Home Sandilyan Yavana Rani Part 2 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

123
0
Yavana Rani Part 2 Ch33 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch33 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 33 கதையும் கனவும்

Yavana Rani Part 2 Ch33 | Yavana Rani | TamilNovel.in

இலி-ஆஸுவின் பெயரைக் கேட்டதுமே இதயம் இடிந்து போய், படைத் தலைவன் தப்பி வந்ததற்குப் பிரார்த்தனை செய்ய அவன் பாதத்தடியிலேயே பளிங்குச் சிலையென மண்டியிட்டு நிலைத்து உட்கார்ந்து கண்களை மூடிய யவன ராணி நீண்ட நேரம் பிரார்த்தனைக்குப் பிறகு கண் விழித்ததையும், எதிரே யவன நாட்டுப் படைத் தலைவர் களின் சின்னங்களைத் தரித்த மற்றொரு உருவம் நிற்பதைக் கண்டு ஒரு வினாடி பிரமித்தாலும் அடுத்த வினாடி கண்களை நெருடிவிட்டுக் கொண்டு பிரமிப்பை உதறி மகிழ்ச்சியின் எல்லையை எய்தி உட்கார்ந்த நிலையிலிருந்து சரேலென எழுந்துவிட்டதையும், அதே சமயத்தில் புதிதாகத் தோன்றிய அந்த உருவமும் அவளை நோக்கிப் பாய்ந்து அவளை மார்புற அணைத்துக் கொண்டதையும் பார்த்த அல்லி, திரும்பத் திரும்ப அந்த அறையில் நிகழ்ந்த அதிசயங்களின் விளைவாகக் கற்சிலையெனக் கட்டிலில் உட்கார்ந்தேயிருந்தாள். அவள் சுரணை அவளுக்குத் திரும்பிய பின்பும்கூட, ராணி அந்த உருவத்தின் அணைப்பிலிருந்து விலகாதது மட்டுமின்றி, அந்தப் புது உருவம் அவளை அணைத்தபடியே நின்றிருந் ததைப் பார்த்தால், ‘இருவருக்கும் நீண்ட நாள் உறவிருக்க வேண்டும்’ என்று நினைத்த அல்லி, அவர்களையும் நோக்கி இளஞ்செழியனையும் நோக்கினாள். இளஞ்செழியன் முகம் மட்டும் எந்தவித மாறுதலையும் காட்டாமல் பழைய புன் முறுவலுடனேயே காட்சியளித்ததைக் கண்ட சோழ நாட்டின் பிற்கால ராணி, அந்த இன்னொரு படைத் தலைவரை வேண்டுமென்றே இளஞ்செழியன் அந்த அறைக்கு வரவழைத் திருக்கிறானென்பதை ஊகித்துக் கொண்டாலும், அதற்குக் காரணம் எதுவாயிருக்க முடியும் என்பது மட்டும் புரியாததால், பொறுத்துப் பார்ப்போம் என்று பேசாமலே இருந்தாள். வேவுத் தொழிலில் பிரும்மானந்தரால் நன்றாகப் பழக்கப் பட்டிருந்ததன் விளைவாக எவரையும் பார்த்த மாத்திரத்தில் எடை போடக்கூடிய திறன் வாய்ந்த சோழ நாட்டின் பிற்கால ராணி, வந்த உருவத்தின் குழல்கள் அரபு நாட்டுச் சிவப்புத் துணியால் எடுத்துக் கட்டப்பட்டுப் பக்கவாட்டில் முடிச்சுப் போடப்பட்டிருந்ததைப் பார்த்து, வந்ததும் ஒரு பெண்தான் என்பதை முகபாவத்திலிருந்தே புரிந்துகொண்டு, யவனர் மரக்கலங்களுக்கு மற்றொரு ‘தலைவன்’ இல்லையென்றும், இருப்பது ‘தலைவி’யே என்றும் ஒருமுறைக்கு இருமுறை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். அந்தத் தீர் மானத்தை ஆமோதித்து முத்திரை வைப்பதுபோல் யவன ராணியின் செவ்விய இதழ்கள் அசைந்து ஏதோ மந்திரங்களை உச்சரிப்பதுபோல், “அலீமா! அலீமா!” என்ற சொற்களை ஆசையுடன் உதிர்த்தன.

பூம்புகாருக்கு வந்த நாள் முதல் ராணியைக் காணத் துடித்தும் முடியாமையால், மனம் புழுங்கிக் கிடந்த அலீமாவும், அன்று திடீரென ராணியைச் சந்தித்ததன் விளைவாக உணர்ச்சிப் பிரவாகத்தில் திளைத்து, “ராணி! என். ராணி!” என்று இருமுறை சற்று உரக்கவே கதறி, ராணியை இறுக அணைத்துப் பின்பு அவள் அடிகளில் விழக் குனிந்தாள். “வேண்டாம் அலீமா, வேண்டாம்!” என்று குழைந்த குரலில் கூறிய ராணி, அவள் இடையைப் பற்றி கீழே பணியவிடாமல் தடுத்தாள். பிறகு அவளைச் சற்று எட்ட நிற்க வைத்து மீண்டும் ஒருமுறை பார்த்து மகிழ்ச்சிப் பெருமூச்சும் விட்டு, “அலீமா! நீதானா? உண்மையாக நீதானா?” என்று திரும்பத் திரும்ப வினவவும் செய்தாள்.
அலீமாவின் உணர்ச்சிகளும் கரை கடந்துவிட்டதால், அவள் கண்களில் நீர் எழும்பி அருவியென அவள் அழகிய கன்னங்களில் உருண்டோடியது. “ஆம் ராணி! நான்தான், நானேதான்” என்றாள் அலீமா, மெல்லக் கண்ணீருடன் சிரிப்பையும் கலந்துகொண்டு.

கண்ணீரும், சிரிப்பும் கலந்து உறவாடிய அந்த நிகழ்ச்சி எந்தப் பெண்ணுக்கும் ஒரு விந்தையில்லை என்றாலும், ராணிக்கு அந்தச் சமயத்தில் பெரும் விந்தையாயிருக்கவே அலீமாவின் கண்களைத் தன் அழகிய கரத்தால் துடைத்து “அலீமா! நீ இங்கு வந்து நாட்கள் எத்தனை இருக்கும்?” என்று வினவினாள், அவள் துக்கத்தைத் துடைக்கும் எண்ணத்துடன்.

“ஒரு மாத காலமிருக்கும் ராணி” என்றாள் அலீமா, சிரிப்பா அழுகையா என்று நிர்ணயிக்க முடியாத குரலில்.

ராணியின் முகத்தில் பிரமிப்பு மெல்ல மெல்லக் கலைந்து ஆச்சரியம் தட்டியது. “ஒருமாத காலமா அலீமா?” என்று கேட்டாள் ராணி, ஆச்சரியம் குரலிலும் பிரதிபலிக்க.

“ஆம் ராணி” என்றாள் அலீமா.

“இங்கு வந்ததும் என்னைப் பார்க்க ஒரு மாத காலமா ஆயிற்று உனக்கு?” என்று வினவிய ராணியின் குரலில் சற்று வருத்தமும் தொனித்தது.

அலீமாவின் கண்கள் ராணியின் முகத்தை ஒருமுறை வலம் வந்தன. “கோபிக்காதீர்கள் ராணி. உங்களைப் பார்க்கக் கால தாமதம் ஆனது உண்மைதான். ஆனால், அதற்குப் பொறுப்பாளி நானல்ல” என்றாள் அலீமா.

“வேறு யார் பொறுப்பாளி?” என்று ராணி கேட்டாள், கோபம் சற்றுக் குரலில் தொனிக்க.

அலீமா தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு கண்களிலிருந்த நீரையும் துடைத்துக் கொண்டாள். பிறகு திட்டமான குரலில் சொன்னாள் அலீமா, “படைத் தலைவர் தான் காரணம் ராணி! அவர் அனுமதியில்லாமல் தங்களைப் பார்க்கக் கூடாது என்று கூறிவிட்டார். அவர் ஆணையின்படி நடந்தேன்” என்று.

“அவர் ஆணைக்கு நீ கீழ்ப்படிய வேண்டிய காரணம்?” என்று கேட்டாள் ராணி.

உணர்ச்சிகள் பூரணமாகச் சுயநிலைக்குத் திரும்பி விட்டதால் லேசாக நகைத்தாள் அலீமா. “அவர் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டிய காரணங்கள் பல இருக்கின்றன ராணி” என்றும் கூறினாள் அந்த அரபு நாட்டு அழகி.

“காரணங்கள் பல இருக்கின்றனவா? அத்தனை நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டதா உங்களிருவருக்கும்? ஏதோ அந்தக் காரணங்களில் ஓரிரண்டை நான் அறியலாமா?” என்று ராணி கேட்டாள், குரலில் சற்றுப் பொறாமையும், சந்தேகமும், இகழ்ச்சியும் கலந்து ஒலிக்க.

“ஓரிரண்டென்ன ராணி? எல்லாக் காரணங்களையும் நீங்கள் அறியலாம். காரணங்களைச் சொல்லு முன்பு நான் கேட்கும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காகச் சற்று முன்பு படைத் தலைவர் எதிரில் மண்டியிட்டு அடிமைபோல் உட்கார்ந்திருந்தீர்கள்?” என்று வினவினாள் அலீமா.

ராணி சற்று நிமிர்ந்து கம்பீரமாக அலீமாவைப் பார்த்தாள். “படைத் தலைவர் முன்பு மண்டியிடவில்லை அலீமா. ஆண்டவன் முன்பு மண்டியிட்டேன்” என்றாள் முகத்தில் தாண்டவமாடிய கம்பீரத்தைக் குரலிலும் காட்டி.

“ஆண்டவன் முன்பு எதற்காக மண்டியிட்டீர்கள்?”

“பிரார்த்தனை செய்ய!”

“எதற்காகப் பிரார்த்தனை?”
“படைத் தலைவரை இலி-ஆஸுவிடமிருந்து காப்பாற்றியதற்காக.”

“ஓகோ! அத்தனை நெருங்கிய தொடர்பு உண்டா உங்களிருவருக்கும்” என்று சற்று முன்பு ராணி சொன்ன வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லிய அலீமா, சற்றுப் பெரிதாகவே நகைத்தாள்.

“அலீமா!” எச்சரிக்கையுடனும், அதட்டலாகவும் எழுந்தது ராணியின் குரல்.

அலீமா சிரிப்பை நிறுத்தி ராணியை ஏறெடுத்து நோக்கினாள். ராணியின் நீலமணிக் கண்களும், அலீமாவின் கருவிழிகளும் நீண்ட நேரம் கலந்தன. இருவர் இதய உணர்ச்சிகளும் கண்கள் மூலம் பொங்கி வழிந்ததால் ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். படைத் தலைவனிடம் மனத்தைப் பறிகொடுத்து அவனை எப்படியும் அடையலாமென்று நம்பிக்கையுடனிருந்த ராணியும், அவனைக் காதலித்ததாலும் அவன் மனம் வேறொரு பெண்ணிடம் லயித்திருக்கிறதென்பதைச் சாம்பிராணி நாட்டிலேயே புரிந்து கொண்ட அலீமாவும், ஒருவரையொருவர் புரிந்துகொண்ட காரணத்தால் இருவர் நிலையும் சிறிது சங்கடத்துக்குள்ளானதையும் மௌனமாய் இருந்து கவனித்த அல்லி, ‘ஓகோ, வெளிநாட்டிலும் படைத் தலைவருக்கு ஒருத்தி ஏற்பட்டாளா? சரி சரி, பூவழகிக்குப் போட்டி பிரதி தினமும் பலமாகிறது’ என்று நினைத்துப் புன்முறுவல் செய்தாலும், அந்த அறையில் நடக்கும் நாடகம் எந்தத் திசையில் செல்கிற தென்பதைப் பார்க்கும் எண்ணத்துடன் அந்த இரு பெண்களின் சம்பாஷணையில் குறுக்கிடாமல் மௌனமாகவே இருந்தாள்.

அந்த இருவரில் முதன்முதலாகக் குழப்பத்தைத் தவிர்த்துக் கொண்ட அலீமா ராணியை நோக்கிச் சொன்னாள்: “விளையாட்டாகப் பேசியதற்கு மன்னிக்க வேண்டும் ராணி. பயங்கர மனிதனான இலி-ஆஸுவின் பெயரைக் கேட்டதுமே நீங்கள் பிரார்த்தனை செய்ய மண்டியிட்டீர்கள். அப்படியிருக்க அந்த இலி-ஆஸுவிட மிருந்து என்னைக் காப்பாற்றிய படைத் தலைவரிடம் நான் நன்றியுடையவளாயிருப்பதில் வியப்பு என்ன இருக்கிறது? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இலி-ஆஸுவிடம் சிக்கியவர் களில் இதுவரை யாராவது சொந்த நாடு திரும்பியதுண்டா? அப்படி இலி-ஆஸுவிடம் மட்டுமன்றி, அவன் மதகுருவிடமும் சிக்கியவர்கள் சுயமதத்துடனும் உயிருடனும் ஊர் திரும்ப முடியுமா? அறிவாளிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன் ராணி. நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால் படைத் தலைவரைப் போல் கூரிய அறிவு படைத்த தலைவரை நாம் யாருமே பார்த்திருக்க முடியாது. அதுவும் மதம் மாறுவதாக அவர் மதகுருவைக் கப்பலுக்கு அழைத்து வந்து மதகுருவின் கண்களில் மண்ணைத் தூவியது யாரும் நம்பத்தகாத பெரும் வீர காவியம். மனித யுக்தியின் எல்லையெனப் பிற்காலம் கொண்டாடும் இணையற்ற சம்பவம் அது.”

இந்த இடத்தில் அலீமா உணர்ச்சிப் பெருக்கால் பேச்சைச் சிறிது நிறுத்தினாள். பிறகு இரண்டடிகள் அந்த அறையில் இப்படியும் அப்படியும் எடுத்து வைத்தாள். மேற் கொண்டு பூமியைப் பார்த்தபடியே சொப்பனத்தில் பேசுவதைப்போல் பேசினாள். “மதகுருவின் கண்களில் மண்ணைத் தூவிய பிறகு என்னையே கொள்ளை மரக்கலத்தின் தலைவியாக்கி அடுலீஸுக்குக் கப்பலைச் செலுத்தச் சொன்னார் படைத் தலைவர். அடுலீஸுக்குப் போகும் வழியில் அவர் என் குருநாதரான டைபீரியஸின் வைரி யென்று நினைத்து அவரை அழிக்கவும் சதி செய்தேன். எந்த யவன மருத்துவனால் அவர் தப்பினாரோ, அதே மருத்துவன் அவரை அழிக்க முன்வந்தான். அப்பொழுதுதான் விளக்கினார் படைத்தலைவர், டைபீரியஸ் தங்களைச் சிறை வைத்திருப்பதாக. முதலில் நான் அதை நம்பவில்லை ராணி. தமிழகம் சேர்ந்தால் அதை நிரூபிப்பதாகக் கூறினார். தான் சொல்வது தவறாயிருந்தால், டைபீரியஸிடம் தம்மை ஒப்பு வித்துவிடும் உரிமையை எனக்களிப்பதாகப் பிரமாணமும் செய்தார். ஆகவே என் சதியை நிறுத்தினேன். தங்கள் சகோதரரிடம் இவரை அறிமுகப்படுத்தினேன்.”

ராணியின் நீலமணிக் கண்கள் ஒரு வினாடி இளஞ் செழியனை நோக்கி உயர்ந்தன. “என் சகோதரனைச் சந்தித்தீர் களா?” என்று கேட்டாள் ராணி, சகோதரனை நினைத்துக் கொண்டதால் குரல் அமுதமென இன்ப ஒலி பாய்ச்ச.

படைத் தலைவன் பதிலேதும் சொல்லவில்லை. ‘சந்தித்தேன்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான்.

அலீமா கதையைத் தொடர்ந்தாள்: “அடுலீஸிலும் தங்கள் சகோதரரின் பெருமாளிகையிலும், படைத்தலைவருக்கு ஆபத்து காத்திருந்தது ராணி. யவன மருத்துவன் பந்தய புரவிகளொன்றின் காலொன்றில் பச்சிலைச் சாறு தடவி சரியான சமயத்தில் அது நொண்டும்படி ஏற்பாடு செய் திருந்தான். அப்படிப் புரவி நொண்டி, பந்தயத்தில், படைத் தலைவர் தோற்றிருந்தால்…” அலீமா வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.

ராணியின் உடல் லேசாக நடுங்கியது. “நமது வழக்கப் படி படைத் தலைவர் சிங்கங்களுக்கு இரையாகியிருப்பார்” என்றாள் குரல் சற்று நடுங்க.

“ஆம் ராணி! அப்படித்தான் கதை முடிந்திருக்கும். ஆனால் சிங்கத்துக்கு இரையானது அந்தச் சதிகார மருத்துவன்தான். குதிரையின் காலுக்கு அவனிழைத்த தீங்கை எப்படியோ அறிந்த படைத் தலைவர் குதிரைகளைச் சமயத்தில் மாற்றிவிட்டார். உண்மையை அறிந்த உங்கள் சகோதரர் மருத்துவனைச் சிங்கங்களிடம் தள்ளிவிட்டார்” என்று அலீமா கூறினாள்.

யவன மருத்துவனுக்குக் கிடைத்த அந்தப் பயங்கர மரணத்தைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாத ராணி, “அது கிடக்கட்டும் அலீமா! ரதப் போட்டி என்னவாயிற்று?” என்று கேட்டாள்.

அலீமாவின் நினைப்பு மீண்டும் அடுலீஸுக்குப் பறந்து விட்டதை அவள் கண்கள் சுட்டிக் காட்டின. “என்ன ஆயிற்றென்றா கேட்கிறீர்கள்? அதை அடுலீஸுக்குச் சென்று இன்னும் ஐம்பது வருஷம் கழித்துக் கேளுங்கள். அப்பொழுதும் மக்கள் சொல்வார்கள். ‘யாரோ எதிர் பாராத ஒரு தமிழன், எங்கிருந்தோ வந்தான்; புரவிகளா புயற்காற்றா என்பது தெரியாதபடி அடுலீஸ் பந்தய வெளியில் பறக்கவிட்டான்! யவன, அராபிய, எகிப்திய தங்கங்களைக் குவியலாகக் கொண்டு போய்விட்டான்’ என்று மக்கள் கதை போல் சொல்வார்கள். அவர்களுக்குக் கதை அது. ஆனால், எனக்கு அது கனவு போலிருக்கிறது ராணி. அந்தப் பந்தய வெளியில் லட்சக்கணக்கான மக்களின் ஆரவாரத்தைக் கேட்டேன். வெறி பிடித்தவர்கள் கைகளை ஆட்டி ஆர்ப்பரித்ததைக் கண்டேன். கடைசியில் அந்தப் பொன் மூட்டையை அவிழ்த்து அத்தனை மக்களின் எதிரில் என் கால்களில் கொட்டினார் படைத்தலைவர். பிறகு என்னால் எதையும் பார்க்க முடியவில்லை ராணி. என் கால்களில் பொற்குவியல். பக்கத்தில் யவனர்களின் பட்டத்து இளவரசர்! எதிரே அன்றைய மாவீரர் படைத் தலைவர்! சுற்றிலும் ஜன சமுத்திரம். எனக்கு எதுவுமே விளங்கவில்லை. ‘அலீமா’ என்று என்னை யாரோ அழைத்ததால் பெயரை அறிந்து கொண்ட அந்த ஜன சமுத்திரம், ‘அலீமா, அலீமா!’ என்று மகிழ்ச்சிக் கோஷத்தைக் கிளப்பியது. எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த மகோன்னதப் பதவியைத் தாங்க முடியாமல் நான் மூர்ச்சையானேன்” என்று சொல்லி நிறுத்தினாள் அலீமா.

யவன ராணியின் முகத்தில் பொறாமை கொழுந்து விட்டது. அடுலீஸ் ரதப்போட்டியில் வெற்றி கொள்பவனின் காதலிக்குக் கிடைக்கும் பாராட்டு சக்ரவர்த்தினிக்குக்கூடக் கிடைக்காதென்பதை அறிந்திருந்த ராணி, ‘அங்கு அலீமாவுக்குப் பதில் தான் இருந்திருந்தால் எத்தனை பெருமை கிடைத்திருக்கும் தனக்கு’ என்று எண்ணிப் பெரு மூச்செறிந்து, “பிறகு?” என்று கேட்டாள்.

“பிறகு அந்தப் பொன்னைக் கொண்டு மரக்கலங்களை வாங்கினோம். மாலுமிகளை அமர்த்தினோம். இல்லாவிடில் இந்த யவன மரக்கலங்கள் ஏது? நான்கு மரக்கலங்களை அடுலீஸில் வாங்கினோம் ராணி, இரண்டு மரக்கலங்களை இலி-ஆஸுவிடமிருந்து கைப்பற்றினோம்” என்றாள் அலீமா.

“என்ன, இலி-ஆஸுவிடமிருந்து மரக்கலங்களைக் கைப்பற்றினீர்களா?” என்று வினவினாள் ராணி.

“ஆம் ராணி! மதகுருவையும் தன்னையும் ஏமாற்றிச் சென்ற படைத் தலைவரைப் பிடித்து, சாம்பிராணிக் காட்டுக்கு அனுப்ப இலி-ஆஸு தீர்மானித்திருக்க வேண்டும். தமிழகத்துக்கு நாங்கள் வரும்போது யூதெமான் முனையை திரும்பியதும் எங்களை மடக்கச் சில மரக்கலங்களைத் தயாராக வைத்திருந்தான் இலி-ஆஸு. ஆனால் அவனுக்கு இப்பொழுது புரிந்திருக்க வேண்டும், படைத் தலைவர் கடற் போரில் எத்தனை வல்லவர் என்பது. யூதெமான் முனையில் காற்று அதிகமிருந்ததால் எதிரி மரக்கலங்கள் பாய் விரித்து வந்தன. இரண்டு மரக்கலங்களின் பாய்களைத் தூரத்திலிருந்தே சுழற்பந்தங்களை வீசிக் கொளுத்தினோம். மற்ற இரண்டை வெற்றி கொண்டு எங்கள் மாலுமிகளை விட்டு நடத்திக் கொண்டு வந்தோம்” என்றாள் அலீமா.

“எத்தனை அபாயம்?” என்றாள் ராணி.

“ஆம் ராணி! ஒவ்வொரு அபாயத்திலும் படைத் தலைவர் லாபமடைந்திருக்கிறார். இல்லாவிட்டால் எதிர் பாராதவிதமாகச் சேர நாட்டு மரக்கலங்கள் இரண்டு இவரிடம் சிக்குமா?” என்று புதிர் போட்டாள் அலீமா.

“சேரநாட்டு மரக்கலங்களா!” என்று கேட்டாள் ராணி.

“ஆம் ராணி! சேர நாட்டுப் போர்க் கப்பல்கள் இரண்டு, குமரிமுனை திரும்புகையில் எங்களைக் கொள்ளைக் காரர்கள் என்று நினைத்துத் துரத்தின. எங்களுக்கும் அந்த மரக்கலங்களுக்கும் தொலை தூரமிருந்தது. இஷ்டப்பட்டால் நாங்கள் தப்பியிருக்கலாம். ஆனால் படைத்தலைவர் வேண்டுமென்றே எங்கள் மரக்கலங்களைத் திருப்பி அவற்றை மடக்கினார். போர் சிறிது நேரமே நிகழ்ந்தது. படைத் தலைவர் போர் முறையும் விசித்திரமாய் இருந்தது. அந்த மரக்கலங்கள் இரண்டே நாழிகையில் எங்கள் கைவசமாயின. ஆக எட்டு மரக்கலங்களுடன் புகாரை அடைந்தோம். அத்துடன் போர் நின்றது. ராணி, ராஜதந்திரம் துவங்கியது…”

“சொல் அலீமா!”

“டைபீரியஸைச் சந்திக்க என்னை மட்டும் அனுப்பினார் படைத் தலைவர். தங்கள் சகோதரர் டைபீரியஸுக்கு உதவ மரக்கலங்களை அனுப்பியதாகச் சொல்லச் சொன்னார். உங்கள் நிலையையும் கவனிக்கச் சொன்னார். விசாரித்ததில் நீங்கள் சுதந்திரமிழந்து கிடப்பதை அறிந்தேன். என்னைக் காப்பாற்றிச் சொந்தக் குழந்தை போல் வளர்த்த யவனராஜ குடும்பத்தின் ராணியைச் சிறைசெய்ய முயன்ற குருநாதரைக் கொன்றுவிடவும் நினைத்தேன். படைத் தலைவர் தடுத்தார். டைபீரியஸ் ஒடுங்கி ராணி மறுபடியும் ராணியாக உலவும் நாள் வருமென்று உறுதி கூறினார். நான் அவர் சொற்படி நடப்பதாக வாக்குக் கொடுத்தேன். ஆகவே அவர் கேட்டுக் கொண்டபடி டைபீரியஸிடம் கூறினேன்.”

“என்ன கேட்டுக் கொண்டார்?”

“புகாரில் போர் மூளுமுன்பு தம்மை டைபீரியஸ் சந்திக்கக்கூடாதென்று கூறினார்.”

“டைபீரியஸ் ஒப்புக் கொண்டானா அதற்கு?”

“உடனே ஒப்புக் கொண்டார்.”

“மரக்கலத்தின் மற்றொரு தலைவன் முகக் கவசத்துடன் புகாரில் எங்கும் உலாவ அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளச் சொன்னார்.”

“அதற்கும் டைபீரியஸ் ஒப்புக் கொண்டானல்லவா?”

“ஒப்புக் கொண்டார்.”

“அங்குதானிருக்கிறது ஆபத்து அலீமா” என்றாள் ராணி சற்றுப் பயத்துடன்.

அதுவரை மௌனமாயிருந்த படைத்தலைவன் சம்பாஷணையில் புகுந்து, “அது எனக்குத் தெரியும் ராணி. அந்த ஆபத்தை நான் வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டேன்” என்றான்.

“காரணம்?” இதைக் கேட்ட ராணியின் குரல் வறண்டு கிடந்தது.

காரணத்தையும், தன் திட்டங்களையும் விவரிக்கத் தொடங்கினான் படைத் தலைவன். அவன் விவரிக்க விவரிக்க ராணி மட்டுமல்ல, அலீமா மட்டுமல்ல, அல்லியும் ஆச்சரியத்தின் எல்லையை எய்தினாள். புகாரின் பிற்காலம், ஏன் தமிழ் நாட்டின் பிற்காலம் முழுவதுமே அவன் திட்டங் களின் வெற்றியைப் பொறுத்திருப்பதை அந்த மூன்று மாதர்களும் உணர்ந்தார்கள். அபாயமான அவன் திட்டங்கள் நிறைவேறுமா அல்லது கதையும் கனவுமாக முடியுமா என்பதை மட்டும் அம்மூவராலும் நிர்ணயிக்க முடியவில்லை. ஒரு உண்மை மட்டும் அம் மூவருக்கும் புலனாகியது. வெகு சீக்கிரம் தமிழகத்தில் பெரும் போர் மூளும் என்ற உண்மைதான் அது.

Previous articleYavana Rani Part 2 Ch32 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here