Home Sandilyan Yavana Rani Part 2 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

127
0
Yavana Rani Part 2 Ch21 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch21 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 21 தந்தையும் மகளும்

Yavana Rani Part 2 Ch21 | Yavana Rani | TamilNovel.in

இரண்டு மாத காலமாக ஏற்பட்ட இடைக்கால அமைதியின் காரணமாக ஏதேதோ ஆபத்துக்களைக் கற்பனை செய்து பெரும் குழப்பத்துக்குள்ளாகியிருந்த பூவழகியும், அவள் விவரித்துச் சொன்ன ஆபத்துக்களின் விளைவுகளை எண்ணிப் பார்த்ததால் விவரிக்க இயலாத துக்கத்துக்குள்ளான இன்பவல்லியும், வாயிற்புறத்தில் எதிர் பாராவிதமாக எழுந்த அழைப்பைக் கேட்டதும், அதுவரை அவர்களை ஆட்டி வதைத்த உணர்ச்சிகளை உதறித் தள்ளிவிட்டு ஒருவரை யொருவர் சற்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்களா னாலும், வெளியே எழுந்த குரலின் ஒலி இருவர் இதயத்திலும் மாறுபட்ட எண்ணங்களையே சிருஷ்டித்தது. “பூவழகி, பூவழகி!” என்று வாயிலிலிருந்து எழுந்த குரல் மாரப்பவேளின் குரலென்பதை, கேட்டதுமே இருவரும் புரிந்து கொண்டார் களானாலும், இரண்டு மாத காலமாக மாளிகைப் பக்கம் எட்டிப் பார்க்காத அந்த வேள்மாண் திடீரென்று அன்று வரும் காரணம் யாதாயிருக்கக்கூடும் என்பதில் தலைவியும் தோழியும் மாறுபட்ட கருத்தையே கொண்டார்கள். அந்த இரண்டு மாத காலத்தில் மாரப்பவேள் தனது மகளைச் சிறை மீட்கத் தீவிர முயற்சி செய்திருக்க வேண்டுமென்றும், அந்த முயற்சியில் வெற்றி கண்ட காரணத்தாலேயே அவர் அன்று திடீரென வந்திருக்கிறாரென்றும் நினைத்த இன்பவல்லி தன் தலைவிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதென்றும், இனி அந்த மாளிகையை விட்டுப் புறப்பட வேண்டியதுதானென்றும் முடிவு கட்டினாள். ஆனால் விஷயங்களை நன்றாக அலசும் திறன் வாய்ந்த பூவழகியின் இதயத்தில் மட்டும் அத்தகைய நம்பிக்கை எதுவும் உதயமாகவில்லை. தான் சுதந்திரமாயிருந்தும், ஆறு மாத காலம் மற்றொருவன் சிறையில் மகளை விட்டுவைத்து வாளாவிருந்த தந்தைக்குத் தன்னை விடுவிக்க வேண்டுமென்று திடீரென ஞானோதயம் வருவதில் அர்த்தமில்லையென்றும், அவருடைய வருகைக்கு வேறு முக்கிய காரணங்கள் இருக்கவேண்டுமென்றும் அவள் திட்ட மாக நம்பினாள். முதல் நான்கு மாதங்களில் மாரப்பவேள் தன் மகளை அடிக்கடி வந்து பார்த்து அவளிருப்பது சிறையல்ல வென்றும், அவள் நன்மையை முன்னிட்டே இருங்கோவேள் அவளை அங்கு வைத்திருப்பதாகவும் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். சென்ற இரண்டு மாதங்களில் அந்தத் தைரியத்தைச் சொல்லக்கூட அவர் வராததைக் கண்ட பூவழகி, ஒன்று அவர் இருங்கோவேளின் ராஜதந்திர வலைக்குள் பூரணமாகச் சிக்கியிருக்க வேண்டும் அல்லது சிறைப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். ஆனால் காரணம் இரண்டுமல்லவென்பதை அல்லி சுட்டிக் காட்டிய பின்புதான் அவள் மனம் தந்தைபால் கல்லாக முற்பட்டது. வேவு பார்க்கும் தொழிலில் பிரும்மானந்தரால் பழக்கப்பட்டிருந்த அல்லி, உறையூர் அரண்மனையில் நடந்த அத்தனை செய்திகளையும் அவ்வப்பொழுது அறிந்து வந்தாளாதலால், மாரப்பவேளும் இருங்கோவேளும் இணைபிரியாமல் இருக்கும் விவரத்தையும் சோழர்களின் அரசியல் வேளிர்கள் கைக்கு மாறவேண்டிய அவசியத்தில், இருங்கோவேளைவிட மாரப்பவேள் ஒரு படி அதிக சிரத்தை காட்டி வந்ததையும் பூவழகிக்குத் திட்டமாக எடுத்துச் சொல்லியிருந்தாள். தொடர்ச்சியாக மாரப்பவேள் எல்லைப்புற மாளிகைப் பக்கம் தலை காட்டாமலே இருந்தது அல்லி சொன்ன விவரங்களைச் சந்தேகத்துக்கு இடமின்றி ஊர்ஜிதம் செய்துவிட்டதால், தாராள சிந்தையுடைய தன் தந்தை கூட இத்தகைய பேராசைப் பிசாசுக்குப் பலியாகி விட்டாரென்று மனம் வெதும்பினாள் பூவழகி. ஆகவே தந்தையின் குரல் தைத் திங்களின் அந்தக் காலைநேரத்தில் வாயிலில் கேட்டதும், எதிர் தோப்பில் குயில்கள் கூடி இசைத்த இன்ப நாதத்துக்கு இடையூறு செய்யவந்த அபஸ்வரமாகவே அதைப் பூவழகி கருதியதால், சற்று அதிர்ச்சியும் வெறுப்பும் கலந்த உணர்ச்சிகளுடனே வாவியின் முகப்பிலிருந்து வாயிலை நோக்கினாள் அவள்.

மாரப்பவேளின் வருகையால் பெரும் நம்பிக்கை கொண்ட இன்பவல்லி மட்டும் அந்தக் குரலைக் கேட்டதுமே பேருவகை கொண்டு, “அம்மா! அம்மா! தங்கள் ” என்று சொல்லிக் கொண்டு வாவியை நோக்கி ஓடி வந்தவள், தலைவியின் முகத்தில் நன்றாகத் துளிர்விட்ட வெறுப்பின் சாயையைக் கண்டதும் சட்டென்று வாயடைத்து நின்றாள்.

தோழியின் வேகத்தையும் பரபரப்பையும் கண்ட பூவழகி, வெறுப்புக் கலந்த புன்முறுவலொன்றைத் தன் இதழ்களில் தவழவிட்டு, “ஆம், இன்பவல்லி! மாரப்பவேள் வந்திருக்கிறார். அவர் குரல்தான் அது” என்றாள்.

தந்தை என்று சொல்லாமல் பெயரைச் சொல்லி, குலப் பெயரையும் இணைத்து மரியாதையுடன் மூன்றாவது பேர் வழியைப் பற்றிக் குறிப்பிடுவதைப் போலச் சொந்தத் தந்தை பற்றிப் பூவழகி பேசியதைக் கேட்ட இன்பவல்லி ஒரு நிமிடம் திகைத்து, நின்ற இடத்திலே ஸ்தம்பித்து நின்று விட்டாளா னாலும் மறுநிமிடம் சமாளித்துக் கொண்டு, “தந்தையின் வருகை தங்கள் விடுதலைக்காக இருக்கலாம். ஏன், உங்களுக்குச் சந்தேகமாயிருக்கிறதா?” என்று வினவினாள்.

“இருங்கோவேளின் உயிர் நண்பருக்கு என் விடுதலையை வாங்குவது அத்தனை கஷ்டமா இன்பவல்லி? நீ சொல்வது போலும் இருக்கலாம். ஆனால் அத்தனை அற்ப காரியத்துக்கு என் தந்தை வரமாட்டார். எதற்கும் பார்ப்போம் வா” என்று இன்பவல்லிக்குப் பதில் கூறிய பூவழகி, மிகுந்த நிதானத்துடன் மாற்றரசன் தூதனுக்குப் பேட்டி கொடுக்கச் செல்லும் ராணிபோல மிக நிதானமாகவும் கம்பீரமாகவும் தோட்டத்துக்குக் குறுக்கே நடந்து சென்றாள். அவளைப் பின்பற்றி இன்பவல்லியும் மௌனமாகவே சென்றாள்.

மாளிகையின் தோட்டக் கதவுக்கருகில் வந்ததும் இன்ப வல்லியைத் திரும்பிப் பார்த்த பூவழகி, “இன்பவல்லி! இப்படியே நான் என் அறைக்குச் செல்கிறேன். தந்தையை நீ அழைத்து வா” என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டுத் தந்தை என்ற சொல்லை உச்சரித்தபோதும் எந்த உரிமையையோ ஆசையையோ காட்டாமலே படிகளில் ஏறி மேலே சென்றாள். மாடிக்கு வந்து தன் அறையை அடைந்ததும் பழையபடி சாளரத்தின் அருகிலிருந்த பஞ்சணையில் உட்கார்ந்து கொண்டாள். புதிதாகப் பூம்புகார் சிற்பி செதுக்கிய பதுமையெனப் பஞ்சணையில் உட்கார்ந்திருந்த நிலையில்தான் உள்ளே நுழைந்த மாரப்பவேள் தனது மகளைக் கண்டார். தனக்கும் மகளுக்கும் இடையே கிடந்த பத்து அடி தூரத்தைப் பத்து வினாடிகளில் நடந்து, அவளை அணைத்து ஆதரவு சொல்லத் துடித்து அறைவாயிற்படியைத் தாண்டிய மாரப்பவேள், தன் மகளிருந்த நிலையைக் கண்டதும் ஸ்தம்பித்து வாயிற்படிக்கருகிலேயே பல நிமிடங்கள் நின்றுவிட்டார்.

இளைத்துக் கிடந்த அவள் உடல் அவர் இதயத்தில் வேதனைக் கணைகளைப் பாய்ச்சின. வெறித்து நோக்கிய அவள் கண்கள் கூர்வேல்களாக அவர் சித்தத்தைத் தாக்கி உடைத்துத் தூளாக்கின. சோகத்தால் உள்ளேயிருந்து எழுந்த பெருமூச்சு காலாக்கினிபோல் அவர் உடலைத் தகித்தது. வேதனை மிதமிஞ்சியதால் பேசக்கூடச் சக்தியற்று நின்ற மாரப்பவேளை மகள் அழைத்த முறை, அதற்காக அவள் உதிர்த்த சொற்கள், நரகத்துக்கே இழுத்துச் சென்று அங்கே இருப்பதாகச் சொல்லப்படும் காய்ந்த இருப்புச் சலாகையில் படுக்க வைத்தன. வெறித்த பார்வையுடன் அவரை நோக்கிய பூவழகி, “இருங்கோவேளின் நண்பர் வரவை நான் எதிர் பார்க்கவில்லை. வாயிற்கதவைத் திறக்க அதனால்தான் சற்று நேரமாயிற்று” என்று சம்பிரதாய முறையில் மூன்றாவது மனிதரை வரவேற்கும் பாணியில் உபசார வார்த்தைகளை உதிர்த்தாள்.

இந்தச் சம்பிரதாய வார்த்தைகளைப் பூவழகி உதிர்த்த தாலும், தன்னைப் பார்த்ததால் எவ்வித மகிழ்ச்சியையும் அவள் காட்டாததாலும் துயரத்தால் பீடிக்கப்பட்ட மாரப்பவேள் அந்தத் துயரத்தின் குறியை முகத்திலும் காட்டி, “நான் உன் தந்தை, பூவழகி” என்று கூறினார் குரலில் வருத்தத்தின் சாயை படர.

“ஆம்” என்று சாதாரணமாகச் சொன்னாள் பூவழகி.

“அதை மறக்காதது பற்றி மகிழ்ச்சி பூவழகி” என்று துக்கத்துடனும் சற்றுக் கோபத்துடனும் கூறினார் மாரப்பவேள்.

“அதை நான் எப்படி மறக்க முடியும்?” என்று கேட்டாள் பூவழகி. இதைக் கேட்டபோது அவள் குரல் இருந்த மாதிரியைக் கவனித்த மாரப்பவேள், மகள் தன்னைப் பார்த்து நகைக்கிறாளா அல்லது கோபிக்கிறாளா என்பதை அறிய முடியாமல் திணறினாரானாலும் அதை வெளிக்குக்காட்டாமல், “அதை நீ மறக்காதது பற்றி மகிழ்ச்சி மகளே!” என்று மீண்டும் கூறி நிலைமையைச் சமாளிக்க முயன்றார்.

“நானென்ன? அதை உலகமே மறவாதே!” என்று சற்று அழுத்திப் பதில் கூறினாள் பூவழகி.

“என்ன கூறுகிறாய் பூவழகி?”

“இதில் புரியாத விஷயம் ஏதுமில்லையே. நான் உங்கள் மகள் என்பதையும் நீங்கள் என் தந்தை என்பதையும் சோழ நாடு மட்டுமே முன்பு அறியும். இப்பொழுது தமிழகம் பூராவுமே நமது உறவை அறியும். பிற்காலத்தில் உலகமே அறியும். சரித்திரத்தில் நமது இருவர் பெயரும் நிலைத்து நிற்கப் புலவர் பெருமக்கள் கவிகளைப் புனைவார்களல்லவா?”

“அப்படியென்ன செய்துவிட்டோம் நாம்?”

“என்ன செய்யவேண்டும்? இளஞ்சேட்சென்னியை வஞ்சகத்தால் கொன்று, சோழ அரசைக் கைப்பற்றிய இருங்கோவேளின் உற்ற நண்பர் நீங்கள் என்பது உலகம் அறியுமே. அவர் மகளைச் சிறை வைத்தும் அதையும் பொறுத்து எப்படியாவது இருங்கோவேளின் நட்பு கிடைத்தால் போதும் என்று அமைதியுடனிருந்த மாரப்பவேள் பொறுமையின் அவதாரம் என்பது யாருக்குத் தெரியாது? இப்பொழுது மக்களுக்கு நமது இருவர் பிரபாவமும் மிகமிக நன்றாகத் தெரியும். பிற்காலத்தில் இது சரித்திரத்தின் ஏடுகளிலும் பொறிக்கப்படும். வேளிர்களின் புகழ் உலகமெங்கும் பரவும். எப்படி? வீரர் கூட்டமென்று அல்ல, வஞ்சகர் கூட்டமென்று. அதில் தலையாய ஸ்தானம் தங்களுக்குக் கிடைக்கும். வேளிர் வாழ்வுக்காக, அரசுக்காக, புகழுக்காக மகளையும் இருங்கோவேளிடம் ஒப்படைத்த மாரப்பவேளின் பெயர் என்றென்றும் மனித வர்க்கத்தின் மனத்தில் நிலைத்து நிற்கும். சந்தேகமே வேண்டாம். ஆனால்…”

“ஆனால்?”

“இதில் ஒரு இடைஞ்சலிருக்கிறது. இத்தனை புகழ் தங்களை எய்த வைக்கும் கூண்டில் ஒரு பகுதி பலவீனமானது.”

“அது எந்தப் பகுதியோ?” மாரப்பவேளின் கேள்வியில் கோபத்துடன் சிறிது கேலியும் கலந்து ஒலித்தது.

அவர் குரலில் தொனித்த கோபத்தையோ கேலியையோ லட்சியம் செய்யாமலே பூவழகி சொன்னாள், “பூவழகியைப் பற்றிய பகுதி” என்று.

“அந்தப் பகுதியில் என்ன விஷயம்?” என்று கேட்டார் மாரப்பவேள்.

உட்கார்ந்திருந்த பஞ்சணையில் சிறிது சாய்ந்து கொண்டு திடமாகவே பதில் சொன்னாள் பூவழகி: “தமிழ் மகளின் பண்பும் உறுதியும் அதில் கலந்து கிடப்பதுதான் விஷயம். எதைச் சாதித்தாலும் இரண்டு காரியங்களைச் சாதிக்கமட்டும் உங்களால் முடியாது. உயிருடன் என்னை இருங்கோவேளிடம் ஒப்படைப்பது ஒன்று; இருங்கோவேளை நிரந்தரமாகச் சோழர் அரியணையில் அமர்த்துவது இரண்டு.”
“இந்த இரண்டையும் யார் தடுக்க முடியுமென்பதை நான் அறியலாமா?” என்று வினவினார் மாரப்பவேள்.

“ஆகா! தாராளமாய் அறியலாம். முதலாவதை நானே தடுக்கமுடியும். இரண்டாவதைத் தடுக்க ஒருவர் வருவார்” என்றாள் பூவழகி. ‘ஒருவர் வருவார்’ என்று சொன்னபோது பூவழகியின் குரலில் திடீரெனத் தவழ்ந்த மென்மையைக் கண்டு, அந்த ஒருவர் யாரென்பதைப் புரிந்துகொண்ட மாரப்பவேள் சற்று இரைந்தே நகைத்தார். அத்துடன், “இளஞ்செழியனா, எங்கிருந்து வருவான்?” என்றும் வினவினார்.

“எங்கிருந்தென்று தெரியாது?”

“ஆனால் வருவானென்பது மட்டும் தெரியும் போலிருக்கிறது.”

“ஆமாம்.”

“சோதிடம் பழக்கமுண்டோ?”

“சோதிடத்துக்கும் மேம்பட்டது இருக்கிறது.”

“அது என்னவென்று நான் அறியலாமா?”

“நல்ல சிந்தையுள்ள யாருமே அறியலாம். இதய சுத்தமாயிருப்பவர்களுக்கு அது சரியாக எடுத்துக் காட்டும் உண்மையை.”

“ஆரூடமா?”

“இல்லை. அதற்கும் மேம்பட்டது. ஆண்டவனால் பிறப்பிலேயே ஏற்படுத்தப்பட்டது. உணர்ச்சி!”

“உணர்ச்சியா?” வியப்புடன் கேட்டார் மாரப்பவேள்.

“ஆம். உணர்ச்சிதான். சோதிடத்தையும் ஆரூடத்தையும் விடத் திடமானது. கடவுளைப் போலவே மனிதயுக்திக்கும் சாத்திரத்துக்கும் எட்டாதது. நல்ல இதயங்களில் சதா ஊடுருவித் தெளியவைத்து வழி காட்டும் இணையற்ற இயற்கையின் குரல். அந்தக் குரல் இப்பொழுதும் கேட்கிறது. அவர் வருவார். வந்து இந்த நாட்டின் விபரீதங்களுக்கு முடிவு கட்டுவார். அப்படி வரும்போது நீங்கள் அறத்தின் பக்கமிருந்தால் வேளிர் குலத்துக்குப் பெருமை; அயோக்கியன் பக்கமிருந்தால் குலத்துக்குச் சிறுமை. இதில் எதையும் சம்பாதித்துக் கொடுக்க உங்களுக்கு உரிமை உண்டு.”

மகளின் விவரணத்தைக் கேட்ட மாரப்பவேள் நீண்ட நேரம் மௌனமாகவே இருந்தார். உள்ளே பல குழப்பங்கள் எழுந்து தாண்டவமாடுவதை அவர் முகம் நன்றாகக் காட்டியது. பிறகு, மகளைப் பரிதாபத்துடன் உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, “பூவழகி! நீ எனக்கு ஒரே மகள். இந்த உலகத்தில் எனக்கு வேறு யாரும் கிடையாது. வேறு எதிலும் பந்தமும் கிடையாது. ஆனால் இந்த மண்ணில் பிறந்ததற்கு நாட்டு நலன் ஒன்றை மட்டும் நான் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதை முன்னிட்டுத்தான் உன்னை இருங்கோவேளுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்” என்று மெள்ளச் சொன்னார்.
“அதற்கு என் இஷ்டத்தைக் கேட்டீர்களா?” என்று வினவினாள் பூவழகி.

“இல்லை மகளே! கேட்கவில்லை. கேட்க அவகாச மில்லை. அவசியமுமில்லை. உனக்கும் இருங்கோவேளுக்கும் நடக்கக் கூடியது காதல் திருமணமல்ல. உன் மனத்தை இளஞ் செழியன் அபகரித்து விட்டது இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும். யாரோ ஒருத்தியின் குங்குமம் அவன் கன்னத்தில் ஒட்டிக் கிடந்ததற்காக அவனை வீட்டை விட்டே விரட்டச் சொன்ன அன்றே அதைப் புரிந்து கொண்டேன் பூவழகி! காதலே அந்தக் கோபத்துக்கு அடிப்படை என்பதைக்கூட அறியும் ஆற்றலற்றவன் உன் தந்தை என்று நினைக்கிறாயா? இல்லை இல்லை. அத்தனை அறிவற்றவனல்ல நான். ஆனால் இன்றிருப்பது அன்றைய நிலையல்ல. நாடு தத்தளிக்கும்போது சொந்த உணர்ச்சிகள், சொந்த நலன்கள் எவற்றுக்குமே இடமில்லை. இருங்கோ வேளுக்கு உன்னையளிக்க நான் ஒப்புக் கொண்டதற்கு பல மான காரணங்கள் உண்டு. ஆனால் இந்தத் திருமணத்திற்கு ஒருவன் பேரிடைஞ்சலாக நிற்கிறான்…” என்று பேசிக் கொண்டு போன மாரப்பவேள் சிறிது பேச்சை நிறுத்தி மகளை ஏறெடுத்துப் பார்த்தார்.

“யாரவன்?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள் பூவழகி.

மாரப்பவேளின் பதில் வரண்டு கிடந்த பூவழகியின் உணர்ச்சிகளைக்கூடத் தட்டி எழுப்பியதால் அவள் மஞ்சத்தி லிருந்து துள்ளி எழுந்தாள். “இருங்கோவேள்” என்று தந்தை சொன்ன ஒற்றைச் சொல்லால் பிரமிப்படைந்து எழுந்த பூவழகி. “என்ன! என்ன? இன்னொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டாள்.

“இருங்கோவேள்.” திடமான குரலில் தயக்கம் சிறிதுமின்றிப் பதில் கூறினார் மாரப்பவேள்.

“இருங்கோவேளா! இருங்கோவேளா இந்தத் திருமணத்துக்குத் தடையாயிருக்கிறான்?” ஆச்சரியம் மண்டிக் கிடந்தது பூவழகியின் குரலில்.

“ஆம் அவனேதான்” என்றார் மாரப்பவேள்.

“என்னை மணக்க இஷ்டப்படாதவன் என்னை ஏன் இந்த மாளிகையில் சிறை வைத்திருக்கிறான்?” என்று வினவினாள் பூவழகி.

மாரப்பவேள் விஷமமாக முறுவலித்து, “மணக்க இஷ்டப்படுபவரைத்தான் சிறை வைக்க வேண்டுமென்ப தில்லை மகளே! என்னையும் ஆரம்பத்தில் இரண்டு மாதகாலம் சிறை வைத்திருந்தான். என்னை மணக்க இஷ்டப்பட்டா வைத்தான் சிறையில்?” என்றும் கேட்டார்.

“பின் எதற்காகச் சிறை வைத்திருக்கிறான்!”

“காரணங்கள் பல உண்டு மகளே! ராஜீய காரணங்கள் அனைத்தையும் உனக்கு விவரிப்பது சாத்தியமில்லை. ஆனால் நன்றாக யோசித்துப் பார். உன்னைப் பலவந்தமாக மணப்பதானால், உன்னிடம் துன்மார்க்கமாக நடக்க இஷ்டப் பட்டிருந்தானானால் இருங்கோவேளுக்குச் சந்தர்ப்பங்கள் பல இருந்திருக்கின்றன. உன்னைக் கருவூர் பாழடைந்த மாளிகைக்கு அழைத்துச் சென்றபோது அவன் தீமை விளை வித்திருக்கலாம் அல்லது இந்த எல்லைப்புற மாளிகையிலும் துன்பங்களைத் தந்திருக்கலாம். ஆனால் இங்கும் சரி, கருவூர் வஞ்சியிலும் சரி, உன்னைத் தீண்டக்கூட முற்படவில்லை அவன். காரணம் உனக்கு நான் சொல்லுகிறேன். கேள். உன்னை வதுவை செய்து கொள்ள அவன் விரும்பவில்லை.”

“அப்படியானால் சிறை வைக்கக் காரணம்?”

“உன்னைப் பாதுகாக்கும் வீரர்கள் இருவர். ஒன்று கரிகாலன். இன்னொன்று இளஞ்செழியன். இந்த இருவரையும் தன் வலைக்குள் இழுக்க நீ ஒரு தூண்டில் பூச்சி. அப்படித் தான் உன்னைக் கருதுகிறான் இருங்கோவேள். அதற்காகத் தான் உன்னை இங்கு சிறை வைத்திருக்கிறான். வேளிர்கள் பகைவர் இருவரில் ஒருவன் மாண்டுவிட்டான். இன்னொருவனை எந்த நிமிஷத்திலும் இந்த மாளிகையில் எதிர்பார்க்கிறான் இருங்கோவேள்.”

“மன்னர் கரிகாலரையா!”

“ஆம். அவன் எந்த நிமிடம் வந்தாலும் சிறை செய்ய ஒற்றர்கள் சதா இந்த மாளிகைமீது கண் வைத்திருக்கிறார்கள்” என்று விளக்கினார் மாரப்பவேள்.

“மாண்டு விட்டவர்.”

“ஆமாம் இளஞ்செழியன்தான்.”

“அவர் மாளவில்லை.”

“யார் சொன்னது?”

“மாண்டு விட்டதாக யார் சொன்னது உங்களுக்கு?”

“இளஞ்செழியனுக்கு விஷம் வைத்துக் கொன்ற டைபீரியஸே சொன்னான்.”

பூவழகியின் முகத்தில் ஒரு வினாடிதான் சந்தேகச் சாயை படர்ந்தது. பிறகு அவள் கேட்டாள், “டைபீரியஸ் சொல்வது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அவன் ஏன் பொய் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் மாரப்பவேள்.

“அவர் இருப்பது தெரிந்தால் வாணகிரியிலுள்ள படையின் யவனர் பிரிவு அவனுக்குப் படியாது. மற்றப் படைப் பிரிவுகளும் அவனை எதிர்க்கும். ஆகவே புகாரில் யவனர் அரசை நிலைநிறுத்த முடியாது.”

“அத்தனை நிச்சயமா அது?”

“புகாரில் யவன அரசு நிலைத்துவிடும் என்று அவன் நம்பினால் இத்தனை நாள் ராணி அங்கு முடி சூடியிருப்பாள். இருங்கோவேள் புகாரை யவனருக்குச் சாஸனம் செய்து இத்தனை மாதங்களுக்குப் பிறகு அந்த சாஸனத்துக்கு ஒரே இடைஞ்சலான படைத் தலைவரும் மறைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகும், ராணிக்கு அவன் மகுடாபிஷேகம் செய்யவில்லையென்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்?”

“என்ன காரணம் என்று நினைத்கிறாய்?”

“எந்தச் சமயத்திலும் படைத் தலைவர் தோன்றுவார் என்று டைபீரியஸ் கருதுகிறான்.”

பூவழகியின் பேச்சு பெரும் விந்தையாயிருந்தது மாரப்ப வேளுக்கு. இளஞ்செழியனிடமுள்ள ஆழ்ந்த காதலால் அவள் இறந்துவிட்டவனை இருப்பவனாக நம்புகிறாள் என்றே நினைத்தார். ஆகவே வருத்தத்துடன் சொன்னார். “மகளே! உன் நம்பிக்கை எனக்கில்லை. சுவடு தெரியாமல் அறு மாதகாலம் மறைந்துவிட்டவன், டைபீரியஸால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டவன், திரும்பி வருவானென்று எதிர்பார்க்க, என் மனம் இடம் கொடுக்கவில்லை. இளஞ்செழியன் உயிருடனிருந்தால், உன்னை இத்தனை நாள் சிறையில் விட்டு வைத்திருக்கமாட்டான். சோழ நாட்டிலும் இந்த அமைதி இருக்காது. அவனிருந்தால் நான் இருங்கோவேள் பக்கம் சாய மாட்டேன். வேளிர்கள் பெருமை சிறுமைகளைப் பற்றியும் கவலைப்படமாட்டேன். ஆனால் இல்லாத ஒருவḥனை வைத்து நாட்டுக்குத் திட்டம் போட முடியாது. இப்பொழுது நாட்டில் வேண்டியது உறுதியான அரசியல். யவனர்கள் புகாரைக் காத்து நிற்கிறார்கள். சோழ நாட்டின் வாயில் காக்கப்பட்டிருக்கிறது. சேர பாண்டிய மன்னர்கள் இருங்கோவேளுடன் நட் புரிமை கொண்டாடுகிறார்கள். ஆக, உள்நாட்டிலும் அமைதி ஓரளவு இருக்கிறது. கரிகாலன் இருக்குமிடம் தெரியவில்லை. பூம்புகாரிலேயே சிறுபடை நிறுவிய இரும்பிடர்த்தலையாரும், கரிகாலனும் இருக்குமிடம் இரண்டு மாத காலமாகத் தெரியவில்லை. இனி அவர்கள் வெளிவந்தாலும் படை திரட்டுவது கஷ்டம். படை திரட்டினாலும் புகாரின் யவனர்கள், உறையூர் இருங்கோவேள் சேர பாண்டிய மன்னர்கள், இவர்கள் கூட்டுப் படைகளை எதிர்ப்பது நடவாத காரியம். அப்படி எதிர்க்கும் திறன் கரிகாலனுக்கு ஏற்பட்டால் பெருவாரியான மக்கள் போர்ப் பிசாசுக்குப் பலியாவார்கள். ரத்த வெள்ளம் இந்த நாட்டில் ஓடும். இதை அனுமதிப்பது சரியல்லவென்று நான் நினைக்கிறேன். ஆகையால்தான் உன்னை இருங்கோவேளுக்குக் கொடுக்க வேண்டுமென்று பிரும்மானந்தர் கூறிய யோசனையை ஏற்றேன். இருங்கோவேளை எதிர்ப்பவர் இருவர். ஒன்று நாங்கூர்வேள், இன்னொருவன் நான். இப்பொழுதுள்ள நாங்கூர்வேள், இருங்கோவேளின் அரண்மனைக் காவலர் தலைவன். நான் ஒருவனும் சேர்ந்துவிட்டால் ஆதரவு தரும் வேளிர்கள் பட்டியல் பூர்த்தியாகி நாட்டில் ஒற்றுமை ஏற்படும். போரைத் தவிர்க்கலாம் என்று பிரும்மானந்தர் சொல்லியனுப்பினார். சரியென்று சம்மதித்தேன். நாட்டின் அமைதிக்கு மட்டுமல்ல, உன் பிற்காலத்துக்கும் நல்ல ஏற்பாடு உன் திருமணம். ஆனால் ஒன்று நிச்சயம். நீயாக இஷ்டப் பட்டாலொழிய இருங்கோவேள் உன்னை மணக்க முடியா தென்று திட்டமாகக் கூறிவிட்டான்.”

பூவழகி சிரித்தாள். தந்தை பேசியது அத்தனையும் விசித்திரமாயிருந்தது அவளுக்கு. ஆகவே ஒரு கேள்வி கேட்டாள்: “ஆகவே திருமணத்தை வற்புறுத்த இவ்விடம் வந்தீர்களா?”.
“அதுவும் ஒரு காரணம். நான் புகார் செல்கிறேன் அதற்காக உன்னிடம் விடை பெறவும் வந்தேன்” என்றார் மாரப்பவேள்.

“என்னையும் அழைத்துப் போங்களேன் புகாருக்கு” என்றாள் பூவழகி.

“அதற்கு இருங்கோவேள் அனுமதியில்லை. உன்னைக் காட்டிக் கரிகாலனைச் சிறை செய்ய இஷ்டப்படுபவன் உன்னை இங்கிருந்து அனுப்புவானா?” என்று மாரப்பவேள் கேட்டார்.

“மாட்டான், மாட்டான்” என்றாள் பூவழகி.

“இருங்கோவேளைக் கண்டு பயப்பட அவசியமில்லை பூவழகி. உனக்கு எந்தத் தீங்கும் நேரிடாமல் காப்பதாக ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறான் இருங்கோவேள்” என்றார் மாரப்பவேள்.

“வஞ்சகனின் ஆணை” என்று இகழ்ச்சியுடன் கூறினாள் பூவழகி.

மாரப்பவேள் அவளை நெருங்கி அவள் தோளை மட்டும் பற்றி, “பூவழகி! பயப்படாதே. நானில்லாதபோது இந்த மாளிகைமீது கண் வைக்க இரண்டு ஒற்றர்களை நியமித்திருக்கிறேன். இருங்கோவேள் தீமை செய்ய முற்பட்டால் அதையும் தடுக்கும் திறன் வாய்ந்தவர் அவ்விருவரும். ஆகவே எதற்கும் அஞ்சாதே. நான் சொன்ன விஷயங்களைச் சிந்தித்துப் பார், நாட்டு நன்மையை முன்னணியில் வைத்துச் சிந்தனையை ஓட்டு. இப்பொழுது நாட்டுக்கு வேண்டியது போரல்ல, அமைதி. நான் திரும்பி வந்ததும் திருமணத்துக்குச் சம்மதம் கொடுக்கச் சித்தமாயிரு” என்று கூறிவிட்டு வந்த வேகத்தில் அந்த அறையைவிட்டு வெளியே சென்றார்.

பூவழகியின் இதயம் குழம்பிக் கிடந்தது. அந்தக் குழப்பத்தில் தந்தையும் அவருடன் வந்த வீரர்களும் ஏறிச் சென்றதால் பலமாக வாயிலில் கேட்ட புரவிகளின் குளம் படிச் சத்தம்கூட அவள் காதில் விழவில்லை . நாள் பூராவும் ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தாள் அவள். மாலை மறைந்து மையிருள் சூழந்து பஞ்சணையில் படுத்த நீண்ட நேரத்துக்குப் பின்பும் அவள் யோசனையிலேயே லயித்திருந்தாளாதலால், இரவு ஏறிய வெகு நேரத்துக்குப் பின்பும் தூக்கம் பிடிக்காமல் வெளியேயிருந்த தேவதாரு மரக் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு எதையோ கேட்பதற்காக, “இன்பவல்லி” என்று குரல் கொடுத்து, பஞ்சணையிலிருந்து திரும்பினாள். அறை மூலையில் வழக்கமாகப் படுக்கும் மஞ்சத்தில் இன்பவல்லி இல்லை. திறந்த கதவுக்கருகில் சயனக் கிருகத்துக்குச் செல்லும் அலங்காரங்களுடனும் காமக்கண்களுடனும் இருங்கோவேள் நின்றிருந்தான்.

Previous articleYavana Rani Part 2 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here