Home Sandilyan Yavana Rani Part 2 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

108
0
Yavana Rani Part 2 Ch15 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch15 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 15 மலைத் தீவில் …

Yavana Rani Part 2 Ch15 | Yavana Rani | TamilNovel.in

அலீமாவின் செம்பவள உதடுகளிலிருந்து உதிர்ந்த இரண்டு மூன்று கட்டளைகள் நிறைவேற்றப்பட்டதுமே, மரக் கலம் ஏதோ மந்திர நீர்ச் சக்கரம்போல் சுழன்று திசைமாறி வடமேற்கில் திரும்பி ஓட முற்பட்டதைத் தளத்தில் நின்றே கண்ட சோழர் படையின் உபதலைவன், கப்பலோட்டும் கலையில் அவளுக்கிருந்த திறமையைக் கண்டு பெரிதும் வியப்படைந்து, ‘டைபீரியஸ் சாமானியப்பட்டவனல்ல. ஒரு பெண்ணைக் கப்பலோட்ட இப்படிப் பழக்கக் கூடியவன் கரங்களில், அறிவு மிக்க ஆண்வீரர்கள் கிடைத்துவிட்டால் அவர்களை அவன் செப்பனிடக் கூடிய திறனைச் சொல்லவா வேண்டும்?’ என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டான். இப்படி அலீமா காட்டிய திறமையால் டைபீரியஸின் திறனும் தந்திரமும் அவன் சிந்தையிலெழுந்து உலாவவே, ‘இத்தகைய வல்லவனொருவன் தமிழகத்தில் புகுந்திருக்கிறானே! அவன் ஆணைப்படி இயங்க யவனர்களும் ஏராளமாயிருக் கிறார்களே! போதாக்குறைக்கு நாடும் பிளவுபட்டுக் கிடக்கிறதே. நாட்டின் கதி எப்படியிருக்கிறதோ?’ என்று நாட்டு நினைப்பிலும் ஆழ்ந்து, விவரிக்க முடியாத வேதனைக்குள் பல வினாடிகள் ஆழ்ந்து விட்ட படைத் தலைவன், கடலையும் தூரத்தே கண்ணுக்கு மறைந்து கொண்டிருந்த மதகுருவின் படகையும், கானாவின் தெற்குப் புறத்தில் எட்டத் தெரிந்த பாறைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு மௌனமாகவே நின்று கொண்டிருந்தான். நாட்டைவிட்டுத் தான் வெளியேறி இரண்டு மாதங்களுக்கு மேலாகவே ஓடிவிட்டதை எண்ணிப் பார்த்த இளஞ்செழியன், மீண்டும் நாடு திரும்ப இன்னும் இரண்டு மாதங்களாகலா மென்பதையும், போதிய பண வசதியும் பொருள்களும் கிடைக்காவிட்டாலோ, அல்லது கடற்காற்று அனுகூலமாக இல்லாவிட்டாலோ இரண்டு மாதங்களுக்கு மேலும் தாமதம் ஏற்படாமலென்பதையும் உணர்ந்தானாகையால், ‘இந்த நாலைந்து மாதங்களில் மன்னன் கரிகாலன் கதியும் புகாரின் கதியும் என்னவாகுமோ? இதுவரை என்ன ஆகியிருக்கிறதோ? நான் நாட்டில் திரும்பவும் காலை வைக்கும்போது விபரீத நிலைமை ஏற்பட்டிருந்தால்…?’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அதைப்பற்றி மேற்கொண்டு நினைக்கவும் அஞ்சி, நினைப்பை வேறு துறையில் மாற்றத் தளத்தின் கோடியில் நின்று ஏதோ உத்தரவிட்டுக் கொண்டிருந்த அலீமாவின்மீது தன் கண்களை ஓட்டினான்.

சமீபப் பார்வைக்கு இணையற்ற அழகுடன் விளங்கும் அலீமா தூரப் பார்வைக்கு மோகனாகாரமாக விளங்கினாள். தளத்தின் ஓரங்களில் எரிந்துகொண்டிருந்த இரண்டொரு பந்தங்களின் வெளிச்சம் அவ்வப்பொழுது ஆடிய பாய்ச்சீலையால் தடைப்பட்டதன் விளைவாக அவள் முதுகின் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் திட்டுத் திட்டாகத் திடீர்திடீரென விழுந்து மறைந்த ஒளித் தகடுகள் அவள் அழகு வடிவத்தை அதிக நேரம் காட்ட இஷ்டப்படாதவை போலக் காட்டிக் காட்டி மறைத்ததால், அவ்வப்பொழுது தோன்றித் தோன்றி மறையும் தேவஸ்திரீ போலக் காட்சியளித்தாள் அலீமா. இரட்டைப் பின்னலாகத் துலங்கி அவள் தோள் பட்டையில் தொங்கிய கருங்குழல்கள், பந்தங்களின் மின்னல் போன்ற வெளிச்சத்தில் தோன்றிய சமயங்களில் கருக்கலின் இருளைவிடத் தாங்கள் எத்தனை கருமையென்பதை நிரூபித்தன. கப்பலின் பெரும் பக்கப்பலகைகளுக்கெதிரே தெரிந்த அவள் சிறிய உருவம், துடிப்புடன் திரும்பி உத்தர விட்ட சமயங்களில் அசைந்த வேகத்தைப் பார்த்த இளஞ் செழியன் பூவழகி ஒருத்தி மட்டும் தன் மனத்தை ஆதியில் ஆட்கொள்ளாவிட்டால் யவன ராணியின் மையலிலோ அல்லது அந்த அராபிய அழகியின் காதலிலோ தான் சிக்கியிருப்பது நிச்சயமென்பதைப் புரிந்துகொண்டான். அந்தச் சிந்தனை ஏற்பட்டதால் தமிழகத்துப் பெண்களின் கற்பின் கவசம் ஆண் மகனை இதர பெண்களிடமிருந்தும் காக்கும் உரம் பெற்றிருந்ததை எண்ணி எண்ணி, பாரதத்தின் பண்பாட்டின் உச்சநிலையை வியந்து, ‘உணர்ச்சிகளைக் கூடக் கட்டிப் போட ஒரு பண்பாட்டை உலகத்துக்கு அளித்துள்ள என் நாடு பெருமையுடையது. அது வாழட்டும்!’ என்று சொந்த நாட்டுக்கு ஆசி கூறும் முறையில் ஏதோ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இப்படிப் பல எண்ணங்களால் பீடிக்கப்பட்ட படைத் தலைவனைத் தளத்தின் கோடியிலிருந்து நெருங்கி வந்த அலீமா, “தமிழகத்து வீரர் என் அறைக்கு வரவு செய்ய வேண்டும். ஹிப்பலாஸையும் வரச்சொல்ல வேண்டும்” என்று அழைப்பை விடுத்து, பணிவு நிரம்பிய குரலிலும் சொற்களிலும் உத்தரவின் தொனியையும் சிறிது காட்டினாள். அலீமாவின் சமீபத்தாலும் அவள் அதிவேகமாகத் தன் முன்பு வந்துவிடுத்த உத்தரவாலும், சிந்தையில் உலாவிய எண்ணங்களிலிருந்தும் தமிழகச் சூழ்நிலையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, செங்கடலில் ஓடிக்கொண்டிருந்த மரக்கலத்துக்கும் அப்பொழுதிருந்த நிலைமைக்கும் திரும்பிய இளஞ்செழியன் தன் உதடுகளில் புன்முறுவலைத் தோற்று வித்து, “உன் அறையா! எது அலீமா உன் அறை?” என்று வினவினான் ஏதும் புரியாதது போல்.

“அலீமாவுக்குத் தனி அறை இந்த மரக்கலத்தில் கிடையாது படைத் தலைவரே” என்று சுட்டிக் காட்டிய அலீமா சற்றுப் பெருமையுடன் தலையை உயர்த்திப் படைத் தலைவனைப் பார்த்தாள்.

“வேறு யார் அறைக்கு அழைக்கிறாய் அலீமா?” என்று, வினவினான் படைத் தலைவன்.

“மரக்கலத்தின் தலைவன் அறைக்கு அழைக்கிறேன், யவனர் மரக்கலங்களில் அறைகள் இரண்டுதான் உண்டு” என்றாள் அலீமா.

“அப்படியா!”

“ஆம் படை தலைவரே! துடுப்புத் துழாவும் அடிமைகள் இருக்கும் அடித்தள அறை. மரக்கலத் தலைவனோ தலைவியோ தங்கும் மேல்தள அறை. வேறு அறைகளை யவனர்கள் தங்கள் போர்க் கப்பல்களில் அமைக்க மாட்டார்கள்.”

“ஏன்?”

“கொள்ளையர்களும் அடிமை வர்த்தகர்களும் நிறைந்த இந்தக் கடல் மூக்கிலும்…” என்று சொல்லிக் கொண்டுபோன அலீமாவை இடைமறித்த இளஞ்செழியன், “என்ன! கடல் மூக்கா!” என்று வியப்புடன் வினவினான்.

பேச்சை அவன் சட்டென்று அறுத்துவிட்டதால் ஒரு வினாடி சிரமப்பட்ட அலீமா, தன்னைச் சமாளித்துக் கொண்டு கூறினாள். “ஆம் படைத்தலைவரே! எரித்திரியக் கடலின் இப்பகுதியை இங்கிருப்பவர் கடல் மூக்கு என்று தான் அழைக்கிறார்கள். எகிப்து எதியோப்பிய நாடுகளின் கடற்கரை ஒருபுறமும் அரபு நாட்டுக் கடற்கரை ஒருபுறமும் நீண்டு கிடப்பதால், இடையேயுள்ள இந்தக் கடற்பகுதி நாசித் துவாரம்போல் குறுகலாகவும் நீண்டதாகவும் இருப்பதாலும், இப்படிக் கூறுகளாயிருப்பதால் வீசும் பெரும் கடற்காற்றுகள் நாசியிலிருந்து சில சமயங்களில் கிளம்பும் பெருமூச்சுப்போல் சப்திப்பதாலும், இந்தக் குறுகிய நீண்ட கடற்பகுதியைக் கடல் மூக்கு என்று அழைக்கிறார்கள்.”

இந்த விவரத்தைக் கேட்ட படைத் தலைவன், “ஓகோ! அதனால்தான் இந்தக் கடல் பிராந்தியத்தில் காற்றோட்டமும் நீரோட்டமும் பலமாக இருக்கின்றனவா?” என்றான்.

“ஆமாம் படைத் தலைவரே! நல்ல திறமைசாலியான மாலுமிகளே இந்தக் கடல் மூக்கில் மரக்கலத்தைச் செலுத்த முடியும். தீவிரமான நீரோட்டத்தாலும் அலைகளின் திசை மாற்றத்தாலும் இந்தக் குறுகலான கடலுக்கு இடையே மணற் திட்டுத் தீவுகள் பல உண்டு. தீவுகள் திடீரெனத் தோன்றுவதும் மறைவதும் உண்டு. மரக்கலத் தலைவன் சிறிது எச்சரிக்கைக் குறைவாயிருந்தாலும் ஏதாவது ஒரு திட்டில் மரக்கலம் உராய்ந்து மணலில் புதைந்துவிடுவதும் உண்டு. இவற்றை யெல்லாம் விடப்பெரிய ஆபத்து ஒன்றும் இருக்கிறது.”

“என்ன ஆபத்து அலீமா?”

“இன்னும் ஒரு பகலில் நாம் அராபிய ஜலசந்தியின் முனையைத் திரும்பிவிடுவோம். அங்கிருந்து அடுலீஸை நோக்கிக் கப்பல் திரும்பும்போது எதியோப்பிய கடற்கரையும் அரபு நாட்டுக் கடற்கரையும் அதிகமாக நெருங்குவதால் நீர்ப்பகுதி மிகவும் குறுகுகிறது. அங்கு நீரோட்டத்தின் வேகம் அளவிட முடியாதது. சில ஸ்டேடியாக்கள் வரை மரக்கலம் துடுப்புக்களின் பலத்தால் நகர வேண்டும். துடுப்புத் துழாவு பவர்களின் கை சிறிது சளைத்தாலும் மரக்கலம் திரும்பப் பின்னோக்கி ஓடிவிடும். பழைய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடுவோம்.”

எரித்திரியக்கடல் மூக்கின் அபாயங்களை அலீமா விவரிக்க விவரிக்க மரக்கலத்தின் பிரயாணத்தை எதிர் நோக்கி யுள்ள சங்கடங்களை நினைத்துப் பார்த்த இளஞ்செழியன், ஓரளவு மனக்கலக்கம் அடைந்தானானாலும் இத்தனையும் சமாளிக்கவல்ல ஒரு மரக்கலத் தலைவி தனக்குக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியும் அடைந்தான். ‘எனக்கும் கொள்ளைக் காரர்கள், கப்பலோட்டும் கலையைப் போதிக்கத்தான் செய்தார்கள். ஆனால் இத்தனை நுணுக்கங்களைப் போதிக்க வில்லை’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட இளஞ்செழியன் குரலைச் சற்று உயர்த்தி அலீமாவை நோக்கிச் சொன்னான். “இந்தக் கடல் பயணம் அபாயமானது அலீமா. ஆனால் ஆண்டவன் அந்த அபாயத்தை நிவர்த்தித்து விட்டான்” என்று.

அலீமா தன் அழகிய விழிகளை உயர்த்தி அவனை நோக்கினாள். ‘எப்படி?’ என்ற கேள்வியும் அந்தப் பார்வையில் தொக்கி நின்றது. அவள் பார்வையில் எழுந்த கேள்வியைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் தொடர்ந்து சொன்னான்: “அலீமா! கடல் பகுதியில் ஆபத்துகள் அதிக மிருந்தாலென்ன? அவற்றைச் சமாளிக்க உன்னைப் போன்ற ஒரு தேவதையை ஆண்டவன் அளித்திருக்கிறானல்லவா?”
அலீமாவின் வதனம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. “நான் என்ன தேவதையா! எனக்கு இறக்கை முளைத்திருக்கிறதா? காற்றில் பறக்கிறேனா?” என்று கேட்டு மெள்ள நகைக்கவும் செய்தாள்.

“காற்றுத் தேவதைக்குத்தான் இறக்கை வேண்டும் அலீமா. கடல் தேவதைக்கு எதற்கு?” என்று கேட்ட இளஞ் செழியன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தேவி உத்தரவுப்படி அறைக்கு வரச் சித்தமாயிருக்கிறேன். எந்த உத்தரவையும் ஏற்கவும் சித்தம்” எனக் கூறிவிட்டு, “ஹிப்பலாஸ்!” என்று குரல் கொடுத்துவிட்டு அலீமாவுடன் கப்பல் தலைவர்களுக்கென நிர்மாணிக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றான். படைத் தலைவன் அழைத்ததைக் கேட்ட ஹிப்பலாஸும் அடித்தளத்திலிருந்து மேல் தளத்துக்கு வந்து அலீமாவின் அறையைத் துரிதத்தில் அடைந்தான்.

அறையை அடைந்ததும் பஞ்சணையில் படைத்தலைவ னுக்கு அருகில் உட்கார்ந்த அலீமா பல வினாடிகள் தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். ஹிப்பலாஸ் உள்ளே நுழைந்த பிறகும் கூட சில வினாடிகள் அவள் தலையைத் தூக்கா மலேயே உட்கார்ந்திருந்தாள். பிறகு பஞ்சணையிலிருந்து எழுந்து தலை குனிந்த வண்ணமே சிறிது நேரம் அறையில் உலாவி விட்டுக் கடைசியாக ஒரு மூலைக்குச் சென்று அங்கிருந்த தூணில் சாய்ந்து கொண்டு படைத் தலைவனையும் ஹிப்பலாஸையும் ஏறெடுத்துப் பார்த்தாள். அவள் பல வினாடிகள் மௌனமாகவே உட்கார்ந்திருந்ததையும் பிறகு எழுந்து தலையைக் குனிந்தவண்ணமே உலாவியதையும் கண்ட படைத் தலைவனும் ஹிப்பலாஸும் அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாளென்பதைப் புரிந்து கொண்டார்க ளாதலால், அவள் யோசனையில் குறுக்கிட இஷ்டமில்லாததால் பேசாமலே இருந்தார்கள். அவள் தலை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தபோதுகூட அவள் சம்பாஷணையைத் துவங்குவதே நல்லதென்று நினைத்த படைத்தலைவனும், ஹிப்பலாஸும் மௌனமே சாதித்ததைக் கண்ட அலீமாவே பேச ஆரம்பித்து, “நான் உங்களை அழைத்த காரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்?” என்று கூறினாள்.

“விளங்கவில்லை அலீமா” என்று பதில் கூறினான் இளஞ்செழியன்.

“விளங்க முடியாத விவகாரம் ஏதும் இதில் இல்லை படைத் தலைவரே! கொள்ளையர் மரக்கலம் உங்கள் கையில் சிக்கிவிட்டது. துடுப்புத் துழாவ அடிமை வர்த்தகர்களும் கிடைத்து விட்டார்கள். இலி-ஆஸுவிடமிருந்தும் மதகுருவிட மிருந்தும் தப்பிவிட்டோம். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? இதை யோசிக்கவே உங்களை அழைத்தேன்?” என்றாள் அலீமா.

“யோசிப்பதற்கு என்ன இருக்கிறது இதில்? அடுலீஸ் நகரம் சென்று வசதிகளைச் சேகரித்துக் கொண்டு தமிழகம் திரும்ப வேண்டியதுதான்” என்றான் ஹிப்பலாஸ்.

“மிகச் சுலபமாகச் சொல்லி விட்டீர்கள் ஹிப்பலாஸ்! அடுலீஸில் என்ன வசதிகள் தேவை? அவற்றை எப்படிச் சேகரிப்பதாக உத்தேசம்?” என்று வினவினாள் அலீமா முகத்தில் ஆழ்ந்த கவலையைத் தோற்றுவித்து.

இந்தக் கேள்வியால் ஹிப்பலாஸ் வாயடைத்து நின்றது மட்டுமல்ல, ‘இதனைகூட யோசிக்கும் சக்தியை இழந்து விட்டோமே’ என்று நினைத்துக் குழம்பவும் செய்தான். அவள் கேள்வி இளஞ்செழியனுக்குக்கூட ஓரளவு குழப்பத்தை விளைவித்ததால் அந்தக் குழப்பத்தின் சாயை அவன் முகத்திலும் பிரதிபலித்தது. இருவர் குழப்பத்தையும் கவனித்த அலீமா, “கஷ்டம் ஓரளவு உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்” என்று கூறினாள்.

“புரிகிறது அலீமா!” என்று மெல்லக் கூறினான் இளஞ்செழியன்.

“அடுலீஸ் சென்ற பின் ஏற்படும் கஷ்டம் பின்னாலிருக் கிறது படைத் தலைவரே! அதற்கு முன்பும் சில கஷ்டங்களிருக் கின்றன. முதன் முதலாக உணவு நிலை. இந்தக் கப்பலில் கடுகளவு உணவுகூடக் கிடையொதென்று நினைக்கிறேன். இங்கிருந்து அடுலீஸ் செல்லக் குறைந்தபட்சம் நாட்கள் ஏழு ஆகும். அதுவும் காற்று அனுகூலமாக இருந்தால்…” என்று அலீமா வார்த்தைகளை இழுத்துக் கூறினாள்.

“ஏழு நாட்களா!” என்று வினவினான் படைத் தலைவன் பிரமிப்புடன்.

“ஆம் படைத்தலைவரே! இந்தக் கடல் மூக்கின் வடமேற்குக் கோடியில் பெரினிஸ் பட்டணம் இருக்கிறது. அதற்குக் கீழே தாலமே துறைமுகம். அதற்கும் கீழே மூவாயிரம் ஸ்டேடியா அளவிலிருக்கிறது அடுலீஸ் மாநகரம். நமக்கு வெகு அருகிலிருப்பது அடுலீஸ்தான். ஆனால் அதை அடைய ஒரு வாரப் பயணம் செய்ய வேண்டும். அதை நெருங்கிய பின் துறைமுகத்துக்கு அருகில் சென்று நங்கூரம் பாய்ச்ச நாட்கள் இரண்டு பிடிக்கும்” என்று சொன்னாள் அலீமா.
“துறைமுகத்தை நெருங்கியபின் நங்கூரம் பாய்ச்ச இரண்டு நாட்களா? இதென்ன விசித்திரம் அலீமா!” என்று விசாரித்த இளஞ்செழியன் குரலில் வியப்பு பெரிதும் மண்டிக் கிடந்தது.

அலீமா அவன் முகத்தின்மீது தனது அழகிய வழிகளை நிலைநாட்டிவிட்டுச் சொன்னாள்: “இது இயற்கை விளைவித் துள்ள விசித்திரம் படைத் தலைவரே! எகிப்து நாட்டினுள் தென்புறமாகச் சென்று விசாலமாகும் விரிகுடாவின் கோடியிலுள்ள அடுலீஸ் நகரத்துக்குப் புறம்பே நேர் எதிரில் மலைத்தீவு என்ற தீவு இருக்கிறது. அந்தத் தீவுக்கும் அடுலீஸுக்கும் இடையேயுள்ள துறை முகத்தில் கடல் வேகம் அதிகம். சில சமயங்களில் அந்த வேகத்தில் கப்பல்கள் கவிழ் வதும் உண்டு. ஆகவே அடுலீஸுக்குச் செல்பவர்கள் முதலில் மலைத் தீவில் இறங்கி நீர்நிலையைக் கவனித்த பிறகுதான் அடுலீஸ் முன்பாகக் கப்பலைச் செலுத்தி நங்கூரம் பாய்ச்ச வேண்டும்.”

உள்ள கஷ்டங்களை உணர்ந்த படைத் தலைவன், “அலீமா! உன் பணி நிரம்ப கஷ்டமானது. ஆனால் உன்னை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. உன்னைப் போன்ற ஒரு பெண்ணை இத்தனை கஷ்டத்துக்கு உள்ளாக்க எனக்கு மனமுமில்லை” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான்.

அலீமா அவன் உட்கார்ந்திருந்த பஞ்சணைக்கு அருகே வந்து அவன் கைகளிலொன்றை யெடுத்துத் தன் கைகளில் வைத்துக் கொண்டு ஆறுதலையளிக்கும் சொற்களை உதிர்க்கத் தொடங்கினாள்: ‘படைத் தலைவரே! டைபீரியஸிடம் மரக்கலத்தை ஓட்டும் பயிற்சி பெற்றவளுக்கு இதெல்லாம் சர்வசகஜம். இந்தக் கடல் மூக்கிலுள்ள கஷ்டங்களை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் உணவுப்பிரச்னை பெரும் பிரச்னை. இன்னொன்று கப்பலோட்டிகள் பிரச்னை. அடுலீஸ் சேரும் வரையில் உணவு தேவை. அதற்குப் பிறகு மாலுமிகள் தேவை. இந்த அடிமை வர்த்தகர்களை நம்பி நாம் தமிழகம் செல்ல முடியாது. எரித்திரியப் பெருங் கடலில் புகுந்த பிறகு பல கொள்ளைக் கப்பல்களும், அடிமை வர்த்தகர் கப்பல்களும் வருமென்று கேள்வி. அவற்றைக் கண்டு விட்டால் பணத்துக்கு மனிதர்களை விற்கத் துணியும் இந்தப் பதர்கள் எதையும் செய்வார்கள். ஆகவே புது மாலுமிகளை நாம் அடுலீஸில் திரட்ட வேண்டும். அதற்குப் பணம் வேண்டும்” என்றாள் அலீமா.

“உணவைப்பற்றிக் கவலைவேண்டாம் அலீமா! கடல் மீன்களைப் பிடித்தும், மரக்கலத்தின் தளத்தில் வலைவிரித்துக் கடற் பறவைகளைப் பிடித்தும் உணவுப் பிரச்னையைச் சமாளிக்கலாம். மாமிசத்தைப் பதனம் செய்வதற்கு வேண்டிய மற்றப் பொருள்கள் மரக்கலத்தில் இருக்கும். இலி-ஆஸுவின் வீரர்கள் இதிலிருந்து பொக்கிஷத்தைத்தான் எடுத்திருப் பார்களே தவிர உணவுப் பொருள்களை எடுத்திருக்க மாட்டார்கள். அதல்ல பிரச்னை. அடுலீஸ் சென்றதும் பணம் திரட்டுவது எப்படி…?” என்று பேசிக் கொண்டு போன இளஞ்செழியன் சட்டென்று பேச்சை நிறுத்தி, “ஏன் அலீமா! அடுலீஸில் உள்ள யவன ராஜ குடும்பம்தான் உனக்குத் தெரியுமே. அவர்களைக் கேட்டால் உதவமாட்டார்களா?” என்று கேட்டான்.

“அவர்கள் இருப்பது அடுலீஸல்ல, யவன நாடு! படைத் தலைவரே! எப்பொழுதாவது ரதப் போட்டிகளைப் பார்க்க வருவார்கள். வரும்போது அங்கு தங்குவார்கள். இப்பொழுது அங்கிருப்பார்களா என்பது நிச்சயமல்ல” என்ற அலீமா திடீரென ஏதோ யோசித்துவிட்டு, “ஆமாம், உங்களுக்கு ரதம் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டாள்.

இதைக் கேட்ட இளஞ்செழியன் மஞ்சத்தில் சாய்ந்து பெரிதாக நகைத்தான். “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று வினவினாள் அலீமா, அவன் நகைத்ததன் காரணத்தை அறிய முடியாமல்.

“நகைக்காமல் என்ன செய்ய முடியும் அலீமா! இளஞ்சேட்சென்னியின் ரதங்களை ஓட்டவல்ல படைத் தலைவனைக் கேட்கும் கேள்வியா இது?” என்ற படைத்தலைவன் மீண்டும் நகைத்தான். அதுவரை மௌனமாக சிலைபோல் நின்றிருந்த ஹிப்பலாஸ்கூட மெள்ளச் சிரித்தான்.

“யாரது இளஞ்சேட்சென்னி?” கோபத்துடன் எழுந்தது அலீமாவின் கேள்வி.

“சோழர் குல விளக்கு” என்றான் படைத் தலைவன்.

“மன்னனா?”

“மாமன்னன்?”

“ரதம் ஓட்டுவதில் சிறந்தவனா?”

“ரதம் ஓட்டுவதில் மட்டுமல்ல, புதுப் புதுவிதமான ரதங்களை நிர்மாணிப்பதிலும் வல்லவர்.”

“நல்ல வேகமாய்ச் செல்ல கூடிய ரதங்களா?”

“காற்றைவிட வேகமாகச் செல்லக் கூடியவை. அவற்றுக்குத் தகுந்த புரவிகளை மன்னர் அரபு நாட்டிலிருந்து தான் வரவழைப்பது வழக்கம்.”

“அந்த ரதங்களை நீங்கள் செலுத்துவீர்களா?”

“அதிகமாகச் சொன்னால் தற்புகழ்ச்சியாகும் அலீமா.”

இதைக் கேட்ட அலீமாவின் நாசிகளிலிருந்து ஆறுதல் பெருமூச்சு ஒன்று வெளிவந்தது, “இத்தனைக் கஷ்டத்திலும் ஆண்டவன் நமக்குத் துணையிருக்கிறார் படைத்தலைவரே. நீர் மட்டும் அடுலீஸ் ரதப் போட்டியொன்றில் வெற்றி பெற்று விட்டால் தமிழகம் திரும்புவது நிச்சயம்!” என்று கூறினாள் அலீமா.

“ரதப் போட்டிக்கும் தமிழகத்துக்குத் திரும்புவதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் படைத் தலைவன்.

“நிரம்ப சம்பந்தமிருக்கிறது படைத் தலைவரே. அடுலீஸ் ரதப் போட்டிகளில் பல நாடுகளின் வர்த்தகர்களும் மன்னர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள். அந்தப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் நீர் பங்கெடுத்துக் கொண்டு வெற்றி பெற்றாலும் இந்த மாதிரி பத்து மரக்கலங் களை வாங்கக் கூடிய பொற்குவியல் கிடைக்கும்” என்று விளக்கிய அலீமா, “இனி கவலையில்லை ” என்றாள்.

“ஏன் கவலையில்லை? ரதத்திற்கு எங்கு போவது?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“நான் வாங்கித் தருகிறேன்” என்று அலீமா மேற் கொண்டு கவலை ஏதும் படாமல் அறையைவிட்டு வெளியே நகர்ந்தாள்.

ஒரு வார காலம் மெள்ளத்தான் நகர்ந்தது. ஆனால் அந்த ஒரு வாரத்தில் எப்பேர்ப்பட்ட ஒரு தலைவியை மரக்கலம் அடைந்திருக்கிறது என்பதை எண்ணி இளஞ்செழியன் மட்டுமல்ல, ஹிப்பலாஸும் அடிமை வர்த்தகர்களுங்கூட விவரிக்க இயலாத பிரமிப்பை அடைந்தார்கள். கைதேர்ந்த மாலுமி போல் குறுகிய ஜலசந்தி வழியாகவும், சுழன்ற காற்றுக்களின் சூழ்நிலையிலும் திடீரென்று தோன்றிய மணற்குன்றுகளை விட்டுச்சரேலென்ற உத்தரவுகளால் மரக்கலத்தைச் சுழற்றித் திருப்பியும், திடீர் திடீரெனப் பாய்களை அவிழ்த்தும் விரித்தும் துடுப்புகளைத் துழாவச் செய்தும் நிறுத்தச் செய்தும் மிகுந்த திறமையுடன் மரக்கலத்தை நடத்திச் சென்ற அலீமா, எட்டாவது நாள் மாலை மலைத் தீவுக்கருகில் நங்கூரம் பாய்ச்சிக் கப்பலை நிறுத்தினாள். கப்பல் நங்கூரம் பாய்ச்சிய முதல் ஜாமத்திலேயே வேறு பல நடவடிக்கைகளில் இறங்கினாள் அலீமா. அவள் ஆரம்ப நடவடிக்கைகள் இளஞ்செழியனுக்குக் குழப்பத்தைத் தந்தன. கடைசியாக அலீமா அடுலீஸ் மாநகரத்திலிருந்து தனது நண்பனொருவனை அழைத்து வந்து இளஞ்செழியனுக்கு அறிமுகப்படுத்தியபோது அவன் பிரமிப்பு உச்ச நிலைக்குச் சென்றது. அறிமுகப்படுத்தப் பட்ட இருவரும் ஒருவரை யொருவர் பார்த்ததும் அடியோடு திகைத்துச் சிலைகளைப் போல் நின்றார்கள். இருவரில் இளஞ்செழியனைவிட வந்தவன் பெரும் திகிலடைந்தான். பேச முயன்ற அவன் உதடுகள் அசைந்தனவேயொழிய, பேச்சு மட்டும் வெளிவர வில்லை. சொல்லவும் முடியாத பெரும் திகைப்பால் அவன் முகம் பெரிதும் விகாரமடைந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here