Home Sandilyan Yavana Rani Part 2 Ch2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

66
0
Yavana Rani Part 2 Ch2 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch2 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 2 கொள்ளைத் தலைவன் அறையில் …?

Yavana Rani Part 2 Ch2 | Yavana Rani | TamilNovel.in

செங்கடல் கலப்பதன் காரணமாக எரித்திரியக் (சிவப்புக்) கடலென்று யவனர்களாலும், முத்துக்களும் மற்றும் விலைமதிக்க முடியாத ஆபரணக் கற்கள் கிடைத்து வந்ததன் விளைவாக ரத்னாகரமென்று பாரத நாட்டவராலும் அழைக்கப்பட்டு வந்த மேற்கு சமுத்திரத்தின் நடுவே ஓடி.க் கொண்டிருந்த அந்தக் கொள்ளைக் கப்பலில், விவரிக்க முடியாத விபரீதக் காற்றுச் சப்தங்கள் மட்டுமே நிறைந்ததால் மிகப் பயங்கரமாகத் தெரிந்த அந்த நடு நிசியில், மரக்கலத்தின் பக்கப் பலகையில் சாயந்துகொண்டே ஹிப்பலாஸ் சொன்ன ரகசியத்தைக் கேட்டதும், ஆச்சரியமும் ஆத்திரமும் ஒருங்கே அடைந்த இளஞ்செழியன் மனம் மீண்டும் தமிழகத்தை நோக்கிக் கப்பலுக்கு நேர் எதிர்த் திக்கில் ஓட ஆரம்பிக்கவே, படைத் தலைவனிடமிருந்து உள்ளக் குமுறலைக் குறிக்கும் பெருமூச்சொன்று வெளிவந்தது. உள்ளத்தே அத்தனை குமுறல் இருந்ததால்தான் என்றும் தடைப்படாத அவன் நாவும் தடைப்பட்டு, சொல்ல முயன்ற சொற்களைச் சொல்லத் திராணியில்லாது, ‘ஆகவே’ என்ற ஒற்றைச் சொல்லுடன் நிறுத்திவிட்டது. நாவு தடைப்பட்டாலும் புத்தி தடைப்படாததன் விளைவாக படைத் தலைவன் புத்தி, ‘இந்த ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பது எப்படி?’ என்ற நினைப்பில் நினைக்க ஆரம்பித்ததன்றி அதற்கான மார்க்கங்களை வகுக்கவும் தொடங்கியது. இப்படித் தன் மனம் சொந்த நாட்டின் பக்கம் இழுபடத் தொடங்கியதும், ‘நாமோ கொள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். அது மட்டுமா? பிற நாடு நோக்கியும் ஓடுகிறோம். இந்த நிலையில் தமிழகத்தைக் காக்கத் திட்டம் வகுக்கிறோமே. இது விந்தைதான்’ என்று சில வினாடிகள் தன்னைத்தானே, உள்ளூரக் கேலி செய்துகொண்ட சோழர் படை உபதலைவன், ‘தமிழகத்தைக் காக்கவேண்டியது முக்கியம். அதற்கு நான் அங்கு செல்ல வேண்டியதும் முக்கியம். அதற்காகத் திட்டங்களை வகுப்பதுதான் நியாயம். அதில் கஷ்டங்கள் எத்தனையிருந்தாலும் சமாளிக்க வேண்டியதும் என் கடமை’ என்று தனக்குத் தானே கட்டளையும் இட்டுக் கொண்டதால் ஹிப்பலாஸ் சொன்ன செய்தியைப் பற்றி மீண்டும் விவாதிக்க வும் தொடங்கி, “அப்படியானால் ஹிப்பலாஸ், இந்தக் கொள்ளைத் தலைவனுக்கு டைபீரியஸை நன்றாகத் தெரியு மென்றா சொல்லுகிறாய். இது விந்தையாயில்லையா?” என்று கேட்டான்.

“இதில் விந்தை ஏதுமில்லை பிரபு! யவனர் கடற்படைத் தலைவனை அறியாதவர்கள் யவன நாட்டில் யாருமே இல்லை” என்று மெள்ளப் பதில் சொன்னான் ஹிப்பலாஸ்.

“யவன நாட்டில் எல்லோரும் அறிந்திருப்பது இயற்கை ஹிப்பலாஸ். ஆனால் இந்த எரித்திரியக் கடல் பிராந்தியத்தில் எகிப்து நாட்டிலுள்ள எல்லோருக்கும் எப்படித் தெரியும்? கொள்ளைத் தலைவனிடமிருப்பவர்கள் ஒன்று எகிப்தியர் அல்லது அராபியர். இவர்கள் டைபீரியஸை எப்படி அறிந்திருக்க முடியும்?” என்று சந்தேகத்துடன் மீண்டும் ஒரு கேள்வியைத் தொடுத்தான் படைத்தலைவன்.

“பிரபு! எகிப்தின் சரித்திரம் தெரியாததால் நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். எகிப்தில் மூன்று பேரரசுகள் எழுந்திருக்கின்றன. முதலில் அங்கு எகிப்தியப் பேரரசு இருந்தது. பிறகு அலெக்ஸாண்டரின் யுகம் துவங்கியது. அலெக்ஸாண்டரைப் பற்றித்தான் நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்களே…” என்று பழைய வரலாற்றில் புகுந்த ஹிப்பலாஸ் தீர்க்காலோசனையில் ஆழ்ந்தான்.

ஹிப்பலாஸின் பேச்சு இளஞ்செழியனுக்கும் விசித்திரமாயிருந்தது. ‘நாமிருக்கும் நிலைக்கும் எப்பொழுதோ மாண்டுபோன அலெக்ஸாண்டருக்கும் என்ன சம்பந்தம்?” என்று உள்ளூர யோசித்துக் கொண்டானானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “ஆமாம் ஹிப்பலாஸ்! அலெக்ஸாண்டர் என்ற யவன மன்னனைப் பற்றி பாரத நாடு முழுவதும் அறியும். பாரத நாட்டுக்கே அவன் படையெடுத்து வந்து வடநாட்டு மன்னன் ஒருவனையும் வெற்றி கொண்டான். அது பழங்கதை அல்லவா?” என்றான்.

ஹிப்பலாஸ், “ஆமாம்; பழங்கதைதான் பிரபு! ஆனால் பழங்கதைகள் எப்படிப் புது வாழ்வைப் பாதிக்கின்றன பாருங்கள். அலெக்ஸாண்டரின் காலத்திலேயே வலுத்த கிரேக்கர்களின் ஆதிக்கம் அவர் காலத்துக்குப் பின்பு இன்னும் வலுவடைந்தது. எகிப்தில் எகிப்தியர் ஆதிக்கம் குலைந்தது. லாகஸ் என்பவன் மகனான தாலமே என்பவன் அலெக்ஸாண்டர் பெயரால் அலெக்ஸாண்ட்ரியா என்ற பட்டணத்தை அமைத்து யவன அரசு ஒன்றையும் எகிப்தில் நிறுவினான். எகிப்தில் எகிப்தியர் அடிமைகளாயினர். கிரேக்கர்கள் பெரும் பட்டணங்களை நிறுவினார்கள். கிரேக்க ரதங்கள் எகிப்து முழுவதுமே பறக்கத் தொடங்கின. கிரேக்கர் கள் பெரும்பான்மையாக எகிப்தில் வாழத் தொடங்கினர். கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே எகிப்து ஆயிற்று. அதன் விளைவாகத்தான் எகிப்துக்கும் தமிழகத்துக்கும் வர்த்தகம் ஏற்பட்டது,” என்று சற்று நிறுத்தினான்.
“எகிப்து கிரேக்க நாட்டின் பகுதியானதற்கும் தமிழகத்துடன் வர்த்தகம் துவங்கியதற்கும் என்ன சம்பந்தம் ஹிப்பலாஸ்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“சம்பந்தம் நிரம்ப இருக்கிறது படைத் தலைவரே! எரித்திரியக் கடல் பிராந்தியத்தை ஆராய்ந்து யவனர் வர்த்தகத்தைக் கிழக்கு நாடுகள் வரை விஸ்தரிக்க முதன் முதலில் முயன்றவன் தாலமே என்ற யவன அரசன்தான். அன்று அவன் ஆரம்பித்து வைத்த பணியைத்தான் பிற்கால தாலமே வம்ச அரசர்கள் தொடர்ந்தார்கள். கிறிஸ்து அவதாரம் செய்வதற்கு முன்னூறு வருஷங்களுக்கு முன்பு நடந்த கதை இது. கிறிஸ்து பிறப்பதற்கு நூறு வருஷங்கள் முன்பாக க்ஷணித்துவிட்ட தாலமேயின் பேரரசு கடைசி நாட்களிலும் தமிழகத்துக்குக் கப்பல் வழியைத் தேடியது. தேடி ஒரு பாதையையும் வகுத்தது. பிறகு எகிப்தில் கிரேக்கப் பேரரசு மறைந்து ரோமப் பேரரசு தலையெடுத்தது. இப்படி எகிப்து, கிரேக்க, ரோமப் பேரரசுகள் மாறி மாறி எழுந்து கிழக்கு நாட்டு வர்த்தகத்தில் சிரத்தை காட்டியதாலும், கிரேக்கப் பேரரசின் பிரதான முயற்சியாலும் கிரேக்க மாலுமியான ஹிப்பலாஸ் என்ற யவனனின் துணிகரச் செயலாலுமே இன்று தமிழகத்துக்கும் எகிப்துக்கும் எரித்திரியக் கடலில் கப்பல் பாதை வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் கிரேக்கர்களைப் பற்றிய விவரங்களை எரித்திரியக் கடற்பகுதிகளில் திரியும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆகவே மாபெரும் யவன கடற்படைத் தலைவனான டைபீரியஸைப் பற்றி அந்தக் கொள்ளைத் தலைவன் அறிந்திருப்பதில் வியப்பில்லை. உங்கள் அழிவில் டைபீரியஸுக்கு அக்கறையிருக்கிறது என்பதை அறிந்ததால், இவன் மீண்டும் உங்களைத் தமிழகம் கொண்டு செல்ல எண்ணுவதிலும் ஆச்சரியமில்லை. டைபீரியஸ் பணத்தை அள்ளி வீசக் கூடியவனென்பதை அனைவரும் அறிவார்கள்” என்று விளக்கினான் ஹிப்பலாஸ்.

“என் அழிவை டைபீரியஸ் நாடுகிறானென்பதை அத்தனை திட்டமாக இவன் அறிவானா?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“கொள்ளைக் கப்பல்கள் தமிழகத்தின் மேற்குக் கரையிலுள்ள விஜய துர்க்கத்தில் தங்குவது உங்களுக்குத் தெரியுமல்லவா?”

“தெரியும். விஜய துர்க்கத்தைத்தான் யவனர்கள் பைஸாண்டியம் என்று அழைக்கிறார்கள். அங்கு இப்பொழுது யவனர்கள் வசிக்கிறார்கள்.”

“அந்த ஊர் வரையில் சேரமன்னன் பறையறிவித்திருக் கிறானாம், உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு இருபதினாயிரம் பொற்காசுகள் தருவதாக.”

“அப்படியா சொன்னான் இந்தக் கொள்ளைத் தலைவன்?”

“ஆமாம் பிரபு! நான்தான் ஒட்டுக் கேட்டேனே. நீங்கள் சேர நாட்டின் சமண விஹாரத்திலிருந்து தப்பியதுமே இருங்கோவேள் உங்களை உறையூரில் சிறைபெடுக்க முயன்றான். அதுவும் முடியாமற் போகவே உங்களைப் பிடித்துக் கொடுப்போருக்கு இருபதினாயிரம் பொற்காசுகள் அளிப்பதாகப் பறையறிவிக்கச் செய்திருக்கிறான். இதற்கு டைபீரியஸும் உடந்தையாயிருக்கிறான்.”

“அப்படியா?”

“ஆமாம். தங்களை டைபீரியஸ் சிறைபிடித்து அனுப்பிய யவனர் கப்பல் மேற்குக் கரைக்கு வர ஒரு வாரம் ஆகுமென்பது டைபீரியஸுக்குத் தெரியும். ஒருவேளை நீங்கள் அந்தக் கப்பலிலிருந்து தப்பினாலும் தன் கையிலிருந்து தப்பக் கூடாது என்பதற்காகவே டைபீரியஸும் சேர மன்னனுக்குச் செய்தியனுப்பியிருக்கிறான். இருங்கோவேளின் வேண்டு கோளும் அத்துடன் சேர்ந்து கொண்டது.”

இதைக் கேட்ட இளஞ்செழியன் மெல்ல ஹிப்ப லாஸுக்கு மட்டும் கேட்கும்படி நகைத்து, “ஹிப்பலாஸ்! ஒரு தனி மனிதனைப் பிடிக்க எத்தனை அரசர்கள்? எத்தனை கொள்ளைக்காரர்கள்? உண்மையில் கொள்ளைத் தலைவன் நினைப்பதுபோல் என் மதிப்புக் குறையவில்லை. உயர்ந்து தானிருக்கிறது” என்றான்.

படைத் தலைவனிடமிருந்து எழுந்த ஏளனச் சிரிப்பையும் வார்த்தைகளையும் கவனித்த ஹிப்பலாஸ் அத்தனை ஆபத்தான சூழ்நிலையிலும் ஹாஸ்ய உணர்ச்சியைக் காட்டும் படைத்தலைவனுக்குத் தான் எவ்விதத்திலும் சளைக்கக்கூடாது என்று, “கொள்ளைக்காரனுக்கு உங்கள் மதிப்பு தெரியாதே தவிர அடிமை வர்த்தகனுக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டு வைத்தான்.

“அடிமை வர்த்தகனுக்கா?” ஆச்சரியத்துடன் வினவினான் படைத்தலைவன்.

“ஆம் படைத் தலைவரே! உங்கள் உடல் வாளிப்பையும் அழகையும் பார்த்தால் யவன நாட்டு அழகிகள் உங்களை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள் என்று அடிமை வர்த்தகன் சொல்லவில்லையா?” என்று கேட்டு வறண்ட குரலில் சிறிது சிரிப்பையும் உதிரவிட்டான் ஹிப்பலாஸ்.

தன்னைப் பற்றிப் பலர் பலவிதமாகப் போட்ட மதிப்பை எண்ணிய இளஞ்செழியனும் இளநகை பூத்தானானாலும் திரும்பப் பழைய கதைக்கே திரும்பி, “ஹிப்பலாஸ்! என் பெயர் தமிழகத்தின் மேற்குத் துறைமுகங்களில் நன்றாகப் பிரபல்யமாக்கப்பட்டிருக்கிறது. நானிருக்கும்வரை புகாரில் யவனர் அரசை நிறுவ முடியாது என்று நினைக்கும் டைபீரியஸ் என்னை யவனர் கப்பலில் ஏற்றினான். விஷம் வைத்துக் கொல்ல யவன மருத்துவனை ஏவினான். அதற்கும் தப்பினால் எப்படியும் என்னை ஒழித்துவிட வேண்டுமென்ற உறுதியுடன் சேரமானைக் கொண்டு மரக்கலம் தங்கும் துறைமுகங்களில் பறையும் அறிவித்திருக்கிறான். கொள்ளைத்தலைவன் பேச்சிலிருந்து, பறையறிவித்துள்ள விஷயம் மட்டுமல்ல! அதில் டைபீரியஸுக்குள்ள அக்கறையும் தெளிவாகிறது. இருங்கோவேளும் சேரமானும்கூட டைபீரியஸ் சொற்படி கேட்கிறார்கள் என்பதும் புலனாகிறது. புகாரில் யவனர் பிடி வலுப்பட்டிருக்கும். நான் சீக்கிரம் நாடு திரும்ப வேண்டும் ஹிப்பலாஸ்! என் நாடு வெளிநாட்டார் பிடியில் அகப்பட்டுத் தத்தளிக்கிறது. அந்தப் பிடி இறுகு முன்பு நான் திரும்பியே ஆகவேண்டும். இல்லையேல் என் இதயம் வெடித்துவிடும்” என்று உணர்ச்சி ததும்பும் குரலில் பேசிய இளஞ்செழியன் நீண்ட நேரம் மௌனம் சாதித்தான். பிறகு எதையோ நினைத்துக் கொண்டு, “ஹிப்பலாஸ்” என்று அழைத்தான்.

“என்ன படைத் தலைவரே!”

“இந்தக் கப்பலுக்கு முப்பது துடுப்புகள் இருக்கின்றன. பார்வைக்கு கிரேக்கர் கப்பல்போல் இருக்கிறது.”

“ஆம் பிரபு. இது கிரேக்கர் கப்பல்தான். இந்தக் கொள்ளைக்காரன் பிடித்திருக்கிறான்.”

“இதை இவன் எப்படி எகிப்தில் யவனர் இருக்கு மிடத்தில் கொண்டு செல்வான்?”

இந்தக் கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் சொல்ல இயலாது போகவே சற்று விவரித்தே பதில் சொன்னான் ஹிப்பலாஸ். “பிரபு! எகிப்தின் நிலையை இப்பொழுதானே விளக்கினேன். மூன்று பேரரசுகள் எழுந்து தாழ்ந்த நாடு எகிப்து. அங்கு இப்பொழுது எகிப்தியர், கிரேக்கர், ரோமர் அனைவரும் இருக்கிறார்கள். முதன் முதலாக எகிப்தில் கிரேக்க அரசை நிறுவிய தாலமேயின் பெயரால் நிர் மாணிக்கப்பட்ட தாலமே என்ற துறைமுகப் பட்டினத்திலும், அதற்கு மேலுள்ள பெரினிஸ் என்ற துறைமுகப் பட்டினத்திலும், அதற்குக் கீழே மூவாயிரம் *ஸ்டேடியா அளவிலுள்ள அடுலீஸ் என்ற துறைமுகப் பட்டினத்திலும், ரோமரும் கிரேக்கரும் கொண்ட யவனர்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள். அந்தப் பட்டினங்களுக்கு இந்த மரக்கலம் போக முடியாது. கொள்ளைக்காரர்கள் நம்மை எகிப்தில் செங்கடல் ஓரமாக உள்ள கார்டாபி வளைகுடா முனையில் உள்ள திருடர்களிடம் விற்று விடுவார்கள். – சே சே, நம்மை என்று சொல்கிறேனே, நீங்கள் தான் தமிழகம் போகப் போகிறீர்களே என்னை விற்றுவிடுவார்கள். திருடர்கள் எங்களை எகிப்து வர்த்தகரிடம் விற்பார்கள். அவர்கள் எங்களை அடுலீஸ், தாலமே முதலிய பட்டினங்களுக்குக் கொண்டு போய் சேரிகளில் ஏலம் போடுவார்கள்.” என்று சொல்லிக் கொண்டே போனவனை, “இரு இரு ஹிப்பலாஸ்” என்று நிறுத்திய இளஞ்செழியன், “கார்டாபி முனைக்குச் செல்ல எத்தனை நாளாகும்?” என்று வினவினான்.

எதற்காக அதைக் கேட்கிறான் படைத் தலைவன் என்பதை அறியாமல் சிறிது குழம்பிய ஹிப்பலாஸ் “காற்று இப்படியே இருந்தால் இன்னும் பதினைந்து நாட்களாகும்” என்றான்.

“பதினைந்து நாட்கள் இருக்கின்றன. நல்லது.- நல்லது” என்று சொல்லிக் கொண்டே இளஞ்செழியன், “ஹிப்பலாஸ்! இந்த மரக்கலத்தில் அடிமைக் கப்பலிலிருந்து பெறப்பட்ட அடிமை வர்த்தகர்கள் எத்தனை பேரிருக்கிறார்கள்?” என்று வினவினான்.

“திடசாலிகள் ஐம்பது பேர். அத்தனை பேரும் இரும்புத் தளைகளில் பிணைப்பட்டுக் கிடக்கிறார்கள்” என்றான் ஹிப்பலாஸ்.

“கொள்ளைக்காரர்கள் எத்தனை பேர்?”

“சுமார் இருநூறு பேர்.”

“கீழே துடுப்புத் தள்ளும் அடிமைகள்?”

“ஏற்கெனவே இருப்பவர் இருபது பேர். இப்பொழுது நாங்கள் பத்துப்பேர். மொத்தம் முப்பத்து.”
இளஞ்செழியன் நீண்டநேரம் ஏதோ யோசித்தான். அவன் கண்கள் மயக்கமுற்றவைபோல் காணப்பட்டன. முகமும் புகாரில் மங்குவதுபோல் சிறிது மங்கியது. மீண்டும் சில வினாடிகளில் சுயநிலை அடைந்த இளஞ்செழியன், “இரு, இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கொள்ளைத் தலைவன் அறையை நோக்கி விடுவிடுவென்று நடந்தான். “வேண்டாம் படைத் தலைவரே! வேண்டாம். அந்த முயற்சி வேண்டாம்! நாமெல்லோரும் கொல்லப்படுவோம்” என்று ஹிப்பலாஸ் கூவியதைக் காதில் சிறிதும் வாங்கிக்கொள்ளாமலே கொள்ளைத் தலைவன் அறையை வேகமாக அடைந்த படைத்தலைவன், அறைக் கதவை நிதானமாகத் திறந்து உள்ளே நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். அடுத்த வினாடி கொள்ளைத் தலைவன் அறையில் ஏதோ சத்தம் கேட்டதையும் அறை விளக்கு பட்டென்று அணைந்து விட்டதையும் கண்ட ஹிப்பலாஸ் அச்சத்தால் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அணைந்த விளக்கு மீண்டும் ஏற்றப்படவே இல்லை. அறைக்குள் முதலில் எழுந்த சத்தமும் மெள்ள மெள்ள அடங்கிவிட்டது. ஹிப்பலாஸின் திகில் உச்சஸ்தாயிக்குப் போய்க்கொண்டிருந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here