Home Sandilyan Yavana Rani Part 2 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

75
0
Yavana Rani Part 2 Ch16 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch16 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 16 படைத் தலைவனா, பகைவனா!

Yavana Rani Part 2 Ch16 | Yavana Rani | TamilNovel.in

சந்தர்ப்பம் மனிதனை உருவாக்குகின்றது என்பது ஆங்கிலப் பழமொழி. அதுவும் சரியான மனிதன் ஆபத்தான சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்ளும்போது அவன் திறமையும் அனுபவமும் அவனைப் பன்மடங்கு அதிகச் சிறப்புள்ளவ னாகவும் சாமர்த்தியசாலியாகவும் ஆக்கி விடுகின்றன. தமிழகத்திலிருந்து கிளம்பிய சில மாதங்களில் ஏற்பட்ட வாழ்க்கைச் சோதனைகள் சோழர்படை உபதலைவனைப் பல விதங்களில் செப்பனிட்டிருந்தன. தரைப் படைகளை மிகவும் துணிகரமாகவும் தந்திரத்துடனும் நடத்திச் சென்று பெரும் போர்க்களங்களில் வெற்றி கண்ட இளஞ்செழியன், பரதவர்களின் சகவாசத்தால் நீச்சுத்திறமை மட்டுமின்றிப் படகுகளையும் சிறு மரக்கலங்களையும் செலுத்துவதில் ஓரளவு சாமர்த்தியமும் அடைந்திருந்தானானாலும், சேர மன்னனுக்கிருந்த அளவு, கடற்படை சோழர்களிடமில்லா திருந்த காரணத்தாலும், இருந்த சில போர்க்கலங்களும் போருக்கு உதவ அவசியமில்லாதிருந்தபடியாலும் கப்பலைச் செலுத்தும் கலையில் அவனுக்கு அதிக அனுபவம் ஏற்படுவது சாத்தியமில்லாமல் போயிற்று. ஆனால் சோழ நாட்டிலிருந்து டைபீரியஸ் அவனை யவனர் கப்பலில் அனுப்பிய பிறகு ஏற்பட்ட பல ஆபத்துக்களும், பயங்கர சூழ்நிலைகளும் இளஞ்செழியன் வாழ்விலிருந்த ஒரே ஒரு குறையை நீக்கி விட்டன. கொள்ளையர்களிடமிருந்து அடிமை வர்த்தகர்கள் தற்காப்புக்காக நடத்திய போரைக் கவனித்ததாலும், கொள்ளைக் கப்பலின் தலைவன் போதித்த கப்பலைச் செலுத்தும் முறை, காற்றின் பெரும் மாறுதல்களையும் கடல் அலைகளின் எழுச்சியையும் சமாளிக்கும் முறை, போர் மூண்டால் எரிபந்தங்களைப் பெரும் விற்களிலிருந்து வீசும் முறை இவற்றை நன்கு உணர்ந்து கொண்டதாலும், நிலத்தில் போலவே நீரிலும் பெரும் போர்களை நடத்தும் திறனைப் பெற்றான் இளஞ்செழியன். அத்தனை கற்ற பின்பும் எரித்திரியக் கடல் மூக்கில் அலீமா மரக்கலத்தைச் செலுத்திய திறமையைக் கண்ட இளஞ்செழியன், தான் கற்றது கைம்மண்ணளவு தான் என்பதையும் அலீமாவிடம் தான் கற்க வேண்டிய வித்தை நிரம்ப இருக்கிறதென்பதையும் புரிந்து கொண்டான். திரும்பத் தமிழகத்தை அடையு முன்பு கப்பலோட்டும் வித்தையைப் பரிபூரணமாக அலீமாவிடம் கற்றுவிட்டால் புகாரை வளைத்துக் கொள்ளும்போது தரைமார்க்கமாக மட்டுமின்றி, கடல் மார்க்கமாகவும் டைபீரியஸைத் துணிவுடன் எதிர்க்கலாம் என்று யோசித்து, அந்த யோசனையின் விளைவாக ஏற்பட்ட திருப்தியின் அடையாளமாகக் கடை யிதழ்களில் புன்சிரிப்பையும் வரவழைத்துக்கொண்ட இளஞ்செழியன், நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்த கப்பலைச் சுற்றிலுமிருந்த வனப்பிலும் கவனிப்பைச் சற்றே செலுத்தக் கூடிய திராணியை அடைந்தான்.

அவன் கண்ணெதிரே அடுலீஸ் நகரம் பெரிதாக மிக அழகாக எழுந்து நின்றது. அதன் அமைப்பைக் கவனித்ததுமே அது பெரும் வர்த்தக ஸ்தலமாகவும் கேளிக்கை ஸ்தலமாகவும் விளங்குவதற்காகவே நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டு மென்பதையும் பெரும் படையெடுப்புகளைச் சமாளிக்கத் தகுதியற்றது என்பதையும் படைத்தலைவன் எளிதில் புரிந்து கொண்டான். அவன் கண்ணெதிரே தூரத்தே எழுந்தன பெரும் மாளிகை உச்சிகள். நீண்டு மெல்லியதாய் வானத்தைத் தொடச் சென்றும், பட்டையாய் விஸ்தாரமாய் நடுவே விரிந்தும், சக்கர வட்டமாக உருண்டும் பலவிதமாகக் காட்சி யளித்த மாளிகை உச்சிகளிலிருந்தும் அவற்றின் நிர்மாண முறைகளிலிருந்தும் அந்த மாளிகைகள் உல்லாசத்திற்காகவே அமைக்கப் பெற்றவையென்பதைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன், அடுலீஸைச் சுற்றி அரண் ஏதுமில்லாததைக் கவனித்துப் படையெடுப்பவன் திறமைசாலியாய் இருந்தால் அடுலீஸ் வழியாக எதியோப்பியாவிலும் எகிப்திலும் நுழைந்து விடலாம் என்று கணக்குப் போட்டான். இந்தக் கடல் மூக்கிலிருக்கும் நீர் வேகத்தால் ஒரே சமயத்தில் பல மரக்கலங்களில் படைகளைக் கொண்டுவந்து இறக்கிவிட முடியாதென்பது உண்மை. ஆனால் மெள்ள மெள்ள மரக்கலங்களில் வர்த்தகர் உடைகளில் வீரர்களைக் கொண்டுவந்து சில மாதங்களில், ஊரில் அவர்கள் தொகையைப் பரப்பி விட்டால், ஒரே இரவில் இந்த அடுலீஸைக் கைக்குள் போட்டுக் கொண்டு அடுத்த ஊர்கள் மீதும் பாயலாம். சரியான இடம், படையெடுப்பவன் வாயில் விழ இதைவிடச் சிறந்த இடம் இருப்பது அரிது’ என்று தான் படையெடுப்பதற் காகவே அந்த இடத்துக்கு வந்திருப்பதுபோல் நினைத்துக் கொண்டு தலையை ஆட்டிய படைத்தலைவன், அடுத்த வினாடி வெட்கத்தால் ஏளனச் சிரிப்பும் ஒன்று சிரித்தான். ‘அவனவன் பழக்கப்படிதான் புத்தி போகிறது. போரிடுபவனுக்குப் போரிடும் புத்தி! வணிகனுக்கு வர்த்தகம் செய்யும் புத்தி! புத்தி சில வருடங்களில் ஒரு சுவட்டில் திரும்பி விட்டால் வேறு சுவட்டில் திரும்பாது போலிருக்கிறது’ என்று எண்ணியதால் ஒருமுறைக்கு இரு முறையாகச் சிரித்த படைத் தலைவன், திரும்பி மரக்கலம் நின்றிருந்த கடற்பகுதியையும் மலைத் தீவையும் கவனித்தான். அடுலீஸுக்கும் மலைத் தீவுக்கும் இடையேயிருந்த கடல் பிராந்தியத்தில் அலைகள் மிகப் பெரிதாக எழுந்து கொண்டிருந்தது மட்டுமின்றி, நீர் வேகமும் அதிகமாயிருந்ததால் நங்கூரம் பாய்ச்சி நின்ற நிலையிலும் மரக்கலம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த படைத்தலைவன், ‘மலைத்தீவு ஒன்றை மட்டும் ஆண்டவன் அந்த இடத்தில் எழுப்பிக் கொடுத்திரா விட்டால் அடுலீஸுக்கருகில் நங்கூரம் பாய்ச்சுவதோ இறங்குவதோ நடவாத காரியம்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டதன்றி, மலைத் தீவின் அழகைப் பார்த்துப் பெரிதும் வியக்கவும் செய்தான்.

‘ட’ எழுத்துப்போல் எதிரே காட்சியளித்த அடுலீஸ் கடற்கரையின் எதிர் மையத்தில் அந்த ‘ட’வுக்கு ஒற்று வைத்த புள்ளியைப் போலத் தெரிந்த மலைத்தீவு ஆகிருதியில் சிறியதாக இருந்தும் அடுலீஸின் வசதிகளில் ரதப் போட்டி விளையாட்டு ஒன்றைத் தவிர, மற்ற எதிலும் எந்தக் குறையை யும் பெறவில்லை. கடலிலிருந்து திடீரென எழுந்த தீவாதலால் அதன் நடுவிலிருந்த சிறுமலையைச் சுற்றிலும் பாறைகள் அதிக மாகத் தெரியாமல் வெண்மணற் பரப்பே அதிகமாயிருந்ததன் விளைவாக, வெண்மை ஆடையைச் சுற்றிய எதியோப்பிய கருமுக மங்கையைப் போல் காட்சியளித்தது அந்த மலைத்தீவு. அந்த வெண்மணற் பரப்பில் அடிக்கப்பட்டிருந்த நானாவித வண்ணக் கூடாரங்களையும், அந்தக் கூடாரங்களில் தங்கியிருந்தவர்களைக் குறிக்கக் கூடாரங்கள் மீது பறந்து கொண்டிருந்த பலவிதக் கொடிகளையும் கண்ட படைத் தலைவனுக்குத் தமிழகப் பூம்புகாரின் இந்திர விழா நாட்கள் நினைவுக்கு வந்தன. ‘இந்திர விழாவின்போது புகார் இதைவிடப் பன்மடங்கு அதிகக் கூட்டத்தால் நிறைவுபடுமே! அங்கும் எத்தனை கொடிகள் பறக்கும்! சங்கமத் துறையில் எத்தனை நாட்டு அழகிகள் நீராடுவார்கள்! ஏன், அங்கும் தான் ரதப்போட்டி உண்டு!’ என்று எண்ணி ஆயாசப் பெருமூச்சுவிட்ட இளஞ்செழியன், சீக்கிரம் ஊர் திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தால் துடித்துக் கொண்டிருந்தான். அந்தத் துடிப்பால் மலைத்தீவின் வனப்பு வெகு சீக்கிரம் அவன் மனக்கண்ணைவிட்டு விலகியது. அடுலீஸின் பெரும் கோபுரங்களையும் பெருங்கூட்டங்களையும் பெரும் வீதிகளை யும் பெருஞ் செல்வத்தையும் கண்டும் கூட, அவன் புத்தி சுவடு மாற மறுத்துத் திரும்பத் திரும்பத் தமிழகத்துக்கே போய்க் கொண்டிருந்தது.

அவன் மனவேதனை அலீமாவுக்ḥகு நன்றாகப் புரிந்து தான் இருந்தது. இருப்பினும் அந்தப் பேதை என்ன செய்வாள். நீர்வேகம் இருந்த நிலையின் விளைவாக, கப்பல் நங்கூரம் பாய்ச்சிய முதல் இரண்டு நாட்கள் ஏதும் செய்ய முடியாத அலீமா, மரக்கலத்திலிருந்து படகிலேறி மலைத்தீவில் இறங்கிக் கடற்கரையோரமாக உலாவுவதிலும், அங்கு நடந்துகொண் டிருந்த நடனக் கேளிக்கைகளைப் பார்த்து மகிழ்ச்சி யடைவதிலும் காலத்தைத் தள்ளினாள். கப்பல் நின்ற முதல் ஜாமத்திலேயே படகைக் கப்பலிலிருந்து அவிழ்த்து இறக்கி, இளஞ்செழியனையும் அழைத்துக் கொண்டு மலைத் தீவின் கடற்கரை கேளிக்கைக் கூட்டங்களுக்குச் சென்று வேடிக்கை பார்க்கத் தொடங்கியதைச் சிறிதும் படைத் தலைவன் ரசிக்கவில்லை. அப்படியிருக்க அங்கு நடந்த நடன வகைகள் நடனமாடும் நாட்டினர் முதலியவற்றைப் பற்றியெல்லாம் அவள் விவரித்ததையும், அந்த முதல் ஜாமம் முதல் மூன்றாம் ஜாமம்வரை அலீமாவும் அந்தக் கூட்டங்களுடன் கலந்து கொண்டு ஆடியதையும் அவன் எப்படி ரசிக்க முடியும்? வேறு சமயமாயிருந்தால் அலீமாவின் வனப்பிலும் பம்பரம்போல் சுழன்று சுழன்று அவள் ஆடிய ஆட்டங்களிலும் மனத்தைப் பறிகொடுத்திருப்பான் படைத் தலைவன். ஆனால் எப்படியாவது தமிழகம் சேர நிச்சயித்து மனம் துடித்துக்கொண்டிருந்த படைத் தலைவனுக்கு அலீமா கேளிக்கைகளில் கலந்து கொண்டது விபரீதமாகவே விளங்கியது. அதைப் பற்றி அவன் கேட்ட கேள்விக்கு அலீமா அளித்த விடை அவள் நடவடிக்கையைவிட அதிக வேதனையை மட்டுமின்றிக் கோபத்தையும் அளித்தது இளஞ்செழியனுக்கு.

மீண்டும் மரக்கலத்தை அடைந்ததும் அலீமாவுடன் கப்பல் தலைவன் அறைக்குள் நுழைந்த இளஞ்செழியன் சற்று உஷ்ணத்துடனேயே கேட்டான், “அலீமா! நாம் இங்கு வந்தது எதற்கு?” என்று.

அலீமா ஆச்சரியம் ததும்பி வழிந்த விழிகளை அவன் மீது திருப்பினாள். “ஏன் கேட்கிறீர்கள்? வந்த காரணம் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்” என்று பதிலும் சொன்னாள்.

“வந்த காரியத்தை நான் நினைப்பில் வைத்துக் கொண் டிருக்கிறேன். நீ நினைப்பில் வைத்துக்கொண்டிருக்கிறாயா?” என்று மீண்டும் ஒரு கேள்வியைத் தொடுத்தான் இளஞ் செழியன், உஷ்ணம் சிறிதும் தணியாத குரலில்.

“வைத்துக் கொண்டிருப்பதாகத்தான் நினைக்கிறேன்” என்ற அலீமாவின் கடையிதழ்களில் புன்முறுவல் தெரிந்தது.

“நான் அப்படி நினைக்கவில்லை.” புன்முறுவலைக் கண்டதால் இளஞ்செழியன் உள்ளத்தில் ஏறிய சூடு உதடுகளி லிருந்து உதிர்ந்த சொற்களிலும் பிரதிபலித்தது.

“நினைக்க வேண்டாமே!”

“அலீமா!”
“ஏன்?”

“விளையாட இது நேரமல்ல.”

“அப்படியா!”

“ஆம். கேளிக்கைக்கும் இது சமயமல்ல.”

“எது சமயமோ ?”

“எது சமயமாயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. ஆனால் சமயம் இதுவல்ல.”

“மிகவும் நல்லது.”

“உன் நடனத்தைக் கண்டு களிக்க நான் அடுலீஸ் வரவில்லை.”

“ஏன்? என் நடனம் நன்றாயில்லை?”

“அதைப்பற்றி எண்ணவும் புத்தி இடம் தரவில்லை.”

“தெரிகிறது! தெரிகிறது! புத்தி உங்களுக்கு நிதானத்தில் இல்லையென்று திட்டமாகத் தெரிகிறது. படுத்து உறங்குங்கள், காலையில் நிதானப்படும். போய் வாருங்கள்” என்று சொன்ன அலீமா, அறையின் மூலைக்குச் சென்று அதுவரை நடனத்தை முன்னிட்டுத் தலையில் சுற்றியிருந்த சிவப்புப் பட்டுத் துணியை எடுத்து மஞ்சத்தில் எறிந்துவிட்டுத் திரும்பினாள். அப்பொழுதும் படைத்தலைவன் அறைமுகப்பில் நகராமல் நின்றிருப்பதைக் கவனித்து, “போய் வாருங்கள் என்று சொன்னேன்” என்று சற்று அழுத்தி அது உத்தரவு என்று தொனிக்கும் முறையில் கூறினாள்.

“நாளைக்கு என்ன செய்ய உத்தேசம்?” என்று கேட்டான் இளஞ்செழியன் வறண்ட குரலில்.

“மலைத் தீவில் இன்னும் பார்க்கவேண்டிய வேடிக்கைகள் பல இருக்கின்றன” என்றாள் அலீமா.

“அவற்றைப் பார்ப்பதாகவா உத்தேசம்?” இளஞ் செழியன் கேள்வியில் முரட்டுத்தனம் மண்டிக் கிடந்தது.

“ஆம்.”

“அடுலீஸுக்கு எப்பொழுது போவḥது?”

“நான் இஷ்டப்பட்டபோது!”

“எல்லாம் உன் இஷ்டம்தானா?”

“ஆமாம். நான்தானே கப்பல் தலைவி!”

“உன்னைக் கப்பல் தலைவியாக்கியது நான்.”

“ஆமாம்.”

“அந்தப் பதவியிலிருந்து நீக்கவும் என்னால் முடியும்.”
“தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் அந்தப் பணியை இன்றிரவு நிறைவேற்ற முடியாது. காலையில் பார்ப்போம். முதலில் நீங்கள் அறையைவிட்டுச் செல்லுங்கள்.”

“முடியாது. நீ எப்பொழுது அடுலீஸ் போவாய். உன் நண்பர்களைக் கண்டு ரதத்துக்கும் புரவிகளுக்கும் எப்பொழுது ஏற்பாடு செய்வாய் என்பதை அறிந்து கொண்டு தான் இந்த இடத்தைவிட்டு நகருவேன்” என்றான் இளஞ்செழியன்.

“அப்படியானால் உங்களிஷ்டம்” என்று சொல்லிவிட்டு தன் ஆடைகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினாள் அலீமா.

அவள் தானிருப்பதை அசட்டை செய்து ஆடைகளை மாற்ற முற்பட்டதைக் கவனித்த இளஞ்செழியன் உதடுகள் கோபத்தால் துடித்தன. மனம் பெரிதும் சங்கடப்பட்டது. அடுத்த வினாடி அவன் கால்கள் ஏதோ பொறியால் இயக்கப் பட்டவைபோல் திரும்பின. வெகு வேகமாக அறையை விட்டுப் பறந்தான் இளஞ்செழியன்.

இளஞ்செழியன் அப்படிப் பறந்து சென்றதைக் கண்ட அலீமா பஞ்சணையில் சாய்ந்தபடி இன்பமாக நகைத்தாள். ‘படைத்தலைவர் போரில் மன்னர்தான். ஆனால் பெண்களைக் கண்டால் என்ன நடுக்கம்! எப்படிக் காற்றாகப் பறந்தார்! பாவம்!’ என்று நினைத்துப் பரிதாபப்பட்டதன்றி, இத்தகைய ஓர் ஆண் மகனைத் தான் அடையக் கொடுத்து வைக்கவில்லையே என்பதை நினைத்து ஆயாசப் பெருமூச்சும் எறிந்தாள். ‘யாரோ ஒரு பெண் இவரை மயக்கியிருக்கிறாள். அதனால்தான் இப்படி விழிக்கிறார் மனிதர். அவளென்ன அத்தனை அழகியா! என் ராணியை விடவா அழகியாயிருக்க முடியும்? இருக்க முடியாது. என் அரசியைவிட உலகில் அழகி யாருமே இருக்க முடியாது. அவளை மட்டும் இவர் கண்டு விட்டால் இந்த உறுதியெல்லாம் காற்றில் பறந்துவிடும். இருங்கள் படைத் தலைவரே! தமிழகம் சென்றதும், யவன ராணி எங்கிருந்தாலும் அவள் முன்பாக உங்களைக் கொண்டு போய் நிறுத்துகிறேன். அப்பொழுது பார்க்கிறேன் உமது உறுதியை. காதல் தெய்வமான வீனஸையும் வெட்கச் செய்யும் அந்த மோகன பிம்பத்துக்கு முன்பு நீர் என்ன செய்கிறீரோ பார்க்கிறேன்’ என்று தனக்குள் கறுவியும் கொண்டாள் அலீமா. இத்தகைய நினைப்புகளால் மறுநாட்களில் படைத் தலைவனைச் சந்தித்தபோதும் வேண்டுமென்றே சொற் களால் அவனைக் குத்தினாள்.

இரவு நேரத்தைவிடக் காலை நேரம் அடுலீஸ் கடற்பகுதியையும் மலைத் தீவையும் மனோகரமாக அடித்திருந்தது. கடற் பகுதியின் ஓரங்களில் நங்கூரம் பாய்ச்சி நின்ற மரக்கலங்களின் ஆட்டங்களும், மலைத்தீவு அடுலீஸ் இவற்றின் கரையோரங்களில் மனிதர்களின் நடமாட்ட அரவமும், எங்கும் எழுந்துவிட்ட உயிர்த் துடிப்பை வலியுறுத்தின.பல் துலக்கி, முகம் கழுவி, தலை சீவி, காலையில் புதிதாக மலர்ந்த புஷ்பம் போல் மரக்கலத்தின் தளத்துக்கு வந்த அலீமா அந்தக் காலையின் இளவெயிலில், கடவுள் அந்தக் கடற்பகுதியில் ஒளிவிட சிருஷ்டித்த பொன் மலர் போல் விளங்கினாள். அவள் படைத்தலைவனை நோக்கி நடந்து சென்றபோது அசைந்த அங்கலாவண்யங்களைக் கண்ட அடிமை வர்த்தகர்கள்கூட அசந்து போய், ‘இவள் மட்டும் நம்மிடம் அடிமையாகக் கிடைத்திருந்தால் பத்தாயிரம் பொற் காசுகளுக்கு விற்றிருக்கலாமே’ என்று கணக்குப் போட்டார்கள்.

அவள் அபார எழிலையும் அவள் நடந்து வந்த ஒய்யாரத்தையும் படைத்தலைவனும் கடைக் கண்ணால் கண்டானானாலும் காணாதவனைப்போல் நடித்து, எதிரேயிருந்த அடுலீஸ் நகரத்தை எடை போடுபவன்போல் உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றான். அவன் கடைக்கண் சரேலென்று தன்மீது பாய்ந்ததையும் ஒளிவிட்டதையும் பிறகு படைத்தலைவன் பார்வையை மாற்றிக் கொண்டதையும் நொடிப் பொழுதில் கவனித்த அலீமா தனக்குள் நகைத்துக் கொண்டு அவனை அணுகி, “படைத்தலைவர் மிகவும் கோபத்திலிருக்கிறார் போலிருக்கிறது” என்றாள் கேலி ஊடுருவ மெல்ல நகைத்து.

இளஞ்செழியன் பதிலேதும் சொல்லவில்லை. மௌன மாகவே இருந்தான். “தலையைத் திருப்பி என்னைப் பாருங்கள்! பாதகமில்லை” என்றாள் அலீமா மீண்டும். அதற்கும் பதிலில்லாது போகவே, “ஆடையைப் பூராவாக அணிந்துதானிருக்கிறேன்” என்று மெள்ள முணுமுணுத்தாள்.

அதுவரை வாளாவிருந்த இளஞ்செழியன் கோபத் துடன் திரும்பி அவளை நோக்கி, “அப்படியா! மிகவும் சந்தோஷம். இவ்வளவு பெரிய மனது செய்ததற்கு நன்றி” என்றான்.

“உங்களை மகிழ்விக்கத்தான் நான் எதையும் செய் கிறேன்” என்றாள் அலீமா புன்சிரிப்பொன்றை இதழ்களில் ஓட்டி.

இளஞ்செழியன் ஏதோ கேட்க வாயெடுத்து மூடிக் கொண்டான். அவன் வாயில் சரேலென்று எழுந்துவிட இருந்த கேள்வியை நினைத்தபோது அவனுக்கே வெட்கமாயிருந்தது. அத்தனை இழிநிலைக்குத் தான் வந்துவிட்டதை நினைத்துத் தன்னையே கடிந்துகொண்டதன்றி, பேச்சையும் மாற்றிக் கேட்டான், “அலீமா! இன்றைக்கு என்ன செய்வதாக உத்தேசம்?” என்று.

“அதுதான் சொன்னேனே. மலைத் தீவில் நாம் பார்க்க வேண்டிய வேடிக்கைகள் பல இருக்கின்றன என்று” எனக் கூறினாள் அலீமா.

இளஞ்செழியன் நிதானமும் வெறுப்பும் கலந்த குரலில் கூறினான்: “அலீமா! என்னை அதிகமாகச் சோதிக்காதே. வேடிக்கைகளைப் பார்க்கும் மனோநிலை எனக்கு இல்லை. என்னுடைய நாட்டின் கதியைப் பற்றிய கவலை என் உள்ளத்தைப் பீடித்துக் கொண்டிருக்கிறது. நாடு திரும்பத் துடிக்கும் உள்ளம் வேடிக்கை பார்க்க ஒப்புமா அலீமா! யோசித்துப் பார். தமிழகத்துக்கு வா. நீ ஆயுளில் கண்டிராத கலைக் காட்சிகளை, கேளிக்கைகளை, ரதப் போட்டிகளைக் காணலாம். அதற்கு செல்ல ஏற்பாடு செய். உன்னைக் கெஞ்சுகிறேன்.”

அலீமா தன் அழகிய கண்களை அவன் மீது திருப்பினாள். அந்த விழிகளில் சற்று முன்பு தெரிந்த ஏளனம் இல்லாததைக் கவனித்த இளஞ்செழியன் சற்று ஆறுதலடைந்தான். ஏளனத்துக்குப் பதிலாக அந்த விழிகளில் அனுதாபம் மண்டிக் கிடந்ததைக் கவனித்த படைத்தலைவன் மனத்தில் முதல் நாளிரவு அகனறுவிட்ட நம்பிக்கை மீண்டும் உதய மாயிற்று. அலீமாவின் உதடுகளிலிருந்து அடுத்து எழுந்த சொற்கள் அவன் இதயத்தில் மகிழ்ச்சி அலைகளை எடுத்து வீசி அவன் உடலெங்கும் இன்பத்தைப் பரப்பின.
“படைத் தலைவரே! நீங்கள் அறிவிற் சிறந்தவர்கள். உங்களுக்கு நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. மலைத் தீவிலுள்ள மரக்கலங்கள் மலைத் தீவிலேயே நிற்பதும் எதிர்க் கரையிலுள்ள மரக்கலங்கள் அங்கேயே நிற்பதும் புலப்பட வில்லையா உங்களுக்கு? ஏதாவது ஒரு படகு இக்கரையி லிருந்து அக்கரைக்கோ, அக்கரையிலிருந்து இக்கரைக்கோ நகருகிறதா பாருங்கள். நீர் வேகம் கடலில் அதிகமாயிருக்கிறது. இப்பொழுது படகில் நான் சென்றால் பிறகு என் பிணம்கூட உமக்குக் கிடைக்காது, இந்த வேகம் இரண்டு நாட்கள் இப்படித்தான் இருக்கும். ஆகையால் பொறுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு தங்கியிருக்கும் இரண்டு நாட்களையும் கழிக்கத்தான் மலைத்தீவில் இறங்கும் பல நாட்டவரும் கேளிக்கைகளை நடத்துகிறார்கள். இல்லாவிட்டால் அதோ அந்தக் கூடாரவாசிகளுக்கு விளையாட்டுத் தான் தொழிலென்று நினைக்கிறீர்களா? இல்லை படைத்தலைவரே, இல்லை அத்தனை பேரும் வர்த்தகர்கள்” என்று விளக்கினாள் அலீமா.

அப்பொழுதுதான் அலீமாவின் விபரீதப் போக்குக்கும் நடன விளையாட்டுக்களில் அவள் பங்கெடுத்துக்கொள்ள முயன்றதற்கும் காரணம் தெளிவாயிற்று இளஞ்செழியனுக்கு. அவளைத் தவறாக அர்த்தம் செய்துவிட்டதை எண்ணி மனம் புழுங்கிய இளஞ்செழியன், அவள் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டு தடவிக் கொடுத்துக் கொண்டு, “அலீமா! இந்தக் கடல் நிலைமை தெரியாமல் உளறிவிட்டேன். மன்னித்துவிடு” என்று மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். அந்த மன்னிப்பைப் பூராவாகப் பெறும் நோக்கத்துடன் அவளிஷ்டப்படி அவளுடன் அடுத்த இரண்டு நாட்களும் மலைத் தீவைச் சுற்றுவதிலும் முனைந்தான் படைத் தலைவன். நடன கேளிக்கைகளில் அவள் சேர்ந்து பலவித ஆட்டங்களை ஆடினாள். அவற்றையெல்லாம் கண்டு ரசித்ததற்கான பரிசை நான்காவது நாள் அவனுக்கு அளித்தாள் அலீமா. மூன்றாவது நாளே நீர் வேகம் அடங்கி விட்டதால் மரக்கலத்தை மலைத் தீவிலிருந்து குறுக்கே செலுத்தி அடுலீஸ் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிய அலீமா, படைத் தலைவனையும் மற்றவர்களையும் மரக்கலத்திலேயே இருக்கச் செய்து, தான் மட்டும் அடுலீஸ் நகரத்துக்குள் சென்று வந்தாள். வந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று படைத் தலைவனையும் ஹிப்பலாஸையும் அழைத்து, “நான் எதிர்பாரத கனவிலும் நினைக்காத நண்பர் ஒருவர் கிடைத்து விட்டார். அவரே புரவிகளையும் ரதத்தையும் வாங்கித் தருவார்” என்று அறிவித்தாள்.

“யார் அவர்? யவன அரச குடும்பத்தைச் சேர்ந்தவரா?” என்று வினவினான் இளஞ்செழியன்.

யவன அரச குடும்பத்தார் யாருமே இங்கில்லை. யவன நாட்டுக்குப் போய்விட்டார்களாம். மூன்றாவது இளவரசர் மட்டும் முழு நிலவு புறப்படும் நாள் இங்கு வருவாராம்.”

“ஏன்?”

“ரதப் போட்டியில் பங்கு கொள்ள. இளவரசர் லேசுப் பட்டவரல்ல. நீங்கள் ஏதோ காற்று என்று சொன்னீர்களே, அப்படிப் புரவிகளைச் செலுத்த வல்லவர். ஆகையால்தான் அவருக்கு அக்கிலீஸ் என்ற தேவ புருஷன் பெயரை வைத்திருக் கிறார்கள்.”
“அது கிடக்கட்டும். யவன ராஜ குடும்பத்தாரில்லா விட்டால் வேறு எந்த நண்பர் கிடைத்தார்?”

“நீங்களே அவரைச் சந்திக்கப் போகிறீர்கள்”

“எப்பொழுது?”

“நாளை இரவு, இங்கே.”

“வருவதாகச் சொல்லியிருக்கிறாரா?”

“ஆம். நான் சென்று அழைத்து வருவேன். நாளை இரவு நீங்கள் இந்த அறையில் இருள் சூழ்ந்த இரண்டாவது நாழிகை காத்திருங்கள். அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றாள் அலீமா.

அலீமா கூறிய நான்காவது நாளிரவும் வந்தது. நடுப் பகலிலேயே அடுலீஸ் நகரத்துக்குள் சென்றுவிட்ட அலீமா இரவில்தான் தனது நண்பனுடன் திரும்பி வந்தாள். முன்னால் அவள் வந்ததால் பின்னால் குனிந்து நடந்து வந்த வனைக் கவனிக்காத இளஞ்செழியன், அலீமா அவனை அறிமுகப்படுத்தும் முறையில், “இவர்தான் எனது நண்பர் தமிழக வீரரே. நான் சொன்ன தமிழக வீரர் இவர்தான்” என்று கூறினாள்.

அடுத்த விநாடி அறிமுகப்படுத்தப்பட்ட இருவர் முகத்திலும் மட்டுமின்றி, இளஞ்செழியனுக்குப் பின்னால் நின்ற ஹிப்பலாஸ் முகத்திலும் பெரும் திகைப்பு நிலவியதைக் கண்ட அலீமா, அவர்கள் திகைப்புக்கான காரணத்தை அறியாமல் பிரமித்து சில விநாடிகள் சிலையென நின்று விட்டாள். அலீமா அழைத்து வந்த யவன நண்பன் திகைப்பு, அவன் முகத்திலும் மேலும் மேலும் படர்ந்ததன்றி உள்ளத்திலும் பல கலவரங்கள் சுழன்றதால், அவன் முகம் பெரிதும் விகாரமடைந்தது. ஹிப்பலாஸ் உணர்ச்சிகளைக் காட்டும் திறனைக்கூட இழந்து கற்சிலை போல் நின்றான்.

மூவரில் படைத் தலைவனே அந்த அசந்தர்ப்ப நிலையைச் சீர்படுத்த முயன்று, “உலகம் மிகக் குறுகலானது. யவன மருத்துவரே! அதனால்தான் மீண்டும் சந்திக்கிறோம்” என்று உரையாடலைத் துவக்கினான்.

படைத் தலைவன் ஆரம்ப மொழிகளால் சிறிது துணிவடைந்த யவன மருத்துவனும், “உலகம் குறுகியது மட்டுமல்ல தமிழக வீரரே! விசித்திரமானதுங்கூட” என்றான்.

“ஆண்டவன் படைப்பில் விசித்திரங்கள் பல உண்டு” என்று வேதாந்தம் பேசினான் படைத் தலைவன்.

யவன மருத்துவன் உடல் சிறிது நடுக்கம் கண்டது. “மூங்கில் தட்டியில் இறுகக் கட்டப்பட்டு சுறாக்கள் நிரம்பிய கடலில் தள்ளப்பட்ட தாங்களும் தங்களைக் காக்க கடலில் இறங்கிய உங்கள் நண்பரும் பிழைத்து மீண்டும் என்னைச் சந்திப்பது விசித்திரங்களில் சிறந்தது. அதைவிட விசித்திரம் உங்களுக்காக அலீமா என்னிடம் உதவி நாடி வருவது” என்று கூறிய யவன மருத்துவன், “வருந்துகிறேன் தமிழரே! வருந்துகிறேன்” என்றும் அலுத்துக் கொண்டான்.

“எதற்கு வருந்துகிறீர்?”
“டைபீரியஸ் கூறியபடி உங்களுக்கு அதிக விஷத் துளிகளைக் கொடுத்துக் கொல்லாததற்கு” என்றான் யவன மருத்துவன்.

“நீங்கள் மருத்துவரா, கொலைகாரரா!” என்று மீண்டும் ஒரு கேள்வியை விடுத்தான் இளஞ்செழியன்.

“மருந்து இரண்டு வகைக்கும் உதவும். பிந்திய வேலையைச் செய்திருந்தால் நான் இந்த ஆபத்திலே சிக்கிக் கொண்டிருக்க மாட்டேன்.”

“இப்பொழுது என்ன ஆபத்து வந்து விட்டது உங்களுக்கு!”

“அலீமா யார் தெரியுமா?”

“தெரியாமலென்ன?”

“டைபீரியஸின் சீடப் பெண்.”

“அவளே சொல்லியிருக்கிறாள்.”

“அவள் குருநாதரின் பகைவன் நீர் என்பதை அறிவாளா அவள்?” என்று கேட்ட யவன மருத்துவன் மெள்ள அலீமாவை நோக்கித் திரும்பி, “இந்த மனிதர் சோழர் படைகளின் உபதலைவர். டைபீரிஸின் ஜன்ம வைரியென்பதை நீ அறிவாயா?” என்று வினவினான்.

அலீமாவின் முகத்தில் அதுவரை நிலவிக் கிடந்த பிரமிப்பு மறைந்தது. முகத்தில் கோபமும் குழப்பமும் கலந்து தாண்டவமாடின. “என் குருநாதருக்கு நீங்கள் பகைவரா? இவர் சொல்வது உண்மையா?” என்று சீறினாள் அலீமா.

“உண்மைதான்” என்றான் இளஞ்செழியன்.

“இதை என்னிடம் ஒப்புக்கொள்ள என்ன துணிச்சல் உங்களுக்கு? என் குருநாதருக்கு என்ன அபசாரம் செய்ய இருந்தேன்! அவர் ஜன்ம விரோதிக்கு உதவ இருந்தேனே! இதைப் பற்றி ஒரு வார்த்தை கானாவில் சொல்லியிருந்தால் உங்களைச் சாம்பிராணிக் காட்டுக்கு நானே அனுப்பி யிருப்பேனே. இப்பொழுதுதான் என்ன கெட்டுப் போய் விட்டது. நீங்கள் தமிழகம் திரும்புவதைப் பார்த்து விடுகிறேன்” என்று பெண் புலி போல் சீறிய அலீமா “என்னுடன் வாருங்கள் மருத்துவரே!” என்று யவன மருத்துவனை நோக்கிச் சைகை செய்து அறையை விட்டு வெகு வேகமாக வெளியே செல்லத் தொடங்கினாள்.

Previous articleYavana Rani Part 2 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here