Home Sandilyan Yavana Rani Part 2 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

119
0
Yavana Rani Part 2 Ch28 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch28 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 28 நள்ளிரவில் பேய்ச் சிரிப்பு

Yavana Rani Part 2 Ch28 | Yavana Rani | TamilNovel.in

காரிருளில் கடலிடைத் தோன்றி, கலங்கரை விளக் கத்தை நோக்கித் துரிதமாக நகர்ந்த அந்த நான்கு விளக்கு களையும் கவனித்த அல்லி, அவை நான்கும் பெரும் மரக் கலங்கள் என்பதை உணர்ந்து கொண்டாளானாலும், அவை அப்படி ரகசியமாக இரவில் வரவேண்டிய அவசியத்தை உணர முடியாத காரணத்தால், பிரும்மானந்தரை நோக்கி ஏதோ கேட்க வாயெடுத்ததும் அவளைப் பேச வொட்டாமல் கையை அழுத்தி மௌனமாயிருக்கச் செய்த அடிகள், “இன்னும் கொஞ்சம் நிதானி மகளே! நாடகம் இத்துடன் முடியவில்லை” என்று கூறித் தொடுவானத்தைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அல்லியும் மேற்கொண்டு ஏதும் பேசாமல், அலைகள் பெரிது பெரிதாக எழுந்து மோதினாலும் இருளின் காரணமாக அவற்றின் பரிணாமம் தெளிவாகத் தெரியாமல், பெரும் கரி மலைகள் எழுந்து விழுவது போன்ற பிரமையை அளித்த கடலின் பெரும் நீர்ப்பரப்பையும் தொடுவானத்தையும் உற்று நோக்க லானாள்.

கடல் அன்றிரவு இருந்த உக்கிரத்திலும் பேரலைகள் எழுந்ததால் உண்டான பயங்கரத்திலும், பெரும் சுறாக்கள் நீர்மட்டத்திலிருந்து திடீரென மேற்கிளம்பி அரைச் சக்கரமாகப் பாய்ந்து, மீண்டும் திடீர் திடீரென நீருக்குள் மூழ்கிச் சென்றது போன்ற பல விந்தைகளை விளைவித்துக் கொண்டிருந்த பூம்புகாரின் கடற்பிரதேசம் காண்பதற்கு இணையற்ற இன்பமாகவே இருந்தது. இரவின் கடுமையை லேசாகக்கிழித்து வேடிக்கை காட்டுவது போல் கண்சிமிட்டிய தூரத்து மரக்கலங்களின் நான்கு விளக்குகளும், கடலரசிக்கு மங்கள ஆரத்தி எடுப்பது போல் ஒரே சீராகக் கலங்கரை விளக்கத்தை நோக்கி நகர்ந்தன. கடலின் உக்கிரத்தால் எழுந்த பெரு அலைகள் அந்த மரக்கலங்களின் மீது வாரியடித்த நீர்த் திவலைகள் விளக்குகளின் வெளிச்சத்தில் ஓரளவு தெரிந்ததால் தனக்கு எடுக்கப்படும் மங்கள ஆரத்திக்குச் சன்மானம் செய்யக் கப்பல் தட்டில் கடலரசி பொன் நாணயங்களை வீசுவது போன்ற பிரமையே ஏற்பட்டது. அத்தனை பயங்கர நிலையிலும் தன் மனத்தை இழுத்து அழகில் லயிக்கச் செய்ய வல்ல புகாரின் இணையற்ற எழிலை நினைத்த அல்லி, ‘உலகத்தில் ஆயிரம் நாடுகள் இருக்கலாம். ஆயிரம் துறை முகங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் புகாருக்கிணை எங்கும் இருக்க முடியாது’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாளாகையால், அவள் மனத்தில் எழுந்த பூரிப்பின் பொலிவு முகத்திலும் படர்ந்தது. அளவுக்கு மீறிய சந்துஷ்டி துன்பத்தில்தான் கொண்டு போய்விடும் என்ற நியதியாலோ என்னவோ, அவள் மன மகிழ்ச்சியைத் தண்டிக்க வேறிரு விளக்குகள் அந்த நான்கு விளக்குகள் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி மற்றொரு திசையில் தோன்றின. நேர் கிழக்கில் தோன்றிக் கலங்கரை விளக்கத்தை நாடி நகர்ந்த நான்கு விளக்குகளையும், அவற்றைக் குறுக்கிட முனைந்தவை போல் தென்கிழக்கே தோன்றி மிகவும் வேகத்துடன் குறுக்கே நகர்ந்த பிந்திய இரண்டு விளக்குகளையும் நோக்கிய அல்லி, “இந்த இரண்டு மரக்கலங்கள் அவற்றைக் குறுக்கிட வருகின்றனவா!” என்று மெள்ள வினவினாள்.

“இல்லை, அந்த நான்குடன் சேர வருகின்றன” என்று பிரும்மானந்தர் பதில் கூறினார்.
“ஆறும் ஒரே நாட்டின் மரக்கலங்களா?” என்று மீண்டும் வினவினாள் அல்லி.

“தெரியாது அல்லி. அந்த மரக்கலங்களைப் பற்றித் திடமான தகவல் எதுவும் தெரியாது. கடலோடிகளான பரத வர்கள் சொன்ன சில தகவல்களிலிருந்து இந்த மரக்கலங்களில் சில யவனருடையதென்றும், சில பெருஞ்சேரலாதனுடைய தென்றும் தெரிகிறது. தவிர மரக்கலங்கள் மொத்தம் ஆறுக்கு மேற்பட்டும் இருக்கின்றன.”

“அதை மட்டும் எப்படி அறிந்தீர்கள்?”

“இவை வரும் போதெல்லாம் பார்க்கிறேன். சில சமயம் அறு மரக்கலங்கள் வருகின்றன. சில சமயம் எட்டு மரக்கலங் களைக்கூடக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு சமயத் திலும் மரக்கலங்கள் சேர்ந்து வருவது கிடையாது. எப்பொழு தும் பிரிந்தே வருகின்றன! அதுவும் எதிர்த் திசைகளிலிருந்து.”

“பிரதிதினம் இப்படி இரவில் வருகின்றனவா?”

“இல்லை. தினம் வருவதில்லை . சில சமயங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும். சில சமயங்களில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வரும்.”

“ஏன் பிரிந்து வருகின்றன?”

“காரணம் தெரியவில்லை. ஆனால் யவனர் மரக்கலங் களின் தளமும் சேரன் மரக்கலங்களின் தளமும் வெவ்வேறு இடங்களில் இருக்க வேண்டும். யவனர் மரக்கலங்கள் புறப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின் சேரன் மரக்கலங்கள் புறப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன்.”

“இருக்கலாம். ஆனால் ஒற்றர்களை அனுப்பி அந்தக் கடற்படைத் தளங்களைக் கண்டுபிடிப்பதுதானே?”

பிரும்மானந்தர் பெரும் கவலையை வலியுறுத்தப் பெருமூச்செறிந்துவிட்டுச் சொன்னார்: “அதற்கும் முயன்றேன் அல்லி! முயன்றேனென்ன, முயன்றும் வருகிறேன். இப்பொழுதுகூட பரதவல்லாளனையும் குமரன் சென்னியையும் இன்னும் பலரையும் அதற்காகவே அனுப்பியிருக்கிறேன். புகாரிலிருந்து பாண்டி நாட்டுக் கொற்கைவரை கடற்கரையைச் சல்லடை போட்டுச் சலித்துவிட்டேன். ஆனால் மரக்கலங்கள் தங்கும் சுவடுகூடத் தெரியவில்லை . இந்த மாய மரக்கலங்கள் எங்கே தங்கியிருக்கின்றன? எங்கிருந்து வருகின்றன? நாலைந்து நாட்களுக்கு ஒரு முறை ஏன் புகாரை நோக்கி வருகின்றன? யவனர் கப்பல்களாயிருந்தால் யவனர் ஆதிக்கத்திலிருக்கும் பூம்புகாரிலேயே வந்து நங்கூரம் பாய்ச்ச என்ன தடை? இந்தக் கேள்விகளைப் பலமுறை என்னை நானே கேட்டுக் கொண்டேன். ஆனால் விடை இன்றுவரை கிடைக்கவில்லை.”

அல்லியின் சித்தத்தில் ஊக அலைகள் பல எழுந்தன வானாலும் அவை மீண்டும் பயனற்ற அறிவீனப் பாறையிலேயே மோதி மோதிச் சிதறின. “மிகவும் விசித்திரமாகத் தானிருக்கிறது. அடிகளே!” என்றாள் அவள் கடைசியில்.

பிரும்மானந்தர் குழந்தையைத் தடவிக் கொடுப்பது போல் இடது கையல் அவள் தலையைத் தடவிக் கொடுத்து, “குழந்தாய்! அந்தக் கேள்விகளுக்கு விடைகளை நீதான் கண்டு பிடிக்க வேண்டும். அதற்காகத்தான் உன்னை வரவழைத்தேன். நீ நாங்கூர்வேள் மகளானது எனக்குத் தெரியும். இன்றைய அல்லி நாளது சோழமாதேவியென்பதையும் நான் அறிவேன். மன்னர் உன்மீது உயிர் வைத்திருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாததல்ல. ஆனால் இந்த அபாயப் பணிக்கு நம்பி வேறு யாரையும் நான் ஏவ முடியவில்லை. இளஞ்செழியனிடம் சேவகம் புரிவதைப் புனிதப் பணியாகக் கருதியிருந்த நமது யவனர் பிரிவு, யாரோ இரு தலைவர்கள் வந்து ஒரு வார்த்தை சொன்னதும் வாணகரையிலிருந்து போய்விட்டதை அறிந்த பின் இங்குள்ள யாரையுமே நம்ப என்னால் இயலவில்லை. அவர்கள் போனது இன்னும் எனக்குப் பேராச்சரியமாக இருக்கிறது…” என்று மேலும் ஏதோ சொல்லப் போன அடிகளை இடைமறித்த அல்லி, “ராணியின் பெயரால் அன்னப் பறவை ஆபரணத்தின் ஆணையால் யவனர்கள் அழைக்கப்பட்டதாகச் சொன்னார்களே!” என்று கூறினாள்.

அந்த விளக்கம் அர்த்தமற்றது என்பதைக் குறிப்பது போல் தலையசைத்த பிரும்மானந்தர், “அல்லி! ராணி புகாரின் மண்ணில் புரண்டு மாதங்கள் எட்டு ஆகின்றன. அவள் அன்னப் பறவை ஆபரணத்தையும் அவள் அந்தஸ்தையும் இங்குள்ள யவனர்கள் இத்தனை மாதங்களாக அறிந்து தானே இருந்தார்கள்? அப்படி இத்தனை மாதங்களாக டைபீரியஸின் ஆணைகளைப் புறக்கணித்து, இளஞ்செழியன் படையைவிட்டு அகலாத யவனர்களுக்கு இந்த மனமாற்றமும் ராணியிடம் பக்தியும் திடீரென ஏற்படக் காரணமென்ன?” என்று வினவினார்.

அல்லியால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. அவள் மௌனமே சாதித்தாள். பிரும்மானந்தரே மேலும் சொன்னார்: “காரணம் ஏதும் புரியவில்லை அல்லி. நான் சற்று முன்பு எழுப்பிய கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றனவே ஒழிய விளக்கமோ விடையோ கிடைக்கவில்லை. இந்த மரக்கலங்கள் புகாரைக் காத்து நிற்கின்றன. டைபீரியஸுக்கு உதவுவதே இவற்றின் தொழில். அதுவரை நிச்சயம். இல்லா விடில் புகாரை அவை அணுகுவதும் சாத்தியமல்ல. இதோ இப்படித் திரும்பிப் பார்.”

பிரும்மானந்தர் காட்டிய மார்க்கத்தில் திரும்பினாள் அல்லி. கலங்கரை விளக்கம் அணைந்து கிடந்தது. ஆனால் இந்திரவிழா மாளிகை மீதிருந்த இரண்டு தூண்களின் முகப்பில் இரு சிறு விளக்குகள் மின்னின. “இவை ஏன் ஏற்றப் பட்டன?” என்று வினவினாள் அல்லி வியப்புடன்.

“அந்த மரக்கலங்கள் கரையை நோக்கி நகரலாம் என்ப தற்கு அடையாளம் இது” என்று விளக்கினார் அடிகள்.

“கலங்கரை விளக்கத்தை அணைப்பானேன்?” என்று வினவினாள் அல்லி.

“கலங்கரை விளக்கம் பொதுவாக எல்லா மரக்கலங் களுக்கும் வழிகாட்டி. அதை அணைத்து இந்த இரு ஸ்தூபி களின் விளக்குகளையும் ஏற்றுவது யவனர் போர்க்கலங்கள் வரலாம் என்பதை வலியுறுத்துவதற்கு.”

அல்லிக்கு அந்த மரக்கலங்களின் வருகை மட்டுமின்றி தங்கள் ஆதிக்கத்திலிருக்கும் புகாருக்கு யவனர்கள் தங்கள் கப்பல்களைத் திருட்டுத்தனமாக வரவழைப்பதும், அதற்காக அடையாளங்களை மாற்றிக் காட்டுவதும் பெரும் வேடிக்கை யாக இருந்ததன்றிப் பெரும் மர்மமாகவும் இருந்தது. இதற் கெல்லாம் காரணம் என்ன என்பது மட்டும் பிரும்மானந்தரைப் போலவே அவளுக்கும் விளங்கவில்லை. இரு காரணத்தை மட்டும் பிரும்மானந்தர் திட்டமாகச் சொன்னார்: “இவையெல்லாம் பெரும் போர் மூள அறிகுறிகள் அல்லி! போர் மூள நாளும் அதிகமில்லையென்று நினைக்கிறேன். போர் நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும் நடக்கும். சோழ நாடு இருப்பதா அல்லது அழிவதா என்பது வெகு சீக்கிரம் நிர்ணயிக்கப்படும். அந்த நிர்ணயப் பணியில் அரச பக்தியும் தேசபக்தியும் உள்ளவர்கள் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. அவசியம் வருமானால் இந்தக் காவியுடையுடன் கத்தியைப் பிடித்து மாற்றார் பலர் குருதியை என் தாய் நிலத்தில் பாய்ச்சி விட்டுத் தான் நான் இறப்பேன். அதற்குப் பூர்வாங்கப் பணிகளைச் செய்யத்தான் உன்னை வரவழைத்தேன். இந்தப் பணியில் உன் உயிர் போகலாம். நீ அவமானப்படுத்தப்பட்டாலும் படலாம். என்ன நடக்குமோ, அந்த மரக்கலங்களில் யாரிருக்கிறார்களோ, தலைவன் கொடியவனா, நல்லவனா எதுவும் எனக்குத் தெரியாது. கண்ணை மூடிக் கொண்டு உன்னை அனுப்புகிறேன். மனத்தில் பெரும் சோகத்துடனேயே உன்னைப் போகச் சொல்கிறேன். நாட்டின் கதி அதோகதியாகும் நிலையில் நம் கதியைப் பற்றி நினைக்க அவகாசமில்லை அல்லி. நீ போகத்தான் வேண்டும்” என்றார் பிரும்மானந்தர்.

மேற்கொண்டு நீண்ட நேரம்வரை அல்லியோ பிரும்மா னந்தரோ பேசவில்லை. பிரும்மானந்தரின் சொற்கள் மென்மையான இதயத்தை வயிரமாக அடித்துவிட்டது. “என்ன நடந்தாலும் நடக்கட்டும். அந்த மரக்கலங்களின் மர்மத்தைக் கண்டு பிடிக்கிறேன்” என்று அல்லி சொல்லிக் கொண்டாள். தீர்க்கலோசனைக்குப் பிறகு பிரும்மானந்தர் கேட்டார், “என்ன யோசனை செய்கிறாய் அல்லி?” என்று.

“அந்த மரக்கலங்களை அணுகுவது எப்படி? அணுகிய பின் நடந்து கொள்வது எப்படி என்பதைப்பற்றி யோசிக்கிறேன்” என்றாள் அல்லி, கல்லாகிவிட்ட உள்ளத்தின் விளைவாக வரண்டு போன சொற்களைக் காட்டி.

“அவற்றையெல்லாம் நான் யோசித்துவிட்டேன். ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்” என்றார் பிரும்மானந்தர்.

“என்ன ஏற்பாடு பிரும்மானந்தரே?” என்று அல்லி வினவினாள் அதே வரண்ட குரலில்.

பிரும்மானந்தர் எதிரேயுள்ள கடலில் சில இடங்களைச் சுட்டிக் காட்டி உறுதியும் விவேகமும் தொனித்த குரலில் மிகுந்த எச்சரிக்கையுடன் தனது திட்டத்தை விவரித்தார். “கவனமாகக் கேட்டுக் கொள். நான் சொல்வதிலிருந்து சிறிது பிறழ்ந்தாலும் உன் உயிர் உன்னுடையதல்ல. பிறகு நாடும் நம்முடையதல்ல” என்று ஆரம்பித்த பிரும்மானந்தர் பூம்புகாரின் சங்கமத் துறைக்கருகிலிருந்த இடத்தைக் காட்டி, “அந்த இடத்தைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.

“பார்த்தேன்” என்றாள் அல்லி.

“அது…”

“முதன் முதல் ராணி மயக்கமுற்று ஒதுக்கப்பட்ட இடம்.”

“ஆம் ஆம். அதற்கு நேரில் சற்றுத் தூரத்திற்கப்பால் அந்த நான்கு மரக்கலங்களும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும்.”

“உம்.”

“புதிதாக வந்து சேர்ந்துகொண்ட இரு மரக்கḥலங்களும் சங்கமத் துறைக்குத் தெற்குப் புறத்தில் அதாவது வாணகரை யிலிருந்து சிறிது தூரத்தில் நிற்கும்.”

“சரி, இடையே காவிரி கடலுடன் கலக்கும் பெரும் புனல்.”

“ஆமாம் அல்லி. குறுக்கே கடலுக்குள் பாயும் காவிரியின் புனல் வேகம் வாய்ந்தது.”

“அதன் குறுக்கே சாதாரணப் படகுகள் செல்வது அபாயம்.”

“நன்று நன்று. அதுதான் விஷயம் அல்லி. ஆகவே அதற்கு வேறு யுக்தி செய்திருக்கிறேன். வாணகரைக் குன்றின் தென்புறத்தில், அதாவது அந்த இரண்டு மரக்கலங்களையும் தள்ளி வெகு தூரத்தில் படகு ஒன்று தயாராயிருக்கிறது” என்று மெள்ள அல்லி செய்ய வேண்டியதை விளக்க முற்பட்டபிரும்மானந்தரை இடைமறித்த அல்லி, “சொல்லுங்கள், அந்தப் படகில் நான் செல்ல வேண்டும். அந்தப் படகில் ஏறி நேராகக் கடலில் கிழக்குத் திசையில் சிறிது தூரம் சென்று, பிறகு வடக்காகத் திரும்பினால் காவிரியின் புனல் வேகம் குறைந்திருக்கும். அங்கு கடலின் குறுக்கே சென்றால் சங்கமத்துறைக்கு, அதாவது ராணி கிடந்த இடத்துக்கு எதிரில் வடபுறத்தில், அந்த நான்கு மரக்கலங்களுக்குப் பின்னால் என் படகு வரமுடியும்” என்று கூறினாள்.

“ஆமாம் அல்லி! அதேதான்” என்றார் பிரும்மானந்தர்.

“ஆனால் எனக்குப் படகு ஓட்டத் தெரியாதே” என்றாள் அல்லி.

“தெரிய வேண்டியது இல்லை அல்லி. தெரிந்தாலும் பயனில்லை .”

“ஏன்?” ஏதும் புரியாமல் வினவினாள் அல்லி.

“நீ சுதந்திரமாகப் படகில் செல்லப் போவதில்லை .”

“பின் எப்படிச் செல்வேன்?”

“உன்னைப் புகாரில் டைபீரியஸிடம் ஒப்படைக்க இரு யவன வீரர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவன் நீரில் விழுந்து விடுகிறான். இன்னொருவனை நீ கட்டையாலடித்து விடுகிறாய். அவன் படகில் ரத்தக் காயத் துடன் உன் பக்கத்தில் கிடப்பான். உன் பக்கத்தில் அவனை அடித்த கட்டை இருக்கும். அவனும் உன்னை மண்டையில் அடித்து விடுவதால் நீயும் மயக்கமாயிருக்கிறாய். உங்களிரு வரையும் சுமந்த படகு மெள்ள மெள்ள அந்த நான்கு மரக் கலங்களை அணுகும். மரக்கல மாலுமிகள் உங்களைக் கண்டெடுத்துத் தலைவனிடம் சேர்ப்பிப்பார்கள்” என்று பிரும்மானந்தர், ஒரு பெண்ணை இத்தனை அவதிக்குள் ளாக்கும் அவசியம் நேர்ந்ததன் காரணமாக வெறுப்பினால் பேச்சையும் நிறுத்தினார்.

அவர் மேற்கொண்டு எதுவும் சொல்ல அவசியமு மில்லை. அவர் திட்டத்தை நன்றாகப் புரிந்து கொண்டாள் அல்லி. மரக்கலத்தை அடைந்ததும், தான் செய்ததாகச் சொல்லப்பட வேண்டிய குற்றம். தன்னைப் படகில் அனுப்பிய காரணம் இவற்றுக்கெல்லாம் பொய்யைத்தான் சிருஷ்டிக்க வேண்டுமென்பதையும் அல்லி சந்தேகமறத் தெரிந்து கொண்டாள். தன்னைப் பரதவர் உடையை அணியச் செய்ததன் காரணமும் புரிந்து விட்டது அல்லிக்கு. டைபீரியஸிடம் செல்லாத சில யவனர்களை இந்த வேவுத் தொழிலுக்குப் பிரும்மானந்தர் பயன்படுத்த முயலுகிறா ரென்பதை மட்டுமின்றி, அந்த யவனர்களைப் பயன்படுத்து வதனால் ஏற்படக்கூடிய அபாயத்தையும் நன்றாக உணர்ந்தாள். இருப்பினும் அந்தத் துணிகர அலுவலில் யாருக்கு மில்லாத பெரும் துணிச்சலுடன் இறங்கினாள் அல்லி.

மூன்றாம் ஜாமம் முடிவடையும் தருணத்தில் பிரும்மா னந்தர் அவளையும் ஒரு யவன வீரனையும் வாணகரைக் குன்றின் தென்புறத்துக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, படகுத் துறையை அடைந்து, “பார்த்தாயா அல்லி, இந்தக் குன்றின் விசேஷம் இதுதான். அதன் தென்கரை வளைவில் நின்றால் வடபுறத்திலிருக்கும் பெரும் புகாரே கண்ணுக்குத் தெரியாது. பல சௌகரியங்களை, முன்னிட்டே இளஞ்செழியன் இங்கு தனது படைத்தளத்தை நிறுவினான். அவன் மட்டும் இப்பொழுது இங்கிருந்தால்..” என்று கூறிப் பெருமூச் செறிந்தாரானாலும் சட்டென்று தம்மைத் திடப்படுத்திக் கொண்டு, “அல்லி! இதோ படகு, ஏறிக்கொள். அதோ இருக் கிறது அதில் ஒரு பெரும் கட்டை. அதை உபயோகித்துக் கொள்” என்று கூறிய பிரும்மானந்தர், பக்கத்தில் மிகவும் உயர மாக நின்ற யவன வீரனை நோக்கி, “வீரனே! இளஞ்செழியன் பெயரால் ஆணையிடுகிறேன். உன் கடமையைச் செய், மற்றவர்களைப் போல் துரோகம் செய்யாதே” என்று கூறிவிட்டு அவர்களைப் படகிலேறப் பணித்தார்.

“இன்னொரு வீரன் எங்கே?” என்று அல்லி கேட்டாள்.

“அவன் நீரில் விழுந்து விட்டதாகச் சொன்னால் போதும். படகில் உனக்கும் இரண்டு யவன வீரர்களுக்கும் சண்டை ஏற்படும்போது ஒருவன் நிலை தவறிக் கடலில் விழுவது சகஜம்” என்று குறிப்பிட்டார் பிரும்மானந்தர்.

அல்லி புரிந்து கொண்டாள். மேற்கொண்டு ஏதும் பேசாமல் படகில் ஏறிக்கொண்டு, “வருகிறேன் அடிகளே!” என்றாள் உறுதி நிரம்பிய குரலில்.

பிரும்மானந்தருக்குப் பேச முடியவில்லை. அவர் தொண்டையைத் துக்கம் அடைத்தது. படகு நகர்ந்தவுடன் முதுகைக் கடலுக்காகத் திருப்பிக் கொண்டார். படகை யவனன் தள்ள நின்று கொண்டே சென்ற அல்லி, அத்தனை இருட்டிலும் கடற்கரையில் நின்ற பிரும்மானந்தரின் பெரும் உடல் குலுங்குவதைக் கண்டு, அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார் என்பதைப் புரிந்து கொண்டு மனம் நெகிழ்ந்தாள்.

படகு மெள்ள மெள்ளக் கடலில் கீழ்த் திசையை நோக்கிச் சென்றது. அதில் விளக்கேதும் இல்லாததாலும் கடற் பிராந்தியம் பேரிருளில் மூழ்கிக் கிடந்ததாலும் யவன வீரனும் அல்லியும் ஒருவரையொருவர் அரைகுறையாகவே பார்த்துக் கொள்ள முடிந்தது. அப்படிப் பார்த்துக் கொண்டே பேசிய அல்லி, “வீரனே! உன் கத்தியால் சிறிது உன் தலைப்புறத்தை வலது பக்கத்தில் கிழித்து ரத்தத்தை வெளியிடு. நான் என் தலையில் இடப்புறத்தின் சருமத்தில் லேசாகக் குத்திக் கொள்கிறேன். அப்படி வெளிவரும் ரத்தத்தை என் கட்டையால் இருவரும் பரவலாகத் தலையில் துடைத்து விடுவோம். உன் வாளின் அடிப்புறத்தை அந்த ரத்தத்தில் சிறிது உருட்டிக்கொள். இருவரும் பிறகு தனித்தனியாக மாறிப் படுத்து விடுவோம். நான் உன்னைக் கட்டையாலும் நீ என்னை வாட்பிடியாலும் அடித்ததாக எதிரிகள் அர்த்தம் செய்து கொள்வார்கள்” என்று கூறினாள்.

‘சரி’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த வீரன் படகைத் துரிதமாகச் செலுத்தத் துடுப்புகளைத் துழாவினான். இருப்பினும் படகு மெள்ளவே நகர்ந்தது. அலைகள் பெரிது பெரிதாக எழுந்து மோதின. சுமார் கால் ஜாமம் முடிந்த பிறகு காவிரி கடலில் பாயும் பெரும்புனலைக் கடந்து புகாரின் வடக்கில் படகு திரும்பியது. அதைக் கண்டதும் அல்லி துரிதமாக தனது மடியிலிருந்து குறுவாளை எடுத்து தலையில் இடது புறத்தில் லேசாகக் குத்திக் கொண்டு யவன வீரனிடமும் கத்தியை நீட்டினாள். அவனும் சிறிது குருதியை வரவழைத்துக் கொள்ளவே அல்லி கட்டையாலும், வீரன் வாளின் பிடியாலும் குருதி பரவலாகச் செய்து கொண்டார்கள்.

“சரி, சற்றுத் தள்ளிப்படு. அதோ மரக்கலங்களைச் சிறிது நேரத்தில் அணுகிவிடுவோம். கரைக்குச் செல்லும் அலைகள் படகை வெகு துரிதமாக உத்திச் செல்லும்” என்று கூறிய அல்லி, படகின் ஒரு முனையில் அடிபட்டு விழுந்த தோரணை யில் படுத்துக் கொண்டாள். யவன வீரன் மற்றொரு முனையில் கிடந்தான்.

படகு மரக்கலங்களை அணுகி விட்டதை, சமீபத்தில் எழுந்த மாலுமிகளின் கூச்சலாலும் மரக்கலங்களின் மீது ஏற்பட்ட நடமாட்ட ஒலிகளாலும் புரிந்து கொண்டாள் அல்லி.

“அதோ ஒரு படகு, படகு” என்ற சத்தங்கள் சில, “விளக்கு எங்கே, இப்படிக் காட்டு, அப்படிக் காட்டு” என்ற சத்தங்கள் சில, “கொக்கியை விட்டெறிந்து படகை இழு, உம் உம்” என்ற சத்தங்கள் சில. இப்படிப் பலவித சத்தங்கள் கிளம்பின. கொக்கி எறியப்பட்டு ‘டக்’கென்று படகில் மாட்டிக் கொண்டதையும், படகு சரசரவென்று ஒரு மரக் கலத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் உணர்ந்த அல்லியின் இதயம் படுவேகத்தில் ஓடியது.

அடுத்த சில வினாடிகளில் அல்லியை இருவர் தூக்கி மரக்கலத்தின் பெரும் தளத்தில் கிடத்தினார்கள். யவன வீரனும் கிடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அல்லி ஊகித்தாள்.

“உம்! இன்னும் படகில் யாராவது இருக்கிறார்களா, பொருள்கள் ஏதாவது இருக்கின்றனவா பார்” என்றது அதிகாரமான குரல். அடுத்த வினாடி படகில் மாலுமிகள் குதிப்பதும் பிறகு ஏறி வருவதும் அல்லியின் புலன்களுக்குத் தெரிந்தன.

சில வினாடிகள் மௌனம் நிலவியது. திடீரென பேய்ச் சிரிப்பு ஒன்று அந்தக் கடல் பிராந்தியத்தைத் திரும்ப ஊடுருவிச் சென்றது. அடுத்த கணம் சிரிப்பு நின்றது. அதைத் தொடர்ந்து, “இந்த ஒற்றர்கள் இருவரையும் என் அறையில் கொண்டு தள்ளுங்கள்” என்று கடுமையான உத்தரவொன்றும் பிறந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch27 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here