Home Sandilyan Yavana Rani Part 2 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

111
0
Yavana Rani Part 2 Ch17 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch17 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 17 நுணல்

Yavana Rani Part 2 Ch17 | Yavana Rani | TamilNovel.in

“நில் அலீமா! நில்!” சுருட்டிக் கையில் வைக்கப் பட்டிருந்த சாட்டையைத் திடீரெனச் சுழற்றிக் காலை நோக்கி வீசப்பட்டால் எத்தனை வேகத்துடன் கால்களைச் சுற்றி வளைத்து இறுக்கி நிறுத்திவிடுமோ, அத்தனை வேகத்துடனும் சுளீரென்று உணர்ச்சிகளில் தைக்கும் வகையிலும் ஒலியூட்டி விடுவிக்கப்பட்ட படைத் தலைவனின் அந்த மூன்று சொற்கள் அலீமாவின் உணர்ச்சிகளைச் சரேலென்று கட்டுப்படுத்திய தன்றி, உள்ளிருந்து வெளியே இழுத்துச் செல்ல முயன்ற கால்களையும் விலங்கிட்டதுபோல் நிற்கவைத்தமையால் ஒரு வினாடி தாமதித்த அலீமா, முன்னே செல்ல எடுத்து வைத்த இடது காலைப் பின்னுக்கிழுக்காமலே தலையை மட்டும் திருப்பி அவனை நோக்கினாள்.

அது விசித்திரத்துடனும் அதி துரிதத்துடனும் தனக்கு எதிராகத் திரும்பிவிட்ட அலீமாவின் பகை உணர்ச்சி அந்தப் பார்வையில் பூராவாக ஒளி விடுவதையும், கோபம், வெறுப்பு ஏதோ விவரிக்க இயலாத ஒரு ஏமாற்றம், எதையாவது உடனே செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு இப்படிப் பல விவரங்கள் அந்தப் பார்வையில் துள்ளி விளையாடுவதையும் கண்ட படைத் தலைவன், அவள் திருப்பத்தின் காரணத்தை எண்ணிப் பெரிதும் வியந்தான். அந்த ஒரே பார்வை, டைபீரியஸின் இணையற்ற ஆகர்ஷண சக்தியை அவனுக்கு நிரூபித்தது. அந்த ஒரே பார்வை, டைபீரியஸ் எத்தனை சிறந்த குருவாகவும், எத்தனை அத்தியந்த நண்பனாகவும் இருக்க முடியும் என்பதைத் தெள்ளென விளக்கியது. அந்த ஒரே பார்வை ஆயிரக்கணக்கான ஸ்டேடியாக்களுக்கு அப்பாலும், கேள்விக்கும் அதிகமாக எட்டாத தூரப் பிரதேசங்களிலும் தனக்கு எத்தனை பெரிய பகைவனாக டைபீரியஸ் இருக்க முடியும் என்பதையும் சந்தேகமறப் புரிய வைத்தது. அந்த ஒரே பார்வை, டைபீரியஸைச் சில நாட்கள் தமிழகத்தில் வேரூன்ற விட்டால் யவன ராஜ்யத்தை அவன் அங்கு ஸ்தாபித்து விடுவதோடு அல்லாமல், தனக்காக எதையும் தியாகம் செய்யவல்ல மக்கள் குழாத்தையும் அவன் சிருஷ்டித்துவிட முடியுமென்பதையும், அப்படி மக்களாதரவு ஏற்பட்டுவிடும் பட்சத்தில் டைபீரியஸையோ யவனர்களையோ தமிழகத்தி லிருந்து பெயர்த்தெடுத்து விடுவது வீண் பிரமையென்பதையும் படைத் தலைவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியெனத் துலங்க வைத்தது. ‘கேவலம் அடிமைப் பெண்ணான அலீமாவிடமே இத்தனை பக்தியைச் சிருஷ்டிக்கக்கூடிய டைபீரியஸ், சாதாரணமாகவே தலைவனிடம் பக்தி கொள்ளும் படை வீரர்களை எப்படி வசப்படுத்தக் கூடிய வனாயிருக்க வேண்டும்! டைபீரியஸை யவனர்கள் தேவ புருஷன்போல் பாவிப்பதாக ஆரம்ப நாளன்றே ஹிப்பலாஸ் சொன்னது எத்தனை சரியாகப் போய்விட்டது!’ என்று எண்ணிய படைத் தலைவன் அலீமாவின் கண்களோடு தன் கண்களைச் சில விநாடிகள் உறவாட விட்டான்.

படைத் தலைவனுடைய கூர்மையான பார்வை மட்டும் தைக்கும் பட்சத்தில் அதை மீறிச் செல்லும் திறன். யாருக்கும் கிடையாதென்பது பிரசித்தமாகையால், அவன் வாயிலிருந்து உதிர்ந்த மூன்று சொற்களும், அலீமாவின் பார்வையை நிறுத்திய அவன் பார்வையும் அவளை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்து விட்டதை அறை மூலையிலிருந்து கண்ட ஹிப்பலாஸ், “இனிமேல் படைத் தலைவர் இவளைச் சமாளித்து விடுவார்” என்று தனக்குள்ளேயே ஆறுதல் அடைந்ததன்றி, அந்த ஆறுதலுக்கு அடையாளமாகப் பெருமூச்சு ஒன்றும் விட்டான். ஆனால் ஹிப்பலாஸ் நினைத்தது போல் அலீமாவின் மனத்தைத் திருப்புவது அவ்வளவு எளிதாயில்லை படைத் தலைவனுக்கு. அவனது இயற்கையான பேச்சுத் தந்திரம், வாதத் திறன், காரணங் களைத் தொகுத்துக் காட்டக்கூடிய சாமர்த்தியம், அனைத்தும் தேவையாயிருந்தது சோழர் படை உபதலைவனுக்கு, அந்த அடிமைப் பெண்ணைத் திருப்ப.

அவன் சொற்கள் உதிர்த்த தடை உத்தரவாலும், கண்கள் கண்களை கட்டியிழுத்த பார்வைக் கயிறுகளின் பலத்தாலும் சிறிது தாமதித்த அலீமா, “எதற்காக நிற்கச் சொல்கிறீர்கள்? இங்கு எனக்கு இனி வேலையில்லை. என் குருநாதரின் பகைவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ள நான் இஷ்டப்படவில்லை” என்றாள் திட்டமாக.

அவளை அழைத்து நிறுத்திய சொற்களிலிருந்த சீற்றத்தைத் தணித்துக் கொண்ட படைத் தலைவன் பழையபடி நிதானத்துக்கு வந்து, “பதற்றத்தால் முடிவுகளைச் செய்வது புத்திசாலிகளுக்கு அழகல்ல அலீமா. ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத முடிவு பின்னால் வருத்தத்தை அளிக்கும்” என்று சுட்டிக் காட்டினான்.

அவன் உபதேசத்தைக் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் கூட இல்லாத அலீமா, சட்டென்று திரும்பி அவனை ஏறெடுத்து நன்றாக இரு கண்களாலும் சற்றும் பயமின்றி நோக்கிச் சொன்னாள்: “இதில் ஆய்வதற்கோ ஓய்ந்து சிந்திப்பதற்கோ ஏதுமில்லை படைத் தலைவரே. நீர் என் குருநாதரின் பகைவர். நான் வந்துள்ள முடிவுக்குக் காரணம் அதுபோதும்.”
இளஞ்செழியன் கண்கள் அவள் தாமரை வதனத்தை ஆராய்ந்தன. அந்த முகத்தின் அழகு கோபத்தால் சிவந்து அந்தி வானம் போலும் காலைத் தாமரை போலும் காட்சி யளித்தது. அந்த அழகு முகத்தில், செவ்வானத்தின் குறுக்கே படர்ந்த கறுப்பு மேகம்போல் எழுந்த வெறுப்பைக் கண்ட படைத் தலைவன், அப்பப்பா! பெண்களுக்கு மட்டும் கோபம் வந்துவிட்டால் எத்தனை ஆத்திரம், எத்தனை கொந்தளிப்பு! கடல் அலைகளைக் கூட அடக்கிவிடலாம் போலிருக்கிறது. இவர்கள் கோபத்தை அடக்க யாரால் முடியும்!’ என்று உள்ளூர சிந்தித்தானானாலும் அந்தச் சிந்தனையையோ வேறெந்த உணர்ச்சிகளையோ வெளிக்குக் காட்டாமல், “அலீமா! நான் இஷ்டப்பட்டால் இந்த மரக்கலத்திலேயே உன்னையும் இந்த யவன மருத்துவரையும் நிறுத்திக்கொள்ள என்னால் முடியும். அது மட்டுமல்ல. நீ இந்த மரக்கலத்திலிருப்பதாக யவனர் இளவரசன் அக்கிலீசையும் இந்த மரக்கலத்துக்குத் தன்னந் தனியே வரவழைத்துச் சிறை செய்து பயமுறுத்திப் பணம் பெற்றுத் தமிழகத்துக்கு இக்கப்பலைக் கொண்டுபோக என்னால் முடியும். இலி-ஆஸுவையும், மதகுருவையும் ஏமாற்றிய எனக்கு வெளுத்த உள்ள முடையவர்களும், ஆதிக்க ஆசை ஒன்றைத் தவிர வேறு குணக்கேடு இல்லாதவர்களும், கண்ணியத்தின் வரம்புகளுக்குக் கட்டுப் படுபவர்களுமான யவனர்களை ஏமாற்றுவது ஒரு பொருட்டல்ல என்பதை நீயே ஒப்புக் கொள்வாயென நினைக்கிறேன். தவிர, நீ கூறியதுபோல் என்னை இலி-ஆஸு வின் சாம்பிராணிக் காட்டுக்கு நீ அனுப்பியிருக்க முடியாது. இலி-ஆஸுவை ஒரு விதத்தில் ஏமாற்றியவனுக்கு இன்னொரு விதத்தில் ஏமாற்றுவது பெரும் வித்தையுமாகாது. அலீமா! கானாவிலிருந்து தப்பியது நான் உன்னிடம் சொன்ன திட்டத்தாலல்ல என்பதையும், நான் வகுத்த திட்டங்கள் இரண்டில் உன்னைவிட ஹிப்பலாஸின் பங்கே அதிகமென்பதையும் நினைவு வைத்துக் கொள்வதும் நல்லது” என்று மெள்ள மெள்ளச் சொற்களை உதிர்த்தான்.

படைத் தலைவன் சொற்கள் சுட்டிக் காட்டிய உண்மை யையும், அவன் திட்டங்களில் தானும் ஹிப்பலாஸும் – ஏன் இலி-ஆஸுவும் மதகுருவுங்கூட வெறும் சதுரங்கக் காய்கள் தானென்பதையும் புரிந்துகொண்ட அலீமா, தான் ஆத்திரத்தில் ஏதேதோ பேசிவிட்டதை உணர்ந்து சிறிது உள்ளூர வருந்தினாளானாலும் எப்படியும் குருநாதனுடைய பகைவனுக்கு எத்தகைய உதவியைச் செய்வதும் குருத் துரோகம் என்பதை நினைத்து, “படைத் தலைவர் திறனை யாரும் சந்தேகப்படவில்லை. ஏமாற்று வித்தையில் தாங்கள் சிறந்தவரென்பதை வலியுறுத்த விவரணமும் அதிகம் தேவை யில்லை. டைபீரியஸைப் பற்றி நான் பேசிய போதெல்லாம் தாங்கள் அவர் பகைவர் என்பதை மறைத்து என்னை ஏமாற்றி அவருக்கெதிராக என்னைத் திருப்பி உங்களுக்கு உதவத் தூண்டியதிலிருந்தே தங்கள் திறன் புரிகிறது எனக்கு. தவிர கானாவில் சொந்த முயற்சியால் தாங்கள் தப்பியிருக்கலாம். நான் அதிகமாக உதவாமலும் இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் திட்டங்களுக்கும் ஒரு கருவி தேவையாயிருந்தது. அந்தக் கருவியாக நான் இல்லாதிருக்கலாமல்லவா? அதுவும் தவிர, அம்புக்கு மூங்கில் சீவும் கத்திகூட சீவுபவன் கையைக் காயப்படுத்துவதுண்டு படைத்தலைவரே! அப்படியும் நான் தங்களுக்குக் காயம் விளைவித்திருக்க முடியும். சற்று நான் தாங்கள் குறித்த திசையில் செல்லாமல் மாறுபட்டிருந்தால், இலி-ஆஸுவின் காதில் எதையாவது ஓதியிருந்தால் உங்கள் திட்டங்கள் காயப்பட்டிருப்பது மட்டுமல்ல, ரத்தமும் கானாவில் பிரவகித்திருக்கும். சாம்பிராணிக் காட்டுக்கு இன்னும் இரண்டு முடவர்கள் கிடைத்திருப்பார்கள்” என்று இளஞ்செழியன் திட்டத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பதை மட்டுமின்றி, அவனோடு ஹிப்பலாஸின் கதியும் அதோ கதியாகியிருக்கும் என்பதையும் உணர்த்தினாள். அத்துடன் படைத் தலைவனை மட்டுமின்றி அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ஹிப்பலாஸ்மீதும் தன் அழகிய விழிகளைத் திருப்பினாள்.

அவள் வாதத்திலிருந்த உண்மையைச் சிறிதும் மறக்கா மலும் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமலும், “நாங்கள் தப்பியதில் உன் பங்கை மறக்கவில்லை அலீமா? நாங்கள் இத்தகைய திட்டங்களை அலசிப் பார்க்கும் முறை வேறு. தமிழகத்தில் சிந்தனைக்கு முக்கியம் கொடுக்கப் படுகிறது. அதை முன்னிட்டே உன் பங்கைக் குறைத்துக் கூறினேன். கருவிகள் மனிதனுக்குத் தேவைதான். ஆனால் கருவிகள் மனித வாழ்வில், திட்டங்களில் கொள்ளும் பங்கு குறைவு. சிந்தனைக்குத்தான் வேலை அதிகம். வீரனுக்கு வேலும், வாளும் தேவை. ஆனால் வீரன் வெற்றி கொண்ட தாகச் சொல்கிறார்களேயொழிய வேலையோ வாளையோ யாரும் முக்கியமாகக் கருதுவதில்லை . கவிஞனுக்கு எழுத் தாணியும் ஓலையும் தேவைதான். ஆனால் கவிதையை அவை புனைவதில்லை. அவற்றைக் கொண்டு கவிஞன் தன் சிந்தனை யிலுள்ள கவிதையை மற்றவருக்குத் தீட்டிக் கொடுப்பதால் எழுத்தாணியும் ஓலையும்தான் கவிதைக்குப் பிரதானம் என்று யாரும் எண்ணுவதில்லை” என்று குறிப்பிட்டான் படைத் தலைவன்.

அலீமாவின் சுடுவிழிகள் மீண்டும் நெருப்பைக் கக்கின “தமிழகத்தின் கவிஞரே! நான் எழுத்தாணியா ஓலையா? இரண்டில் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன். தங்கள் அறிவு யாருக்கும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்கிறேன்” என்று உள்ளூரக் கொந்தளித்த உணர்ச்சிகள் சொற்களில் தெறிக்கவும், இகழ்ச்சி பேச்சில் கலந்து பாயவும் கூறினாள் அலீமா.

“இரண்டுமில்லை” என்று சாதாரணமாகப் பதில் சொன்னான் படைத் தலைவன்.

“வேறு என்ன?” அலீமாவின் இந்தக் கேள்வியும் உஷ்ண மாகவே தொடர்ந்தது.

“என்னைக் கவிஞன் என்பதைவிட வீரன் என்று அழைப்பது பொருந்தும்.

“தற்பெருமை மிதமிஞ்சிப் போகிறது, படைத் தலைவரே!”

“உன் பெருமையை முன்னிட்டே இந்தத் தற் பெருமையை மேற்கொள்கிறேன் அலீமா!”ḥ

“என் பெருமையா?”

“ஆம் அலீமா! என்னை வீரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே அடைகிறேன். ஏன் தெரியுமா?”

“தெரியவில்லை, சொல்லுங்கள்.”

“அப்பொழுதுதான் உன் அழகு துலங்கும்.”

“எப்படியோ ?”
“அப்பொழுதுதானே உன்னை வேலுக்கும் வாளுக்கும் ஒப்பிடலாம். வீரன் கையேந்தும் கருவிகளல்லவா அவை?”

“அப்படித்தான் ஒப்பிடுங்கள்.”

“நான் மட்டுமென்ன! யாரும் உன்னை அப்படித்தான் ஒப்பிடுவார்கள். இந்த ஹிப்பலாஸைக் கேட்டுப் பார். சந்தேகமிருந்தால் உன் நண்பர் இந்த யவன மருத்துவரைக் கேட்டுப் பார்.”

“என்ன கேட்பது?”

“உன் விழிகளுக்கும், வேலுக்கும், வாளுக்கும் ஏதாவது வித்தியாசமுண்டா என்று.”

அலீமா சங்கடத்தால் காற்பெருவிரலால் அறையின் மர அடியைக் கீறினாள். படைத் தலைவனின் உவமையால் சற்றே மயங்கி கோபத்தின் ஊடே நாணமும் புகுந்ததால் கோபத்துடன் புன்சிரிப்பும் அவள் கோவை இதழ்களில் படர்ந்தது. பெண்களின் பலஹீனஸ்தானம் அவர்கள் அழகுதான் எனப் புரிந்துகொண்ட படைத்தலைவனும், அவள் முகத்திலேற்பட்ட சொற்ப மாறுதல்களைக் கணப்பொழுதில் கண்டு கொண்டாலும் அதைக் கவனிக்காதவன்போல் யவன மருத்துவனை நோக்கி, “என்ன மருத்துவரே! நான் சொன்னதில் தவறு ஏதும் இருக்கிறதா?” என்று வினவினான்.

யவன மருத்துவன் மனம் பல திசைகளில் அலைந்து கொண்டிருந்ததால் அவன் உடனே பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். படைத் தலைவன் மெள்ள மெள்ள அலீமாவின் மனத்தை மாற்றியதன்றி, தான் புகுத்திய கருத்து விஷயத்தையும் அவள் புத்தியிலிருந்து ஈர்க்கத் துவங்கி விட்டதைக் கண்டு சற்றுத் திகிலும் அடைந்தான் யவன மருத்துவன். போதாக்குறைக்கு, பேச்சின் ஆரம்பத்தில், ‘இஷ்டப்பட்டால் உன்னையும் இந்த யவன மருத்துவரையும் இந்த மரக்கலத்திலேயே இருக்கச் செய்ய என்னால் முடியும்’ என்று அலீமாவை நோக்கிப் படைத் தலைவன் சொன்ன சொற்களும் அவனுக்குப் பெரும் பீதியை ஊட்டியிருந்ததால் தன் கதி என்ன ஆகும் என்று எண்ணிக் கலங்கினான் மருத்துவன்.

யவன மருத்துவன் படைத் தலைவனை அலீமாவிடம் காட்டிக் கொடுத்ததற்குக் காரணம் வேறு. டைபீரியஸ் கொல்ல இஷ்டப்பட்டவனைத் தான் கொல்லாது விட்டது பெருங்குற்றம். தவிர அவன் இறந்துவிட்டதாகப் பொய் சொன்னது அதைவிடப் பெருங்குற்றம். பொற்காசுகளுக்காகத் தன் மக்களின் பகைவனைத் தப்ப வைத்ததற்கு யவன நாட்டில் சித்திரவதை கிடைக்குமென்பதையும், யவனர் முறைகள் மிகப் பயங்கரம் என்பதையும் நினைத்து நடுங்கினான் மருத்துவன். சாதாரணமாக சிங்கத்துக்குத் தான் குற்றவாளிகளை யவனர் தீனியாகப் போட்டு வந்தார்கள். “நான் செய்த குற்றம் மட்டும் வெளியாகி விட்டால்! சிங்கங்கள் என் முகத்தையும் வாயையும் கடித்துக் கரகரவென்று பட்சணம் செய்யுமே’ என்று எண்ணமிட்ட யவன மருத்துவனுடைய நரம்புகளில் பயம் மின்னல் போல் பாய்ந்து சென்றது. அலீமாவிடமும் யவன ராஜ குடும்பத்தாரிடமும் படைத் தலைவனைக் காட்டிக் கொடுத்துவிட்டால் தன் குற்றம் மறைந்து போகும் என்ற நினைப்பில்தான் யவன மருத்துவன் படைத் தலைவன் யாரென்பதை விளக்கினான். அந்த விளக்கம் எத்தனை விபரீதத்தில் தன்னை இழுத்துச் செல்ல முடியும் என்பதையோ, தான் சமாளிக்க வேண்டிய படைத்தலைவன் எப்பேர்ப்பட்ட மனிதனென்பதையோ முதலிலேயே யவன மருத்துவன் அறிந்திருந்தால் வாயைத் திறந்திருக்க மாட்டான்; நுணலின் நிலையில் அவன் இருந்திருக்கவும் நேர்ந்திராது.

ஆகவே படைத் தலைவன் பேச்சு மெள்ள மெள்ள நீண்டதையும், படைத் தலைவன் பேச்சைக் கேட்கக் கேட்க அலீமா சிறிது சாந்தப்பட்டதையும், கடைசியாக அழகு உவமையில் படைத் தலைவன் புகுந்ததும் அவள் முகத்தில் கோபத்துடன் வெட்கமும் கலந்து கொண்டதையும் கண்ட யவன மருத்துவன், தன் நிலை அபாயத்தை நோக்கி வருவதைக் கண்டு பெரும் கிலியும் கொண்டான். அந்த நடுக்கத்திலேயே பேசவும் தொடங்கி, “இல்லை. தவறில்லை. அலீமாவின் கண்களை வேலுக்கும் வாளுக்கும் ஒப்பிடுவதில் தவறில்லை..” என்றான்.

“ஏன் இழுக்கிறீர் மருத்துவரே! சொல்வதைத் தைரிய மாகச் சொல்லும். இந்த அறையை விட்டு நம்மில் யாராவது ஒருவர் நகரு முன்பு நமக்குள் விஷயத்தை அலசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்றான்.

யவன மருத்துவன் அறையின் வாயிற்படிக்காகக் கண்களை ஓட்டினான். அதைக் கண்டு நகைத்த படைத் தலைவன், “மருத்துவரே! கதவைப் பார்த்துப் பயனில்லை. வெளியிலிருப்பவர்கள் கண்ணியமான மாலுமிகளல்ல! அடிமை வர்த்தகர்கள். மரியாதைக் குறைவாக ஏதாவது நடந்து கொள்ளலாம். தாங்கள் நியாயமாக நடந்து கொண்டால் தங்களுக்கோ அலீமாவுக்கோ ஆபத்து ஏதும் நேரிடாமல் பார்த்துக் கொள்வது என் கடமை. ஆகவே விபரீத யோசனைகள் வேண்டாம் மருத்துவரே. இதோ இந்த மஞ்சத்தில் உட்காரும். அலீமா, இந்தப் பஞ்சணை உனக்குப் புதிதல்ல. நீயும் உட்கார். உள்ள நிலையைச் சரியாக அலசு வோம். அதற்குப் பின்பும் உனக்கு இந்த மருத்துவருடன் வெளியே செல்ல இஷ்டமிருந்தால் உன்னை நான் கரையில் கொண்டு போய்விடுகிறேன்” என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் இருவரும் உட்கார்ந்து அறைக் கதவுக்கருகில் சென்று காவல் புரியும்படி ஹிப்பலாஸுக்கு உத்தரவிட்ட படைத் தலைவன், மருத்துவருக்கும் அலீமா வுக்கும் எதிரே நின்று கொண்டே தன் புத்தியில் உதித்தபடி கடந்தகால நிகழ்ச்சிகளை ஒன்று கூட்டி, கேள்வியும் பதிலுமாகத் தொடுக்கத் தொடங்கினான். அந்தக் கேள்வி பதிலின் ஆரம்பக் கட்டமாக அமைந்தது, “மருத்துவரே! நான் டைபீரியஸுக்குப் பகைவனென்று கூறுகிறீர் இல்லையா?” என்ற கேள்வி.

ஏதோ புதிதாகக் கண்டு பிடித்துவிட்டது போல் பழைய கேள்வியை வீசிய இளஞ்செழியனைச் சற்றுப் பரிதாபத்துடன் நோக்கிய யவன மருத்துவன், “ஆம், அதிலெனன்ன சந்தேகம்?” என்றான்.

“சந்தேகமில்லை. ஆனால் நான் டைபீரியஸ் பகைவ னென்று உமக்குச் சொன்னது யார்?” என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டான் படைத் தலைவன்.

“யார் சொல்ல வேண்டும்? யவன நாட்டு விஷத்துளி களை உங்களுக்கு டைபீரியஸ் புகட்டி இருந்தானல்லவா?”
“ஆமாம்” என்று படைத் தலைவன் ஒப்புக் கொண்டான்.

“யவன நாட்டில் யாரும் நண்பர்களை விஷம் வைத்துக் கொல்ல முற்படுவதில்லை. தமிழ் நாட்டுப் பழக்கம் எப்படியோ தெரியாது” என்று சற்றுக் குறும்புத் தனத்தையும் காட்டினான் மருத்துவன்.

“தமிழகத்தில் விரோதிகளுக்குக்கூட விஷம் வைப்ப தில்லை. தேவையானால் நெருப்புத்தான் வைப்போம்” என்ற இளஞ்செழியன், இருங்கோவேளையும் ஆம்பிரா நதிக்கரை மாளிகையையும் ஒரு கணம் நினைத்தான்.

“நெருப்பும் அப்படியொன்றும் இழிவான சாதனமல்ல” என்ற யவன மருத்துவன் சொற்களில் கேலி தொனித்தது.

“விஷத்தைவிட இழிவு என்று சொல்ல முடியாது. நெருப்பு வைத்தவுடன் எப்படியும் ஆரம்பத்தில் புகைச்சல் கிளம்பும். சற்று முன்னெரிக்கை கிடைக்கும். யவனர் முறையில் அந்தக் கஷ்டம் கிடையாது. ஓசைப்படாமல் விரோதியிடம் நண்பன் போல் நடித்து ஒழித்துக் கட்ட விஷத்தைவிடக் கை கண்ட மருந்து கிடையாது. அது கிடக்கட்டும் மருத்துவரே! சொற்களின் போராட்டம் இப்பொழுது எதற்கு? நாம் ஆராய முற்பட்ட தகவலே வேறு. டைபீரியஸ் எனக்கு விஷம் வைத்த தாக உங்களுக்குச் சொன்னது யார்?”

“புகாரில் நங்கூரம் பாய்ச்சி நின்ற எங்கள் கப்பல் தலைவன் சொன்னான்.”
“எப்படி டைபீரியஸ் விஷத்துளிகளை எனக்கு அளித் தான், எந்தச் சந்தர்ப்பத்தில் அளித்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“சரி” என்று சொன்ன படைத் தலைவன் சில வினாடிகள் ஏதோ யோசித்துக்கொண்டு அறையில் அங்கும் இங்கும் உலாவிவிட்டு, திடீரென யவன மருத்துவன் முன்பாக நின்று, “மருத்துவரே! விஷத் துளிகளை எனக்குக் கொடுத்து என்னைக் கப்பலுக்கு அனுப்பியதால் டைபீரியஸ் என் விரோதி என்று உணர்ந்தீர்?” என்று கேட்டான்.

“ஆம்.” திட்டமாக வந்தது மருத்துவன் பதில்.

படைத் தலைவன் முகத்தில் சிறிது சங்கடம் தோன்றியது. படைத் தலைவன் மீளாமல் தன்னிடம் சிக்கி விட்டான் என்பதை நினைத்த மருத்துவன் குறுநகை கொண்டான். படைத் தலைவனின் அடுத்த கேள்வி தொடர்ந்தது. “டைபீரியஸ் வேறு ஏதாவது உத்தர விட்டானா?”

“ஆம். நீங்கள் எப்படியும் பிழைக்கக் கூடாதென்றும், பிழைத்தால் மேலும் விஷத்துளிகளைக் கொடுத்துக் கொன்று விடும்படிக்கும் உத்தரவிட்டான்” என்ற வெற்றி ஒலியில் வார்த்தைகளைக் கொட்டிய மருத்துவன் அலீமாவை நோக்கி, “இப்பொழுது தெரிகிறதா அலீமா, இவர் டைபீரியஸின் பரம விரோதியென்று!” எனக் கூறினான். ஆனால் அடுத்த வினாடி இடி இடியென உதிர்த்த படைத் தலைவன் நகைப்பு அவன் சப்த நாடிகளையும் ஒடுக்கியது. அதைவிட அவன் உயிரைக் குடித்துவிடுவது போல் விஷத்தைக் கக்கிக் கொண்டு தன்னை நோக்கி எழுந்த அலீமாவின் கண்களைப் பார்த்த மருத்துவன், “இந்தத் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?” என்று எண்ணி ஏதும் புரியாததால் பெரும் திகில் கொண்டான். நுணலென விழித்தான். சுற்றிலும் நோக்கினான். காலசர்ப்பம் போல் இளஞ்செழியன் முகம் தன்னை நோக்கி வருவதை உணர்ந் தான். அத்துடன், “இந்த மருத்துவமனை உடனே வெட்டிப் போடுங்கள் படைத் தலைவரே!” என்று இடியென எழுந்த அலீமாவின் குரல் அவனைக் கண்ட துண்டமாக வெட்டிக் கொன்றுவிடுவது போல் பயங்கரமாக எழுந்தது. “உம் ஏன் தாமதிக்கிறீர்கள்? இந்த அயோக்கியனை உடனே வெட்டிப் போடுங்கள் படைத் தலைவரே! இவனை உயிருடன் விடாதீர்கள்!” என்று மீண்டும் மீண்டும் சித்தப் பிரமை பிடித்தவன் போல் அலறினாள் அலீமா.

Previous articleYavana Rani Part 2 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here