Home Sandilyan Yavana Rani Part 2 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

111
0
Yavana Rani Part 2 Ch24 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch24 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 24 வருகுது வேல்!

Yavana Rani Part 2 Ch24 | Yavana Rani | TamilNovel.in

குணவாயிற் கோட்டத்தின் அடர்ந்த அடவியின் ஒருபுறத்தே எழுந்து நின்ற குன்றின் குகையினுள்ளே அமைக்கப்பட்டிருந்த போர்ப் பாசறையில் இருகைகளையும் பிடித்துக் கொண்டு கரிகாலன், ‘வா சகோதரி!’ என உள்ளிருந்த அன்பையெல்லாம் வெளியே அமுதமெனக் கொட்டி அழைத்த நேரத்திலும் காதலனை நினைத்துக் கண்ணீர் உகுந்த பூவழகியைக் கண்டு, கண்ணீருக்குக் காரணத்தை அறியாத நாங்கூர்வேளின் முகத்தில் சற்றே ஆச்சரிய ரேகை படர்ந்ததானாலும், மன்னன் மட்டும் அவள் உள்ளத்தின் துன்ப அலைகளைப் புரிந்து கொண்டானாகையால், “சகோதரி! சோகக் கண்ணீர் உருக்கும் நேரமல்ல இது. ஆனந்தக் கண்ணீர் சொரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. சோழ நாட்டு விடுதலையின் ஆரம்ப அத்தியாயம் துவங்கி விட்டது. அந்த விடுதலையுடன் பிணைந்திருக்கிறது நம் அனைவர் சந்துஷ்டியும்” என்று சமாதானமும் சொன்னான்.

அவன் சொற்கள் குழைந்த விதத்தையும் அவன் காட்டிய பரிவையும் கவனித்ததால் ஓரளவு நன்றியறிதலைக் கொண்டாலும் துன்பத்தை மட்டும் விடாத பூவழகி, “மன்னவா! நம் சந்துஷ்டி என்று பொதுப்படையாகச் சொல்லாதீர்கள். என் நிலை வேறு” என்று மெள்ள வார்த்தைகளை உதிரவிட்டாள், துக்கத்தால் துடிப்புடன் பேசமுடியாத காரணத்தால்.

“சகோதரி! உனக்கு நான் எத்தனை முறை சொல்வது என்னை மன்னனென்று அழைக்காதே என்று?” என லேசாகக் கடிந்து கொண்ட கரிகாலன், அவள் கைகளை இறுக்கிப் பிடித்தான். ‘நானிருக்கிறேன் உன்னைக் காக்க. அஞ்சாதே!’ என்று சொல்லும் பாவனையில்.

“தங்களை மன்னரென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பேன்? தாங்கள் மன்னர்தானே?” என்று சிறிது தைரியப்படுத்திக் கொண்டு பேசினாள் பூவழகி, மன்னன் கைகள் அளித்த உறுதியால் சிறிது துணிவும் கொண்டு.

“நான் ஊருக்கெல்லாம் மன்னனாயிருக்கலாம். ஆனால் உனக்கு அண்ணன்தானே? கருவூரில் பாழடைந்த மாளிகையில் நாம் பேசிக் கொண்டதை மறந்து விட்டாயா? நீ மறந்தாலும் நான் மறக்கவில்லை.” என்ற கரிகாலன், சொற்களைப் பாதியில் வேண்டுமென்றே அறுத்தான்.

“நீங்கள் எதை மறக்கவில்லை?”

“எதை என்பதைவிட எவற்றை என்று கேட்பது பொருத்தமாக இருக்குமே சகோதரி!”

“சரி சரி சொல்லுங்கள், எவற்றை மறக்கவில்லை?”

“செம்பருத்திச் சாறு பிழந்த இரண்டு செங்கமலக் கரங் களை மறக்கவில்லை. இதமாகச் சுடும் நீர்த் துளிகளை வெந்த காலில் உதிர்த்து, புண்ணின் எரிச்சலுக்கு ஒத்தடம் கொடுத் துதவிய இரண்டு பங்கய விழிகளை மறக்கவில்லை..” இதற்கு மேல் கரிகாலன் நாவிலிருந்து சொற்கள் உதிரவில்லை. உதிரவேண்டிய சொற்கள் உணர்ச்சி வடிவம் எடுத்து, முகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எழுந்து நின்று அவன் உள்ளம் நெகிழ்ந்து கிடந்த கதையைப் பறைசாற்றின. அந்த உணர்ச்சி வெள்ளம் குரலில் பொங்க, சில வினாடிகளுக்குப் பிறகு சொன்னான் கரிகாலன்; “அன்று கேட்டுக் கொண்டேன் சகோதரி, நீ என்னைச் சகோதரனாகப் பாவிக்க வேண்டுமென்று. நீயும் ஒப்புக் கொண்டாய். அன்று நீ அண்ணாவென்றழைத்த அந்த இன்பச் சொல்லை நினைத்து இன்றும் வலுவடைகிறேன். உன்னைப் போன்ற ஒரு சகோதரியின் கரம் பக்கத்திலிருக்கையில் சோழ நாட்டை யென்ன உலகத்தையே வெற்றி கொண்டு விடுவேன். ஆகவே…”

“என்ன அண்ணா?” என்று இடைமறித்துக் கேட்டாள் பூவழகி. அந்த இரண்டு சொற்கள் சற்றே இரைந்தே பேசப் பட்டதன் விளைவாக அந்த மலைக் குகை பூராவும் எதிரொலி செய்து பல சகோதரிகள், ‘அண்ணா அண்ணா’ என்று அழைப்பது போன்ற பிரமை ஏற்படவே மகிழ்ச்சியுடன் நகைத்த கரிகாலன், “பார்த்தாயா சகோதரி! குகையின் கற்கள் கூட நீ சொல்வதை ஆமோதிக்கின்றன” என்றான்.

“குகை உங்களுடையதுதானே அண்ணா?” என்று ஆரம்பித்த பூவழகியை, “சே! சே! நிறுத்து நிறுத்து. சரியில்லை ” என்றான் மன்னன்.

“எது சரியில்லை?” என்று கேட்டாள் பூவழகி.

“நீ பேசுவது.”

“என்ன அண்ணா?”

“இதுவரை சரி.”

“குகை உன்னுடையதுதானே என்றேன்.”

“உம், இப்பொழுது சரி. தமிழில் அண்ணாவுக்கும் ‘உங்களு’க்கும் சரிப்பட்டு வராது சகோதரி. அன்பு மேற்படும் போது மரியாதைச் சொற்கள் சிறிது நிற்க வேண்டும். புரிகிறதா?”

“உம், புரிகிறது.”

இம்முறை கரிகாலனோடு பூவழகியும் சேர்ந்து கொண்டு நகைத்தாள். இப்படி அக்கம் பக்கத்திலிருப்பவர்களை அறவே மறந்து இரண்டு குழந்தைகள் போல் நகைத்துக் கொண்டு நின்ற அந்த இருவரையும் நாங்கூர்வேள், “மன்னரின் சகோதரி யார் மூன்று நாட்களாகப் பயணம் செய்திருக்கிறார்கள்” என்று மிகவும் மரியாதையுடன் குறிப்பிட்டார்.

அப்பொழுதுதான் அந்தக் குகையில் தங்களைத் தவிர மற்றும் சிலர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட கரிகாலன், “ஆம் ஆம், மறந்துவிட்டேன். நாங்கள் பேச வேண்டியது நிரம்ப இருக்கிறது. பிறகு பேசிக் கொள்வோம்” என்று கூறிவிட்டு மீண்டும் நாங்கூர்வேளை நோக்கி, “தங்களை இத்தனை சீக்கிரம் இங்கு நான் எதிர்பார்க்கவில்லை. இதற்குள் இருங்கோவேள், என் சகோதரியைத் துன்புறுத்த முனைவா னென்றும் நினைக்கவில்லை” என்றான்.

“நான் எதிர்பார்த்தேன்” என்று நாங்கூர்வேள் பதில் சொன்னார் சற்றுத் திடமாகவே.

“ஏன்? உறையூர் நிலை மாறிவிட்டதா?”

“உறையூர் நிலை மாறவில்லை. இருங்கோவேளின் நிலை தான் மாறிவிட்டது. ஆறு மாத காலம் அவன் தங்கள் சகோதரியைத் துன்புறுத்தாமல் விட்டு வைத்தற்கு மாரப்ப வேள் தான் முக்கியக் காரணம். அவர் எக்காரணத்தைக் கொண்டும் உறையூரைவிட்டு நகர மறுத்தார். அத்துடன் பூவழகி சிறையிருந்த எல்லைப்புற மாளிகை மீது மட்டுமின்றி இருங்கோவேளையும் கண்காணிக்கத் தமது ஒற்றர்கள் இருவரை நியமித்திருந்தார். இதையெல்லாம் அறிந்த இருங்கோவேள் தாமதித்தான். ஆனால்…”

“ஆனால் என்ன? சொல்லுங்கள்!”

“தங்கள் சகோதரியாரின் வனப்பு அவன் எச்சரிக்கை யையும் உடைத்தது. அவர்கள் அழகு அந்தப் பாதகனை நிலை குலையச் செய்தது…”

“போதும் போதும். பிறகு…”

“புகார் நிலைமையை அறிந்து வர அரசாங்கக் காரியமாக மாரப்பவேளை ஏவினான். இருங்கோவேளின் கட்டளையை மீற மாரப்பவேளால் முடியவில்லை. ‘மகளிருக்கிறாளே’ என்று மன்றாடிப் பார்த்தார். ‘மகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். என் வாளின் மீது ஆணை. நான் பாதுகாக்கிறேன் அவளை’ என்றான் அந்த வஞ்சகன். அதையும் நம்பவில்லை மாரப்பவேள். தயங்கினார். ‘என்ன தயங்குகிறீர்? உமது மன்னனையே சந்தேகிக்கிறீரோ’ என்று விரட்டினான். வேறு வழியில்லாமல் புகார் சென்றார்.”
கரிகாலன் பூவழகியின் கைகளை விட்டுவிட்டுச் சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் இறங்கினான். பிறகு கேட்டான், “இதைப்பற்றி எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை?” என்று.

நாங்கூர்வேள் மிகுந்த நிதானத்துடன் மன்னனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னார். “சொல்ல அவகாச மில்லை பிரபு! தவிர நானிருக்கும் நிலையில் தங்களுக்குத் தூது அனுப்புவதும், எந்தவித நற்பயனையும் அளித்திராது. இருங்கோவேள் யாரையும் நம்பாதவன். என்னிடம் சிறிது சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் தங்கள் சகோதரியாரை விடுவிப்பது அத்தனை சுலபமாக இருந்திராது. எப்பொழுது பல மாதங்களுக்கு முன்பு, ‘பூவழகி என் சகோதரி. இவளைக்காப்பது உன் கடமை. அந்தப் பணியில் உன் உயிர் போனாலும் பாதகமில்லை’ என்று கட்டளையிட்டீர்களோ, அன்றிலிருந்து நானும் அல்லியும் ஒரு கண்ணை எல்லைப்புற மாளிகையின் மீது வைத்திருந்தோம். இருங்கோவேளுக்கு எங்கள் மீது கொஞ்ச நஞ்ச சந்தேகம் ஏற்படக் கூடாதென்பதற்காக அந்த மாளிகைக்குப் போவதைக்கூட நிறுத்திக் கொண்டோம். திடீரென இருங்கோவேள் மூன்று நாட்களுக்கு முன்பு மாரப்பவேளைப் புகார் அனுப்பினான். அந்த வினாடியிலிருந்து அல்லி ஆண் வீரன் உடையணிந்தாள். அடியவன் காவலர் தலைவன் பதவியை உதற உறுதி கொண்டேன். ஆகையால்தான் சகோதரியாரைக் காக்க முடிந்தது” என்று விளக்கினார்.

கரிகாலன் அந்த விளக்கத்தைக் கேட்டதும் பூவழகியை இருங்கோவேளிடமிருந்து மீட்க நாங்கூர்வேள் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறாரென்பதைப் புரிந்து கொண்டானாகையால், பூவழகியை மட்டுமின்றி நாங்கூர் வேளையும் அல்லியையும் இன்பவல்லியையும்கூட நோக்கி, அவர்கள் அணிந்திருந்த உழவர் உடையைக் கண்டு சிரசை அசைத்து, “ஆம், அந்த வஞ்சகனிடமிருந்து தப்புவது எளிதல்ல. மூன்று நாள் பயணத்தில் மிகவும் சிரமம்தான் பட்டிருக்கிறீர்கள்” என்று கூறித் தன் வீரர்களை அழைத்து, “இவர்கள் நீராடவும் தங்கவும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான்.

அரசன் கட்டளைப்படி காவலர் அந்தப் பெண்கள் மூவரையும் பக்கத்திலிருந்த மற்றொரு குகைக்கு அழைத்துச் சென்று, குகையை ஒட்டி ஓடிக்கொண்டிருந்த சுனையை காட்டி, “இதில் நீராடலாம். நீங்கள் எந்தச் சமயத்தில் வந்தாலும் தங்குவதற்காக இந்தக் குகை இரண்டு மாதங்களாகத் தயாராயிருக்கிறது” என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

பெண்கள் மூவரும் அந்தக் குகையின் நடுவில் நின்று சுற்று முற்றும் பார்த்தார்கள். அரண்மனையிலிருப்பது போன்ற சொகுசு வசதிகள் ஏதுமில்லாவிட்டாலும் குகை இயற்கையழகு துள்ளி விளையாட மிகுந்த மனோகரமாகவே காட்சியளித்தது. குகையை அணைத்து ஓடியிருந்த அருவியின் பக்கமாகப் பாறை சிறிது உடைக்கப்பட்டிருந்ததால் ஓடை நீரின் மீது விளையாடிய சந்திர வெளிச்சம் ஏதோ இந்திர ஜால வித்தை காட்டுவது போலிருந்தது. நீரையும் தாண்டி வந்த சந்திரன் கதிர்கள் குகைக்குள்ளும் புகுந்து கொண்டதால், கோடியில் ஈட்டிகளுக்கிடையிலிருந்த பந்தம் அணைந்து போனாலும் வெளிச்சத்துக்கு ஏதும் குகையில் குறைவில்லை யென்பதைப் பெண்கள் மூவரும் புரிந்து கொண்டார்கள். அந்தக் குகையின் ஒருபுறக் கல்லைப் பிளந்து வந்த ஆலமரக் கிளையொன்று குகையின் மறுபுறத்தில் பாய்ந்து சென்ற தாலும், அந்தக் கிளையில் தங்கியிருந்த ஒரு பச்சைக்கிளி அடிக்கடி கத்திக் கொண்டிருந்தாலும், ஆயிரம் அரண்மனைகள் அளிக்கக் கூடாத இயற்கையின் பேரழகைப் பெற்ற அந்தக் குகையைக் கண்டு பெண்கள் மூவரும் பிரமித்துப் போனார்கள். குகையின் அழகை அனுபவித்த பிறகு நீண்ட நேரம் அருவியில் நீராடிய அந்தப் பெண்கள் மூவரில் இன்பவல்லி முதலில் நீராட்டத்தை முடித்துக் கொண்டு குகைக்குள் நுழைந்து, குகையின் கோடியில் பெட்டியொன்றிருப்பதைக் கண்டு அதைத் திறந்து பார்த்துப் பெரிதும் வியந்து, “மன்னர் மகா கெட்டிக்காரர்! எல்லா விஷயங்களையும் முன் கூட்டியே யோசித்திருக்கிறார்” என்று சொல்லி மெள்ளச் சிரித்தாள்.

அருவியில் நீராடிக் கொண்டிருந்த இருவரும் இன்ப வல்லி நகைப்பதைக் கேட்டு குகைக்குள் ஓடி வந்து, “எதற்காக நகைக்கிறாய் இன்பவல்லி?” என்று ஏககாலத்தில் கேட்டார்கள்.

“பாவம்! மன்னரை நினைத்துச் சிரித்தேன்” என்றாள் இன்பவல்லி சற்றுக் கேலியாக.

“பிறர் பார்த்து நகைக்கும்படியாகவா இருக்கிறார் மன்னர்?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டாள் அல்லி.

“அப்பா! மன்னரைச் சொன்னதில் எத்தனை கோபம் தங்களுக்கு!” என்றாள் இன்பவல்லி.

“ஏன் கோபமிருக்காது? மன்னரைச் சொன்னால் மகா ராணிக்குக் கோபம் வராமல் வேறு யாருக்கு வரும்?” என்று கூறிய பூவழகியும் நகைத்தாள்.
“அம்மணி…!” என்று ஏதோ சொல்லத் துவங்கிய அல்லியை நோக்கி, “என்ன மகாராணி!” என்று கேட்டாள் பூவழகி.

“நான் தங்களுக்கு மகாராணி அல்ல” என்று கடிந்து கொண்டாள் அல்லி.

“நானும் தங்களுக்கு அம்மணி அல்ல.”

“தங்களுக்கு என்று என்னை அழைக்கக் கூடாது.”

“என்னையும் அப்படி அழைக்கக் கூடாது.”

“எப்படித்தான் அழைப்பது?”

“பூவழகி என்று பெயர் சொல்லி அழைக்கலாம்.”

“மாட்டேன்.”

“அப்படியானால்..”

“உம்..?”

“புருஷன் சகோதரி பெரியவளாயிருந்தால்…”

“அக்கா என்று அழைக்கலாம்.” மிகுந்த வெட்கத்துடன் இதைச் சொன்ன அல்லி தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அல்லியை நெருங்கிய பூவழகி அவள் முகத்தை நிமிர்த்தி, “அல்லி, ஏதோ- உம்..” என்று ஊக்கப்படுத்தினாள்.
“போங்கள் அக்கா,” சொல்ல முடியாத வெட்கத்துடன் அதைச் சொல்லிவிட்டு மரப் பெட்டியை நோக்கி ஓடிய அல்லி, அதைப் பார்த்து அப்படியே பிரமித்து நின்றாள்.

“இப்பொழுது தெரிகிறதா மன்னர் எத்தனை முன் யோசனைக்காரர் என்று? அதுவும் தன் ராணிக்கும் சகோதரிக்கும் என்னென்ன ஆடைகள் தேவை, என்னென்ன அணிமணிகள் தேவை என்பதை ஆராய்ந்து அத்தனையையும் வாங்கி வைத்திருக்கிறார்” என்று கூறி மீண்டும் கேலியாகச் சிரித்த இன்பவல்லி, அந்த மரப்பெட்டியிலிருந்து இரண்டு பட்டுச் சேலைகளையும் அழகிய கச்சைகளையும் எடுத்து அல்லிக்கும் பூவழகிக்கும் அளித்து, தானும் ஒரு சேலையை எடுத்து கட்டிக் கொண்டாள். பிறகு இருவருக்கும் குழல்களைக் கோதி வாரி எடுத்துக் கொண்டைகளைப் போட்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் மன்னரிடமிருந்து அழைப்பு வந்தது உணவருந்த. அறுசுவையுடன் படைக்கப்பட்ட உணவருந்திய சமயத்திலேயே பூவழகி பல கேள்விகளைக்கேட்டாள். அவற்றுக்கெல்லாம் மன்னன் ஓரளவு ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்லி வந்ததைக் கண்ட நாங்கூர்வேளே பிரமித்துப் போய், ‘இந்தப் பெண்ணிடம் எத்தனை நம்பிக்கை வேந்தனுக்கு!’ என்று தனக்குள் பல முறை கேட்டுக் கொண்டார்.

உணவருந்த ஆரம்பித்ததுமே பேசவும் ஆரம்பித்த பூவழகி, “இரண்டு மாத காலமாகத் தகவல் ஏதுமே இல்லாததைக் கண்டு மிகவும் தத்தளித்தேன் அண்ணா! நீ இருக்குமிடம் கூடத் தெரியவில்லை. இத்தனை தூரத்திலிருப்பாய் என்று தெரியாது” என்றாள்.

“இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கவே நாளாயிற்று சகோதரி. நாடு இன்னொருவனிடமிருக்கும் போது நாடோடி யாகத் திரியும் மன்னன் ரகசியத்திலும் எச்சரிக்கையாகத் தானே காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது!” என்றான் கரிகாலன்.

“ரகசியத்துக்குக் காடு அவசியம்தான். ஆனால் சோழ நாட்டிலிருந்து தொலைதூரத்திலிருந்தால் எதிரியை எப்படிக் கண்காணிக்க முடியும்?” என்று மீண்டும் கேட்டாள் பூவழகி.

“கண்காணிக்க ஒற்றர்கள் இருக்கிறார்கள் சகோதரி, ஆனால் குணவாயிற்கோட்டம் நாட்டிலிருந்து தொலை துரத்திலில்லை. தவிர போர்த்துறையின் அவசியத்திலிருந்து கவனித்தால் இது மிகவும் முக்கியமான இடமும் கூட.”

“இதன் பெயர் குணவாயிற் கோட்டமா?”

“ஆம். இது கொங்கு நாட்டிலிருந்தாலும் கருவூருக்கு நேர் கிழக்கே மூன்று காத தூரத்திலிருக்கிறது. அப்படி ஒருவூர் வஞ்சியின் கிழக்குப் புறத்தில் கிழக்கு வாயிலைப் போலிருப்ப தால் இதைச் சேரர் குணவாயில் என்றழைக்கிறார்கள். இந்தக் குணவாயிற் கோட்டத்தின் மேற்புறத்தில் சேர மன்னன் தலை நகர் வஞ்சியும், கிழக்குப் பகுதியில் புகாரும், இரண்டுக்கும் குறுக்கே சோழ நாட்டுத் தலைநகர் உறையூரும் இருப்பதால் இந்த ஒரு இடத்திலிருந்து மூன்று முக்கிய இடங்களையும் நாம் கவனிக்க முடியும். தவிர இந்தக் கோட்டம் சோழ நாட்டிலிருந்து சிறிது தள்ளியிருப்பதால் ரகசியமாகப் படை திரட்டுவதும் சாத்தியம். படை பலம் மிகுதிப்பட்டு நான் போரிடத் துவங்கும் போது ஒரு படைப் பிரிவினால் கருவூரில் சேரனைத் தடை செய்து உறையூரைத் தாக்கலாம். இவற்றை யெல்லாம் யோசித்தே குணவாயிற் கோட்டத்துக்கு வந்தேன். இங்குள்ள அடவியும் குன்றுகளும் என் ஏற்பாட்டுக்குப் பெரிதும் உதவியாயிருந்தன. திரட்டப்படும் படைகளை மறைத்து வைப்பதற்கும் அவற்றுக்குப் பயிற்சியளிப்பதற்கும் இந்த இடம் முதல் தரமாயிருக்கிறது” என்று விளக்கினான் கரிகாலன்.

மன்னனை ஆச்சரியத்துடன் பார்த்த பூவழகி, ‘இத்தனை இளவயதில் எத்தனை கூர்மையான அறிவு படைத்தவ ராயிருக்கிறார் மன்னவர்!’ என்று தன் மனத்துக்குள்ளேயே சொல்லிக் கொண்டாளானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “அப்படியானால் எப்பொழுது உறையூரைத் தாக்குவதாக உத்தேசம்?” என்று கேட்டாள்.

வாயில் போட எடுத்த உணவைக் கையிலேயே வைத்துக் கொண்ட கரிகாலன் பார்வை, தொலைவிலிருந்த உறையூரை நோக்கிச் சென்றது. சிந்தையும் எங்கோ கனவுலகில் சஞ்சரிப்பதைக் கண்கள் வலியுறுத்தின. ஏதோ கனவில் பேசுவது போலவே அவன் சொற்களும் வெளிவந்தன. “உறையூரை எப்பொழுது தாக்குவதாக உத்தேசம்? சரியான கேள்வி சகோதரி! ஆம்; எப்பொழுது உறையூரைத் தாக்கலாம்? இந்தக் கேள்வியைப் பலமுறை நான் என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உறையூரைத் தாக்குவதானால் முதலில் சேர பாண்டியர்களைச் சமாளிக்க வேண்டும். பிறகு புகாரின் யவனர்களை சமாளிக்க வேண்டும். நான் போர்ப்பறை கொட்டிய மறு வினாடி சேரன் படை தெற்கிலிருந்தும் யவனரின் படைகள் கிழக்கே புகாரிலிருந்தும் கிளம்பி சாரிசாரியாகச் சோழ நாட்டில் பாயும். அப்படிப் பாய்ந்தால் வீரர்கள் மட்டுமின்றிச் சாதாரண மக்களும் பெருவாரியாக மாய்ந்து போவார்கள். சோழ நாட்டு மண் ரத்த ஆடை புனையும். புனையட்டும். வீரர்கள் ரத்தம் சிந்தட்டும். அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் சாதாரண மக்கள் ரத்தமும் சிந்துமே! அதற்காகவே அஞ்சுகிறேன். அப்படிச் சாதாரண மக்கள் ரத்தம் சிந்த வேண்டா மென்றால், எல்லைகளிலேயே போர் நடக்க வேண்டும். எல்லைகளில் போர் நடப்பதானால் படைகள் மூன்று பிரிவாக பிரிய வேண்டும். அத்தனைக்கும் படைபலம் நம்மிட மில்லை. ஆகவே பொறுக்கிறேன். இன்னும் படை திரட்டி, மக்கள் உயிர்ச்சேதமின்றி நாட்டை அடைய எண்ணுகிறேன்…” இந்த இடத்தில் கரிகாலன் ஏதும் பேசாமல் நின்றான்.

அவன் பேச்சைக் கேட்ட அல்லி பெருமிதத்துடனும் கரை கடந்த காதலுடனும் கண்களை உயர்த்தி அவனை நோக்கினாள். ஆனால் கரிகாலன் மனம் உலகத்தையே மறந்து சோழ நாட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததால், அவன் அந்தப் பெண்களிருப்பதை மறந்தான், சகோதரி பாசத்தையே மறந்தான். குகையின் சூழ்நிலையையே அடியோடு மறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு திடீரென எழுந்து கைகழுவி வேகமாகக் குகைக்கு வெளியே சென்றான்.

மற்றவர்களும் உணவருந்துதலைப் பாதியில் நிறுத்தி விட்டுக் குகைக்கு வெளியே சென்றார்கள். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் பெண்கள் மூவரும் கரிகாலனைப் பார்க்கவேயில்லை. அதைப்பற்றிக் கேட்டபோது நாங்கூர் வேள் கூடச் சரியான சமாதானம் சொல்லவில்லை. அதனால் வேதனை அடைந்த உள்ளத்துடன் காட்டில் பதுங்கியிருந்த படைப்பிரிவுகளைப் பகலில் பார்வையிட்டுக் காலம் கழித்த அல்லியும் பூவழகியும், கரிகாலன் எங்கு சென்றான், ஏன் காணப்படவில்லை என்பதை அறிய முயன்றார்கள். மூன்று நாட்கள் வரை தகவலேதும் கிடைக்கவில்லை. நான்காவது நாள் பூவழகி மட்டும் தனியே தன் குகையில் நின்று ஆலமரக் கிளையிலிருந்த பஞ்சவர்ணக் கிளியைப் பார்த்து, “அண்ணன் எங்கே கிளியே! நீ கூடச் சொல்லமாட்டாயா? எத்தனை பேருக்குத் தூது சென்றிருக்கிறாய்? என் அல்லி தவிக்கிறாளே! அவளுக்காக ஒருமுறை துது சென்று வாயேன்” என்று பைத்தியம் போல் கேட்டாள். அதைப்புரிந்து கொண்டது போல கிளியும் கத்திக் கொண்டு சிறகடித்து வெளியே சென்றது.

அந்தக் கிளி தூது சென்றிருக்கத்தான் வேண்டும். நான்காவது நாளிரவில் பெண்களின் குகைக்குள் கரிகாலன் வெகு வேகத்துடன் புகுந்தான். புகுந்தவன் சகோதரன் கரிகாலன் அல்ல, அரசனான கரிகாலன் புகுந்தான். புகுந்த வேகத்தில், “அல்லி!” என்று ஆக்ஞையிடும் தோரணையில் அழைத்தான். அல்லி வெட்கத்துடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“ஏன் அண்ணா! வரும்போதே அதட்டல் பலமாயிருக் கிறது?” என்றாள் பூவழகி.

“இந்தப் பேச்சுக்கு இது சமயமல்ல சகோதரி” என்று திட்டமாகவும் கடுமையாகவும் அறிவித்த மன்னவன், “அல்லி! நீ உடனே புகார் செல்ல வேண்டும். புரவிகளும் துணைக் காவலரும் தயாராயிருக்கிறார்கள். உம். புறப்படு” என்றான்.

“என்ன அத்தனை அவசரம்?” பூவழகி சற்று அதட்ட லாகவே கேட்டாள்.
“தமிழகத்தைத் துண்டித்துச் சிதறடிக்கப் பெரும் வேலொன்று அதை நோக்கி வருகிறது. அந்த வேலை எய்பவன் யாரென்று அறிய முடியவில்லை” என்றான் கரிகாலன்.

“வேலா?” என்று வினவினாள் பூவழகி.

“விளக்கம் தேவையா? இதோ போய் விளக்கம் சொல்லக் கூடியவரை அனுப்பி வைக்கிறேன். அல்லி, புறப் படத் தயாராயிரு. கட்டளையிடுவது காதலனல்ல. சோழநாட்டின் மன்னன்” என்று கூறிவிட்டுக் குகையிலிருந்து வெகு வேகமாக வெளியில் சென்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் சமண அடிகள் குகைக்குள் நுழைந்தார். அவர் முகத்தில் சொல்லொணாக் கவலை படர்ந்து நின்றது.

Previous articleYavana Rani Part 2 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here