Home Sandilyan Yavana Rani Part 2 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

129
0
Yavana Rani Part 2 Ch19 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch19 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 19 மருத்துவன் சதி

Yavana Rani Part 2 Ch19 | Yavana Rani | TamilNovel.in

யவன இளவரசர்களில் ஒருவனான அக்கிலீஸினால் அன்புடன் வரவேற்கப்பட்டு யவன அரசர் மாளிகையின் அந்தரங்க அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளஞ் செழியன், அந்தப் பெருமாளிகையின் அமைப்பையும் அதிலிருந்த பலதரப்பட்ட பொருள்களையும் பார்த்துப் பெரிதும் பிரமிப்படைந்ததன்றி, யவனர்களின் கரம் உலகத்தில் எந்தெந்தக் கோடிகளுக்கெல்லாம் நீண்டிருக்கிற தென்பதையும் நினைத்து நினைத்து விவரிக்க இயலாத வியப்புக்கும் உள்ளானான். அடுலீஸ் கடற்கரையிலிருந்து நகரத்துக்குள் புகுந்ததும், சுமார் பதினைந்து ஸ்டேடியா தூரத்தில் தலைகாட்டிய அந்தப் பெரிய அரண்மனையின் சிகரங்கள், அடுலீஸின் எல்லா மாளிகைகளையும் விட அதிக உயரமாகக் காட்சியளித்ததன்றி, மாளிகையின் உட்புற விஸ்தீரணமும் தோட்டங்களும் நீண்ட புல்வெளிகளும் மன்னர் குடும்பத்தாரை மட்டுமின்றி, சாதாரண சிறு படை யொன்றையும் பந்தோபஸ்துக்கு வைத்துக் கொள்ளக் கூடிய பெரும் நிலப்பரப்பைக் காட்டின. பெரும் புல்வெளிகளில் பல வர்ணப் புரவிக் குட்டிகள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டி ருந்ததை இளவரசனின் அந்தரங்க அறையிலிருந்தே கவனித்த இளஞ்செழியன் கரங்கள் அந்தப் புரவிக் குட்டிகளைப் பிடித்து அணைக்கத் துடித்தன. மாளிகையின் முன்கூடத்தில் உள்ளது போலவே இளவரசனின் அந்தரங்க அறைக்குள்ளும் தமிழகத்தின் விலையுயர்ந்த வாட்களும் கேடயங்களும் சுவர்களில் மாட்டப்பட்டிருந்ததோடு, தமிழகத்துக்கும் அப்பால் தூரக் கிழக்கிலிருந்த சோனகர் நாட்டுச் சித்திர வேலைப்பாடுள்ள வெள்ளை மட்பாண்டங்களும் அழகுக்காக ஆங்காங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட இளஞ்செழியன், கிழக்கு நாடுகளின் இந்தச் செல்வங்களைப் பார்த்துத்தான் யவனர்கள் அந்த நாடுகளைக் கைக்கொள்ள ஆசைப்படுகின்றனர்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, தன்னை உற்றுப் பார்த்த வண்ணம் ஏதும் பேசாமல் நின்றுகொண்டிருந்த யவன இளவரசனான அக்கிலீஸின்மீது மீண்டுமொருமுறை தன் கண்களை ஓட்டினான்.

யவனர் இளவரசனான அக்கிலீஸ் அசல் யவன ராணி யின் பிரதிபிம்பமாக விளங்கினான். அந்த ஆண் மகனுடைய நீலமணிக் கண்கள் அவன் வீரன் என்பதைச் சந்தேகமற நிரூபித்தனவானாலும், அத்தனை வீரத்திலும் ராணியின் கண்களில் சதா விளையாடிய அந்த மயக்கமும் கலந்து தெரிந்தது. ஆண்மகன் என்ற காரணத்தால் அக்கிலீஸின் தலை மயிர் வெட்டப்பட்டிருந்ததால், ராணியின் கொண்டையைப் போல் அவை சுருட்டிக் கட்டப்படாமல் வார்வாராக அவன் தோள்களில் உராய்ந்தனவானாலும், அவற்றின் நிறம் ராணியின் குழல் நிறத்தைப்போலவே அசல் பொற்கம்பிகள் போல் காட்சியளித்தன. யவன அரச குமாரன் நடையில் கம்பீரம் இருந்தது. அந்த கம்பீரத்திலும் ராணியின் ஒய்யார நடைச்சாயல் கலந்தே தெரிந்தது. ராணிக்கும் அக்கிலீஸுக்கும் ஒரே ஒரு முக்கிய வித்தியாசம் மட்டுமே இருந்தது. ராணியைவிட அக்கிலீஸ் சற்று உயரம். ஆனால் இளவரசன் சரீரம் சற்று புஷ்டியின்றி மெல்லியதாயிருந்த படியால் அந்த உயரம் சற்று அசாத்திய உயரமாகப் பார்வைக்குத் தெரிந்தது.

இளஞ்செழியன் இப்படித் தன்னை உற்றுப் பார்ப்பதை கண்டு அழகிய தன் இதழ்களில் புன்முறுவலைத் தவழ விட்ட அக்கிலீஸ், அரசர்கள் உட்காருவதற்காக அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த பெரும் ஆசனத்தில் அமர்ந்து, எதிரேயிருந்த மற்றொரு ஆசனத்தைப் படைத் தலைவனுக்குக் காட்டி, “உட்காருங்கள், உட்கார்ந்து கொண்டே என்னை ஆராயலாம்” என்று கூறினான்.

தான் அளவுக்கு மீறி அநாகரீகமாக இளவரசனை அக்கு அக்காக அலசியதை நினைத்துச் சற்று வெட்கமும் கொண்ட இளஞ்செழியன், “இளவரசர் மன்னிக்க வேண்டும். திடீரென ஏற்பட்ட பிரமிப்பு என்னை அப்படிப் பார்க்க வைத்து விட்டது” என்று கூறி, மன்னிப்பைக்கோரும் முறையில் தலை யும் தாழ்த்தினானே தவிர, உட்காராமலே சம்பாஷணையை மேற்கொண்டும் தொடர முற்பட்டு, “இளவரசர்..” என்று ஏதோ சொல்லத் தொடங்கினான்.

இளஞ்செழியனை மேலே பேச அனுமதிக்காத அக்கிலீஸ், “முதலில் உட்காருங்கள். பிறகு பேசுவோம்” என்றான்.

“இளவரசருக்கு முன்பு நான் அமருவது உசிதமாயிருக் காது. தவிர, தாங்களும் நானும் நீண்ட நேரம் பேச வேண்டு மானால் சம்பாஷணையை மொழிபெயர்க்க அலீமாவாவது வேண்டும். ‘மூன்றாம் பேர்வழி முன்பாகச் சாதாரண மனிதனான நான் தங்களுக்கு எதிரில் அமருவது தவறு. தாங்கள் அதற்கு இடம் கொடுத்தாலும் நான் ஒப்பமாட்டேன்” என்று இளஞ்செழியன் பதில் சொன்னான்.

“உங்கள் நாட்டுமொழி எனக்கு நன்றாகத் தெரியும். என் சகோதரி ஒருத்திக்கு நாங்கள் தமிழ் கற்பித்தோம். அப்போது நானும் பலமுறை கூட இருந்திருக்கிறேன். அதுமட்டுமா? பாடம் கேட்கும் சமயங்களைத் தவிர என் சகோதரி என்னி டம் தமிழில்தான் பேசிப்பேசிப் பிராணனை வாங்குவாள். அவளைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர் கள். விஷமத்துக்குப் பெயர் போனவள்” என்று தமிழ் தனக்கு நன்றாகத் தெரிந்த காரணத்தை விளக்கியதோடு தன் சகோதரியிடம் தனக்குள்ள அன்பையும் விளக்கினான் அக்கிலீஸ்.

இளஞ்செழியன் இதழ்களில் புன்முறுவல் ஓடியது. “தங்கள் சகோதரி மிகவும் திறமை வாய்ந்தவர்கள்தான். இல்லாவிடில் தொலைதூரமுள்ள தமிழகம் வருவார்களா?” என்றொரு வெடியைத் திடீரென வீசினான் இளவரசனை நோக்கி.

இதைக் கேட்டதும் யவனர்களின் இளவரசன் ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்தது மட்டுமின்றிக் கண்களில் ஆச்சரியம் பொங்க வினவினான். “என்ன? என்ன? என் சகோதரியைத் தெரியுமா உங்களுக்கு?” என்று.

அந்தச் சமயத்தில் எதிரேயில்லாது போனாலும் சிந்தையில் சதா சுழன்று கொண்டிருந்த ராணியை நினைத்து மரியாதைக்கு அறிகுறியாக சிரம் தாழ்த்திய படைத் தலைவன், “யவன ராணியை அறியாதவர்கள் புகாரில் யாருமே கிடையாது. அவர்கள் அழகு மக்களை ஆட்கொண்டது. அவர்கள் கம்பீரம் வீரர்களைப் பணியச் செய்தது” என்றான்.

“நீங்களும் பூம்புகாரின் வாசியா?” என்று மீண்டும் ஒரு கேள்வியை வீசினான் யவனர் இளவரசன், குரலில் ஆச்சரியமும் பூரா விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் கலந்து விளையாட.

“ஆமாம்” என்று சாவதானமாகப் பதில் சொன்னான் படைத் தலைவன்.

“பூம்புகாரில் உங்கள் தொழில்?”

“படையில் சேவை புரிபவன்.”

“போர் வீரரா?”

“ஆம்.”

இதைக் கேட்டதும் யவனராஜகுமாரன் சில வினாடிகள் மௌனம் சாதித்தான். பிறகு அறையில் இங்கும் அங்கும் உலாவ முற்பட்டவன் திடீரென நின்று இளஞ் செழியனை நோக்கி, “எந்தப் படையில் பணி புரிகிறீர்கள்?” என்று வினவினான்.

இந்தத் திடீர் கேள்வியால் இளஞ்செழியன் அசந்து விடுவானென்றோ எதையாவது உளறிக் கொட்டிவிடுவான் என்றோ யவன இளவரசன் எதிர்பார்த்திருந்ததால் ஏமாந்தே போனான். எவ்விதத் தாமதமும் இல்லாத குரலில் பதில் சொன்னான் படைத் தலைவன், “டைபீரியஸின் படையில்” என்று.

பதில் யவனர் இளவரசனைத்தான் அயர வைத்தது. “டைபீரியஸை உங்களுக்குத் தெரியுமா?” என்று சற்று தடுமாற்றமுள்ள குரலில் இளவரசன் கேட்டதைக் கவனித்த இளஞ்செழியன், சற்று எச்சரிக்கையடைந்து மிகுந்த ஜாக்கிரதையுடன் இளவரசனின் அடுத்த கேள்விகளுக்குப் பதில்களை அமைத்துக்கொண்டான். ஆகவே முதல் கேள்விக்கு, “டைபீரியஸை நன்றாகத் தெரியும். என் படைத் தலைவரல்லவா அவர்?” என்றான் படைத் தலைவன்.

“டைபீரியஸ் படையா திரட்டியிருக்கிறான்? எதற்குப் படை” என்று ஏதும் அறியாததுபோல் கேட்டான் யவன அரசகுமாரன்.

“புகாரைக் காக்கப் படைத்தலைவன் வேண்டு மல்லவா?” என்றான் படைத் தலைவன்.

“புகாரை டைபீரியஸ் காப்பானேன்? அந்த நாட்டு மன்னர்கள் இல்லையா?”

“புகார் சோḥழ நாட்டின் தலைநகரம் இளவரசே! அந்த நாட்டு மன்னன்’ ஒரு வஞ்சகனால் கொல்லப்பட்டதாலும், அதன் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையாலும் நாட்டு எல்லையிலுள்ள துறைமுக நகரமான புகார் காப்பாரின்றித் தத்தளித்து. அந்தச் சமயத்தில்தான் டைபீரியஸும் யவன ராணியும் தங்கள் கப்பல் தீக்கிரையாகித் தெய்வாதீனமாகத் தப்பி, புகார் சேர்ந்தார்கள். தெய்வம்தான் டைபீரியஸைப் புகாரில் சேர்ப்பித்திருக்க வேண்டும். அவர் வரவால் புகார் திடப்பட்டது. டைபீரியஸைக் கண்டதுமே யவனர்கள் அவருக்கு அடிமையாகிவிட்டார்கள். புகாரை ஏற்கெனவே காத்து நின்றவர்கள் யவனர்கள்தான். டைபீரியஸ் வந்ததும் அவர்களுக்கு ஒரு நிகரற்ற தலைவரும் கிடைத்துவிட்டார். இப்படி யவனர் பலம் புகாரில் ஓங்கவே புகார் மட்டும் உள் நாட்டுச் சண்டையில் சிக்கவில்லை. சோழ அரசைப் பறித்த வஞ்சகன் கையிலும் அது அகப்படவில்லை” என்று உண்மையை அரையும் குறையுமாகத் திரித்துக் கூறினான் படைத் தலைவன்.

“இப்பொழுது புகார் யார் வசமிருக்கிறது?” என்று இளவரசன் கேட்டான்.

“நான் நாட்டைவிட்டுப் புறப்படும்போது யவனர் கைகளில் இருந்தது. ராணிக்குப் புகாரில் முடி சூட்டுவதாகக் கூட ஒரு வதந்தி கிளம்பியது. இப்பொழுது நிலைமை என்னவோ தெரியாது.”

“நீங்கள் யவன நாடு புறப்படக் காரணம்?”

“நானாகப் புறப்படவில்லை.”

“யார் அனுப்பி வைத்தார்கள்?”

“அது ஒரு பெரும் கதை இளவரசே!” என்று கூறிய இளஞ்செழியன் சற்றுப் பெருமூச்செறிந்தான். அத்துடன் ஏதோ தன்னைத்தேற்றிக்கொண்டு பேசுவதுபோல் நடித்து, “நான் டைபீரியஸின் படையில் சேர்ந்து கொண்டது பற்றிப் புகாரிலுள்ள தமிழர்கள் பலர் வெகுண்டார்கள். என்னைக் கொல்லவும் முயன்றார்கள். ஆனால் என்னைக் கொன்றால் டைபீரியஸ் என்ன செய்வாரோ என்று பயந்து இரவில் நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என்னைத் தூக்கிச் சென்று மேற்றிசை அடிமை வர்த்தகர்களிடம் விற்றார்கள். அடிமை வர்த்தகர்களின் மரக்கலம் கொள்ளைக்காரர்களிடம் பிடிபட்டது. ஆகவே நான் கொள்ளைக்காரரை ஏமாற்றி இலி-ஆஸுவிடம் அவர்களை ஒப்படைத்தேன். அங்குதான் அலீமாவைச் சந்தித்தேன்…” என்று சொல்லிக் கொண்டு போனவனை இடைமறித்த அக்கிலீஸ், “மீதி விவரங்களை அலீமா சொன்னாள். உங்களை ஏதோ படைத் தலைவர் என்று கூறினாளே அவள்?” என்று சந்தேகத்துடன் வினவினான்.

“நான் காட்டிய பக்திக்குப் பரிசாக டைபீரியஸ் எனக்கு ஒரு உபதலைவன் பதவியை அளித்தார்” என்றான் இளஞ் செழியன்.

“டைபீரியஸின் போக்கு விசித்திரமாயிருக்கிறது. ஒரு உப தலைவனை விஷம் வைத்துக் கொல்கிறான். இன்னொரு வனை உபதலைவனாக்குகிறான்” என்ற யவன ராஜகுமாரன் பேச்சில் சந்தேகத்தின் சாயை தலை காட்டியது.

அதை உடைக்கச் சற்றுக் குதூகலத்துடன் சொன்னான் இளஞ்செழியன், “அதுதானே ராஜதந்திரம்?” என்று.

“எது?”

“துணை நிற்பவனுக்குப் பதவியும் எதிர்ப்பவனுக்கு நற்கதியும் அளிப்பது.”

இதைக் கேட்ட யவன ராஜகுமாரன் இரைந்து நகைத்து விட்டு, “நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் நம்பத் தகுந்தவர்தானா என்று மட்டும் எனக்குப் புரியவில்லை” என்றான்.

“ஏன் அந்தச் சந்தேகம் தங்களுக்கு?”

“யவனர்களிடம் சேர்ந்து நீர் சொந்த நாட்டுக்குத் துரோகியாகவில்லையா?”

“என் உயிர் போனாலும் சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்யமாட்டேன். என்னைப் புகாரில் சந்தித்த யவன மருத்துவரை வேண்டுமானாலும் கேளுங்கள்.”

“பின் எதற்காக யவனர் படையில் சேர்ந்தீர்?” யவன ராஜகுமாரன் கேள்வியில் கடுமையும் வெறுப்பும் மண்டிக் கிடந்தது.

“நாட்டு நன்மையை முன்னிட்டு.” உறுதியுடன் வெளி வந்தது இளஞ்செழியன் பதில்.

“பிற நாட்டான் படையில் சேவை செய்வது நாட்டு நன்மையை முன்னிட்டா?” இகழ்ச்சியும் கோபமும் இழைந்த குரலில் கேட்டான் யவன ராஜகுமாரன்.

இளஞ்செழியன் தன் கூரிய விழிகளை யவன ராஜ குமாரனுடைய நீலமணிக் கண்களுடன் தைரியத்துடன் கலக்க விட்டான். ஒரு வினாடி அந்தப் பார்வையாலேயே ராஜகுமாரனைச் சலனமடையச் செய்து, உறுதி நிரம்பிய குரலில் பேசவும் முற்பட்டு, “இளவரசே! அரசியல் சிக்கல் என்பது சுலபமாகப் பிரிக்கக் கூடியதல்ல. பல வேளைகளில் அறிவுக்குப் பொருத்தமாக நடந்து கொள்வதுகூட நாட்டை அபாய நிலையில் இழுக்கும். குருட்டுத்தனமான நாட்டுப் பக்தி மட்டும் பலன் தராத சமயங்களும் வரலாற்றில் உண்டு. நீண்ட கால சுதந்திரத்தை முன்னிட்டு இடைக்கால ஆதிக்கத்தை அனுமதித்த ராஜதந்திரிகள் உண்டு. டைபீரியஸ் தமிழகம் வந்தபோது தமிழகம் இருங்கோவேள் என்ற வஞ்சகன் கையிலும், அவனுக்குத் துணை நின்ற சேர, பாண்டிய மன்னர்கள் கைகளிலும் சிக்கி நின்றது. சோழ அரியணையின் உண்மை மன்னன் மறைந்து உறைந்த காலம் அது. பூம்புகார் செல்வம் நிரம்பிய துறைமுக நகரம். அது மாற்றார் கையில் விழுந்தால், பிறகு சோழநாடு சோழர் கைகளில் சிக்குவது பகற்கனவாக முடியும். ஆகவே சோழ நாட்டின் வாயில் போன்ற புகாரைப் பாதுகாக்க, இடைக் காலத்துக்கு மட்டுமாவது பலமான ஒரு கரம் தேவையா யிருந்தது. சமயத்தில் டைபீரியஸ் வந்தார். நாட்டுப்பற்றுடைய பலர் அவருடன் சேர்ந்தோம்…” என்று கூறிக் கொண்டே போன இளஞ்செழியனை இடைமறித்த யவன ராஜகுமாரன், “மறைந்துறையும் உங்கள் உண்மை மன்னன் படை திரட்டி வெளிவந்தால்?” என்று வினவினான்.

“சொல்கிறேன் இளவரசே. ஆனால் உண்மையைச் சகிக்க முடியுமா உங்களால்?” என்று கேட்டான் படைத் தலைவன்.

“முடியும் சொல்லுங்கள்.”

“டைபீரியஸுக்கு எதிராகத் திரும்பி, புகாரை யவனர் பிடியிலிருந்து விடுவித்திருப்போம்.”

இதைக் கேட்ட யவன ராஜகுமாரன் இரண்டே அடியில் இளஞ்செழியனை அடைந்து, அவனது இரு கைகளையும் ஆதரவாகப் பிடித்துக்கொண்டு, “நாட்டுப் பற்றுடையவன் பேசும் முறையில் பேசினீர்கள். அதற்காக உங்களை மதிக்கிறேன். ஆமாம், உங்கள் பெயர்…?” என்று கேட்டான்.

“ஏன், அலீமாவோ மருத்துவனோ கூறவில்லையா?”

“இல்லை. இன்றுதானே நான் வந்தேன் – எங்கள் நாட்டிலிருந்து.”

இதைக்கேட்ட இளஞ்செழியன் பல விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டான். மருத்துவனோ அலீமாவோ தன்னைப் பற்றி அதிகம் ஏதும் கூறவில்லையென்பது ஒன்று. மருத்துவன் வந்த கப்பல் அடுலீஸை அடைந்ததற்கும் தான் அடுலீஸை அடைவதற்கும் பல நாட்கள் வித்தியாசமிருந்த போதிலும் தமிழ் நாட்டிலிருந்து வேறு கப்பல்கள் வர நாளாகவில்லையென்பது இரண்டு. ஆகவே யவன இளவரசனுக்குத் தன்னைப் பற்றியோ தமிழகத்தைப் பற்றியோ முழுத்தகவல் அதுவரை கிடைக்க நியாயமில்லையென்பது மூன்று. இப்படி அலசிப் பார்த்து முடிவுக்கு வந்த படைத் தலைவன், பல காரணங்களை முன்னிட்டுத் தன் பெயரை மாற்றி, “என் பெயர் அமரன்” என்றான்.

“அமரன் என்றால் தேவபுருஷன் என்றல்லவா பொருள்?” என்று சொல்லி நகைத்த யவன ராஜகுமாரன், “தமிழக வீரரே! நீங்கள் தமிழகம் திரும்ப உதவி கேட்பதாக யவன மருத்துவர் கூறினார். அதற்குப் பொருள் பெற அடுலீஸில் வழி ஒன்றுதான். ரதப்போட்டியில் வெற்றி பெற வேண்டும்” என்றான்.

“அலீமா, மருத்துவர் இருவருமே இதைத்தான் கூறினார்கள்” என்றான் இளஞ்செழியன்.
“ரதம் விடுவதில் வல்லவரா நீங்கள்? இங்கு புரவிகளை வாயு வேகத்தில் செலுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்களே?” என்றான் யவன ராஜகுமாரன்.

“மனோ வேகத்தில் செலுத்த என்னால் முடியும்” என்றான் இளஞ்செழியன்.

“நாளை முதல் பயிற்சி ஆரம்பிப்போம். இன்னும் ரதப் போட்டிக்கு நாட்கள் பத்து இருக்கின்றன. அதுவரை நீங்கள் இந்த மாளிகையிலேயே தங்கலாம்” என்றான் யவன ராஜகுமாரன்.

அடுத்த நாள் முதல் இளஞ்செழியனுக்கு அந்த மாளிகை யில் அரச உபசாரம் நடந்தது. அன்றிரவே அலீமாவையும் யவன மருத்துவனையும் தனது அறைக்கு அழைத்த இளஞ்செழியன், தனக்கும் யவன ராஜகுமாரனுக்கும் நடந்த சம்பாஷணையை விளக்கினான். தான் மாற்றுப்பெயர் கொண்டிருப்பதை மறக்காதிருக்கும்படியும் தன் உண்மைப் பெயரைச் சொல்லி அழைக்காதிருக்கும்படியும் எச்சரித்தான். அவன் செய்த எச்சரிக்கையை அனுசரித்து அலீமாவும் யவன மருத்துவனும் நடந்துகொண்டபடியாலும், மருத்துவன் மரக்கலம் வந்த பிறகு வேறு யவன மரக்கலங்கள் எதுவுமே தமிழகத்திலிருந்து வராததாலும், வந்த யவன மருத்துவன் மரக்கலத்தலைவனுக்கும் இளஞ்செழியனைப் பற்றிய விவரங்களை டைபீரியஸ் கூறாததாலும் இளஞ்செழியனைப் பற்றிய முழு உண்மை யவன ராஜகுமாரனுக்குத் தெரிய சந்தர்ப்பமே யில்லாது போயிற்று. தவிர, குதிரைகளிடம் உயிரை வைத்திருந்த அக்கிலீஸ், தமிழகத்தின் ‘அமரன்’ அவற்றைப்பற்றிக் காட்டிய அறிவைக் கண்டு பெரிதும் வியந்த தன்றி, அது காரணமாகவே அவனிடம் இணையற்ற மதிப்பை யும் கொண்டான். குதிரைச் சாலையில் புரவிகளை நோக்கிக் கண்களை ஓட்டிய இளஞ்செழியன், பார்ப்பதற்குத் திடமாயி ருந்த புரவிகளை விலக்கி இளைத்தவை போலிருந்த இரண்டு வெண் புரவிகளைத் தனக்குத் தேர்ந்தெடுத்ததைக் கண்டதும் பிரமித்துப்போன இளவரசன், “இவற்றை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று வினவினான்.

“இவற்றின் உடல்களில் வளைவுகள் நிரம்ப இருக் கின்றன. கால் நரம்புகள் அனாவசியச் சதைகளால் கொழுப்புக் கொள்ளவில்லை. தவிர நடு முகத்திலிருக்கும் சுழிகள் புரவிகள் அதி உன்னத அரபுச் சாதி என்பதை நிரூபிக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான் படைத் தலைவன்.

இதைக் கேட்ட யவன ராஜகுமாரன் அன்றுமுதல் சதா சர்வகாலமும் இளஞ்செழியனுடனேயே இருந்து வந்தான். அரண்மனைத் தோட்டத்திலேயே இருவரும் ரதங்களில் புரவி களைப் பிணைத்து ஓட்டிப் பழகினார்கள். நாலைந்து நாட்களுக்குள்ளாகவே இணைபிரியாச் சகோதரர்களாகி விட்ட அந்த இருவரையும் கண்ட அரண்மனை ஊழியர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு தமிழன் இத்தனை தூரம் தங்கள் இளவரசனை மயக்கமுடியு மென்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்படி ஊறிவிட்ட நேசத்தின் விளைவாக இளவரசனுக்குக் கிடைத்த ராஜோபசாரம் இளஞ்செழியனுக்கும் கிடைத்தது.

ஆனால் அத்தனை உபசாரத்தினாலும் இளஞ்செழியன் மனம் மட்டும் வேதனையில் ஆழ்ந்து கிடந்தது. தாய்நாடு எந்தக் கதிக்கு உள்ளாகியிருக்கிறதோ என்ற நினைப்பினால், அவன் சரியாக உணவருந்தவோ உறங்கவோ முடியாமல் புழு வென இரவும் பகலும் உள்ளூரத் துடித்துக் கொண்டிருந்தான்.

ரதப் போட்டி தினத்துக்கு நாலைந்து நாட்களுக்கு முன்பாகவே அடுலீஸ் அமளிப்பட்டது. அதன் பெருவீதிகளில் பலதரப்பட்ட உடைகளை அணிந்த ரோமரும், கிரேக்கரும், அராபியரும், எகிப்தியரும், எதியோப்பியரும் தங்கள் பெருரதங்களை வாயுவேகத்தில் ஓட்டி வீதிகளையே போட்டி அரங்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். போட்டி ஏற்படுவதற்கு நாலைந்து தினங்களுக்கு முன்பாக அடுலீஸ் நகரம் ஜனநெரிசலாலும் பந்தயம் கட்டும் வர்த்தகர் கூட்டத்தாலும் தத்தளித்தது. அத்தனை தத்தளிப்பிலும் எங்கும் ஆரவாரமும் வீரகோஷங்களும் பந்தயம் யார்மீது கட்டுவதென்பதைப் பற்றிய போட்டிக் கூச்சலும் நகரத்தை நிறைத்துக் கொண்டிருந்தன.

அந்தக் கோலாகலத்தில் யவன ராஜகுமாரன் மாளிகையும் பங்கு கொண்டது. பந்தயப் பேச்சு அன்றி வேறு பேச்சு எதுவுமே காதில் விழாத அந்த இரவுகளில், பந்தயத்துக்கு முந்திய நாளிரவு இளஞ்செழியன் செவிகளில் மட்டும் வேறு பேச்சு விழுந்தது. அந்தப் பேச்சுமட்டும் அவன் காதில் விழாதிருந்தால் அவன் கதையின் போக்கு மட்டுமல்ல, அவனுடன் சம்பந்தப்பட்ட மற்ற பலருடைய கதைகளும் வேறு திசையில் திரும்பியிருக்கும். அந்த முந்திய நாளிரவு தூக்கம் அடியோடு வராமையால், இளஞ்செழியன் மாளிகையின் நந்தவனத்தில் மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கையில் யாரோ இருவர் பின்னால் வரும் சத்தம் கேட்கவே, சட்டென்று பக்கத்திலிருந்த புரவிக்கூடத்தின் தூணொன்றில் மறைந்து நின்றான். பின்னால் வந்தவர்களும் புரவிக் கூடத்துக்குள்தான் நுழைந்தார்கள். நுழைந்ததும் பேசவும் முற்பட்டார்கள். ஒருவன் குரல் இளஞ்செழியனுக்குப் பழக்கமானதாக இல்லையெனினும், இன்னொருவன் குரல் யவன மருத்துவன் குரலெனத் திட்டமாகத் தெரிந்தது. யவன மருத்துவன் கூறிய சில வார்த்தைகளிலிருந்து அவன் எத்தகைய சதியைச் செய்துவிட்டானென்பதை அறிந்த இளஞ்செழியன் இதயம், அலைகடலென எழுந்து மோதி அவன் உள்ளத்தே பெரும் கிளர்ச்சியை எழுப்பி அவன் உணர்ச்சிகளைப் பலதிசைகளில் புரட்டத் தொடங்கியது. ஒரு சிறு காரியத்தால் தான் தமிழகம் செல்வதை அடியோடு ஒழித்த தன்றி, தன்னை யவனராஜகுமாரனின் பழிக்கும் ஆளாக்க யவன மருத்துவன் ஏற்பாடு செய்துவிட்டதை அறிந்த இளஞ்செழியன் நிதானம் காற்றில் பறந்ததன்றி கோபமும் தலைக் கேறியது. “புரவியின் இடதுகாலில் பச்சிலையைத் தடவியிருக்கிறேன். முதலில் நொண்டாது. பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் சற்று நொண்டும். மூன்றாவது சுற்றில் கால் இருமுறை மக்களித்து, சரேலென்று விழுந்துவிடும். அத்துடன் இந்தத் தமிழன் வாழ்வும் முடிந்துவிடும். சந்தேகமே வேண்டாம். பந்தயத்தில் தோற்றதற்காகவும், சப்பை குதிரைகளைப் பொறுக்கியதற்காகவும் இளவரசர் தமிழனைச் சிங்கங்களுக்குத் தீனியாகப் போடுவார்…அவன் தசைகளைச் சிங்கங்கள் கிழித்துப் புசித்து எலும்புகளையும் நரநரவெனக் கடிக்கும் காட்சியை நாமிருவரும் காணப் போகிறோம்!” என்று கூறிய யவன மருத்துவன், மகிழ்ச்சி மிகுதியால் சற்று இரைந்தே நகைத்தான்.

Previous articleYavana Rani Part 2 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here