைப் பெரிய வீரரென்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேனே. இதோ பேடிபோல் நடுங்கித் தலை குனிந்து வணங்கிக் கிடக்கிறாரே, எத்தனை பரிதாபம்! அல்ல அல்ல! இதல்ல பரிதாபம். இத்தகைய மனிதரிடம் என் உள்ளத்தைப் பறிகொடுத்தேனே, அதுதான் பரிதாபம்! அதுகூட அல்ல பரிதாபம். இவருடன் தமிழ் நாடு செல்லலாம், அங்கு எனது ராணியைச் சந்திக்கலாம் என்ற திட்டங்களிட்டேனே, அதுதான் பரிதாபம்!’ என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு மனம் புழுங்கிக் கொண்டிருந்த அலீமாவுக்கு வினாடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் கால் ஜாமத்தை ஓட்டிவிட்டதுகூடத் தெரியவில்லை. நிமிடங்கள் ஓடியதையோ அவள் கால் ஜாமத்தை நகர்த்திவிட்டதையோ லட்சியம் செய்யமலே தமது நீண்ட ஜபத்தை முடித்த மதகுரு, “உம்…சிட்சை செய்பவர்கள் வரட்டும்” என்று உத்தரவிட்டு எழுந்தார். அவருடன் இளஞ் செழியனும் எழுந்திருக்க முயன்றதைக் கண்ட மதகுரு, “இரு! இரு! ஐஸிஸ் தேவியின் பூரண கிருபை உனக்கு வரவில்லை? முதலில் உன் தலைமயிர் எடுக்கப்பட வேண்டும். பிறகு நான் மந்திர நீரைத் தெளிப்பேன். பிறகுதான் இந்தக் கடன்கள் முடியும்” என்று கூறினார்.

ஆனால் அவர் கூறியதை லட்சியம் செய்யாமலே எழுந்து நின்றுகொண்ட இளஞ்செழியன் மார்பில் காவலரின் கத்திகள் இரண்டு தடவின. “உம் மண்டியிட்டு உட்கார்” என்று மதகுரு கூறியதன்றிக் காவலரும் அவனை உட்காரும்படி சைகை காட்டினர்.

மார்பில் தடவி எந்த விநாடியிலும் ஊடுருவிவிடக் கூடிய கத்திகளையோ மதகுருவையோ சிறிதும் சட்டை செய்யாத இளஞ்செழியன் அலீமாவை நோக்கி, “அலீமா! தலைமயிரை வாங்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்” என்றான்.

அலீமா ஏதும் புரியாமல் விழித்தாள். மதகுரு சொல்வது எதை எதிர்த்தாலும் அந்த வினாடியிலேயே இளஞ்செழியன் கொல்லப்படுவான் என்பதை உணர்ந்த அலீமா, அவன் சொன்னதை மொழிபெயர்த்துக் குருவிடம் சொல்லாமல், “வேண்டாம், வேண்டாம். மண்டியிட்டு உட்கார்ந்து விடுங்கள். சிட்சை நடக்கட்டும். இல்லையேல் உங்கள் உயிர் போய்விடும்” என்று கெஞ்சினாள். அவள் குரல் நடுங்கியது. உடல்கூட சற்று ஆடியது.

இளஞ்செழியன் அவள் திகிலைக் கவனித்தான். இருந்த போதிலும் கவனியாதது போலச் சொன்னான், “நான் சொன்னதை மொழிபெயர்த்துக் குருவிடம் சொல்” என்று.

அடுத்த வினாடி அதிக ஆத்திரத்துடனும் குரோதத் துடனும் எழுந்தது மதகுருவின் குரல். “என்ன சொல்கிறான் தமிழன்?” என்று கேட்டார் மதகுரு.

“தலைமயிரை வாங்க வேண்டிய அவசியமில்லையாம்” தட்டுத் தடுமாறி மொழிபெயர்த்தாள் அலீமா.

மதகுருவின் உணர்ச்சியற்ற முகத்திலும் மெள்ளக் கோப உணர்ச்சி உதயமானாலும் அதை வெளிக்குக் காட்டாமலே, “காரணம் என்னவாம்?” என்று கேட்டார் அவர்.

“சிட்சையில்லாமலே ஐஸிஸ் தேவியின் அருள் எனக்குக் கிடைத்துவிட்டது. உன் மதகுருவுக்குத் தெரியும்படியாகச் சொல் அலீமா” என்றான் படைத் தலைவன். அலீமா மொழி பெயர்த்தாள். அப்புறம் மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தாள். மதகுருவும் படைத் தலைவனும் ஒருவரை யொருவர் நேரிடையாகப் பார்த்தே பேச ஆரம்பித்தார்கள்.

“ஏன்? எங்கள் தேவி உனக்குப் பிரசன்னமோ?” என்று உக்கிரத்துடன் கேட்டார் மதகுரு.

“ஆம்” என்று பணிவுடன் கூறினான்.

“எப்பொழுது பிரசன்னம்?”

“இப்பொழுது மண்டியிட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தபொழுது.”

“உன் மனக் கண் முன் தோன்றிவிட்டாளோ?”

“ஆம் குருவே!”

“சிகையை எடுக்க வேண்டாம், இந்த நாட்டு மதவழக்கப் படி நடக்க வேண்டாம் என்றும் உனக்கு விளக்களித்தாளா?”

“ஆம்.”

“விளையாடுகிறாயா?”

“மத விஷயத்தில் நான் விளையாடுவதில்லை?”

“அந்த மட்டும் நீ புத்திசாலிதான். மண்டியிடு, சிட்சை நடக்கட்டும்.”

“எனக்கிஷ்டமில்லை.”

“உன் இஷ்டம் எதுவும் இங்கு நடவாது. கண்ணை மூடிக் கொண்டிருந்த சமயத்தில் உன் புத்தி புரண்டுவிட்டது போலிருக்கிறது.”

“மதகுரு தவறாக நினைக்கிறீர்கள். புறக் கண்களை மூடும்போது அகக் கண்கள் திறக்கின்றன. உணர்ச்சியால் பல விஷயங்களை அறிய முடிகிறது.”

“அப்படியா?”

“ஆம். அறிந்த பின்புதான் எழுந்திருந்தேன்.”

“எதை அறிந்த பின்பு?”

“ஐஸிஸ் தேவியின் அருள் கிடைத்துவிட்டது என்பதை அறிந்த பின்பு.”

“வேறெதை அறிந்தாய்?” மதகுருவின் பேச்சில் கோபம் மட்டுமின்றி இகழ்ச்சியும் அதிகரித்திருந்தது.
“ஐஸிஸ் தேவி தனது மதத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ள இஷ்டப்படவில்லை என்பதையும் அறிந்தேன்” என்றான் படைத் தலைவன்.

“தேவியே சொன்னாளா?” என்று கேட்டார் மதகுரு.

“சொன்னது மட்டுமல்ல. செய்யவும் செய்தாள்.”

“என்ன செய்தாள்?”

படைத் தலைவன் பதிலில் துக்கம் தாண்டவமாடியது. “என் நாட்டைவிட்டுப் போ என்று ஓட்டியும் விட்டாள்” என்றான் படைத் தலைவன்.

அப்பொழுதுதான் ஏதோ பெருமோசம் நடந்திருக்கிற தென்பதை உணர்ந்துகொண்ட மதகுரு சட்டென்று கரைப் பக்கம் தலையைத் திருப்பினார். அடுத்த வினாடி, மோசம்! மோசம்! தமிழனை வெட்டிப் போடுங்கள்” என்று கூவினார் மதகுரு.

எதற்கும் அசையாத மதகுரு அப்படித் திடீரெனக் கூக்குரலிட்டதனால், வீரர்கள் செயலற்றுப் போன ஒரு விநாடியில் சரேலென்று குனிந்து வீரனொருவன் வாளை உருவி, திரும்பி நின்ற மதகுருவின் முதுகில் ஊன்றிக் கொண்ட படைத் தலைவன் மற்ற வீரர்களை நோக்கி, “உங்களில் யாராவது ஒருவன் ஒரு அடி நகர்ந்தாலும் மதகுரு பிணமாகி விடுவார். ஜாக்கிரதை” என்று எச்சரித்ததன்றி, “உம், வாட்களைக் கீழே போடுங்கள்” என்று கடுமையான குரலில் உத்தரவும் இட்டான்.
வீரர்கள் ஒரு வினாடி தயங்கினர். “நாங்கள் பத்துப் பேர் இருக்கிறோம். நீ ஒருவன் என்ன செய்ய முடியும்” என்றும் ஒருவன் துணிவுடன் கேட்டான்.

இளஞ்செழியன் முகத்தில் புன்முறுவல் அரும்பியது. “எதற்கும் கானாவின் கோட்டையைப் பாருங்கள். உங்களைச் சுற்றிக் கப்பலிலும் கவனியுங்கள்” என்று கூறினான்.

அவன் சொற்படி “கானாவின் கரையைக் கவனித்த காவலர் பிரமை பிடித்து நின்றார்கள். கானாவின் கரைதூரத்தே தெரிந்தது. நங்கூரம் எடுக்கப்பட்ட மரக்கலம் அதிவேகமாகத் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காவலர் தங்களைச் சுற்றிலும் ஒரு முறை கண்களை ஓட்டினார்கள். பந்தங்கள் அவர்களுக்கு வெகு அருகேயிருந்ததால் கப்பலின் ஓரங்கள் முதலில் தெளிவாகத் தெரியவில்லை. இருளிலிருந்து வெளிச்சமிருக்கும் பிரதேசத்தைப் பார்க்கலாம். வெளிச்சத்திலிருந்து இருட்டுப் பிரதேசம் தெரியாதல்லவா! ஆகவே உள்ள நிலையைப் புரிந்து கொள்ள ஊன்றிக் கவனிக்க வேண்டியிருந்தது காவலருக்கு. அப்படி ஊன்றிக் கவனித்த போதுதான் மரக்கலத்தின் ஓரப் பலகைகளில் தங்களைச் சுற்றிப் பலர் வேல்களைத் தாங்கி நின்றது தெரிந்தது. சிறைப் பட்டிருப்பது தமிழனல்ல, தாங்கள்தான் என்பதைப் புரிந்து கொண்ட மதகுருவின் படைவீரர்கள் எல்லையற்ற கலவர மடைந்து படைத் தலைவன் உத்தரவுப்படி கத்திகளைக் கீழே எறிந்தனர். இருளிலிருந்து வெளிவந்த ஹிப்பலாஸ் சுற்றிலும் வேல் தாங்கி நின்ற வீரர்களை விட்டு அந்தக் கத்திகளை எடுக்கச் சொன்னான். பிறகு மதகுருவின் காவலரை நடத்திக் கொண்டு போய் மரக்கலத்தின் ஒரு மூலையில் வளைத்து நிறுத்தும்படி உத்தரவிட்டான். காவலர் அப்புறப்படுத்தப்பட்டதும் மதகுருவின் முதுகில் ஊன்றியிருந்த கத்தியை அகற்றிய படைத் தலைவன், “மதகுரு மன்னிக்க வேண்டும். எந்த மதத்தையோ மதத்தைச் சேர்ந்தவர்களையோ அவமதிப்பது தமிழர் பண்பாடு அல்ல. ஆனால் நானிருந்த நிலையில் வேறு வழியில்லை” என்று பணிவுடன் சொன்னான்.

மதகுரு ஏதும் புரியாமல் விழித்தார். பிறகு வேகத்துடன் எட்டச் சென்று கொண்டிருந்த கானாவின் விளக்குகளை ஏறெடுத்துப் பார்த்த மதகுரு பெருமூச்செறிந்தார். “தேவி உன்னைச் சும்மா விடமாட்டாள். இலி-ஆஸுவும் சும்மா விடமாட்டான்” என்று கூறினார் குரலில் ஆத்திரம் தொனிக்க.

நிராதரவான அந்த நிலையிலும் தைரியத்தைக் காட்டிய மதகுருவை மரியாதையுடன் நோக்கிய படைத் தலைவன், “மதகுருவே! இலி-ஆஸுவைப்பற்றி எனக்குக் கவலையில்லை . ஆனால் ஐஸிஸ் தேவி கருணை வாய்ந்தவள். தேவியை நான் மறக்கமாட்டேன். தமிழகம் சென்ற பின்பும் மறக்க மாட்டேன். தெய்வம் கருணையின் சொரூபம். அது எந்த உருவிலிருந் தாலும் அதர்மத்திற்கு இடம் கொடாது. இது பாரத நாட்டு வேதாந்தம். தமிழர்கள் தனிச் சித்தாந்தமும் இதுதான். தேவி கருணை வாய்ந்தவள். மதகுருவே, அவள் பெயரால் இனியாவது கட்டாய மதமாற்றம் வேண்டாம்” என்ற மதகுருவுக்கு யோசனை சொல்லவே, சீற்றம் கொண்ட மதகுரு, “உன் உபதேசம் எனக்குத் தேவையில்லை. என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கடுங் கோபத்துடன் கேட்டார்.

“காலையில் சொல்கிறேன்” என்ற படைத் தலைவன், மதகுருவை அழைத்துச் சென்று பாதுகாக்கும்படி ஹிப்பலாஸுக்கு உத்தரவிட்டு, அலீமாவை அழைத்துக் கொண்டு தளத்திலிருந்த கொள்ளைத் தலைவன் அறைக்குச் சென்று, அங்கிருந்த பஞ்சணையில் அவளை உட்காரவைத்து அதுவரை மறைக்கப்பட்டிருந்த விளக்கையும் வெளியே எடுத்தான்.

அறைபூராவும் சூழ்ந்த விளக்கொளியில் பிரமை பிடித்து உ.ட்கார்ந்திருந்த அலீமாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்ட இளஞ்செழியன், அவள் முகத்திலிருந்த வியப்பையும் பிரமையையும் கண்டு, “என்ன அலீமா அப்படிப் பார்க்கிறாய்?” என்று வினவினான்.

“பிரமை பிடித்திருக்கிறது” என்று மெள்ளத் தட்டுத் தடுமாறிப் பேசினாள் அலீமா.

“உலகமே ஒரு பிரமைதான் அலீமா” என்றான் இளஞ்செழியன்.

“எப்படி மதகுருவை ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டாள் அலீமா.

மெள்ள மெள்ள விவரித்தான் படைத்தலைவன். அவன் விவரிக்க விவரிக்க மேலும் பிரமை அடைந்த அலீமாவுக்கு அவன் விஷயத்தைச் சொல்லி முடித்ததும் உணர்ச்சிகள் கரை புரண்டோடின.

Previous articleYavana Rani Part 2 Ch12 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here