Home Sandilyan Yavana Rani Part 2 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

75
0
Yavana Rani Part 2 Ch32 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch32 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 32 சிலைகள் இரண்டா மூன்றா?

Yavana Rani Part 2 Ch32 | Yavana Rani | TamilNovel.in

மாதக் கணக்கில் காணாமல் மறைந்துவிட்ட சோழர் படை உபதலைவனான இளஞ்செழியன், சர்வசாதாரணமாகவும் இயற்கையாகத் தவழ்ந்தோடும் புன்னகையுடனும் அந்தத் தனி மாளிகையின் மாடியறை வாயிற்படியில் தங்களெதிரே காட்சியளித்ததன்றி, எந்த விநாடியிலும் அவனை ஆபத்து விழுங்கிவிடக் கூடிய பயங்கரச் சூழ்நிலை யிலும் இம்மியளவும் நிதானம் தவறாமல் சொந்த ராஜ்யத்தில் உலாவும் மன்னனைப் போல வேடிக்கையாகப் பேசவும் தொடங்கியதைக் கண்ட யவன ராணியும் சோழ நாட்டின் பிற்கால ராணியும், அடியோடு ஸ்தம்பித்துப் போய் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றார்கள். அவர்கள் நிலையைக் கவனித்த சோழர் படை உபதலைவன் தன் முகத்தில் தவழ்ந்த முறுவலைச் சிறிதும் குறைக்காமலே கதவைத் தாண்டி இரண்டடி எடுத்து வைத்து அறைக்குள் நுழைந்து, “இரண்டு ராணிகளின் தாக்குதல்களைத் தாங்குவதற்கு இந்த அடிமையிடம் சக்தியில்லை” என்று கூறிவிட்டு, ‘உட்காருங்கள்’ என்பதற்கு அடையாளமாகத் தன் கையிலிருந்த கவசத்தால் பஞ்சணையை நோக்கிச் சைகையும் செய்தான்.

எத்தனை ஆபத்துக்களையும், திடீரென ஏற்படும் எத்தகைய சந்தர்ப்பங்களையும் சமாளிக்கும் சக்திவாய்ந்த நெஞ்சத் திடமுள்ள அந்த வஞ்சியர் இருவரும், அந்தச் சில விநாடிகளில் மட்டும் தங்கள் நெஞ்சங்களை அடியோடு நெகிழ விட்டும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அற்பத் திராணியுமில்லாமலும் இரண்டு சிற்பச் சிலைகளென நின்ற இடத்தை விட்டுச் சற்றுகூட அகலாமலிருந்ததைக் கவனித்த படைத் தலைவன், “சிலைகளைப் பார்த்திருக்கிறேன் பல இடங்களில். ஆனால் உயிர்ச் சிலைகளைப் பார்க்கும் பாக்கியம் இன்றுதான் கிடைத்தது” என்று அவ்விருவர்மீதும் தன் கண்களை ஓட்டி விட்டுக்கூறியதன்றி மெல்ல நகைக்கவும் செய்தான். அந்தச் சிரிப்பினால் சுளீரென்று சாட்டையாலடிக்கப் பட்டவளைப் போல் சுரணையடைந்த அல்லி, அந்தச் சிரிப்புக்கும் தான் மரக்கலத் தலைவனிடம் கேட்ட சிரிப்புக்குமிருந்த பெரும் வித்தியாசத்தை எண்ணிப் பார்த்து, ‘ஒருவேளை அந்த மரக்கலத் தலைவன் வேறோ?’ என்று தன்னைத் தானே கெட்டுக் கொண்டு, ‘இருக்காது, இருக்காது. அப்படியிருந்தால் இந்த முகக் கவசத்தை இவர் எதற்காகக் கையில் எடுத்து வரவேண்டும்?’ என்று பதிலையும் தானே சொல்லிக் கொண்டாள்.

யவன ராணியின் நினைப்புகள், அல்லியின் எண்ணங் கள் ஓடிய திசையில் மட்டுமல்ல, இளஞ்செழியனைவிட்டு அப்புறமோ இப்புறமோ வேறெந்தத் திசையிலுமே அசையவும் மறுத்தது. அப்படி அசைந்தாலும் பல மாதங்களுக்கு முன்பு அவனைப் பிரிந்த அந்த இடத்துக்கே சென்றது. ‘காவேரியின் அதே பெரும் புனல் பரப்பு! அதோ அந்தப் படகுதான் மிதந்து வருகிறது! காவிரி வெள்ளத்திலே மிதந்து தமிழகத்தின் மண் வாசனையைத் தூக்கி வந்த அதே தென்றல்தான் உடலைத் தழுவிச் செல்கிறது! ஆகா! தமிழகத்தின் மண்ணில்தான் எத்தனை நறுமணம்! அது கிடக்கட்டும். பூவழகியிடம் மனத்தைப் பறிகொடுத்ததாகப் பறை சாற்றும் இந்தப் படைத் தலைவர் என் மடியில் தானே படுத்திருக்கிறார்!’ என்று ராணியின் இதயம் சொற்களை உதிர்த்தது. புத்தி அந்த இன்ப நேரங்களையும் பிராந்தியத்தையுமே சுற்றிச்சுற்றி வந்தது. அந்தச் சில விநாடிகளில் ராணி அந்த மாடியறையை மறந்தாள். தனக்குத் தமிழகத்தில் மகுடம் கிட்டுமெனச் சொன்ன சோதிடர்களை மறந்தாள். இளஞ்செழியனுடன் தான் பழகிய சில நாட்களை மட்டுமே எண்ணி மகிழ்ந்தாள். அத்துடன் தான் எப்பொழுதும் நம்பிய விதியின் வலிமையை மட்டும் தொடர்ந்து நம்பினாள். எட்டு மாதங்களுக்கு முன்பு முதன் முதலாகப் புகாரின் கடற்கரையில் புரண்ட நாளிலிருந்து பலவித ஆபத்துக்கள் ஏற்பட்ட போதிலும் விதி தன்னையும் படைத்தலைவனையும் திரும்பத் திரும்பப்பிணைப்பதை எண்ணி இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்த ராணியின் இதழ்களில் மகிழ்ச்சிப் புன்முறுவலொன்று மெல்ல மெல்லப் படரலாயிற்று.

யவன நாட்டுப் பளிங்குச் சிலைபோலிருந்த ராணியின் முகத்திலும் உணர்ச்சிகள் மெல்ல மெல்லத் துளிர்விடத் தொடங்கிவிட்டதையும், அவள் சிவந்த இதழ்களில் புன் முறுவலொன்று ஓடியதையும் கண்ட இளஞ்செழியன், அல்லியை ஒரு முறை நோக்கிவிட்டு, “ராணி! இனியும் என்னால் தாங்க முடியாது. ஒன்று நீங்களிருவரும் உட்கார வேண்டும்” என்றான் சங்கடத்தின் சாயை தொனித்த குரலில்!

“எதைத் தாங்க முடியாது படைத் தலைவரே?” என்று கேட்டாள் அல்லி இளஞ்செழியனை நோக்கி, ராணியிட மிருந்து பதிலேதும் வராமற்போகவே.

“வேல்கள் நான்கு தாக்குவதை” என்று பதில் சொன்னான் படைத்தலைவன். அல்லியைக் கடைவிழியால் நோக்கி.

“நான்கு வேல்களா?” என்று அல்லி மீண்டும் வின வினாள் சற்று ஆச்சரியத்துடன். அல்லி சம்பிரதாயத்துக்குப் பேசுகிறாளேயொழிய அவள் உணர்ச்சிகள் ஒரு நிலையி லில்லை என்பதைக் குரலின் சலனத்திலிருந்தே ஊகித்துக் கொண்ட இளஞ்செழியன், அந்த இரு பெண்களின் பிரமிப் புக்குத் தன் திடீர் விஜயம் காரணமென்பதை அறிந்து கொண்டானாகையால், அவர்கள் திகைப்பைக் கலைப்பதற் காகவே மேலும் பேசத் தொடங்கி, “ஆம் ராணி! நான்கு வேல்கள் தான்” என்றான் அல்லியை நோக்கித் திரும்பி.

இதைக் கேட்ட அல்லி திடுக்கிட்டு, “யாரை அழைக்கிறீர்கள் ராணி என்று? என்னையா!” என்று வியப்பு மிதமிஞ்சிய சொற்களை உதிரவிட்டாள்.

“ஆம். தங்களைத்தான் அழைத்தேன். என்னைக் கண்டதால் நீங்களிருவரும் குழப்பமடைந்திருப்பது எனக்குத் தெரிகிறது. இந்த அறையில் எப்பொழுதும் குழப்பம் ஏற்படுவது இயற்கை. முதன் முதலில் யவன ராணி இங்கு வந்தாள். சோழ நாட்டு அரசியல் குழம்பியது. இன்று சோழ நாட்டு ராணி, யவன ராணி ஆகிய இரண்டு ராணிகள் வந்திருக்கிறார்கள். எப்படி யாரை அழைப்பதென்று எனக்கே குழப்பமாயிருக்கிறது. இனி சோழநாடு என்ன, பாரத நாட்டின் நிலையே குழம்பினாலும் வியப்படைவதற்கில்லை” என்று வேடிக்கையாகப் பேசினான் படைத் தலைவன்.

அவன் நெஞ்சுரத்தைக் கண்டு இரண்டு ராணிகளும் ஆச்சரியத்தின் எல்லையை அடைந்தார்கள். ‘தன் ஒரே விரோதியென்று நினைத்திருக்கும் படைத் தலைவன் உயிருடனிருக்கிறானென்பதை அறிந்தாலே டைபீரியஸ் அவனை அழித்துவிட ஒரு கணமும் தயங்கமாட்டானென்பதை அறிந்திருந்த அந்த இரு ராணிகளும், சிங்கத்தின் வாயில் நுழைவதைப் போல் டைபீரியஸால் நன்றாகக் காவல் செய்யப்பட்டு வரும் புகாருக்குள் தைரியமாக நுழைந்து உலாவுவதன்றி, வேடிக்கையாகவும் பேசுகிறாரே படைத் தலைவர்’ என்று எண்ணியதால் திகைப்பும் வியப்பும் கலந்தோடிய உணர்ச்சிகளில் சிக்கிய அந்த இரு ராணிகளில் முதலில் சுயநிலையடைந்த அல்லி மட்டும் சொன்னாள் சற்றுப் பொய்க் கோபத்துடன், “படைத் தலைவர் பேசும் முறை எனக்குப் பிடிக்கவில்லை” என்று.

“நான் என்ன அப்படித் தவறாகப் பேசிவிட்டேன் தங்களிடம்?” என்று வினவினான் படைத் தலைவன் வணக்கம் நிறைந்த குரலில்.

“உங்கள் குரலே எனக்குப் பிடிக்கவில்லை” என்றாள் அல்லி.

“ஏன், குரலில் அகந்தை இருக்கிறதா?”

“இல்லை, அகந்தை இருந்தால் எனக்குப் பிடிக்கும். வணக்கம் அதிகமாயிருக்கிறது.”

“தாங்கள் சோழ நாட்டின் பிற்கால ராணியல்லவா?”

“தாங்கள்! ராணி! என்ன சொற்கள்! மிகவும் கசப்பா யிருக்கிறது படைத் தலைவரே! இனியொருதரம் இப்படிப் பேசினால் உங்களைத் தண்டிக்கத் தயங்கமாட்டேன்” என்று அல்லி கூறி, தன் விழிகளை அவன்மீது நாட்டினாள்.

“எப்படித் தண்டிப்பீர்கள்?” என்று மீண்டும் மரியாதை யுடன் கேட்டான் படைத் தலைவன்.

அல்லியின் பதில் லவலேசமும் தயக்கம் இன்றி வந்தது. “என் முகத்தின் குங்குமத்தை உங்கள் கன்னத்தில் ஒட்டிப் பூவழகியிடம் அனுப்புவேன்” என்று கூறிய அல்லி, அதுவரை மேற்கொண்ட பொய்க்கோபத்தைத் துறந்து திடீரென நகைத்தாள். இளஞ்செழியன் அவளுடன் சேர்ந்து நகைத்ததோடு மட்டுமல்ல, “எத்தனை போக்கிரி, அல்லி நீ!” என்று சகஜமாக அவள் கைகளைப் பற்றி இழுத்து மஞ்சத்தில் தடாலெனத் தள்ளவும் செய்தான்.

இருவர் சிரிப்பும் பேச்சும் விளையாட்டும் அனலை வாரி உள்ளத்தில் வீசுவது போலிருந்ததால் ராணியின் கண்களில் நெருப்புப் பொறிகள் பறந்தன. வெண்மையான அவள் முகம் குங்குமச் சிவப்பாகச் சிவந்தது. கருவூர் சமண மடத்தின் அந்தரங்க அறையிலிருந்து தன்னைத் தப்ப வைத்து அழைத்துக் கொண்டு உறையூர் சென்றதும், எல்லைப் புறத்தி லிருந்த வீடுகளிலொன்றில் இளஞ்செழியன் புகுந்ததும், அங்கு படைத் தலைவனும் அல்லியும் கைகோத்துப் பேசிச் சிரித்ததும், அதைக் கண்டு, ‘இவர் வாழ்வில் எத்தனை பெண்கள்!’ என்று தான் வெகுண்டதும் ராணிக்கு நினைப்பு வரவே, அந்தச் சம்பவத்துடன் இப்புது விளையாட்டையும் இணைத்துப் பார்த்த ராணி, “சே! சே! என்னதான் அண்ணன் தங்கை உறவு பூண்டாலும் இத்தனை விளையாட வேண்டாம்’ என்று உள்ளுக்குள் கடிந்து கொண்டதன்றி, அந்த இருவர் விளையாட்டையும் பார்க்க இஷ்டப்படாமல் சுவர் ஓரமாகத் திரும்பிச் சென்று, அங்கிருந்த கவசமொன்றைப் பரிசோதிக்கத் தொடங்கினாள்.

அவள் உள்ள உணர்ச்சிகள் கொந்தளித்து நிற்பதைத் தெள்ளெனப் புரிந்துகொண்ட இளஞ்செழியன், அல்லியுடன் வேடிக்கையாகப் பேசுவதை நிறுத்தி, “அங்கென்ன பார்க்கிறாய் ராணி?” என்று ராணியை நோக்கி வினவினான்.

“கவசத்தைப் பார்க்கிறேன்” என்றாள் ராணி சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு கவசத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு.

“எதற்காகக் கவசம்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“கவசம் இப்பொழுது எல்லோருக்கும் தேவையாயிருக் கிறது” என்றாள் ராணி.

“கவசமா? எல்லோருக்குமா?”

“ஆம். அதிலும் முக்கியமாக உங்களுக்கு.”

“எனக்கா ராணி!”

“ஆம். உங்களுக்கும் கவசத்திற்கும் பொருத்தம் ஆரம்பத்திலிருந்து இருக்கிறது.”

“ஆரம்பத்திலிருந்தா?”

“ஆம் படைத் தலைவரே! நாம் சந்தித்த முதல் நாள் என்னை மறைத்து வைக்க ஒரு கவசம் தேவையாயிருந்தது. இப்பொழுது உங்கள் தலையை மறைத்துக் கொள்ளக் கவசம் தேவையாயிருக்கிறது” என்று கூறிய ராணி, அல்லியைப் பிடிக்க எண்ணியபோது அவன் மஞ்சத்திலெறிந்த கவசத்தைச் சுட்டிக் காட்டினாள்.
இளஞ்செழியன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால் சட்டென்று உயர எழுந்த ராணியின் கை அவன் சொற்களைத் தேக்கி நிறுத்தியது. ராணி அவனைப் பேசாமலிருக்கும்படி செய்துவிட்டு அல்லியை நோக்கிக் கேட்டாள்: “அல்லி! நான் படைத் தலைவருக்கு எத்தனை கடமைப் பட்டிருக்கிறேன் தெரியுமா?” என்று.

“தெரியும் ராணி! கடற்கரையிலிருந்து உங்களைப் படைத்தலைவர் தூக்கி வந்த விவரங்களைத் தமிழ் நாடு அறியும்” என்று பதிலளித்தாள் அல்லி.

“நாடு அறியாத விவரங்கள் பல இருக்கின்றன அல்லி. நீர்வாழ் ஜந்துக்களால் சின்னாபின்னப் படுத்தப்பட்ட உடைபுடன் நனைந்த வண்ணமிருந்த என்னை, படைத்தலைவர் இந்த அறைக்குத்தான் தூக்கி வந்தார். இதே பஞ்சணையில் தான் படுக்க வைத்தார். யவன நாட்டு மதுவையும் புகட்டினார். என் தலைமயிரிழைகளைக் கோதி விட்டிருக்க வேண்டும். உணர்வு வந்தபின் அவை சீராக இருந்ததைப் பார்த்தேன். பிறகு ஆபத்து வந்தது அல்லி. என்னை அப்படியே கட்டித் தூக்கினார் படைத் தலைவர். இதோ இந்தக் கவசத்துக்குள் அடைத்தார்.” என்று சொல்லிக்கொண்டே போனவள் பேச்சை நிறுத்தி, அல்லியின் காதுக்கருகில் வந்து அல்லிக்கு மட்டும் கேட்கும்படி, “என்னைத் தூக்கி அந்தக் கவசத்துக்குள் அடைக்கும்போது எப்படியெல்லாம் தொட்டிருப்பாரோ அல்லி” என்று கூறிச் சிரித்தாள்.

அல்லி வேங்கையெனச் சீறி எழுந்து ராணியைப் பொசுக்கி விடுவதுபோல் பார்த்தாள். “ராணி! என்ன பேச்சு இது! பெண்களுக்கு நாணம் என்பது ஒன்று உண்டு” என்று சீற்றம் நிரம்பிய குரலில் பேசினாள்.

ராணியின் இதழ்களில் மோகனப் புன்னகையொன்று படர்ந்தது. “இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்” என்றாள் ராணி களுக்கென்று இன்பநகை நகைத்து.

“புரியவில்லை ராணி. புதிராயிருக்கிறது.”

“புதிர் ஏதுமில்லை இதில்.”

“விளக்கமாகச் சொல்லுங்கள்.”

“பிறருக்குச் செய்யும் போதனையை நீயும் கையாள்வது நியாயம் என்று சொன்னேன்.”

“எதைக் குறிப்பிடுகிறீர்கள்?”

“நாணத்தைப் பற்றித்தான்.”

“என்ன அதற்கு?”
“என் நாணத்திற்குப் பழுது சொன்ன நீயும் படைத் தலைவருடன் அதிகமாக விளையாடாமலிருப்பது நல்லது என்று சொல்கிறேன்” என்று அழுத்தமும் அதிகாரமும் நிறைந்த குரலில் கூறினாள் ராணி.

அப்போதுதான் ḥபுரிந்தது. அல்லிக்கு. ராணியின் கண் களை ஏறெடுத்து நோக்கினாள். கனல் கக்கிய அந்த நீலமணிக் கண்களில் காதலும் பொங்கி வழிந்துகொண்டிருந்ததைக் கண்டாள் அல்லி. ‘ராணியும், படைத்தலைவரைக் காதலிக் கிறாள். மாரப்பவேள் மகளும் காதலிக்கிறாளே. படைத்தலைவர் மனம் எங்கிருக்கிறது’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதன்றி, படைத் தலைவர் தன்னைத் தொட்டு விளையாடுவதை ராணி விரும்பவில்லையென்பதையும் உணர்ந்ததால் நாணத்தால் முகம் சிவக்க, “நானும் படைத் தலைவரும்…” என்று இழுத்தாள்.

“அண்ணனும் தங்கையும் போல்” என்று ஏளனத்துடன் முடித்த ராணி, “அண்ணன் தங்கை, தந்தை பெண் இந்த உறவுகள் வரம்பு உடையவை அல்லி. ஆண் பெண் உறவில் சகல வரம்பையும் மீறுவது புருஷன் மனைவி உறவு ஒன்றுதான் என்று உங்கள் நாட்டு விதிகளே கூறுகின்றதாகக் கேள்வி” என்று சுட்டிக் காட்டினாள்.

அந்த இருபெண்களின் இந்தச் சம்பாஷணையின் விளைவாகப் பெரும் சங்கடமடைந்த இளஞ்செழியன் அறையில் சற்று அங்குமிங்கும் உலாவிக்கொண்டு காதில் எதுவும் விழாதது போலும், தீவிர சிந்தனையிலிருப்பது போலும் பாசாங்கு செய்து, “என்ன சொன்னாய் ராணி?” என்று திடீரென அவர்களை நோக்கித் திரும்பவே பெண்கள் இருவரும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். ராணி வெகு விரைவில் சுயநிலைக்கு வந்து, “ஒன்றுமில்லை படைத் தலைவரே” என்றாள்.

“சரி, ராணி! மற்ற விஷயங்களைப் பேச அவகாசம் இருக்கிறது. ஆனால்…” என்று படைத்தலைவன் ஏதோ சொல்ல முற்பட்டதும் குறுக்கிட்ட ராணி, “முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். டைபீரியஸ் உங்களுக்கு விஷத்துளிகளைக் கொடுத்து மயக்கி யவன நாட்டுக்கு மரக் கலத்தில் அனுப்பிய பிறகு என்னிடம் சொன்னான்-நீங்கள் அடுத்த இரண்டு நாட்களில் வானுலகம் எய்திவிடுவீர்கள் என்று. உங்களைக் கொல்ல யவன மருத்துவனொருவனை ஏவியிருப்பதாகவும் கூறினான். அப்படியிருக்க நீங்கள் எப்படித் தப்பினீர்கள்” என்று கேட்டாள்.

“ஆண்டவன் ஒருவḥனை நம்புகிறாயா ராணி?” என்று வினவினான் படைத் தலைவன்.

“விதியை நம்புகிறேன்” என்றாள் தன் நம்பிக்கையைக் குரலில் காட்டி.

“பெயரில் என்ன இருக்கிறது ராணி? அப்படித்தான் வைத்துக்கொள். நீ விதி என்று சொல்கிறாய். நான் ஆண்டவன் என்று கூறுகிறேன். நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள். பெயர்கள் பல உண்டு ராணி. ஆனால் சக்தி ஒன்றுதான் உண்டு. அந்தச் சக்தியால்தான் தப்பினேன். மனிதப் பிரயத் தனத்தால் பிறப்புமில்லை இறப்புமில்லை என்று எங்கள் சாத்திரங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. பிறப்பைப் பற்றி எனக்குத் தெரியாது ராணி. ஆனால் இறப்பைப் பற்றி நன்றாகத் தெரியும். என் அனுபவங்கள் அதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.”

“என்ன தெரிவித்தன?”

“எந்த மனிதனும் ஆண்டவன் அளித்திருக்கும் ஆயுட் காலம் முடிந்தாலொழிய இறப்பதில்லையென்று. அதனால் தான் நான் சாகவில்லை ராணி. இல்லையேல் என். ஆயுள் யவன மருத்துவன் கையில் முடிந்திருக்கும், சுறாக்களின் வாயில் முடிந்திருக்கும். அடிமைக் கப்பல் போரில் முடிந்திருக்கும். இது எதுவும் இல்லாவிட்டாலும் அந்த அரக்கன் இலி-ஆஸுவின் கரங்களில் முடிந்திருக்கும்..” என்று சொல்லி உணர்ச்சி வெள்ளத்தால் சற்றுப் பேச்சை நிறுத்தினான் இளஞ்செழியன்.

அல்லியின் விழிகள் ஆச்சரியத்தாலும் இளஞ்செழியன் பல ஆபத்துக்களிலிருந்து தப்பியதால் ஏற்பட்ட திகைப்பாலும் மலர்ந்தன. “யார் அவன் இலி-ஆஸு?” என்று கேட்டாள்.

“சாம்பிராணி நாட்டுத் தலைவன்.”

“சாம்பிராணி நாடா!” என்றாள் மீண்டும் அல்லி ஆச்சரியத்துடன்.

ராணியின் விழிகளில் ஆச்சரியத்துக்குப் பதில் துயரம் மண்டிக் கிடந்தது. ஆகவே சட்டென்று நின்ற இடத்திலிருந்து திரும்பிய ராணி, “அல்லி! படைத் தலைவரை மேற்கொண்டு எதுவும் கேட்காதே. அவர் பிழைத்துவந்ததற்குப் பிரார்த்தனை செய்” என்று கூறிவிட்டுத் தானிருந்த இடத்தில் மண்டியிட்டுக் கண்களை மூடினாள். இலி-ஆஸுவின் பெயர் எதற்கும் அஞ்சாத ராணியின் இதயத்தில் பெரும் பயத்தை விளை வித்தது. ‘அவனிடமிருந்து எப்படித் தப்பினார் படைத் தலைவர்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்ட ராணி, ‘எப்படியோ தப்பினாரே அதுவரை நன்றி’ என்று தன் தெய்வத்தைத் துதிக்க ஏதோ முணு முணுத்தாள்.

அல்லி இளஞ்செழியனை நோக்கி ராணியையும் நோக்கினாள். ராணியின் பளிங்கு முகத்தையும் பொன்னிறக் கொண்டையையும் சிறுத்த இடையையும் படைத்தலைவன் கண்கள் துழாவிக் கொண்டிருப்பதை அல்லி கவனித்தாள். ராணியின் எழிலுருவத்தைக் கவனிக்கக் கவனிக்க அவன் கண் களில் ஒரு சாந்தி நிலவுவதையும், லேசாகப் பார்வை மங்கு வதையும் கண்ட அல்லி, ‘இந்த மாயா தேவியின் வலையில் படைத்தலைவர் பூரணமாக விழுந்து விட்டார்’ என்றே தீர்மானித்தாள். ஆனால் ராணியின் முகத்தில் அவள் கண்கள் பதிந்தபோது படைத் தலைவன் மயக்கத்துக்குக் காரணமும் புரிந்தது அவளுக்கு.

யாருக்கும் மண்டியிட்டோ தலை வணங்கியோ பழக்க மில்லாத ராணி, அந்த அறையில் தங்கள் இருவருக்கும் எதிரில் அனாதைபோல் மண்டியிட்டுத் தலைவணங்கிக் கண்களை மூடியிருந்ததையும், ராணியின் முகத்தில் பரவியிருந்த பெரும் சாந்தியும் தெய்வீக ஒளியும் அவளை ஒரு தேவதையாக அடித்திருந்ததையும் கவனித்த அல்லி, பூவழகி மட்டும் படைத் தலைவன் இதயத்தில் முன்னதாகப் புகுந்திராவிட்டால் ராணி இளஞ்செழியன் இதயத்தில் நொடிப் பொழுதில் அரியணை அமைத்து ஏறி விடுவாள்’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். படைத் தலைவனிடம் ராணிக்கிருந்த பரிபூரணக் காதலும், அந்தச் சமயத்தில் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ராணியும் அல்லியும் ஒரே சமயத்தில்தான் கண்களைத் திறந்தார்கள். அப்பொழுது அவர்கள் கண்ணெதிரே இருந்தது படைத் தலைவன் உருவம் ஒன்று மட்டுமல்ல. படைத் தலைவனுக்குச் சற்றுப் பின்னால் இன்னொரு உருவமும் நின்றிருந்தது. அந்த மற்றொரு உருவத்தைக் கண்ட ராணி திக்பிரமையடைந்தாள். தான் காண்பது சொப்பனமா நிஜமா என்பதை நிர்ணயம் செய்துகொள்ள, தன் மலர்க் கரங்களால் மலர் விழிகளை ஒருமுறை நெருடியும் விட்டுக் கொண்டாள். அடுத்த விநாடி அந்த இன்னொரு உருவத்தின் அணைப்பி லிருந்தாள் ராணி. ராணியின் தழுவலில் திளைத்து நிலைத்து அந்தப் புது உருவமும் நின்றுவிட்டதைக் கவனித்த இளஞ் செழியன், அந்த அறையில் சிலைகள் இரண்டா மூன்றா என்று தீர்மானிக்க முடியாத நிலையை எய்தினான்.

Previous articleYavana Rani Part 2 Ch31 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here