Home Sandilyan Yavana Rani Part 2 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

111
0
Yavana Rani Part 2 Ch23 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch23 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 23 கண்கட்டு வித்தை

Yavana Rani Part 2 Ch23 | Yavana Rani | TamilNovel.in

கட்டப்பட்ட கண்களுடன் குதிரைமீது அமர்ந்து சென்ற பூவழகியின் மனத்தில் கணக்கற்ற துன்ப அலைகள் எழுந்து மோதிக்கொண்டிருந்த போதிலும், வேளிர் குலத்தில் பிறந்ததன் விளைவாக பயத்துக்கு மட்டும் அவள் சிறிதும் இடம் கொடாததால், உள்ள நிலையைத் தெளிவாகச் சீர் தூக்கிப் பார்க்கும் திறன் அவள் புத்திக்கு இருக்கவே செய்தது. அது காரணமாகக் கண்ணால் காண முடியாததைப் புலன்களால் உணர முற்பட்டாள் அந்த வேளிர் குலப் பேரழகி. அரண்மனை திட்டிவாசல் தென் பட்டதுமே தங்கள் கண்களைக் கட்டும்படி வீரர்களுக்கு உத்தரவிட்ட காவலர் தலைவன் அரண்மனையை நாடுவதில் அளவுக்கு மீறிய தாமதம் காட்டும் காரணம் என்ன என்று எண்ணிப் பார்த்த தன்றி, தன் கண்களும், தன் தோழியின் கண்களும் கட்டப்பட்டதுமே புரவிகள் பல திசைகளில் சென்று விட்டதை அவற்றின் குளம்படிச் சத்தங்களால் அவள் உணர்ந்து கொண்டாளாகையால், தங்களைச் சிறை செய்த வீரர்கள் தொடர்ந்து காவல் புரிவதை விட்டு ஏன் ஓடி விட்டார்கள் என்றும் நினைத்துப் பார்த்தாள். தங்கள் புரவிகளைத் தவிர முன்னால் ஒரு புரவியும், பின்னால் ஒரு புரவியுமே வருகின்றன என்பதை அவற்றின் நடையொலியிலிருந்து ஊகித்த பூவழகி, ‘வாள் கிடைத்தால் இரண்டு மூன்று வீரர்களை எதிர்த்துப் போரிடும் திறன் வாய்ந்த வேளிர் குல வீரமாது ஒருத்தியைக் காவல் புரிய இருவர் போதும் என்று நினைக் கிறானா இந்தக் காவலர் தலைவன்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதன்றி, காவலர் தலைவன் போக்கை எண்ணிப் பார்த்துப் பெரிதும் வியப்பையும் அடைந்தாள். அரண்மனை திட்டமாகத் தெரிந்த பின்பு நேராக உள்ளே தங்களை அழைத்துச் செல்வதை விட்டு, திசையைக் காவலர் தலைவன் மாற்றியதும் தங்களைச் சிறை வைப்பதை இருங்கோவேள் ரகசியமாக வைத்திருக்க முயல்கிறான் என்று நினைத்த வேளிர்குல மங்கை. அதற்குப் பிறகு ஒரு ஜாமம் ஆகியும் அரண்மனையைத் தாங்கள் நெருங்காததையும், பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவதையும் பார்த்துக் காவலர் தலைவன் தங்களை எங்கு கொண்டு போகிறான் என்பதை அறிய முடியாமல் தவித்தாள். எல்லைப்புற மாளிகைக்கு வெளியில் சந்தித்த சமயத்திலிருந்தே தலைமுதல் கால்வரை யவனர்களைப் போல் காவலர் தலைவன் கவசத்தை அணிந்திருந்தானாதலால் அவன் முகத்தைப் பார்க்க முடியாது போனதாலும், அவன் குரலும் பழக்கமற்ற புதிய குரலாய் இருந்ததாலும் ஏதும் பேசாமலேயே நீண்ட நேரம் பயணம் செய்த பூவழகி, நடுநிசிக்குப் பிறகு இரண்டு ஜாமத்துக்கு மேலும் நீடித்த பயணத்தின் அலுப்பையும் மனத்தின் கவலையையும் தாங்க முடியாமல் இன்பவல்லியை அழைத்து, “இன்பவல்லி! காவலர் தலைவரிடம் நேரம் எத்தனை இருக்குமென்று கேள்” என்று கட்டளையிட்டாள்.

அதிகாரம் நிரம்பிய குரலில் பூவழகி தன் தோழிக்குப் பிறப்பித்த உத்தரவைக் காதில் வாங்கிக்கொண்ட காவலர் தலைவன், தோழி கேட்குமுன்பாகவே, “விடிய இன்னும் நான்கு நாழிகைகளே இருக்கின்றன. சொல்லுங்கள் தலைவியிடம்” என்றான்.

“இத்தனை நேரம் பயணம் செய்யவேண்டிய அவசியம் என்ன?” இக்கேள்வியைப் பூவழகி நேரிடையாகவே காவலர் தலைவனைக் கேட்டாள்.
காவலர் தலைவன் சிறிதும் உணர்ச்சியற்ற குரலில் சர்வ சகஜமாகவே பதில் சொன்னான், “போக வேண்டிய இடம் தூரம். ஆகவே நேரம் அதிகமாவதும் இயற்கைதானே, என்று.

“போக வேண்டிய இடம் எது? அதையாவது சொல்ல முடியுமா?” என்று வினவினாள் பூவழகி, குரலில் சிறிது கோபத்தைக் காட்டி

“ஆகா! தாராளமாகச் சொல்ல முடியும். மன்னர் இருக்கும் இடம் போகிறோம்” என்றான் காவலர் தலைவன். இந்தப் பதிலைச் சொல்கையில் அவன் குரலில் சிறிது கேலியும் கலந்திருந்ததாகத் தோன்றியதால் பூவழகியின் கோபம் எல்லை மீறவே, “மன்னரா! எந்த மன்னர்? அந்த அயோக்கியனை மன்னனென்று யார் சொன்னது?” என்று சீறினாள்.

“சோழ நாட்டு நன்மையில் அக்கறையுள்ள அனைவரும் சொல்கிறார்கள்” என்று பதில் சொன்னான் காவலர் தலைவன்.

“கூலி வாங்குவதற்காக வஞ்சகர்களைப் புகழும் நாக்கை என்ன செய்தால் தகும்?”

“வாளால் துண்டித்து எறியலாம்.”

“அப்படியானால் உமது நாக்கையும் துண்டிக்க வேண்டியதுதானே?”

“அந்தப் பாக்கியம் இந்த நாவுக்கில்லை.”

“ஏன்?”
“நான் கூலியும் வாங்கவில்லை. வஞ்சகரைப் புகழவுமில்லை” என்று ஏளனத்துடனேயே வந்தது காவலன் தலைவன் பதில்.

பூவழகி சிந்திக்கத் தொடங்கினாள். காவலர் தலைவன் பேச்சில் ஏதோ மர்மமிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டாளாகையால், அது என்னவாயிருக்கக் கூடும் என அறிய முடியாமல் திணறியதன்றி, அதை வாய்விட்டுச் சொல்ல முற்பட்டு, “காவலர் தலைவரே! உமது பேச்சு விசித்திரமாயிருக்கிறது. முரண்பாடாயுமிருக்கிறது. குழப்பமும் நிரம்ப இருக்கிறது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரியிருக்கிறது,” என்றாள்.

“உண்மை, உண்மை” என்று கேலியுடன் ஆமோதித்த காவலர் தலைவன், பெரிதாக நகைக்கவும் செய்தான்.

“எது உண்மை? எதற்கு நகைக்கிறீர்?” என்று ஆத்திரத்துடன் வினவிய பூவழகி, தன் புரவியைச் சட்டென்று நிறுத்தினாள்.

“கண்ணைக் கட்டியிருப்பதும் உண்மை. உங்களைக் காட்டில் விட்டிருப்பதும் உண்மை” என்று சிரித்துக் கொண்டே சொன்ன காவலர் தலைவன், பின்னால் வந்து கொண்டிருந்த வீரனை அழைத்து, “டேய்! இவர்கள் கண் கட்டுகளை அவிழ்த்துவிடு. இனித் தேவையில்லை” என்று கூறவே, அந்த வீரனால் கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்ட பூவழகி, குதிரையிலிருந்து கீழே குதித்துக் கண்களைச் சிறிது கசக்கிவிட்டுக்கொண்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள்.
அக்கம்பக்கத்தில் அடர்ந்திருந்த மரங்களிலிருந்தும், சற்றுத் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆற்று ஜலத்தின் ஒலியிலிருந்தும் ஆற்றின் கரையிலுள்ள ஒரு காட்டில் தான் இருப்பதை உணர்ந்தாள் பூவழகி. மரங்களினூடே கண்களைச் செலுத்தி, கருக்கலின் இருட்டிலும் பளபளவென்று தெரிந்த நீரைக் கண்டு, “இது என்ன ஆறு? இது என்ன காடு?” என்று வினவினாள்.

“இது காவிரிதான். கிழக்கே செல்லச் செல்ல ஆழம் அதிகமாகி, சற்றுக் குறுகலாகத் தெரிகிறது. புகார் பிராந்தியத்தில் இதில் மரக்கலங்களும் உலாவுமே, உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டான் காவலர் தலைவன்.

“தெரியும். ஆனால் அதன் கரையில் இத்தகைய பெரிய காடு இருப்பதை நான் பார்த்ததில்லை” என்றாள் பூவழகி.

“நீங்கள் எப்பொழுதும் பட்டினப்புறங்களில் இருந்திருக் கிறீர்கள். ஆகவே காவிரியின் காடுகளை என்ன, எந்தக் காட்டையுமே அதிகமாகப் பார்த்ததில்லை. இதைவிட அடர்த்தியான காடுகளைப் பார்க்கும் பாக்கியம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும்” என்றான் காவலர் தலைவன்.

“காட்டைப் பார்க்கும் பாக்கியமா?” என்று வியப்புடன் வினவிய பூவழகி திடீரெனச் சந்தேகப்பட்டு, அப்படியானால் அரண்மனைக்கு….” என்று கேட்க முற்பட்டு வாசகத்தை முடிக்காமலே விட்டாள்.

“அரண்மனையா! அங்கு நமக்கென்ன வேலை?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்ட காவலர் தலைவன், தன்னுடன் வந்த வீரனை அழைத்து, “இனி நீ உடையைக் களையலாம்” என்றும் கூறினான்.

பூவழகி எரித்துவிடும் கண்களுடன் காவலர் தலைவனை நோக்கி, “என்ன உளறுகிறீர்? இங்கா வீரனை உடையைக்களையச் சொல்கிறீர்?” என்று உஷ்ணத்துடன் கேட்கவும் செய்தாள்.

“ஆம், ஆம்” என்று கூறி நகைத்த காவலர் தலைவன் “அடடே! மறந்துவிட்டேன். நான் இங்கிருக்கக் கூடாதுதான்” என்று சொல்லிவிட்டு மரங்களிருந்த மறைவை நோக்கிச் சென்றான்.

காவலர் தலைவன் கட்டளைப்படி அதிதுரிதமாக உடையைக் களைய வீரன் முற்பட்டவுடன், பூவழகி வேறு புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள். சில வினாடிகளே அவள் கண்கள் மூடிக்கிடந்தன. உள்ளம் மட்டும் மடை திறந்து ஆத்திர அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தன. ஆத்திர அலைகள் விளைவித்த உஷ்ணத்தைச் சமன்படுத்த இஷ்டப்பட்டன போல் மூடிக் கிடந்த பூவழகியின் கண்களைப் பின்புறமாக வந்த இரு தண் கரங்கள் சற்று அதிகமாக அழுத்தி மூடின. பட்டுக் கன்ன மொன்றும் அவள் கன்னத்துடன் இழைத்தது. “தலைவி!” என்று மதுரகானம்போல் அழைத்த சொல்லொன்றும் அவள் காதில் நுழைந்தது. பூவழகியின் ஆத்திரம் அகன்றது. அதன் இடத்தை வியப்பு அடைத்துக் கொண்டது.

“யார் நீயா?” திரும்பிப் பார்க்காமலும் அந்தக் கன்னத்தின் இழைப்பிலிருந்து தன் கன்னத்தை நீக்கிக் கொள்ளாமலும் வினவினாள் பூவழகி.

“ஆமாம் தலைவி!” என்று சற்று இரைந்தே எழுந்த சொற்கள், துன்பத்தையெல்லாம் துடைக்க வந்த அமுதத் துளிகளென அவள் இதயத்துக்குப் பெரும் சாந்தியை அளித்தன.

அந்தச் சாந்தியின் விளைவாகத் துள்ளும் உள்ளத் துடனும் மலர்ந்த முகத்துடனும் சரேலென்று திரும்பிய பூவழகி, “நிஜமாக நீதானா? நம்பவே முடியவில்லையே அல்லி! ஆண் உடையை இந்த அழகுத் தேகம் எப்படி அணிந்தது?” என்று பூரித்துப் பேச்சுக்களை உதிர்த்தாள்.

பூவழகியின் பிடியிலிருந்து விலகாமலே இன்பவல்லி யைப் பார்த்துச் சிரித்த அல்லி, “இன்பவல்லி! பார்த்துக்கொள். காவல் வீரனைத் தழுவி நிற்கிறார்கள். உங்கள் படைத் தலைவர் வந்தால் இதைக் கட்டாயம் சொல்ல வேண்டும்” என்றாள்.

மகிழ்ச்சிப் பெருக்கால் அந்த மூன்று மங்கையரும் சிரித்த இன்ப ஒலியைக் கேட்டதால், அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தால்தானோ என்னவோ அருணனும் மெள்ளக் கீழ்த்திசையில் கிளம்பினான். அருணோதயத்தால் தூரத்தே பளபளத்த காவிரிக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவிய அந்த மூன்று மங்கையரும் திரும்பி வந்த போது, காவலர் தலைவன் கவசத்தை நீக்கிவிட்டுப் புரவியில் ஏறத் தயாராயிருந்தான். மற்றப் புரவிகளும் பயணத்துக்குத் தயாராயிருப்பதைக் கவனித்த பூவழகி, “ஏன், மீண்டும் போக வேண்டுமா?” என்று கேட்டாள்.

“ஆம். முன்பே சொல்லவில்லையா மன்னர் இருக்கு மிடம் போக வேண்டும் என்று?” எனப் பதில் கூறினான் காவலர் தலைவன்.

“சொன்னீர்கள். ஆனால்-” என்று இழுத்தான் பூவழகி.

“மன்னர் கரிகாலர் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை” என்று முடித்தாள் இன்பவல்லி.

“ஏன் தெளிவுபடுத்தவில்லை?” என்று கேட்டான் காவலர் தலைவன்.

“எங்கு தெரியப்படுத்தினீர்கள்?” என்று கோபித்துக் கொண்டாள் அல்லி.
“சரி சரி! மூன்று பெண்களும் சேர்ந்து கொண்டீர்களா! ஒரு பெண் கேள்வி கேட்க ஆரம்பித்தாலே சமாளிப்பது கஷ்டம். மூன்று பெண்களும் சேர்ந்து சொல்லம்பு தொடுத்தால் தான் தொலைந்தேன். இருக்கட்டும். யோசித்துப் பார் பூவழகி! சோழ நாட்டின் நன்மையில் அக்கறையுள்ள அனைவரும் ஒருவரை மன்னர் என்று அழைப்பார்கள் என்று நான் சொல்லவில்லையா?” என்று கேட்டான் காவலர் தலைவன்.

“ஆமாம்” என்று பூவழகி ஒப்புக் கொண்டாள்.

“உனக்கிருந்த குழப்பத்தில் இருங்கோவேளை மன்னனென்று அழைப்பதாக அர்த்தம் செய்து கொண்டாய். அதற்காக என்னைக் கூலியென்று அழைத்தாய். நாவைத் துண்டிப்பதாகக் கூறினாய். நான் கூலி வாங்கவில்லையென்று சொன்னேன். துண்டிக்கப்படும் பாக்கியம் என் நாவுக்கு இல்லையென்று விளக்கினேன். இன்னும் எத்தனை விளக்க மாகச் சொல்ல முடியும்? அதுவும் உறையூருக்கருகில், எந்த வினாடியிலும் இருங்கோவேளின் வீரர்களால் நாம் சூழப்பட இருந்த அபாய நிலையில்,” என்றான் காவலர் தலைவன்.

பூவழகி சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். பிறகு அல்லியை நோக்கி, “அல்லி! என் புத்தியே குழம்பிக் கிடக் கிறது. இவர் யார்? எப்படி எங்களைக் காப்பாற்றினீர்கள்?” என்று கேட்டாள்.

அல்லி காவலர் தலைவனை ஒருமுறை நோக்கிவிட்டு, “சொல்லட்டுமா?” என்று வினவினாள், அவனை உத்தரவு கேட்கும் முறையில், ‘சொல்லலாம்’ என்று அனுமதிக்கும் வகையில் காவலர் தலைவன் தலையை அசைக்கவே, அல்லி சொல்லத் தொடங்கி, “தலைவி! இவர் என் தந்தை” என்றாள் மெதுவாக.

பூவழகியின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்ததன்றி, ஒருமுறை அல்லியின் தந்தையையும் ஏறெடுத்துப் பார்த்தன. “உன் தந்தை! நாங்கூர்வேள்” என அவள் உதடுகள் வார்த்தை களை உதிர்க்கவும் செய்தன.

“ஆம் தலைவி! நாங்கூர்வேள்தான். இவர் நாங்கூர் வேளானதை அவரே உங்களிடம் சொல்லவில்லையா?” என்று அல்லி கேட்டாள். ‘அவர்’ என்ற சொல்லைச் சற்று வெட்கத்துடன் உச்சரித்து.
அவள் வெட்கத்தைக் கண்ட பூவழகியின் உடலில் இன்ப அலைகள் பாய்ந்து சென்றன. “ஆமாம், சொன்னார் அல்லி, உன்னைத் தன் ராணியென்று என்னிடம் அறிமுகப் படுத்திய அன்றே சொன்னார் மன்னர். ஆனால் உன் தந்தையை நான் பார்த்ததில்லை. இவரை நாங்கூர்வேள் என்று அறிந்துமா இருங்கோவேள் இவரைக் காவலராக நடத்துகிறான்?” என்று ஆச்சரியத்துடன் கேட்கவும் செய்தாள் பூவழகி.

“அவன் நடத்தவில்லை தலைவி! இவர்தான் தன்னை அப்படி நடத்திக் கொள்கிறார்” என்றாள் அல்லி.

“ஏன்?” பூவழகியின் குரலில் வியப்பு மிதமிஞ்சி நின்றது.

“நான் சாக விரும்பவில்லை பூவழகி” என்றார் நாங்கூர் வேள்.

“என்ன!”

“ஆம் பூவழகி! நான் நாங்கூர்வேளாகப் பதவியேற்றுச் சற்று எதிர்ப்பைக் காட்டினாலும் பழைய நாங்கூர்வேளைப் போலவே என்னையும் தீர்த்துக் கட்டி விடுவான் இருங்கோவேள். ஆகவே கரிகாலன் விஷயம் இரண்டிலொன்று முடிவாகும் வரை நாங்கூர் சிற்றரசை ஏற்க மறுத்தேன். இருங்கோவேளுக்குப் பணி செய்வதே பெரும் பாக்கியம் என்றேன். அவனது பூரண நம்பிக்கையைப் பெற்றேன். ஆகையால்தான் அல்லி உன்னை நிர்ப்பயமாகக் கண்காணிக்க முடிந்தது. மாரப்பவேளைப் புகாருக்கு அனுப்பி விட்டு உன்னைத் தீண்ட இருங்கோவேள் வந்தபோது நாங்களிருவரும் உன்னைக் காக்கவும் முடிந்தது” என்று விளக்கிய நாங்கூர்வேளை ஒரு சந்தேகம் கேட்டாள் பூவழகி. “என்னைக் காக்க வந்த நீங்களிருவரும் கீழேயே நின்று விட்டீர்களே. என்னை அந்த அயோக்கியன்…” என்று துவங்கிய பூவழகி மேலும் பேச முடியாமல் தவித்தாலும் அவள் மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட நாங்கூர்வேள், “அல்லி ஆண் உடையில் குத்து வாளுடன் அறைக்கு வெளியே நின்றிருந்தாள். நீ ஒரு குரல் கொடுத் திருந்தால் இருங்கோவேளின் ஆயுட்காலம் அந்த அறையி லேயே முடிந்திருக்கும். உன்னைச் சிறை செய்ய இருங்கோவேள் குரல் கொடுத்ததும் உள்ளே நுழைந்த இரு வீரர்களில் அல்லியும் ஒருத்தியென்பதை ஊன்றிப் பார்த்திருந்தால் கண்டு கொண்டிருக்கலாம்” என்றார்.

மேற்கொண்டு ஏதோ கேட்க முற்பட்ட பூவழகியை நாங்கூர்வேள் சற்று அடக்கி, “நமக்கு இன்னும் இரண்டு நாள் பயணம் இருக்கிறது பூவழகி. தவிர, இத்தனை நேரம் இருங்கோவேளின் வீரர்கள் நம்மைத் தேட முற்பட்டிருப்பார்கள். காவலர் தலைவன் தங்களைப் போக உத்தரவிட்டுத் தன்னந்தனியே ஒரே ஒரு வீரனுடன் உங்களை அழைத்துச் சென்றான் என்பதைக் கேட்ட மாத்திரத்திலேயே இருங்கோ வேள் சந்தேகப்பட்டிருப்பான். நீங்கள் சிறையிலும் காணாதது சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருக்கும். இந்நேரம் உறையூரின் நான்கு எல்லைகளிலும் ஒற்றர்கள் கண்காணிப்பு பலமாயிருக்கும். உம்! புறப்படுங்கள். பேசுவதற்குப் பின்னால் நிரம்ப அவகாசமிருக்கிறது” என்று கூறி, புரவியில் ஏறிக் கொண்டார்.

மூன்று பெண்மணிகளும் புரவிகளில் ஏறிக் கொண்டதும் காட்டுமார்க்கமாகவே ஒரு காதம் மேற்கிலும் பிறகு வடக்கிலும் அழைத்துச் சென்ற நாங்கூர்வேள், பகலவன் சற்று மேல்திசையில் சாய்ந்து பிற்பகல் துவங்கிவிட்டதை அறிவித்த நேரத்தில் தங்கச் செய்து, தாம் மட்டும் பக்கத்துக் கிராமமொன்றுக்குச் சென்றார்.

இரு நாழிகையில் பெரும் மூட்டையுடன் திரும்பி வந்து, அதிலிருந்த உழவர் உடைகளை அணியும்படி பெண்களுக்கு உத்தரவிட்டதன்றி, அவர்கள் மாற்றுடை அணிந்ததும் தாமும் ஒரு உழவன் உடையை அணிந்து தலையில் முண்டாசையும் பலமாகக் கட்டிக் கொண்டார். வேடம் இப்படி மாறியதும் புரவிகளைச் சேணத்தால் அடித்து விரட்டிவிட்டு மூவரையும் நடத்தி அழைத்துச் சென்று பக்கத்துக் கிராமமொன்றில், புகுந்து குடிசைகள் இருந்த பகுதிக்குச் சென்று அவர்களை இருக்கச் செய்து சிறிது உணவும் வாங்கிக் கொடுத்தார். மாலை வரையில் அந்தக் கிராமத்தில் இளைப்பாறிய நாங்கூர்வேள், அந்த ஊரிலிருந்து கிளம்பிய பொதி வண்டிகளில் பெண்களை ஏற்றிக் கொண்டு நள்ளிரவுவரை பயணம் செய்து, பெரிய பாதையொன்று கிளை பிரிந்த இடத்தில் வண்டிகளுக்கு ஊதியம் கொடுத்து இறங்கி, பிரிந்த பாதைக்கு நேர் எதிரி லிருந்த காட்டுக்குள் புகுந்தார்.

அடுத்த நாள் பயணம் முதல் நாள் பயணத்தைவிடக் கடுமையாயிருந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் இரவில் பயணமும், பகலில் ஊர் பேர் தெரியாத காட்டு முகப்புக் கிராமங்களில் இளைப்பாறவும் செய்து கொண்டு, மூன்றாம் நாளிரவில் குணவாயிற் கோட்டத்தின் அடவியை அடைந்த நாங்கூர்வேள் ஆயாசப் பெருமூச்சு விட்டு, “பூவழகி! தெய்வத் தின் உதவியால் தப்பினோம். இனி, பத்து இருங்கோவேள்கள் வந்தாலும் பயமில்லை ” என்றார்.
“சோழநாட்டு எல்லையைத் தாண்டிவிட்டோமா?” என்று கேட்டாள் பூவழகி.

“ஆம்” என்றார் நாங்கூர்வேள் மகிழ்ச்சியோடு.

“இது சேர நாடா?”

“அல்ல, கொங்கு நாடு.”

“இங்கு ஏன் வந்தோம்?”

“வா. தெரிவிக்கிறேன்” என்று அடவிக்குள் புகுந்தார் நாங்கூர்வேள்.

அடுத்த அரை ஜாம நேரத்தில் பெரும் விந்தைகள் பூவழகியின் கண்களின் முன்னே எழுந்தன. இது உண்மையா அல்லது கண்கட்டு வித்தையா என்று மீண்டும் மீண்டும் எண்ணி ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தாள் அந்த வேளிர் குலப் பேரழகி. யாரும் புக முடியாத அந்த அடவிக்குள் திடீரென எங்கிருந்தோ பந்தங்கள் தோன்றின. கண்ணெதிரே கந்தர்வ லோகமொன்று விரிந்தது.

பூவழகி புரிந்து கொண்டாள். இரண்டு மாத இடைக் காலத்தில் கரிகாலன் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந் திருக்கவில்லையென்பதைப் புரிந்து கொண்டாள். இடைக் கால அமைதி உடைந்துவிடும் நேரம் நெருங்கி விட்டது தமிழகத்தில் என்பதையும் புரிந்து கொண்டாள். பல படை வாயில்கள் இடையிடையே அந்த அடவியில் தோன்றின. அவற்றையெல்லாம் கடந்து செல்லச் செல்ல மகிழ்ச்சியும் வேதனையும் கலந்து தோன்றின அவள் இதயத்திலே. சகோதரன் கை வலுப்பெற்றது என்ற மகிழ்ச்சியை, இதில் பங்கு கொள்ள இளஞ்செழியன் இல்லையே என்ற இதய வேதனை ஓரளவு அடக்கவே செய்தது. பல படை வாசல்களைத் தாண்டிச் சென்று பிரும்மாண்டமான கரிகாலன் பாசறையில் நின்ற சமயத்தில், காதலனை நினைத்து இதயத்தில் ரத்தக் கண்ணீரே விட்டாள் பூவழகி. அந்தப் பாசறையில் தன் படைத்தலைவர்களுக்கெதிரில் கரிகாலன், “வா சகோதரி!” என்று அழைத்து அவள் மலர்க்கரங்களைப் பிடித்துக் கொண்ட சமயத்திலும், பெருமை அவள் உள்ளத்தில் துள்ளிய அந்த இன்ப நேரத்திலும், “இந்தப் படைகளை அவரல்லவா நடத்த வேண்டும்” என்ற நினைப்பு நிலவை மூடிய மேகமென அவள் சித்தத்தில் எழவே, அவள் செந்தாமரைக் கண்கள் கண்ணீரை மடமடவென உதிர்த்தன.

Previous articleYavana Rani Part 2 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here