Home Sandilyan Yavana Rani Part 2 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

125
0
Yavana Rani Part 2 Ch14 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch14 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 14 மரக்கலத்துக்கு ஒரு தலைவி

Yavana Rani Part 2 Ch14 | Yavana Rani | TamilNovel.in

உணர்ச்சிப் பெருக்கினால் எதிர்பாராத விதமாகத் திடீரென அலீமா தன் கழுத்தை வளைத்துக் கட்டிக் கொண்ட தால் சோழர் படை உப தலைவன், மெள்ள அவள் கைகளைத் தன் கழுத்திலிருந்து பிரித்து எடுத்துவிட்டுச் சற்றே விலகிப் பஞ்சணையில் உட்கார்ந்து, “இலி-ஆஸுவின் வளர்ப்பு மகளுக்கு இது தகுதியல்ல அலீமா” என்று சிறிது கடுமை யாகவும் வார்த்தைகளை உதிர்த்தான். ஆனால் அலீமாவுக்கு தான் செய்ததில் பிழை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை யாகையால் அவள் அவன் வார்த்தைகளைக் கேட்டதும் நகைக்கவே செய்தாள். ‘யாரும் செய்வதற்கு முடியாத காரியத்தைச் சாதித்திருக்கும் இவருக்கு எப்படிப் பாராட்டுத் தெரிவிப்பது!’ என்று தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்ட தல்லாமல், தான் கேட்ட விவரங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பெரும் பிரமையே அடைந்தாள். அத்தனை அற்புத நிகழ்ச்சிகளை அவளுக்கு விவரித்திருந்தான் படைத் தலைவன். தளத்தில் மதகுருவை ஹிப்பலாஸிடம் ஒப்படைத்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு கொள்ளைத் தலைவன் அறைக்கு வந்தபோதுகூட அலீமாவின் குழப்பமும் பிரமையும் மிதமிஞ்சிக் கிடந்ததைக் கண்ட படைத்தலைவன், மேலும் அலீமாவைக் குழப்பத்தில் வைக்கக் கூடாதென்ற முடிவுக்கு வந்தானாகையால், “மதகுருவை எப்படி ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டதுமே விஷயத்தை மெள்ள மெள்ள விளக்க முற்பட்டு, “மதகுருவை ஏமாற்றுவதில் கஷ்டங்கள் பல இருந்தன அலீமா! அபாயமும் பலமாக இருந்தது” என்று கூறினான்.

அலீமா பிரமை பிடித்துக் கிடந்த தன் அழகிய விழிகளை அவன்மீது ஒரு கணம் நிலைக்க விட்டுப் பின்பு கீழ்ப்புறம் தாழ்த்திவிட்டு, “அபாயத்தைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டாம். இதில் நீங்கள் வெற்றி கண்டிரா விட்டால் இத்தனை நேரம் நாமனைவரும் சித்திரவதை செய்யப்பட்டிருப்போம்” என்று முணுமுணுத்தாள்.

“முதல் நாள் நான் திட்டத்தைச் சொன்னபோதே இந்த எச்சரிக்கையை வெளியிட்டாயே அலீமா?” என்று நினைவு படுத்திய இளஞ்செழியன், “ஆனால் அலீமா! அபாயத்தைக் கண்டு அஞ்சுபவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. தவிர நான் சம்பந்தப்பட்ட வரையில் மதமாற்றமும் ஒரு சித்திரவதைதான் எனக்கு” என்று தெரிவித்தான்.

“அது கிடக்கட்டும். நீங்கள் சொன்ன திட்டம் வேறு. நடந்த திட்டம் வேறாயிருக்கிறதே?” என்று அலீமா கேட்டாள்.

“ஆம், அலீமா! இரண்டுக்கும் சிறிது வித்தியாசமிருக் கிறது. மதகுருவுக்கு நான் பணிவிடை செய்ய ஒப்புக் கொண்ட வுடன், அதுவும் மதம் மாறுவது நிச்சயம் என்று தெரிந்தவுடன், அடிமை வர்த்தகர்கள் ஐம்பது பேரையும் இலி-ஆஸு விடுதலை செய்வான் என்று எதிர்பார்த்தேன். அப்படியில்லாவிட்டால் உன்னைக் கொண்டாவது சிறைக் காவலரை ஏமாற்றி அவர்களை விடுவித்துவிட்டால் இரவோடு இரவாக மதகுருவைத் தூக்கிச் செல்லலாமென்று நினைத்தேன். ஆனால் மதகுருவும் இலி-ஆஸுவும் என் விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடனிருந்ததை முதல் நாளே கவனித்தேன். என்னை எப்பொழுதும் காவலர் சூழ்ந்து வந்தார்கள். நீ மன்னன் மாளிகையிலிருந்து வெளியே செல்லும் சமயங்களில் தூரத்திலிருந்து இருவர் உன்னைத் தொடருவதை மாளிகைச் சாளரத்தின் மூலம் இருமுறை கண்டேன். மற்றொன்றும் கண்டேன். ஹிப்பலாஸை மட்டும் யாரும் சட்டை செய்ய வில்லையென்பதையும் கண்டேன். இலி-ஆஸு அவனை ஒரு பொருட்டாகக் கருதவில்லையென்பதையும் அவன் வெளியே எங்கு சென்றாலும் ஒற்றர்கள்கூட அவனைத் தொடராததையும் கவனித்தேன். ஆகையால் எதை செய்வதானாலும் உன்னைக் கொண்டு செய்வதில் பயனில்லை, ஹிப்பலாஸைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அதையொட்டித் திட்டத்தை மாற்றினேன்” என்று விளக்கினான் படைத் தலைவன்.

“திட்டத்தை மாற்றிய தகவலை என்னிடம் சொல்ல வில்லையே?” என்று கேட்டாள் அலீமா.

“காரணமாகத்தான் சொல்லவில்லை. அலீமா! உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் மன்னனின் ஒற்றர் களால் கவனிக்கப்பட்டது. ஆகவே உன் மூலமாக அவர் களுக்கு ஒரு திட்டத்தையும், தனிப்பட்ட ஹிப்பலாஸிடம் ஒரு திட்டத்தையும் தெரியப்படுத்தினால் பொய்த் திட்டம் மன்னன் காதுக்குப் போகும். அதை அவன் சரிக்கட்ட எத்தனிக்கையில் மற்றொரு திட்டம் நிறைவேறிவிடும் என்று முடிவு செய்தேன். வெற்றியின் ரகசியமே இவ்வளவு தான். ஒருபாதி பொய். ஒருபாதி உண்மை. பொய்யை நம்பி ஒருவன் செல்லும்போது உண்மை நிகழ்ந்து விடுகிறது.”

“விளக்கிச் சொல்லுங்கள்” என்று அலீமா கேட்க, விவரிக்கத் தொடங்கினான் இளஞ்செழியன்.
“கானாவின் துறைமுகக் கோட்டையிலிருந்து தப்ப வழி ஒன்று தான். மதகுருவுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து அவர் நமது கையில் சிக்கினாலொழிய வேறு வழியில்லை என்பதை முதலிலேயே முடிவு செய்து கொண்டேன். ஆகையால் அமாவாசை இரவன்று மன்னனுக்கு உன்னைக் கொண்டு மதுவூட்டி மயங்கச் செய்து அவன் முத்திரை மோதிரத்தைப் பறித்து அதைக் காட்டி அடிமை வர்த்தகர்களைச் சிறை மீட்ப தென்றும், அவர்களில் பத்துப் பேரை மதகுரு மாளிகையை அடுத்துள்ள பாறைகளில் பதுங்கச் செய்வதென்றும் மற்ற வரை மரக்கலத்துக்கு அனுப்பிவிடுவதென்றும் தீர்மானித்தேன். அப்படிப் பதுங்கிய பத்துப் பேர் நான் மதகுருவை அழைத்துக் கொண்டு இரவில் மாளிகைக்கு வெளியே வரும்போது அவரைக் கட்டித் தூக்கிக் கொண்டுபோக வேண்டியதென்றும், பிறகு நான் தொடர வேண்டியதென்றும் முதலில் திட்டமிட்டேன். ஆனால் முதல் நாள் எத்தனை பணிவிடை செய்தும் மதகுருவின் பார்வை சந்தேகப் பார்வை யாயிருந்ததையும், என்னைக் கண்காணிக்கவும் அவர் தனிப் படத் தன் சீடர்களில் ஒருவனை ஏவியதையும் கண்டதும் திட்டத்தை மாற்றிவிட்டேன். மறுநாளே ஹிப்பலாஸை அழைத்துச் சிறை நிலவரத்தையும் காவல் முறையையும் அறியும்படி கூறினேன். சிறையில் இராக்காலத்தில் காவல் அதிகமில்லையென்பதையும் அறிந்த ஹிப்பலாஸுக்கு, அடிமை வர்த்தகர்களை விடுவிப்பது ஒரு பொருட்டல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். என் சொற்படியே ஹிப்பலாஸ் நடந்து கொண்டான். இரண்டாம் நாளிரவிலிருந்து சிறைக் காவலருக்குத் திருட்டுத்தனமாக மன்னன் மாளிகை மதுவைக் கொண்டுபோய்க் கொடுத்தான். தான் மதம் மாறப் போவதைக் குறித்தும் பெருமையடித்துக் கொண்டான், மத மாற்றப் பேச்சு அவர்கள் நினைவைக் குலைத்தது. ஆகவே அடிமை வர்த்தகர்கள் தப்புவது சுலப மாயிற்று. மயங்கிக் கிடந்த காவலரிடமிருந்து சாவியை எடுத்துச் சிறைக் கதவைத் திறந்துவிட்டான் ஹிப்பலாஸ்.”

இப்படிச் சொல்லிக் கொண்டு போன இளஞ் செழியனை இடைமறித்த அலீமா ஒரு சந்தேகம் கேட்டாள், “விடுவித்தது சரிதான். ஆனால் அடிமை வர்த்தகர்கள் மரக்கலத்துக்கு எப்படி வர முடிந்தது? கானாவின் கோட்டை வாயிலில் காவல் பலமானதாயிற்றே?” என்று.

“அதை முன்பே கவனித்தேன் அலீமா. நான் முதலில் வந்ததே அந்த வாசல் வழியாகத்தானே? ஆனால் கோட்டையின் சுவர் பெரிய மலைப்பாறைகளை அண்டியதும் நின்றுவிடுகிறது. மற்ற இடங்களுக்கு மலைப்பாறைகளே அரணாகின்றன. சிறைக் கட்டடங்களுக்குப் பின்புறம் பெரும் மலைப்பாறைகளே இருக்கின்றன. சிரமப்பட்டால் அவற்றில் ஏறி நீர் மட்டத்தை சிறிது தெற்குப் புறத்தில் அடையலாம். அங்கிருந்து மரக்கலத்துக்கு நீந்திச் செல்வது எளிது. அதுவும் இன்றுள்ள கடும் நீரோட்டத்தில் அது மிக எளிதாகிவிட்டது” என்று விளக்கிச் சொன்ன இளஞ்செழியன் மேலும் கூறினான்: “காவலரை ஏமாற்றுவது அத்தனை பெரிய காரியமல்ல. ஆனால் மதகுருவை எப்படித் தனித்து மாளிகைக்கு வெளியே கொண்டு வருவதென்று யோசித்தேன். மதத்துக்குப் பரிகாரம் மதம்தான் என்பதை யோசித்தேன். அதைப்பற்றிச் சர்ச்சை செய்வதாகக் கூறித்தான் உன்னையும் அழைத்துக் கொண்டு மூன்று இரவுகள் மதகுரு மாளிகைக்குச் சென்றேன்” என்று பேச்சைச் சற்று நிறுத்தினான்.
“ஓகோ! அதற்காகத்தான் என்னைக் கூட்டத்திலிருத்தி விட்டுப் பிரதி தினம் மதகுருவிடம் தனித்துப் பேசிக் கொண் டிருந்தீர்களோ?” என்று கேட்டாள் அலீமா.

“ஆம் அலீமா! மதகுருவுக்கு மதவெறி அதிகம் என்பதைக் கண்டதும் அந்த வெறியைத் தூண்ட முற்பட்டேன். வெறி, புத்தியை ஆட்சி கொள்ளும்போது அறிவு குலையும் என்பது ஆன்றோர் மொழி. ஆகவே அரபு நாட்டைப் பற்றி எங்கள் நாட்டு வணிகர் சொன்னதைப் பற்றி யெல்லாம் விசாரித்தேன். அரபு நாட்டில் பல கூட்டங்களிருக் கின்றனவாமே, அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி தெய்வமாமே என்றெல்லாம் கேட்டேன். மழைக்கு ‘பிளைட்ஸ்’ என்ற கடவுளும், காதலுக்கு ‘உஸ்ஸா’ ‘அத்தார்’ என்ற கடவுள்களும் உண்டென்பது உண்மையா என்றும் கேட்டேன். உண்மையென்று ஒப்புக் கொண்டார் மதகுரு. அத்துடன் துர்ச்செய்கைக்கு மானா’ என்ற தேவதையும் உதவி புரிய ‘யாகூத்’தும், நட்புக்கு ‘வாட்’ தேவதையும் அதிகாரிகளா என்று விசாரித்தேன். என் விசாரணையால் மகிழ்ந்தார் மதகுரு. அத்தனையும் உண்மை என்று சொல்லிப் பெருமூச் செறிந்தார். மதத்தில் எனக்குள்ள ஆராய்ச்சியையும் இப்பேர்ப்பட்ட சீடன் கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றும் பாராட்டினார். அத்துடன் அந்தத் தேவதைகள் உண்மைத் தெய்வங்கள் அல்லவென்றும், எகிப்து கலாசாரத்தின் சின்னமும் உலகமாதாவும் ‘ஹோரஸ்’ என்ற தெய்வீகக் குழந்தையைக் கையிலேந்தியவளுமான ‘ஐஸிஸ்’ தேவியே உண்மைத் தெய்வமென்றும் கூறினார். அவர் சொன்னதிலிருந்து பல விஷயங்களை உணர்ந்தேன். மற்றக் கலாசாரங்கள் போலவே எகிப்தின் கலாசாரமும் அரபு நாட்டில் வேரூன்றி யிருக்கிறதென்பதையும், ஐஸிஸ் தேவியிடம் இலி-ஆஸுவுக்கு இணையற்ற நம்பிக்கை என்பதையும் புரிந்து கொண்டேன். ஆகவே அந்தப் பழைய நம்பிக்கைகளைக் கலந்து மதகுருவிடம் பேசினேன். ‘மானா’ என்ற துர்த்தேவதை எனது மரக்கலத்தில் உலவுவதாக நான் கனவு கண்டதாகவும், ஆகவே ஐஸிஸ் தேவியின் மந்திரங்களை மரக்கலத்தின் தளத்தில் உச்சரித்தால் அந்தத் துர்த்தேவதை ஓடிவிடுமென்றும் கூறினேன். என்னைப் போன்ற கடலோடிகளை மதம் மாற்றுவதானாலும் எங்கள் கப்பல்மீது மாற்றுவதே எங்கள் நாட்டுப் பழக்கம் என்றேன். மற்றக் காரணங்களுக்கு மசிவதுபோல் பாசாங்கு செய்த மதகுரு மானாவின் பெயரைக் கேட்டதும் உண்மையாகவே வெகுண்டார். ஐஸிஸ் தேவியின் பெயரை உச்சரித்தால் அது ஓடிவிடும் என்றும் கூறி, மூன்றாவது நாள் இரவில் என்னுடன் தனித்துப் புறப்பட்டார். யாராவது வீரர்களை அழைத்துக் கொள்ளுங்களேன் என்றேன். தேவையல்லை என்ற மதகுரு, கடைக்கண்ணால் என் முகத்தைக் கவனித்தார். நான் பெரிய விசாரம் விட்டது போல் முகத்தை வைத்துக் கொண்டேன். நீ கூறியதுபோல் அது நடிப்புத்தான் அலீமா! நான் உன்னையும் பத்துக் காவலரையும் கடற்கரையில் கண்டதும் கிலி பிடித்ததாகக் காட்டியதும் நடிப்புத்தான். நடிப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை. என் திட்டத்தைக் குலைத்துவிட்டதாக மதகுரு நினைக்க வேண்டும். அந்த நினைப்பின் தைரியத்தில் அசட்டையாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். உன்னை எப்பொழுதும் மன்னரின் ஒற்றர்களும் மதகுருவின் ஒற்றர்களும் தொடருவதால் நீ அரண்மனையை அடையு முன்பே சிறை பிடிக்கப்படுவாயென்பது எனக்குத் தெரியும்…”

சற்றுப் பேச்சை நிறுத்தி அலீமாவைப் பார்த்தான் இளஞ்செழியன். அவள் விழிகளில் கோபச்சாயை படர்ந் திருந்தது. “ஒருவேளை என்னை வீரர்கள் சிறை செய்து கொட்டடியில் அடைத்திருந்தால் என்னைக் கனாவிலேயே விட்டுப் போய் விடத்தானே உத்தேசம்?” என்று அவள் கேட்டாள் சொற்களில் கோபம் சொட்ட.

“வீரர்கள் சிறை செய்தாலும் உன்னைச் சிறையில் அடைக்க மாட்டார்களென்பது எனக்குத் தெரியும்!”

“எப்படித் தெரியும்?”

“எனக்கும் மதகுருவுக்கும் இடையே மொழி பெயர்க்க, மன்னன் உன்னைத்தானே நியமித்திருக்கிறான்?”

“அப்படியானால் மதகுருவிடம் தனிமையில் பேசுகையில் என்ன செய்தீர்கள்?”

“தெய்வங்களின் பெயர்களை மட்டும் பெரிதாக உச்சரித்தேன். சிலவற்றுக்கு ஜாடை காட்டினேன். நான் எங்கள் நாட்டுக்கு வந்த அரபு வணிகரிடமிருந்து கற்ற மொழியையும் அரைகுறையாகப் பேசினேன்.”

“முதல் நாள் ஏன் அப்படிப் பேசவில்லையென்று மதகுரு கேட்கவில்லையா?”

“கேட்டார். ஆனால் மொழி சரியாகத் தெரியாததால் பயமாயிருந்ததென்று மன்னிப்பும் கேட்டேன்.”

அலீமா சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு மீண்டும் சந்தேகம் கேட்டாள், “ஆமாம், மரக்கலம்தான் உங்கள் வசமிருந்தது. அப்படியிருக்கத் தளத்தின்மீது மண்டியிட்டு மதகுருவிடம் சிட்சை பெறுவதற்கு எதற்காக உட்கார்ந்தீர்கள்?” என்று.

“அவகாசம் தேவையாயிருந்தது அலீமா!” என்றான் இளஞ்செழிகயன்.

“எதற்கு அவகாசம்?” என்று கேட்டாள் அலீமா.

“அடிமை வர்த்தகர்கள் தப்பிய பிறகு அவர்களைத் துடுப்புகளுள்ள அறையில் மூச்சுப் பேச்சில்லாமல் பதுங்கியிருக்கும்படியும், மதகுருவும் நானும் மற்றவர்களும் தளத்துக்கு வந்த பின்பு ஓசைப்படாமல் மெள்ள நங்கூரத்தைத் தண்ணீரிலிருந்து மேலிழுத்து விடும்படியும் கூறினேன். கடலில் நீர்வேகம் அதிகம் இருந்தால், துடுப்புக்களைத் துழாவ வேண்டியதில்லையென்றும் ஹிப்பலாஸிடம் சொல்லி யிருந்தேன்” என்றான் இளஞ்செழியன்.

“உங்கள் திட்டம் தவறியிருந்தால்? மதக்குரு உங்கள் வலையில் விழாமலிருந்தால்? மரக்கலத்துக்கு வர மறுத்திருந் தால்?” என்று உணர்ச்சி பொங்கக் கேட்டாள் அலீமா.

“மரக்கலத்தை நடத்திச் சென்று, முடிந்தால் தமிழகம் சேருமாறு ஹிப்பலாஸுக்கு உத்தரவிட்டிருந்தேன்” என்றான் இளஞ்செழியன்.

“அங்கு…? அங்கு….?” என்று இருமுறை ஏதோ சொல்ல முற்பட்ட அலீமா மேலே முடியாததால் பெருமூச்செறிந்தாள். “அங்கு காத்திருப்பவளுக்கு ஆறுதல் சொல்லவா ஹிப்பலாஸை அனுப்புகிறீர்கள்?” என்று கேட்கத் துடித்தாள் அவள். அதை நினைக்க நினைக்க இளஞ்செழியனின் ஆழ்ந்த காதல், ஆழ்ந்த கடமை உணர்ச்சி, எந்த நிலையையும் சமாளிக்கவல்ல ஆழ்ந்த திறமை, எல்லாவற்றையும்விட எல்லையற்றுக் கிடந்த அவன் நாட்டுப்பற்று, வீரம், தந்திரம் எல்லாம் அவள் இதயத்தைச் சூழ்ந்து உணர்ச்சிகளைக் கிளறிவிடவே, கரை புரண்ட அன்பினாலும் மதிப்பினாலும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அப்பொழுதுதான் அவன் சற்றுக் கண்டித்தான், “இலி-ஆஸுவின் வளர்ப்பு மகளுக்கு இது தகுதியல்ல அலீமா” என்று.

அவன் வார்த்தைகளிலிருந்த உஷ்ணத்தைக் கவனித்த அலீமா மெள்ள நகைத்தாள். அந்த உஷ்ணத்தை ஊட்டும் ஒரு பெண் ஆயிரக்கணக்கான ஸ்டேடியாக்களுக்கு அப்பால் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டதால், அவளென்ன அத்தனை பெரிய அழகியா?’ என்று பொறாமையும் கொண்டாள் அந்தப் பாலைவனத்து அழகி. அவள் சிரிப்பைச் சிறிதும் ரசிக்காத இளஞ்செழியன் பஞ்சணையிலிருந்து எழுந்தான், பிறகு மௌனமாக வெளியே செல்ல முயன்றான்.

“எங்கு போகிறீர்கள்?” அவன் அசட்டையைக் கண்டு கோபத்துடன் கேட்டாள் அலீமா.

“மேற்கொண்டு ஏற்பாடுகளைச் செய்ய” என்றான் இளஞ்செழியன்.

“என்ன ஏற்பாடுகள்?”

“விடிய அரை ஜாமமே இருக்கிறது.”

“அது தெரியும்.”

“விடிவதற்குள் மதகுருவைக் கரையில் இறக்கி விட வேண்டும்.”

“எங்கே?”

“இன்னும் அரை காதம் சென்றதும் கானாவின் தெற்கு ஓரத்திலிருக்கும் பாறைகளுக்கருகில் கரையை அடைய ஒரு படகைக் கொடுத்து, குருவையும் வீரர்களையும் அனுப்பி விடுகிறேன்.’

“பிறகு?”

“பிறகு துடுப்புகளைக் கொண்டு இந்த சிவப்புக் கடலுக்குக் குறுக்கே, மேற்கில் மரக்கலத்தைச் செலுத்த வேண்டும். காற்று வசதியிருந்தால் பாயையும் விவரிக்க வேண்டும்.”

இளஞ்செழியனின் திட்டங்கள் தெளிவாக இருப்பதைக் கண்ட அலீமா, சோழர் படைகளின் உபதலைவன் எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே யோசனை செய்வதை நினைத்துப் பார்த்து அவன் கூரிய அறிவை வியந்தாள். வெள்ளி முளைத்த சில வினாடிகளில் மிகத் திறமையுடன் அவன் திட்டங்களை நிறைவேற்றி முடித்த விதரணையைக் கண்டும் ஆச்சரியப்பட்டாள்.

மதகுருவுக்கும் அவருடைய வீரர்களுக்கும் படகு ஒன்றை அளித்துக் கரை சேரும்படி அனுமதித்துவிட்டு, ஹிப்பலாஸை விளித்து அடிமை வர்த்தகர்களைத் தளத்துக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டான் இளஞ்செழியன். அப்படித் தளத்தில் கூடிய அடிமை வர்த்தகர்களைப் பார்த்து, “என்னை நீங்கள் அடிமையாக விற்க நினைத்தீர்கள். உங்களை அடிமைத் தளையிலிருந்தும் இலி-ஆஸுவின் சித்திரவதையி லிருந்தும் மீட்டிருக்கிறேன். என்னிடம் பணிபுரிய இஷ்டப் பட்டால் இந்த மரக்கலத்தில் அலுவல் புரியலாம். இல்லையேல் உங்களை அடுலீஸ் துறைமுகத்தில் இறக்கிவிடுகிறேன். பிறகு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். கப்பலைச் செலுத்தப் புது மாலுமிகளையும் பணத்தையும் சம்பாதிக்க வழி எனக்குத் தெரியும். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

படைத் தலைவனிடம் பணிபுரிவதே தங்கள் நோக்க மென்பதை அடிமை வர்த்தகர்கள் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கவே, சிலரைத் துடுப்புகளைத் துழாவவும் சிலரைப் பாய் விவரிக்கவும் ஏவிய இளஞ்செழியன், கோபத்தால் கொதித்துக்கொண்டு சற்றுத் தூரத்தில் தளத்தில் நின்ற அலீமாவை ஹிப்பலாஸிடம் சுட்டிக்காட்டி, “ஹிப்பலாஸ்! இந்தக் கப்பலுக்கு இனி அலீமாதான் தலைவி” என்று கூறிய தன்றி, “அலீமா! உனக்குத்தான் மரக்கலத்தை நடத்தத் தெரியுமென்று சொன்னாயே. அடுலீஸுக்கு எங்களைக் கொண்டு சேர்ப்பது உன் கடமை” என்று சொல்லி அவளை அணுகி அவள் சீற்றத்தைத் தணிக்க அவளது இரு கரங்களையும் பிடித்துக் கொண்டான்.

“காரியம் ஆகவேண்டுமல்லவா! அதனால்தான்…” என்று சீறினாள் அலீமா.
“காலைப் பிடிக்கிறேன் என்கிறாய். பிடிக்கட்டுமா?” என்று சொல்லிப் புன்முறுவல் செய்தான் இளஞ்செழியன்.

அந்தப் புன்முறுவல் முன்பாக அவள் கோபம் கரைந்தது. “மரக்கலத்தின் இடது பக்கத்துத் துடுப்புக்களை மட்டும் துழாவுங்கள். யாரங்கே, சுக்கானை வலது பக்கம் திருப்பு. பாய்களை அத்தனை தூரம் விசிற வேண்டாம். இப்படி, உம்! இந்தப்புறம்…” என்று உத்தரவுகளை மடமட வெனப் பிறப்பித்தாள் அலீமா. அவள் உத்தரவுகளை அடிமை வர்த்தகர்கள் வெகு துரிதமாக நிறைவேற்றவே மெள்ள, திடமாக வடமேற்கில் திரும்பிய மரக்கலம் காற்று வேகத்தில் ஓட முற்பட்டது. அலீமாவின் எண்ணங்களும் மரக்கலத்தை விட அதிக வேகத்துடன் அடுலீஸின் பெரும் வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here