Home Sandilyan Yavana Rani Part 2 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

130
0
Yavana Rani Part 2 Ch30 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch30 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 30 கண்கள் கதை சொல்லும்

Yavana Rani Part 2 Ch30 | Yavana Rani | TamilNovel.in

கடலலைகளால் உந்தப்பட்டு, பூம்புகாரின் கருமணல் மண்டிய கடற்கரையை நோக்கிக் கன வேகத்தில் சென்று கொண்டிருந்த படகில் கைகளும் கண்களும் கட்டப்பட்டுக் கிடந்த காரிகை அல்லி, வேவு பார்க்கும் தொழிலுக்கு டைபீரியஸ் எத்தகைய தண்டனையை அளிப்பானென்பதை உணர்ந்திருந்தாலும் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தான் மறைந்துவிட்டால் கரிகாலன் எத்தனை வேதனைப் படுவார் என்பதை மட்டும் நினைத்து நினைத்து மனம்புழுங்கி னாள். கரிகாலன் பெரும்படைகளைத் திரட்டி மாற்றாருடன் ஒரு நாள் போரிடுவான், வெற்றி கொள்வான், வெற்றி வாகையுடன் தனக்கு மணமாலை சூட்ட வருவான் என்றெல்லாம் தான் கனவு கண்டு மகிழ்ச்சியுற்ற நேரங்களை எண்ணிப் பார்த்த அல்லி, அவன் வெற்றிவாகை சூடினாலும் இனித் தன் கண்களால் அந்தக் காட்சியைக் காணமுடியாதே என்று தீராத ஏக்கமும் கொண்டு, அந்த ஏக்கத்தின் விளைவாக நீண்ட பெரு மூச்சு ஒன்றையும் விட்டாள். அந்தப் பெருமூச்சை அருகே உட்கார்ந்திருந்த யவனர் மரக்கலத் தலைவனும் கவனித் தானானாகையால் மீண்டும் அவன் களுக்கென்று நகைத்து, “வீராங்கனைகள் அபாயச் செயல்களில் இறங்கும்போது, செயல்களின் பயனையும் முன்கூட்டி யோசிக்கவேண்டும்” என்று சுட்டிக் காட்டினான். படகின் பக்கங்களில் அலை மோதியதால் படகுக்குள் பெருந் தூறல்கள் போல் வாரி வீசி, சுள்ளென்று முகத்திலும் கைகளிலும் விழுந்த உப்பு நீர்த்துளி கள், தலைக்காயத்துணியில் பட்டதால் உண்டான எரிச்சலை விட அதிக எரிச்சலைக் கிளப்பி விட்ட தலைவனின் சிரிப்பும் பேச்சும் அல்லியின் மனத்துக்கு மீண்டும் உறுதியை அளிக்கவே அவள் அலட்சியமாகப் பதில் சொன்னாள், “செயல்களின் பயனை நினைக்காமல் யாரும் செயல் புரிவதில்லை. விளைவை நினைத்தும் வீரப் பெண்மணிகள் அஞ்சுவதுமில்லை .”

அவள் துணிவைக் கண்ட மரக்கலத் தலைவன் உண்மையில் ஆச்சரியத்தின் எல்லையை அடைந்தானா னாலும் அதைச் சிறிதும் வெளிக்குக் காட்டாமலே கேட்டான். “அப்படி அஞ்சாதிருப்பதற்கு அடையாளம் சோகப் பெருமூச்சை வெளியிடுவதுதானா?” என்று.

இதைக் கேட்ட அல்லியின் வியப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. பெருமூச்சிலிருந்தே உள்ள உணர்ச்சிகளை அறியக்கூடிய அளவுக்கு மனோதத்துவத்தை அறியும் சக்தியை உடைய அந்த மனிதன் சாமான்யமானவனாயிருக்க முடியா தென்ற எண்ணத்தாலும், அவன் யாரென்பதை அறிய ஏற்பட்ட ஆசையாலும் மேலும் பேச்சுக் கொடுத்த அல்லி, “பெருமூச்சிலிருந்தே உள்ளத்திலோடும் எண்ணங்களை அறிந்துவிடுவீர்கள் போலிருக்கிறது” என்று கேட்டாள், குரலில் சற்றே இகழ்ச்சியைக் காட்டி

“அந்தச் சக்தியை ஆண்டவன் அளித்திருக்கிறான்” என்றான் தலைவன் சர்வசகஜமாக.

“அதுவும் பெண்கள் ஏன் பெருமூச்செறிகிறார்கள் என்பதையும் உங்களால் உணர முடியும்?”

“முடியும்.”
“பெண்களிடம் தங்களுக்கு நிரம்பப் பரிச்சயமோ?”

“ஓரளவு பரிச்சயமுண்டு.”

இதைக் கேட்டுச் சற்று இரைந்தே நகைத்தே நாங்கூர் வேள் மகள், “அதிலாவது அளவு வைத்திருக்கிறீர்களே” என்று கேலியாகப் பேசவும் செய்தாள்.

மாற்றார்களிடம் சிக்கிச் சுவாதீனமிழந்த நிலையிலும், நகைக்கவும் ஏளனமாகவும் பேசக்கூடிய அந்தப் பெண்ணின் மனத்திடத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட தலைவன் ஏது மறியாதவன்போல் பதில் சொன்னான், “எதிலும் அளவுடன் இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு” என்று.

“எந்த ஆன்றோர் வாக்கு? தமிழ் ஆன்றோர் வாக்கா? அல்லது உங்கள் எசமானர்களுடைய ஆன்றோர் வாக்கா?” என்று அல்லி விஷமமாக வினவினாள்.

தலைவன் ஒரு வினாடி யோசித்துவிட்டு, “எங்கள் எச மானர்களா! ஓகோ! யவனர்களிடம் நான் பணி செய்வதைக் குறிப்பிடுகிறாயா! ஆன்றோர்கள் வாக்கு எந்த நாட்டிலும் ஒரே விதமாகத்தானிருக்கிறது. அளவோடும் நிதானத்தோடும் எதிலும் ஈடுபடவேண்டுமென்பதில் தமிழர்களும் சரி, யவனர்களும் சரி, ஒரே மாதிரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்” என்றான்.

அல்லி மேற்கொண்டு சிறிது நேரம் ஏதும் பேசாமல் சுற்றிலும் எழுந்து மோதிக்கொண்டிருந்த அலைகளின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மரக்கலத் தலைவன் அவள் திடீரென்று மௌனமடைந்து விட்டதைக் கவனித்ததும் தானே பேச்சுக் கொடுத்து, “ஏன் பேச்சு நின்று விட்டது பெண்ணே ? இன்னும் ஏதாவது சந்தேகமிருந்தால் இப்பொழுதே கேட்டுவிடு. நீ டைபீரியஸின் கைகளில் சிக்கிய பிறகு உன்னை நான் பார்க்க முடியாது” என்றான்.

“பேச்சுக்கு அவகாசமில்லை” என்றாள் அல்லி திடமான குரலில்.

“ஏன் அவகாசமில்லை?”

“அனேகமாகக் கரைக்கு வந்துவிட்டோம்.”

“எப்படித் தெரிகிறது உனக்கு? உன் கண்கள்தான் கட்டப்பட்டிருக்கின்றனவே?”

“கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் உணர்ச்சி கள் கட்டப்படவில்லை. காதும் அடைக்கப்படவில்லை.”

“கரையைப் படகு அடைவதைக் காது காட்டுமா?”

“காது காட்டாது. கேட்குமல்லவா?”

“கேட்கும்.”

“அலைகளின் சத்தத்திலிருந்து ஊகிக்கிறேன் தலைவரே. கரைக்கருகே புரளும் அலைகள் தரையில் மோதும் சப்தம் காதில் விழுகிறது.”

“கடலலைகளை இத்தனை தூரம் அளவிட முடியுமா உன்னால்? நீ கெட்டிக்காரிதான்.”

இதற்குப் பதில் அல்லி நகைத்தாள். “பெண்களின் எண்ண அலைகளை எடை போடும் உங்கள் கெட்டிக்காரத் தனத்துக்கு முன்பாக என் கெட்டிக்காரத்தனம் உறைபோடக் காணுமா?”

அவள் பதிலைக் கேட்ட தலைவனும் நகைத்தான். அந்த நகைப்பில் அவனது பழைய குரலின் கடுமை அதிகமில்லாததைக் கண்ட அல்லி, அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய முயன்று மேலும் இரண்டொரு கேள்விகளை வீசினாளானாலும் மரக்கலத் தலைவன் பதிலேதும் சொல்ல மறுத்தான். அவள் கேள்விகள் முடிவதற்கும் படகின் மூக்கு சர்ரென்று மணலில் உராய்வதற்கும் யவன மாலுமிகள் நால்வரும் துடுப்புகளைத் தளர்த்தி நீரில் குதித்து, படகின் முன்புறக் கயிறுகளைப் பிடித்துப் படகை இழுத்துக் கரை சேர்ப்பதற்கும் நேரம் சரியாயிருந்ததால் மரக்கலத்தலைவன், “பெண்ணே! மேற்கொண்டு பேசவேண்டியதை அவகாச மிருக்கும் பட்சத்தில் பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று கண்டிப்புடன் அறிவித்துவிட்டு, ஒரு குழந்தையைத் தூக்குவது போல் அவளைப் படகிலிருந்து தூக்கிக் கரை மணலில் நிறுத்தினான். பிறகு கூட வந்த வீரர்களை விளித்து, “நீங்கள் படகைச் சங்கமத்துறைக்காகச் செலுத்திச்சென்று அங்குள்ள தளைகளில் பிணைத்துவிட்டு ஊருக்குள் செல்லுங்கள். இந்த வேவுக்காரி அகப்பட்டது யாருக்கும் தெரியவேண்டாம். மிகவும் ரகசியமாக இருக்கட்டும்” என்று உத்தரவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு, இரண்டடி எடுத்து வைத்து அல்லி தனிமையில் நின்றிருந்த இடத்துக்கு வந்து, அவளை வெகு அலட்சியமாகத் தூக்கித் தோள் மீது போட்டுக்கொண்டு மாலுமிகள் சென்ற திக்குக்கு நேர் எதிர்ப்புறமாக நடக்கலானான்.

அவன் நடத்தை ஒவ்வொன்றும் பரம விசித்திரமாக இருந்தது அல்லிக்கு. ‘வேவு பார்க்க வந்த என்னைப் பிடித்தவன் ஒன்று மாலுமிகளிடம் என்னை ஒப்படைத்துச் சிறைக்கு அனுப்ப வேண்டும். அல்லது தானே என்னைக் கொண்டு சென்று டைபீரியஸிடம் சேர்ப்பிக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் எங்கோ தூக்கிக்கொண்டு போகிறானே’ என்று நினைத்துப் பார்த்துவிடை கிடைக்காமல் திண்டாடினாள். அவள் எண்ணங்களைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாத யவனர் மரக்கலத் தலைவன், ஏதோ ஒரு துரும்பைத் தூக்கிக் கொண்டு போவதுபோல் அவளைத் தூக்கிக்கொண்டு வேகமாக நடையைக் காட்டினான்.

மூன்றாம் ஜாமம் நடந்து கொண்டிருந்ததால் பூம்புகாரில் ஜன நடமாட்டமும் இதர அரவங்களும் பெரிதளவு அடங்கிவிட்டாலும், டைபீரியஸின் பலத்த காவல் ஏற்பாடுகளின் காரணமாக யவன வீரர்களின் நடமாட்டம் மட்டும் அதிகமாக இருந்ததன் விளைவாக அவர்களின் பாதக் குறடுகளின் ஒலி கடற்கரைப் பிராந்தியத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தவிர காவல்வீரர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் எச்சரிக்கையொலி கோட்டைக்கு உள்ளும் புறமும் அடிக்கடி பலமாக எழுந்து கொண்டிருந்தது. டைபீரியஸ் புகாரை ஆக்கிரமித்துக்கொண்ட பிறகு கோட்டையின் அகன்ற சுவர்கள் மீதும் வீரர்களை நடமாட விட்டிருந்ததால், அவர்கள் கையிலேந்திய பந்தங்கள் சுவர்கள் மீது நடமாடுவது போலும் எரியும் கண்கள் பல புகாரிலிருந்து கடலைக் கண்காணிப்பது போலும் தோன்றின. யவனர்கள் கூச்சல் அதிகப்பட்டிருந்ததேயொழிய, பரதவர் இல்லங்களில் கேளிக்கையும் கூச்சலும் மருந்துக்குக்கூடக் கேட்காததைக் கவனித்த அல்லி, டைபீரியஸின் இரும்புப் பிடியில் புகார் பூரணமாகச் சிக்கிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். அதை நினைத்ததால் அவளை அறியாமல் பெருமூச்சொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. ஆனால் அதை உடனே அடக்கிக் கொண்டாள் அல்லி, அதற்கு ஏதாவது மரக்கலத் தலைவனிடமிருந்து இகழ்ச்சிப் பேச்சு வரும் என்ற நினைப்பில். ஆனால் அவள் எதிர்பார்த்தபடி இகழ்ச்சிப் பேச்சு அவனிடமிருந்து வரவில்லை. எச்சரிக்கைப் பேச்சே வந்தது. “பெண்ணே ! உயிரின்மேல் ஆசையிருந்தால் எதுவும் பேசாதே. மூச்சுக்கூட விடாதே. மயக்கமுற்றவள்போல் படுத்திரு” என்றான் தலைவன்.

அவன் எச்சரிக்கைக்குக் காரணம் ஏதும் புரியாததால் அல்லி கேட்டாள், “மயக்கமுற்றவர்களின் கைகளும் கண் களும் கட்டப்பட்டிருக்குமோ?” என்று.

“கட்டப்பட்டிருக்காது. ஆனால் உன் கண்களையோ கைகளையோ யாரும் பார்க்கப் போவதில்லை” என்று கூறி விட்டுத் தன் இடது தோள்மீது மடித்துக் கிடந்த ஒரு போர்வையை உதறி அவள் உடலை போர்த்தி விட்ட தலைவன் சற்று வேகமாக நடக்க முற்பட்டான்.

அப்படி நடந்த வேகத்தில் அல்லியின் தோள் அவன் கழுத்தில் மட்டுமின்றி, கன்னத்திலும் உராய்ந்ததால் அவள் ஆச்சரியத்தால் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். அவன் கன்னத்தை மூடியிருந்த உலோகத் தகட்டிலிருந்து, யவனர் போர்க்கவசத்தால் அவன் முகத்தை மூடியிருக்கிறா னென்பதைப் புரிந்து கொண்ட அல்லி, அவன் அப்படி எதற்காகத் தலைமறைந்து திரியவேண்டும் என்பதை அறிய முடியாமல் திணறினாளானாலும், அந்த மனிதனைச் சுற்றி ஏதோ பெரும் மர்மம் இருக்கிறதென்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.

அவன் அவளைத் தூக்கிச் சென்று பூம்புகாரின் வடதிசை கோட்டைச் சுவரின் திட்டிவாசலில் நுழைந்தபோதும், யவனர் தெருக்களின் வழியாக நடந்தபோதும், காவல் வீரர்கள் பேசிய பேச்சிலிருந்து தனது ஊகம் நூறுக்கு நூறு சரியென்பதை உணர்ந்து கொண்டாள் அல்லி. திட்டி வாசலில் அவன் நுழைந்ததுமே அவனுக்குத் தலை தாழ்த்தி வணங்கிய யவன வீரர்களில் ஒருவன், “தலைவர் இன்றுதான் உடலைப் போர்த்தி மூடாமல் வருகிறார்” என்று மற்றொரு வீரனிடம் கூறினான் ஏளனத்துடன்.

“தோள் மேல் தூக்கி வந்திருக்கும் இன்பச் சுமையை மறைக்கப் போர்வை தேவையல்லவா?” என்று கூறிச் சிரித்தான் மற்றொருவன்.

அவர்களுடன் கலந்து கொண்டு நகைத்த மரக்கலத் தலைவன், “இந்தப் பெண் நம்மவளல்ல! இந்த ஊரைச் சேர்ந்தவள். பவள நாட்டு மதுவை அளவுக்கு அதிகமாக அருந்தி விட்டாள்” என்று கூறிவிட்டுத் தானும் மதுவைச் சற்று அதிகமாக அருந்திவிட்டதுபோல் பாசாங்கு செய்து, சிறிது தூரம் தள்ளாடி நடந்து, காவல் வீரர்கள் கண்களிலிருந்து மறைந்ததும் விடுவிடு என்று நடையைக் கட்டினான்.

மருவூர்ப்பாக்கத்தின் யவனர் வீதிகளில் வீடுகள் சிலவற் றில் அப்பொழுதும் கேளிக்கைகள் நடந்து கொண்டிருந்ததால், தெரு மூலைத் தீபங்கள் வீசிய ஒளிப்பாளங்களை விட்டு விலகி இருட்டடித்த இடங்களிலேயே ஒதுங்கி ஒதுங்கி நடந்த தலைவன், வெகு துரிதமாக மருவூர்ப் பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் இடையே இருந்த ஒரு மாளிகையை அடைந்து, கதவைப் பலமாகத் தட்டவே சிறிது நேரத்திற் கெல்லாம் அந்தப் பழைய மாளிகையின் பலத்த இரும்புத் தாழ்ப்பாள்கள் பெரும் சத்தத்துடன் இழுக்கப்பட்டுக் கதவுகள் திறந்தன. அந்த மாளிகைக்குள் யவனர்கள் கூட்டம் மட்டுமின்றி, மற்றும் பல நாட்டார் கூட்டமும் கலந்திருந்ததை அவர்கள் பேசிய யவன மொழி உச்சரிப்பிலிருந்து ஊகித்த அல்லி, அந்த மாளிகையிலும் ஏதோ மர்மம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டாள். அதைப்பற்றி ஏதோ கேட்கவும் வாயெடுத்தபோது அவள் உடலைத் தலைவனின் கரம் பற்றிப் பலமாக அழுத்தி எச்சரிக்கை செய்யவே, அவள் நாவில் எழுந்த கேள்வி உதட்டிலேயே உறைந்து விடவே, ‘பொறுத்தால் எல்லாம் புரிந்து விடுகிறது’ என்று தீர்மானித்தாள் அல்லி.

மாளிகைக்குள்ளே நுழைந்த மரக்கலத் தலைவன், கதவைத் தாழிடும்படிக்கும் எச்சரிக்கையுடன் காவல் புரியும் படிக்கும் அங்கிருந்த வீரர்களுக்குக் கூறிவிட்டு, அல்லியைத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் அதிக வேகத்துடன் ஏறிச் சென்று மாடியறையில் இருந்த மஞ்சத்தில் அவளைக் கிடத்தி அவள் கைகட்டுகளையும் கண்கட்டையும் அவிழ்த்துவிட்டு, “இனிப் பயமில்லை” என்றும் சொல்லி மஞ்சத்தின் ஓர் ஓரத்தில் தானும் உட்கார்ந்து கொண்டான்.
அல்லி கயிறு கட்டப்பட்டதால் சற்றுக் கன்னியிருந்த மணிக்கட்டுகளை இருமுறை அசக்கிக் கொண்டதன்றி, உள்ளங்கைகளால் தன் மலர் விழிகளையும் இருமுறை கசக்கி விட்டுக் கொண்டு சுற்றுமுற்றும் நோக்கினாள். அறையில் எங்கும் போர்க் கவசங்களும் போர்க்கலங்களும் நிறைந் திருந்தன. பலப்பல நாட்டு வாள்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்ததன்றி, தூரத்தேயிருந்த மஞ்சத்தில் சில ஓலைச் சுவடிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஓலைச்சுவடி நீங்கலாக மற்றப்படி அந்த அறை போர்க்கோலம் பூண்டு நின்றதையும், அறையின் கதவுகள் கூடப் பலமான இரும்புச் சலாகைகள் அறையப்பட்டு, ஒரு முறை கதவை அடைத்தால் கோடரி கொண்டு பிளந்தாலும் பிளக்கமுடியாத அளவுக்குப் பலப்பட்டிருந்ததையும் கவனித்த அல்லி, கதவுக்கு அப்பாலும் கண்களை ஓட்டினாள். கதவுக்கு வெளியே இருந்த மாடித் தாழ்வாரத்தின் கைப்பிடிச் சுவர்களில் யாரும் சுலபத்தில் ஏற முடியாதபடி சூலங்கள் பதிக்கப் பெற்றிருப்பதையும், கைப் பிடிச்சுவரின் ஓரமாக வளர்ந்திருந்த பெரும் வேப்பமரப் பிராந்தியத்தில் மட்டும் சூலங்கள் இல்லாததையும் கவனித்த நாங்கூர்வேள் மகள் சூலங்கள் சீதோஷ்ண நிலையால் பாதிக்கப்படாதிருந்ததைக் கண்டு, அவை மிகச் சமீபத்திலேயே பொருத்தப்பட்டிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தாள்.

அவள் கண்கள் போன திக்கையெல்லாம் கவனித்ததல் லாமல், அவள் முகத்திலோடிய உணர்ச்சிகளையும் கவசத்தின் இடுக்குகள் வழியாகப் பார்த்துவிட்ட தலைவன் பழையபடி களுக்கென்ற ஏளனச் சிரிப்பை உதிரவிட்டான். அந்தச் சிரிப்பினால் விழித்துக்கொண்ட அல்லி சற்று எரிச்சலுடன் கேட்டாள், “எதற்காகச் சிரிக்கிறீர்கள்? என்ன ஆனந்தம் ஏற்பட்டுவிட்டது உங்களுக்கு?” என்று.
“பெரும் அபாயத்திலிருந்து தப்பினால் ஆனந்தம் ஏற்படுவது இயற்கைதானே?” என்று கேட்டான் தலைவன்.

“என்ன ஆபத்திலிருந்து தப்பினீர்கள்?” என்று மீண்டும் கேட்டாள்.

“தமிழகத்தின் தலைசிறந்த வேவுகாரியிடமிருந்து தப்பினேனே, அதைவிட அதிர்ஷ்டம் வேறு இருக்கிறதா?” என்று மீண்டுமொரு கேள்வியை வீசினான் தலைவன்.

“நான் தமிழகத்தில் தலைசிறந்த வேவுகாரியென்று யார் சொன்னது உங்களுக்கு?”

“உன் கண்கள்.”

“என் கண்களா !”

“காரிகையர் கண்கள் சொல்லும் கதைகள் உலகில் ஆயிரமுண்டு என்பது கவிஞர் துணிபு. அதில் வேவுக் கதை ஒன்று உண்டு என்பதை இன்றுதான் அறிந்தேன். நீ அறையை ஆராய்ந்த திறன். சூலங்களை நோக்கியமுறை, அவற்றைப் பற்றிக் கட்டிய முடிவு இவையனைத்தையும் உன் கண்கள் மிக மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன.”

அல்லி அவன் கூரிய அறிவை வியந்தாள். இருப்பினும் தன்னை இந்திர விழா மாளிகைக்கு அழைத்துச் சென்று டைபீரியஸிடம் ஒப்படைக்காமல் அந்தப் பழைய மாளிகைக்குக் கொண்டு வந்ததன் காரணம் புரியாததால், அவனை நேரடியாகக் கேட்டுவிடுவதெனத் தீர்மானித்து, “இங்கு எதற்காகக் கொண்டு வந்தீர்கள் என்னை!” என்று வினவினாள்.

“அதிகாரிகளிடம் ஒப்படைக்க.”

“டைபீரியஸிடம் ஒப்படைக்க இங்கு கொண்டு வருவானேன்?”

“டைபீரியஸைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவார்கள்.”

“எப்பொழுது வருவார்கள்?”

அவள் கேள்விக்குத் தலைவன் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாது போயிற்று. வாயிற்கதவை மெல்ல யாரோ தட்டும் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது அல்லியின் காதுகளுக்கு. அந்தச் சத்தம் தலைவன் காதிலும் கேட்கவே அவன் சட்டென்று மஞ்சத்தைவிட்டு எழுந்தான். “உன்னை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்கள் வந்து விட்டார்கள். இதோ அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெகு வேகமாக வெளியே சென்றான் தலைவன்.

வினாடிகள் விரைவாக ஓடின. வரப்போவது யார் என்பதை அறிய முடியாததாலும், வருவது டைபீரியஸா, அவன் உபதலைவனா என்பதைப்பற்றித் திட்டமாகத் தெரியாததாலும் வினாடிகளைவிட விரைவாக ஓடியது அல்லியின் இதயம். சிறிது நேரத்திற்கெல்லாம் மாடிப்படியில் யாரோ இருவர் ஏறி வரும் அரவம் கேட்டது அல்லிக்கு. அல்லி பஞ்சணையிலிருந்து எழுந்து நின்று கொண்டாள். மாடிப் படிகளில் ஏறி வந்தவர்களில் ஒருவர் மாடிப்படி உச்சியை அடைந்ததும் சிறிது தயங்கியதாகத் தோன்றியது அல்லிக்கு. ஆனால் அந்தப் பேர்வழி சற்றுத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அடியெடுத்து வைத்து அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவரைப் பார்த்ததும் அல்லியின் கண்கள் வியப்பால் மலர்ந்தன. “நீங்கள்…!” என்று ஏதோ சொல்ல முற்பட்டு முடியாததால் வாயடைத்து நின்றாள் அவள். பிறகு கால்கள் அடியோடு சக்தியற்றுப் போய்த் துவண்டு விழுவதுபோல் தோன்றியதால் மீண்டும் பஞ்சணையில் தொப்பென்று விழுந்தாள். மெள்ள மெள்ள அவளுக்கு உண்மை புலனாகத் தொடங்கியதால் முகத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சி பரவலாயிற்று. விழிகள் ஆச்சரியத்தைக் கக்கின. அந்த ஆச்சரியப் பார்வையிலும் அதிசயக் கதையொன்று விரிந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch29 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here