Home Sandilyan Yavana Rani Part 2 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

114
0
Yavana Rani Part 2 Ch18 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch18 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 18 ராணியின் சகோதரன்

Yavana Rani Part 2 Ch18 | Yavana Rani | TamilNovel.in

பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி, அறிவாளிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஏனென்றால் ஆண்டவன் மனிதனுக்கு அளித்திருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் அதிக சக்தி வாய்ந்தவையாயிருப்பது மட்டு மின்றி, கொஞ்சம் நிலை தவறினால் எழுத்தும் பேச்சும் அவற்றைக் கையாள்பவர்களையே சங்கடத்தில் மாட்டி வைத்துவிடுகின்றன! மனித வரலாறு கண்ட உண்மை இது. அவசரப்பட்டுப் பேசப்படும் பேச்சினாலும், அந்தச் சந்தர்ப்பத்துக்குச் சரியாகத் தோன்றும் விஷயங்களின் விளைவை எண்ணிப் பாராமல் எழுதப்படும் எழுத்தினாலும் பிற்காலத்தில் நினைத்து வருந்தும் ஆத்திரக்காரர்களின் கணக்கு ஏட்டிலடங்காது. அந்தப் பெரும் பட்டியலில் சேர்ந்து கொண்ட மருத்துவன் அந்த யவன மரக்கலத்தின் அறையில் அசந்தர்ப்பமாகப் பேச்சுக் கொடுத்துப் படைத் தலைவன் விரித்த வலையில் விழுந்துவிட்டதன்றி, அலீமாவுக்குத் திடீரெனத் தன்மீது அளவற்ற சினம் ஏற்பட்டதன் காரணத்தை அறிய முடியாமலும் நீண்ட நேரம் திகைத்து நின்றான். ‘தமிழகத்துக்கு நீ செல்வதைப் பார்த்து விடுகிறேன்.’ என்று சற்றுமுன்பாகப் படைத் தலைவன் மீது சீறிய அலீமா திடீரெனத் தனக்கு எதிராக எப்படித் திரும்பினாள்? ஏன் திரும்பினாள்? சில நிமிடங்களுக்குள் அத்தகைய ஒரு திருப்பத்தை அவள் மனத்தில் ஏற்படுத்தக் கூடிய என்ன நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது என்பதையெல்லாம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தும் ஏதும் புரியாதவனாய் குழப்பம் மிகுந்த தன் கண்களால் அலீமாவையும் படைத் தலைவனை யும் மாறிமாறிப் பார்த்தான் யவன மருத்துவன். முதலில் இந்த மருத்துவனை வெட்டிப் போடுங்கள்’ என்று அலீமா கூவியது யவன மருத்துவனுக்குத் திகிலைவிடக் குழப்பத்தையே அதிக மாக உண்டாக்கியது. குழப்பம் மேம்படும்போது அவசியமாக ஏற்பட வேண்டிய உணர்ச்சிகள் தணிந்து விடுவது இயற்கை யேயல்லவா?

ஆகவே அலீமா தன்னை வெட்டிப் போடும்படி கதறிய போது முதலில் சிறிது திகில் ஏற்பட்டாலும், பின்பு அந்தத் திகில் மறைந்து குழப்பத்துக்கு இடம் கொடுக்கவே சற்றுத் தடுமாறிப்பேசவும் முற்பட்ட யவன மருத்துவன், “அலீமா! நீ இப்படிச் சீறும் காரணம் எனக்கு விளங்கவில்லை. விளக்கிச் சொல். நான் செய்த தவறுதானென்ன?” என்று மெள்ள வினவினான்.

அலீமா தன் சுடு விழிகளை அவன்மீது ஒரு கணம் திருப்பி விட்டுப் பிறகு படைத் தலைவனை நோக்கி, “மருத்து வருக்கு விளங்கவில்லையாம். விளங்கவையுங்கள்” என்று இகழ்ச்சி நிரம்பிய குரலில் கூறினாள்.

இளஞ்செழியன் இதழ்களில் அதுவரை இருந்த இளநகை மறைந்து இகழ்ச்சி லேசாக மலர்ந்தது. அவன் மருத்துவனைப் பார்த்த பார்வையில் இகழ்ச்சியுடன் பரிதாபமும் கலந்து நின்றது. தானாகவே குரல் கொடுத்து, தானிருக்குமிடத்தைப் பாம்புக்குக் காட்டி, அந்தப் பாம்பின் வாயில் சிக்கியதும் தத்தளிக்கும் தவளையைப்போல் யவன மருத்துவன் தத்தளித்து மிரண்டு நிற்பதைக் கண்ட இளஞ் செழியன், “மருத்துவரே! மூளையைத் துரிதப்படுத்தும் மருந்து ஏதாவது இருக்கிறதா?” என்று ஏதோ அவசியமான ஒரு பொருளைக் கேட்பதுபோல் சாவதானமாகக் கேட்டான்.
“பல இருக்கின்றன. மூளையின் மந்தம் நரம்பு மந்தத்தால் ஏற்படுகிறது. நரம்பை முடுக்கினால் மூளையும் முடுக்கப்படும்” என்று விவரித்த யவன மருத்துவன, அந்தச் சாத்திரத்தில் தனக்குள்ள வல்லைமையை அத்தனை இக்கட்டிலும் தன் குரலில் தொனித்த பெருமையால் விளக்கினான்.

“அப்படியானால் அந்த மருந்துகளில் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுவிடும்.”

“எதற்கு?”

“தங்கள் மூளை துரிதமாகச் செயலாற்ற!”

“இப்பொழுது அப்படியில்லையென்பது தங்கள் அபிப் பிராயமா?”

“என் அபிப்பிராயத்தைப் பற்றி இப்பொழுது கவலை யில்லை. இப்பொழுது அலீமாவின் கருத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும்.”

“அதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது.” “அது விளங்கவில்லையா உமக்கு?”

“இல்லை.”

“உமக்கு மூளைக்கு மருந்து தேவைதான் மருத்துவரே! இப்பொழுது அலீமா பெரும் குழப்பத்திலிருக்கிறாள்” என்று படைத் தலைவன் வார்த்தைகளை இழுத்தான்.
“என்ன குழப்பமோ?” என்று வினவினான் மருத்துவனும் குழப்பத்தின் உச்ச நிலைக்குச் சென்று.

“நம் இருவரில் யார் பெரிய அயோக்கியன், யாரை அடுலீஸிலுள்ள யவனர்களிடம் ஒப்படைக்கலாம் என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடுகிறாள் அலீமா” என்று விளக்கினான் படைத் தலைவன்.

யவன மருத்துவன் கேட்டான் ஏதும் புரியாமல், “உம்மை யவனர்களிடம் ஒப்படைத்துச் சிறையிடுவதில் அர்த்தமிருக்கிறது…” என்று ஆரம்பித்து மென்று விழுங்கினான்.

இளஞ்செழியன் மருத்துவன் கருத்து ஓடும் பாதையைப் புரிந்துகொண்டு சொற்களின் இடையிலே புகுந்து, “மருத்துவரே! உம்மைச் சிறையிடுவதிலும் அர்த்தமிருப்பதாக அலீமா நினைக்கிறாள்” என்று சுட்டிக் காட்டினான்.

“ஏன்?” என்று கேட்டான் யவன மருத்துவன்.

அதுவரை இருவர் பேச்சையும் கேட்டுக்கொண்டு மஞ்சத்தில் மௌனமாக உட்கார்ந்திருந்த அலீமா, திடீரென மஞ்சத்திலிருந்து இறங்கி மருத்துவனை நோக்கி வந்து கொண்டே, “ஏனென்றா கேட்கிறாய்? அட பதரே! என் குருநாதருக்கும் யவன நாட்டுக்கும் நீ செய்த துரோகம் உனக்கு இன்னும் விளங்கவில்லையா? இந்தப் படைத்தலைவராவது குருநாதருக்குப் பகைவர். ஆகவே யவன நாட்டுக்கே விரோதி. இவர் வேறு நாட்டவர். மற்றொரு நாட்டவருடன் பகைமை இருக்கலாம். நீ அப்படியல்லவே! நீ யவனன். யவன மக்களின் நன்மைக்காக எதையும் செய்ய வேண்டியவன். அப்படியிருக்க உன் நாட்டுப் படைத் தலைவர் கட்டளையையே மீறத் துணிந் தாய். சோழ நாட்டுப் படைத் தலைவரை விஷம் வைத்துக் கொல்லச் சொல்லி உனக்கு என் குருநாதர் கட்டளையிட் டாரே, அதை ஏன் நிறைவேற்றவில்லை? நீ நிறைவேற்றியிருந்தால் இவர் இப்பொழுது நம் எதிரில் உயிருடன் நிற்க முடியுமா? ரதப்போட்டிக்குக் குதிரைகளை வாங்கிக் கொடு என்றுதான் கேட்க முடியுமா? டைபீரியஸின் கட்டளையை ஏன் மீறினாய்? அதற்கு எத்தனை பொற்காசுகள் வாங்கினாய்? சொல் துரோகி, சொல். யவனர் நாட்டில் பிறந்த கோடரிக் காம்பே, சொல்” என்று சீறுசீறு என்று சீறினாள்.

யவன மருத்துவனின் மந்த புத்திக்கும், அலீமாவின் சீற்றத்துக்குக் காரணம் மெள்ள மெள்ளப் புலனாகியதால் அவன் முகத்தில் பெரும் திகில் குடி கொண்டது. தான் பணம் வாங்கிப் படைத் தலைவனைப் பிழைக்க வைத்த விஷயம் அடுலீஸிலுள்ள யவனர்களுக்குத் தெரிந்தால், அடுத்த வினாடி அடுலீஸ் யவனர் மாளிகைச் சிறையொன்றில் தனக்கு உபசாரங்கள் பலமாக நடக்குமென்பதையும் அந்த உபசாரங் களுக்குப் பிறகு தன்னைச் சிங்கங்களுக்கு நிவேதனம் செய்து விடுவார்களென்பதையும் புரிந்து கொண்ட யவன மருத்துவன் மீண்டும் விழித்தான். அவன் திகிலை அதிகமாக விசிறிவிட முற்பட்ட இளஞ்செழியன், “அலீமா! என்னை விடுவிக்க எத்தனை பொற்காசுகள் வாங்கினாரென்பதை அறிய விரும்பினால் இதோ இருக்கும் ஹிப்பலாஸைக் கேள். மருத்துவருக்குப் பொற்கிழி வழங்கியது அவன்தான். எங்கள் நாட்டில் பொற்கிழி முக்கியமாகப் புலவர்களுக்குத்தான் வழங்குவது வழக்கம். ஹிப்பலாஸ் மருத்துவருக்குப் பொற்கிழி அளித்து ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தியிருக்கிறான்” என்று கூறி ஹிப்பலாஸை நோக்கி, “ஹிப்பலாஸ்! பொற்காசுகள் எத்தனையிருக்கும்?” என்றும் கேட்டான்.

யவன மருத்துவன் பலமாகச் சிக்கிக்கொண்டதை அறிந்த ஹிப்பலாஸ், “எத்தனையென்று நிச்சயமாகத் தெரியாது. பிரும்மானந்தர் கொடுத்த முடிப்பை மருத்து வரிடம் அப்படியே கொடுத்தேன். அவர்தான் காசுகளை எண்ணினார். ஆனால் அதை எண்ணியதும், ‘வீரரே! உமது படைத் தலைவர் தப்பி விட்டார். இந்தக் காசுகளுக்காக யார் கட்டளையையும் மீறத் தயார். கிடக்கிறான் டைபீரியஸ்’

என்று உற்சாகத்துடன் சொன்னார் மருத்துவர்!” என ஓரிரண்டு வார்த்தைகளை அதிகமாகக் கூட்டியே சொன்னான்.

இளஞ்செழியன் சொற்களிலேயே பயத்தின் வசமா யிருந்த மருத்துவன் ஹிப்பலாஸின் சொற்களால் கிலியின் உச்சிக்குச் சென்று, “பொய் பொய். நான் அப்படி ஏதும் சொல்லவில்லை அலீமா. அத்தனையும் பொய், நம்பாதே! இருவரும் அயோக்கியர்கள்!” என்று கூவினான்.

அலீமாவின் வெறுப்பு நிறைந்த பார்வை மருத்துவன் மீது நிலைத்தது. “நீ யோக்கியனா!” என்று மரியாதையின்றி வெளிவந்த கேள்வி மருத்துவனுக்கு ரண சிகிச்சை செய்வது போலிருந்தது.

“இல்லை, நான் யோக்கியன் இல்லை. தவறு செய்து விட்டேன். மன்னித்துவிடு” என்று மன்றாடினான் மருத்துவன்.

“எத்தனை பணம் வாங்கினாய்?”

“மூவாயிரம் பொற்காசுகள்.”

“அதற்காக டைபீரியஸின் கட்டளையை மீறினாய்?”

“ஆம் ஆம்.”

“எதிரிக்கு உதவினாய்?”

“ஆம் ஆம்.”

அலீமாவின் கேள்வி திடமாக வரவர மருத்துவன் பதில் பரிதாபமாக வந்ததன்றி, கடைசியாக மருத்துவன் தள்ளாடித் தள்ளாடி நடந்து அறையின் ஒரு மூலையில் சென்று சாய்ந்து கொண்டான். மேலும் அத்தகைய நிலைமையை நீடிக்க விடுவதால் தனக்கும் பயனில்லை என்பதை உணர்ந்த படைத் தலைவன் அலீமாவை நோக்கி, “அலீமா! மருத்துவரை வருத்துவதில் பயனில்லை. அடுத்துச் செய்ய வேண்டியதை ஆலோசிப்போம்” என்றான்.

அலீமா தன் கண்களை யவன மருத்துவனிடமிருந்து . திருப்பி இளஞ்செழியனை நோக்கினாள். “இனி ஆலோசிப்ப தற்கு என்ன இருக்கிறது?” என்று வினவினாள்.

“ஆலோசிப்பதற்கு என்பதைவிட தீர்மானிப்பதற்கு என்று சொல்வது பொருந்தும்” என்று கூறினான் படைத் தலைவன்.

“எதைத் தீர்மானிக்க வேண்டும்? யார் தீர்மானிக்க வேண்டும்?” என்று மீண்டும் ஒரு கேள்வியை வீசினாள் வெறுப்பும் துச்சமும் மண்டிய குரலில்.

“நீ தீர்மானிக்க வேண்டும் அலீமா! என்னையும் இந்த மருத்துவரையும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி நீ ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என்று கூறிய இளஞ்செழியன் ஹிப்பலாஸை அழைத்து, “ஹிப்பலாஸ்! மருத்துவரை வெளியே அழைத்துச் சென்று காவல் புரி. நான் அழைக்கும் போது உள்ளே வரலாம்” என்று உத்தரவிட்டான். ஹிப்பலாஸ் வெளியே சென்றதும் அலீமாவைக் கையைப் பிடித்து அழைத்து வந்து மஞ்சத்தில் உட்கார வைத்து அவளெதிரில் நின்றுகொண்டு, “அலீமா! நான் உன்னைத் தொடலாமா? நான் உன் குருநாதருக்குப் பகைவனாயிருக்கலாம். ஆனால் நான் யாருக்கும் துரோகம் செய்தவனல்ல” என்றான்.

அலீமாவின் மனம் பெரும் போர்க்களமாயிருந்தது. மாறுபட்ட பல உணர்ச்சிகள் அங்கு ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருந்தன. படைத் தலைவனிடம் அவளுக்கு உள்ளூர இருந்த காதல், டைபீரியஸிடம் அவளுக்கிருந்த குருபக்தி இரண்டும் பற்பல உணர்ச்சிகளைக் கிளப்பி விட்டதால், யார் பக்கம் சாய்வது என்பது உணர முடியாமல் திணறினாள், அவள். ஆகவே படைத் தலைவன் கேள்விக்கு அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த மௌனத்தைப் பயன்படுத்திக் கொண்ட படைத்தலைவன், அவள் தோளிரண்டையும் தன் கைகளால் சற்று அழுத்திப் பிடித்தான்.

அத்தனை கோபத்திலும் தாபத்திலும் அவன் கைபட்ட இடங்களில் உயிர் துள்ளி விளையாடியது அலீமாவுக்கு. அந்த உயிர்த் துடிப்பை உதறிவிடச் சிந்தனையை வேறு இடங்களில் ஓட்ட முயன்ற அவள் தோல்வியே அடைந்தாள். அப்படியொரு ஆறுதலை அவளுக்களித்த படைத்தலைவன், “அலீமா! உன் இஷ்ட விரோதமாக உன்னை எதுவும் செய்யத் தூண்ட முற்படமாட்டேன். நான் சொல்வதைச் செவி கொடுத்துக் கேள். இந்தச் சமயத்தில் உன்னிடம் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்ல நான் விரும்பவில்லை. நான் டைபீரியஸின் விரோதிதான். ஆனால் யவனர்களின் விரோதியல்ல” என்று கூறினான்.

அலீமா பதிலேதும் சொல்லாமலே உட்கார்ந்திருந்தாள். படைத் தலைவனே தொடர்ந்து பேசினான். “உண்மைதான் அலீமா. என் வாளின்மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் டைபீரியஸின் விரோதியாயிருக்கலாம். ஆனால் யவனர்களின் விரோதியல்ல. என் உயிர்த் தோழர்களில், உயிர் வீரர்களில் யவனன் ஹிப்பலாஸும் ஒருவன். எனக்காக உயிரையும் விடுவான். ஏன்? நான் யவனர்கள் விரோதி என்பதற்காகவா? அல்ல அலீமா அல்ல, என் படையில் யவனர்கள் பலர் இருக்கிறார்கள். எதற்காக? சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்யவா? கிடையாது. சொந்த நாட்டுக்கு மதிப்பைத் தேடித் தர. தமிழகத்தின் தலைசிறந்த துறைமுக நகரம் பூம்புகாரைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அந்தப் பூம்புகாரைக் காத்து நிற்பதே யவனர்கள்தான். அங்கு தமிழர்கள் யவனர்களைச் சகோதரர்களாகப் பாவிக் கிறார்கள். எங்கள் இந்திர விழாவை ஒரு முறை பார்த்தால் புரிந்து கொள்வாய் அலீமா, எங்கள் நாட்டினர் பிற நாட்டினரை எத்தனை மதிப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்திர விழாவில் தமிழர்களும் யவனர்களும் கலந்து விளையாடுவார்கள். போட்டியிடுவார்கள். போட்டிகளில் தமிழர் வெற்றியடைந்தால் யவனர் கொண்டாடுவார்கள். யவனர் வெற்றியடைந்தால் தமிழர் கொண்டாடுவார்கள். பரஸ்பர மரியாதையுள்ள சமத்துவம் நிரம்பிய, பண்பாடு மிகுந்த, ஒரு அதிசய சமூகத்தை அங்கு காண்பாய். தமிழகம் உலக மக்கள் அனைவரையும் தன்னிடம் வரவேற்கிறது, நண்பர்களாக. ஆகையால் யவனரையும் வரவேற்றது. டைபீரியஸ் மட்டும் மாற்றானாக வந்தான். ஆகவே தான் விரோதியானேன். எங்கள் நாட்டை ஆதிக்கம் கொள்ள வருபவரை நான் எப்படி வரவேற்பேன்..?”

இப்படிப் பேசிக் கொண்டுபோன படைத் தலைவன் ஒரு வினாடி பேச்சை நிறுத்தி, “அலீமா!” என்று மெள்ள அழைத்தான்.

“ஹும்!” அந்தச் சப்தமொன்றுதான் பதிலாக வந்தது.

“டைபீரியஸிடம் உனக்குக் குருபக்தி அதிகமென்பதை கண்டேன்.”

“ஆமாம்.”

“ஆனால் உன் தலைவி யவன ராணியிடம் உனக்குப் பக்தி உண்டா?”

“அதிலும் சந்தேகமா?”

“அந்த யவன ராணிக்கு எதிராக இயங்குபவனை என்ன செய்வாய்?”

“கொல்லக்கூடத் தயங்க மாட்டேன்.”
“அப்படியானால் முதலில் நீ டைபீரியஸைத்தான் கொல்ல வேண்டும்.”

“என்ன, குருநாதரையா?”

“ஆம் அலீமா. டைபீரியஸ் ராணியின் விரோதி. நான் சொல்வதை நீ நம்புவது கடினம். தமிழகம் வந்தால் என்னால் இதை நிரூபிக்க முடியும்.”

“பொய்யையும் பொருந்தச் சொல்ல வேண்டும் படைத் தலைவரே.”

“பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை அலீமா. வாளின் மேல் ஆணை வைத்த எந்த வீரனும் தமிழகத்தில் பொய் சொல்ல மாட்டான். நீ நம்பினாலும் சரி, நம்பாவிட் டாலும் சரி, டைபீரியஸ் தற்சமயம் ராணியின் விரோதி. ராணியைக் காக்கவாவது நான் தமிழகம் செல்லவேண்டும். தமிழகத்தில் யவன அரசை நிறுவ ராணிக்குள்ள ஆசையை நான் அங்கீகரிக்கவில்லை. ராணியின் அந்த அன்னப் பறவை ஆபரணம், ஏன் கடலைவிட அற்புதமாக ஜொலிக்கும் அந்த நீலமணிக் கண்கள்கூட, அது விஷயத்தில் என்னைத் திருப்பச் சக்தியற்றவை. மாலைக் கதிரவன் கதிர்கள் போன்ற ராணியின் பொன்னிறக் கொண்டைகூட அந்த ஆசையை அங்கீகரிக்க என்னைத் தூண்டா. ஆனால் டைபீரியஸிடம் ராணி அடிமையாக்க மட்டும் நான் அனுமதிக்க மாட்டேன் யவன மக்கள் யார் கண்டாலும் வணங்கவேண்டிய யவன ராணி அவனிடம் தற்சமயம் சிறைப்பட்டிருப்பாள் என்பது நிச்சயம். அவளைச் சிறை மீட்பது என் கடமை. ராணிக்கு ஏற்பட்ட இத்தனை துன்பத்துக்கும் காரணம்…” என்று மேலே சொல்லப்போன இளஞ்செழியன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான்.

ராணியின் நீல மணிக் கண்களையும் பொன்னிறக் கொண்டையையும் பற்றிப் பிரஸ்தாபித்த சமயத்தில், படைத் தலைவன் கண்கள் எங்கோ சொர்க்கலோகத்துக்குச் சென்று கொண்டிருந்ததைக் கண்ட அலீமா காரணத்தைப் புரிந்து கொண்டாள். ‘இவர் ராணியைத் தனக்குத் தெரியுமென்று கானாவில் ஏன் என்னிடம் சொல்லவில்லை? ராணியின் காதலர் இவர் என்றறிந்தால் நான் பொறாமை கொள்வேனென்று நினைத்தாரா?’ என்று நினைத்த அலீமா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். ‘என் ராணிக்கு நான் எதையும் விட்டுக் கொடுப்பேனே. பைத்தியக்கார மனிதர்! அப்பொழுதே நினைத்தேன், இவர் இதயத்தில் வேறொரு பெண் உறைகிறாளென்று. ஆனால் அவள் என் ராணியென்று தெரியாமல் போய்விட்டதே. ராணிக்காக நான் எதைத்தான் செய்யமாட்டேன்? ஆனால் குருநாதர் எப்படி ராணிக்கு விரோதியானார்? ஏதும் புரியவில்லையே’ என்று ஏதேதோ நினைத்த அலீமா கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, ‘இதற்கெல்லாம் விடை கிடைக்கும் இடம் தமிழகம்தான். அங்கு செல்லவேண்டுமானால் படைத் தலைவனுக்கு உதவ வேண்டும்’ என்று முடிவு செய்தவளாய், “படைத் தலைவரே! மருத்துவரை உள்ளே அழையுங்கள்” என்றாள்.

படைத் தலைவன் அழைக்க, ஹிப்பலாஸைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த யவன மருத்துவனை நோக்கிய அலீமா “மருத்துவரே! நீர் செய்திருக்கும் துரோகம் பெரிது! ஆனால் தற்சமயம் உமது குற்றத்தை மறைக்க ஒப்புக் கொள்கிறேன், நீர் ஒழுங்காக நடந்து கொள்ளும் பட்சத்தில்” என்றாள் ஏதோ பணியாளை நோக்கி உத்தரவிடும் அரசி போல.

“எதை வேண்டுமானாலும் சொல் அலீமா! செய்கிறேன்” என்றான் யவன மருத்துவன்.

“நான் தமிழகம் சென்று அங்கு என் தலைவியைக் கண்ட பிறகுதான் இவரை என்ன செய்வதென்று முடிவு செய்ய வேண்டும், தமிழகம் செல்ல நல்ல மாலுமிகளும் பணமும் தேவை. அடுலீஸில் பணம் பெற ரதப் போட்டி ஒன்றுதான் வழி. ரதப் போட்டிக்கு உதவக் கூடியவர் இளவரசர் அக்கிலீஸ் ஒருவர்தான். அவரிடம் படைத் தலைவரை அறிமுகப்படுத்து. நானும் சொல்கிறேன்” என்றாள் அலீமா.

பிரமித்து நின்றான் மருத்துவன். இப்படித் திடீரென அலீமாவை மாற்றிவிடக்கூடிய சக்தி படைத் தலைவனுக்கு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை மருத்துவனுக்கு. பிறகு, ‘என்ன இருந்தாலும் இவள் பெண். படைத்தலைவனோ பார்வைக்கு நன்றாயிருக்கிறான். இந்த இணைப்பை உடைக்கக் குருபக்தி, நாட்டுப் பற்று எதனால்தான் சாத்தியம்?’ என்று தனக்குள்ளேயே எண்ணிப் புன்முறுவல் கொண்டான்.

“இது நகைக்க வேண்டிய விஷயமல்ல” என்றாள் அலீமா.

“இல்லை” என்று மருத்துவனும் புன் சிரிப்பை அகற்றினான்.

“இளவரசர் வந்ததும் இங்கு வாருங்கள்” என்றாள் அலீமா.
இம்முறை அவள் வார்த்தையில் சற்று மரியாதை இருந்ததால் தன் தலை தப்பியது என்பதைப் புரிந்து கொண்ட மருத்துவன், அவளிஷ்டப்படி நடப்பதாக ஒப்புக் கொண்டு விடைபெற்றுச் சென்றான். அன்றிலிருந்து சரியாக நான்காவது நாள் யவன நாட்டு இளவரசனான அக்கிலீஸுக்கு இளஞ்செழியனை மருத்துவனும் அலீமாவும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர்கள் சந்திப்பு அடுலீஸ் நகரத்தின் வெளிப் புறத்திலிருந்த யவன நாட்டுப் பெரும் அரண்மனையில் நடைபெற்றது. அக்கிலீஸைக் கண்ட இளஞ்செழியன் மலைத்து நின்றான். ‘இது அக்கிலீஸா! அல்லது ஆண் வேடம் பூண்ட யவன ராணியா!’ என்று எண்ணி, அந்த அக்கிலீஸின் சாயலிலும் நீலமணிக் கண்களிலும் இதயத்தைப் பறி கொடுத்து, வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டு சிலையென நின்ற படைத்தலைவனைக் கையைப் பிடித்துச் சொந்தமாக அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்ற அக்கிலீஸ், “தாங்கள் தமிழகத்திலிருந்து கிளம்பி நாளாகிறதோ?” என்று வினவினான்.

“ஆம்” என்று பதில் சொன்னான் படைத் தலைவன். அடுத்தபடி தொடர்ந்த சம்பாஷணை மட்டுமின்றி, அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும், படைத் தலைவனுக்கு நல்ல நாட்கள் விளைய முற்பட்டுவிட்டதைச் சந்தேகமற நிரூபித்துவிட்டன.

Previous articleYavana Rani Part 2 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here