Home Sandilyan Yavana Rani Part 2 Ch3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

72
0
Yavana Rani Part 2 Ch3 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch3 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 3 லட்சியச் சிலையும் கப்பலின் திசையும்

Yavana Rani Part 2 Ch3 | Yavana Rani | TamilNovel.in

மரக்கலத்தின் பக்கப் பகுதிகளின் ஓரமாகச் செருகப் பெற்றிருந்த பந்தங்கள் சுற்றிலுமுள்ள நீர்ப்பரப்பில் சுமார் இரண்டடி தூரத்திற்கு வீசிய வெளிச்சத்தையும், விண்மீன்கள் கடல் முழுவதுமே தெளித்துவிட்ட சொற்ப ஒளியையும் தவிர வேறெவ்வித வெளிச்சமுமில்லாததால் கன்னங்கரேலென்று பயங்கரமாகக் கறுத்துக் கிடந்த அந்த இரவில் அடிமைக் கப்பலிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, பெருவாரியான கொள்ளைக்காரர்களும் உறங்கிவிட்டதால், கடல் நீரில் துழாவி எழுந்த துடுப்புகளின் சரேல் சரேலென்ற சத்தத்தையும், கடற்காற்றின் ‘ஊ’ என்ற ஊதல் சத்தத்தையும் தவிர வேறு ஒலி எதுவுமே கேட்காத அந்த நள்ளிரவில் எகிப்து நாட்டின் கார்டாபி முனைக்குச் செல்ல நாட்கள் பதினைந்து ஆகும் என்று தான் சொன்னதும் ஏதோ யோசித்துவிட்டு, தான் என்ன தடுத்தும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கொள்ளைத் தலைவன் அறையை நோக்கிப் படைத்தலைவன் விடுவிடு என்று நடக்கத் தொடங்கிய உடனேயே திகிலடைந்தான் ஹிப்பலாஸ்.

அந்த அறை விளக்கு அணைந்ததையும் முதலில் ஏற்பட்ட சப்தம் அடங்கிவிட்டதையும் கண்டதும் பெரும் கிலிக்கு உள்ளானான். டைபீரியஸுக்கு உதவியாயிருப்பவன் இருங்கோவேள் மட்டுந்தான். மற்றவர்களுக்குச் சோழர்களிடம் என்ன வெறுப்பும் விரோதமுமாயிருந்த போதிலும் தமிழகத்தில் யவன அரசு ஏற்பட சம்மதிக்க மாட்டார்கள் என்று அன்றுவரை நம்பியிருந்த படைத் தலைவனுக்கு, “சேரமானும் பாண்டியனும்கூட டைபீரியஸுக்கு எல்லாக் காரியங்களிலும் உடந்தைதான். சேரனே உங்களைப் பிடிக்க மேற்குக் கடற்கரைத் துறைமுகத்தில் பறையறிவித்திருக்கிறான்’ என்பதை, தான் உணர்த்தியதும் படைத் தலைவன் உணர்ச்சிகள் பெரும் கொந்தளிப்படைந்து விட்டதையும், முகத்தில் அபாயச் சாயை படரத் தொடங்கிவிட்டதையும் கண்டதுமே படைத் தலைவன் ஏதோ விபரீத வேலைகளில் இறங்கப் போகிறான் எனத் தீர்மானித்த ஹிப்பலாஸ், படைத் தலைவன் கொள்ளைத் தலைவன் அறையை நோக்கிச் செல்ல முயன்றதும், திகிலடைந்ததிலோ, அறைச் சம்பவங்களைத் தூரத்தேயிருந்து ஊகித்ததால் அவன் திகில் உச்ச ஸ்தாயிக்குச் சென்றதிலோ வியப்பேதும் இல்லையல்லவா? கொள்ளையர் மரக்கலத்திலிருந்த சூழ்நிலையில், படைத் தலைவனுக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் அவன் எதையும் செய்துவிடக்கூடும் என்று ஹிப்பலாஸ் நம்பியதிலும் தவறென்ன இருக்கிறது?

கொள்ளைத் தலைவன் அறைக்கு விடுவிடு என்று படைத் தலைவன் செல்ல முயன்றதுமே, ஆபத்தான மார்க்கத்தில் அவன் பிரவேசிக்கிறானென்பதை உணர்ந்த ஹிப்பலாஸ் அவனைத் தடுக்க முயன்றான். அது முடியாமற் போகவே, கொள்ளைத் தலைவன் அறைக்கு இந்த நள்ளிரவில் படைத் தலைவன் போய் என்ன செய்யமுடியும்?’ என்று நினைக்கத் தொடங்கியவன் அதற்குமேல் யோசிப்பதற்கும் ஒரு விநாடி பயந்தான். பிறகு, ‘கொள்ளைத் தலைவனைக் கொல்லவா போகிறார் படைத்தலைவர்! கொன்றுவிட்டால் மற்றக் கொள்ளைக்காரர்கள் அவரை வெட்டிப் போட்டு விடுவார்களே’ என்றும் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பெரும் வேதனையையும் அடைந்த ஹிப்பலாஸ் கொள்ளைத் தலைவன் அறையில் ஏதோ சத்தம் கேட்டு அடங்கி விளக்கும் அணைந்துவிடவே, ‘சரி, காரியம் முடிந்துவிட்டது’ என்று முடிவுக்கு வந்தான். ஆனால் யார் காரியம் முடிந்துவிட்டது? ஒருவேளை கொள்ளைத் தலைவன் விழித்திருந்து படைத் தலைவனைக் கொன்றிருந்தால்?’ என்று யோசித்த ஹிப்பலாஸின் உணர்ச்சிகள் அவனையே சித்திரவதை செய்யத் தொடங்கின. அவன் உணர்ச்சிகள் சலித்துத் தத்தளித்துபோலவே கொள்ளைத் தலைவன் அறை வாசலிலிருந்த தீப்பந்தமும் காற்றில் பெரிதும் சலனப்பட்டுக் கொண்டிருந்தது.

மேலும் காத்துக் கொண்டிருப்பது உசிதமில்லை யென்றும், கொள்ளைத் தலைவன் அறையில் நடந்தது என்ன வென்பதை அறிய வேண்டுமென்றும் தீர்மானித்த ஹிப்பலாஸ், கப்பலின் முனைப் பகுதிகளை ஒரு முறை தன் கண்களால் ஆராய்ந்தான். கப்பலைக் காவல் புரிய நியமிக்கப்பட்ட நாலைந்து கொள்ளைக்காரரையும் சுக்கான் பிடிப்பவனையும், தவிர வேறு யாரும் விழித்துக் கொண்டிருக்கவில்லை யென்பதையும், கீழே துடுப்புத் தள்ளுபவர்களுக்கோ, அவர்களைக் கசையாலடித்து வேலை வாங்குபவனுக்கோ மரக்கலத்தில் தளம் தெரியாததால் அவர்கள் விழித்துக் கொண்டிருந்தாலும் மேல் தளத்தில் நடப்பதை அறிய முடியாதென்பதையும், தளத்தில் விழித்துக் கொண்டிருந்த கொள்ளைக்காரர்கூட மரக்கலத்தின் முனைகளில் நின்று மதுவை அருந்தி விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்ட ஹிப்பலாஸ், கொள்ளைத் தலைவன் அறையை நோக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கத் துவங்கினான்.

அவன் நாலடி எடுத்து வைத்ததும் சற்றே அதிர்ச்சி யடைந்து சட்டென்று நின்ற இடத்திலேயே ஒரு விநாடி நின்றதன்றி, மறு விநாடி இரண்டடிகள் பின்பக்கமும் எடுத்து வைத்து, கொள்ளைத் தலைவன் அறையை நோக்கினான். அறைக் கதவு மீண்டும் திறக்கப்பட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இளஞ்செழியன் வெளியே தலை நீட்டியதை, கொள்ளைத் தலைவன் அறையில் வெளிப்புறப் பந்தம் வீசிய வெளிச்சத்தின்மூலம் பார்த்த ஹிப்பலாஸ் பெரிதும் வியப் படைந்து நின்றதல்லாமல், இளஞ்செழியன், மறுபடியும் உள்ளே சென்று எதையோ எட்டிப் பார்த்துவிட்டுத் தலையையும் இருமுறை ஆட்டிவிட்டு, மெள்ள தானிருந்த இடத்தை நோக்கி வருவதைக் கண்டதும், பழைய இடத்துக்கு நகர்ந்து மரக்கலத்தின் பக்கப்பலகையில் சாய்ந்து கடலின் அலைகள் இருக்குமிடமாகத் திரும்பிக்கொண்டான். இளஞ்செழியனும் பழையபடி வந்து அவனுக்குப் பக்கத்தில் சாய்ந்து நின்றான். படைத்தலைவன் நிலையைக் கண்டு ஹிப்பலாஸே ஆச்சரியப் பட்டுப் போனான்.

தன்னிடமிருந்து கொள்ளைத் தலைவன் அறையை நோக்கிச் சென்ற இளஞ்செழியன் வேறு, திரும்பி வந்த இளஞ் செழியன் வேறு என்பதை உணர்ந்து கொள்ள யவனனான ஹிப்பலாஸுக்கு அதிக நேரம் பிடிக்காததால் அவன் பெரிதும் பிரமிப்புக் கொள்ளலானான். சென்ற இளஞ்செழியன் கொந்தளிக்கும் உணர்ச்சிகளை உள்ளவன். ‘என் இதயம் வெடித்துவிடும்’ என்று நாட்டை நினைத்துக் கதறியவன். திரும்பி வந்த இளஞ்செழியனோ சாந்தமே உருவானவன். அவன் கடையிதழ்களில் சிறிது புன் சிரிப்பும் உருவெடுத்திருந்தது. தன் பக்கத்தில் அவன் மீண்டும் வந்து நின்றபோது அவன் மூச்சு மிக நிதானமாகவும், படபடப் பில்லாமலும் வந்து கொண்டிருந்ததைக் கண்ட ஹிப்பலாஸ் சிறிது வெறுப்பும் கொண்டான். இத்தகைய ஒரு அலுவலைச் செய்திருக்கும் படைத் தலைவன், இத்தனை நிதானமாக, எந்தக் குற்றத்தையும் தான் செய்யாதது போல நின்றிருந்ததைக் கண்ட ஹிப்பலாஸ் சொல்லவொண்ணா வியப்பும், ஓரளவு வெறுப்பும் அடைந்து, “பணி முடிந்து விட்டதல்லவா?” என்று வினவினான்.

இளஞ்செழியன் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “முடிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் ஹிப்பலாஸ்” என்று கூறினான்.

ஹிப்பலாஸ் குழப்பம் நிறைந்த விழிகளை இளஞ் செழியன்மீது திருப்பி விட்டுக் கேட்டான், “படைத் தலைவரே! தங்களிடம் நான் எத்தனை வருஷங்களாக இருக்கிறேன்!” என்று.

அந்தக் கேள்வியின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாததால் ஹிப்பலாஸை ஏறெடுத்து நோக்கிய இளஞ் செழியன், “ஏன் கேட்கிறாய் ஹிப்பலாஸ்? யவன நாட்டிலிருந்து வந்தது முதல் என்னிடத்தில்தான் பணி புரிகிறாய். வருஷங்கள் பல ஆயின” என்றான்.

“இத்தனை வருஷங்கள் பழகியும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை நான்” என்று ஹிப்பலாஸ் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.

“என்னைப் புரிந்து கொள்ளவில்லையா?” ஏதும் புரியாததால் வியப்புடனேயே வினவினான் படைத்தலைவன்.

ஹிப்பலாஸ் மரக்கலத்தின் பக்கப் பகுதியில் சாய்வதை விட்டு நன்றாக நிமிர்ந்து திரும்பி, படைத் தலைவனையும் திரும்பச் செய்து நேருக்கு நேர் அவனை ஒரு வினாடி நோக்கினான். “என் லட்சியச் சிலை இன்று உடைந்து விட்டது படைத் தலைவரே” என்று தழுதழுத்த குரலில் கூவினான்.

“விளக்கமாகச் சொல் ஹிப்பலாஸ்.” கட்டளையாக எழுந்தது இளஞ்செழியன் குரல்.

பதில் சொன்ன ஹிப்பலாஸின் குரலிலும் அன்றுவரை இளஞ்செழியன் கேட்டறியாத கடுமை இருந்தது. “விளக்கத்திற்கு ஏதுமில்லை படைத்தலைவரே. என் படைத் தலைவர் லட்சிய வீரன் என்று மனப்பால் குடித்திருந்தேன்; அத்தகைய வீரனிடம் பணிபுரிவதைக் கௌரவமாகக் கருதினேன். என் சகோதர யவனர்களிடமிருந்தும் அதற்காகப் பிரிந்தேன். அன்னப் பறவை ஆபரணத்துடன் அந்த வீரன் யவன நாட்டுப் பேரழகியும், யவன அரச குலமங்கையுமான ஒருத்தியைத் தூக்கி வந்து புகாரின் மாளிகையில் படுக்க வைத்த அன்றிரவில், அந்த ஆபரணத்தை உடையவளுக்குச் செலுத்த வேண்டிய கடமையினின்றும் பிறழ்ந்து அந்த வீரன் பக்கத்தில் நின்றதல்லாமல் யவனராஜ குடும்பத்துக்கெதிராக வாளையும் உருவினேன். ஏன்? ஒரு லட்சிய வீரன் உருவம் என் இதயத்தில் குடி கொண்டிருந்தது….” என்று சொன்னான் ஹிப்பலாஸ்.

அவன் சொல்வதன் பொருளைப் படைத் தலைவன் புரிந்து கொண்டானானாலும் எதற்காக அவற்றைச் சொல்கிறான் என்பதை அறிய முடியாததால், “இப்பொழுது அந்த உருவத்துக்கு என்ன வந்துவிட்டது?” என்று வினவினான்.

“உருவம் விகாரப்பட்டுவிட்டது. அதன் கைகள் ரத்தத்தில் தோய்ந்துவிட்டன” என்று பதில் கூறினான் ஹிப்பலாஸ்.

ஹிப்பலாஸின் எண்ணங்கள் மெள்ள மெள்ளப் புரிய ஆரம்பிக்கவே இளஞ்செழியன் முகத்தில் விவரிக்க முடியாத பல உணர்ச்சிகள் மாறி மாறி எழுந்து மறைந்தன. “ஹிப்பலாஸ்!” என்று அவன் அழைத்தபோது அந்தக் குரலில் துன்பமும் பூராவாகப் பிரதிபலித்தது.

“ஹும்?” ஒற்றை ஒலியில் கேட்டான் ஹிப்பலாஸ்.

“நான் கொள்ளைத் தலைவனைக் கொலை செய்து விட்டேனென்று நினைக்கிறாயா!” வியப்பும் வேதனையும் நிறைந்த குரலில் எழுந்தது இளஞ்செழியனின் அடுத்த கேள்வி.

“வேறென்ன செய்தீர்கள் பிரபு? கொள்ளைத் தலைவன் அறைக்குச் சென்றதற்கு வேறு காரணம்கூட இருக்கிறதா?” ஹிப்பலாஸின் பேச்சில் இகழ்ச்சி ஒலித்தது.

“ஹிப்பலாஸ்! இத்தனை நாள் பழகிய பிறகும் உன் படைத் தலைவனை நீ உணர்ந்த லட்சணம் இதுதானா?” படைத் தலைவன் பதிலில் துக்கம் துள்ளி விளையாடியது.

“படைத் தலைவர்…” என்று ஏதோ சொல்லப்போன ஹிப்பலாஸை இடை மறித்த இளஞ்செழியன் வெறுப்பின் சாயை பூரணமாகத் தொனித்த குரலில் கூறினான்: “உறக்கத்திலிருந்த கொள்ளைக்காரர் தலைவனைக் குத்திக் கொன்று விட்டார். ரத்தம் தோய்ந்த கைகளுடன், ஏன் அதை விடக் குற்றக் கறைபடிந்த மனத்துடன் திரும்பி வந்திருக்கிறார் என்று முடிவு செய்துவிட்டாய்.”

“வேறெந்த முடிவுக்கு வரமுடியும் படைத் தலைவரே? தமிழகத்தின் கதியைப்பற்றி நீங்கள் பட்ட வேதனை, உங்கள் முகத்தில் ஏற்பட்ட அந்த அபாயக் குறிகள், உங்கள் கண்களில் சில வேளைகளில் சூழும் மயக்கம், நீங்கள் கொள்ளைத் தலைவன் அறையை நோக்கிச் சென்ற வேகம் பிறகு-”

“பிறகு?”

“கொள்ளைத் தலைவன் அறையில் விளக்கு அணைந்த சத்தம் கேட்டது. பிறகு சத்தமும் அடங்கியது. இவற்றுக்கெல்லாம் காரணம்…”

“கொலை என்பது உன் முடிவு. நேர்முகமான போரில் தவிர வேறு எந்தச் சமயத்திலும் கத்தியை உருவாதவனென்று தமிழகம் முழுதும் பெயர் வாங்கிய இளஞ்செழியனை, இரவில், அதுவும் உறங்கும் ஒருவனைக் கொல்லும் கேவலமான மனிதனாக்கி விட்டாய். முதுகில் அம்பு பட்டுத் திரும்பி வந்தால், பிள்ளையாயிருந்தாலும் வீட்டுக் கதவடைக்கும் பெண்மணிகள் உறையும் தமிழ் நாட்டில் பிறந்த ஒருவன், உறங்கும் அப்பாவியைக் கொல்லக் கூடும் என்ற நினைப்புக்கே பரிசு கொடுக்கலாம்! அதுவும் உன் படைத்தலைவனை அத்தனை இதயமற்றவனாக, பண்பற்றவனாக, கொடியவனவாக, கேவலமான ஒரு மனிதனாக நினைத்தாயே ஹிப்பலாஸ், அதற்கு உனக்கு எதையும் கொடுக்கலாம்…” என்று சொல்லிக் கொண்டே போன இளஞ்செழியன் உணர்ச்சிப் பெருக்கால் ஒரு விநாடி பேச்சை நிறுத்திவிட்டு, சாந்தத்தை வரவழைத்துக் கொண்டு திடமான குரலில் சொன்னான்: “என் மேல் தவறில்லை ஹிப்பலாஸ். நாமி ருக்கும் நிர்க்கதியான நிலையில், நாட்டை விட்டு நெடுந்தூரம் வந்து நடுக்கடலில் திண்டாடும் இந்த அபாய நேரத்தில் கார்டாபி முனை வந்ததும் நாம் அடிமைகளாக விற்கப்படலாம் என்ற எண்ணம் நிரம்பியுள்ள சூழ்நிலையில் யாவரும் எதையும் செய்யலாம், ஆனால் நான் செய்ய மாட்டேன் ஹிப்பலாஸ்! அத்தகைய ஈன வழியில் தப்புவதைவிட வாழ் நாள் முழுதும் யவன நாட்டில், அடிமையாகக் காலங்கழிப்பேன். உன் இதயத்தில் நீ இருப்பதாகச் சொல்லும் லட்சியச் சிலை மாண்டு போகலாம், தூக்கி எறியப்படலாம், ஆனால் அழியாது. கறை படிந்த கையில் வாளேந்தி நான் தமிழகத்துக்காகக் கூடப் போரிட இஷ்டப்படவில்லை. ஆகவே கவலைப்படாதே. கொலை எதுவும் நடக்கவில்லை. தவிர கொலை செய்வதும் முட்டாள்தனம் ஹிப்பலாஸ். கொள்ளைத் தலைவனைக் கொலை செய்தால் உபதலைவன் தலைவனாவான். தவிர மற்றக் கொள்ளைக்காரர்கள் தலைவன் கொலைக்குப் பழியும் வாங்குவார்கள். கொலை யல்ல என் வழி, அது இருங்கோவேளின் வழி, இளஞ்செழியன் வழியல்ல.”

இளஞ்செழியன் கூறிய உறுதியான சொற்களால் மீண்டும் மனச்சாந்தியடைந்த ஹிப்பலாஸ், “அப்படியானால் அந்த அறையில் விளக்கு அணைந்தது, அங்கு ஏற்பட்ட சத்தம்..” என்று இழுத்தான். “போகப் போக நீயே தெரிந்து கொள்வாய். வா, போய் அடிமைகளோடு அடிமைகளாகப் படுப்போம்” என்று கூறிவிட்டு, தளைகளில் அகப்பட்டு உறங்கிக் கிடந்த அடிமைகளிருந்த இடத்திற்குச் சென்று படுத்தான் இளஞ்செழியன். அவன் பக்கத்தில் மல்லாந்து படுத்த ஹிப்பலாஸுக்குத் தூக்கம் வரவில்லை. “கொள்ளைத் தலைவன் அறையில் கொலை நடக்கவில்லை என்றால் என்ன நடந்தது?” என்று மீண்டும் மீண்டும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு விடையேதும் கிடைக்காததால் மனத்தைப் பலவிதமாகப் புரட்டிக் கொண்டான்.

என்ன புரட்டிக்கொண்டும் விடை கிடைக்கவில்லை. அன்றும் கிடைக்கவில்லை. மறுநாளும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு பல நாட்களும் கிடைக்கவில்லை. ஆனால் மறுநாள் முதல் கொள்ளைக்காரர் மரக்கலத்தில் பல விசித்திரச் சம்பவங்கள் ஏற்படத் தொடங்கின. ஒவ்வொரு நாளும் இளஞ் செழியன் நிலைமை பல வழிகளிலும் முன்னேற்றமடைந்து கொண்டே போயிற்று. கொள்ளைக்காரர் தலைவன் அடிக்கடி இளஞ்செழியனைத் தனது அறைக்குக் கூப்பிட்டனுப்பினான். பல சமயங்களில் கொள்ளைத்தலைவன் அறையிலேயே இளஞ்செழியனுக்கும் உணவு பரிமாறப்பட்டது. மாலை வேளைகளில் மஞ்சள் வெயில் வீசும் சமயத்தில் கொள்ளைத்தலைவனும் இளஞ்செழியனும் ஒன்றாக மரக்கலத்தின் முனைப்பில் நின்று நீண்ட நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் இருவரும் தலைவன் அறையில் சதுரங்கம் ஆடுவார்கள். அடுத்த பத்து நாட்களில் இளஞ்செழியனுக்கும் கொள்ளைத் தலைவனுக் கும் நட்பு வளர்ந்துகொண்டே போவதை ஹிப்பலாஸ் மட்டு மல்ல, கொள்ளைக்காரர்களும் கண்டு காரணம் புரியாமல் விழித்தார்கள். ஆனால் தலைவன் ஆணைக்கும் கொடுமைக்கும் அஞ்சி இளஞ்செழியனைத் தலைவனைப் போலவே பாராட்ட ஆரம்பித்தார்கள். கொள்ளைக்காரர் தலைவனிடமிருந்து அந்தப் பத்து நாட்களில் மரக்கலம் ஓட்டும் கலை நுட்பங்கள் பலவற்றையும் இளஞ்செழியன் அறிந்து கொண்டான். பாய்களை விரிப்பது, திரும்பக் கட்டுவது, சுக்கான் பிடிப்பது, திசையறிந்து மரக்கலத்தைத் திருப்புவது முதலிய பல அலுவல்களைச் செய்ய இளஞ்செழியனையே ஏவிய கொள்ளைத் தலைவன், தரைப் படைத் தலைவனுக்கு மரக்கலக் கலையையும் நன்றாக ஓதுவித்தான். இப்படி மெள்ள மெள்ளப் பயிற்சியடைந்த இளஞ்செழியன் நாள் செல்லச் செல்ல ஹிப்பலாஸுடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டான்! இளஞ்செழியன் விபரீதப் போக்கைக் கவனித்த ஹிப்பலாஸ் சொல்லவொண்ணா எரிச்சலும் குழப்பமும் கொண்டு, ‘இதென்ன விசித்திரம்! படைத் தலைவருக்கும் கொள்ளைத் தலைவனுக்கும் திடீரென இந்த நட்பு எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?” என்று பலமுறை தன்னையே கேட்டுக் கொண்டான். விடை ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் தான் சொன்ன பதினைந்து நாட்கள் சென்றும் கொள்ளை மரக்கலம் மட்டும் கார்டாபி வளைகுடாவின் அருகில்கூட வராததைக் கண்ட ஹிப்பலாஸின் மனத்தில் பெரும் சந்தேகம் உதயமாகத் தொடங்கியது. அந்தச் சந்தேகம் அவனுக்கு மட்டுமல்ல, கொள்ளைக் கப்பலில் இருந்த மற்றக் கொள்ளைக்காரர்களுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டதால் கொள்ளைத் தலைவன் உறங்கிய பின்னர் ஒரு நாளிரவில் கொள்ளைத்தலைவர்கள் ரகசியமாகக் கூடி ஏதேதோ பேசிக் கொண்டார்கள். பிறகு கப்பல் ஓட்டத்தைக் கவனித்தார்கள். கவனித்ததும் பெரும் திகிலும், கோபமும் கொண்டார்கள்! கப்பல் கார்டாபி முனைக்காகச் செல்லவில்லை, வேறு திசையில் ஓடிக் கொண்டிருந்தது. கப்பலின் முகப்புக்கு நேரே வானத்தில் துருவ நட்சத்திரம் பெரிதாகச் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here