Home Sandilyan Yavana Rani Part 2 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

80
0
Yavana Rani Part 2 Ch22 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch22 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 22 சுடும் கற்பு

Yavana Rani Part 2 Ch22 | Yavana Rani | TamilNovel.in

பிறைகள் ஐந்து ஓடிவிட்டதால் பளிச்சென்று கிரணங் களைப் பெற்ற ஆறாம் பிறை மதி, சாளரத்தின் மூலமாகப் பெரும் வெள்ளிப்பாளமொன்றை அறையில் பாய்ச்சியிருந்தாலும், அறை மூலையிலிருந்த பெரும் குத்து விளக்கும் சுடர் விட்டு நன்றாகவே எரிந்துகொண்டிருந்ததாலும், வாயிற்படிக் கருகில் நின்ற இருங்கோவேளின் அலங்கார விசேஷத்தையும், அவன் கண்களில் துள்ளி நின்ற காமமும் வஞ்சகமும் கலந்த விபரீத ஒளியையும் சரியாகக் காண முடிந்தது பூவழகிக்கு. அளவுக்கதிகமான தடிப்புடன் வளர்ந்து காக்கையின் இறகுகளைப்போல் வகிர்ந்து எடுக்கப்பட்டு முரட்டுத்தனமாய்த் தோள்களைக் குத்துவனபோல கிடந்த இருங்கோவேளின் முடியில் சிறந்த வாசனைத்தைலம் தடவப்பட்டிருந்ததை அறையைச் சூழ்ந்த கதம்ப வாசனையிலிருந்து பிரித்துப் பார்த்து அறிந்த பூவழகி, அத்தனை தைலத்துக்கும் அடங்காமல் அவன் தலைமுடி சிலிர்த்துப் பயங்கரமாகவே நின்றதைக் கண்டு, ‘மனிதனின் முரட்டுத்தனத்தை முடிகூட எடுத்துக் காட்டும் போலிருக்கிறது’ என்று நினைத்தாள். மயிலின் கண்களைப் போல் சரிகை வேலை செய்யப்பட்டு அவன் தோளில் புரண்ட மேலாடை, விசிறிபோல் மடிக்கப்பட்டுப் பாதம் வரையில் தொங்கி அவன் காலிலிருந்த தங்க முகப்புடைய பாதரட்சையைத் தொட்டுக் கொண்டிருந்ததால், தன் அறைக்குள் வரும்போது பாதரட்சையை அகற்றி விட்டு வரத் தெரியாத பண்பற்றவன் அந்த இருங்கோவேள் என்பதை நினைத்துப் பார்த்த பூவழகி அவன் மீது எல்லையற்ற வெறுப்பே கொண்டாள். அந்த வெறுப்பின் விளைவாக, இருங்கோவேளின் மார்பில் பரந்து அறையெங்கும் பரிமள சுகந்தத்தைச் சுழலவிட்டு, முடியின் தைல வாசனையும் அதிக மாகத்தலை காட்டவிடாத சந்தனக்குழம்பின் நறுமணம்கூட அவளுக்கு மிதமிஞ்சிய எரிச்சலையே தந்தது. அவன் மார்பில் அணிந்திருந்த விலை உயர்ந்த மகரகண்டியைக் கூட அவள் லட்சியம் செய்யவில்லை. இத்தனையும் சோழ வேந்தர் களுக்குச் சொந்தமானது. இவன் திருடன்தானே’ என்று எண்ணியதால் கோப நகையொன்று அவள் இதயத்தில் எழுந்து அதன் சாயை முகத்திலும் பரவியது. அவனது ஒவ்வொரு அலங்காரமும் அவளுக்கு மிதமிஞ்சிய கோபத்தையே தந்தது. யாரும் கண்டு அஞ்சும் அவனது பயங்கர மீசையும் வஞ்சகக் கண்களும்கூட அவளுக்கு வெறுப்பைத் தந்தனவே யொழிய பயத்தை எள்ளளவும் தரவில்லை. ஆகவே அந்தச் சந்தர்ப்பத்தில் வேறு பெண்ணாயிருந்தால் காட்டக்கூடிய கிலியையோ நடுக்கத்தையோ சிறிதும் காட்டாத பூவழகி, சாய்ந்து கிடந்த பஞ்சணையைவிட்டு நகராமலும், அரசன் வந்திருக்கிறானே என்ற எண்ணத்தால் மரியாதைக்கு அடையாளமாக, ‘வாருங்கள்’ என்று முகமன்கூட அழைக்காமலும், காமுகன் வந்திருக்கிறானே என்ற பயத்தில், ‘ஏன் வந்தீர்கள் இப்பொழுது?’ என்று நடுங்கி வார்த்தைகளை உதிர்க்காமலும், ஏதோ பணியாளை நோக்கும் அரசிபோல் நிர்ப்பயமாக ஒருமுறை அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் ஏதாவது எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும். கற்புக்கரசிகளை மாற்றார் அணுகுவது சுலபமல்ல என்ற ஆன்றோர் வாக்கிலும் உண்மையிருக்க வேண்டும். ஆகவே காமத்தால் பீடிக்கப்பட்டவனும் வஞ்சகனுமான இருங்கோவேள்கூட அந்தப் பார்வையின் விளைவாக, நின்ற இடத்தைவிட்டு ஓர் அடிகூட முன் எடுத்து வைக்காமலே அவளை மெல்ல அழைத்தான், “பூவழகி” என்று.
பூவழகி பதில் ஏதும் சொல்லாததால் அவனே மேலும் பேசி நிலையைச் சமாளிக்க முற்பட்டு, “என்னை நீ எதிர் பார்த்திருக்க மாட்டாய்…” என்று சற்று இழுத்ததுபோல் கூறினான்.

இம்முறை பூவழகியின் கண்கள் அவன் கண்களைத் தைரியத்துடன் தாக்கின. பெண்களின் கண்களுக்கு ‘பூசலம்பு’ (போரிடும் அம்புகள்) என்ற உவமையை பிற்காலத் தமிழ்க் கவிச் சக்கரவர்த்தி கொடுத்ததற்கு, முற்கால அத்தாட்சியாக விளங்கிய அந்த விழிகளின் கூர்மையைக் காணமாட்டாத இருங்கோவேளின் வஞ்சக விழிகள் சிறிது சலனப்படவும் தொடங்கின. அவள் விழிகளைப் போலவே வார்த்தைகளும் அவன் நெஞ்சத்தைப் பிளந்தன. “எதிர் பாராதபடி நடந்து கொள்வதில் தாங்கள் சமர்த்தர் என்பதை உலகம் அறியுமே” என்று வெறுப்புச் சொற்களைக் காட்டினாள் பூவழகி.

இதனால் தாக்குண்ட அவன் இதயம் தன் சாந்தப் போர்வையைக் கிழித்துக்கொண்டதால், சற்றுக் கடுமையாகவே பதில் சொல்ல முற்பட்ட இருங்கோவேள், “எதிர் பாராத இன்பத்தில் சுவையிருக்கிறது பூவழகி, அதை அடையப் பின்வாங்கும் சுபாவம் இருங்கோவேளுக்கு இல்லை” என்று சுட்டிக் காட்டினான்.

“அதையும் உலகம் அறியும்” என்று சர்வ சாதாரண மாகவே பதில் சொன்னாள் பூவழகி.

“ஆனால் நீ அறியவில்லை” என்றான் இருங்கோவேள்.

“நன்றாக அறிந்திருக்கிறேன்.” திட்டவட்டமாக எழுந்த பூவழகியின் பதிலில், சொற்கள் அசாத்திய வேகத்தைப் பெற்றிருந்தன.

அவற்றின் வேகத்தையும் அவற்றைப் பூவழகி உச்சரித்த முறையையும் கண்ட இருங்கோவேள் சற்று அச்சத்துடனேயே கேட்டான்: “அறிந்துமா அலட்சியம் செய்கிறாய் பூவழகி?”

“அறிந்ததினால்தான் அலட்சியம்.”

“புரியவில்லை பூவழகி.”

“புரியச் சொல்கிறேன் கேள். நெருப்பில் வீடுகள் வேகும் இருங்கோவேள். சடலங்கள் உருக்குலையும். நஞ்சில் உயிர்கள் போகும். கற்புடைய மகளிர் உறுதி மட்டும் நெருப்பைக் கண்டு கலங்குவதில்லை. நஞ்சைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஏன் தெரியுமா?”

“ஏன்?” மூர்க்கத்தனமான குரலில் கேட்டான் இருங்கோவேள்.

“கற்பு நெருப்பையும் சுடும் சக்தி உள்ளது. கற்புடைய பெண் தன் மனத்துக்குப் பிடிக்காதவனுக்கு நஞ்சைவிட விஷத்தன்மை வாய்ந்தவள்.”

“தீயிடுபவன் தீயைக் கண்டு அஞ்சுவதில்லை பூவழகி. பிடாரன் பாம்பின் நஞ்சைக் கண்டு கலங்குவதில்லை.”

“அச்சம் வேறு, விளைவு வேறு. அச்சமில்லை என்பதற்காக ஒருவனுக்குத் தர்மத்தின் தண்டனை கிடைக்காதிருப்பதில்லை. பிடாரன் பாம்பின் விஷத்தைக் கண்டு அஞ்சாதிருக்கலாம். ஆனால் பாம்பு விஷத்துடனிருக்கும் காலத்தில் அது தீண்டினால் அந்தப் பிடாரனும் மாய வேண்டியவன்தான். அறம் தாக்கும்போது எந்த விஷத்தின் மாற்று மருந்துகளும் பயன் தருவதில்லை .”

இதைக் கேட்டதும் இருங்கோவேளின் பயங்கர மீசை சற்று அசைந்து அது மறைத்திருந்த உதடுகள் இடைவெளி கொடுக்கவே அவன் இதழ்களில் இகழ்ச்சிக் குறி துளிர் விட்டது. இகழ்ச்சி குரலிலும் தொனிக்கக் கூறினான் இருங்கோவேள்: “நன்றாகப் பேசுகிறாய் பூவழகி. கேட்பதற்கு நன்றாயிருக்கிறது உன் தத்துவம். ஏட்டில் எழுதலாம். படிக்க இனிப்பாக இருக்கும். ஆனால் அனுபவத்துக்கு ஒவ்வாது. இளஞ்சேட்சென்னியை அறத்தின் அடையாளம், அறத்துக்கே அஸ்திவாரம், லட்சியம் என்று போற்றினார்கள். இருப்பினும் நெருப்பு அவனை மாய்த்தது. அறத்தைக் கண்டு அது அஞ்சியதாகத் தெரியவில்லை. நாங்கூர்வேளையும் நெறியுடையவர் என்றுதான் நாடு சொல்கிறது. ஆனால் பாவம், அவரை நச்சுமாய்த்து விட்டதாகக் கேள்விப்பட்டு எத்தனை தூரம் வருந்தினேன் தெரியுமா? இந்த விருத்தாந்தங்களை நீயும் கேட்டிருப்பாய்.” இதைச் சொல்லி முடித்ததும் வருத்தத்துக்கு அறிகுறியாகப் பெருமூச்சும் விட்டான் அந்த அயோக்கியன்.

பூவழகியின் கண்கள் ஆச்சரியத்தாலும் மிதமிஞ்சிய வெறுப்பாலும் மலர்ந்தன. பெரும் பாதகச் செயல்களைப் பெரும் வெற்றிகளைப்போல் இருங்கோவேள் கூறுவதைக் கண்ட பூவழகி, ‘அவன் மனிதனா அரக்கனா?’ என்பதை அறிய முடியாததால் ஏதும் பதில் சொல்லாமல் அவனைக் கூர்ந்து நோக்கினாள். அவள் வாயடைத்து விட்டதைக் கண்ட இருங்கோவேள் சற்றுப் பெரிதாகவே நகைத்தான். “ஏன் பூவழகி? நிலைமை புரிந்துவிட்டதா உனக்கு? உன் வாய், சொல் முத்துக்களை உதிர்ப்பதை அறவே நிறுத்திவிட்டதே?” என்று கேட்கவும் செய்தான்.

“உண்மைதான் இருங்கோவேள்” என்றாள் பூவழகி.

“எது பூவழகி?” வியப்புடன் எழுந்தது இருங்கோவேளின் கேள்வி.

“முத்துக்கள் உதிர்வது நின்றுவிட்டது.”

“ஏன் நின்றுவிட்டது?”

“முட்டாளுக்கு முன்னால் முத்துக்களை உதிர்த்துப் பயனென்ன? அவற்றின் மதிப்பு அவனுக்கு என்ன தெரியப் போகிறது?”

மிகத் துணிவுடன் பூவழகி சொன்ன பதிலால் சினத்தின் எல்லையை அடைந்த இருங்கோவேளின் மனம் பெரும் எரி மலையாக வெடிக்க ஆரம்பித்தது. தன்னிடம் சிறைப் பட்டிருக்கும் ஒரு பெண், எந்த நிமிஷத்திலும் தான்கட்டாயமாக வசப்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையிலிருக்கும் ஓர் அபலை, சோழ ராஜ்யாதிபதியான தன்னைக் கேவலம் ஒரு துரும்புபோல் மதித்துப் பேசியதால், அதுவரை அவனைக் கவர்ந்திருந்த காம உணர்ச்சி உடைந்து கோப உணர்ச்சி மேலெழுந்ததால் சற்று இரைந்து பேச முற்பட்ட இருங்கோவேள், “பூவழகி! யாரிடம் பேசுகிறோம் என்பதை மறந்து பேசுகிறாய். எந்த நிலையில் நீ இருக்கிறாய் என்பதையும் மறந்து பேசுகிறாய். பூவழகி! ஆம் ஆம்! உனக்கு உன் தந்தை சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார். இங்கிருந்து பார்க்கும் போதே உன் உடல் புஷ்பம் போல் தானிருக்கிறது. அதைத் தழுவ என் கரங்களும் துடிக்கவே செய்கின்றன. இருப்பினும் பூவைக் கசக்கி முகர இஷ்டப்படவில்லை நான். உன்னை எனக்களிக்க உன் தந்தை இஷ்டப்பட்டு விட்டார். நாடு ஒரு ராணியைத் தேடுகிறது. அரியணையில் பாதி இடம் காலியாயிருக்கிறது. ஆகையால் உன்னிடம் மன்றாடுகிறேன். அந்தப் பாதி இடம் பூர்த்தியாகட்டும். உனக்கு அரச யோகம் நிலைக்கட்டும்” என்று பாதி பயமுறுத்தலாகவும் பாதி கெஞ்சலாகவும் கூறினான்.

பூவழகி அப்பொழுதும் பஞ்சணையிலிருந்து அசை யாமலே பதில் சொன்னாள். “அரச போகம் நிலைக்காது இருங்கோவேள். நீ உட்கார்ந்திருக்கும் பாதி அரியணை உனக்கே நிலையற்றது. ஆகவே மீதி பாதி அரியணைக்கு ஆள் தேடாதே” என்ற பூவழகியின் பதிலில் உறுதி மிகுந்திருந்தது. கேலியும் கலந்திருந்தது.

“என் அரசை யார் பறிக்க முடியும்?” என்று கேட்டான் இருங்கோவேள்.

“அதற்கு உரிமையுடையவர்.”

“கரிகாலனா!”

“ஆம்.”
“அவனிருக்குமிடம் தெரியவில்லை.”

“காலம் வரும்போது தெரியும்.”

“எந்தக் காலம்?”

“உன் அரசு குலையும் காலம். எந்த அதமர்த்துக்கும் உலகத்தில் முடிவு என்பது ஒன்று உண்டு.”

“என் அரசு திடப்பட்டு விட்டது பூவழகி. அதை இனி அசைக்க யாராலும் முடியாது. சோழ நாட்டின் பெரு வாசலான புகாரில் எனக்கு உயிரைக் கொடுக்க யவனர்கள் காத்து நிற்கிறார்கள்.” என்ற பேச்சை பூவழகியின், “ஆம் ஆம்” என்ற கேலி ஆமோதிப்பு இடைமறிக்கவே, இருங்கோவேள் கேட்டான், “என்ன ஆமோதிக்கிறாய் பூவழகி?” என்று.

“உன் அரசை நிலைக்கச் செய்ய முதலில் துறைமுகத்தை வெளிநாட்டாருக்கு அர்ப்பணம் செய்துவிட்டாய். நாட்டில் ஒரு பகுதி உன்னிடமிருந்து போய்விட்டது” என்றாள் பூவழகி.

“போகாது பூவழகி, போயிருப்பது தற்காலிகமாகத்தான். மறைந்திருக்கும் கரிகாலன் என் கையில் சிக்கட்டும். அந்த நாளிலிருந்து ஒரே வாரத்தில் புகாரை யவனர்களிடமிருந்து பறித்துவிடுவேன். சோழ நாட்டின் கடல் வாயிலை இன்னொருவர் கையில் ஒப்படைக்க நான் விரும்பவில்லை” என்றான் இருங்கோவேள்.

“யவனரையும் வஞ்சிக்க உத்தேசமா?”
“இதெல்லாம் வஞ்சகமல்ல ராஜதந்திரம்.”

“ராஜதந்திரத்துக்குப் புது இலக்கணம் இது இருங்கோ வேள்.”

“ஆனால் பலன் தரும் இலக்கணம் பூவழகி.”

“அதிக நாள் பலன் தராது. யவனர்கள் நீ நினைப்பது போல் முட்டாள்களில்லை. அவர்கள் தலைவன் டைபீரியஸ் போர்த் தந்திரத்திலும் ராஜதந்திரத்திலும் இணையற்றவன். அவனை வெல்ல முடியாது. அவனை வென்றாலும் அவன் தலைவியை வெல்ல முடியாது.”

இருங்கோவேள் பலமாக நகைத்தான். “ராணியைச் சொல்கிறாயா பூவழகி? அந்தப் பொற்கொண்டைப் பேரழகி என் கையில் சிக்க அதிக நாளாகாது. உனது அந்தப்புரத்தில் வெகு சீக்கிரம் அவளுமிருப்பாள்” என்று அந்த வஞ்சகன் கூறினான். ராணியை நினைத்த மாத்திரத்தில் அவன் கண்களில் காமவெறி அதிகமாகியது. கண்கள் கனவுலகத்துக்கும் சில வினாடிகள் சென்றன.

ராணியின் பேச்சைக் கேட்டதுமே அவன் கண்களில் தோன்றிய காமவெறியைக் கண்ட பூவழகி, ‘இவன் மனிதனா மிருகமா’ என்று உள்ளுக்குள் எண்ணமிட்டாள். அவள் உள்ளத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொள்ளாத இருங்கோவேள், மேற்கொண்டு ஏதும் பேசாமல் பூவழகியின் பஞ்சணையை நோக்கி நடந்து வரத் தொடங்கினான். ராணியை நினைத்த மாத்திரத்தில் அவன் உள்ளே எழுந்து ரத்தத்தில் சுழலத் துவங்கிவிட்ட மிதமிஞ்சிய காமவெறி அதுவரை அச்சப்பட்டுக் கிடந்த கால்களுக்கு உறுதியூட்டி விட்டதால் அவன் நடையிலும் வெறி தெரிந்தது. கண்களிலிருந்த நிலை சொல்லத் தேவையில்லை. புறாவை நோக்கி வரும் பருந்துபோல் பஞ்சணையை நோக்கி வந்த இருங்கோவேளைக் கண்டதும் உள்ளூர ஓரளவு அச்சம் கொண்ட பூவழகி பஞ்சணையைவிட்டுச் சரேலென்று எழுந்து, “நில் அப்படியே” என்று கூறினாள், பெரிதாக.

“நான் இங்கு வந்தது என் குண விசேஷங்களையும், தத்துவ சாத்திரங்களையும், ராஜதந்திரங்களையும் பற்றி இரவு பூராவும் தர்க்கிக்க அல்ல பூவழகி. உன் பூவுடலை அணைக்கவே வந்தேன். அணையாமல் அரண்மனை செல்ல மாட்டேன். இத்தனை நேரம் நான் வாளாவிருந்ததற்குக் காரணம் பூவைக் கசக்கி முகர இஷ்டப்படாததால். ஆனால் புஷ்பச் செடியிலும் தோன்றும் முட்கள் அதிகமாகக் குத்தும் போது எந்த மனிதனும் பொறுமை இழக்கிறான். இனி என்னைத் தடுத்துப் பயனில்லை. வா இப்படி” என்று கைநீட்டி அவளைப் பிடிக்க முயன்றான்.

பூவழகி அவனுக்கு எட்டாமல் சற்றுத் துரிதமாக நடந்து அறையின் மூலையில் குத்துவிளக்கின் பக்கம் சென்று நின்று கொண்டாள். அப்பொழுதும் அணுகி வந்து கொண்டிருந்த இருங்கோவேளை நோக்கி, “இருங்கோவேள்! கிட்டே நெருங்காதே. நெருப்பு இளஞ்சேட் சென்னியைத்தான் சுடும் என்பதில்லை. உன்னையும் சுடும். பேசாமல் அரண்மனை நோக்கிப் போய்விடு. உன் ஆணையை மறவாதே” என்று எச்சரித்தாள். அவள் குரலிலிருந்த எச்சரிக்கை, ஈட்டிகள் போல் ஜொலித்த அவள் கண்களிலும் தெரிந்தது.
ஆணையைப் பற்றிச் சொன்னதும் சற்று நின்ற இருங்கோவேள், “ஆணையா? எந்த ஆணை?” என்று கேட்டான்.

“என் தந்தையிடம் நீ ஆணை இடவில்லை என்னைக் காப்பதாக?”

“ஆம், ஆணையிட்டேன், அந்த முட்டாளைப் புகார் அனுப்ப. இங்கு அவனிருக்கும் வரை இந்த எல்லைப்புற மாளிகைக்கே வர முடியவில்லையே பூவழகி. எத்தனை இடைஞ்சலாக நின்றான் எனக்கும் என் இன்பத்துக்கும் குறுக்கே! இப்பொழுது உன் தந்தையில்லை உன்னைக் காக்க. உன் காதலனும் இல்லை. ஒருவனைப் புகாருக்கு அனுப்பி விட்டேன். இன்னொருவனை டைபீரியஸ் வானுலகுக்கு அனுப்பிவிட்டான். புரிகிறதா? இனிமேல் எட்ட நிற்பதில் பயனில்லை. வா இப்படி” என்றான்.

“வஞ்சகனுடைய ஆணை எத்தன்மையது என்பதை என் தந்தை அறியாரென்று நினைக்கிறாயா? நீ அத்துமீறி நடந்தால் என்னைக் காக்க இருவரை விட்டுப் போயிருக்கிறார். நான் கூவினால்…!”

“உன் கூவல் இன்பமாகக் காட்டில் எதிரொலி செய்யும். உன் தந்தை ஒற்றர்களை விட்டுப் போனதை இருங்கோவேள் அறியாதிருப்பானென்று நினைக்கிறாயா பூவழகி! இந்த உறையூரிலுள்ள உன் நண்பர்கள் நடவடிக்கை ஒவ்வொன்றையும் என் ஒற்றர்கள் கவனிக்கிறார்கள். உன் தந்தை விட்டுப்போன அவரது மெய்க்காவலர் இருவரும் சிறையிலிருக்கிறார்கள். மாரப்பவேள் உறையூரின் எல்லையைத் தாண்டு முன்பே அவரை என் வீரர்கள் பிடித்துவிட்டார்கள். இனி உன்னை யாரும் எதுவும் காக்க முடியாது.”

“யாரும் என்று வேண்டுமானால் சொல். ஆனால் எதுவும் என்று சொல்லாதே. உனக்கு உயிரின் மேல் ஆசை இருந்தால் கிட்டே வராதே. பெண்களின் கற்பின் சக்தியை நீ அறிய மாட்டாய்.”

இங்கோவேள் மீண்டும் நகைத்தான், “நீயாக இஷ்டப்பட்டு என்னை ஏற்றுக் கொள் பூவழகி, உன்னை ராணி யாக்குகிறேன். இல்லையேல் உன்னை பலவந்தமாக அடைந்து என் காமக் கிழத்தியாக்குவேன். இரண்டு பதவிகளில் நீ இஷ்டப்பட்டதை அடையலாம். எது வேண்டும் சொல். வீணாகக் கற்பு, உறுதி என்ற அர்த்தமற்ற சொற்களைக் கொட்டி என்னை மிரட்டாதே” என்று கூறிய இருங்கோவேள் திடீரென ஒரு கரத்தை நீட்டி பூவழகியின் இடது கரத்தைப் பிடித்தான்.

வேறாரு பெண்ணாயிருந்தால் அந்த நிலையில் அலறி யிருப்பாள். கையை திமிரியிருப்பாள், அறையின் மூலைக்கு மூலை ஓடியிருப்பாள். அது எதையும் செய்யவில்லை பூவழகி. அவள் முகத்தில் உறுதி மட்டும் பலமாக இருந்தது. கண்களில் ஏதோ பயங்கர ஒளி சுடர்விட்டது. கையைப் பிடித்ததும் அவள் அலறாமலும் கையைத் திமிறாமலும் இருந்ததைக் கண்ட இருங்கோவேள் அவளைத் தவறாகப் புரிந்து கொண்டான். அத்தனை நேரம் அவள் வாதிட்டது வெளிப் பூச்சு என்று நினைத்தான். ஆகவே தன் தலையை அவள் முகத்தை நோக்கித் தாழ்த்தினான். அப்பொழுதும் அவள் அலற வில்லை. திமிறவுமில்லை. அலறியதும் திமிறியதும் இருங்கோ வேள்தான். அவன் உடலில் திடீரென நெருப்புப் பலமாகச் சுட்டது. “ஐயோ!” என்று அலறினான் அவன். “அடி பாவி! உனக்கு என்ன துணிச்சல்!” என்று கூவிக்கொண்டே பின்னடைந்து மேல் சரிகைத் துணியைத் தரையில் எறிந்தான். மிகுந்த பயத்துடன் விசிறி எறியப்பட்ட அவன் சரிகைத் துணி பூவழகிக்கும் அவனுக்கும் இடையே பெரிதாக எரிந்தது. கற்பின் அக்கினியே காக்க வந்ததுபோல் தனக்கும் இருங்கோ வேளுக்கும் இடையே எரிந்து கொண்டிருந்த அந்தச் சரிகைத் துணியையும் நோக்கி இருங்கோவேளையும் நோக்கிக் கையில் குத்துவிளக்குடன் நின்று கொண்டிருந்த பூவழகி, அவனெதிரே ஏதோ பெரும் அஸ்திரத்தை ஏந்தி வந்திருக்கும் தேவதைபோல் நின்றாள். கையிலிருந்த குத்து விளக்கை எடுத்துக் காட்டி தேவதை பேசுவது போலும் பேசினாள். “இருங்கோவேள், நீ என்னை நெருங்க முற்பட்டதும் இந்த விளக்கு லஷ்மியை நான் பாதுகாப்புக்கு நெருங்கினேன். நீ என் கையைப் பிடித்ததுமே விளக்கின் சுடரை உன் மேல் துணியில் சாய்த்துப் பிடித்தேன். ஆகையால் மேல் துணி மட்டும் பிடித்து உன் முதுகில் மட்டுமே தீப்புண்கள் ஏற்பட்டிருக்கின்றன. நான் இஷ்டப்பட்டிருந்தால் விளக்கைச் சற்றுத் தாழ்த்திப் பிடித்து உன் ஆடை பூராவையுமே எரிய வைத்து, உனக்கு மன்னர் இளஞ்சேட் சென்னியின் முடிவை அளித்திருப்பேன். ஆனால் உன்னைப் போன்ற வஞ்சக முறையைப் பின்பற்ற எனக்கு இஷ்டமில்லை. நீ மடிய வேண்டியது போரில், நானும் உன் குலத்தவள். இருங்கோவேள் என் குலத்தானை நான் தீக்கு இரையாக்கினேன் என்ற பழிச் சொல் எனக்கு வேண்டாம். இன்றைக்கு உனக்கு உயிர் பிச்சையளித்தது அதனால்தான். போ. அரண்மனைக்குப் போய் புண்களை ஆற்றிக்கொள். முடிந்தால் மனத்தையும் மாற்றிக்கொள். உண்மை மன்னரைக் கண்டுபிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்” என்றாள்.
அவள் சொற்கள் விளைவித்த மனப் புண்ணாலும் தீ விளைவித்த உடற்புண்ணாலும் வேதனை பெரிதும் அடைந்த இருங்கோவேள், அவளைக் கொலை செய்து விடுவதுபோல் சில வினாடிகள் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றான். வெளியிலிருந்த வீரர்களை விட்டு அந்தக் குத்துவிளக்கை பிடுங்கச் சொல்லி அவளைப் பலவந்தமாக அடைந்தாலென்ன என்று ஒரு வினாடி நினைத்தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு தன் முடிவை மாற்றி, ‘உம் இருக்கட்டும். இவளுக்கு அதுதான் சரியான தண்டனை’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டான். கடைசியில் பூவழகியை நோக்கிச் சொற்களில் தீப் பறக்க உள்ளேயிருந்த விஷத்தை வெளியிலும் கொட்டத் தொடங்கிக் கூறினான்: “பொறு. மாரப்பவேள் மகளே! பொறு. உன் கதியும் உன் தந்தையின் கதியும் என்ன ஆகிறது பார். இன்று நீ எனக்கு விளைவித்த மனப்புண்ணைப் போல் பத்து மடங்கு மனப்புண்ணை உனக்கு விளைவிக்கிறேன். குத்து விளக்குத் தீயல்லவா என்னைச் சுட்டது? உன் தந்தையை ஆட்டு இறைச்சியைச் சுடுவதுபோல் சிறுகச் சிறுகத் தீயில் காய்ச்சிக் கொல்லுகிறேன். இதோ உன்னை என் சிறைக்குக் கடத்திச் செல்ல வீரர்கள் தயாராயிருக்கிறார்கள்” என்று கூவிய இருங்கோவேள், வாயிற்படியை நோக்கி ஓடி, “டேய் யாரங்கே?” என்று குரல் கொடுத்து அடியுண்ட புலிபோல் அறைக்குள் மீண்டும் வந்தான். அவனால் விளிக்கப்பட்ட வீரர்கள் ஓடி வந்தவுடன், “இவளையும் ஏற்கெனவே நம்மிடம் சிக்கியிருக்கும் இவள் தோழியையும் அழைத்துப் போய்ச் சிறையில் தள்ளுங்கள்” என்று உத்தரவிட்டு, தீப்புண் பெரிதும் பாதித்ததால் சரசர வென்று அறையைவிட்டு ஓடினான். அடுத்த சில வினாடிகளில் அவன் ரதம் சென்ற ஓசை காதில் விழவே, குத்து விளக்கைக் கீழே வைத்த பூவழகி ஆயாசப் பெருமூச்சொன்றை வெளிவிட்டாள். ‘வஞ்சகனிட்ட ஆணை. அதன் பெறு மானத்தை அறியவில்லையே தந்தை’ என்று முணுமுணுக்கவும் செய்தாள்.

உள்ளே நுழைந்த வீரர்கள் இருங்கோவேளின் சரிகைத் துணித் தீயை அணைத்தார்கள். பிறகு பூவழகியை நோக்கி, “உம் புறப்படுங்கள்” என்று கட்டளையிட்டார்கள். வேளிர்கள் குலத்தின் உரம் நெஞ்சில் பரிபூரணமாக இருந்ததால் சற்றும்லட்சியம் செய்யாமலே பூவழகி கிளம்பினாள். வாயிலில் காத்திருந்த காவலர் தலைவன் அவளையும் இன்ப வல்லியையும் இருபுரவிகளில் ஏற்றி, வீரர்களை முன்னும் பின்னும் காவல் புரியச் சொல்லிக் குதிரைகளைச் செலுத்த உத்தரவிட்டான். அரண்மனைப் பெருவீதி வழியாக அந்தக் காவல் படை செல்லாமல் பக்கத்துத் தோப்பின் வழியாகச் சென்றதைக் கவனித்த பூவழகி, “பார்த்தாயா இன்பவல்லி! இருங்கோவேளுக்கு எதையும் பகிரங்கமாகச் செய்யும் பழக்கம் போய்விட்டது. ஏதோ ரகசிய வழியாக அழைத்துச் செல்கிறான்” என்றாள். ரகசியம் அத்துடன் நிற்கவில்லை. தோப்பின் வழியாகச் சென்று அரண்மனைத் திட்டி வாசல் கண்ணுக்குப் புலப்பட்டதும், “இவர்கள் கண்களைக் கட்டுங்கள். நாம் செல்லும் பாதை தெரிய வேண்டாம்” என்றான் இருங்கோவேளின் காவலர் தலைவன். இருவர் கண்களும் பலமாகக் கட்டப்பட்டன. பிரயாணம் நீண்ட நேரம் நீடித்தது. வீரர்களின் புரவிகள் சத்தம் பல திசைகளில் பரவியது. ஜாமம் ஒன்றாகியும் பிரயாணம் முடிவடையாததைக் கண்ட பூவழகி, “எத்தனை தூரமிருக்கிறது இன்னும்” என்று வினவினாள்.

“அதைப் பற்றி உனக்கென்ன கவலை? நடத்து குதிரையை” என்று காவலர் தலைவன் மிரட்டினான். பேசாமல் நடத்தினாள் பூவழகி, விதியின் மேல் பழியைப் போட்டு.

Previous articleYavana Rani Part 2 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here