Home Sandilyan Yavana Rani Part 2 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

99
0
Yavana Rani Part 2 Ch25 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch25 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 25 வாணகரை விந்தை!

Yavana Rani Part 2 Ch25 | Yavana Rani | TamilNovel.in

அல்லியிடம் உள்ளத்தையெல்லாம் பறிகொடுத்திருந்த மன்னன் கரிகாலன் அன்று அவளிடம் சிறிதும் கருணை யையோ, காதலையோ காட்டாமல் மிகவும் முரட்டுத்தனமாக அவளைப் புகார் செல்ல ஆணையிட்டு, குகையிலிருந்து வெளியேறியதையும், சில வினாடிகளுக்குள் குகைக்குள் நுழைந்த வஞ்சிமாநகர் சமண மடத் தலைவரின் கண்களில் இயற்கையாக விளையாடும் விஷமக் குறியில்லாமல், கவலையே முகம் பூராவும் படர்ந்து நின்றதையும் கவனித்த பூவழகி, புகார்ப் பிராந்தியத்தில் போர் நிலை அபாயமாகி வருகின்றதென்பதைப் பொதுப்படையாகப் புரிந்து கொண்டாளானாலும், “மன்னன் குறிப்பிட்ட வேல் எது? அது எந்த உருவத்தில் வருகிறது? எந்தத் திக்கிலிருந்து வருகிறது?” என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொள்ள முடியாததால் சிறிது சலனப்பட்டே சமண மடத் துறவியை ஏறெடுத்துப் பார்த்தாள். உணர்ச்சிகள் இயற்கை மார்க்கத்தில் ஓடியிருந்தால் சமண அடிகளின் வருகை அவளுக்கு வியப்பையே தந்திருக்க வேண்டும். அவர் திடீரெனப் புகாரை விட்டுக் கிளம்பி வஞ்சிமாநகர் சமண மடத்துக்குச் சென்று மீண்டும் துறவறத்தில் திளைத்து அமைதியை நாடிய செய்தியை அவள் அறிந்திருந்தாள். அதைப்பற்றி அவள் இன்ப வல்லியிடம் பேசியிருந்தாள். ஆகவே சமணமடத் தலைவர் திடீரெனக் குணவாயிற் கோட்டத்தின் அடவிக் குகையில் தலைநீட்டிய போது அவள் வியப்பைத்தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கரிகாலன் காட்டிய உணர்ச்சி வேகமும், நாட்டை நெருங்கிவரும் அபாயத்தைப் பற்றி அவன் குறிப்பிட்ட முறையும், அதைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சமண அடிகள் தன் முன்பு தோன்றியதும், எல்லாமே அவள் புத்தியைப் பெரிதும் சலனப்படுத்தியிருந்ததால், அவள் வியப்புக்குப் பதில் ஓரளவு குழப்பத்தையும் கவலையையும் முகத்தில் காட்டி, அந்தக் கவலையும் குழப்பமும் சொற்களிலும் பிரதிபலிக்க, “அடிகளே! எனக்கு எதுவுமே புரிய வில்லை. கொஞ்சம் விளக்குங்கள். மன்னர் ஏன் இப்படி நிலை குலைந்திருக்கிறார்?” என்று வினவினாள்.

சமண அடிகள் பதிலேதும் சொல்ல முடியாமல் தமது வழுக்கைத் தலையை இருமுறை தடவிக் கொண்டு ஏதோ தீர்க்காலோசனையில் நிண்ட நேரம் இறங்கினார். பிறகு எதிரே நின்ற மூன்று பெண்களின் மீதும் தமது விழிகளை ஒரு முறை ஓடவிட்டார். கடைசியாகப் பெருமூச்சு ஒன்று விட்டுத் தன் கண்களால் பூவழகியை மட்டும் திடமாகப் பார்த்து, “பூவழகி! புகார் என்பதன் பொருள் தெரியுமா உனக்கு?” என்று கேட்டார்.

அந்தக் கேள்வியின் விளைவாக எந்தவித ஆச்சரியத்தை யும் காட்டாத பூவழகி நிதானமான குரலில் பதில் சொன்னாள், “தெரியும்” என்று.

“மாற்றார் புகமுடியாத பட்டணம் என்பதற்காக நமது மூதாதைகள் அந்தப் பெயரைச் சோணாட்டின் பிரதான துறைமுக நகருக்குச் சூட்டினார்கள்” என்று ஏதோ சரித்திரம் கற்பிப்பவர்போல் சமண அடிகள் கூறினார்.

“தெரியும்” என்றாள் பூவழகி மீண்டும்.

“இப்பொழுதும் புகாருக்கு அந்தப் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பொருள் போய்விட்டது” என்று கூறிச் சோகப் பெருமூச்சு விட்டார் சமண அடிகள்.

பூவழகி பதிலேதும் சொல்லவில்லை. சமண அடிகள் மேற்கொண்டு பேசட்டுமென்று அவர் பேச இருந்ததை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் மனோபாவத்தைப் புரிந்து கொண்ட சமண அடிகள் தாமே மேற்கொண்டும் பேசத்துவங்கி, “பூவழகி! மாற்றார் புகமுடியாத அந்த நகரில் இப்பொழுது மாற்றார் புகுந்திருக்கிறார்கள். சில மாதங்களாகவே புகார் யவனர் கைக்கு மாறிவிட்டது உனக்குத் தெரியும். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. புகாரிலுள்ள யவனர்களை நாம் எந்த நேரத்திலும் நம்மிடம் அடிபணியச் செய்ய முடியும் என்று நம்பியிருந்தோம். ஆகவே டைபீரியஸிடமிருந்த யவனர்களைப் பற்றி நாம் அஞ்சவில்லை. ஏனென்றால் யவனர் கூட்டம் பிரிந்து நின்றது. அவர்களின் ஒரு பிரிவு வாணகரையில் இளஞ்செழியன் வசப்பட்டுக் கிடந்தது. வாணகரைப் படையின் யவன வீரர்கள் இளஞ்செழியனிடம் அன்பினாலும் அவர் வீரத்திடம் இருந்த அபார நம்பிக்கையாலும் கட்டுப்பட்டுத் தமிழர் பக்கம் இருந்தார்கள். ஆகவே டைபீரியஸ் புகாரை அடைந்ததை நாம் பொருட்படுத்தவில்லை. அவன் இந்திர விழா மாளிகை மீது எழுப்பிய பெரும் தூண்களும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகளும் நமக்கு ஓரளவு அச்சத்தை விளைவித்தாலும், அவற்றை நாம் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருந்தது. ஆனால் அந்தத் தைரியமும் தளரும்படியான நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் திடீரெனப் பதினைந்து நாட்களுக்கு முன்னால் பிரும்மானந்தர் அவசர அவசரமாக என்னை வாணகரைக்குக் கூப்பிட்டனுப்பினார். நான் சென்றேன்.” என்று கூறி மேலே பேசாமல் சற்றுத் தயங்கினார்.

“தயக்கம் வேண்டாம். சொல்லுங்கள். சென்று என்ன கண்டீர்கள்?” என்று கேட்டாள் பூவழகி படபடக்கும் மார்புடன். திடீரென மூன்றாமவர் ஒருவரால் இளஞ்செழியன் பெயரும் வாணகரையின் பெயரும் எழுந்து அடிபடவே, “புதியதொரு வாணகரையைக் கண்டேன்” என்ற உணர்ச்சி மிகுதியால் சொற்கள் தடைப்படப் பதில் சொன்னார் சமண அடிகள்.

“புதியதொரு வாணகரையா!” ஏதோ கேட்க வேண்டு மென்பதற்காகக் கேட்டாள் பூவழகி. அவள் உணர்ச்சிகள் பெரும் அலைகளாக எழுந்து உள்ளத்தைத் தாக்கிக் கொண்டிருந்தன.

“ஆம், புதியதொரு வாணகரைதான். அதைத்தான் கண்டேன். படைபலம் குறைந்த வாணகரையைக் கண்டேன். எந்தச் சமயத்திலும் எதற்கும் அஞ்சாத பிரும்மானந்தர்கூடக் கவலையால் பீடிக்கப்பட்டு உட்கார்ந்திருந்த வாணகரையைக் கண்டேன்.”

“பிரும்மானந்தருக்கு என்ன கவலை? வாணகரைப் படைபலம் ஏன் குறைய வேண்டும்?”

“வாணகரைப் படையிலிருந்த யவனர் பிரிவின் பெரும் பாகம் புகாருக்குச் சென்று டைபீரியஸின் படைகளோடு இணைந்து கொண்டது.”

இதைக் கேட்ட பூவழகி மட்டுமின்றி இன்பவல்லிகூடத் திடுக்கிட்டுப் போனாள். அல்லியின் முகத்தில் மட்டும் திகைப்புக்குப் பதில் கோபம் மிதமிஞ்சித் தாண்டவமாடியது. “பிரும்மானந்தரும் குமரன் சென்னியும் கைகட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்களா?” என்று வினவினாள் அல்லி சற்று அதட்டலாக.

“அவர்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார் அடிகள்.

“படையிலிருந்து விலகிச் செல்பவரகளைத் தடுத்து நிறுத்த முடியும். சிறை செய்யமுடியும்” என்றாள் அல்லி.

“தெரிந்தால் இரண்டையும் செய்யலாம்.”

“எது தெரிந்தால்?”

“விலகிச் செல்வார்கள் என்பது தெரிந்திருந்தால், முன் கூட்டி அதற்கு அறிகுறிகள் இருந்தால்…”

“இல்லையா?

“இல்லை அல்லி! அடியோடு இல்லை. இருந்திருந்தால் பிரும்மானந்தருக்குத் தெரியாதிருக்குமா? வாணகரையில் இலை அசைந்தாலும் அறிந்து கொள்ளக்கூடிய பெரும் ராஜ தந்திரியான பிரும்மானந்தருக்குத் தெரியாமல் படையில் பிளவு நடந்திருக்கிறது. சரித்திரத்தில் இதுவரை நிகழ்ந்திராத இனிமேலும் நிகழமுடியாத விசித்திரம் வாணகரையில் நிகழ்ந்தது.”
“எப்படி அடிகளே அது நிகழ்ந்தது? விளக்கிச் சொல்லுங்கள்” என்று கேட்டாள் பூவழகி.

“அதிகமாக விளக்குவதற்கு ஏதுமில்லை பூவழகி. வாணகரையின் மர்மங்களை, கோட்டை நுட்பங்களை, காவிரிக்குக் குறுக்கும் நெடுக்கும் படகு செல்லும் மார்க்கங் களை, நன்றாக அறிந்த ஒருவனால் இந்த விசித்திரம் நிகழ்ந் திருக்கிறது. நல்ல நடுநிசியில் சுமார் ஐம்பது படகுகள் ஓசைப் படாமல் வாணகரையை நோக்கி வருகின்றன. இராக் காவலர் குரல் கொடுக்கு முன்பு கட்டி வீழ்த்தப்படுகிறார்கள். வந்த படகுகளிலிருந்துப் பெரும் படைத் தலைவர்களைப் போன்ற இருவர் இறங்கி ஏதோ சொந்த வீட்டில் நுழைவது. போல் வாணகரைக் கோட்டையின் மர்ம வாயில்கள் வழியாக நுழைந்து யவனர் படைகளில் இருப்பிடத்துக்குச் செல்கிறார்கள். அடுத்தபடி குபுகுபுவென யவன வீரர்கள் புறப்பட்டு வாணகரை நீர்த்துறைக்குப் போகிறார்கள். வழியிலுள்ள காவலரைக் கட்டிப் போடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் படகுக்குப் பத்துப் பேராக ஏறுகிறார்கள். படகுகள் ஓசைப்படாமல் விரைகின்றன. படகுகள் மறைந்த பிறகு அடுத்த ஜாமம் காவல் மாற்றச் செல்லும் வீரர்கள் செய்தி கொடுக்கிறார்கள். வாணகரையில் ஏகப் பரபரப்பு. பிரும்மானந்தரும் குழம்பிப் போய் உட்கார்ந்து விடுகிறார்..? விந்தை நிகழ்ந்த முறை இதுதான். இந்த நிலையை எண்ணிப் பார் பூவழகி! இந்த நிலையை எந்த ராஜதந்திரி சமாளிக்க முடியும்? எல்லாம் ஏதோ மாயஜாலம் போல் இருக்கிறதல்லவா?”

“ஆமாம். ஆனால் மீதியுள்ள யவனரை விசாரிக்க வில்லையா?” என்று கேட்டாள் அல்லி, பிரமிப்புத் தட்டிய குரலில்.
“விசாரித்தோம். மீதி யவனர்களில் பெரும்பாலோர் பேச மறுத்தார்கள். பேசியவர்கள் டைபீரியஸின் அழைப்பால் யவனர்கள் புகார் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். தாங்களும் போக அனுமதி கேட்டார்கள்” என்றார் அடிகள்.

“டைபீரியஸின் அழைப்பா!” என்று வினவினாள் அல்லி.

“ஆம். ராணியின் பெயரால் டைபீரியஸ் யவனர்களை அழைத்தானாம். அன்னப்பறவை சின்னத்தின் ஆணையாக யவன ராஜ குடும்பத்துக்குச் செலுத்த வேண்டிய கடமையை யவனர்கள் அனைவரும் செலுத்த வேண்டுமென்று டைபீரியஸ் கேட்டானாம். சீக்கிரம் யவன ராணிக்கு முடிசூட்டு விழா புகாரில் நடக்குமென்றும் தெரிவித்தானாம். அதைத் தெரிவிக்க அந்த இரண்டு படைத் தலைவர்களை அனுப்பினானாம். அவர்கள் சொன்னதைக் கேட்டதும் யவனர் பலர் பதிலேதும் சொல்லாமல் கிளம்பி விட்டார்களாம்.”

“யார் அந்த இருவர்?” என்றாள் பூவழகி.

“அதைச் சொல்ல மீதி யவனர்கள் மறுக்கிறார்கள். அவர்களை இனி நம்பவும் முடியாதென்று பிரும்மானந்தர் அஞ்சுகிறார். ஆகவே அவர்களில் பலரைச் சிறையும் இட்டார்” என்றார் அடிகள்.

“சொல்லுங்கள்” என்றாள் பூவழகி.

“சிறையிடப்பட்டவர்களில் பெரும்பாலோர் இரண்டு நாட்களுக்கெல்லாம் விடுவிக்கப்பட்டனர். முதலில் வந்து யவனர்களை அழைத்துச் சென்ற இரு படைத்தலைவர்களில் ஒருவன் இரண்டாம் முறையும் இதைச் செய்திருக்கிறான்.”

“யாரவன் இத்தனைத் துணிச்சலுடன் யவனர்களைப் பிரித்து டைபீரியஸுடன் சேர்ந்தவன்? புலியின் குகையில் தலையிடுவது போல் வாணகரைக்குள் நடுநிசியில் புகும் திறன் வாய்ந்தவன்?”

“அதுதான் தெரியவில்லை.”

“தெரிய வேண்டும் அடிகளே! படைத்தலைவர் படை யில் யவனர் பிரிவு பலமுள்ள கிளைகளில் ஒன்றாயிற்றே” என்று குறிப்பிட்டாள் அல்லி.

“ஆம் அல்லி! தெரியவேண்டும். அதுவும் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ள காரியங்களுக்கும் காரணம் தெரிய வேண்டும்” என்றார், அடிகள் சற்று விசனத்துடன்.

“அடுத்து நேர்ந்த காரியங்களா!” என்று பயத்ḥதுடன் வினவினாள் பூவழகி.

அடிகள் அல்லியை நோக்கி, “அல்லி! யவனர் படைப் பிரிவின் பெரும் பாகம் புகாருக்குச் சென்று டைபீரியஸுடன், சேர்ந்த சில நாட்களுக்கெல்லாம் திடீரென யவனர் மரக் கலங்கள் நான்கு புகாருக்கு எதிரில் தோன்றின. அதிலிருந்து பலதரப்பட்ட உடையணிந்த யவனர்கள் பலர் புகாருக்குள் சென்றார்கள். அடுத்த நாள் மரக்கலங்கள் மறைந்தன. ஆனால் மீண்டும் புகாரின் முன்பாகத் தோன்ற ஆரம்பித்தன. டைபீரியஸின் கை இப்பொழுது பெரிதும் வலுவடைந்து விட்டது. அந்த மரக்கலங்களுடன் சேரநாட்டு மரக்கலங்கள் சிலவும் இணைந்திருக்கின்றன. அந்தக் கடற்படை எந்த நேரத்திலும் வாணகரையைத் தாக்க முடியும். அந்த மரக்கலப் படையின் தலைவன் யாரென்பதையும் பரம ரகசியமாக வைத்திருக்கிறான் டைபீரியஸ். எங்கிருந்தோ வந்த இந்த யவனர் மரக்கலப்படையைச் சோழ நாட்டைத் துண்டிக்க வந்த கூர் வேலென்று நம்புகிறார் பிரும்மானந்தர். அதனால் பெரும் விபரீதங்கள் விளைய முடியும் என்று கருதுகிறார். இந்தச் செய்தி மன்னருக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே தெரியும். அதனால்தான் அவர் கலங்கியிருக்கிறார். இந்தப் புது அபாயத்தின் மர்மத்தை உடைக்கத்தான் உன்னை அழைத்து வரச் சொன்னார் பிரும்மானந்தர்” என்றார் அடிகள்.

“என்னையா! இதில் நான் செய்யக் கூடியதென்ன?” என்றாள் அல்லி.

“வேவுத் தொழிலில் உனக்கிணையானவர் யாருமில்லை யென்று பிரும்மானந்தர் கருதுகிறார். உடனே புறப்படு அல்லி. சோழ நாட்டைப் பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. அது எந்தவித ஆபத்து? எப்படி உருவெடுக்கும் என்பதற்குப் பதில் ராணியிடமிருக்கிறது. ஆகவே நீ உடனே புகாருக்குள் நுழைய வேண்டும். அதற்காக உன்னை அழைத்துப் போகவே நான் வந்திருக்கிறேன்” என்று விளக்கினார் அடிகள்.

சற்றுச் சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொண்ட பூவழகி, “அடிகளே! அல்லியைத் தவிர வேவு பார்ப்பவர்கள் யாருமில்லையா?” என்றாள்.

“இல்லை” என்றார் அடிகள் திட்டவட்டமாக…

“அவள் சோழ நாட்டு ராணியாகப் போகிறவள்” என்றாள் பூவழகி.

‘மன்னர் கட்டளைக்குச் சோழ நாட்டு ராணியும் கட்டுப்பட்டவள்” என்று குறிப்பிட்டார் அடிகள்.

“விலக்கு எதற்கும் உண்டு அடிகளே” என்று சுடச்சுடச் சொன்னாள் பூவழகி.

“இல்லை சகோதரி! இந்த விஷயத்தில் இல்லை. நாடு தத்தளிக்கும் போது பதவிகளின் பெயர்கள் பொருளற்றுப் போகின்றன. கடமையொன்றுக்குத்தான் பொருள் உண்டு” என்று சொல்லிக் கொண்டு குகைக்குள் நுழைந்தான் கரிகாலன்.

Previous articleYavana Rani Part 2 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here