Home Sandilyan Yavana Rani Part 2 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

125
0
Yavana Rani Part 2 Ch27 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch27 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 27 தொடுவான விளக்குகள்

Yavana Rani Part 2 Ch27 | Yavana Rani | TamilNovel.in

அல்லியின் அழகிய வதனத்தில் படர்ந்த அபரிமித அச்சத்தையும், பருவத்தின் துடிப்பால் சிவப்புத் தட்டிக் கிடந்த அவள் கன்னக் கதுப்புக்கள் உட்பட முகம் பூராவும் உதய கால மதிபோல் வெளுத்துவிட்டதையும் கண்ட பிரும்மானந்த அடிகள் எள்ளளவும் வியப்படையவில்லை. தம்மையே நடுங்க வைக்கும் புகாரின் சூழ்நிலை, அபலையும் கரிகாலன் காதலில் கட்டுண்டு தவிப்பவளுமான அந்தக் கட்டழகியின் உணர்ச்சி களை உலுக்கிவிட்டது ஒரு பிரமாதமல்ல என்றே நினைத்தார்.

அப்படி அவள் உணர்ச்சிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்தாராகையால் வாணகரை உச்சி மாளிகை வாயிலில் சந்தித்த போதும், பிறகு சில நாழிகைகளும் அவளுக்குத் தகவலை உணர்த்தாமலே மெள்ள அவளை வாயிலிலிருந்து உச்சி மாளிகையின் மாடி அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த பஞ்சணையில் உட்காரச் சொன்னார்.

அல்லி பஞ்சணையில் உட்காரவில்லை. வாயிலில் சந்தித்த போதே, ‘அல்லி! நல்ல சமயத்தில் வந்தாய். வா, செய்தி சொல்கிறேன்’ என்று அவசர அவசரமாகத் தன்னை உள்ளே அழைத்த பிரும்மானந்தர் கூடத்துக்கு வந்ததுமே சிறிது நிதானப்பட்டுவிட்டதையும், பிறகு கூடத்தில் செய்தி எதுவும் சொல்லாமல், மாடியறைக்கு அழைத்து வந்து பஞ்சணையில் ‘உட்காரும்படி உபசரித்துக் காலத்தை ஓட்டுவதையும், கண்ட அல்லி, பிரும்மானந்த அடிகள் விஷயத்தைச் சொல்லக் கூட அஞ்சுகிறாரென்பதைப் புரிந்து கொண்டாளாகையால், ‘அப்படிப் பிரும்மானந்தரையே அயரவைக்கும் நிலை என்னவாயிருக்கும்? போருக்கோ, பூசலுக்கோ பிரும்மானந்தர் அஞ்சுபவரல்லவே?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தன்றி, பிரும்மானந்தர் கூறியபடி மஞ்சத்தில் உட்காராமல் சாளரத்தருகில் சென்று வெளியே தன் பார்வையை ஓட விட்டாள். அவள் கண்ணெதிரே விரிந்தது மனோகரமான இன்பக் காட்சி.

காவிரியாள் பெருவேகத்துடன் கடலரசனுடன் கலந்த சங்கமத் துறையில் அன்று சற்று நிலவு ஏறியிருந்ததன் காரண மாகப் பெரிய பெரிய அலைகள் எழுந்து மோதிக் கொண்டிருந்தன. அந்தச் சங்கம அலைகளில் மூழ்கினால் மறுமையில் பொன்னுலகம் கிடைக்கும் என்பதை வலியுறுத்த இஷ்டப்பட்டதுபோல் புகாரின் பெரும் கலங்கரை விளக்கம் தன் வெளிச்சத்தை அந்த அலைகளில் பாய்ச்சி, அவற்றைப் பொன்னிறம் பெறும்படி செய்திருந்தது. எதிரே கடலில் ஆடி நின்ற இரண்டொரு வர்த்தக மரக்கலங்களையும் அவற்றிலிருந்து சரக்கை ஏற்றிக் கொண்டு காவிரியின் புனல் பரப்பை நோக்கி எழும்பியும் தாழ்ந்தும் வந்து கொண்டிருந்த சில படகுகளையும் தவிர ஆபத்தைக் குறிக்கும் வேறெந்த மரக்கலங் களும், அல்லியின் கண்களுக்குத் தெரியவில்லை. கடற்கரை யின் கருமணல் திட்டுகளிலிருந்த பரதவர் குடிசை வட்டாரங் களில் பாட்டும் கூத்தும் வழக்கம் போல் கேட்டுக் கொண் டிருந்தன. சங்கமத் துறைக்கருகாமையிலிருந்த சுங்கச் சாவடி களிலும் வழக்கமாகக் கேட்கும் காவலர், வர்த்தகர் கூச்சலே கேட்டுக் கொண்டிருந்தன. கடலோடும் பரதவர்க்கும் வீட்டடையாளம் காட்டப் பரதவர் மங்கையர் மாடங்களில் ஏற்றிவைக்கும் விளக்குகள் அன்றுமிருந்தன. பழைய புகாருக்கும் பிரும்மானந்தர் குறிப்பிடும் புதுப் புகாருக்கும் எந்தவித வித்தியாசமும் தெரியாததால் அல்லி நினைத்தாள், ‘ஒருவேளை பிரும்மானந்தர் உள்ள நிலையைப் பெரிதுபடுத்தி அனாவசியமாகப் பயப்படுகிறாரோ’ என்று. ஏனென்றால் அவள் கண்முன்னே தெரிந்ததெல்லாம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் புகாரின் இன்பக் காட்சிதான். புகாரில் யவனர்கள் கை மேம்பட்டுவிட்டதென்பதிலோ, அதனால் சோழ நாட்டு ஒற்றுமைக்கும் சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டென்பதிலோ அல்லிக்குச் சந்தேகமில்லை. ஆனால் சென்ற அறு மாதங்களாக இல்லாத புதுநிலை ஏதும் புகாரில் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. கண்களுக்கு எட்டாத அபாயம் இருக்கிற தென்பது பிரும்மானந்தர் மெள்ள மெள்ள விளக்கிய பின்பு தான் அவளுக்குப் புலனாயிற்று.

அல்லி சாளரத்தின் மூலம் புகாரின் பெருங்கடலையும் சங்கமத் துறையையும், பிறகு மருவூர்ப்பாக்கத்தையும் பட்டினப்பாக்கப் பகுதிகளையும் நீண்ட நேரம் கவனித்ததையும், அதனால் அவள் வதனத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படாததையும் அவள் தன்னை நோக்கித் திரும்பிய பின்பே உணர்ந்த பிரும்மானந்த அடிகள், தமது சின்னஞ்சிறு யானைக் கண்களை அவள் மீது நிலைநாட்டி, “ஆராய்ச்சி முடிந்து விட்டதா அல்லி?” என்று வினவினார்.

“ஆராய்ச்சி ஏதும் செய்யவில்லை அடிகளே! பழைய புகாருக்கும் புதிய புகாருக்கும் என்ன வித்தியாசமிருக்கும் என்று பார்த்தேன்” என்றாள் அல்லி அவரைத் தைரியத்துடன் நோக்கி.

“ஏதாவது வித்தியாசத்தைக் கண்டாயா?” என்று வினவினார் பிரும்மானந்தர்.

“இல்லை. எந்த வித்தியாசமும் எனக்குப் புலப்பட வில்லை. வழக்கமாக கடலில் ஆடி நிற்கும் நாவாய்கள் நிற்கின்றன. வழக்கமாக வரும் படகுகள் வருகின்றன. பரதவரின் ஆடல் பாடல்களும் கேட்கின்றன” என்றாள் அல்லி .

“உண்மைதான் அல்லி! சாதாரணக் கண்களுக்குப் புகாரில் வித்தியாசம் ஏதுமில்லைதான்” என்றார் பிரும்மானந்தர்.

“தாங்கள் ஆராய்ச்சிக் கண்களுக்கு வித்தியாசமிருக்கும் போலிருக்கிறது” என்று குரலில் இகழ்ச்சி தொனிக்கக் கேட்டாள் அல்லி.

அல்லியின் குரலில் தொனித்த இகழ்ச்சியைப் பிரும்மா னந்தர் கவனிக்கவே செய்தாராகையால் உள்ளூர இருந்த அத்தனை கிலியிலும் சுபாவமாகத் தமக்கிருந்த விஷமத்தையும் காட்ட முற்பட்டு, “ஆமாம் அல்லி! ஆண்டவன் என்ன காரணத்தாலோ எதையும் கவனிக்கும் கண்களை இந்த அடியவனுக்கு அளித்து விட்டான். அப்படி அளித்திராவிட்டால் படைத்தலைவன் மறைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகும் வாணகரை சோழர் வசமிருக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டிராது. வாணகரை இருப்பதால் தானே டைபீரியஸை நாம் கவனிக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று அலுத்துக் கொள்வது போல் பேசினார்.

விஷமமாக அவர் பேச முற்பட்டதைப் புரிந்து கொண்ட அல்லி, தனக்கும் அப்படிப் பேச முடியும் என்பதைக் காட்டி, “உண்மைதான். வாணகரை நம்மிடமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் படை வீரர்களில்தான் பாதிப் பேர் இல்லை ” என்றாள்.

“இங்கிருந்து பிரிந்து போய்விட்ட யவனர்களைச் சொல்கிறாயா?” என்று கேட்டார் பிரும்மானந்தர். தமது மார்பிலிருந்த மகர கண்டியின் பதக்கத்தை ஒருமுறை தடவி விட்டுக் கொண்டு.

“ஆமாம். அதனால் பாதகமில்லை போலிருக்கிறது” என்றாள் அல்லி மீண்டும்.

“பாதகமிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா அல்லி?” என்று கேட்டார் அடிகள்.

“என்ன நடந்திருக்கும்?”

“நன்றாக யோசித்துப் பார். புகாரில் இருப்பவன் போர்த் தந்திரங்களை நன்றாக அறிந்த எதிரி. இப்பொழுது படையும் அவனுக்குத் திரண்டுவிட்டது. போதாக்குறைக்கு இங்கிருந்த யவனர்களும் அவனிடம் சேர்ந்து விட்டார்கள். ஏற்கெனவே அவனைத் தெய்வம் போல் மதிக்கும் யவனர், புகாரை அவன் பூரணமாகச் சுவாதீனப்படுத்திக் கொண்டதும் அவனிடம் பன்மடங்கு பயபக்தியுடன் இருக்கிறார்கள். புகாரை நில மார்க்கத்தில் காக்க யவன வீரர்களைத் திரட்டிய டைபீரியஸ், அந்நகரை நீர் முனையிலும் காக்க அதோ அந்த இரண்டு பெரிய தூண்களை இந்திர விழா மாளிகை மீதும் எழுப்பிவிட்டான். போர்க்கலங்களைக் கொண்ட அந்தப் பெரும் பொறிகள் இருக்கும் வரை டைபீரியஸின் அனுமதியின்றி மரக்கலங்களோ, படகுகளோ புகாரை நாட முடியாது. இத்தகைய பகைவனுக்கு, எதிரிலிருக்கும் வாணகரையை, தலைவனற்ற இந்தப் படைத்தளத்தை, முறியடிப்பது எத்தனை நிமிடங்களாகும் சிந்தித்துப் பார் அல்லி, நன்றாகச் சிந்தித்துப் பார்” என்று பிரும்மானந்தர் ஓரளவு உணர்ச்சியுடன் பேசினார்.

“உண்மைதான் பிரும்மானந்தரே! அவன் ஏன் வாண கரையை அணுகவில்லை?” என்று ஆச்சரியத்துடன் வினவி னாள் அல்லி.

“இந்தப் பிரும்மானந்தன் இருப்பதால் அணுகவில்லை. இருமுறை அவன் என்னை ஏமாற்றியது உண்மை . இளஞ் செழியன் மிகவும் சிரமப்பட்டு நேராக வாயில்களை ஒன்றன் பின் ஒன்றாக வைக்காமல் கோட்டைச் சுவர்களைப் பின்னிப் பின்னி, பல பிராகாரங்களாகக் கட்டி, ஒரு வாயிலுக்கும் இன்னொரு வாயிலுக்கும் சம்பந்தமில்லாமல் தள்ளி வைத்திருக்கும் இந்தக் கோட்டைக்குள் அவன் யாரையோ அனுப்பி யவனர்களை அழைத்துச் சென்றது எனக்குப் பெரும் தோல்விதான். ஆனால் வாணகரையின் அமைப்பு, அதையும் விடக் குமரன் சென்னி, பரத வல்லாளன் போன்ற தலைவர் களுடைய போர்த் திறன், அந்தத் தலைவர்களைப் பின்பற்றும் படைகள், இளஞ்செழியனால் பயிற்றுவிக்கப்பட்டவை என்ற அறிவு, இவைதான் இன்னும் டைபீரியஸின் கரங்களைத் தேக்கி வைத்திருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம் அல்லி! என்று வாணகரை விழுகிறதோ அன்று சோழநாடு விழுந்த விடும். ஆகவே இங்குள்ள படைகள் முழுவதையும் பலி கொடுத்தாவது இதைக் காக்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார் பிரும்மானந்தர்.

“வாணகரை விழுந்தால் சோழநாடு விழுந்ததா?” ஆச்சரியத்துடன் வினவினாள் அல்லி.

“ஆம் அல்லி! சோழ நாட்டின் கடல் வாயிலான புகார் முழுதும் தமிழருக்கு அடைபட்டு விடுவதற்கு ஒரே தடையாக இருப்பது வாணகரை. இது டைபீரியஸின் கையில் சிக்கினால் கடல் வழி அடைபடும். பிறகு சேர, பாண்டியர் ஆதிக்கம் தமிழகத்தில் ஏற்படும்…” என்று சொல்லிக் கொண்டு போன பிரும்மானந்தரை இடைமறித்த அல்லி, “மன்னர் இருக்கிறா ரல்லவா?” என்றாள்.

“கரிகாலன் படை சிறியது. இன்னும் திரட்டப்பட்டு வருகிறது. அவற்றுக்கு ஆயுதங்கள் தேவை. பயிற்சி தேவை. பயிற்சியுள்ள வீரர்கள் அப்படையில் இருக்கத்தான் இருக் கிறார்கள். ஆனால் புதிதாகச் சேருபவர்களுக்குப் போர்ப் பயிற்சியளிக்க நாளாகும். அந்தப் பயிற்சி பெறுவதற்குள் வேளிர்களும் சேரபாண்டியரும் கரிகாலன் படைகளை நசுக்கி விட முடியும். இன்று நாடு இருப்பது மிகவும் ஆபத்தான நிலை அல்லி. அந்த நிலையைச் சீர்படுத்தவல்ல ஒரே ஒரு ரத்தின மான பிரதேசம் வாணகரை. காரணமில்லாமல் இளஞ்செழியன் இந்தச் சிறுகுன்றைப் பெரும் படைத்தளமாக்கவில்லை…” என்று கூறிய பிரும்மானந்தர், “இப்படி வா!” என்று அல்லியை அழைத்துக் கொண்டு மீண்டும் சாளரத்தை நோக்கிச் சென்று, “அதோ புகாரின் காவிரிக் கரையோரக் கோட்டைச் சுவர்களை நன்றாகக் கவனி” என்றார்.

அல்லி கவனித்தாள். மெள்ள மெள்ள அவளுக்கு உள்ள நிலைமை புரியலாயிற்று. “ஆம், ஆம், புரிகிறது அடிகளே!” என்றாள் சிறிது அச்சத்துடன்.

“என்ன புரிகிறது மகளே!” என்று கேட்டார் பிரும்மானந்தர்.

“சுவர்களில் பரதவர் வலை வீசி ஏறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தளைகள் ஒன்றுகூடக் காணோம்.”

“இங்கு மட்டுமல்ல அல்லி, கடற்கரையை நோக்கியுள்ள கோட்டைச் சுவரிலும் வலை மாட்டும் தளைகள் கிடையாது.”

“கடற்கோள் ஏற்பட்டால் அலைகள் பனைமர உயரம் கிளம்புமே? அப்பொழுது பரதவர் என் செய்வார்கள்?”

“வலைகளை வீசிச் சுவர்களில் மாட்டி ஏறத் தளைகள் இல்லாததால் சாவார்கள்.”

“புகாருக்குள் இனி…”

“தமிழர்கள் யாரும் புக முடியாது, டைபீரியஸ் உத்தர வின்றி.”

“அபாயமான நிலைதான்.”

“அபாயமான எதிரி, டைபீரியஸ் ஒவ்வொரு நிகழ்ச்சியி லிருந்து ஒவ்வொரு படிப்பினையை அடைகிறான். ராணியைச் சாளரத்தின் மூலமாக முன்பு இளஞ்செழியன் சிறையெடுத்து இங்கு கொண்டு வந்தான். அதற்குச் சுவர்த் தளைகள் காரணமென்பதை அறிந்த டைபீரியஸ் தளைகள் எல்லாவற்றையும் நீக்கினான். காவிரியின் நீரடியிலுள்ள சுரங்க வழியாக நீ சென்றதையறிந்த டைபீரியஸ் அத்தகைய வழிகள் அனைத்தையும் மூடிவிட்டான்.”

“என்ன! நான் சுரங்க வழியாகச் சென்று ராணியை அழைத்து வந்தது டைபீரியஸுக்குத் தெரியுமா?”

“தெரியும் என்று ராணி செய்தியனுப்பினாள். அவள் ஈர உடைகள் அறை மூலையிலிருந்ததைக் கண்டு டைபீரியஸ் சந்தேகித்துவிட்டானாம்.”

அல்லி பெருமூச்சு விட்டாள். “மிகவும் அபாயமான எதிரிதான்” என்று நடுங்கும் குரலில் சொல்லவும் சொன்னாள்.

“ஆம் அல்லி! மிகவும் அபாயமான எதிரியை நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அவன் யவன அரசைப் புகாரில் மட்டுமல்ல. தமிழகத்திலேயே நிறுவ முயல்கிறான். ஆகவே புகாரின் ரகசிய வழிகளை அடைத்துத் தனிக் கோட்டையாக அடித்துவிட்டான். அடுத்தபடி படைபலத்தைப் பெருக்க யவனர் போர் மரக்கலங்களை வரவழைத் திருக்கிறான். சிறிது எதிர்ப்பைக் காட்டுபவர்களையும் வெட்டிக் கடலில் எறிந்துவிட உத்தரவிட்டிருக்கிறான். சடலங்கள் சில வாணகரையோரமாகவும் ஒதுங்கியிருக்கின்றன. இத்தனையிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறான் டைபீரியஸ். விசாரணையின்றி யாரையும் கொல்வதில்லை. மேலுக்கு தர்ம நாடகம் நடைபெறுகிறது. உள்ளே உறுதியுள்ள யவனர் படை ஆட்சி புரிகிறது. இந்த நிலையில் புகாரில் புரட்சி எதுவும் சாத்தியமில்லை. ஆகவே டைபீரியஸ் எந்த நிமிடத்திலும் தன் படைகளை இருங்கோவேள் படைகளுடன் இணைத்துக் குணவாயிற் கோட்டத்துக்குச் சென்று கரிகாலனை அழித்துவிட முடியும். போதாக் குறைக்கு, சேரனுடைய மரக்கலங்களும் இப்பொழுது வந்துள்ள யவனர் மரக்கலங்களுடன் சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஏன் சேர்ந்து கொண்டிருக்கின்றன? இந்த மரக்கலங்களையெல்லாம் தலைமை வகித்து நடத்துபவன் யார்? இவை தெரிய வேண்டும் அல்லி. அதற்காகத்தான் உன்னை வரவழைத் தேன்.”

பிரும்மானந்தர் விவரித்ததால் அரசியல் நிலையை நன்றாகப் புரிந்து கொண்டாள் அல்லி. புகாரின் நிலையையும் கரிகாலன் எந்த நிமிடத்திலும் அழிக்கப்படலாம் என்ற உண்மையையும் அறிந்து கொண்டதால் அச்சம் அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டது. அதனால் அவள் முகம் வெளேரென்று வெளுத்தது. காதலனுக்கு ஏற்பட இருந்த அபாயத்தால் கிலியடைந்த அவள் உள்ளத்தில் ஓர் உறுதியும் ஏற்பட்டது. ‘என்ன ஆனாலும் கரிகாலனைக் காப்பாற்ற வேண்டும். நாடு மாற்றாரிடமோ வஞ்சகனான இருங்கோ வேளிடமோ சிக்கக்கூடாது’ என்று உள்ளூரத் தீர்மானித்த அல்லி, “அடிகளே! இனிச் சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினாள்.

“யவனர் போர் மரக்கலங்களின் தலைவன் யார் என்பதை அறிய வேண்டும் அல்லி” என்றார் பிரும்மானந்தர், சற்றுத் தயக்கத்துடன், எத்தகைய அபாயமான அலுவலுக்கு அந்தப் பெண்ணை ஏவுகிறோம் என்ற நினைப்பினால்.

அல்லியின் பதிலில் தயக்கம் ஏதுமில்லை, “எப்படி அறிவது?” என்று கேட்டாள்.

“நீராடி உணவு உண்டு இளைப்பாறு மகளே! நடு நிசியில் நீ கிளம்பினால் போதும். அதற்குள் இந்த ஆரம்பச் சந்திரன் ஆட்சியும் தீர்ந்துவிடும்” என்ற பிரும்மானந்தர், அதுவரை ஏதும் பேசாமல் தூரத்தே நின்ற சமண அடிகளை அழைத்து, அல்லிக்கு நீராட வசதி செய்யச் சொன்னதல்லாமல், “நீராடி முடித்ததும் அல்லிக்குப் பழைய உடை வேண்டாம். அவள் பரதவர் உடை அணியட்டும்” என்றும் உத்தரவிட்டார்.

அவர் உத்தரவுப்படி சமண அடிகள் செய்து கொடுத்த வசதிகளால் நீராடி, உடை உடுத்து, உணவருந்திய அல்லி சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டாள், நடு நிசி வந்ததும் பிரும்மானந்தரே அவளை எழுப்பி மீண்டும் மாடியறைக்கு அழைத்துச் சென்று, சாளரத்தருகில் அவளை நிற்க வைத்துப் பக்கத்தில் தாமும் நின்று கொண்டார். பிறகு சொன்னார்: “அல்லி! அதோ கடலில் தொடுவானம் தெரிகிறதல்லவா? அதைக் கண்கொட்டாமல் கவனி.”

அல்லி இமைகொட்டாமல் அவர் காட்டிய இடத்தைக் கூர்ந்து கவனித்தாள். நீண்ட நேரம் எதுவும் தெரியவில்லை ! வினாடிகள்கூட ஆமைவேகத்தில் நகருவது போல் தோன்றிய தால் சலிப்படைந்தாள் அல்லி. திடீரென்று பிரும்மானந்தர் அவள் கையை இறுகப் பிடித்து, “அதோ பார் அல்லி, உற்றுப்பார்! நான் சொல்லும்வரை கண்ணை அப்புறமோ இப்புறமோ திருப்பாதே” என்று காதோடு காதாகச் சொன்னார்.

உற்று நோக்கினாள் அல்லி. கடலை வானம் தொட்ட இடத்தில் திடீரென மினுக் மினுக்கென்று இரண்டு விளக்குகள் தோன்றின. காரிருளில் கடல் பிராந்தியத்தில், உலகமே அடங்கிவிட்டதால் எங்கும் அமைதி சூழ்ந்து விட்டதால் பயங்கர நிலையில், தொடுவானத்தே தோன்றிய அந்த விளக்குகள் கடலுக்கு அடியிலிருந்து எழுவதுபோல் மெள்ள மெள்ள எழுந்தன. “உம்! உம் உற்றுக் கவனி! இதோ இப்படித் திரும்பு. இப்பொழுது கலங்கரை விளக்கத்தைப் பார்” என்று வலியுறுத்தினார் அடிகள்.

கவனித்தாள் அல்லி. சோழர் ஆட்சியில் என்றும் அணைக்கப்படாத பூம்புகாரின் கலங்கரை விளக்கம் அணைந்து கிடந்தது. தொடுவானத்தருகே தெரிந்த இரண்டு விளக்குகள் சிறிது நேரத்திற்கெல்லாம் நான்காயின. அந்த நான்கு விளக்குகளும் துரிதமாகக் கலங்கரை விளக்கிருந்ததிசையை நோக்கி நகரத் தொடங்கின.

Previous articleYavana Rani Part 2 Ch26 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here