Home Sandilyan Yavana Rani Part 2 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

74
0
Yavana Rani Part 2 Ch31 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch31 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 31 பழைய நினைவுகள்

Yavana Rani Part 2 Ch31 | Yavana Rani | TamilNovel.in

மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப் பாக்கத்துக்கும் இடையே நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்தப் பழைய மாளிகையின் மாடிப்படி உச்சியில் சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டுப் பிறகு அறைக்குள் நுழைந்த பேர்வழியைக் கண்டதும் அல்லியின் மலர் விழிகள் சில வினாடிகள் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து விட்டனவென்றாலும், அவள் புத்திகளில் எண்ண அலைகளைச் சிதறவிட்டதால், அவள் இதயத்தில் மெள்ள மெள்ள தானுள்ள நிலையும் உண்மையும் புலரத் தொடங்கின. அப்படி புலரத் தொடங்கியதன் விளைவாக, ‘இப்படியும் காரியங்கள் நடப்பது சாத்தியமா!’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு வியப்பின் விளிம்பை அடைந்த அல்லி, தானும் பிரும்மானந்தரும் கொண்ட அச்சத்திற்கு வெளிப் படையான ஆதாரங்கள் பல இருந்தாலும் உள்மர்மம் வேறு விதமிருப்பதை எண்ணிப் பார்த்து, ‘நிலைமை இப்படி யிருக்கும் போதா படகில் கடலில் மிதந்து கட்டையால் அடிபட்டது போல் பாசாங்கு செய்து இல்லாத கஷ்டமெல்லாம் பட்டு மரக்கலத் தலைவனிடம் சிக்கினேன்!’ என்று நினைத்தாள். இத்தனையிலும் மரக்கலத் தலைவனின் பல செயல்களுக்கு மட்டும் அவளால் விடை கண்டுபிடிக்க முடியாமற் போகவே அவள் புத்தி மறுபடியும் குழம்பவே தொடங்கியது. ‘மரக்கலத் தலைவன் சோழ நாட்டு மக்களின் நண்பனானால் என்னிடம் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. எதிரியானால் டைபீரியஸிடம் என்னை அனுப்பாமல் இங்கு கொண்டு வருவதில் அர்த்தமில்லை. அவன் நண்பனா எதிரியா?’ என்ற பல கேள்விகளைத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

இப்படிக் கேள்விகளும் பதில்களும் எழுந்து அல்லியின் சித்தத்தில் சுழன்றனவென்றால், அறைக்குள் நுழைந்த பேர் வழியின் முகத்தில் சந்தேகம் பெரிதும் மண்டிக் கிடந்தது. அந்தச் சந்தேகத்தின் விளைவாக அறையைச் சுற்றிலும் ஒரு முறை சுழன்ற நீலமணிக் கண்கள் கடைசியில் அல்லிமீது நிலைத்தன. அந்தக் கண்களுடன் தன் கண்களைச் சில வினாடிகளே உறவாடவிட்ட அல்லி, யவன ராணியின் முகத்தையும் பொதுத் தோற்றத்தையும் தன் கண்களால் ஆராய்ந்து, நீலமணிக் கண்களில் புதைந்து கிடந்த சோகம்கூட அந்த யவனப் பேரழகியின் முகத்துக்கு ஒரு தனிப் பொலிவை அளித்திருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டாள். நிலவறை வழியாகத் தானும் குமரன் சென்னியும் காவிரி நதி நீர் மூலம் அழைத்துச் சென்ற யவன ராணிக்கும், அறைக்குள் நுழைந்த யவன ராணிக்கும் வேறுபாடுகள் பலமாக இருந்ததை அல்லி கவனித்தாள்.

வெள்ளகத்திப் புஷ்பத்தைவிட சாதாரணமாகவே வெளுத்திருக்கும் யவன ராணியின் வசீகர முகம் அன்றும் வெண்மை பாய்ந்திருந்தாலும், அவள் வழவழத்த கன்னக் கதுப்புகளில் தட்டும் சிவப்பு மட்டும் தெரியாதிருந்ததன் விளைவாக ராணி சற்றுப் பலவீனமுற்றிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது அல்லிக்கு. ஆனால் குறுகுறுவென்று சுழன்று வேல்கள்போல் பளிச்சிட்ட அந்த நீலமணிக்கண்கள், உடல்தான் பலவீனமுற்றிருக்கிறதேயொழிய உள்ளம் சிறிதும் பலவீனமடையவில்லையென்பதை அறிவுறுத்தின. பொன்னைப் பழிக்கும் அவள் கொண்டையிலிருந்து பிரிந்து அவள் முகத்தில் சுருண்டு கிடந்த மயிர்க் கொத்து ஒன்று முகத்தின் இயற்கையான கம்பீரத்தை அதிகப்படுத்தியதன்றி அவள் உள்ளத்தின் உறுதிக்குச் சான்றளிப்பதுபோல் தோன்றியது. அறைக்குள் அவள் நுழைந்தபோது தலையி லிருந்த பட்டு முக்காட்டை இடது கையால் அலட்சியமாகத் தள்ளிவிட்டுக் கொண்ட தோரணையும், இடை நெளிய அழகுகள் அசைய அவள் நடந்த மாதிரியும்கூட, ராணி எந்த நிலையிலும் ராணிதான் என்பதைச் சந்தேகமறப் பறைசாற்றின. சற்றே இளைத்த அந்த நிலையிலும் கவலை முகத்தில் பரவிக் கிடந்த அந்த நேரத்திலும், ராணி ஆண்களை என்ன, பெண்களைக் கூடக் கவரும் இணையற்ற சக்தியைப் பெற்றிருந்ததால், ராணியின் ஒவ்வோர் அசைவையும் கவனித்த அல்லி, “அப்பா! என்ன தெய்வீக அழகு!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ராணியும் அல்லியை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தாள். கரிகாலனுக்கும் அல்லிக்கும் ஏற்பட்டுள்ள புது உறவு முறையை ஒற்றர்கள் மூலம் டைபீரியஸ் அறிந்திருந்ததாலும் அதை அவன் ராணிக்கும் சொல்லியிருந்ததாலும், அல்லியின் முகத்தில் பிரதிபலித்த புதுப் பொலிவுக்கும் உடல் சற்று செழுமைப்பட்டிருந்ததற்கும் காரணத்தை ஊகித்துக் கொண்ட ராணி மெள்ளத் தன் செவ்விய இதழ்களில் ஒரு புன் முறுவலையும் படரவிட்டாள். அத்தனை முகப்பொலிவில் சிறிது குழப்பமும் கலந்திருந்ததைக் கவனித்த ராணி எதைப் பற்றி அவள் குழப்பமடைந்திருக்கிறாள் என்பதை அறிய முடியாததாலும், இருவர் மௌனமும் நீண்ட நேரம் நீடித்து விட்டதாலும், மேற்கொண்டு மௌனம் சாதிப்பது சங்கட மாயிருந்ததாலும், இரண்டடி எடுத்து வைத்து அல்லி உட்கார்ந்திருந்த மஞ்சத்தினருகில் வந்து நின்றுகொண்டு, சோழ நாட்டின் பிற்கால ராணியை இங்கு நான் எதிர்பார்க்க வில்லை” என்றாள் உரையாடலைத் துவக்கி.
“சோழ நாட்டின் பிற்கால ராணியா!” என்று வியப்பு மண்டிய குரலில் கேட்ட அல்லி, “உட்காருங்கள் ராணி” என்று சிறிது நகர்ந்து மஞ்சத்தில் உட்கார ராணிக்கு இடமும் கொடுத்தாள்.

‘ஆம் அல்லி, சோழ நாட்டு மன்னரின் மனையாட்டி பிற்கால ராணிதானே?” என்றாள் ராணி மஞ்சத்தில் உட்கார்ந்து, புன்முறுவலைச் சற்று அதிகமாகவே வளரவிட்டு.

“மன்னருக்கு மணிமுடியே இன்னும் கிட்டவில்லையே. பிறகுதானே மனையாட்டி ராணியாக முடியும்?” என்று கூறிய அல்லி, “அது மட்டுமல்ல ராணி. இன்னும் அவர் மனையாட்டி பதவிகூட எனக்குக் கிடைக்கவில்லை” என்றாள்.

ராணி மெல்ல நகைத்தாள். “இப்பொழுதுதானே முதற் பதவி கிடைத்திருக்கிறது” என்றும் கூறினாள்.

“முதற் பதவியா!” அல்லியின் கேள்வியில் ஆச்சரியம் மண்டிக் கிடந்தது.

“ஆம், காதலிப் பதவி கிடைத்திருக்கிறது. அடுத்தது மனையாட்டிப் பதவி. அதற்கும் அடுத்தது ராணிப் பதவி” என்று சொல்லிய ராணி அல்லியின் தோள் மீது கையை வைத்து, “அல்லி! இதெல்லாம் நானெப்படி அறிந்தேன் என்று ஆச்சரியப்படுகிறாயல்லவா? ஆச்சரியம் வேண்டாம். இதைச் சோழ நாட்டில் பெரும்பாலோர் அறிவார்கள். உறையூர் அரண்மனைக் காவலர் தலைவர் நாங்கூர்வேளானதும், பிறகு அவர் தமது மகளை மட்டுமின்றி இருங்கோவேள் சிறை வைத்த பூவழகியையும் அழைத்துக் கொண்டு மறைந்து விட்டதும் நாடெங்கும் பேசப்படுகிறது. ஆனால் அவர்கள் எங்கு போனார்கள், யாரிடம் சேர்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புகாரில் பலருக்குத் தெரியாது. ஆனால் இருவர் அறிவார்கள்” என்றும் விளக்கினாள்.

• அல்லியின் இதயத்தில் ஆச்சரியத்துடன் ஓரளவு அச்சமும் கலக்கவே, “யார் அந்த இருவர்?” என்று கேட்டாள்.

“டைபீரியஸ் ஒருவன், நான் ஒருத்தி” என்றாள் ராணி.

“”உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

“டைபீரியஸ் சொன்னான்.”

“டைபீரியஸுக்கு யார் சொன்னது?”

“மாரப்பவேள் சொன்னார்.”

“யார், பூவழகியின் தந்தையா!”

“ஆம்!”

அல்லி சட்டென்று கட்டிலிலிருந்து எழுந்து கலவரம் நிரம்பிய கண்களுடன் ராணிக்கு எதிரில் நின்று கொண்டு சோழ நாட்டின் ராணிக்குரிய தோரணையில் தலையைச் சற்றுக் கம்பீரத்துடன் உயர்த்தி, “இப்பொழுது மாரப்பவேள் எங்கே?” என்று வினவினாள்.

“புகாரின் சிறையில்.” ராணியின் பதில் திட்டவட்டமாக வந்தது.

“புகாரின் சிறையிலா? அவரைச் சிறையிலடைக்க டைபீரியஸுக்கு என்ன துணிச்சல்?” அல்லியின் கேள்வியும் உஷ்ணமாக எழுந்தது.

ராணியின் நீலமணிக் கண்கள் அல்லியின் கோபம் மண்டிக் கிடந்த முகத்தை ஒரு முறை துழாவின. அவள் இதழ்கள் புன்னகையை மறுபடியும் கொட்டின. “மாரப்பவேளைச் சிறையிலடைக்கத் துணிச்சல் எதற்கு” என்று ராணியின் உதடுகள் வார்த்தைகளையும் உதிர்ந்தன.

“மாரப்பவேள் இருங்கோவேளின் நண்பரல்லவா?” என்று கேட்டாள் அல்லி.

ராணியின் பதில் உறுதியுடன் வந்தது. “இல்லை அல்லி , இல்லை. மாரப்பவேள் அங்கு வருமுன்பே அவரைப் பற்றிச் செய்தி வந்தது. வந்தவுடன் அவரைச் சிறையில் தள்ளும்படி இருங்கோவேள் முன்னதாகவே ஓலை எழுதியிருந்தான். ஓலையை டைபீரியஸே என்னிடம் காட்டினான். அதன்படி அவர் சிறையில் தள்ளப்பட்டார்” என்றாள் ராணி.

அல்லிக்கு அப்போதுதான் நிலவரம் திட்டமாகப் புரிந்தது. பூவழகியை அவன் அணுக இடைஞ்சலாயிருந்ததாலேயே மாரப்பவேளைப் புகாருக்கு அரசியல் காரியமாக அனுப்புவதுபோல் பாசாங்கு செய்து, இருங்கோவேள் அவரைச் சிறையிட ஏற்பாடு செய்துவிட்டானென்பதை அறிந்து கொண்ட அல்லி, “என்ன நம்பிக்கைத் துரோகம்? எத்தனை கேவலம்!” என்று அலுத்துக் கொண்டாள்.

“அப்படி நம்பிக்கைத் துரோகிகள் இல்லாவிட்டால், வேறு நாட்டார் உங்கள் நாட்டை உடைக்க முடியுமா? புகார் தான் எங்கள் கைவசமாகுமா?” என்று கேட்ட ராணி, ஒரு விநாடி மௌனம் சாதித்துவிட்டு, “ஆமாம்! நீ இங்கு எப்பொழுது வந்தாய் அல்லி?” என்று வினவினாள்.

“இப்பொழுதுதான்” என்றாள் அல்லி.

“எப்படி வந்தாய்?” என்று கேட்டாள் ராணி சந்தேகத்துடன்.

“நானாக வரவில்லை. கொண்டு வரப்பட்டேன்” என்றாள் அல்லி.

“யாரால் கொண்டு வரப்பட்டாய்?”

“அதுதான் புரியவில்லை. கொண்டு வந்தவன் முகம் பூராவும் கவசத்தால் மூடிக் கிடந்தது.”

ராணி மஞ்சத்தில் இருமுறை அசைந்தாள். அவள் முகத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் படர்ந்தன. மீண்டும் அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தாள். கடைசியாக அல்லியைப் பார்த்துக் கேட்டாள்: “இந்த அறையை முன்பு எப்பொழுதாவது நீ பார்த்திருக்கிறாயா?” என்று.

“இல்லை. பார்த்ததில்லை” என்று பதில் சொன்னாள் அல்லி .
ராணி மஞ்சத்திலிருந்து எழுந்து ஒருமுறை அறையைச் சுற்றினாள். சுவரின் ஒரு பகுதியில் சாத்தப்பட்டிருந்த இரும்புக் கவசத்தைப் பல நிமிஷங்கள் சோதித்தாள். “ஆம்! அதுதான்! சந்தேகமில்லை” என்று சற்று இரைந்து சொல்லிக் கொண்டு அறைக் கதவைத் திறந்து வெளியேயும் நோக்கினாள். அவள் முகம் திடீரெனப் பளிச்சிட்டது. திரும்பி வந்த யவன ராணியின் முகம் ஏதோ யோசனையின் விளைவாக ரத்தக் குழம்பாகச் சிவந்து கிடந்தது. “உன்னைத் தூக்கி வந்தவனை எங்கு சந்தித்தாய்?” என்று கேட்ட ராணியின் குரல் லேசாக நடுங்கவும் செய்தது.

ராணியின் திடீர் மாற்றத்துக்கும் குரல் தடுமாற்றத்துக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத அல்லியும் மஞ்சத்திலிருந்து திடீரென எழுந்தாள். “கடலில் சந்தித்தேன்” என்றாள் ஏதோ கட்டுக் கதைக்கு விடை கூறுவதைப் போன்ற ஒலியில்.

“கடலிலா?” யவன ராணி மறுபடியும் உதடுகள் துடிக்கக் கேட்டாள்.

“ஆம். அதாவது மரக்கலத்தில்.”

“எந்த மரக்கலத்தில்?”

“யவனர் மரக்கலத்தில்.”

“அங்கு ஏன் சென்றாய்?”

“யவன மரக்கலங்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை புகாரை நோக்கி வருவதாகப் பிரும்மானந்தருக்குச் செய்தி வந்ததன்றி, மரக்கலங்கள் வருவதையும் அவர் பார்த்தார். அதைப்பற்றிய விவரங்களை அறிய என்னை அனுப்பினார்.”

“தன்னந்தனியாக! நடுக் கடலில்!”

“தன்னந்தனியாக இல்லை” என்ற அல்லி தான் படகில் யவன வீரனுடன் அனுப்பப்பட்ட விவரங்களையும், மரக்கலத் தலைவனைத் தான் ஏமாற்ற முயன்ற முறைகளையும் விவரித்தாள்.

ராணியின் கண்கள் பளிச்சிட்டன. ‘களுக்’கென்று மதுரகீதம்போல் சிரிப்பொலியொன்றையும் வெளியிட்டாள் ராணி. அந்தச் சிரிப்பைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது அல்லிக்கு. அதே சிரிப்பைத்தான் திரும்பத் திரும்ப அவள் மரக்கலத் தலைவனிடம் கேட்டிருந்தாள். ‘அப்படியானால் மரக்கலத்துக்குத் தலைமை தாங்குவது ராணியா!’ என்று நினைத்து ஒரு வினாடி பிரமித்தாளானாலும் மறுவினாடி அந்தக் கருத்தைத் துடைத்துத்தள்ளிய அல்லி, ‘சே! சே! ஒருநாளுமிருக்காது. நான் சந்தித்தது ஒரு ஆண்மகன்தான். என்ன அனாயாசமாக என்னைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். அந்தக் கைகளின் உரமெங்கே, இந்த ராணியின் பட்டுக் கரமெங்கே?’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்ட அல்லி, “ராணி! அந்தச் சிரிப்பை நான் ஏற்கெனவே

“அந்த மரக்கலத் தலைவனிடம்தானே?” என்றாள் ராணி அதை முன்பே அறிந்தவள் போல.
அல்லியின் பிரமிப்பு முன்னைவிடப் பன்மடங்கு அதிகப்பட்டது. “மரக்கலத் தலைவனை உங்களுக்குத் தெரியுமா ராணி?” என்று வினவினாள் அல்லி.

“இதுவரை தெரியாது அல்லி. எனக்கு மட்டுமல்ல. டைபீரியஸுக்கும் தெரியாது.”

“டைபீரியஸுக்கும் தெரியாதா?”

“ஆம் அல்லி. தெரியாது. விந்தையாயில்லையா? டைபீரியஸை இதுவரை சந்திக்க மறுத்துவிட்டான் யவனர் மரக்கலத் தலைவன்.”

“அதெப்படி முடியும் ராணி? யவனர் நாட்டின் தலை சிறந்த கடற்படைத் தலைவனான டைபீரியஸ் உத்தரவிட்டால் எதிரே வரவேண்டியவன்தானே மரக்கலத் தலைவன்?”

அல்லியின் கேள்விகளிலிருந்த நியாயத்தை ராணி புரிந்து கொண்டாளானாலும் அதைப்பற்றித் தர்க்கிக்காமல் சொன்னாள்: “யவன நாட்டிலிருந்து வந்திருக்கும் மரக்கலங் களுக்குத் தலைவர் இருவர் இருக்கிறதாக டைபீரியஸுக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. ஒருவரைப் பற்றிய விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதைப்பற்றி என்னிடம் எதுவும் சொல்ல மறுக்கிறான். இன்னொருவன் தான் இந்த முகக் கவசமணிந்த தலைவன். இவன் அடிக்கடி புகாருக்குள் வருவதாகச் செய்தி உலவுகிறது. ஆனால் டைபீரியஸ் இந்தத் தலைவனை யாரும் அணுகக் கூடாதெனத் திட்டமான உத்தரவு பிறப்பித்திருக்கிறான். டைபீரியஸின் போக்குக்கு காரணம் எனக்கே புரியவில்லை. மறைந்து திரியும் மரக்கலத் தலைவன் ஒருவன் விஷயத்தில் இத்தனை தாராள மாக அவன் ஏன் நடந்து கொள்கிறான் என்பதும் விளங்க வில்லை . டைபீரியஸ் யாராவது ஒருவனிடம் தாராளம் காட்டினால் அதில் ஆபத்தும் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.”

அல்லியின் கண்களில் பரிதாபம் மண்டியது. “அப்படி யானால் இந்த மரக்கலத் தலைவனுக்கு-” என்று இழுத்தாள் அல்லி .

“ஆபத்து சதா காத்திருக்கிறது. அது எப்பொழுது வரும், என்ன உருவெடுக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது” என்று முடித்த ராணி சிறிது நேரம் ஏதோ யோசனையில் இறங்கினாள். பிறகு அல்லியைப் பார்த்து, “அல்லி, இந்தத் தலைவனைச் சுற்றி மர்மம் பெரிதாக இருக்கிறது. ஆனால் அதை ஓரளவு ஆராய்ந்தும்விட்டேன். இந்த அறைக்கு நான் ஏற்கெனவே ஒருமுறை வந்திருக்கிறேன்” என்றாள்.

“எப்போது வந்திருக்கிறீர்கள்? எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டாள் அல்லி.

ராணியின் நினைப்புப் பின்னோக்கி ஓடுவதை அவள் நீலமணிக் கண்களில் ஏற்பட்ட லேசான மயக்கப் பார்வை வலியுறுத்தியது. ஏதோ கனவில் பேசுவதுபோல் இல்லை ஏதோ சொர்க்கத்தில் சிக்கிவிட்டதுபோல் பேசினாள் ராணி. “பல மாதங்களுக்கு முன்பு ஒரே முறை வந்தேன் அல்லி! உன்னைப்போல் என்னையும் ஒருவர் கடற் பகுதியிலிருந்து தான் தூக்கி வந்தார். ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு வித்தி யாசம். நீ முழு உணர்வுடன் அவர்மீது சாய்ந்து கிடந்தாய். நான் உணர்வற்ற நிலையில் இருந்தேன். இங்குதான் கண் விழித்தேன். இந்த மஞ்சத்தில்தான் அவர் என்னைப் படுக்க வைத்து மதுவை ஊட்டினார். வேறு உடையும் கொடுத்தார். அந்தச் சம்பவங்களை இன்று நினைக்கக்கூட வெட்கமாயிருக் கிறது எனக்கு. ஆனால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து அதே அறைக்கு இன்று வருகிறேன் ஒரு ஓலையின் உத்தர வுக்குப் பணிந்து..” என்று பேசிக்கொண்டு போன ராணி சற்றுப் பேச்சை நிறுத்தினாள்.

“ஓலையா!” என்று வியப்புடன் வினவினாள் அல்லி.

“ஆம். இந்த மாளிகை விவரத்தை எழுதி இங்கு இன்றிரவு சந்திக்கும்படியாக எழுதியிருந்தது. இதோ பார் ஓலையை” என்று மடியிலிருந்து ஓலையை எடுத்துக் கொடுத்தாள் ராணி.

அந்த ஓலையின் அடியில் பொறிக்கப்பட்டிருந்த அன்னப்பறவைக் குறியைக் கவனித்த அல்லி, “யவனர்களின் அரச முத்திரை” என்று முணுமுணுத்தாள்.

“ஆம். இந்த முத்திரைபோல் செய்யப்பட்ட ஆபரணத் தையும் இங்குதான் கண்டார் அவர். பிறகு இந்த மாளிகையில் பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறின. அன்றுதான் தமிழர் வீரம், எத்தகைய நிலையையும் சமாளித்துக் கொள்ள அவர் களுக்குள்ள திறமை, இவற்றைக் கண்கூடாகக் கண்டேன்” என்று பழைய கதையை விவரித்த ராணி, “ஆகவே இங்கு வரவழைத்தவர் யாராயிருந்தாலும் அவர் இத்தனை ரகசியங் களையும் அறிந்தவராகத் தானிருக்க வேண்டும்” என்று கூறினாள்.
“அதிருக்கட்டும் ராணி. இத்தனை ரகசியங்களையும் அறிந்தவர் வேறு யாராக இருக்க முடியும்?”

ராணி சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். அவள் பளிங்கு முகத்தில் சிவப்பு மெள்ள ஏறி கன்னக் கதுப்புகளைக் குங்குமக் குழம்பாக அடித்தது.

“வேறு யாருமல்ல, அவர்தான்; சந்தேகமில்லை, சந்தேக மில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் ராணி.

“ஏன் பெயரைச் சொல்லி விடுவதுதானே? பெயர் அத்தனை கசப்பாகவா இருக்கிறது?” எனக் கணீரென்று அறையை ஊடுருவிச் சென்ற சொற்களைக் கேட்ட ராணியும் அல்லியும் பிரமித்துப் போய் அறைக் கதவை நோக்கித் திரும்பினார்கள். கையில் தலைக் கவசத்துடனும் இதழ்களில் எந்த எழிலரசியையும் மயக்கும் இன்பப் புன்னகையுடனும் சோழர் படையின் உபதலைவனான இளஞ்செழியன் நின்றிருந்தான்.

Previous articleYavana Rani Part 2 Ch30 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here