Home Sandilyan Yavana Rani Part 2 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

122
0
Yavana Rani Part 2 Ch26 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch26 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 26 அல்லியும் தாமரையும்

Yavana Rani Part 2 Ch26 | Yavana Rani | TamilNovel.in

சோழ நாட்டின் நலன் பாதிக்கப்படும்போது, பெரும் தீமையிலிருந்து நாட்டைக் காக்க அவசியமேற்படும்போது, அது சம்பந்தமான பணியில் இறங்க வேண்டுமானால், அதற்குச் சோழ நாட்டு அரியணையில் அமரவேண்டிய அல்லியும் விலக்கல்ல என்பதைத் திட்டமாகத் தெரிவித்துக் கொண்டு குகைக்குள் நுழைந்த கரிகாலனின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்த பூவழகி, அதில் பெரும் கவலையும் உறுதியும் கலந்து மண்டிக் கிடப்பதைக் கண்டு ஏதும் பேசமாட்டாமல் சில வினாடிகள் நின்றாள். பிறகு அல்லியின் கண்களை ஒரு முறை நோக்கினாள். அல்லியின் கண்கள் என்ன சேதி சொல்லிற்றோ, மற்றவர்களுக்குத் தெரியாதென்றாலும் பூவழகி மட்டும் கணப் பொழுதில் ஒரு முடிவுக்கு வந்து, “வா இன்பவல்லி, வாருங்கள் அடிகளே!” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு குகைக்கு வெளியே சென்றாள். பூவழகி இப்படிச் சாதுரியமாகக் காதலரிருவரையும் விட்டுக் குகைக்கு வெளியே சென்று பல நிமிடங்களுக்குப் பின்பும், அல்லி கரிகாலனை ஏறெடுத்து பார்க்காமலும் ஒரு சொல்கூடச் சொல்லாமலும் தலையைக் கவிழ்ந்துப் பூமியைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். அவள் மனோநிலை கரிகாலனுக்குப் பூரணமாகப் புரிந்திருந்ததால், அவனே இரண்டடி எடுத்து வைத்து அணுகி அவள் மலர்க் கரங்களிரண்டையும் பிடித்துக் கொண்டானானாலும் அவன் வாயிலிருந்து சொல்லேதும் கிளம்பவில்லை. மன்னனாகக் கட்டளையை அனாயாசமாகவும் உறுதியாகவும் உதிர்த்த அவன் நா, காதலன் என்ற முறையில் அந்தக் கட்டழகியின் கைகளை அவன் பிடித்த போது சொல் திறனை அடியோடு இழந்து நின்றது. அவள் மலர்க் கரங்களைப் பிடித்து நின்ற கைகளின் விரல்கள் மட்டும் அவள் உணர்ச்சிகளுடன் பேச விரும்பி, விரல்களுக்கிடையே புகுந்து லேசாக அவற்றை நெருக்கவும் செய்தன. அந்த மலரின் விரல் இதழ்களும் திடீரென வலிமை பெற்று அந்த ஆண்மகன் விரல்களையும் கடுமையாக அழுத்தவே, வாய்கள் பேசாத எத்தனை எத்தனையோ செய்தி அந்த விரல்கள் பேசிக்கொண்டன. பிரிந்தும் நெருங்கியும் பின்னியும் சங்கடப்பட்டு இணைந்தும் நின்ற அந்த இருவர் விரல்களும் இருவர் உடல்கள் பூராவும் பாய்ச்சிவிட்ட உணர்ச்சி அலைகள், அந்த இரு உடல்களையும் சற்று நெருங்க வைக்கவே, இடது கையின் விரல்களை விடுவித்துக் கொண்ட கரிகாலன் அல்லியின் அழகிய தோளின் மீது கையை வைத்தான்.

இன்ப வேதனையடைந்த அல்லி சிறைப்பட்டுக் கிடந்த இன்னொரு கையின் விரல்களால் அவன் கை விரல்களை நொறுக்கிவிடுவது போல் மிகவும் கெட்டியாகப் பிடித்தாள். அந்த நொறுக்கலுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பதைக் கரிகாலன் விரல்களும் நிரூபித்ததன் விளைவாக அவள் பூவிதழ் விரல்கள் மட்டுமின்றி, அவன் அழுத்தப் பிடித்த கையும் கன்னிச் சிவந்தது. அப்படிச் சிவந்த கையில் தன் இதழ் களைப் பொருத்தும் எண்ணத்துடன் அதைத் தூக்கிய கரிகாலன் அதில் கண்களை ஓட்டியதும் சற்றே நின்று, “ஒரு சந்தேகம் அல்லி” என்று ஏதோ ரகசியம் பேசுவது போல் சொன்னான்.

அல்லியின் உணர்ச்சிகள் அதிகம் பேச முடியாததால் குனிந்த முகத்தைத் தூக்காமலே அவள் பெரிதும் சங்கடப்பட்டு, “என்ன சந்தேகமாம்?” என்று கேட்டாள்.

“அல்லி தாமரையாகுமா, அல்லி” என்று கேட்டான் கரிகாலன் அவள் உள்ளங்கையை மீண்டும் உற்று நோக்கி.

“என்ன கேள்வி இது?” என்று வெட்கத்தால் பேச மாட்டாமல் பேசினாள் அல்லி.

“பதில் சொல்.”

“அவசியம் சொல்ல வேண்டுமா?”

“ஆமாம்.”

“சொல்லாவிட்டால்?”

“தண்டனை கிடைக்கும்.”

“உங்கள் ராஜாங்கத்தில் எதற்கும் தண்டனைதான் போலிருக்கிறது?”

“பொதுவாகக் கிடையாது அல்லி. ஆனால் இந்த ராஜாங்கத்துக்கு நான் வரும்போது தண்டனைதாḥன் பல விதத்தில் கொடுப்பேன்.”

“இந்த ராஜாங்கமா!” என்றாள் அல்லி.

“ஆமாம். எனக்கு ராஜாங்கங்கள் இரண்டு.”

“அப்படியா!”
“ஆமாம். ஒன்று நாடு சம்பந்தமானது. இன்னொன்று காதல் சம்பந்தப்பட்டது.”

இதைச் சொல்லிய கரிகாலன் அவன் மலர்க் கையை ஓர் அழுத்து அழுத்தினான்.

“உம்! வலிக்கிறது” என்றாள் அல்லி வலியிலும் உள்ளூர உவகை பொங்க.

“தண்டனை என்ன இன்பமாகவா இருக்கும்?” என்று கேட்டான் கரிகாலன்.

அந்தத் தண்டனை அவளுக்கு எத்தனையோ இன்ப மாகத்தானிருந்தது. ஆனால் அந்த அபலை அதை எப்படிச் சொல்வாள்! உள்ளத்திலிருந்த உவகையை வெளிக்குக் காட்ட முடியாததால், வெளியே செல்லமாகச் சிணுங்கி முகத்திலும் பொய்க் கோபத்தைக் காட்டி, “போதும் போதும் விடுங்கள்” என்றாள்.

“கேட்டதற்குப் பதில் சொன்னாலொழிய முடியாது” என்றான் கரிகாலன்.

“என்ன கேட்டீர்கள்?”

“அல்லி தாமரையாகுமா என்று கேட்டேன்.”

“இது என்ன கேள்வி?”

“அல்லியானால் வெள்ளை ராசிதானே அதிகம்!”

“ஆமாம்!”

“தாமரையில்?”

“சிவப்பு ராசி அதிகம்.”

“ஆகவே வெள்ளை அல்லி செந்தாமரையாகுமா என்று கேட்டேன்.”

“ஆகாது. பதில் சொல்லிவிட்டேன். விடுங்கள் என்னை .”

“நான் ஆகும் என்று சொல்கிறேன்.”

“எங்கே ஆகியிருக்கிறது!”

“இதோ உன் உள்ளங்கையைப் பார்” என்று அவள் உள்ளங்கையையே அவளிடம் காட்டிய கரிகாலன், “இது சாதாரணமாக வெண்மையான அல்லி போலிருக்கும்” என்றான்.

“ஊஹூம்…” என்று அவள் புன்முறுவல் காட்டினாள்.

“இப்பொழுது செந்தாமரையாகி விட்டது பார், எத்தனை குங்குமச் சிவப்பாயிருக்கிறது?” என்று சுட்டிக் காட்டிய கரிகாலன். பொய்க் கவலையையும் முகத்தில் காட்டினான்.

“அல்லி ஏன் தாமரையாகிறது தெரியுமா?” என்று கேட்டான் கரிகாலன்.

“ஏன்?”

“மந்திரவாதியின் கைப்பட்டிருக்கிறது.”

இதைக் கேட்ட அல்லி வெட்க மிகுதியால் இரண்டு கைகளாலும் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். முகத்தைப் புதைத்துக் கொண்டு விளையாடும் சிறு குழந்தையைப் போல் தன் எதிரே நின்று அந்த எழிலரசியை இடது கையால் அணைத்துத் தனக்காக இழுத்துக் கொண்ட கரிகாலன், இன்னொரு கையால் அவள் முகத்தை உயர்த்தி, “அல்லி, இதோ என்னைப் பார்” என்றான்.

அல்லி விழிகளைத் திறக்க மறுத்தாள். “வேண்டாம்! வேண்டாம்! இந்தச் சொர்க்கத்திலேயே நானிருக்கிறேன்” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.

“கண்களைத் திற அல்லி, இல்லையேல் நான் திறப்பேன்” என்ற கரிகாலன் சொல்லைக் கேட்ட அல்லி மெள்ளத் தன் மலர் விழிகளைத் திறந்தாள். அவற்றுக்கு எதிரே வெகு அருகில் நெருங்கி இருந்த கரிகாலன் கண்கள், காதல் வெள்ளத்தை அவள் கண்களில் பாய்ச்சின.

இரு ஜோடி கண்களிலிருந்து பிரவகித்து எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட அந்தக் காதல் வெள்ளத்திலே நீண்ட நேரம் ஆழ்ந்துவிட்ட அந்த இருவரில் முதன் முதலாக நனவுலகத்தை அடைந்த அல்லி, “மன்னவா!’ என்றாள்.

மன்னவனிடமிருந்து பதில் ஏதுமில்லை. “என் மன்னவா!” என இரண்டாம் முறையும் அழைத்தாள் அவள்.

“உம்…” என்ற சப்தம் மட்டும் வெளிவந்தது கரிகாலனிட மிருந்து.

“கலங்காதீர்கள்” என்றாள் அல்லி, அவன் உள்ளத்தில் எழுந்து அலைமோதிக் கொண்டிருந்த எண்ணங்களைப் பூரணமாக அறிந்து.

“கலக்கம் ஏதுமில்லை” என்று கரிகாலன் மெள்ளக் கூறினான், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

“பொய் சொல்லாதீர்கள். உங்கள் உள்ளத்தில் ஓடும் கவலை எனக்குப் புரியாமல் யாருக்குப் புரியும்?” என்றாள் அல்லி உணர்ச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டு.

“ஆம் அல்லி, ஆமாம். என் மனம் ஒரு நிலையில் இல்லை” என்று ஒப்புக் கொண்டு கவலைப் பெருமூச்சும் விட்டான் கரிகாலன்.

“அபாயத்தில் என்னைப் பிடித்துத் தள்ளுவதை எண்ணிக் கலங்குவீர்கள். இந்தப் பணியில் நான் உயிரிழக்கவும் நேரிடும். அது உங்களுக்கும் தெரியும். இந்த உயிர் இனிப் போனாலும் எனக்குத் துன்பமில்லை. இன்பம்தான்” என்ற அல்லி அவனை நெருங்கி அவன்மீது சாய்ந்தாள்.

“என்ன அப்படிச் சொல்கிறாய் அல்லி! என்னை விட்டு ஒரேயடியாகப் பிரிந்து விடுவது உனக்கு இன்பமாகவா இருக்கிறது” என்று வினவினான் கரிகாலன்.

“பிரிவு துன்பம்தான் என் மன்னவா! ஆனால் என் உயிரை இழப்பதில் துன்பமில்லை. என் இதய மன்னன் இணையற்ற சோழர் அரியணையில் அமர, அவர் கமலத் திருவடிகளில் குறுநில மன்னர் சிரங்கள் தாழ, இந்த உயிரை அர்ப்பணிக்க முடியுமென்றால், அதைவிட எனக்கு இன்பம் வேறென்ன இருக்க முடியும்? உங்களுக்கு நாடு பெரிது, அதன் சேவைக்கு உங்கள் ராணியும் விலக்கல்ல என்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. யாராவது என்னிடம் வந்து, ‘உனக்குச் சோழநாடு முழுவதும் வேண்டுமா அல்லது உன் இதயக் காவலர் வேண்டுமா?’ என்று வினவினால் தடையின்றிச் சொல்வேன் பின்னவர் வேண்டுமென்று. எனக்குச் சோழ நாடு முக்கியமல்ல. ஏன், உலகமே முக்கியமல்ல. கற்புடைய மங்கையருக்குக் கணவனைவிடச் சிறந்த செல்வம் எதுவுமில்லை. ஆகவே உங்கள் கட்டளைப்படி போகிறேன். ஒருவேளை நான் நிறைவேற்றச் செல்லும் பணியில் நான் இறந்துவிட்டால் என்றாவது ஒருநாள் நினையுங்கள். ‘அல்லியென்று ஒரு பேதை இருந்தாள்’ என்று” எனக் கூறிய அல்லி, அதற்குப் பின் நீண்ட நேரம் மௌனமே சாதித்தாள். பிறகு உணர்ச்சிகளைச் சரேலென்று கட்டுப்படுத்திக் கொண்டு பிரயாண உடையணியக் குகையின் மூலைக்குச் சென்று, “வெளியே இருங்கள் மன்னவா! பயணத்துக்குத் தயார் செய்து கொண்டு வருகிறேன்” என்று கூறினாள்.

மன்னவன் வெளியே செல்லவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு எட்டில் குகையின் மூலையை அடைந்து அல்லியின் அழகிய தோளை முரட்டுத்தனமாக உலுக்கினான். அல்லி உணர்ந்து கெண்டாள், இது காதல் உந்திய சோகத்தால் ஏற்பட்ட வேகம் என்று. அவள் எண்ணியது சரியாயிற்று. அடுத்த வினாடி பிடித்த முரட்டுத்தனத்திலேயே அவளை விடுவிக்கவும் செய்த கரிகாலன், சோகம் தாங்க மாட்டாமல், அதிதுரிதமாகக் குகையைவிட்டு வெளியேறினான்.

அவன் சென்ற அவசரத்தைப் பார்த்துக் கொண்டே நின்ற அல்லி, கடைசியாகப் பெருமூச்சு விட்டுப் பெட்டியிலிருந்து உடைகளை எடுத்துப் பார்த்துப் பழையபடி உழவர் உடையை அணிந்து கொண்டாள். பிறகு பெட்டியிலிருந்த குறுவாளில் ஒன்றை எடுத்துக் கூர் பார்த்து உறையில் போட்டு இடுப்பிலும் செருகிக் கொண்டாள். இந்த ஏற்பாடுகள் முடிந்ததும் மனத்தின் கிளர்ச்சியைப் பெரிதும் அடக்கி முகத்தில் ஒரு நிதானத்தை வரவழைத்துக் கொண்டு குகைக்கு வெளியே வந்தாள். அவள் நிலையைக் கண்டு பூவழகி மட்டு மன்றிச் சமண அடிகள்கூடப் பிரமித்துப் போனார்.

மன்னன் குகையிலிருந்து மிக அவசரமாக நிலை குலைந்து வெளியே சென்றதைக் கண்ட பூவழகியும் அடி களும், அல்லியின் நிலையும் அப்படித்தானிருக்குமென்று நினைத்தார்களாதலாலும், அப்படி அவள் கலக்கத்துடன் வெளியே வரும் பட்சத்தில் அவளுக்கு ஆதரவு சொல்லத் தயாராயிருந்தார்களாதலாலும், அத்தகைய ஆதரவுக்கு ஏதும் அவசியமின்றி உறுதியான முகத்துடன் உழவன் உடையில் பயணத்துக்குத் தயாராக வெளியில் வந்த அல்லியைக் கண்டதும் பெரும் வியப்பையே அடைந்தார்கள். இம்முறை அல்லி எந்தப் பணியை நோக்கிச் செல்கிறாளோ அந்தப் பணியின் அபாயத்தைப் பூரணமாக அடிகள் உணர்ந்திருந்தா ராகையால் அதன் விளைவாக, கரிகாலன் புருஷனாகையால் அதிகமாகக் கலங்காவிட்டாலும் அல்லி கலங்கியே போவா ளென்று நம்பியிருந்தார். ஆனால் நிலை நேர்மாறாகி விட்டதைக் கண்ட அடிகள் அல்லியின் திட நெஞ்சை உள்ளூர ஒரு முறை பாராட்டவும் செய்தார். அவர்களின் மனத்திலோடிய எண்ணங்களே பூவழகியின் இதயத்திலும் ஓடியதாகையால் அவள் குகைக்கு வெளியே வந்த அல்லியை நோக்கி, “அல்லி! இது மகத்தான் தியாகம் அல்லி! உன்னை நாடு மறவாது” என்று அவள் கைகளையும் நன்றிக்கு அறிகுறியாகப் பிடித்துக் கொண்டாள்.

“நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய் கிறேன் அக்கா. அதுமட்டுமா? இது அவருக்கு நான் செலுத்த வேண்டிய கடமையல்லவா?” என்று கூறினாள் அல்லி.

“நீ அபூர்வப் பிறவி அல்லி. உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? இந்த நாடுதான் என்ன கைம்மாறு செய்யப் போகிறது. புகார் பூரணமாக யவனர் ஆதிக்கத்துக்குட்பட்டுள்ள சமயத்தில் நீ அங்கு செல்கிறாய். உன் உயிருக்கு…” என்ற பூவழகி, உணர்ச்சி மிகுதியால் மேலே பேச முடியாமல் பேச்சை நிறுத்தினாள்.

“எந்த அபாயமும் நேரிடாது அக்கா! ஏற்கெனவே நான் வேவு பார்த்த இடம்தானே!” என்று தைரியம் சொன்னாள் அல்லி.

“அந்த இடம் முன்போல் இல்லை அல்லி. அது இப்பொழுது யவனர் கோட்டை மேல் திசைப் போர் முறைகளை நன்றாக அறிந்த டைபீரியஸின் வசமிருக்கிறது. தவிர நீ குகைக்குள்ளிருந்த சமயத்தில் அடிகள் சொன்ன விஷயங்களும் எனக்குப் பயத்தைத் தருகின்றன.”

“அடிகள் என்ன சொன்னார்?”

“நீ புகார் நகரை மட்டுமல்ல, அதற்குள் அடங்கிய மருவூர்ப்பாக்கத்தையும் பட்டினப்பாக்கத்தையும் மட்டுமல்ல, புகாரின் எதிரே கடலில் அடிக்கடி தோன்றி மறையும் மரக் கலங்களின் மர்மத்தையும் அறிய வேண்டுமாம்.”

இதைக் கேட்ட அல்லி ஒரு கணம் திகைத்தாளானாலும் அடுத்த கணம் திகைப்பைத் துடைத்துத் தள்ளி, “அக்கா, ஆபத்து ஏற்படுவதானால், அது நிலத்தில் ஏற்பட்டாலென்ன, நீரில் ஏற்பட்டாலென்ன?” என்று கேட்டாள்.

பூவழகியின் கண்களில் நீர் திரண்டது. “அல்லி, என்ன சொல்வதென்றே எனக்குப் புரியவில்லை” என்றாள்.

“அக்கா?” என்று அழைத்தாள் அல்லி.

“ஏன் அல்லி ?”

“ஒரு உபகாரம் செய்வாயா?”

“சொல் அல்லி.”

“ஒருவேளை நான் இம்முறை எதிரிகளிடம் சிக்கிக் கொண்டு என் உயிர் போகுமானால்…”

பூவழகி அவள் பேச்சைச் சட்டென்று இடைமறித்து, “போதும் போதும், நிறுத்து. என்னால் தாங்க முடியாது” என்றாள்.

“அக்கா! பெண் இதயம் பெண்ணுக்குத்தான் தெரியும். அதனால்தான் சொல்கிறேன். இந்த ஒரு வேண்டுகோளை மட்டும் மறுக்காதே. ஒருவேளை நான் உயிர் துறந்தால் மன்னவர் மனம் உடைந்து போகும். அதற்கு வேறொருத்தி யைத் துணை சேர்த்து உடைந்த மனத்தினை நீ ஒட்டவைக்க வேண்டும். இது அல்லியின் வேண்டுகோள் மட்டுமல்ல. உயிருடனிருந்தால் பிற்காலத்தில் சோழநாட்டு ராணியாகக் கூடிய நாங்கூர்வேளின் மகளது கட்டளையும் கூட” என்று கூறிய அல்லி, எதிரே கரிகாலனே பிடித்துக் கொண்டு வந்த புரவி மீது ஏறி, அடிகள் மற்றொரு புரவியின் மீது ஏறித் தொடருவதற்குக் கூடக் காத்திராமல் வேகமாகப் புரவியைத் தட்டி விட்டாள்.

அல்லியையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்ற கரிகாலன் பெருமூச்சுவிட்டான். அடிகளை நோக்கி, “சீக்கிரம் செல்லுங்களேன் அடிகளே! பேச்சு எதுவும் வேண்டாம்” என்று கண்டிப்பாயக் கூறிய கரிகாலன் வேறு திசையில் வெகு வேகமாகச் சென்றான். அடிகள் பெண்களிருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, கிளம்பி, காட்டு முகப்பில் அல்லியைச் சந்தித்தார்!

“சிறிது நேரமாகிவிட்டது அல்லி!” என்று பேச்சும் கொடுத்தார்.

“பாதகமில்லை” என்று சர்வ சாதாரணமாகக் கூறிய அல்லி அவரை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் குதிரையை நடத்தினாள். பல இடங்களில் தங்கியும் மறைந்தும் காவிரியின் வடபுறமாகச் செல்லாமல், காவிரியைப் புகாருக்கு வெகு தூரம் முன்பாகவே கடந்து தென்புறமாகப் பயணம் செய்து, மறுநாள் இரவு வாணகரையை அடைந்த அல்லியையும் அடிகளையும் உச்ச மாளிகையின் வாயிலிலேயே சந்தித்த பிரும்மானந்தர், “அல்லி! நல்ல சமயத்தில் வந்தாய், வா உள்ளே. செய்தி சொல்கிறேன்” என்றார்.

உள்ளே சென்றதும் உலகமே புரண்டாலும் எந்தக் கவலையையும் காட்டாத பிரும்மானந்தர் முகம் சொல்ல வொண்ணாத கவலையைக் காட்டியது. பேசத்துவங்கியதும் சொற்கள் உறுதியாக வராமல் தத்தித் தத்தி உதிர்ந்தன. அப்படி உதிர்ந்த சொற்களில் விரிந்த கதையை விளைந்துள்ள அபாயத்தை, குலை நடுக்கமெடுக்கும் விபரீத நிகழ்ச்சிகளைக் கேட்ட அல்லியின் ரத்தம் உரைந்து போகும் நிலைக்கு வந்து விட்டது. அவள் முகமும் வெண்மையான அல்லியைவிட வெளெரென்று வெளுத்தது. பயத்தை அறியாத இதயத்தில் கூட ரத்தம் வரண்டிருக்க வேண்டும். அதுவும் வெளுத்துத் தான் விட்டதோ என்று அல்லி அஞ்சினாள். திகில் அவளைப் பரிபூரணமாக ஆட்கொண்டது.

Previous articleYavana Rani Part 2 Ch25 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here