Home Sandilyan Yavana Rani Part 2 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

121
0
Yavana Rani Part 2 Ch29 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch29 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 29 தலைவன்

Yavana Rani Part 2 Ch29 | Yavana Rani | TamilNovel.in

பூம்புகாரின் குணதிசையில் விரிந்து கிடந்த பெருங் கடலில் உக்கிரத்துடன் எழுந்து எழுந்து சீறிக் கொண்டிருந்த அலைகளின் இரைச்சலையும் மீறிக் கடற்பரப்பை ஊடுருவிச் சென்ற பேய்ச் சிரிப்பைக் கேட்டதாலும், ‘இந்த இரு ஒற்றர் களையும் துக்கிச் சென்று என் அறையில் தள்ளுங்கள்’ என்ற சொற்கள் திட்டமாகக் காதில் விழுந்ததாலும், பிரும்மானந்தர் சிருஷ்டித்த நாடகம் பலிக்கவில்லையென்பதையும், தன் உயிரும் தன்னுடன் வந்த யவனன் உயிரும் இனிச் செல்லாக் காசு பெறாதென்பதையும் சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றி உணர்ந்து கொண்ட அல்லி, தன் உயிருக்குப் பயப்படா விட்டாலும் “இந்தத் திட்டமும் உடைந்து விட்டால் சோழ நாட்டின் கதி இனி என்ன?’ என்பதை நினைத்து உள்ளூர ஏங்கவே செய்தாள். அந்த ஏக்கத்தின் விளைவாக எத்தனை எத்தனையோ எண்ணங்கள் அவள் சித்தத்தில் கணப் பொழுதில் சுழன்றதென்றாலும், அவற்றில் எள்ளளவையும் வெளிக்காட்டுவது பலவீனத்துக்கு அறிகுறியென்பதை அல்லி அறிந்து கொண்டாளாதலாலும், சற்றுச் சாமர்த்தியமாக நடந்து கொண்டால் அந்தப் பேய்ச் சிரிப்புச் சிரித்த மரக்கலத்தின் தலைவனை ஏமாற்றுவதற்கு ஒரு வேளை வாய்ப்பு ஏற்படலாமென்று மனப்பால் குடித்தாளாகையாலும், அவள் மூச்சுக்கூட விடாமல் கட்டை போலவே மரக்கலத்தின் தளத்தில் கிடந்தாள். ஆனால் அந்த ஆசையையும் போக் கடித்தன அடுத்து நேர்ந்த நிகழ்ச்சிகள். திடீரென எதையோ நினைத்துக் கொண்ட மரக்கலத் தலைவன் தன் வீரர்களை நோக்கி, “இருவரையும் என் அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். இந்தப் பெண்ணை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். இந்தப் படகோட்டி இங்கேயே கிடக்கட்டும். அவன் காயத்துக்கு மட்டும் சிகிச்சை செய்யுங்கள்” என்று முதலில் இட்ட உத்தரவை மாற்றிவிட்டு தடதடவென்று நடந்து சென்று விட்டான்.

தலைவன் உத்தரவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் அல்லியின் உணர்ச்சிகள் பெரும் கொந்தளிப்பை அடைந்தன. ‘ஒருவேளை யவனர் மரக்கலத் தலைவன் அயோக்கியனா யிருந்தால் தன் கதி என்னவாகும்’ என்பதை நினைத்துச் சிறிது நடுங்கவும் செய்தாள். ‘ஆயுதம் ஒன்றுமட்டும் கையிலிருந்தால் இந்தத் தலைவனைப் போல் ஆயிரம் பேரிடமிருந்தும் என்னைக் காத்துக் கொள்வேன். ஆனால் நிராயுதபாணியாக இவனிடம் சிக்கிக் கொண்டிருக்கிறேனே, என்ன செய்வேன்?’ என்று மனம் நொந்த அல்லி ஆபத்தான அந்த நேரத்தில் கரிகாலனை நினைத்துக் கொண்டாள். அவனை நினைத்துக் கொண்டதன் விளைவாகச் சிறிது தைரியமும் அவள் உள்ளத்தில் ஊறவே இந்த உடலும் உயிரும் அவர் பணிக்குத் தானே ஏற்பட்டவை. இருக்கட்டும் பார்ப்போம். எத்தனையோ இக்கட்டுகளிலிருந்து என்னைத் தப்பவைத்திருக்கும் ஆண்டவன் இப்பொழுதுதானா கைவிட்டு விடுவான்?’ என்று தன்னைச் சற்றுத் திடப்படுத்திக் கொண்டதால், மரக்கலத் தலைவன் உத்தரவுப்படி வீரர்கள் தன்னைத் தூக்கிச் சென்ற போதும் தலைவன் அறையிலிருந்த மஞ்சத்தில் தன்னைப் படுக்க வைத்த போதும் சுரணையற்றவள் போலவே கிடந்தாள். அந்தச் சுரணையற்ற பாவனையைச் சரேலென்று உடைக்க ஏற்பட்ட சிற்றுளிகள் போல் களுக்கென்ற சிரிப்பு ஒன்று அந்த அறையின் மூலையிலிருந்து எழுந்தது.

அந்த சிரிப்பொலியிலிருந்த ஏளனத்தில் விளைவாகச் சட்டென்று விழித்த அல்லி மஞ்சத்தில் மெல்ல எழுந்து உட்கார்ந்து, அறையில் சுற்றும் முற்றும் கண்களை ஓட விட்டாள். மரக்கலத் தலைவனின் அந்த அறை மிகச் சிறியதா யிருந்தாலும், சாதாரண மரக்கலங்களில் காணப்படும் அறை களைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக அமைக்கப் பட்டிருந்ததை அல்லி கண்டாள். யவனர் மரக்கலங்களில் பலவற்றைக் கண்டிருக்கும் அல்லிக்கு, மரக்கலத் தலைவனின் ஆசனம் நட்டநடுவில் போடப்படாமல் ஒரு மூலையில் போடப்பட்டிருந்ததும், தலைவன் உட்காரக் கூடிய ஆசனத் தையும் உள்ளின் இதர பாகங்களையும் ஒரு சிறு மரப்பலகை பிரித்திருந்ததும் பெரும் விந்தையாயிருந்தன. தவிர மற்ற யவனர் மரக்கலத் தலைவர்களின் அறையைப் போல் அந்த அறையில் போர்க்கலங்கள் நிறைந்தில்லாததையும், நீண்ட வாள் ஒன்றுமட்டும் மரப்பலகையின் ஆணியில் மாட்டப் பட்டிருந்ததையும் கண்ட அல்லி, ‘இந்த மரக்கலத் தலைவ னுக்குப் போரில் அதிகப் பிரியமில்லை போல் தெரிகிறது’ என்று நினைத்தாள். போதாக்குறைக்கு அறை வெகு சுத்தமா யிருந்தது. அந்த அறையின் மஞ்சங்கள் ஏதோ அலங்கார ஆசனங்கள் போல் அர்த்த சந்திர வடிவத்தில் போடப்பட் டிருந்ததன்றி அவற்றின் வேலைப்பாடும் அவை அரண்மனை யில் இருக்கத் தகுந்தவை என்பதை வலியுறுத்தின. அந்த அறையின் மரச்சுவர்களில் பல நாட்டு அழகுப் பொருள்களும் கடலில் கிடைக்கும் பெரும் கிளிஞ்சல்களும் சிங்காரமாக மாட்டப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் கண்ட அல்லி, மரக்கலத் தலைவன் பெரும்ரசிகன் என்பதை உணர்ந்து கொண்டாளாகையால் அப்பேர்ப்பட்ட ரசிகனுக்கும் சற்று முன்பு தளத்தில் கிளம்பிய பேய்ச்சிரிப்புக்கும் எப்படி சம்பந்தமிருக்க முடியுமென்பதை நினைத்துப் பார்த்துப் பதிலேதும் கிடைக்காததால் சிரிப்பு வந்த திக்கை நோக்கினாள்.
அந்தத் திக்கு இருண்டு கிடந்தது. அறையின் நட்ட நடுவில் இடம் பார்த்து மாட்டப்பட்டிருந்த யவனர் விளக்கின் திரி வேண்டுமென்றே இழுக்கப்பட்டிருந்ததாலும், குறுக்கேயிருந்த மரப்பலகை அடித்துவிட்ட இருட்டாலும் தலைவனிருந்த மூலையில் எதுவும் திட்டமாகக் கண்ணுக்கு புலப்படவில்லை. தலைவன் நன்றாக நீட்டிக் கொண்டிருந்த இரு கால்கள் மட்டும் குறுக்கே நின்ற பலகையைச் சிறிது தாண்டி வந்திருப்பதைக் கவனித்த அல்லி, தலைவன் காலைத்தான் பார்க்கலாமேயொழிய முகத்தைப் பார்க்க முடியாதென்பதை அறிந்து வியந்தாள். இத்தகைய அறிவும் திறனும் வாய்ந்த வனிடம் வேவு பார்ப்பது அத்தனை சுலபமல்லவென்பதையும் புரிந்து கொண்ட அந்த நாங்கூர்வேள் மகள், ‘சட்டென்று நான் எழுந்து அந்தப் பலகையைத் தாண்டி இவனைப் பார்த்தால் என்ன செய்வான்?’ என்று உள்ளூர எண்ணினாள்.

அந்த எண்ணத்தைப் புரிந்து கொண்டவன்போல் மரக்கலத் தலைவன் மீண்டும் களுக்கென்று நகைத்தான். அந்த நகைப்பு அரை வினாடியில் நின்றதும் சொன்னான்: “பெண்ணே! இருக்கும் இடத்தை விட்டு எழுந்திராதே. என் முகத்தைப் பார்க்க முயன்ற குற்றத்திற்காக ஏற்கெனவே மூவர் உயிரிழந்திருக்கிறார்கள். நீயும் அந்தப் பட்டியலில் சேர வேண்டாம்” என்று.

தலைவன் வார்த்தைகள் திட்டமாக இருந்தன. குரலும் வறட்சியாய்க் கரகரவென்றும் இருந்ததால் குரூரமும் அதில் தொனித்தது. மிகுந்த அபாயமான ஒரு மனிதனிடம் தான் சிக்கிக் கொண்டிருப்பதை அல்லி உணர்ந்தாள். ஆகவே மஞ்சத்தைவிட்டு நகராமல் காயமடைந்த இடத்தைச் சற்று அழுத்திக் கையால் பிடித்து மஞ்சத்தில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். மீண்டும் களுக்கென்று அந்த வறட்டுச் சிரிப்பு அறையைப் பயங்கரமாக ஊடுருவிச் சென்றது. அத்துடன் மறுபடியும் எழுந்தது மரக்கலத் தலைவனின் ஏளனப் பேச்சு. “காயம் பிறர் விளைவித்தாலும் சொந்தமாக விளைவித்துக் கொண்டாலும் வலிக்கத்தான் செய்யும்” என்று.

தங்கள் நாடகத்தை அந்தத் தலைவன் பூரணமாக உணர்ந்து கொண்டுவிட்டான் என்பதை அறிந்து கொண்ட அல்லி, “நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை” என்றாள்.

“நீங்கள் செய்தது எனக்கு விளங்கிவிட்டது” என்றான் மரக்கலத் தலைவன் தன் கால்களைக் குறுக்குப் பலகைக்கு வெளியே நன்றாக நீட்டி.

அல்லி தன் முகத்தில் பெரும் வியப்பைக் காட்டுவது போல் நடித்து, “நாங்கள் செய்ததா?” என்று வினவினாள்.

“ஆம் பெண்ணே! இதோ பார்” என்று தானிருந்த மறை விடத்திலிருந்து ஒரு சிறு கத்தியையும் மரக்கட்டையையும் தன் காலடியில் விட்டெறிந்த தலைவன், “இவற்றை நன்றாகப் பார்” என்று மீண்டும் வலியுறுத்திப் பேசினான்.

“பார்த்தேன். இவற்றுக்கென்ன?” என்று ஏதும் தெரியாதது போல் பதில் சொன்னாள் அல்லி.

“இது உன்னை யவன வீரன் தாக்கிய கத்தி. இது நீ அவனை மண்டையிலடித்த மரக்கட்டை” என்று கூறினான் தலைவன்.
“ஆம் ஆம். இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது” என்றாள் அல்லி.

“நினைவுக்கு வரச் சிறிது நேரம்தான் ஆகும். அடிபட்ட வுடன் இருவரும் மயக்கமடைந்து விட்டீர்களல்லவா?” என்றான் தலைவன் மீண்டும் களுக்கென்ற அந்தப் பழைய ஏளனச் சிரிப்பை உதிரவிட்டு.

தலைவன் எப்படித் தங்கள் திட்டத்தைத் துருவித் துருவி ஆராய்ந்து விட்டான் என்பதைப் புரிந்துகொண்ட அல்லி வெட்கத்தால் பதிலேதும் சொல்லாமல் மௌனம் சாதித்தாள். தலைவன் மீண்டும் மரக்கலத்தில் சிரித்தது போல் பேய்ச் சிரிப்பு சிரித்துவிட்டுச் சொன்னான், “பெண்ணே! பிரும்மானந்தருக்கு இந்தச் சிறுபிள்ளை நாடகத்தைத் தவிர வேறு நாடகம் ஆடத் தெரியாது போலிருக்கிறது. கேவலம் உன்னையும் ஒரு யவனனையும் சேர்த்து அனுப்பி விட்டால் நான் ஏமாந்து விடுவேன் என்று நினைப்பதைப் போல் பெரும் முட்டாள்தனம் வேறென்ன இருக்க முடியும்? இந்தப் பிரும்மானந்தரா ராஜதந்திரத்திலும் போர்த் தந்திரத்திலும் இணையற்றவனும், மரக்கலம் உடைந்து அனாதையாகப் புகார் வந்த அரை வருட காலத்திற்குள் அதை வசப்படுத்திக் கொண்டவனுமான டைபீரியஸை முறியடிக்க முடியும்! நன்றாக யோசித்துப் பார்! நாலைந்து நாட்களுக்கு ஒரு முறை இரவில் விளக்குகளுடன் பகிரங்கமாக வரும் என் மரக்கலங்களை வாணகரையிலுள்ள படைத் தலைவர்கள் கவனிப் பார்களென்பதைப் போர்த் தந்திரம் தெரிந்த எவனாவது அறியாமலிருப்பானா? அப்படி அறிந்திருப்பவன் தன் கப்பலை நாடிச் சரியான சமயத்தில் ஒரு படகு வருமானால் அதன் காரணத்தைத்தான் உணராமலிருப்பானா? இந்தக் கத்தியும் மரக்கட்டையும் யாரை ஏமாற்ற முடியும்? கத்தியை நன்றாகப் பார். அதன் பிடியைச் சுற்றிலும் ரத்தக்கரை இருக்கிறது. மரப் பிடியிலும் அதே மாதிரி இருப்பதைக் கவனி. காயம் இவற்றால் ஏற்படவில்லை என்பதற்கும், காயம் ஏற்பட்ட பின்பு இவை காயத்தின் மீது உருட்டப்பட்டிருக்கின்றன என்பதற்கும் இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்?”

அல்லியின் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. மரக்கலத் தலைவனின் புத்திக் கூர்மையைக் கண்டு சொல்ல வொண்ணா வியப்படைந்த அவள், இப்பேர்ப்பட்டவன் டைபீரியஸுடன் சேர்ந்துக் கொண்டு விட்டானே, இனித் தமிழகத்தின் கதி விபரீதமாகும் போலிருக்கிறதே என்றும் எண்ணியதால் சோகப் பெருமூச்சு விட்டாள்.

அவள் பெரூமூச்சைக் கவனித்த மரக்கலத் தலைவன், “பெண்ணே! எதிரிகளுக்கும் அறிவு உண்டு என்பதை நினைத்து நடப்பவன்தான் அறிவாளி. பிரும்மானந்தர் பெரிய ராஜதந்திரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப் பட்டவர் எதற்காக இந்தச் சிறுபிள்ளை நாடகத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை” என்று கூறினான்.

அல்லி பதிலேதும் சொல்லவில்லை. சொல்வதற்கு எதுவும் இல்லை. நீண்டநேரம் மௌனமே சாதித்தாள். பிறகு கேட்டாள்: “நீங்கள் யார்? எந்த நாடு?” என்று.

சிறிது நிதானித்தே பதில் சொன்னான் மரக்கலத் தலைவன். அந்தப் பதிலும் ஒரு கேள்வியாகவே வெளிவந்தது. “எந்த நாடென்று நினைத்து நீ இங்கு வந்தாய்?” என்றான் தலைவன்.
“யவன நாட்டினராயிருக்க வேண்டுமென்று நினைத்து வந்தேன்” என்றாள் அல்லி.

“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். டைபீரியஸைச் சேர்ந்தவன் வேறு எந்த நாட்டானாயிருக்க முடியும்!”

“டைபீரியஸுடன் சேருவதற்கு யவன நாட்டவனாகத் தானிருக்க வேண்டுமென்று விதியில்லை. தமிழனாகக் கூட இருக்கலாம்.”

“அப்படியா?”

“ஆமாம். இருங்கோவேள் தமிழன் தான். அவன் டைபீரியஸுடன் சேரவில்லையா?”

“ஆமாம், ஆமாம்.”

“தமிழ்நாட்டில் எதிரியுடன் சேர்ந்து நாட்டையழிக்கும் புல்லுருவிகளுக்கா குறைவு?”

“குறைவில்லை.”

அடுத்த கணம் அல்லியின் குரல் மிகுந்த வெறுப்புடன் எழுந்தது. “குறைவில்லையென்பதை உன் கால்கள் காட்டு கின்றன” என்று குரோதம் குரலில் பொங்கக் கூறினாள் அல்லி.

மரக்கலத் தலைவன் பதிலேதும் சொல்லவில்லை. சங்கடத்துடன் ஆசனத்தில் அசைந்ததை லேசாகச் சற்றுப் புரண்ட அவன் கால்கள் நிரூபித்தன. அவன் சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தவும் அவனை நிலைகுலையச் செய்யவும் ஆத்திரத்துடன் பேசத் துவங்கிய அல்லி, “நீ முகத்தை மறைக்கலாம். ஆனால் வர்ணத்தை எப்படி மறைக்க முடியும்? குணத்தைத்தான் எப்படி மறைக்க முடியும்? உன் கால்களை விளக்கொளியில் கண்ட போதே அவற்றின் செம்பொன் நிறத்திலிருந்து நீ யவனனல்ல என்பதை உணர்ந்து கொண் டேன். சுத்தமான உன் தமிழிலிருந்து நீ அராபியனாகவோ வேறுநாட்டவனாகவோ இருக்க முடியாதென்பதை ஊகித்துக் கொண்டேன். ஆகவே நீ தமிழகத்தைச் சேர்ந்தவனாகத் தானிருக்க வேண்டும். இத்தகைய கோடரிக் காம்புகள் வேறு நாட்டில் கிடைப்பது கஷ்டம். இந்த நாட்டில் மண்டிக் கிடக் கின்றன. இருங்கோவேள்! அவனைச் சேர்ந்த பதினைந்து வேளிர்கள்! பெருஞ்சேரலாதன்! பாண்டியன்! தமிழகத் துக்குத்தான் எத்தனை துரோகிகள்? இவையெல்லாம் தெரியும் எனக்கு. ஆனால் போர்க் கப்பல்களைத் தலைமை வகித்து நடத்தவும் ஒரு துரோகி வந்திருக்கிறானென்பதை இன்றுதான் உணர்ந்தேன். ஆனால் உன்னைப் போல் லட்சம் பேர் சேர்ந்தாலும் இந்த நாட்டை வெற்றி கொள்ள முடியாது. மன்னர் கரிகாலரிடம் இன்று பெரும் படை திரண்டு வருகிறது. வெகு சீக்கிரம் பெரும் போர் மூளும். அந்தப் போரில் நீங்களனைவரும் அழிக்கப்படுவீர்கள். உன்னைப் போன்ற துரோகிகள் பூம்புகாரின் காவற்பூதத்தின் பலிப் பாறையில் வெட்டப்படுவதை என் கண்ணால் காணப் போகிறேன்,” என்றாள். அவள் குரலில் ரத்த வெறி மண்டிக்கிடந்தது. தமிழனின் துரோகச் செயலால் அவள் உணர்ச்சிகள் மரக்கலத்தைச் சுற்றிச் சீறிக்கொண்டிருந்த அலைகளை விடப் பெரிதாக எழுந்து கொண்டிருந்தன.

அவள் நிதானித்து வரச் சில வினாடிகள் சென்றன. ஆத்திரத்தில் ஏதேதோ பேசிவிட்டதை நினைத்துச் சற்றுக் கூசவும் செய்தாள். ஒற்றர்கள் எந்தச் சமயத்திலும் உணர்ச்சி களுக்கு இடம் கொடுக்கலாகாது என்று பிரும்மானந்தர் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தது அப்பொழுதுதான் அவள் நினைவுக்கு வந்தது. மரக்கலத்தின் தலைவன் தன் ஆத்திரத் துக்கும் தூஷணைப் பேச்சுக்கும் எத்தகைய தண்டனை கொடுப்பானோ என்பதை நினைத்துச் சற்று அஞ்சவும் செய்தாள்.

ஆனால் மரக்கலத்தின் தலைவன் அவள் ஆத்திரத் தையோ வசைபாடலையோ சிறிதுகூட லட்சியம் செய்ததாகத் தெரிவில்லை. பதிலேதும் சொல்லாமல் தன் கைகளை இருமுறை தட்டினான். அந்த அழைப்பின் விளைவாக உள்ளே நுழைந்த இரு வீரர்களை நோக்கி, “இந்தப் பெண்ணின் கண்களை நன்றாகக் கட்டுங்கள். இவளைப் புகாருக்கு இப்பொழுதே அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு படகு தாயாராகட்டும்” என்று உத்தரவிட்டான்.

தலைவன் உத்தரவுப்படி அடுத்த சில வினாடிகளில் அவள் கண்கள் கட்டப்பட்டன. அந்த மஞ்சத்திலேயே அரை ஜாம நேரம் அவள் கிடந்தாள். அவள் கண்கள் கட்டப்பட்டதும் அறையைவிட்டு வெளியே சென்று விட்ட மரக்கலத் தலைவன், அவளை மீண்டும் படகில்தான் சந்தித்தான். அப்பொழுது அவள் கண்கள் மட்டுமின்றி, கைகளும் கட்டப் பட்டிருந்ததால் மிகவும் நிராதரவான நிலையில் இருந்த அல்லி, படகைச் செலுத்தத் தலைவன் உத்தரவிட்டதும், “புகாருக்கு என்னை ஏன் கொண்டு செல்கிறாய்?” என்று அதிகாரத்துடன் கேட்டாள்.
“எங்கள் தலைவரிடம் ஒப்படைக்க.”

“யார் உங்கள் தலைவர்?”

“டைபீரியஸ்.”

“எனக்கு என்ன தண்டனை கிடைக்கும்?”

“முடிவு செய்ய வேண்டியது அவர்.”

மரக்கலத் தலைவன் சம்பிரதாயத்துக்குத்தான் அந்தப் பதிலைச் சொல்கிறானென்பதை அல்லி உணர்ந்து கொண் டாள். கண்டிப்பாய்த் தன் உயிர் காலையில் ஆகாயத்தை நோக்கிச் சிட்டுக் குருவியாய்ப் பறக்கும் என்பதைச் சந்தேக மறப் புரிந்துகொண்டாள் அல்லி. அந்த விளைவைத் தாங்களும் புரிந்துகொண்டவை போல் குணதிசைக் கடலலைகள் படகை வெகு வேகமாக உந்திக்கொண்டு கரையை நோக்கி உருண்டன.

Previous articleYavana Rani Part 2 Ch28 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here